எல்லாம் செய்தாலும் ‘சாஸ்திர பலம் பிரயோக்தரி’ அன்றோ?
பலம் உம்மதான பின்பு நீரும் சிறிது யத்னம் -முயற்சி செய்ய வேணும் காணும்,’ என்ன,
நீ படைத்த உலகங்களிலே விஷயங்கள் தோறும் அகப்பட்டுக் கிடக்கிற நான்
உன்னைப் பெறுகைக்கு ஒரு சாதனத்தைச் செய்து-அனுஷ்ட்டித்து –
வந்து பெறுகை என்று ஒன்று உண்டோ?’ என்கிறார்.
என்னுடைக் கோவலனே! என் பொல்லாக் கரு மாணிக்கமே!
உன்னுடைய உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து
உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு
என்னுடை ஆர் உயிரார் எங்ஙனே கொல் வந்து எய்துவரே?–7-6-5-
என்னுடைக் கோவலனே –
பாண்டவர்களுடைய கோவலன் ஆனால் போலே ஆயிற்று: இது சீலம் இருந்தபடி.
என் பொல்லாக் கரு மாணிக்கமே-
இது வடிவழகு இருந்தபடி.
அழகிது’ என்னில், உலகத்தோடு ஒப்பாம் என்று பார்த்து, வேறு சொல்லாலே சொல்லுகிறாராதல்;
அன்றியே ‘தொளையா மணி’ என்கிறாராதல்.
பொல்லல்-தொளைத்தல். அனுபவிக்கப்படாத ரத்தினம் போலே’ என்றபடி.
உன்னுடை உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து –
உன் படி இதுவாய் இருக்க, உன்னை ஒழிந்த விஷயங்களினுடைய வடிவழகிலும் குணங்களிலும்
கால் தாழ்ந்து போந்தவனாய் இருந்தேன் நான்.
உன்னடைய உந்தியிலே மலரா நின்றுள்ள உலகங்கள் மூன்றிலும் உண்டான விஷயங்கள் தோறும்,
தனித் தனியே அற்றுக் கால் தாழ்ந்து போந்தவனாய் இருந்தேன் நான்.
நீ ஸர்வ சத்தி யோகத்தாலே வியாபித்து -பரந்திருக்கும் இடம் முழுதும் நான்
என்னுடைய சாபல்யத்தாலே -ஆசையாலே கால் தாழ்ந்து திரிந்தேன்.
இது என் நிலை இருந்தபடி.
அதற்கு மேலே நீ எட்டா நிலத்தை இருப்பிடமாக வுடையையாய் இருந்தாய்.
உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு-
உனக்கே அசாதாரணமாய் -சிறப்பாய் -நிரவதிக தேஜோ ரூபமாய் –எல்லை அற்ற ஒளி உருவமாய்,
அத்யர்க்காநல தீப்தம் தத் ஸ்தாநம் விஷ்ணோ: மஹாத்மந:
ஸ்வயைவ ப்ரபயா ராஜந் துஷ்ப்ரேக்ஷம் தேவதாநவை;’, பாரதம், ஆரண்ய பர். 163.
சூரியன் அக்கினி ஆகிய இவர்களின் ஒளியைக் காட்டிலும் அதிகமாக விளங்குகிற,
மஹாத்மாவான நாராயணனுடைய ஸ்ரீ வைகுண்டம்’ என்று சொல்லப்படுகிற ஸ்ரீ வைகுண்டத்தை
இருப்பிடமாக வுடையையாய் இருக்கிற உன்னை,
ப்ரக்ருதி ப்ராக்ருதங்களில் -சரீரத்திலும் சரீரத்தோடு சம்பந்தப்பட்ட பொருள்களிலும் உண்டான சம்பந்தம் அற்று
நெடுந்தூரம் வழி வந்து அதற்குத் தக்கதாய் இருப்பது ஒரு சரீரத்தை மேற்கொண்டு பரம பதத்தை அடைந்தால்
அனுபவிக்க வேண்டி இருந்தது;
ஆக, என் நிலை இருந்தபடி இது;
உன் நிலை இருந்தபடி அது;
என் நெஞ்சில் ஈடுபாடு இருந்தபடி இது;
ஆன பின்பு இந்த முதலியார் கடுக வந்து உன்னைக் கிட்டாரோ?
என்னுடை ஆருயிரார்– சப்தாதிகளிலே ப்ரவணமான என் ஆத்மா -முதலியார் -என்று ஷேபிக்கிறார்
ஆக., ஸ்வரூபம் உன் அதீனமாய் இருந்தது,
அவர் அவர்களுடைய உயர்வுகளும் உன் அதீனமாய் இருந்தன;
என் நிலை இது, உன் நிலை அது; என் நெஞ்சில் ஈடுபாடு இது;
ஆன பின்பு, நான் ஒரு சாதனத்தைச் செய்து-அனுஷ்ட்டித்து – வந்து கிட்டுகை என்று
ஒரு பொருள் உண்டோ?’ என்கிறார்
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply