பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –4-9–

இப்படி பரம புருஷ விஸ்லேஷ ஜெனித சோக அக்னியாலே தாஹ்யமானராய் இருக்கச் செய்தே அதின் மேலே
பகவத் ஸம்ச்லேஷ விஸ்லேஷ ஏக ஸூக துக்கத் வரஹராய் -சேதன அசேதன ஆத்மக ஸமஸ்த வஸ்து நேத்ரு
பகவச் சேஷத்தைக ரதித்வ ஞான ரஹிதராய்– ஸ்வத்வ வ்யாதிரிக்த பிராகிருத விஷய லாப அலாபைக ஸூக துக்கராய்- இருந்த
அவைஷ்ணவர்களோடு உள்ள சகவாசம் ஆகிற மஹா அக்னியாலே தாஹ்ய மாநரான ஆழ்வார் இந்த அவைஷ்ணவ ஸஹவாசத்தைக்
காட்டிலும் முடிகையே நன்று -ஆனபின்பு அடியேனை முடித்து அருள வேணும் என்று எம்பெருமானை அபேக்ஷிக்கிறார் –

—————————-

நண்ணாதார் முறுவலிப்ப, நல்லுற்றார் கரைந்துஏங்க,
எண்ணாராத் துயர்விளைக்கும் இவைஎன்ன உலகியற்கை?
கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கே வரும்பரிசு,
தண்ணாவாது அடியேனைப் பணிகண்டாய் சாமாறே.–4-9-1-

க்ருஹ க்ஷேத்ர தனாதி விஷய ஸ்ப்ருஹையாலே தத் அபஹரணாத் யநிஷ்டங்களைப் பன்ன பிரதிகூலர் உகக்கவும்
அனுகூலர் இன்னாதாகவும் பிறர்க்கு துக்கங்களையே விளைத்து அந்நிய பரமாய் எம்பெருமான் திறத்துப் படக் கடவது அன்றியே
இருந்த இந்த லோக பிரஸ்தானம் இருந்தபடி என் -இந்த லோகத்தோடு எனக்கு இருப்பு அரிது –
ஆனபின்பு ஆஸ்ரித சமீஹித நிவர்த்தன ஏக ஸ்வ பாவமாய் அபரிமித காருண்ய பரிபூரணமாய் அதி சீதளமான உன்னுடைய
திருக் கண்களாலே என்னைக் குளிரப் பார்த்து அருளி இவர்கள் நடுவில் நின்றும் உன் திருவடிகளிலே என்னை வாங்கி அருளுதல்
அன்றியே ஈண்டென என்னை முடித்து அருளுதல் செய்ய வேணும் என்று அபேக்ஷிக்கிறார் –

———————————–

சாமாறும் கெடுமாறும் தமர்உற்றார் தலைத்தலைப்பெய்து
ஏமாறிக் கிடந்துஅலற்றும் இவைஎன்ன உலகியற்கை?
ஆமாறுஒன்று அறியேன்நான், அரவணையாய்? அம்மானே!
கூமாறே விரைகண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.–4-9-2-

உன்னைக் காணப் பெறு கறிலோம்-என்று அலற்றாதே புத்ராதி மரண விநாசங்கள் காரணாமாகத்
தமர் உற்றார் தலைத் தலைப் பெய்து ஏங்கிக் கிடந்தது அலறும் இவை என்ன உலகியற்கை
நானும் இங்கே லௌகிகரைப் போலே யாகில் செய்வது என் -ஆஸ்ரித ஸம்ச்லேஷ ஏக போகனே பிரானே நம் அடியான் இவன் என்று அடியேனை
உன் திரு உள்ளத்திலே கொண்டு ஈண்டென என்னைத் திருவடிகளிலே வாங்கி அருள வேணும் -என்கிறார் –

——————————————————

கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும்
வண்டு ஆர் பூங் குழலாளும் மனை ஒழிய, உயிர் மாய்தல்
கண்டு ஆற்றேன் உலகியற்கை! கடல்வண்ணா! அடியேனைப்
பண்டே போல் கருதாது,உன் அடிக்கே கூய்ப் பணி கொள்ளே.–4-9-3-

மரண திசையிலும் ஸம்பாவந அபி ஜன ஜ்ஞாதி பன்யஸூயன களத்ர பவநாதி களை இழந்தோம் என்று விஷண்ணராய்
உன் திறத்துப் படாதே இருக்கிற இந்த லோகத்தாருடைய ப்ரக்ருதியைக் கண்டு நான் படுகிற வியசனம்
உன்னைப் பிரிந்து நான் பண்டு பட்ட வியசனம் போல் அன்று -அதி துஸ் சஹம் கிடாய்
அபரிச்சேத்ய மாஹாத்ம்யனானவனே இந்த வியசனத்தின் நின்றும் ஈண்ட உன் திருவடிகளிலே
கூவிப் பணி கொண்டு அருள வேணும் என்கிறார் –

———————————————————–

கொள் என்று கிளர்ந்து எழுந்து பெருஞ்செல்வம் நெருப்பாகக்
கொள் என்று தமம் மூடும்; இவை என்ன உலகியற்கை!
வள்ளலே! மணிவண்ணா! உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே.–4-9-4-

உன்னை ஆசைப்படாதே அதி ஷூத்ரமாய் அநர்த்த கரமாய் இருந்த ஐஸ்வர்யத்தை ஸ்வ ஆஜ்ஞதையால் ஆசைப்படுகிற
இந்த லௌகிகரோடு எனக்குள்ள ஸஹவாசத்தைத் தவிர்த்து பரம உதாரரானே -பரம காருண்யத்தாலும் அடியேனை
உன் கழற்கே வரும் பரிசு வாங்கி அருள வேணும் -என்கிறார் –

—————————————–

வாங்கு நீர் மலர் உலகில் நிற்பனவும் திரிவனவும்
ஆங்கு உயிர்கள் பிறப்பிறப்புப் பிணி மூப்பால் தகர்ப்புண்ணும்;
ஈங்கு இதன் மேல் வெந்நரகம்; இவை என்ன உலகியற்கை!
வாங்கு எனைநீ, மணிவண்ணா! அடியேனை மறுக்கேலே.–4-9-5-

த்வத் விஸ்லேஷ துக்கம் இன்றியே ஜென்ம ஜரா மரணாதி வ்யாத்யாதி துக்கரான இவ்வாத்மாக்கள் வர்த்திக்கிற
இந்த லோகத்தின் நின்றும் அடியேனை மறுகப் பண்ணாதே ஈந்த என்னை வாங்கி அருள வேணும் -என்கிறார் –

————————————-

மறுக்கி வல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்;
அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!
வெறித் துளவ முடியானே! வினையேனே உனக்கு அடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே.–4-9-6-

என்னுடைய விசேஷ தோஷ ஆஸ்பதத்தை ஒன்றும் பாராதே உன்னுடைய நிரவதிக ஸுந்தர்ய ஆவிஷ்காரத்தாலே
என்னை தவ தாஸ்ய ஸூக ஏக சங்கியாக்கி அருளினாய் -இனி என் ஆரமுதே நிர் க்ருணராய் பர ஹிம்ஸா ஏக ப்ரவ்ருத்திகராய்
த்வத் உன்முக்ய லேச ரஹிதராய் இருந்த இவர்கள் நடுவில் நின்றும் ஈண்ட என்னை வாங்கி அருள வேணும் என்கிறார் –

————————————

ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒருபொருளும் இன்றிநீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–4-9-7-

த்வத் ஆத்மகமாகையாலே த்வத் சேஷதைக ரசமாய் இருக்கச் செய்தே த்வத் சேஷதைக ரஸத்வ ஜ்ஞான ரஹிதமாய்
த்வத் விஸ்லேஷக துக்கத்வ ரஹிதமுமாய் ஜென்ம ஜரா வியாதி மரணாதி துக்கமுமாய் இருந்த இந்த பொல்லாத லோகத்தை
என் கண்ணாலே காண மாட்டு கிறிலேன் -இங்கு நின்றும் ஈண்ட அடியேனை வாங்கி அருள வேணும் என்கிறார் –

—————————————-

காட்டி நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டைக்
கோட்டையினிற் கழித்து எனை உன் கொழுஞ்சோதி உயரத்துக்
கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?–4-9-8-

உன்னுடைய ஸ்ருஷ்ட்டி யாதி லீலைக்கு உபகரண ஸூ தமாய் த்வத் அதிஷ்ட்டித பிருதிவ்யாதி பஞ்ச பூதாராப்தமாய்
பிராகிருத விஷய ஏக போக ப்ரஹ்மாதி ஷேத்ரஞ்ஞ வர்க்க பரிபூரணமாய் இருந்த அண்டத்தைக் கழித்து நிரவதிக
தேஜோ மாயமாய் சத்வ குணாத்மகமாய் ப்ரக்ருதே பரஸ்தாத் வர்த்தமானமான ஸ்ரீ வைகுண்டத்தில் கொண்டு போய்
ஸ்வ யத்ன துர்லபமான உன் திருவடிகளிலே என்னை என்று கூட்டுவது -என்கிறார் –

—————————————————-

கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகைசெய்து,
ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.–4-9-9-

ப்ரஹ்மாதிகளுக்கும் கூட துர்லபனாய் இருந்து வைத்து எத்தனையேனும் தண்ணியரேயாகிலும் ஆஸ்ரிதரை உன் திருவடிகளோடே
கூட்டுதி என்னும் இடம் அடியேனும் கூட அறியும்படி லோகத்தில் பிரதிதமாய் இருக்குமத்தை -நீ என் பக்கலிலே
செய்து அருளக் கண்டேன் -எங்கனே என்னில்-பிராகிருத விஷய ஏக போக லௌகிக ஜன ஸஹவாஸ ஜெனித நிரவதிக
துக்கம் எல்லாம் போம்படி பிராகிருத விஷய வைராக்ய பூர்வகமாக என்னை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிகளோடே கூட்டினாய் என்கிறார் –

—————————————-

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே.–4-9-10-

விஷய ரசங்களிலும் கைவல்ய அனுபவ ரஸத்திலும் வைராக்யம் பிறந்தது எத்தாலே என்னில் -நித்ய நிர்த்தோஷ நிரவதிக
கல்யாண குணைகதா நராய் -தவைவ உசிதராய் இருந்த ஸ்ரீ லஷ்மி யாதி திவ்ய மஹிஷீ ஜனங்களும் ஸ்வ பாவத ஏவ
நிரஸ்த ஸமஸ்த சாம்சாரிக ஸ்வ பாவ த்வத் பரிசரியைக போகரான சேஷ சேஷாசனாதி அசங்க்யேய திவ்ய பரிஜனங்களும் நீயுமேயாய் இருந்த
இந்த மநோ ஹரமான இருப்பைக் கண்டு அந்த ஐஸ்வர்ய கைவல்யங்களை ஒழிந்து ததேக போக த்வத் பராங்முக ஜன ஸஹவாஸ ஜெனித
துக்கம் எல்லாம் போம்படி உன் திருவடிகளை அடைந்தேன் -என்கிறார் –

——————————————————–

திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங் குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே.–4-9-11-

எம்பெருமானைக் கண்ட ப்ரீதி அதிசயத்தாலே அவனை ஏத்தின இத்திருவாய் மொழி வல்லாரை இத்திருவாய் மொழி தானே
எம்பெருமான் திருவடிகளை அடைவிக்கும் -திருவடிகளிலே திவ்ய ரேகை போலே போய்ச் சேருங்கள் -என்கிறார் –

——————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading