ஸ்ரீ திருவாய் மொழி ஒன்பதாம் பத்தில் –ஒன்பதாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

சந்த்யா -மாலைக் காலத்தில் தென்றல் தொடக்கமான பொருள்கள்
தனித் தனியே பாதகமாகிற -தன்னை வருத்துகிறபடியைச் சொல்லுகிறாள்-

மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ
வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ
செல்கதிர் மாலையும் மயக்கும் ஆலோ
செக்கர் நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான்
ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ –9-9-1-

—————-

முன்பு தூசி ஏறின பேர்க்கு உரமாக நின்று பேரணி உறு பூசல் ஆனவாறே
திரள அமுக்குமாறு போலே தனித்தனியே நலிந்த பொருள்கள் பல ஹானி –
வலிமை குறைய குறைய பல கூடி வந்து நலியா நின்றன – என்கிறாள்
மணி தென்றல் ஆம்பல் மாலை சாந்தம் பஞ்சமம் முல்லை வாடை அனைத்தும்
திரளாக வந்து நலிகிற படியை பேசுகிறாள்–

புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ
புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ
பகலடு மாலை வண் சாந்த மாலோ
பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து
எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான்
இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2-

——————-

கண்களுக்கு இலக்கான பதார்த்தங்கள் அடங்க -பொருள்கள் முழுதும் துன்புறுத்த புக்கவாறே
அவற்றுக்கு அஞ்சி கண்களைச் செம்பளித்தாள்-
அகவாயிலே அவன் அழகு ஸ்ம்ருதமாய் -நினைவுக்கு வந்து நலியா நின்றது -என்கிறாள்-

மனத்தே நின்று ஈரும் -என்கையாலே கண்ணை மூடினாள் என்பது தானே போதரும்
செம்பளித்தல் -மூடுதல்

எட்ட இருந்த குருவை இறை என்று அன்று
விட்டோர் பரனை விருப்புறுதல்-பொட்டானத்தன்
கண் செம்பளித்து இருந்து கைத்துருத்தி நீர் தூவி
அம்புதத்தை பார்த்திருப்பான் அற்று -ஸ்ரீ ஞான சாரம் -38

இனி இருந்து என் உயிர் காக்குமாறு என்
இணை முலை நமுக நுண்ணிடை நுடங்க
துனியிரும் கலவி செய்து ஆகம் தோய்ந்து
துறந்து எம்மை விட்டு அகல் கண்ணன் கள்வன்
தனி இளம் சிங்கம் எம்மாயன் வாரான்
தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்
பணி இரும் குழல்களும் நான்கு தோளும்
பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ–9-9-3-

——————–

அகவாயில் நலிகிறது ஒழிய-ஸ்வரூபேண – நேராக வந்து நின்றும் -பெண்மை –
ஸ்பர்சம் முதலியவற்றால் வந்து நின்றும் -வாடை -போல்வன-ஸ்மாரகமாய்
நினைப்பூட்டுதலால் வந்து நின்றும் -மென் மலர்ப் பள்ளி-நலிகிற
பதார்த்தங்களை -பொருள்களைச் சொல்லுகிறாள்

பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ
வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ
மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாலோ
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த
எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ
யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4-

—————–

சகல பதார்த்தங்களும் -எல்லா பொருள்களும் ஸ்வ ஸ்வபாவங்களை -தம் தம் தன்மைகளை நீக்கி
அந்யதாவாய் -வேறு பட்டனவாக-நெஞ்சம் துணை அன்று -துணை என்னும் தோழி மாரும் மாய்வர்
அவ்வளவிலும் அவனுடைய பிரசாதம் -திருவருள் அரிதானால்–அவனுடை யருள் பெறும் போதரிதே-
தரித்து இருப்பதற்கு விரகு உண்டோ-என்கிறாள்-

யாமுடை நெஞ்சமும் துணையன்றாலோ
ஆ புகு மாலையும் ஆகின்றாலோ
யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ
அவுனுடைத் தீங்குழல் ஈருமாலோ
யாமுடைத் துணை என்னும் தோழி மாரும்
எம்மின் முன்னவனுக்குமாய் வராலோ
யாமுடை யார் உயிர் காக்குமாறு என்
அவனுடை யருள் பெறும் போதரிதே–9-9-5-

——————-

நித்ய அநபாயிநி -அகலகில்லேன் இறையும்-என்று நித்ய வாசம் செய்கிற ஸ்ரீ பிராட்டியோடு-அந்ய பரரான –
வேறு ஒன்றிலே நோக்கு உள்ளவர்களான பிரமன் சிவன் முதலானவர்களோடு வாசி அற
உடம்பு கொடுக்குமவனுடைய -சௌசீல்யம்-சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
என் ஆத்மாவை -உயிரை ஈரா நின்றது என்கிறாள் –

அவனுடை யருள் பெறும் போதரிதால்
அவ்வருள் அல்லன வருளும் அல்ல
அவன் அருள் பெருமள வாவி நில்லாது
அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை
சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம் எவன் செய்கேனோ
ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்–9-9-6-

——————-

கீழ் சொன்ன பாதக – துன்புறுத்தும் பொருள்கள் எல்லாம் திரள -திரண்டு வந்து கண் பாராதே
நலியா நின்றன – என்கிறாள்

ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்
ஆர் உயிரவள் அன்றிக் கூர் தண் வாடை
காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம்
கவர்ந்தவத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே
சீருற்ற அகில் புகை யாழ் நரம்பு
பஞ்சமா அம் தண் பசுஞ்சாந்து அணைந்து
போருற்ற வாடை தண் மல்லிகைப் பூப்
புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ–9-9-7-

————————-

கீழே தனித் தனியாகவும்-திரளவும் -திரண்டும் வந்த பாதகப் பொருள்கள்
ஒன்றுக்கு ஓன்று முற்கோலி நலியா நின்றன -என்கிறாள்

புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ
பொங்கிள வாடை புன் செக்கராலோ
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம்
கண்ணனில் கொடுத்தினியதனிலும்பர்
மது மண மல்லிகை மந்தக் கோவை
வ ண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து
அது மணம் தின்ன அருள் ஆய்ச்சியர்க்கே
ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்–9-9-8-

——————–

பண்டே ஸ்ரீ ஆயர் பெண்கள் நடுவே இவன் குழல் ஊதுகிற போது நடு நடுவே தன் ஆற்றாமையாலே சில யுக்தி –
வார்த்தைகளை பேசிக் கொண்டும்–சில சேஷ்டிதங்களை செயல்களைச் செய்து கொண்டும் பாடும் பாட்டை
நினைத்து ஒன்றும் தரிக்க மாட்டு கின்றிலேன் –என்கிறாள் –

ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித்
தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து
பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம
மாலையும் வந்தது மாயன் வாரான்–9-9-9-

———————-

வருவதாக சொன்ன காலம் வந்திருக்க அவன் வருகின்றிலன்-பாதகங்கனுடைய சந்நிதியில் –
துன்புறுத்துகின்ற பொருள்களின் நடுவிலே அவனை ஒழிய தரிப்பது எங்கே –என்கிறாள்

மாலையும் வந்தது மாயன் வாரான்
மா மணி புலம்ப வல்லேறு அணைந்த
கோல நன் நாகுகள் உகளுமாலோ
கொடியன குழல்களும் குழறுமாலோ
வாலொளி வளர் முல்லை கரு முகைகள்
மல்லிகை யலம்பி வண்டாலுமாலோ
வேலையும் விசும்பில் விண்டு அலறுமாலோ
என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே–9-9-10-

———————

நிகமத்தில்
அவன் பக்கல் சாபல்யம் -ஆசை உடையார் இத் திருவாய் மொழியைச் சொல்லி அவனைப் பெறுங்கோள் என்கிறார்

அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா
அணி யிழையாய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டகல்வதற்கே யிரங்கி
அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த
ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர்
அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே–9-9-11–

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading