அழகிய மணவாளச் சீயர் அன்போடு அருளிச் செய்த பன்னீராயிரப்படி –10-7-

ஏழாம் திருவாய் மொழியில் கீழ் இவர்க்குப் பரமபதத்தைக் கொடுக்கையில் யுத்யோகித்த சர்வேஸ்வரன்
இவர் முடியில் திருவடிகளை வைத்துத் திரு உள்ளத்திலே பூர்ணமாகப் புகுந்து இருந்து –
விரை குழுவு நாறும் துளவம் மெய்ந்நின்று கமழும்என்னும்படி
திருமேனி முழுக்கத் திருத்துழாய் பரிமளமாம்படியாக இவருடைய சரீரத்தோடு அந்த கரணத்தோடு
மற்றும் உள்ள அவயவங்களோடு வாசியற அத்யபி நிவிஷ்டனாய்
ஆதரிக்கிறபடியைக் கண்டு இவ்வாதார அதிசயத்துக்கு ஹேது வான அவனுடைய
ஆச்ரித விஷயமான அபி நிவேசத்தையும்
அதிசயித போக்யத்வத்தையும்
ஆஸ்ரித தேகத்தில் ஆதாரத்தையும்
அதில் அத்யந்த அபி நிவேசத்தையும்
ரசிகத்வத்தையும்
சர்வாதிகத்வத்தையும்
ஆஸ்ரிதார்த்த திவ்ய தேச வாசத்தையும்
சர்வ பிரகார சம்ச்லேஷத்தையும்
ஜகத் ஸ்ருஷ்ட்யாதி ஹேதுத்வத்தையும்
அபேக்ஷ அபராதீனத்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் விதனான சர்வேஸ்வரன் யுடைய ஆதார அதிசயம் இருந்த படியால் நாம் இனி யாம் உறாமை -என்று
உபேக்ஷித்த தேஹாதிகளையும் விளம்பமறக் கொண்டு போவாரைப் போலே இரா நின்றது –
அஸ்த்திரமாய் தோஷ பூயிஷ்ட்ட்மாகையாலே அ புருஷார்த்தமாய் அனுபவ விரோதி யாகையாலே
இருக்கிற இத்தை நம் பக்கல் ஆதரத்தாலே விரும்பா நின்றான் –
இத்தை அறிவித்தும் நாம் அவனை அர்த்தித்தும்-விடுவித்துக் கொள்ளுவோம் என்று
தெற்கில் திருமலையில் அவனை அபேக்ஷிக்க அதுக்காக அவன் நிவர்த்திப்பிக்கையிலே உத்யுக்தனாம் படியைக் கண்டு ஹ்ருஷ்டராகிறார் –

—————————————————————

முதல் பாட்டில் கவி பாடுவித்துக் கொள்ள -என்ற ஒரு வ்யாஜத்தாலே ஈஸ்வரன் தம் பக்கல் பண்ணின
அபி நிவேசத்தைக் கண்ட ஹர்ஷத்தாலே தந்தாமை வேண்டி இருப்பார்
இவ்விஷயத்தில் அகப்படாமல் ஆத்மாவை நோக்கிக் கொண்டு அடிமை செய்யுங்கோள் என்று
தாம் பட்ட படியை அருளிச் செய்கிறார் –

செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–9-7-1-

திருமால் இரும் சோலை வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து –ஆஸ்ரித அனுக்ரஹ அர்த்தமாகத் திருமலையில்
ஸந்நிஹிதனாய்-அகப்பாட்டாருடைய சர்வஸ் வத்தையும் அபகரிக்கும் இடத்தில் –
அபஹாரகன் என்று அறிய ஒண்ணாதபடி வஞ்சித்து அபஹரிப்பானாய்-
அதுக்கு அடியாய் எதிர்த்தலையை மதி மயக்கும் அத்ய ஆச்சர்யமான ரூப குணாதிகளை யுடையனானவன் –
கவி பாடுவித்துக் கொள்ளுகை யாகிற க்ருத்ரிம வ்யாபாரத்தாலே யுளனாய் –
நாம் இருந்த இடத்திலே தான் அபி நிவிஷ்டனாய் வந்து -உள்ளுறை காட்டுவரைப் போலே
என் நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் –என் நெஞ்சுக்குள்ளேயும் ஆத்மாவுக்குள்ளேயும் ஒரு நீராகக் கலந்து
பரிசர வர்த்திகளான ஸ்ரீ மஹா லஷ்மீ பிராட்டிமார் ப்ரப்ருதிகளும் அறியாதபடி அந்த
என் நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–என் நெஞ்சையும் உயிரையும் பிரித்துக் காண ஒண்ணாத படி க்ரஸித்து-
அசேதனமான நெஞ்சோ பாதி சேதனனுடைய போக்த்ருத்வமும் அசத் சமமாம் படி தானே போக்தாவாய்ப்
பெறாப் பேறு பெற்று-இப்பொழுது தான் – அவாப்த ஸமஸ்த காமனானான்
செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் –பிரயோஜனம் இல்லாத செவ்வையை யுடைத்தாய் ஸ்வயம் ப்ரயோஜன ரூபமான
சொற்களாலே கவிபாட வல்லவர்கள்
அவன் கையில் உங்களுடைய ஆத்மாத்மீயங்கள் அகப்படாதபடி காத்துக் கொண்டு வாசிகமான அடிமை செய்யப் பாருங்கோள் –
அநந்ய ப்ரயோஜனராய் இழிவார்க்கு ஆத்மாத்மீயங்கள் அவனாலே அபஹ்ருதமாய் அவர்ஜனீயம் என்று கருத்து –

—————————————————————————-

அநந்தரம் -என்னோடு ஸம்ஸ்லேஷித்த அதிசயத்தாலே எனக்கு நிரதிசய போக்ய பூதனாய்க் கொண்டு
க்ருதக்ருத்யனாய் இரா நின்றான் என்கிறார் –

தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே யாய்
தானே யான் என்பான் ஆகி தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலைக்
கோனே யாகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே–9-7-2-

என்னை முற்றும் உயிர் உண்டே–என்னை சர்வ பிரகாரத்தாலும் ஆத்ம போகத்தைப் பண்ணி அத்தாலே
தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே யாய்-ப்ரதானனாயக் கொண்டு பரிபூர்ணனாய்
ஸமஸ்த லோகங்களும் தத் கதமான பிராணி ஜாதங்களும் தானேயாம்படி
அந்தராத்ம தயா நிர்வாஹகனாய் -அப்படி பொது இன்றியே
தானே யான் என்பான் ஆகி தன்னைத் தானே துதித்து எனக்குத்-அஹம் புத்தி வியவஹார விஷயமான நான் என்கிற வஸ்துவும்
தானேயாம்படியாய் -அந்த அப்ருதக் பாவத்தால் ஸ்துத்யனான தன்னைப் பற்ற ஸ்தோதாவும் தானேயாய்க் கொண்டு ஸ்துதித்து –
அத்தால் தனக்குப் பிறந்த யுகப்பை
தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலைக் கோனே யாகி நின்று ஒழிந்தான் எனக்குப் பிரகாசிப்பிக்கையாலே
தேனும் பாலும் கன்னலும் அமுதுமாய் அதில் சர்வ வித போக்யமும்
திருமால் இரும் சோலையிலே எழுந்து அருளி இருக்கிற ஸ்வாமியான தானேயாய் நின்று விட்டான் –
போக்தாவும் தானேயாய் போக்யமும் தானேயாய் என்று கருத்து –

—————————————————————————-

அநந்தரம் -என் அளவு அன்றியே என் தேஹத்தையும் ஆதாரம் பண்ணி அத்தாலே ஸந்துஷ்டானாய்
ப்ரதிஷ்ட்டிதன் ஆகா நின்றான் என்கிறார்

என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே–10-7-3-

என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு–சர்வ பிரகாரத்தாலும் ஆத்ம அனுபவம் பண்ணி –
அவ்வளவில் நில்லாதே என்னுடைய அஞ்ஞானாதிகளுக்கு ஹேது வாய்க் கொண்டு –
பிரகிருதி கார்யமாய் பிரத்யக்ஷ சித்த தோஷத்தை யுடைத்தான பந்தகமான
சரீரத்துக்குள்ளே புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்-அபிமாநீ ஜீவனான என்னையும் அனுபந்தியான சரீராதி
ஸமஸ்த வஸ்துவையும் பற்ற தானேயாய் –
அஹந்தா மமதாதிகள் இத்தலையில் நடையாடாதபடி -தானே அபிமானியாய் –
அத்தாலே க்ருதக்ருத்யனாய் நின்ற
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களையுடைய நிருபாதிக ஸ்வாமி யானவன் பொருந்தி வர்த்திக்கிற தேசமாய்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கூப்பிச் சேர்ந்த யான்-தெற்குத் திக்குக்கு ஸ்லாக்யமாய் இருக்கிற திருமாலிருஞ்சோலை
யாகிற திருமலையில் நிற்கிற திக்கை நோக்கி
சேஷத்வ அனுரூப விருத்தியைப் பண்ணி கிட்டின நான் –
அவ்வளவு அன்றியே -அவன் தேசத்து அளவு அன்றியே –
தென்னன் -என்று அத்தேசத்தில் ராஜாவைச் சொல்லவுமாம் –
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே–அத்திக்கையும் ஆதரிக்கும் படியான அளவு பிறந்த பின்பு
ஒரு கந்தவ்ய பூமி யுண்டாய்ப் போகிறேனோ –
நிருபாதிக சேஷியாய் இருக்கிறவனுடைய அபி நிவேசங்கள் என்னாய் இருக்கிறது –
இதில் காட்டில் வேறு சில ப்ராப்யங்கள் யுண்டாய் அவற்றை உபகரிக்கப் பாரிப்பாரைப் போலே இரா நின்றது என்று கருத்து –

——————————————————–

அநந்தரம் -என் சரீரத்தை விரும்புகைக்கு ஹேது வாகையாலே திருமலையையும் ஆதரித்து
இரண்டு ஸ்த்தளத்தையும் கை விடுகிறிலன் என்கிறார் –

என் கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானேயாய்
நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே–10-7-4-

உலகும் உயிரும் தானேயாய்–ஒருவனைப் பிடிக்கைக்கு ஊரை வளைப்பாரைப் போலே என்னைப் பெறுகைக்காக
சர்வ லோகங்களும் சர்வ பிராணிகளும் தானேயாம்படி அந்தராத்மாவாய்க் கொண்டு வ்யாப்த்தனாய் –
அவ்வளவில் நில்லாதே
நண்ணா அசுரர் நலியவே–தன்னை ஆஸ்ரயிக்கையில் விமுகரான அஸூர ப்ரக்ருதிகள் நசிக்கும்படியாக
ஞாலத்தூடே நடந்து உழக்கி-த்ரை விக்ரம அபதான முகத்தால் என்னை பஜிக்கைக்கு ஸ்த்தலம் தேடுவாரோ பாதி
பூமிக்குள்ளே நடந்து மிகுத்து
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை–தெற்கு என்கிற பேரைக் கொண்ட திக்குக்கு சிரஸாவாஹ்யமாய்
இருக்கிற திருமாலிருஞ்சோலை என்ற பேராய இருக்கிற
நங்கள் குன்றம் கை விடான் -நம் போல்வார்க்கு அனுபாவ்யமான திரு மலையை -என்னை புஜிக்கைக்கு அனுரூப ஸ்த்தலம் என்று
விரும்பிக் கை விடுகிறிலன் -அது வழியாக
நன்கு என் உடலம் கை விடான் -என் சரீரத்தையும் மிகவும் கை விடுகிறிலன்
என் கொல் அம்மான் திருவருள்கள் -ஸ்வாமியானவனுடைய உபகாரங்களான சீல பிரகாரங்கள் என்னாய் இருக்கிறன-

—————————————————–

அநந்தரம் தம்மோடு ஸம்ஸ்லேஷித்து திருவாய் மொழி பாடக் கேட்ட ப்ரீதியாலே
ரசிகனாய் ஆளத்தி வையா நின்றான் என்கிறார்

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5-

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த–பகவத் விஷயத்தைக் கிட்டக் கடவோம் அல்லோம் என்று
ப்ரத்யூஹராய் இருக்கும் ஆஸூர ப்ரக்ருதிகள் -இவ்வதிசயம் பொறுக்க மாட்டாமல் விநாசத்தை அடையவும் –
பக்தி பரராய்க் கொண்டு அனுகூலரான தேவ வர்க்கம் மிகவும் உகப்பாலே ஸம்ருத்தியை லபிக்கவும்
நலிவு -நாசம்
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப-அவாப்த ஸமஸ்த காமனுடைய குண விபூதிக்கு மேலே
இதுக்கு முன்பு என்ன அறியாத அதிசயங்களை ப்ரேமத்தாலே
ஆஸாஸியா நிற்கும் -ஸ்நேஹ யுக்தராய்-அனுபவ சீலரான முனிவர்கள்-
கேட்டு அனுபவித்து ஆனந்த நிர்ப்பரராகவும்
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி–பான் நிறைந்த இசையை யுடைய இனிய கவிகளை
தனக்கு பிரகார பூதனானனாய்க் கொண்டு –
ஸ்த்வயனாய் ஸ்தவப்ரியனான தன்னை -ஸ்தோதாவாய்க் கொண்டு தானே பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–திருமாலிருஞ்சோலையானாய் நிற்கிற என் ஸ்வாமி யானவன்
தன் மேன்மை பாராதே பாட்டில் ரசாதிசயத்தாலே தென்னா என்று ஆளத்தி வையா நிற்கும் –

——————————————————————

அநந்தரம் ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் உபகாரகனாய் ஸ்ரீ யபதியானவன் திருமலையில் நின்று
என்னை அடிமை கொள்ளுக்கைக்கு வ்யாமுக்தனாய் இரா நின்றான் என்கிறார்-

திருமால் இரும் சோலையானே யாகி செழு மூஉலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்
திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது
அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே–10-7-6-

சிவனும் பிரமனும் காணாது அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே–ஞானாதிகனான ருத்ரனும் ப்ரஹ்மாவும் காணப் பெறாதே
பெறுதற்கு அரிதான அதிசயித பக்தியை யுடையராய்க் கொண்டு திருவடிகளை ஸ்தோத்ரம் பண்ண
தன் நிரவதிக கிருபையால் அபேக்ஷித பிரதானம் பண்ணின சர்வாதிகனாய்
செழு மூஉலகும் தன் ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்–விலக்ஷணமான ஜகத் த்ரயத்தையும்
அகடிதகடநா சமர்த்தனான தன்னுடைய அத்விதீயமாய்
அடங்கின இடம் தெரியாமல் அடக்க வல்ல சக்தி மஹாத்ம்யத்தை யுடைய
திரு வயிற்றினுள்ளே ஒரு புடையில் வைத்து கல்பம் தோறும் தலையாக ரக்ஷிக்குமவனாய்
ஒரு மா -என்று ஏக தேசமான அத்யல்ப ஸங்க்யையைச் சொல்லிற்று ஆக வுமாம் –
திருமால் இரும் சோலையானே யாகி-இந்த சேஷித்வ ரக்ஷகத்வங்களுக்கு உத்பாதகமான ஸ்ரீ யபதித்வத்தை யுடையவன்
திருமாலிருஞ்சோலையிலே நிலையை யுடையனாய்க் கொண்டே –
திருமால் என்னை ஆளுமால் -என்னை அடிமை கொள்ளுகையிலே பெரும் பித்தனாய் இரா நின்றான் –

————————————————

அநந்தரம் தம்மை அங்கீ கரிக்கைக்காக அவன் வந்து நின்ற திருமலையினுடைய வை லக்ஷண்யத்தைப் புகழ்ந்து அருளுகிறார்

அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே–10-7-7-

அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்-என்னுடைய ஸ்வாமி யானவனே -உன்னுடைய கிருபையைத் தந்து
அருள வேணும் என்று கொண்டு த்ரி நேத்ரனாய்-ஈஸ்வர அபிமானியான ருத்ரனும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்- உபயுக்தமான ஞானாதி குணத்தை யுடைய ப்ரஹ்மா வாகிற
ஸ்ருஜ்ய ஜகத் பதியும் தேவர்களுக்கு நிர்வாஹகானான இந்திரனும் த்ரயஸ் த்ரிம்சத் கோடி தேவர்களும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை-ஸ்வரூப புருஷார்த்த விஷயமான ஞான அபாவம் அந்யதா ஞானம்
விபரீத ஞானம் முதலான தமஸ்ஸூ க்களை புராணாதி யுபதேச முகத்தால் போக்கக் கடவரான பரம ரிஷிகளும்
ஸ்தோத்ரம் பண்ணும் படியான ஸ்வாமி யானவனுடைய வாசஸ் ஸ்தானமான திரு மலையாய்
மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே–பிராப்தி பிரதிபந்தகமான அவித்யாதி சகல பிரமங்களையும்
போக்கக் கடவதாய் நிரதிசய போக்யமாம்படி விலக்ஷணமான
திருமாலிருஞ்சோலை என்று திரு நாமமான திருமலை இறே –

————————————————————–

அநந்தரம் திருமலை தொடக்கமான திவ்ய தேசங்களோடு ஓக்க என்னுடைய சர்வ அவயவங்களை விரும்பி
ஒரு க்ஷண ஏக தேசமும் பிரிகிறிலன் -இவன் ஒருவனாய் இருக்கிறானே என்று விஸ்மிதராகிறார் –

திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-

திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே–திருமாலிருஞ்சோலை மலையையும் திருப் பாற்கடலையும்
அவற்றோடு ஓக்க என் தலையையும் –
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே-ஸ்ரீ யபதியாய்க் கொண்டுஇருக்கிற ஸ்ரீ பரமபதத்தையும்
ஸ்ரமஹரமான பெரிய திருமலையையும் அப்படியே என் சரீரத்தையும்
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே–துஸ் தரமாய் அதிசயிதையாய் ஆச்சர்யமான ப்ரக்ருதியோடே
ஸம்ஸ்ருஷ்டமான என் ஆத்மாவையும் மனசையும் வாக்கையும் கிரியையும்
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–ஒரு க்ஷணத்தில் ஒரு மாப் பொழுதும் பிரிகிறிலன்-
என்னை லபிக்கைக்காகக் கால உபலஷித சகல பதார்த்தங்களும் காரண பூதன் ஆனவன் ஒருவனாய் இருக்கிறானே –
கீழில் ஏவகாரங்கள் -எண்ணாதல்-அவையே அசாதாரணமாம் படி விரும்பின படியாதலாய் இருக்கிறது -நொடி -க்ஷணம் –

————————————————————————

அநந்தரம் ஜகத் ஸ்ருஷ்ட்யாதி ஹேது பூதனான சர்வேஸ்வரன் தம்முடைய சரீராதிகளை விரும்பின படியைக் கண்டு
அத்தை விடும்படிக்கு ஈடாக அவன் எழுந்து அருளி நிற்கிற திருமலையை ஆஸ்ரயி –
ஒரு காலும் கை விடாதே கொள் என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும்
ஆழி வண்ணன் என் அம்மான் அம் தண் திரு மால் இரும் சோலை
வாழி மனமே கை விடேல் உடலும் உயிரும் மங்க ஓட்டே–10-7-9-

ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்–கால உபலஷித ஸமஸ்த வஸ்துக்களும் ஒருவனே காரண பூதனாக
சதேவ இத்யாதி சுருதி வாக்யங்களிலே சொல்லப்பட்ட அத்விதீயனாய் ஸமஸ்த லோகங்களையும்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும்–ஸ்ருஷ்ட்யாதி அனுகூல காலம் தோறும் தன் சங்கல்ப ஏக தேசத்துக்குள்ளே
ஸ்ருஷ்டித்து ரஷித்து சம்ஹரித்து இது தானே யாத்திரையாக நடத்தும்
ஆழி வண்ணன் என் அம்மான் அம் தண் திரு மால் இரும் சோலை-அபரிச்சின்ன ஸ்வ பாவனாய் இந்த பிராப்தி முகத்தால்
எனக்கு ஸ்வாமியானவனுடைய தர்ச நீயமாய் ஸ்ரமஹரமான திருமாலிருஞ்சோலையை
வாழி மனமே கை விடேல் உடலும் உயிரும் மங்க ஓட்டே–நெஞ்சே நமக்கு த்யாஜ்யமான தேஹ பிராணாதிகள் மங்கும்படியாக
செறிந்து ஆஸ்ரயிக்கப் பாராய் –
நம் கார்யம் செய்து முடிக்கும் தனையும் கை விடாதே கொள் –
இத்தாலே நீ வாழ்வாயாக வேணும் -அபரிச்சின்ன போக்யமான விக்ரஹத்தை யுடையவன் என்றுமாம் –

—————————————

அநந்தரம் இப்படி திரு உள்ளத்தால் திருமலையை ஆஸ்ரயித்து இருக்கச் செய்தேயும் அவனுடைய
அத்யபி நிவேசத்தை நிவர்த்திப்பிக்கைக்காக ப்ரக்ருதி ப்ராக்ருதங்களினுடைய ஹேயதையைப் பரிஹணித்து-
ஏவம் பூதையான உன்னுடைய மாயை நசிக்கும்படி அனுமதி பண்ணி அருள வேணும் என்று பிரார்த்திக்கிறார் –

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-

திரு மால் இரும் சோலை மேய–நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே–திருமாலிருஞ்சோலை மலையிலே
நித்ய வாசம் பண்ணி என் போல்வாருக்கு ஸ்வாமி யானவனாய்
நானே எனக்கு பரிஹரித்துக் கொள்ளுமா போலே வேறு பாடற நீ தானேயாய் என்னை ரஷித்து அருளினவனே –
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்–போக்யத்தையாலே கிளர்ந்து புலப்படுகிற சப்தாதி விஷயங்கள் ஐந்தும்
அவ்விஷயங்களிலே பிரவர்திக்கைக்கு ஹேதுவான கர்மேந்த்ரியங்கள் ஐந்தும்
சப்தாதி ஆஸ்ரயமாயும் இந்திரிய ஆஸ்ரய சரீராரம்தகமாயுள்ள பிருதிவ்யாதி பூதங்கள் ஐந்தும் –
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–சம்சார தசையில் ஜீவனோடே அத்யந்த ஸம்ஸ்ருஷ்டமான
மூல பிரகிருதி வ்யவசாய ஹேதுவான மஹான் ஆகிற
மங்க ஒட்டு உன் மா மாயை – உன்னுடைய அத்யாச்சர்யமான ப்ரக்ருதி ப்ராக்ருதங்களானதுகள்
மங்கும் படி இசைந்து அருள வேணும் –

——————————————————————–

அநந்தரம் இத்திருவாய் மொழிக்குப் பலமாக இவர் அர்த்தித்த படியே ஈஸ்வரனுடைய விரோதி நிரசன
உத்யோகத்தைச் சொல்லிக் கொண்டு அதுவே இத்திருவாய் மொழிக்குப் பலமாக அருளிச் செய்கிறார் –

மான் ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத்
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11-

மான் ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க–மஹான் அஹங்கார மனஸ் ப்ரமுகமான சரீர சம்பந்தம் நசிக்கும்படியாகவும் –
பிரபலமான இந்திரியங்கள் ஐந்தும் ஸ்வ விஷயங்களோடு மங்கிப் போம்படியாகவும்
தான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத்–தானே பெரிய அபிமானத்தை யுடையனாய்க் கொண்டு புகுந்து
என் ஆத்மாவும் தானேயாய் ஆத்மீயமும் தானேயானவனை
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்–வண்டுகளுடைய செருக்கை யுடைத்தான பொழிலையுடைய
திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரத்துள்
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–திருமாலிருஞ்சோலை மலைக்கே யான இவை பத்தும்
மஹான் அஹங்கார உபலஷித ஸமஸ்த விரோதி நிவ்ருத்தியிலே தாத் பயம்
இப்பத்தும் அப்யசித்தார்க்கு மஹான் அஹங்காராதிகள் தானே கழியும் என்று கருத்து
இது ஆறு சீர் ஆசிரிய விருத்தம்-

———————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading