கீழ் பாசுரத்தில், ‘அவர்கள் ஸ்வரூபம் அவன் அதீனம்’ என்றது;
அந்த ஸ்வரூபத்தைப் பற்றி இருப்பன சில மினுக்கங்கள் -உயர்வுகள் உளவே அன்றோ?
அவையும் அவனுக்கு அதீனங்கள் என்கிறது இதில்.
எங்குத் தலைப் பெய்வன் நான்! எழில் மூவுலகும் நீயே
அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ
வெங்கதிர் வச்சிரக்கை இந்திரன் முதலாத் தெய்வம் நீ
கொங்கலர் தண் அந் துழாய் முடி என்னுடைக் கோவலனே!–7-6-4-
எங்குத் தலைப்பெய்வன் நான் –
துர்ப்பலன் -வலி இல்லாதான் ஒருவனை ‘மலையைத் தாங்கு’ என்றால்,
அவனாலே அது செய்து தலைக் கட்டப் போமோ?
எழில் மூன்று உலகும் நீயே-
மூன்று உலகங்களிலே உள்ள பொருள்களின் உத்கர்ஷமும் -உயர்வுகளும் உன் அதீனம்.
அங்கு உயர் முக்கண் பிரான்-
அந்த அண்டத்தில் மற்றைத் தேவர்களைக் காட்டிலும் சிவன் பக்கல் வந்தவாறே ஓர் உயர்வு உண்டே அன்றோ?
அந்த உச்சாரயமும் -உயர்வு உன் அதீனம்.
பிரம பெருமான் அவன் நீ-
அவனுக்கும் ஜனகனாய் -தந்தையாய்ப் -சதுர்தச -பதினான்கு உலகங்கட்கும் ஈஸ்வரனாகையாலே வருவது
ஓர் ஏற்றம் உண்டே அன்றோ பிரமனுக்கு? அதுவும் நீ இட்ட வழக்கு.
வெம் கதிர் வச்சிரம் கை இந்திரன் முதலாத் தெய்வம் நீ-
வச்சிரத்தைக் கையிலே யுடையவன் புரந்தரன் என்ற பெயரை யுடையவன்’ என்கிறபடியே,
வெவ்விய கதிரை யுடைத்தான வச்சிரத்தைக் கையிலே யுடையனாய் இருக்கிற இந்திரன் தொடக்கமான தேவதைகளுடைய –
உச்சாரயமும் -உயர்வுகளும் நீ இட்ட வழக்கு.
கொங்கு அலர் தண் அம் துழாய் முடி என்னுடைக் கோவலனே –
உன்னை ஒழிந்த பொருள்களினுடைய உத்காரஷமும் -உயர்வுகளும் உன் அதீனமாம்படி இருக்கிற நீ,
உன்னுடைய உச்ச்ராயம் உயர்வு நான் இட்ட வழக்காம்படி ஆனாய்.
தேனை யுடைத்தாய் மலர்ந்த செவ்வித் திருத் துழாயாலே அலங்கரிக்கப்பட்ட மயிர் முடியை யுடையாய்,
அவ்வழகை எனக்குப் பிரகாசிப்பித்த
ஆஸ்ரய பவ்யனான -அடியார்கட்கு அடக்க முடையவனாய் இருக்கிற கிருஷ்ணனே!
கொங்கு அலர் தண் அம் துழாய் முடி’ என்கையாலே, போக்யதா பிரகர்ஷம் -இனிமையின் மிகுதி சொல்லிற்று;
என்னுடைக் கோவலனே!’ என்கையாலே, ஆஸ்ரித பவ்யத்தையைச் சொல்லுகிறது.
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply