பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –3-6-

செய்ய தாமரைக் கண்ணன் -பிரவேசம் –
பிதற்றுமின் பேதைமை தீர்ந்து -என்று கொண்டு எம்பெருமானை ஆஸ்ரயுங்கள்-என்று
முன்பு சொல்லப் பட்டவர்களைக் குறித்து எம்பெருமானுடைய ஸூலபத்வ காஷ்டயை அருளிச் செய்கிறார் –

————————————————–

செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு
ஏழும் உண்ட அவன் கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம்
மற்று மற்றும் மற்றும் முற்றுமாய்
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப்
பட்டு இவை படைத்தான் பின்னும்
மொய்கொள் சோதியோடு ஆயினான் ஒரு
மூவர் ஆகிய மூர்த்தியே.–3-6-1-

சங்கல்ப சஹஸ்ர ஏக தேசத்தாலே வையம் வானம் மனிசர் தெய்வம்-மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய்க் கொண்டு தோற்றுகிற இவற்றுக்கு ஸ்ரஷ்டாவாய்
பின்னையும் தேஜஸ் ப்ரப்ருத்ய அஸந்க்யேய கல்யாண குண விசிஷ்டானாய் -ப்ரஹ்ம ருத்ர அந்தராத்மக அவஸ்தாய சர்வ ஜகாத் ஸ்ருஷ்ட்டி சம்ஹார ஹேது பூதனாய் –
ஸ்வேந ரூபேண அவஸ்தாய சர்வ ஜகத் ரக்ஷகனாய் இருந்த சர்வேஸ்வரன் ஆகிறான் -செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு-ஏழும் உண்ட அவன் கண்டீர்-
என்று கொண்டு ஸமாச்ரயணீய புருஷன் இன்னான் -என்கிறார் –

—————————————————-

மூவர் ஆகிய மூர்த்தியை முதல்
மூவர்க்கும் முதல்வன் தன்னைச்
சாவம் உள்ளன நீக்குவானைத்
தடங் கடற் கிடந்தான் தன்னைத்
தேவ தேவனைத் தென்னிலங்கை
எரி எழச்செற்ற வில்லியைப்
பாவ நாசனைப் பங்கயத் தடங்
கண்ணனைப் பரவுமினோ.–3-6-2-

இதில் மேலே ஸமாஸ்ரயணீயனான எம்பெருமானுடைய எளிமையைச் சொல்லுகிறது -இப்படி திரிமூர்த்தி ரூபேண அவஸ்திதனாய்-
சர்வ லோக நிர்வாஹகரான ப்ரஹ்ம ருத்ர இந்த்ரர்களுக்கு நிர்வாஹகனாய் -அவர்களுடைய வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாத்ய ஆபத் விமோசன கரனாய்
ஷீரார்ணவ நிகேதனாய் -இருந்து வைத்து ஆஸ்ரித ஸமாச்ரயணீயத்வ அர்த்தமாக தசாரதாத்மஜனாய் வந்து அவதீர்ணனாய்–
இப்படி மனுஷ்யனாய் இருக்கச் செய்தே ரூப குண விபவ சேஷ்டிதாதிகளால்-மனுஷ்யரில் காட்டிலும் தேவர்கள் யாதொருபடி விலக்ஷணராய் இருப்பார் –
அப்படியே தேவர்களிலும் விலக்ஷணனாய் ஆஸ்ரித விரோதி நிரசன ஏக போகனாய் -தரிசன மாத்திரத்தாலே
சர்வ ஐந்தூ நாம் சர்வ பாப க்ஷய கரனாய் இருக்கிற எம்பெருமானைப் பரவுமினோ -என்கிறார் –

—————————————————-

பரவி வானவர் ஏத்த நின்ற
பரமனைப் பரஞ்சோதியைக்
குரவை கோத்த குழகனை மணி
வண்ணனைக் குடக்கூத்தனை
அரவம் ஏறி அலைகடல் அம
ருந் துயில் கொண்ட அண்ணலை
இரவும் நன் பகலும் விடாது என்றும்
ஏத்துதல் மனம் வைம்மினோ.–3-6-3-

அயர்வறும் அமரர்களாலே அநவரத சம்ஸ் தூயமானனாய் நிரதிசய தேஜோ விசிஷ்டானாய் நாக பர்யங்க ஸாயியாய் இருந்து வைத்து
வஸூதேவ க்ருஹே அவதீர்ணனாய்-ஆஸ்ரித ஸம்ச்லேஷ ஏக ஸ்வபாவனாய் -ஆஸ்ரித ஸூலபனாய் அதி மநோ ஹாரா திவ்ய சேஷ்டிதனாய் இருந்தவனை
இரவும் நன் பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ -என்கிறார் –

—————————————————-

வைம்மின் நும் மனத்து என்று யான் உரைக்
கின்ற மாயவன் சீர்மையை
எம்மனோர்கள் உரைப்பது என்? அது
நிற்க; நாடொறும் வானவர்
தம்மை ஆளுமவனும் நான்முக
னும் சடைமுடி அண்ணலும்
செம்மையால் அவன் பாத பங்கயம்
சிந்தித்து ஏத்தித் திரிவரே.–3-6-4-

இப்படி ஆஸ்ரயித்தால் அவன் நம்மை விஷயீ கரித்து அருளுமோ என்னில் –ஐஸ்வர்ய ப்ரவணராய் அதி ஷூத்ரரான
ப்ரஹ்ம ஈஸா நாதிகளுக்கும் கூட ஒரு தடை இன்றியே ஆஸ்ரயிக்கலாம் படி தன் திருவடிகளைக் கொடுத்துக் கொண்டு இருக்கிற
அளவிறந்த நீர்மையை யுடையனாய் இருந்தவன்
அநந்ய ப்ரயோஜனராய்க் கொண்டு ஆஸ்ரயிக்குமவர்களைக் கை விடுமோ -என்கிறார் –

——————————————————–

திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல்
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய்
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை
சுரியும் பல் கருங்குறிஞ்சி எங்கள் சுடர் முடி யண்ணல் தோற்றமே –3-6-5-

ஸ்வ சங்கல்ப அதீனமான வாயு ஆகாசாதி சகல பதார்த்தங்களையும் -கத்வரத்வ விசாலத்வாதி தத் தத் தர்மங்களையும் யுடையனாய்
இந்தீ வரதள ஸ்யாமனாய்– பத்ம பத்ர அஷணனாய் -நீலாளக பந்த பந்துரனாய் -சேஷ சேஷாசன வைநதேய ப்ரப்ருத்ய அஸந்கயேய
நித்ய சித்த பரம ஸூரிபி ஸேவ்யனாய் இருந்த எம்பெருமானை நான் காணப் பெற்றேனாகாதே-என்கிறார்-

——————————————-

தோற்றக் கேடு அவை இல்லவன் உடையான் அவன் ஒரு மூர்த்தியாய்ச்
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ்ப் புக நின்ற செங்கண்மால்
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல்ஆகி நின்ற எம்வானவர்
ஏற்றையே அன்றி மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.–3-6-6-

ஜென்ம மரணாதி தோஷைர சம்ஸ்ப்ருஷ்டனாய் –ஜென்ம மரணாதி தோஷ யுக்த பதார்த்தங்களுக்கு நியாந்தாவாய் –
ஆச்சர்ய தம ந்ருஸிம்ஹ வேஷ பூஷிதனாய் ஹிரண்ய விஷய நிரவதிக க்ரோதத்தினாலே அத்யந்தம் அநபிபவ நீயனாய் இருக்கச் செய்தே
ஆஸ்ரிதனான ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் கூசாதே சென்று திருவடிகளின் கீழே புகலாம் படி அவனுக்கு ஸூலபனாய் –
தத் ஸம்ச்லேஷ ஜெனித நிரதிசய ப்ரீதியாலே ஆதாம்ராயத லோசனனாய் இருந்த எம்பெருமான்
அயர்வறும் அமரர்களுடைய சர்வ கரணங்களுக்கும் போக்யமானால் போலே என்னுடைய சர்வ கரணங்களுக்கும் போக்யமானான் –
இனி ஆத்மாந்தமாக இவன் அல்லது எனக்கு மற்றொரு ப்ராப்யம் இல்லை -என்கிறார் –

———————————————————-

எழுமைக்கும் எனது ஆவிக்கு இன்அமுதத்தினை எனது ஆருயிர்
கெழுமிய கதிர்ச் சோதியை மணிவண்ணனைக் குடக் கூத்தனை
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியினைத்
தொழுமின் தூய மனத்தராய்;இறையும் நில்லா துயரங்களே.–3-6-7-

எற்றைக்கும் எனக்குப் பரம போக்யமாய் -மத ஸம்ச்லேஷ ஏக போகமாய் இருக்கை யாகிற மஹா குணத்தை யுடையனாய் –
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியாய் இருந்து வைத்து எனக்கு ஸூலபனாய் அதி மநோஹர திவ்ய சேஷ்டிதனாய் இருந்த எம்பெருமானை –
அரியன்-என்று கூசாதே தொழுங்கோள -தொழ-உங்களுடைய ஸமஸ்த துக்கங்களும் போம் -என்கிறார் –

———————————————————-

துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய்
உயர நின்றது ஓர் சோதியாய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தனை
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தனைத்
தயரதற்கு மகன் தனையன்றி மற்றிலேன் தஞ்சமாகவே.–3-6-8-

ஸ்வ அதீன புண்ய பாப ஸ்வரூபனாய் -அகர்ம வசியனாய் -நிரவதிக தேஜோ விசிஷ்டானாய் -சர்வ லோக ரக்ஷகனாய் –
ஸ்வ ஆஸ்ரித ஜனங்களை யம கிங்கரர் பாதியாதபடி அவர்களை ரஷித்து அருளும் ஸ்வபாவனாய் -அவர்களோடே ஆத்மாந்தமாக ஸம்ஸ்லேஷிக்கும்
ஸ்வபாவனாய் இருந்த தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாக -நீங்களும் ஆஸ்ரயியுங்கள் -என்கிறார்

—————————————-

தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம்முளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்;
நெஞ்சினால் நினைப்பான் எவன்?அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.–3-6-9-

எம்பெருமான் திருவவதாரம் பண்ணி சர்வ ஸூல பனாய் வர்த்தித்து அருளுகிற காலத்தில் உதவப் பெற்றிலோம் –
ஸ்ரீ வைகுண்டத்திலே எழுந்து அருளி இருக்கும் இருப்பு நமக்குக் கோசாரம் அன்று
ஆனபின்பு எங்கனே அவனை ஆஸ்ரயிக்கும் படி -என்னில் –
ப்ரஹ்ம ருத்ர இந்த்ரர்களுக்கும் த்யேயனாய் –காரண பூதனுமாய் –
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் ஆஸ்ரிதற்கு சர்வ அவஸ்தைகளிலும் ரக்ஷகனாய்ப் பிதாவுமாய் மாதாவுமாய்த் தானுமாய் மாற்று எல்லாமுமாய் இருந்த
எம்பெருமானை உகந்து அருளப் பண்ணி ஆஸ்ரயிப்பது–நாம் அவனுக்கு ஒரு ரூபத்தை சங்கல்பித்தால் அது அவனுக்கு ரூபமோ
ஸ்ரீ வைகுண்டத்தில் யாதொரு ரூபத்தை யுடையனாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கும் -அது வன்றோ அவனுக்கு ரூபம்-என்னில்
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் -இப்படி சம்சயிக்க வேண்டா –
யாது ஒன்றை அவனுக்கு ரூபமாக நினைத்திக்கோள் அத்தையே அவன் திவ்ய ரூபமாகக் கொண்டு அருளும் -என்கிறார் –

——————————————–

கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர்உயிர்
பட அரவின் அணைக் கிடந்தபரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அடவரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெஞ்சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?–3-6-10-

அபரிச்சேதய மஹாத்ம்யனாய் –அயர்வறும் அமரர்களுக்கு போக்யமாய் -நாக பர்யங்க ஸாயியாய் –இருந்து வைத்து
வஸூ தேவ க்ருஹே அவத்தீர்ணனாய் -எனக்கு பிராணனாய் -துர்யோத நாதிகள் ச ஸைன்யமாக நசிக்கும் படி பாண்டவர்களுக்காக
ஸாரத்யே ஸ்திதனாய் இருந்த எம்பெருமானுடைய திருவடிகளை என்றோ என்னுடைய கரணங்கள் காண்பது -என்கிறார் –

——————————————-

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்
பண்கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக்கோன் சடகோபன் சொல்
பண்கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே.–3-6-11-

அயர்வறும் அமரர்களுக்கு அருள் செய்யுமா போலே ஸ்வ ஆஸ்ரிதரான மனுஷ்யாதிகளுக்கும் அருள் செய்யும் ஸ்வ பாவனாய் இருந்து வைத்து
என்னுடைய கருத்துக்கு நன்றும் எளியனாய் -என் கண்கள் காண்டற்கு அரியனாய் இருந்த எம்பெருமான் விஷயமான
இத்திருவாய் மொழியை வல்லார் வைஷ்ணவராவார் -இத்தைச் சொல்லுங்கள் -என்கிறார் –

—————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading