ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-6-11–

நிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றாரை மதி முக மடந்தையர் விரும்பித்
திருப் பல்லாண்டு பாடிச் சிறப்பிப்பர்கள்,’ என்கிறார்.

புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த
சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
மிக்க ஒர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரைத்
தொக்குப் பல்லாண்டி சைத்துக் கவரி செய்வர் ஏழையரே–7-6-11-

புக்கு அ அரி உருவாய் –
அந்த அரி உருவாய்ப் புக்கு.
அவ் வரி யுரு என்னு மித்தனை யாயிற்றுச் சொல்லலாவது.
நரசிங்கமான வேஷத்தைக் கொண்டு விரோதி சந்நிதியில் -பகைவன் அண்மையிலே கிட்டி.
அன்றிக்கே, ஹிரண்யனின் உடலைப் பிளந்து கொடு புறப்பட்ட போதைக் கடுமை,
புறம்பு இட்டு ஒருவன் வந்து செய்தானாகை அன்றிக்கே, உள்ளு நின்றும் ஒரு சிங்கம் பிளந்து கொண்டு
புறப்பட்டால் போலே யாயிற்று அதனைச் சொல்லுதல்.

அவுணன் உடல் கீண்டு உகந்த –
ஹிரண்யனின் உடலைப் பிளந்து பொகட்டு, ‘சிறுக்கன் விரோதி போகப் பெற்றோம்!’
என்று உகந்தனாயிற்று.

சக்கரச் செல்வன் தன்னை –
ஹிரணியனுடைய உடலும் கூடத் திரு உகிருக்கு அரை வயிறாகப் போகையாலே,
பின்னை அழகுக்குப் பத்திரம் கட்டின இத்தனை யாயிற்று.
அழகுக்கும் ஐஸ்வர்யத்துக்கும் உறுப்பான திருவாழியை யுடையவனை

குருகூர்ச் சடகோபன் சொன்ன –
ஆழ்வார் அருளிச் செய்த.

மிக்க ஓர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்-
பகவத் விஷயத்தை உள்ள அளவும் சொன்ன ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப்பத்தையும் கற்றவர்களை.

தொக்குப் பல்லாண்டு இசைத்துக் கவரி செய்வர் ஏழையர் –
கிண்ணகத்தில் இழிவாரைப்போலே தனி இழிய ஒண்ணாமை திரண்டு கொண்டு,
பொலிக! பொலிக!’ என்று மங்களாசாசனம் செய்து,
சர்வேஸ்வரன் பக்கல் செய்யக் கூடிய அசாதாரண பரிசர்யைகளை கைங்கரியங்களை யடைய இப் பத்தை அப்யசித்தவர்கள்
பக்கலிலே செய்யா நிற்பார்கள் மதி முக மடந்தையர்.
நெடு நாள் சம்சாரத்தில் பட்ட இழவெல்லாம் தீரும்படி அவர்களாலே கொண்டாடப் பெறுவர்கள்.
தொக்கு -திரண்டு /கவரி -சாமரம் /ஏழையர் -பாகவத கிஞ்சித்கார சபலைகளான மதி முக மடந்தையர் –

பாமரு வேதம் பகர் மால் குணங்களுடன்
ஆ மழகு வேண்டற் பாடாம வற்றைத்-தூ மனத்தால்
நாண்ணி யவனைக் காண நன்குருகிக் கூப்பிட்ட
அண்ணலை நண்ணார் ஏழையர்–திருவாய்மொழி நூற்றந்தாதி -66-

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply