ராவணன் முதலியோரை அழித்த தசரதாத் மஜனை -சக்கரவர்த்தி திருமகனை,
நெஞ்சே! காண வல்லோமோ?’ என்கிறார்.
காண்டுங் கொலோ நெஞ்சமே!கடிய வினையே முயலும்
ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டுமவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே?–7-6-9-
காண்டுங்கொலோ நெஞ்சமே –
இழவாலே கட்டிக் கொண்டு கதறுகைக்குக் கூட்டான நீ,
இப் பேற்றாலே -நிர்வ்ருதராய் -இன்பமடைந்தவர் அனுபவிக்கும் அனுபவத்துக்கும் கூட்டாய்
நாம் அவனைக் காண வல்லோமோ?
கடிய வினையே முயலும் –
தாயையும் தமப்பனையும் இரண்டு இடங்களிலே ஆக்குவாரைப் போலே அன்றோ,
பெருமாளையும் பிராட்டியையும் இரண்டு இடங்களிலே ஆக்கிற்று?
இதில் தாழ்ந்திருப்பது ஒரு செயல் இல்லை யாயிற்று, இவன் செய்யுமவற்றில்.
கிரமத்திலே பலம் கொடுக்கிறோம்’ என்று சர்வேஸ்வரனுக்கு ஆறி யிருக்க ஒண்ணாதபடி
யாயிற்றுக் கொடிய செயல்கள் செய்யும்படி.
அத்யுத்கடை: புண்யாபாபை: இஹைவபலம் அஸ்நுதே
த்ரிபி: வர்ஷை: த்ரிபி: மாஸை: த்ரிபி: பக்ஷை: த்ரிபி: திநை:’-தர்ம சாஸ்திரம்.
மிகக் கொடியனவான பாவங்கள், மிக உயர்ந்தனவான புண்ணியங்கள் ஆகிய இவற்றால் உண்டான பலன்களை
இப் பிறப்பிலேயே மூன்று வருடங்களில் மூன்று மாதங்களில் மூன்று பக்ஷகளில்
மூன்று நாள்களில் அனுபவிக்கிறான்’ என்னும்படியே.
கடிய வினையே
என்ற ஏகாரத்தால் இவன் சதாசார சம்பந்தம் -நல் வினைத் தொடர்பு இல்லாதவன் என்பது பெறப்படும்.
ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் –
ஆண் பிள்ளைத் தனத்தில் வந்தால், திறலை யுடைய சிங்கம் போன்ற மிடுக்கை யுடைய அரக்கன்.
மீளி-சிங்கம். அன்றிக்கே, ‘திறலை யுடையனாய், பராபிபவன சாமர்த்தியம் -பிறரை அடக்குதற்குரிய
ஆற்றலை யுடையனாய், யமனைப் போன்ற மிடுக்கை யுடையனான ராவணனுடைய’ என்னுதல்.
குலத்தைத் தடிந்து-
தடிகை -கடிகை –
கரிஷ்யே மைதிலீஹேதோ: அபிஸாசம் அராக்ஷஸம்’-ஆரண். 64 : 66.
ஜனகராஜன் திருமகள் காரணமாகப் பிசாச ஜாதி அற்றதாயும் அரக்கர் குலம் அற்றதாயும் செய்வேன்’ என்கிறபடியே,
குலமாக அழித்து.
அவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி –
விபீஷணோ வா ஸூக்ரீவ யதிவா ராவண: ஸ்வயம்’-யுத். 18 : 34.
ராவணன் தானே யாகிலும்’ என்கிறபடியே, ‘சரணம்’ என்ற சொல் அழகியதாய் இருந்தது,
அவனோடு சம்பந்தமுடையான் ஒருவன் வந்தானாகை அன்றிக்கே, அவன்தானே வரப் பெறுவதுகாண்’ என்று
செவி சீப்பாய்ந்து இருந்தார் அன்றோ?
அங்கு நின்றும் வந்தான் ஒருவனைக் கைக் கொண்டாராக அமையாதோ? இந் நிர்பந்தம் என்?’ என்னில்,
அவனோடு சம்பந்த முடையான் ஒருவனைக் கைக் கொண்டால், அவன் தானும் நான்கு பேருமாகப் போம்;
அவன் தானே வரப்பெற்றதாகில் துருப்புக் கூடாக நோக்கிற்று ஆகலாம் அன்றோ?
மேலும், பகைமையில் முதிர நின்றானும் அவனே ஆகையாலே,–
ரஷக அபேக்ஷை – ‘காப்பாற்றுமவனாக வேண்டும்’ என்ற விருப்பம் உள்ளதும் அவனிடத்திலே அன்றோ?
இப்படி அவனை அங்கீகரிப்பதற்குக் கோலிப் பெறாத இழவு தீர்ந்தது இவனைக் கைக் கொண்ட பின்பாயிற்று.
அநுஜ; ரநவணஸ்ய அஹம் தேநச அஸ்மி அவமாநித:
பவந்தம் ஸர்வபூதாநாம் ஸரண்யம் ஸரணம் கத:’- யுத் 19 : 4.
நான் இராவணனுக்குப் பின்பிறந்தவன்’ என்று அவன் வர, இவரும் அவன் தம்பியே’ என்றாயிற்று
எந்தையே! ராகவ! சரணம் என்ற சொல்
தந்தவர் எனைவரோ சாற்றுமின் என’அவனைக் கைக் கொண்டது.
பஞ்செனச் சிவக்கும் மென் கால் தேவியைப் பிரித்த பாவி
வஞ்சனுக்கு இளைய என்னை வருக என் றருள் செய்தானோ?’-என்றார் கம்பரும்.
விரி நீர் இலங்கை அருளி –
கடல் சூழ்ந்த இலங்கையைக் கொடுத் தருளி.
மீண்டும் ஆண்டு –
ராவணனைக் கொன்ற பின்பு, பிரமன் முதலான தேவர்கள்,
தேவரை அம்புக்கு இலக்கு ஆக்கி, நாங்கள் எங்கள் காரியத்தைத் தலைக் கட்டிக் கொண்டோம்;
இனி தன்னுடைச் சோதி ஏற எழுந்தருள அமையும்,’ என்ன,
அவ் வளவிலே சிவன், ‘தேவர் அங்ஙன் செய்தருள ஒண்ணாது, திருவடி சூடுதற்குத் தடை உண்டாகையாலே
திருத் தாய்மாரும் இழிவு பட்டிருந்தார்கள்; நாடும் அடைய நொந்திருந்தது: ஸ்ரீ பரதாழ்வானும் ஆர்த்தனாய் இருந்தான்:
ஆன பின்பு,
ஆஸ்வாஸ்ய பரதம் தீநம் கௌஸல்யாம்ச யஸஸ்விநீம்’-யுத். 122 : 4.
வருந்தியிருக்கிற ஸ்ரீபரதாழ்வானையும் பெருமை பொருந்திய ஸ்ரீ கௌஸல்யையாரையும் சமாதானம் செய்து’ என்கிறபடியே’
ஸ்ரீ பரதாழ்வான் தொடக்கமானவர் ‘இழவுகள் எல்லாம் தீரும்படி மீண்டு எழுந் தருளி,
திரு முடி சூடி, நாட்டை வாழ்விக்க வேணும்’ என்ன, அது திரு வுள்ளத்துக்குப் பொருந்தும் செயலாகையாலே
பதினோராயிரம் ஆண்டு ஒரு படிப்பட இருந்து நாட்டினை வாழ்வித் தருளி.
தன் சோதி புக்க –
அம்புக்கு இலக்கு ஆக்குவார் இருந்த இடத்தை விட்டுத் தனக்கே சிறப்பாய் எல்லை அற்ற
பேரொளிப் பிழம்பு வடிவமாய் இருக்கிற பரம பதத்திலே போய்ப் புக்க.
அமரர் அரி ஏற்றினையே-
அம்பு இட்டு எய்வார் இன்றிக்கே ஆநுகூல்யமே தன்மையாய்த் தொண்டிலேயே நிலை பெற்றவர்களான
நித்ய ஸூரிகள் நடுவே அவன் இருக்கும் இருப்பைக் காண வல்லோமே?
பசுக்களின் கூட்டத்தின் நடுவே ஓர் ரிஷபம் செருக்கித் திரியுமாறு போலே, நித்ய ஸூரிகள் கொண்டாட,
அவர்கள் நடுவே அதனாலே செருக்கி மேனாணித்திருக்கும் இருப்பைச் சொல்லுகிறது.
நித்ய ஸூரிகள் திரளிலே அந்த ஓலக்கத்தின் நடுவே இருக்கும் இருப்பைக் காண்கை அன்றோ பிராப்யமாகிறது?
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply