ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-6-8–

மாலி தொடக்கமான பிரதிகூல வர்க்கத்தை -பகைவர்கள் கூட்டத்தைக் கொன்றருளின
சர்வேஸ்வரனைக் காண வல்லோமே?’ என்கிறார்.
முதல் இரண்டு பாசுரங்களாலே பிராப்யன் அவனே என்னும் இடம் சொல்லி,
மேல் ஐந்து பாசுரங்களாலே, பிராபகன் அவனே தன்னைப் பெறுகைக்கு என்னும் இடம் சொல்லி.
இப் பாசுரத்தாலும் அடுத்த பாசுரத்தாலும் விரோதி நிரசன சீலதையே -பகைவர்களை அழிக்கின்ற
அவனது தன்மையைச் சொல்லி, பிரதிபந்தகத்தை -தடைகளைப் போக்குவான் அவனே
என்னும் இடத்தைச் சொல்லுகிறார்.

ஆளியைக் காண் பரியாய் அரி காண் நரி யாய் அரக்கர்
ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம்புக்கு ஒளிப்ப
மீளி யம் புள்ளைக் கடாய் விறன் மாலியைக் கொன்று பின்னும்
ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டுங் கொலோ?–7-6-8-

ஆளியைக் காண் பரியாய் –
யாளியைக் கண்ட குதிரை போலவும்.

அரி காண் நரியாய் –
சிங்கத்தைக் கண்ட நரியைப் போலவும்.

ஸ்ரீராமாயணத்தே, அந்த அரக்கர்கள் அஞ்சின படியாகப் பல உதாரணங்களை இட்டுச் சொல்லிப் போரக் கடவதன்றோ?
இங்கே இரண்டு வகையாலே அதனைச் சூசிப்பிக்கிறார். பரி-குதிரை.

அரக்கர் ஊளை இட்டு –
மேலே ‘நரி’ என்கையாலே-அந்த சமாதியாலே – அதற்குத் தகுதியாகச் சொல்லுகிறார்.
ராக்ஷசர் திரள நின்று ஒரு பிரவ்ருத்தி பண்ண மாட்டாதே கதறிக் கொண்டு –

அன்று இலங்கை கடந்து பிலம் புக்கு ஒளிப்ப –
அன்று
மாலி மால்யவான் ஸூ மாலி என்கிறவர்களைப் பெரிய திருவடி மேற் கொண்டு அழியச் செய்கிற அன்று
இலங்கை கடந்து பிலம் புக்கு ஒளிப்ப –
தூசித் தலையில் நேர் நின்று போர் புரிய ஆற்றல் இல்லாமையாலே இலங்கையை விட்டுப் போய்ப்
பாதாளத்திலே புக்கு ஒளிப்ப. என்றது,
புற்றுகள் எப்போதும் ஒக்கப் பாம்பு பற்று அறாதவாறு போலே என்றும் ஒக்கு அரக்கர்கள் மாறாதே,
மாலி, சுமாலி, மால்யவான்’ என்றால் போலே சொல்லப்படுகிறவர்கள் வாழ்ந்து போந்தவர்களாய்,
பெரிய திருவடி முதுகிலே வந்து தோன்றி, அவர்களை அழித்தானாகச் சொல்லக்கடவது அன்றோ?
அதனை இங்கே அருளிச் செய்கிறார்’ என்றபடி.
பிலம் புக்கு ஒளிப்ப
கையில் ஆயுதம் பொகட்டாரையும், முதுகு காட்டினாரையும் கொல்லக் கூடாதே அன்றோ?
ஆகையாலே, தப்பி ஓடிப் போய் ஒளிப்பாரும் உள்ளே பட்டுப் போனாருமாய்ப் போனார்களாதலின், ‘பிலம் புக்கு ஒளிப்ப’ என்கிறார்.

மீளி அம் புள்ளைக் கடாய்-
வலியையுடைய பெரிய திருவடியை நடத்தி.
மீளியம்; ஒரு சொல்; வலி என்பது பொருள்.
அன்றிக்கே, ‘மீளி அம் புள்’ என்று பிரித்து,
கறையணி மூக்குடைப் புள்ளைக் கடாவி’ திருவாய், 3. 10 : 2.-என்கிறபடியே,
பகைவர்களுக்கு யமன் போலே இருப்பானாய், தூவாய புள்ளூர்ந்து’பெரியதிருமொழி, 6. 8 : 3.-என்கிறபடியே,
அநுகூலர்க்கு -தர்ச நீயமான – காண்பதற்கு இனியதான வேஷத்தை யுடையவனான பெரிய திருவடியை நடத்தி என்னுதல்.
பெரிய திருவடி முதுகிலே வந்து தோற்றும் போதை அழகையே அன்றோ இவர் பாவித்துக் கிடப்பது?
பண்கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்து’ (திருவாய். 3. 8 : 5) என்றதனைத் திருவுள்ளம் பற்றி,
இவர் பாவித்துக் கிடப்பது’ என்கிறார்.
மீளி என்று வலிக்கும், யமனுக்கும், பாலை நிறத் தலைமகனுக்கும் பேராகச் சொல்லுவர்கள்.

விறல் மாலியைக் கொன்று –
ஆக, பிரசித்தர்களிலே ஒருவனைச் சொல்லிற்று.

பின்னும் ஆள் உயர் குன்றங்கள் செய்து-
பின்னும் ஆண் பிள்ளைகளாய் இருப்பார் பலரை அழியச் செய்து,
அவர்களாலே பிண மலையாம்படி செய்து. ஆண்களாலே உயர்ந்த மலைகளாம்படி செய்து.

அடர்த்தானையும் காண்டும் கொலோ-
அவன் அரக்கர் கூட்டத்தை அழியச் செய்தால் போலே, நம் விரோதிகளைப் போக்கி
நமக்குக் காட்சியிலே அந்வயமாய் -தொடர்புண்டாய் நாம் கண்டோமாய்த் தலைக் கட்ட வல்லோமோ?

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply