பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –10-7-

தான் சொன்னபடியே செய்யக் கடவனாகச் சமைந்து கொண்டு தம்முடைய திரு உள்ளத்திலே புகுந்து அருளினை
எம்பெருமான் தம்மோடு கலந்த கலவியாலே தமக்குப் பிறந்த நிரவதிக ப்ரீதி அதிசயத்தாலே –

————————————————–

செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–9-7-1-

எம்பெருமானைக் கவி பாடுகிறவரைக் குறித்து நீங்கள் அவனுக்கு அடிமை செய்யும் இடத்தில்
உங்கள் உயிரைக் காத்துக் கொண்டு அடிமை செய்யுங்கோள்-
அவன் தனக்கு அடிமை செய்வாரை அசாத்ம்யமாம் படி அதி மாத்ர சம்ச்லேஷத்தைப் பண்ணி பாதிக்குமே-
அவர்களுடைய இச்சை அனுகுணமாக அடிமை செய்வித்துத் கொள்ளும் ஸ்வ பாவன் அல்லனோ என்னில் –
அவன் பாதிக்கும் ஸ்வ பாவனாய் இருந்து வைத்தே பாதியாதானைப் போலே இருக்கும் ஒரு மஹா வஞ்சகன் கிடி கோள்-
எங்கனே என்னில் -என்னை உபகரணமாகக் கொண்டு கவி சொல்லுகை என்னும் வ்யாஜத்தினாலே என்னுள்ளே புகுந்து கலந்து –
இன்னபடி செய்து அருளினான் -என்று அயர்வறும் அமரர்க்கும் அறிய நிலம் அல்லாத தொரு படி
என் நெஞ்சையும் உயிரையும் தன்னுள்ளே அடக்கி தானேயாம்படி
மாள புஜித்து பரிபூர்ணன் ஆனான் என்கிறார் –

———————————————————–

தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே யாய்
தானே யான் என்பான் ஆகி தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலைக்
கோனே யாகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே–9-7-2-

இப்படி என்னுயிரை முற்றும் உண்டு தானே யாகி பரிபூர்ணனாய் இதினாலே சர்வேஸ்வரனுமாய்
என்னுயிரை மாள புஜித்தும் திருப்தனாகாதே நான் சொல்லும் சொற்களைக் கொண்டு அனுபவிக்கைக்காக
என்னைக் கொண்டு திருவாய் மொழியைச் சொல்லுவித்து
இப்படியே என்னோடுள்ள சம்ச்லேஷம் தனக்கு இனிதாகைக்காக எனக்குத் தன்னையே நிரவதிக போக்யமாக்கி அருளினான் –
திருமாலிருஞ்சோலை மலை நாயகனாய் நின்ற நிலை அவனுக்கு சபலமாய்த்து என்று கொண்டு
தத் அபிப்ராயத்தாலே சொல்லுகிறார் –

———————————————————–

என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே–10-7-3-

என்னை புஜித்து அருளுகிறார் -இந்த ஹேயமான ப்ரக்ருதியினுள்ளே புகுந்து என்னை புஜித்து என்னை முற்றும் தானே யானான் –
இப்பேறு பெறுகைக்கு ஹேது என் என்னில் –
அவன் சேர் தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கை கூப்பப் பெற்றேன் –
என்னுடன் இப்படியே கலந்து பரிமாறியும் பின்னையும் கலந்து பரிமாறாதானாய்
அடி தொட்டுக் கலந்து பரிமாறுகையிலே பாரித்து அருளா நின்றான் –
இன்னம் இதுக்கு மேலும் ஒரு சம்ச்லேஷம் உண்டோ -திரு உள்ளம் என் தான் -என்கிறார் –

———————————————————-

என் கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானேயாய்
நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே–10-7-4-

என்னுடைய ப்ரக்ருதியினுள்ளே புகுந்து இவ்வாத்மாவை புஜித்து அருளுகையும் அன்றியே சர்வ ஜெகதீஸ்வரனாய் இருந்தான் –
என்னுடைய ப்ரக்ருதி தன்னையும் கூடத் தனக்கு போக்யமாகக் கொண்டு ஒரு க்ஷணமும் கை விடுகிறிலன் –
இப்படி என்னோடுள்ள சம்ச்லேஷம் பெறுகைக்கு ஈடான தேசமேதோ-என்று தேடிக் கொண்டு
திருமலையில் வந்து புகுந்து தான் கருதின படியே அங்கே ஸம்ஸ்லேஷித்து ப்ரீதனாய்
இந்த ஸம்ருத்தி எல்லாம் விளைவித்தது திருமலை இறே என்று கொண்டு திருமலையையும் –
என்னுயிரும் உடலும் போலே தனக்கு போக்யமாகக் கொண்டு கை விடுகிறிலன் –
என்னுயிரையும் உடலையும் திருமலையையும் அனுபவித்து ப்ரீதனானான் –
பிரதிகூலர் இந்த ஸம்ருத்தி கண்டு பொறுக்க மாட்டாதே தறைப்படும்படி ப்ரீதனானான் என்கிறார் –

————————————————————

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5-

பிரதிகூலர் தறைப்படும்படியாகவும் தனக்கு நல்லரான அமரர் ஸம்ருத்தராம் படியாகவும் –
லீலா உபகரணமாயும் போக உபகரணமாயும் இருந்த நிரதிசய ஸம்ருத்திகள் எம்பெருமானுக்கு
உளவாய் இருக்கச் செய்தே இவை ஒழியவே-அதின் மேலே
ஸத்ய சங்கல்பனாய் இருந்த எம்பெருமான் தன்னாலும் சம்பாதிக்க ஒண்ணாதே வாக் மனஸ் அகோசரமான அபர்யந்த ஸம்ருத்திகள்
எம்பெருமானுக்கு உளவாக வேணும் என்று மநோ ரதியா நிற்கும் நல் முனிவர் –
நம்முடைய மநோ ரத அபிவர்த்தியான நிரவதிக ஸம்ருத்திகள் எம்பெருமானுக்கு விளையப் பெற்றோம் –
இனி நமக்கு ஒரு குறையில்லை -என்று கொண்டு
நிரவதிக நிர்வ்ருத்தியை யுடையராம்படியாகவும் பண்ணார் பாடலான இந்த கவிகளை என்னை இட்டுப் பாடுவித்து
இக்கவிகள் ஆகிற அம்ருதத்தைப் பருகிக் களித்து
அம்ருத பானம் பண்ணின வண்டுகள் போலே தென்னா தெனா வென்று திருமலையில் நின்று பாடி அருளா நின்றான் என்கிறார் –

————————————————-

திருமால் இரும் சோலையானே யாகி செழு மூஉலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்
திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது
அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே–10-7-6-

த்ரை லோக்யம் எல்லாம் தன் சிறு திரு வயிற்றிலே வைத்து யுகம் தோறும் ரஷித்து அருளும் ஸ்வ பாவனாய்
ஸ்ரீ யபதியாய்-ப்ரஹ்ம ருத்ராதிகளால் அனவரத அபிஷ்டுத சரண யுகளனாய்-
தத் சமீஹித பலப்ரதனாய் சர்வேஸ்வரனாய் இருந்த திருமாலிருஞ்சோலையான்
எனக்குப் பித்தனாய் என்னைப் பிரிகிறிலன் என்கிறார் –

————————————————————

அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே–10-7-7-

இஸ் ஸம்ருத்தி எல்லாம் திருமலையை ஆஸ்ரயித்து இறே வந்தது என்று கொண்டு திருமலையை நின்று ஏத்துகிறார் –

————————————————–

திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-

விளைந்த ஸம்ருத்தி தான் எது என்னில் இதை என்கிறார் –
திருமாலிருஞ்சோலை திருப் பாற் கடல் திருநாடு திருமலை தொடக்கமாகத் தான் எழுந்து அருளி இருக்கும் திரு நகரிகள்
எல்லாவற்றிலும் உள்ள சம்ச்லேஷத்தினால் ப்ரீதனமாம் போலே
என்னுடைய அவயவங்களிலே ஓரோர் அவயவத்தோடுள்ள சம்ச்லேஷத்தினால் என்னை ஒரு க்ஷணமும் பிரியில் தரிக்க மாட்டு கிறிலன் –
ஒருவனுடைய அபி நிவேசம் இருக்கும் படியே இது என்கிறார் –

———————————————————

ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும்
ஆழி வண்ணன் என் அம்மான் அம் தண் திரு மால் இரும் சோலை
வாழி மனமே கை விடேல் உடலும் உயிரும் மங்க ஓட்டே–10-7-9-

நமக்கு இந்த ஸம்ருத்தி எல்லாம் திருமலையாலே வந்த ஸம்ருத்தி கிடாய் –
நெஞ்சே இனி திருமலையைக் கை விடாதே கிடாய் என்று நெஞ்சைக் குறித்துச் சொல்லி
இவ்வாத்மாவினுடைய நிகர்ஷம் பாராதே இத்தோடு கலந்து அருளினாய் யாகிலும்
என்னுடைய ஹேயமான இந்த பிரக்ருதியில் அபி நிவேசத்தை விட்டு அருள வேணும் -என்று
எம்பெருமானைப் பிரார்த்திக்கிறார் –

————————————————————–

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-

தாம் இப்படி பிரார்த்திக்கச் செய்தேயும் தம்முடைய ப்ரக்ருதியில் உள்ள லோகத்தினாலே
எம்பெருமான் தம்முடைய சொல்லை யாதரியாது இருக்க
அவனுக்கு இதினுடைய ஹேயதையை ப்ரதர்ஸிப்பித்து இந்த ஹேயமான ப்ரக்ருதியில் அபி நிவேசத்தை அவஸ்யம் விட்டு
அருள வேணும் என்று பின்னையும் அபேக்ஷிக்கிறார் –

—————————————————————————

மான் ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத்
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11-

நான் சொன்னபடியே செய்து அருளும் ஸ்வ பாவனானவாறே தனக்கு அத்யந்தம் அபிமதமாய் இருந்த
இப்பிரக்ருதியில் அபி நிவேசத்தை விட்டருளி பெரிய செருக்கோடு கூட என்னுள்ளே புகுந்து கலந்து அருளின
எம்பெருமான் என்னோடே கலந்து பரிமாறுகையால் அவனுக்குள்ள கர்வத்தைச் சொல்லுகிறதாய்
எம்பெருமானை ப்ரதிபாதித்த ஆயிரம் திருவாய் மொழியிலும் பெரிய கிளர்த்தியோடே எழுந்த
இத்திருவாய் மொழி திருமாலிருஞ்சோலையை ப்ரதிபாதிக்கிறது -என்கிறார் –

——————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading