பாரத சமர -பாரதப் போர்ச் செயலை அருளிச் செய்கிறார்.
ஊணுடை மல்லர் தகர்த்த ஒலி மன்னர்
ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணள்
ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன்
காணுடைப் பாரதம் கை யறை போழ்தே–7-4-5-
ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி –
ஏற்றிலக்கை பெற்று உண்கிற மிடுக்கை யுடையரான துரியோதனன் சேனை தேர்க் காலிலே நெரிந்த ஓசை.
மல் என்பது மிடுக்கு; ‘மிடுக்கையுடைய சேனை’ என்றபடி.
அன்றிக்கே, ‘மல்லர்க்கு மிடுக்கு உண்டாகைக்காக மது மாமிசங்களை உண்பித்து ஆட்டத்து வெளியிலே
நிறுத்தினான் ஆயிற்று நலிகைக்காக:
அதனை அறிந்து பையல்களைத் தேர் கால் கீழே இட்டு நெரித்த ஓசை’ என்னுதல்.
வலியைப் போரப் பொலியச் சொல்லி வைத்து,‘ததர்ந்த’ என்கிறார் காணும்,
பசளைக்கலம் நெரித்தாற் போலே அநாயாசேந- வருத்தம் இன்றியே நெரித்த படியைப் பற்ற.
மன்னர் ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி –
அரசர்களுடைய ஆண் பிள்ளைத் தனத்தை யுடைத்தான சேனை ‘கிருஷ்ணன் சாரதியாக ஏறினான்’ என்று கேட்ட வாறே
நாம் முடிந்தோம் அன்றோ?’ என்று அவ்வளவில் குடல் குழம்பிக் கூப்பிட்ட ஒலி.
ஆண் பிள்ளைகளான பீஷ்மன் துரோணன் முதலாயினோர்கள் அன்றோ தூசி ஏறின பேர்?
விண்ணுள் ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி –
சர்வேஸ்வரனோடு ஒக்க இன்னார் இன்னார் என்னும்படி தங்கள் தங்களைச் சமைய விட்டுக் கொண்டு
செருக்கினை யுடைவர்களாய் ஒரோ இருப்பிடங்களை யுடையவர்களாய் இருக்கிற
தேவர்களின் கூட்டம் கண்ணுக்குத் தோற்றும்படி நின்று துதிக்கிற ஒலி.
இந்த அந்தர ஜாதிகளைத் தன்னுடனே ஒருசேர எண்ணலாம்படி தன்னைத் தாழ விட்டு வைக்குமே தன் சௌலப்பியத்தாலே!
ஸபிரஹ்மா ஸஸிவ: ஸேந்த்ர;’ நாராயண ஸூக்தம்.
அவன் பிரமன்; அவன் சிவன், அவன் இந்திரன்,’ என்று ஒரு கோவையிலே எண்ணலாம்படி இருக்கிறவர்கள்.
அப்பன்-
பூ பாரத்தை நீக்கிய உபகாரகன்.
காணுடைப் பாரதம் கை அறை போழ்தே-
கண் முதலான கரணங்களைப் படைத்ததற்குப் பிரயோஜனம் அற்றை நிலையைக் காண்கை அன்றோ?
சேனையின் தூளியும், கையும் உழவு கோலும் சிறு வாய்க் கயிறுதம், நாற்றின திருவடிகளுமாய் நிற்கிற நிலை அன்றோ அது?
இந்நிலைக்கு உபேயத்வ மாத்திரமன்றிக்கே, உபாயத்வமும் உண்டு என்கிறார்,
மாம்’ என்று தொடங்கி. ‘கையும் உழவுகோலும், பிடித்த சிறுவாய்க்கயிறும். ஸேநா தூளி தூசரிதமான திருக்குழலும், தேருக்குக் கீழே
நாற்றின திருவடிகளுமாய் நிற்கிற சாரத்ய வேஷத்தை ‘மாம்’ என்று காட்டுகிறான்’ – முமுக்ஷூப்படி சரம ஸ்லோக ப்ரகரணம், சூ. 33.
காணுடைப் பாரதம் கை அறை போழ்தே
தர்ச நீயமான -காணுதற்கு இனிய பாரதம்.
கை அறை போழ்து –
கையும் அணியும் வகுத்து அங்கோடு இங்கோடு உலாவிப் படை பொருத்தி,
நீங்கள் இன்னபடி செய்யக் கடவீர்கோள்! நாங்கள் இன்னபடி செய்யக் கடவோம்’ என்று
கை தட்டி விட்ட போது இந்த ஒலி எல்லாம் உண்டாயின.
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply