பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –3-7-

பயிலும் சுடர் ஒளி -பி௭ரவேசம் –
இப்படி எம்பெருமானுடைய நிரவதிக ஸூலபத்வ ரூப மஹா குண அனுபவ ஜெனித நிரவதிக ப்ரீதியாலே
பகவத் சேஷத்வ காஷ்டா ரூப பாகவத சேஷத ஏக போகராய் அந்த பாகவத சேஷத்வம் தமக்கு ப்ராப்யம் -என்கிறார் –

—————————————————————

பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற்கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திருவுடையார் எவரேலும் அவர்கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மைஆளும் பரமரே.–3-7-1-

பிராட்டியுடைய ஜென்ம பூமியாகையாலே திருப் பாற் கடலைத் தனக்கு பிரியமான தாமமாக யுடையனாய் -ஸர்வதா அனுபூதனானாலும்
அபூர்வத் போக்ய பூதனாய் நிரதிசய தீப்தி யுக்தனாய்- திவ்ய ரூபனாய் -பங்கயக் கண்ணனாய் இருந்த எம்பெருமானுடைய
அனுபவ ஸம்பூதா ப்ரீதி காரித தாஸத்வ சம்பத்தை யுடையார் ஆரேனுமாகிலும் அவர் கிடீர் நமக்கு ஸ்வாமிகள் -என்கிறார் –

————————————————————-

ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப்பிரான் தன்னைத்
தோளும் ஓர் நான்குடைத் தூமணி வண்ணன் எம்மான் தன்னைத்
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர்
நாளும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடை நாதரே.–3-7-2-

திருப் பாற் கடலின் நின்றும் ஆஸ்ரித பரித்ராண அர்த்தமாக சதுர்புஜத்வ சங்க சக்ர கதா ஸார்ங்காதி திவ்யாயுத
ஸ்வ அசாதாரண ஆகார விசிஷ்டானாய்க் கொண்டு வஸூ தேவ க்ருஹே அவதீர்ணனாய்-ஸமஸ்த ஹேய ப்ரத்ய நீகனாய் இருந்த
எம்பெருமானைத் தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர் நமக்கு என்றைக்கும் ஸ்வாமிகள் -என்கிறார் –

—————————————————

நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்
போதனைப் பொன்னெடுஞ் சக்கரத்து எந்தை பிரான் தன்னைப்
பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர்
ஓதும் பிறப்பிடைதோறு எம்மை ஆளுடை யார்களே.–3-7-3-

சர்வ ஸ்வாமியாய் தேவ மனுஷ்யாத்ய ஆஸ்ரிதருடைய உத்கார்ஷ அபகர்ஷம் பாராதே அவர்கள் எல்லாருக்கும் ஓக்கத் தன்னைக் கொடுத்து அருளும் ஸ்வபாவனாய்
திருவாழி யாழ்வானாலே அலங்க்ருதனாய் இருந்த எம்பெருமானைப் பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர் நமக்கு என்றைக்கும் ஸ்வாமிகள் -என்கிறார் –

———————————————-

உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் உடை நாணினன்
புடையார் பொன் நூலினன் பொன்முடியன் மற்றும் பல்கலன்
நடையா உடைத் திரு நாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர்
இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே.–3-7-4-

நிரதிசய ஸூகந்தமாய் -நிரதிசய ஸூ க ஸ்பர்சமாய் நிரதிசய உஜ்ஜ்வல்யமாய் நித்ய ஸித்தமாய் அஸந்கயேயமான திவ்ய பூஷணங்களாலே
பூஷிதனாய் இருந்த எம்பெருமானுடைய அழகுக்குத் தோற்று அடிமையாய் இருப்பார்க்கு அடிமையாய் இருப்பார் கிடீர் –
இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்கள் -என்கிறார் –

————————————————

பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை அமரர்கட்கு
அருமை ஒழிய அன்று ஆர்அமுது ஊட்டிய அப்பனைப்
பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே.–3-7-5-

ப்ரஹ்ம ஈஸாநாதி சர்வ தேவர்களுக்கும் ஈஸ்வரனாய் அம்ருத ப்ரத நாதிகளாலே-அவர்களுக்கு ரக்ஷகனாய் இருந்த
அவனுடைய இப்பெருமையைப் பிதற்றும் அவர் கண்டீர் சர்வ காலமும் நமக்கு ரக்ஷகரான ஸ்வாமிகள் என்கிறார் –

—————————————————

அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னைத்
துளிக்கும் நறுங்கண்ணித் தூமணி வண்ணன் எம்மான்தன்னை
ஒளிக்கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளுமவர் கண்டீர்
சலிப்பின்றி யாண்டு எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே.–3-7-6-

தேவ மனுஷ்யாதி ரூபேண அவதீர்ணனாய்–சர்வ ஜகத் ரக்ஷகனாய் -சங்க சக்ராதி திவ்ய ஆயுத தரனாய் -திவ்ய மால்ய உபசோபிதனாய்
ஹேய ப்ரத்ய நீகனாய் -நிரதிசய தேஜோ விசிஷ்டானாய் இருந்த எம்பெருமானை உள்ளத்துக் கொள்ளுமவர் கண்டீர்
ஒரு சலனம் இல்லாத படி ஆண்டு எம்மைச் ஜன்மம் சன்மாந்தரம் காப்பார் -என்கிறார் –

——————————————————–

சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்த்
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனைத்
தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே.–3-7-7-

ஜென்மங்கள் தோறும் இந்த லோகத்தில் தானும் வந்து பிறந்து அருளி ஆஸ்ரிதரை ரஷித்து பின்னை அவர்களைக் கொண்டு போய் அங்குசித ஞானராக்கித்
தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனுடைய இந்த ஸ்வாபாவிகமான குணத்தைப் பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
ஸ்வ சேஷதைக ரதித்வ சம்பத்தை நமக்குத தந்து அத்தை நித்ய சித்தமாக்குவர் -என்கிறார் –

—————————————————

நம்பனை ஞாலம் படைத்தவனைத் திரு மார்பனை
உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான் தன்னைச்
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர்
எம்பல் பிறப்பிடைதோறு எம் தொழு குலம் தாங்களே.–3-7-8-

சர்வ ஸ்வாமியாய் -ஜகத் ஸ்ரஷ்டாவாய்–ஸ்ரீ யபதியாய்-ப்ரஹ்மாதிகளுக்கு வாங் மனசா அபரிச்சேதய மஹிமானாய் இருந்தவனை
அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு ஏத்துவார் கும்பீ நரகயாதன அனுபவ அனுகுண பாபங்களைப் பண்ணினாரே யாகிலும்
அவர் கண்டீர் எம் பல் பிறப்பிடை தோறும் எம் தொழு குலம் தங்கள் -என்கிறார் –

—————————————–

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம்மடியார் எம் அடிகளே.–3-7-9-

வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு அடிமை செய்யும் இதுவே பிரயோஜனமாக ஆஸ்ரயிப்பார்
ஜாதி யாசாராதிகளால் எத்தனையேனும் தண்ணியரே யாகிலும் அவர் அடியார் நமக்கு ஸ்வாமிகள் -என்கிறார் –

—————————————-

அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியோங்களே.–3-8-10-

இந்த லோகத்தை அளந்து அருளி உண்டு அருளி ஆலிலையில் கண் வளர்ந்து அருளின அவனுடைய
காருண்ய சவ்ந்தார்யாதி குணங்களுக்குத் தோற்று அடிமையாய் இருப்பார்
அடியார் தம் அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடியார் அடியோங்கள் -என்கிறார் –

———————————————

அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள்செய்த
நெடியோனைத் தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து,அவன் தொண்டர் மேல்
முடிவு ஆரக் கற்கில் சன்மம் செய்யாமை முடியுமே.–3-8-11-

பாண்டவர் பக்கல் உள்ள நிரவதிக வாத்சல்யத்தாலே தத் விரோதிகளாய் ஐஸ்வர்ய பல தர்ப்பித்தரான துர்யோத நாதிகளை நிரசித்து அருளின எம்பெருமானுடைய
வாத்சல்ய சவ்சீல்ய காருண்ய சவ்ந்தர்ய சவ்கந்தய சவ்குமார்யாத் அஸந்கயேய கல்யாண குணங்களுக்குத் தோற்று அடிமையாய் இருக்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் யாரேனும் ஆகிலும் அவர்களுக்கு அடிமை பரம ப்ராப்யம் என்று சொன்ன இத்திருவாய் மொழியை ஆரக் கற்க வல்லராகில்
அவர்களுடைய பாகவத சேஷதைகரதித்வ விரோதிகள் எல்லாம் போம் -என்கிறார் –

————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading