ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-3-10–

இருந்ததே குடியாக உலகத்தார் உன்னைப் பழி சொல்லார்களோ?’ என்று தோழிமார்கள் சொல்ல
அவர்கள் அன்றோ எனக்குத் தேட்டம்?’ என்கிறாள்.

நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாண் எனக்கு இல்லை என் தோழிமீர்காள்!
சிகர மணி நெடு மாட நீடு தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
மகர நெடுங்குழைக் காதன் மாயன் நூற்றுவரை யன்று மங்க நூற்ற
நிகரில் முகில் வண்ணன் நேமியான் என் நெஞ்சங் கவர்ந்து எனை ஊழியானே–7-3-10-

நகரமும் நாடும் பிறவும் தேர்வன்-
உன் துணிவாக, நாட்டார் நகரத்தார் மற்றுமுள்ளாரும் எல்லாரும் அறிந்து பழி சொல்லுகிறார்களே!’ என்ன,
எனக்குத் தான் தேட்டம் அவனேயோ?
நகரம், நாடு பத்தநம் முதலானவைகள், இவற்றிலுள்ளாருடைய பழியே யன்றோ எனக்குத் தேட்டம்?
தேர்வன்’ ‘
தேடுகிறேன்’ என்றபடி.
நீங்கள் சேர்க்கிலீர் கோளாகில், அவன் தானாக வாரானாகில், அவனுடனே கூட்டிப் பழி சொல்லுகிற இவர்கள் அன்றோ
என் சத்தையை -ஆத்மாவை நோக்குகிறார்கள்?
அலர் எழ ஆருயிர் நிற்கும்’ என்றான் அன்றோ?
பிறவும் –
மற்றுமுள்ளனவும்.

நாண் எனக்கு இல்லை –
லஜ்ஜை -நாணம் இங்கு இல்லாமையே அன்று;
அங்குப் போனாலும் இல்லை. இந்தச் சரீரத்தில் முதலிலே இல்லாமை.

என் தோழிமீர்காள் –
இது நான் உங்களுக்குச் சொல்லி அறிய வேண்டுபடி ஆவதே!

சிகரம் மணி நெடு மாடம் நீடு தென் திருப்பேரெயில் வீற்றிருந்த –
மலைகளின் சிகரங்களைக் கொடு வந்து வைத்தால் போலே ஓக்க முடைத்தாய்,
ரத்தின மயமான மாடங்களை யுடைய பெரிதான தென் திருப்பேரெயில் வீற்றிருந்த.

மகர நெடுங்குழைக்காதன் –
மகரத்தின் ஆகாரமான -வடிவமான பெரிய ஆபரணத்தை யுடைய கர்ண பாசங்களை யுடையவன்.
தோள் கண்டார் தோளே கண்டார்; தொடு கழற் கமல மன்ன
தாள் கண்டார் தாளே கண்டார்; தடக்கை கண்டாரும் அஃதே;
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்?
ஊழ் கொண்ட சமயத் தன்னான் உருவு கண்டாரை ஒத்தார்.’-கம்பராமாயணம்

அவனுடைய ஒரோ அவயங்களில் படிந்தாரை மீட்கலாயோ இருப்பது?

மாயன் –
சொல்லிச் சொல்லாத தேக காந்தியையும் ஆத்ம குணங்ளையும் நினைக்கிறது. அன்றிக்கே,
மாயன் –
அடியார்களிடத்தில் பக்ஷபாதத்தை யுடையவன்’ என்னுதல்.

நூற்றுவரை அன்று மங்க நூற்ற –
சிலரை அழிக்க நினைத்தால் ஒருவரும் தப்பாதபடி அழிக்குமவன்.
துரியோதனன் முதலாயினோர்களைப் பாரதப் போர் உண்டான அன்று நசிக்கும்படி மந்திரித்த.

நிகர் இல் முகில் வண்ணன்-
ஒப்பில்லாத காள மேகம்போலே இருக்கிற வடிவழகு.
இதனால், ‘விரோதியை வளர்த்தாலும் விட ஒண்ணாத வடி வழகு’ என்கை.

நேமியான் –
அடியார்களுடைய விரோதிகளைப் போக்கும் போது பகலை இரவு ஆக்கும் பரிகரத்தை யுடையவன்.
திருவாழியைக் கொண்டு பீஷ்மாதிகள் முதலாயினோர்களையும் தொடரா நிற்பன் அன்றோ?

நிகர் இல் முகில் வண்ணன் நேமியான் –
துரியோதனன் முதலாயினோர்கட்கு மின்னும் இடியுமாய்,
பாண்டவர்கள் ஆர்த்தி -துன்பம் தீர மழை பெய்து நின்றபடி.
அவன் உன் விரோதிகளைப் போக்கிக் கூட நினையாத பின்பு, அவன் தானே வந்து உன் காலிலே விழும்படி மந்திரத்தாலோ?’ என்ன,

என் நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியானே –
அதற்கு ஈடான பரிகரத்தை நான் இழந்து எத்தனை காலம் உண்டு?
வடிவழகையும் ஆயுதச் சேர்த்தியையும் காட்டி என் நெஞ்சினைக் கவர்ந்து போய் எத்தனை காலம் தான்?
எனை ஊழியானே –
பல கல்பங்கள் உண்டு. துரியோதனன் முதலாயினோரை வெல்ல எண்ணினால் போலே,
என் நெஞ்சினை அபஹரிக்கைக்கு – கவர்வதற்கு எத்தனை காலம் எண்ணினானோ!

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading