ஆஸ்ரிதனுக்காக நரஸிம்ஹமான அதிலும் அதிக குணமான
சாரதியாய் நின்ற வ்ருத்தாந்தத்தை அனுசந்திக்கறார்
மாயம் அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்த்
தேசம் அறிய ஓர் சாரதி யாய்ச் சென்று சேனையை
நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமே–7-5-9-
மாயம் அறிபவர் –
அவனுடைய வியாபாரங்கள் அடங்கலும் ஆஸ்ரித அர்த்தமாக ஆச்சரியமாய் இருக்கும் என்று அறியுமவர்கள்.
மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ- ஆஸ்ரித பரதந்திரப்பட்டவனுக்கு அன்றி ஆள் ஆவரோ?
தாயம் செறும் ஒரு தூற்றுவர் மங்க –
தாய ப்ராப்தியாலே செறுகிற துரியோதனாதியர்களான துர்வர்க்கம் மங்க.
தாயம் கொண்டு நெருக்கிற்றுத் தம்மையோ?
அநுகூலரான பாண்டவர்களை நெருக்கிற்றுத் தம்மை நெருக்கிற்றாய் இருக்கிறபடி.
ஒரு நூற்றுவர், ஓர் ஐவர் –
நெருக்குகிறவர்களும் நெருக்குண்கிறவர்கள் இருக்கிறபடி.
ஓர் ஐவர்க்காய் –
துர்வர்க்கம் அங்கே திரண்டு ஒரு சாரதியை ஒழிய வேறு துணை இன்றிக்கே இருக்கிறவர்கள்.
தன் வழியே ஒழுகாதவர்களை அழியச்செய்து, தன்னை ஒழிய அறியாதவர்களுக்காகத் தான் தாழ நின்று நோக்கினான்.
அன்றிக்கே, சம்பந்தம் இரண்டு தலைக்கும் ஒத்திருக்க, தாழ்ந்த தலை கண்டு நோக்கினானித்தனை அன்றோ?’ என்னுதல்,
அர்ஜூநாங்க கதௌ பாதௌ கேஸவஸ்ய உபலக்ஷயே
அர்ஜூநஸ்ய து க்ருஷ்ணாயா: ஸூபாயா: ச அங்ககாவுபௌ’-பாரதம், உத்யோக பர்.
கண்ணனுடைய திரு வடிகள் அர்ஜூனனுடைய மடியில் இருப்பதைப் பார்த்தேன்;
அர்ஜூனனுடைய கால்கள் கற்புக் கரசியாக திரௌபதியினுடைய மடியில் இருப்பதைப் பார்த்தேன்,’ என்கிறபடியே,
ஒருவர்க்கு ஒருவர் கால் மேல் கால் ஏறட்டு ஒரு நாளாக இருந்த சமயத்திலே
சஞ்சயன் வாசலிலே வந்தான்’ என்று சொல்ல, ‘அவனைப் புகுர’ விடுங்கோள்;
இவ் விருப்புக் காண உகப்பான் ஒருவன்; உகவாதார் நெஞ்சு உளுக்கச் சொல்ல வல்லான் ஒருவன்;
ஆன பின்னர் அவனை அழையுங்கோள்,’ என்றான்.
உகவாதார் கண் படல் ஆகாதாவறு போன்று, உகந்தார் கண் பட்டால் உள்ள நன்மையும்;
இப்படி அன்றோ பாண்டவர்கள் விஷயத்தில் அவன் இருக்கும்படி?
தேசம் அறிய ஓர் சாரதியாய் –
பார்த்தம் ரதிநம் ஆத்மாநம்ச ஸாரதிம் ஸர்வலோக
ஸாக்ஷிகம் சகார’-, கீதா பாஷ்யம்.
அர்ஜூனன் ரதியாகவும் தான் சாரதியாகவும் எல்லா உலகத்திலுள்ளவர் கண்களுக்கு இலக்கானான்’ என்னும்படியே,
இன்னார் தூதன் என நின்றான்’ பெரிய திருமொழி, 2. 2 : 3.-என்கிறபடியே.
உலகத்தில் ஸ்வாதந்திரியமும் பாரதந்திரியமும் முறை மாறின இடத்திலும் ரஹஸ்யத்திலே அன்றோ அவை நடப்பன?
கணவனும் மனைவியும் காலைப் பிடிப்பதும் ரஹஸ்யத்திலே அன்றோ?
இப்படி இருக்கச் செய்தே அன்றோ உலகப் பிரசித்தமாம்படி தன்னைத் தாழ விட்டது?
சென்று சேனையை நாசம் செய்திட்டு –
இது தானும் அர்ஜூனாதிகள் அம்புகளாலே அன்று’ என்றபடி.
ஆயுதம் எடுக்க ஒண்ணாது’ என்று வேண்டிக் கொண்டபடியாலே, சாரதியாயிருந்து தேர்க் காலாலே உழக்கிப் பொகட்டான்.
நடந்த நல்வார்த்தை அறிந்தும் –
தன் மேலே அம்பு மழையாகப் பெய்கிற இத் தண்ணிய பூமியினின்றும் தன் வரவுக்கு எதிர் கொள்வார்
இருந்த இடத்தே போய்ப் புக்கான் என்கிற பெரிய வார்த்தையை அறிந்தும்.
க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா: ப்ருதுலோசந:
மோஹயித்வா ஜகத் ஸர்வம் கத: ஸ்வம் ஸ்தாநமுத்தமம்’-பாரதம், மௌசல். பர்வம்.
நீண்ட கண்களையுடைய கண்ணபிரான் பூமியினுடைய பாரத்தைப் போக்கி உலகத்தை எல்லாம் மோஹிக்கச் செய்து
மேலான தம் இருப்பிடத்தை அடைந்தார்’ என்கிறபடியே, துரியோதனாதியர்கள் இல்லாத இடத்தே போய்ப் புகப் பெற்றது அன்றோ?
மேலே கூறிய செயல்கள் அடங்கலும் தன் ஸ்வாதந்திரியம் கிடக்கச் செய்தே செய்தவை அன்றோ?
ஸ்வ ரக்ஷணத்துக்கு திரு உகிராலும் உண்டே அங்கு; அவை போல அன்றே இங்கு?
தன்னை அடைந்தவர்க்குப் பரதந்திரனாய்த் தன்னை அழிய மாறி, பாண்டவர்களுக்கு உடம்புக்கு ஈடு இடாதே
எதிரிகள் அம்புக்கு இலக்கு ஆக்கின இந் நீர்மைக்குப் போருமோ கீழ்ச் சொன்ன குணங்கள்?’ என்கிறார்.
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply