ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-6-3–

பிரமன் சிவன் முதலானவர்களுக்கும் காரணனாய் இருக்கிற நீ,
நிர்ஹேதுகமாக -காரணம் இல்லாமலே வந்து -த்வத் ஏக -நீயே தாரகனாம்படி செய்தருளினாய்;
ஆன பின்னர், நீயே குறையும் செய்தருள வேணும்,’ என்கிறார்.

காத்த எங் கூத்தாவோ! மலை ஏந்திக் கன் மாரி தன்னைப்
பூத் தண் துழாய் முடி யாய்!புனை கொன்றை யஞ் செஞ்சடையாய்
வாய்த்த என் நான் முகனே!வந்து என் ஆருயிர் நீ ஆனால்
ஏத்தருங் கீர்த்தியினாய்!உன்னை எங்குத் தலைப் பெய்வனே?–7-6-3-

காத்த எம் கூத்தவோ –
கீழே கிருஷ்ணனுடைய வ்ருத்தாந்தம் ப்ரஸ்த்துதம் அன்றோ,
ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ’ என்று?
எத்திறம்’ என்றால், பின்னரும் ‘எத்திறம்’ என்று அதிலே போமித்தனை அன்றோ?
மேலே கூறியது வடிம்பிட்டு, திரியட்டும் ‘காத்த எம் கூத்தாவோ’ என்கிறார்.
அன்றிக்கே, ‘பசுக்கள் ஸ்வ ரக்ஷணத்துக்கு மலையை எடுத்தனவோ?’ என்னுதல்.

மலை ஏந்திக் கல்மாரி தன்னை –
கல்லாலே பெய்தலாலே கல்லை எடுத்துப் பாதுகாத்தான்;
நீராலே பெய்தானாகில் கடலை எடுத்து நோக்கும் காணும்.

பூத் தண் துழாய் முடியாய் புனை கொன்றை அம் செம் சடையாய் வாய்த்த என் நான்முகனே!-
அவர் அவர்களுடைய ஸ்வரூபங்களுக்கே உரியனவான -அசாதாரணமான லக்ஷணம் -சொல்லுகிறது.
பூத் தண் துழாய் முடியாய் –
தனக்கே சிறப்பானதாய்-அசாதாரணமாய் -ஐஸ்வர்ய- இறைமைத் தன்மைக்கு ஸூசகமான மாலையாயிற்று இது;
தன்னுடைய சத்தை தன் அதீனமாம்படி இருக்கும் பொருளுக்கு லக்ஷணமாயிற்று இம் மாலை,
இதனால் இவர் பெற்றதாயிற்றது என் இப்போது?’ என்னில்.
உன் சத்தை உன் அதீனமாக இருக்க, நான் எங்ஙனே உன்னைப் பெறுகைக்கு
ஒரு சாதனத்தைச் செய்து காணும்படி?’ என்கை.

புனை கொன்றை அம் செம் சடையாய் –
பிறர் சத்தையோ தான் உன் அதீனம் அன்றிக்கே இருக்கிறது?
பசுக்களின் சத்தை உன் அதீனமானால் போன்று ஈஸ்வரர்களாகச் செருக்குற்றிருப்பார்களுடைய-அபிமானிகளுடைய –
சத்தையும் உன் அதீனமாய் அன்றோ இருக்கிறது?
புனையப் பட்ட கொன்றையை யுடையதாய் அழகியதாய்ச் சிவந்திருந்துள்ள சடையை யுடைய சிவனும் நீ இட்ட வழக்கு.

வாய்த்த என் நான்முகனே –
கீழ் இரண்டு இடங்களிலும் சொன்ன மாலைகள் அவர் அவர்கட்கே உரியவனாய் –
அசாதாரணமாய் -இருக்குமாறு போலே ஆயிற்று,
இவனுக்கும் தனக்கு அடைத்த காரியத்துக்கு நான்கு முகங்கள் சிறப்பாக இருக்கிறபடி.
இன்னமும், ஈஸ்வரன் தனக்கும் ‘இப்படி படைப்போம்’ என்றாலும் முடியாதபடி யாயிற்று
பிரமனுடைய படைப்பில் உண்டான வாய்ப்பு.
என்’
என்னும் சொல், விசேஷ்யத்திலே ஊற்றமாகக் கடவது.
வையதி கரண்யத்தாலே சொன்னால் கழற்றிக் கொள்ளுகைக்கும் உடலாய்,
கேவலம் பேதத்தையே சொல்லுகிறது என்று மயங்குவதற்கும் உடலாய் இருக்கும்;
சாமாநாதி கரண்யத்தாலே சொன்னால் சேஷ சேஷி பாவமாகிற பிரிவும் தோற்றி இருக்கும்.
ஆக, சாமாநாதி கரண்யம் வையதி கரண்யம் என்னும் இரண்டற்கும் பலம் எல்லாவற்றையும் நியமித்தலே அன்றோ?
ஆனாலும், சாமாநாதி கரண்யத்தாலே சொல்லுமதற்கு இத்தனை வாசி உண்டு.
ஸ்வம் உத்திஸய-ஸ்வார்த்தமாக -தன்னை நோக்கியே அன்றோ இவற்றை-உபாதானம் தாங்கிக் கொண்டிருக்கிறான்?
உபாதத்தே ஸத்தா ஸ்திதி நியமநஆத்யை; சித்அசிதௌ
ஸ்வம் உத்திஸ்ய ஸ்ரீமாந் இதிவததி வாக் ஒளபநிஷதீ’- ஸ்ரீரங்கராஜஸ்தவம், 2 : 87.
திருவரங்கநாதனே! திருமால் தன்னை நோக்கியே சேதனங்கள் அசேதனங்கள் ஆகிய இவற்றினுடைய
ஸ்வரூபம் ரஷணம் நியமணம் முதலானவற்றை ஏற்றம் கொள்ளுகிறான் என்று உபநிஷதம் சொல்லுகிறது’ என்கிறபடியே,
சத்தையே பிடித்து, அளித்தல் நியமித்தல் முதலியவைகள் அகப்பட அவன் அதீனமாயிருக்கையாலே,
பிரிய நின்று ஒரு சாதனத்தைச் செய்வதற்கு ஒரு தகுதி இல்லையாம்படி ஆயிற்றுப்
பாரதந்திரியத்தின் எல்லை-அத்யந்தம் – இருக்கும்படி.

வந்து என் ஆர் உயிர் நீ –
பிறர் பக்கல் செய்த உபகாரத்தைச் சொல்ல வேணுமோ?
என் பக்கல் செய்த உபகாரம் தனோ அமையாதோ?
நீ ஒருவன் உளை’ என்று கனாக் கண்டும் அறியாதே புறம்பே அந்ய பரனாய் -பற்று உள்ளவனாய் இருக்கிற என்னை,
அதனைத் தவிர்த்து உன் படியை அறிவித்து உன்னை ஒழியத் தரியாத படியான நிலையைப் பிறப்பித்தாய்.

ஆனால் –
இப்படி இருந்த பின்பு.

ஏத்த அருங்கீர்த்தியினாய் –
நீ சத்தையை உண்டாக்க உன்னாலே சத்தையைப் பெற்று இருக்கிற நான் ‘ஏத்துவேன்’ என்றால்,
என்னாலே தான் ஏத்தலாம்படி இருந்ததோ?’

ஆனால் –
உன்படி அது; என்படி இது;இங்ஙனே இருந்த பின்பு,

உன்னை எங்குத் தலைப்பெய்வனே-
யான் ஓர் உபாயத்தைச் செய்து உன்னை எங்கே வந்து கிட்டப் புகுகிறேன்?
என்னாலே வந்து கிட்டுகை என்று ஒன்று உண்டோ?

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading