ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-6-7–

உத்தேஸ்ய லாபம் அவனாலே யாயிருந்தது.
இத் தலையாலே ப்ரவர்த்திகைக்கு – -முயற்சி செய்வதற்குத் பிராப்தி -தகுதி இல்லாதபடியான
பாரதந்திரியும் உண்டாய் இருந்தது;
அத் தலையாலே பெறுமிடத்தில் ஒரு கண்ணழிவு இன்றிக்கே இருந்தது;
இப்படி இருக்கச் செய்தேயும் இழந்து இருக்கக் காண்கையாலே
நான் இழவோடே கிடந்து முடிந்து போமித்தனையே யன்றோ?’ என்கிறார்.

என் திரு மார்பன் தன்னை என் மலைமகள் கூறன் தன்னை
என்றும் என் நாமகளை அகம்பாற் கொண்ட நான் முகனை
நின்ற சசி பதியை நிலங்கீண்டு எயில் மூன்று எரித்த
வென்று புலன் துரந்த விசும்பாளியைக் காணேனோ?–7-6-7-

என் திரு மார்பன் தன்னை –
இவ் விடத்திலே ‘என்’ என்கிற சொல், விசேஷண அம்சத்திற்கு அடை மொழி;
என் திருமகள் சேர் மார்பன்’ என்ற இடத்திலே கொண்டது போன்று –
என் ஸ்வாமினியான பெரிய பிராட்டியாரைத் திரு மார்விலே யுடையவனை.
என் மலை மகள் கூறன்’ என்பது முதலான இடங்களில் உள்ள ‘என்’ என்பது, விசேஷ்ய அம்சத்திலே ஊற்றம். ‘என்றது,
என் சொல்லியவாறோ?’ எனின்,
அவனுடைய விபூதி யோகத்துக்கு உறுப்பாகச் சொல்லுகிறார் இத்தனை அன்றி,
மறந்தும் புறம் தொழா மாந்தர்’ நான்முகன் திருவந். 68.-ஆக இருக்குமவர் ஆதலின்,
இவர்களோடே தமக்கு ஒரு சம்பந்தம் உண்டு என்கிறார் அல்லரே?’ என்றபடி,

என் மலைமகள் கூறன் தன்னை –
இமயமலையின் பெண் பிள்ளையைத் தன்னுடம்பிலே ஒரு பக்கத்திலே யுடையனாய் இருக்கிற சிவனைத்
தான் இட்ட வழக்காக வுடையனாய் இருக்கிறவனை.என்றும்

என் நாமகளை அகம்பால் கொண்ட நான்முகனை –
சரஸ்வதியை என்று மொக்கத் தன் பக்கலிலே யுடையனாய் இருக்கிற பிரமனுக்கு அந்தராத்மாவா யுள்ளவனை.

நின்ற சசி பதியை –
இவர்களை எண்ணினால் தன்னை எண்ணலாம்படி ஐஸ்வர்யத்தால் குறை வற்றிருக்கிற இந்திரனுக்கு அந்தராத்மாவாய் உள்ளவனை.
அவன் பிரமன், அவன் சிவன்’ என்றால், ‘அவன் இந்திரன் என்று ஒக்கச் சொல்லலாம்படி முட்டுப் பொறுத்து நின்ற
இந்திரனுக்கு அந்தர்யாமி யாயுள்ளவனை.
ஸப்ரஹ்மா ஸஸிவ: ஸேந்த்ர;’ தைத். நாரா.

இப்போது இவை சொல்லுகிறதற்குக் கருத்து என்?’ என்னில்,
ஸ்வரூபமும் உயர்வும் அவன் அதீனம்’ என்றார்;
இங்கே, ‘தக்க வயதினை அடைந்த புத்திரர்களுக்கு சத்ருச விஷயங்களில் -ஒத்த இடங்களிலே
திருமணம் செய்விக்கும் தமப்பன் மார்களைப் போலே, இவர்கள் தாம் மனைவிகள் அடைந்ததும்-மஹீஷீ லாபமும் –
தந்தாமால் அன்று; சர்வேஸ்வரனாலேயாம்’ என்பதனைத் தெரிவித்தபடி.
இவர்களுடைய ப்ரவ்ருத்திகள் -செயல்கள் எல்லாம் அவனுடைய அதீனம்’ என்கிறது மேல்:

நிலம் கீண்டு. . .விசும்பாளியை –
பிரளய சமுத்திரத்திலே மூழ்கினதாய் அண்டப் பித்தியிலே புக்கு ஒட்டி பூமியை மஹா வராஹமாய்ப் புக்கு
எடுத்துக் கொண்டு ஏறின போதைய செயல் தன்னுடைய அதீனம் ஆனால் போலே,
அவர்களுடைய வியாபாரங்களும் -செயல்களும் அவனுடைய அதீனம்’ என்கிறது.

எயில் மூன்று எரித்த –
மதிள் மூன்றை எரித்த.
விஷ்ணு: ஆத்மா பகவத: பவஸ்ய அமிததேஜஸ;
தஸ்மாத் தநுர்ஜ்யா ஸமஸ்பர்ஸம் சவிஷேஹே மஹேஸ்வர;’-பாரதம், கர்ணபர்வம்.
விஷ்ணு அந்தராத்மாவாய் நின்றான்’ என்னக் கடவது அன்றோ?
அதுவும் அவன் இட்ட வழக்கு.

வென்று புலன் துரந்த-
படைப்புக்கு உறுப்பாக ஐம் பொறிகளை அடக்கியவனை -புலன்களை வென்று ஓட்டின

விசும்பாளியை –
ஸ்வர்க்கத்தை வன்னியம் அறுத்து ஆளுகின்றவனை.

காணேனோ –
காணப்பெறேனோ?

இங்குப் பிரவ்ருத்தி விசிஷ்டரான இவர்களோடு சமா நாதிகரித்தது-சகல ப்ரவ்ருத்தியும் அவன் அதீனை யாகையாலே
என்னுடைய அபேக்ஷித சித்திக்கு அவனை ஒழிய என்னால் செய்யலாவது இல்லை என்கைக்காக
ஆகச் சொல்லிற் றாயிற்றது:
உத்தேஸ்ய லாபம் அவனாலேயாய் இருந்தது.
அதற்கு உறுப்பான முயற்சியில் ஈடுபடுதற்குத் தகுதி இல்லாதபடி அதுவும் அவன் இட்ட வழக்காய் இருந்தது.
இனி. இத் தலையாலே பேறு ஆம் அன்று விளம்பத்திற்குக் காரணம் உண்டாய் இருந்தது;
அவனாலே பேறு ஆம் அன்று விளம்பத்திற்குக் காரணம் இன்றிக்கே இருந்தது.
இப்படி இருக்கச் செய்தேயும் தம்மை இழந்து இருக்கக் கண்டார் ஆகையாலே,
இனி, இந்த இழவோடே இங்ஙனே முடிந்து போமித்தனையே அன்றோ?’ என்று க்லேசிக்கிறார்

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply