நாங்கள் பலநாள் தேவதைகளுக்குப் பச்சை இட்டு ஆஸ்ரயித்து -ஆராதித்துப் போந்தோம்;
அதன் முடிவு கண்டு, பின்பு பகவானைப் பற்றுகிறோம் என்ன, நீங்கள் ஆஸ்ரயிக்கிற -ஆராதிக்கின்ற தேவதைகள்
உங்களைக் காப்பாற்றுவதும் அவன் பக்கலிலே கொடு சென்று காட்டிக் கொடுத்தாயிற்று,
ஆன பின்பு, அவனையே ஆராதிக்கப் பெறில் அழகிது; அதுவும் மாட்டீர் கோளாகில்,
நீங்கள் அவர்களுக்கு இடுகிறவற்றை ‘இவர்கள் அவனுக்கு-தனுபூதர் – சரீரமாக உள்ளவர்கள்,
இவர்கள் முகத்தாலே நாம் பகவானை ஆராதிக்கிறோம்’ என்று புத்தி பண்ணியாகிலும்
இடுதற்குப் பாருங்கோள் என்கிறார்.
நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக் கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்ப தெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே–5-2-7-
நிறுத்தி –
த்யேயா வஸ்துவை -தியானம் செய்தற்குரிய பொருளை –
ஸ்திப்பிக்கையும் -நிலைத்திருக்கச் செய்கையும் தியானம் செய்கிறவனுக்கே பரமாயிற்று.
தியானம் செய்கிற இவன் எடுத்த, நிறுத்த, நிற்கின்றவையே யன்றோ அந்தத் தெய்வங்கள்.
நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் –
உங்களுடைய ஹ்ருதயங்களிலே கொள்ளுகின்ற தேவதைகள்.
புறம்பே சிலர் அறியில்-அபஹசிப்பர்கள் – பரிஹசிப்பர்கள்’ என்று தாங்களே அறிந்ததாக
உபாசிப்பவர்கள் என்பார் ‘உள்ளத்துக் கொள்ளும்’ என்கிறார்.
உம்மை உய்யக்கொள்-
உங்களை உஜ்ஜீவிப்பித்துக் கொண்டார்கள் ஆகிறபடி.
மறுத்தும் அவனோடே கண்டீர்-
நீங்கள் ‘அவனிலும் இவர்கள் ஆஸ்ரயணீயர்- அடையத் தக்கவர்கள்’ என்று பற்ற,
இவர்கள் உங்களை அவன் பக்கலிலே கொண்டு போய் அன்றோ காப்பாற்றுவது.
“நஹிபாலன சாமர்த்யம் ருதே சர்வேஸ்வரம் ஹரிம்
ஸ்திதௌ ஸ்திதம் மஹாத்மாநம் பவதி அந்யஸ்ய கஸ்யசித்”-ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 22 : 19.
காப்பாற்றுவதில் நிலை நிற்கின்றவரும் எல்லா ஆத்மாக்களுக்கும்
ஈஸ்வரனாயும் மஹாத்மாவாயும் இருக்கிறவருமான விஷ்ணுவைத் தவிர,
காப்பாற்றும் திறன் வேறு ஒருவர்க்கும் இல்லை என்பது பிரசித்தம்” என்கிறபடியே,
என்றும் ரக்ஷண தர்மம் கிடப்பது அவன் பக்கலிலே யாம்.
வேறு சிலரை ஆச்ரயிக்க -ஆராதிக்க அவனே பலத்தைக் கொடுக்கிறவன் ஆவான் என்பது என்? என்ன,
மார்க்கண்டேயனும் கரியே-
இவ் வர்த்தத்திற்குச் சாக்ஷி மார்க்கண்டேயன். அம் மார்க்கண்டேயன் பலநாள் தேவனை ஆச்ரயிக்க -ஆராதிக்க,
அவனைப் பார்த்து, ‘பலநாள் நீ நம்மை ஆஸ்ரயித்தாய், இந்த ஆஸ்ரயணம் பாழே போக ஒண்ணாது,
உன்னோடு என்னோடு வேற்றுமை இல்லை, உனக்கு ஒரு புகல் காட்டித் தருகிறேன் போதரு’ என்று
சர்வேஸ்வரன் பக்கலிலே கொண்டு சென்று, அவனுடைய விருப்பத்தைத் தலைக் கட்டிக் கொடுத்தான்;
ஆன பின்னர், இதற்குச் சான்று அவனே என்றபடி.
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா-
புன் சிறு தெய்வங்களைப் பரம்பொருளாக நினைத்து இருக்கும் தண்ணிய மனம் உங்களுக்கு வேண்டா.
கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை-
“ஜோதீம்ஷி சுக்ராணிச யாநி லோகே த்ரயோ லோகா : லோகபாலா:
திரயீச, திரய : அந்நய : ச ஆஹீதய:ச பஞ்ச ஸர்வே தேவா தேவகீ
புத்ர ஏவ” என்பது, மஹாபாரதம் வீடுமப்பர்வம்.
சர்வ தேவா தேவகிபுத்ர ஏவ -வேதங்களும் மூன்று அக்நிகளும் ஐந்து ஆஹீதிகளும் எல்லாத் தேவர்களும்
தேவகியின் புத்திரனான கண்ணபிரானே” என்கிறபடியே, அவனுக்குச் சரீரமாக அல்லது ஸ்வதந்திரமாயிருப்பது
ஒரு தேவதை இல்லை.
“யோ யோ யாம் யாம் தநும் பக்த:சிரத்தயா அர்ச்சிதும் இச்சதி
தஸ்ய தஸ்ய அசலாம் சிரத்தாம் தாமேவ விததாமி அஹம்”-என்பது, ஸ்ரீ கீதை. 7 : 21.
யோ யோ யாம் யாம் தநும் பக்த -எந்த எந்த பக்தன் எந்த எந்தச் சரீரத்தை ஸ்ரத்தையுடன் அர்ச்சிப்பதற்கு விரும்புகிறனோ
அவன் அவனுக்கு அந்த அந்த ஸ்ரத்தையையே நிலை நிற்கும் படி செய்கிறேன்” என்கிறபடியே,
அக் கண்ண பிரானுக்குச் சரீரமாக உளராகில் ஆமித்தனை.
இறுப்பது எல்லாம் அவன் மூர்த்யாயவர்க்கே இறுமின் –
ஆனபின்பு, நீங்கள் அவ்வத் தேவர்கட்குக் கொடுக்கும் சமாராதநத் திரவியங்களை எல்லாம்
இவர்கள் அவனுக்குச் சரீரமாக இருப்பவர்கள்’ என்று புத்தி பண்ணி, அவர்களுக்குக் கொடுக்கப் பாருங்கோள்.
இறுப்பது எல்லாம்’ என்றது,
தேவதாந்தராய-பிற தேவதையின் பொருட்டு” என்று தோற்றுகிற நித்ய நைமித்திகக் காமங்களையெல்லாம் என்றபடி.
அவன் மூர்த்தியாயவர்க்கே’ என்றது,
அவனுக்குச் சரீரமாக இருக்கிற அவர்களுக்கே என்றபடி.
ஆக, “அந்தராத்மா சர்வேஸ்வரன்’ என்று புத்தி பண்ணி
அவனுக்குச் சாமாராதனம் செய்கிறோம் என்ற எண்ணத்தோடு செய்யுங்கோள் என்றபடி.
————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply