சேதனர் ஐஸ்வர்யத்தை விரும்பினால், அது விநாச ஹேதுவாய் -அழிவிற்குக் காரணமாதலைக்
காணா நிற்கச் செய்தேயும், மீண்டும் அந்தச் செல்வத்தை விரும்புதலே ஸ்வபாவமாம் படி – இயல்பாம் படி –
இருக்கிற இதற்குக் காரணம் யாதோ? நான் இது கண்டு பொறுக்க மாட்டுகின்றிலேன்:
முன்னம் என்னை இவர்கள் நடுவில் நின்றும் வாங்க வேண்டும்,’ என்கிறார்.
கொள் என்று கிளர்ந்து எழுந்து பெருஞ்செல்வம் நெருப்பாகக்
கொள் என்று தமம் மூடும்; இவை என்ன உலகியற்கை!
வள்ளலே! மணிவண்ணா! உன கழற்கே வரும் பரிசு,
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே –4-9-4-
கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் –
இவன் தான் அர்த்தியா விரும்பாது இருக்கச் செய்தேயும் ‘கொள், கொள்’ என்று
மொண்டெழு பானை போலக் கிளர்ந்து வருகிற எல்லை இல்லாத செல்வமானது.
நெருப்பாக –
நிச்சேஷமாக -அடியோடு அழிய’ என்னுதல்;
அன்றிக்கே ‘தன்னுடைய விநாசத்துக்கு – அழிவிற்குக் காரணமாக’ என்னுதல்.
செல்வம் அழிவிற்குக் காரணமாதல் யாங்ஙனம்?’ எனின், ‘இவன் வாழ்கிறான்’ என்கிற இது கேட்டுப் பொறுக்க மாட்டாமலே
அன்றோ பிறர் இவனை அழிக்க வருவது? ஆதலால், தன் அழிவிற்குச் செல்வம் காரணமாதல் காண்க.
கொள் என்று தமம் மூடும் –
இப்படிச் செல்வமானது அழிவிற்குக் காரணமாதலைக் காணச் செய்தேயும்,
பிறர் இவனைக் ‘கொள், கொள்’ என்று தூண்ட, தம அபி பூதனாய் – -அறிவின்மையால் மூடப்பட்டவனாய் –
துராசையாலே-பேராசையாலே முன்பு அழிவிற்குக் காரணமான அச் செல்வத்தை ஏற்றுக் கொள்வான்.
அறிவின்மையால் மூடப்பட்டவனாய் விரும்புகிறான் என்பதனை இவர் அறிந்தவாறு யாங்ஙனம்?’ எனின்,
மீளவும் அச் செல்வத்தை அவன் விரும்பும் போது தமோ குணத்தாலே மூடப்பட்டவனாய்த் தானே இருத்தல் வேண்டும்?
அன்றிக்கே, ‘கொள்’ என்று தூண்டுகிறது, மனமாகவுமாம்.
அன்றிக்கே, ‘இது அழிவிற்குக் காரணமாம்,’ என்று அறியச் செய்தேயும், இவனுடைய மனத்தைத்
தமோ குணத்தாலே மறைப்பித்து, ‘அதனைக் கொள்’ என்று தூண்டி இவனை விரும்பும்படியாகச் செய்யும்
இச் செல்வத்தினுடைய வலிமை,’ என்னலுமாம்.
ஹதே பீஷ்மே ஹதே த்ராணே ஹதே கர்ணே மஹா ரதே ஆசா பலவதீ ராஜன் சல்யோ ஜேஷ்யதி பாண்டவான்-
மஹாரதரான பீஷ்மர் இறந்த பின்னரும், துரோணர் இறந்த பின்னரும், கர்ணன் இறந்த பின்னரும்,
சல்லியன் பாண்டவர்களை வெல்வான் என்ற ஆசையானது அதிகரித்தது,’ என்கிறபடியே,
அதிரதர் மஹாரதர் அடையப் பட்டுப் போகாநிற்கச் செய்தேயும், பின்னையும் சல்லியனைக் கொண்டே
பாண்டவர்களை வெல்லப் பார்த்தான் அன்றோ துரியோதனன்-
இவை என்ன உலகியற்கை –
இவை லோக யாத்திரை -உலக வாழ்வுகள் சில இருக்கிறபடியே!
வள்ளலே –
ஐஸ்வர்யம் விநாச ஹேது -செல்வம் அழிவதற்குக் காரணம்’ என்னுமதனை என் நெஞ்சிலே படுத்தி
எனக்கு ஒளதார்யத்தைச் செய்தவனே!
மணி வண்ணா –
மாணிக்கப் பண்டாரத்தை அன்றோ ஒளதார்யம் செய்தது?
சாதந அநுஷ்டானம், மற்றொன்றனைப் பண்ண அன்றாயிற்று.
அன்றிக்கே, ‘செல்வம் முதலானவற்றில் வெறுப்பினைப் பிறப்பித்தது, பிடாத்தை விழவிட்டு வடிவழகைக் காட்டியாயிற்று-
என்பார்- ‘மணி வண்ணா’ என்கிறார் என்னலுமாம்.
உன கழற்கே வரும் பரிசு –
ஞான லாப மாத்திரத்தால் போதுமா? பேற்றினைப் பண்ணித் தரவேண்டாவோ?
மயர்வு அற மதி நலம் அருளினதைப் போன்று, துயர்அறு சுடரடி தொழுது எழப் பண்ண வேண்டாவோ?
பசியை விளைத்தால் சோறு இட வேண்டாவோ?
வள்ளல் செய்து –
உன் திருவடிகளிலே நான் வந்து கிட்டும்படியாக ஒளதார்யத்தைப் பண்ணி. என்றது,
இவன் இப் பேற்றைப் பெறுவான்,’ என்று-விஷயீ கரித்து -அங்கீகரித்து, என்றபடி.
அடியேனை –
பிறர் உடைமையையோ நான் நோக்கச் சொல்கிறது –
உன்னுடைய உடமை நசியாமல் நோக்க நோக்க வேண்டும்’ என்று பிரார்த்திக்கின்ற என்னை.
உனது அருளால் –
மயர்வு அற மதிநலம் அருளினதைப் போன்று-ப்ராப்திக்கு ஈடாய் – பேற்றுக்கும் தனியே ஓர் அருளைச் செய்யவேண்டும்.
வாங்காய்-
என்று அஃறிணையைப் போன்று சொல்லுகிறார்.
அதற்கு அடி, இத்தலையில் பரமபத்தி பர்யந்தமாகப் பிறந்தாலும்,
பெறுகிற பேற்றின் கனத்தைப் பார்த்தால், அத்தலையின் அருளாலே பெற்றதாம்படி இருக்கையாலே.
————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply