பேச்சுக்கு நிலம் அன்றிக்கே இருக்கிற இந்த ஸ்ரீ பிராட்டியுடைய நிலையை ஸ்ரீ பெரிய பெருமாளுக்கு அறிவித்து,
இவள் திறத்துச் செய்தருள நினைத்திருக்கிறது என்?’ என்கிறாள்.
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக் கரங்கள்’ என்று கை கூப்பும்;‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்; இரு நிலம் கை துழா இருக்கும்;
செங்கயல் பாய் நீர்த் திருவரங் கத்தாய்! இவள் திறந்து என் செய்கின் றாயே?–7-2-1-
———————–
இப் பெண் பிள்ளையினுடைய தசை -நிலை என்னாய் விளையக் கடவது?’ என்கிறாள்.
என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா! என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங் கத்தாய்! என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும் முகில்வண்ணா! தகுவதோ என்னும்
முன் செய் திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்! என் கொலோ முடிகின்றது இவட்கே?–7-2-2-
——————————
இவள் இந்த அவஸ்தையை ப்ராப்தையாகைக்கு இவள் இடையாட்டத்தில் -விஷயத்தில் நீர் செய்தது என்?’ என்கிறாள்.
வட்கிலள் இறையும் ‘மணி வண்ணா!’ என்னும்;வானமே நோக்கு மையாக்கும்
‘உட் குடை அசுரர் உயிரெலாம் உண்ட ஒருவனே!’ என்னும் உள் ளுருகும்;
‘கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய் காகுத்தா! கண்ணனே!’ என்னும்;
திட் கொடி மதிள் சூழ் திருவரங் கத்தாய்’ இவள் திறத்தென் செய்திட்டாயே?–7-2-3-
—————————–
உம்மை ஒழிய ஜீவிக்க மாட்டாத இவள் திறத்துச் செய்தருள நினைத்திருக்கிறது என்?’ என்கிறாள்.
இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும்; எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்;
‘கட்டமே காதல்’ என்று மூர்ச்சிக்கும்;‘கடல் வண்ணா! கடியை காண்’ என்னும்;
‘வட்ட வாய் நேமி வலங்கையா!’ என்னும் ‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
சிட்டனே! செழு நீர்த் திருவரங் கத்தாய்! இவள் திறத் தென் சிந்தத் தாயே?–7-2-4-
——————————-
இவளுக்கு பிரதி க்ஷணம் பேதித்து ஒன்றோடு ஒன்று சேராதே வருகிற அவஸ்தா பேதங்களை அறிவித்து,
இவளை இப்படிப் படுத்துதல் உம்முடைய நீர்மைக்குப் போருமோ?’ என்கிறாள்.
சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்‘திரு வரங் கத்துள்ளாய்!’ என்னும்;
வந்திக்கும் ஆங்கே மழைக் கணீர் மல்க‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
‘அந்திப் போதவுணன் உடலிடந்தானே!அலை கடல் கடைந்த ஆர் அமுதே!
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய்தானே!–7-2-5-
—————————–
இவள் இவ்வளவு ஆபன்னையாய் இருக்க இவள் துயரத்தைத் தீர்த்து
அருளா தொழிகைக்குக் காரணம் என்னுடைய கர்மவிபாகம் -பாபமே’ என்கிறாள்
‘மையல் செய்து என்னை மனம் கவர்ந் தானே! என்னம்’ மா மாயனே!’ என்னும்;
‘செய்ய வாய் மணியே!’ என்னும்’தண் புனல் சூழ் திரு வரங் கத்துள்ளாய்!’ என்னும்;
‘வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்!’ என்னும்;
பை கொள் பாம்பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே–7-2-6-
——————————
ஆஸ்ரயங்களை அனுசந்தித்து -அவர் அவர்ளுடைய அளவுகளை நினைந்து, பொறுக்கும் அளவுகளிலே அன்றோ
ஸூக துக்கங்களைச் சுமத்துவது? இப்படி என்னைப் படுத்தலாமோ?’ என்னா நின்றாள் என்கிறாள்.
அன்றிக்கே,
ஆஸ்ரிதர்களை வாழ்விக்கையும் அநாஸ்ரிதர்களை நலிகையும் அன்றிக்கே,
இப்போது விபரீத மாயிற்றோ உம்முடைய படி என்கிறாள்’ என்று ஸ்ரீ பிள்ளான் பணிக்கும்.
அன்றிக்கே,
‘இக் கோமளக் கொழுந்துக்குக் கைம் முதல் ஒன்று மில்லாதார் பற்றினால் ரக்ஷிக்கக் கடவ
நீர்மையை யுடையவன் சந்நிதியிலே இவை எல்லாம் பட வேண்டுகிறது,
என்னுடைய சம்பந்தம் என்று மநோ ரதிக்கிறாள் -எண்ணுகிறாள்’
பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்! பற்றிலார் பற்றநின் றானே!
கால சக்கரத்தாய்! கடலிடங் கொண்ட கடல் வண்ணா! கண்ணனே!’ என்னும்;
சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங் கத்தாய்!’ என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்;
கோல மா மழைக் கண் பனி மல்க இருக்கும் என்னுடையக் கோமளக் கொழுந்தே–7-2-7-
——————————–
இவளுக்கு மேன்மேலென வருகிற நோவுகள் தீர்க்கைக்கு நான் செய்வது என்?’ என்கிறாள்.
‘கொழுந்து வானவர்கட்கு!’ என்னும்’குன்றேந்திக் கோ நிரை காத்தவன்!’ என்னும்;
அழும் தொழும் ஆவி அனல வெவ் வுயிர்க்கும்;அஞ்சன வண்ணனே!’ என்னும்;
எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்;‘எங்ஙனே நோக்குகேன்?’ என்னும்;
செழுந்தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய்! என் செய்கேன் என் திரு மகட்கே?–7-2-8-
————————-
‘இவள் துக்கத்துக்கு ஒரு முடிவு காண்கிறிலேன்,’ என்கிறாள்.
‘என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நில மகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய் மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண்டானே! தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-
——————–
இனிக் கிட்ட மாட்டாளோ!’ என்னும்படி அவசன்னையான – துக்கத்தை அடைந்திருந்த இவள்,
ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளை ஸம்ஸ்லேஷிக்க – கலக்கப் பெற்றாள் என்கிறாள்.
‘முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்; ‘மூவுல காளியே!’ என்னும்;
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்; ‘நான் முகக் கடவுளே!’ என்னும்;
‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்; ‘வண் திரு வரங்கனே!’ என்னும்;
அடி யடையாதாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில் வண்ணன் அடியே–7-2-10-
————————————
இத் திருவாய் மொழியை அப்யஸிக்க வல்லவர்கள், இவர் பட்ட கிலேசம் படாமல்
ஸ்ரீ திரு நாட்டிலே பேரின்ப வெள்ளத்தினை யுடையவராய், ஸ்ரீ நித்ய ஸூரிகள் சூழ இருக்கப் பெறுவர்,’ என்கிறார்.
முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய் புனல் பொருநல்
துகில் வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குருகூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப் பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே–7-2-11-
—————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply