ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-6-1–

ஏழாம் பத்து -ஆறாந்திருவாய்மொழி-‘பாமரு’-பிரவேசம்
இப்படித் தெளிந்தால், பின்னைச் செய்வது கூப்பிடுகை போலே காணும்;
இல்லையாகில் ‘சம்சாரம் நன்று’ என்று கலங்கினார் ஆவரே.
அம்மங்கி அம்மாள்’ இத் திருவாய் மொழியில் பாடக் கேட்டு அனுபவித்துப் போரும் இதற்கு மேற்பட,
இதில் ஓடுகிற ஆர்த்திக்கு நம்மால் பாசுரம் இட்டச் சொல்லப் போகாது’ என்று பணிக்கும்’ என்று அருளிச் செய்வர்.

கீழே -ஆழி எழச் சங்கும்’ என்ற திருவாய் மொழியிலே,
சர்வேஸ்வரன் காட்டிக் கொடுத்த விஜயங்களை அனுபவிக்கைக்கு உறுப்பாக,
அவனுடைய அபதானங்களை -வீரச் செயல்களை அருளிச் செய்தார்;
அந்த பிரசங்கத்தாலே -அருளிச் செய்த முகத்தாலே அவனுடைய அவதாரங்களையும்
அதற்கு அடியான கிருபை முதலான குணங்களையும் நினைத்து,
இக் குணங்களும் நடையாடா நிற்க,
இவற்றிலே பிராப்தி -சம்பந்தம் உண்டாய் இருக்க,
தாங்கள் சேதநராய் இருக்க,
சம்சாரிகள் இதனை இழப்பதே!’ என்று விஸ்மிதரானார் -ஆச்சரியப்பட்டார் கீழில் திருவாய் மொழியில்.
அவர்கள் அபேக்ஷை -விருப்பம் இல்லாமையாலே இழக்கிறார்கள்;
அபேக்ஷை -விருப்பமுடைய நாம் இழப்போம் அல்லோம்;
அவனுடைய அவதாரங்களையும் வடிவழகையும் அனுபவிப்போம்,’ என்று பார்த்த விடத்து,
அவற்றை அப்போதே கிட்டி அனுபவிக்கப் பெற்றால் மிகவும் அவசன்னராய் -துக்கித்தவராய்ச்
சர்வேஸ்வரனுக்குப் பரம பதத்திலும் இருப்பு அரிதாம்படி ஆர்த்தியாலே நிரம்பிற்று
ஒரு கடல் கையெடுத்துக் கூப்பிடுமாறு போலே கூப்பிடுகிற கூப்பீடு கேட்டு அவ்விருப்புக் குலைந்து
வந்து முகம் காட்ட வேண்டும்படி,
அவன் பிராப்யனாய் இருக்கிற படியையும்
பிராபகனாய் இருக்கிற படியையும்
விரோதி நிரசன சீலனாய் -அழிக்கும் தன்மையனாய் இருக்கிறபடியையும் சொல்லி,
கேட்டாரடைய நீராகும்படி பெரு மிடறு செய்து கூப்பிடுகிறார்.
2 பாசுரங்கள் பிராப்ய பரம்
5 பாசுரங்கள் பிராபக பரம்
மேலே விரோதி நிரசன சீல பரம்

பஹவோ ந்ருப’ – சக்கரவர்த்தி, ‘பெருமாளைத் திரு அபிஷேகம் -முடி சூட்ட’ என்று கோலி,
அறுபதினாயிரம் ஆண்டு ஒரு தலை மிதிக்க ஒரு தலை மேல் எழும்படி யான ராஜ்யத்தை வருந்தி
ஒரு படி அடிப் படுத்தினோம்;
இதனை ஒரு சிறு பிள்ளையின் தலையிலே வைத்தால் பொறுக்குமோ, போறாதோ?’ என்று விசாரித்து,
இதனை உலகத்தோடே கூட்டிப் பார்ப்போம்’ என்று கோலி, அரசர்கள் எல்லாரையும் திரட்டி,
நான் இங்ஙனே பெருமாளைத் திரு அபிஷேகம் -முடி சூட்டப் பாரா நின்றேன்:
உங்களுக்கு இஷ்டமோ, இன்றோ?’ என்று கேட்க,
அநேக வர்ஷ ஸாஹஸ்ரோ வ்ருத்தஸ்த்வம் அஸி பார்த்திவ
ஸராமம் யுவராஜாநம் அபிஷிஞ்சஸ்வ பார்த்திவம்’- 2 : 21

கதம்நு மயி தர்மேண ப்ருதிவீம் அநுஸந்ஸதி
பவந்தோத்ரஷ்டும் இச்சந்தி யுவராஜம் மமாத்மஐம்’-அயோத். 2 : 25.
உடனே, கிழவா! போகாய்’ என்ன,
நாம் ஒருப்பட்ட காரியம் நன்றாக விழுந்தது; அரசர்கள் கூட்டம் இப்படி விரையப் பெறுவதே!’ என்று
அதிலே மிகுந்த உவகையனாய், அந்த ஹர்ஷத்தை -உவகையை நெஞ்சிலே இட்டு வைத்து,
அதனை இவர்கள் வாயாலே சொல்லக் கேட்கலாகாதோ?’ என்று நினைத்து,
வாரீர் கோள்! அறுபதினாயிரம் ஆண்டு அரசைச் செலுத்துகிற இடத்து. இற்றை வரை எனக்கு என்று
ஒரு சுகத்தைக் கோலாதே உங்கள் ரஷணத்துக்கு ஆமவையே தேடிக் கொடு போந்த நான். ஒரு வார்த்தை சொன்னால்,
இப்போது நீ இருந்தாயாகில் வீகம் என்? கிரமத்திலே செய்து கொள்ளுகிறோம்,’ என்னதல்:
அன்றாகில், ‘உனக்குப் பிரியமாகில் அப்படிச் செய்யலாகாதோ?’ என்று ஒரு வார்த்தை சொல்லி ஆறியிருத்தல்
செய்கை ஒழிய, படு கொலைக்காரர் கையிலே அகப் பட்டார், ‘தப்ப வேணும்’ என்று பார்க்குமாறு போலே
நீங்கள் இங்ஙன் கூப்பிடுகைக்கு நான் செய்த குற்றம் என்?’ என்ன,

தே தம் ஊசு: மஹாத்மாநம் பௌரஜாபதைஸ்ஸஹ
பஹவோ ந்ருப கல்யாண குணா: புத்ரஸ்ய ஸந்தி தே’-அயோத். 2 : 26.
ஓ அரசனே! உன் பிள்ளையான ஸ்ரீராமபிரானுக்கு மங்களகரமான குணங்கள் பல இருக்கின்றன’ என்கிறபடியே,
எதிரிகள் அம்பால் அழியப் பெற்றது இல்லை உன்னுடைய விஷயம் -தேசம்;
உன் மகனுடைய குணத்தாலே நாட்டைப் படு கொலைக் குத்தினாய் காண் நீ,’ என்றார்கள் ஆயிற்று. என்றது,
நாங்கள் குணங்களால் வெல்லப்பட்டவர்களாய் இவ் வார்த்தை சொன்னோ மித்தனை அல்லது
ஒரு காரிய புத்தியோடு சொன்னோம் அல்லோம் காண்,’ என்றார்கள் என்றபடி.

ஜ்ஞாந விஜ்ஞான ஸம்பந்நோ நிதேஸே நிரத: பிது:
தாதுநாம் இவ ஸைலேந்த்ரோ குணாநாம் ஆகரோ மஹாந்’- கிஷ். 15 : 21.
தாதுக்களுக்கு இமய மலை போன்று குணங்களுக்குப் பிறப்பிடமாய் இருக்கின்றான்,
ஒருவராலும் அசைக்கக் கூடாத ஆற்றலை யுடையனாயும் இருக்கிறான்,’ என்கிறபடியே,
தாதுக்களானவை ‘இன்ன மலையில் பொன்’ என்றவாறே விலை போமாறு போலே,
புறம்பே குணங்கள் சிலவற்றைக் கண்டால், பெருமாள் பக்கல் குணம்’ என்று இட்டாயிற்று அங்கு விலை போவது,
இவ் வ்யக்தியில் -வடித்தில் குணம்’ என்றாயிற்றுப் புறம்பு விலை போவது;
இப்படிப் பட்டவனுடைய குணங்களைச் சொல்லிக் கூப்பிடுகிறார்.

பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம்
விரி கமல உந்தியுடை விண்ணவனை’
மூவுலகும் ஈரடியால் முறை நிரம்பா வகை முடியத்
தாவிய சேவடி’– சிலப்பதி. ஆய்ச்சியர் குரவை.

கரனிருந்த வனமன்றோ இவை படவுங் கடவேனோ
அரனிருந்த மலை யெடுத்த அண்ணாவோ அண்ணாவோ’-கம்பராமா. சூர்ப்பணகைப் படலம்-109.

————————–

ஜகத் ஸ்ருஷ்ட்யாதிகளை -உலகத்தைப் படைத்தல் முதலாயினவற்றைச் செய்து உபகரித்து
நிரதிசய போக்யனாய்-எல்லையற்ற இனியனாய் இருக்கிற உன்னை,
உன்னாலே உபகாரம் கொண்டு உன் சுவடு அறிந்த நான் கிட்டுவது அன்றோ?’ என்கிறார்.

பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!
தாமரைக் கண்ணாவோ!தனியேன் தனி ஆளாவோ!
தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?-7-6-1-

பாமரு மூன்று உலகும் படைத்த பற்பநாபாவோ –
பா என்பது பதார்த்த வாசகமாய் –
தேவர் மனிதர் முதலான பொருள்களைக் காட்டுவதாய்,
பா மருவி இருந்துள்ள; அதாவது, ‘பொருள்களினுடைய நெருக்கத்தை யுடையவான மூன்று உலகு’ என்னுதல்.
அன்றிக்கே, ‘பாபம் மருவி இருந்துள்ள மூன்று உலகு’ என்னுதல்:
பாபம் என்றது, ‘பா’ எனக் கடைக் குறைந்து வந்தது.
அன்றிக்கே, ‘பா’ என்று பரம்புதலாய், ‘பரப்பை யுடையவான மூன்று உலகு’ என்னுதல்.
மூன்று உலகு’
என்று, கீழும் மேலும் நடுவுமான உலகங்களைச் சொல்லுதல்.
அன்றிக்கே, கிருதகம், அகிருதகம், கிருதகாகிருதகம் என்று இவ் வகையிலே ஆக்கிச் சொல்லுதல்.
என் தாயே’ என்பாரைப் போலே ‘படைத்த பற்ப நாபாவோ!’ என்கிறார்.
இதனை உண்டாக்குகைக்கு அடியான சம்பந்தமேயாய், இனிமை இன்றிக்கே ஒழிந்ததாகில் தான் நான் ஆறி இரேனோ?
நீ இதனை வருந்திப் படைத்தது அழிக்கைக்காகவோ?
அன்றிக்கே, இல்லாத பொருள்களை உண்டாக்கக் கூடிய நீ, உள்ள பொருளை அழிக்கிறது என்?’ என்னுதல்.

பாமரு மூன்று உலகும் அளந்த பற்ப பாதாவோ –
இவற்றை உண்டாக்கி ‘மேல் பட்டது படுகிறது’ என்று இருந்தாயாகில் தான் ஆறி இரேனோ?
பெற்ற தாய் வளர்க்குமாறு போலே இவற்றைக் கண்களிலே வெண்ணெய் இட்டுக் கொண்டு நோக்குமவன் அல்லையோ?
மஹாபலி போன்றவர்கள் இறாஞ்சினாப் போலே இதனைக் கவர்ந்து கொண்டால் எல்லை நடந்து மீட்டுக் கொள்ளுமவன் அன்றோ நீ?
படிக்கு அளவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய்’ திருவாய். 9. 2 : 2.-என்று ஆசை யுடைய நான் இருக்க,
இச்சை இல்லாதார் தலைகளிலே திருவடியை வைப்பதே!
அது செய்தமை உண்டு, உமக்கு இப்போது அபேக்ஷிதம் -விருப்பம் என்?’ என்ன,
அருளிச் செய்கிறார் மேல்:

தாமரைக் கண்ணாவோ –
அவலோகந தாநேந பூயோ மாம் பாலய அவ்யய’-ஸ்ரீ விஷ்ணு புரா. 16. 20 : 1.
கடாஷத்தைத் தருதலாலே மறுபடியும் என்னைக் காப்பாற்றி அருள வேண்டும்,’ என்னமாறு போலே
திருக் கண்களாலே நோக்க வேணும்’ என்கிறார்.
உத்பத்தியும் -தோன்றுதலும், வளர்தலும், வாழ்தலும் எல்லாம் உன் பக்கலிலே யாயிற்று,

தனியேன் தனி ஆளாவோ –
ஆக, திருக் கண்களின் அழகை அநுசந்தித்தார்;
அக் கண்ணழகே தாரகமாக இருக்கும் நித்ய ஸூரிகள் -‘தாமரைக் கண்ணனை விண்ணோர்
பரவும் தலைமகனை’ (திருவாய். 2. 6 : 3.)-திரளிலே தம்மை இருக்கக் கண்டிலர்;
அதனாலே ‘தனியேன்’ என்கிறார்

தனியேன் தனி ஆளாவோ
ஸ்த்ரீகளினுடைய -பெண்களுடைய நோக்கே தாரகமாக இருக்குமவர்களுடைய திரளுக்கும் கூட்டு அன்றிக்கே,
உன் நோக்கே தாரகமாக இருக்கும் அவ் விபூதியிலுள்ளாருடனும் கூட்டு ஆகாதே,
என்னை மூன்றாம் விபூதி யாக்கி ஆளுகிறவனே!’ என்பார், ‘தனி ஆளாவோ’ என்கிறார்.
அன்றிக்கே, ‘உன் கிருபையே தாரகமாக இருக்கிற என்னை
உன் கிருபைக்கு என்னை ஒழிய வேறு விஷயம் இல்லையாம்படி ஆளுகிறவனே’ என்றுமாம்.

தாமரைக் கையாவோ-
அக் குரூரனைப் போன்று போரேனோ?
ஸோபி ஏநம் த்வஜ வஜ்ராப்ஜ க்ருத சிஹ்நேந பாணிநா
ஸம்ஸ்ப்ருஸ்ய ஆக்ருஷ்யச ப்ரீத்யா ஸூகாடம் பரிஷஸ்வஜே’- ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 18 : 2.
ஸோப்யே நம்’ திருக் கையில் அடையாள மித்தனையும் இலச்சினைப் படி அவன் உடம்பிலே காணலாம்படி
அவனைத் தீண்டி அவன் ஸ்பர்சத்தாலே ஸ்தப்த்தனாய் -செயல் அற்றவனாய் நிற்கையாலே
கையைப் பிடித்து ஏறட்டு, பின்னை அணைக்கைக்கு இருவரைக் கண்டது இல்லை
பஸ்பர்ஸ அங்கம் ததா விஷ்ணு: பிஸாசஸ்ய அபி ஸர்வத:’
கரேண ம்ருதுநா தேவ: பாபந்நிர்மோசயந் ஹரி:’- ஹரி வம்ஸம்.. 275 : 15.
மிருதுவான கைகளால் கண்டா கர்ணனுடைய சரீரத்தையும் கூட எல்லா விடத்திலும் தொட்டருளினார்,’ என்கிறபடியே.

உன்னை என்று கொல் சேர்வதுவே –
பூர்ணே சதுர்த்தஸே வர்ஷே பஞ்சம்யாம்’- யுத். 127 : 1.
பதினான்கு ஆண்டுகளும் முடிந்த பின் பஞ்சமி திதியில்’ என்று நாள் இட்டுக் கொடுக்கலாவது தம்பி மார்க்கோ?
உனக்கே உரியரான அடியார் ஆனால் ‘இன்ன நாள் பெறக் கடவது’ என்று ஒருநாள் இட்டுக் கொடுக்கல் ஆகாதோ?
சேஷ பூதன் -அடியன் ஆகில் -சேஷி -தலைவன் கொடுத்த நாள் பெறக் கடவதாய் அன்றோ இருக்க அடுப்பது?
அங்ஙனம் கிரமத்திலே அடைகிறோம் என்று பார்த்து ஆறி இருக்க மாட்டுகின்றிலேன்.

தனியேன் உன்னை என்று கொல் சேர்வதுவே –
நாராயணனை ஒழிந்து இருப்பது ஒரு நாரம் இல்லையே?
இனிச் ‘சேருகையாவது, அடியார்கள் குழாங்களை உடன் கூடுகை அன்றோ?
உன்னை என்று கொல் சேர்வதுவே’ என்னா நிற்க, அது சேரும் படி என்?’ என்னில்,
ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்பக் கண்டு வைக்கை யாலே,
உன்னைச் சேர’ என்ற போதே தன்னடையே வரும் இறே

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading