கிளரொளி பிரவேசம்
இப்படி தம்மோடு கலந்து அருளினை எம்பெருமான் நின்று அருளினை திரு மலையை அனுபவிக்கிறார் –
———————————–
கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே –2-10-1-
யாது ஒன்றிலே நின்று அருளுகையாலே -அங்குத்தைச் சோலை போலே எம்,பெருமானுடைய திருவுடம்பு அதி சீதளமாய் அதி வரத்திஷ்ணுவான
ஓவ்ஜ்ஜ்வல்ய -யவ்வனாதி கல்யாண குணங்களை யுடைத்தாயிற்று -அங்கனே இருந்த திருமாலிருஞ்சோலையை உங்களுக்கு
கரண பாடவம் உள்ளபோதே உங்களுடைய கிலேசம் எல்லாம் தீரும் படி புஜியுங்கோள்-இது பரம ப்ராப்யம் -என்கிறார் –
——————————————————
சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை
பதியது வேத்தி எழுவது பயனே –2-10-2-
ப்ராக்ருத விஷயங்களில் ப்ராவண்யத்தை விட்டு -பிரதிகூல ஹ்ருதய பேதகமான திவ்ய த்வனியை யுடைத்தான
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை ஏந்துகையாலே நிரவதிகமான அழகை யுடையனாய் -அத்தாலே -அழகர் -என்னும் திருநாமத்தை யுடையனான
எம்பெருமானுக்குக் கோயிலாய் -பரிபூர்ண சந்த்ர மண்டலத்தாலே அலங்க்ருதமான சிகரங்களை யுடைத்தான திருமாலிருஞ்சோலைப் பதியை
ஏத்தி எழுங்கள் -அதுவே பரம பிரயோஜனம் -என்கிறார் –
———————————–
பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிரும் சோலை
அயன்மலை யடைவது அது கருமமே –2-10-3-
ப்ரயோஜன ஸூன்யமாய் இருந்த செயல்களை செய்து ஒரு பிரயோஜனமும் இல்லை –நெஞ்சே ஆதலால் அவற்றைத் தவிர்ந்து
ஆஸ்ரிதர்க்கு ஆத்ம தானம் பண்ணிக் கொண்டு நிற்கிற கோயிலாய் -தன்னுடைய போக்யதையாலே ப்ரவிஷ்டரையும் மதிப்பியா நின்ற
பொழில்களை யுடைத்தான மாலிருஞ்சோலையினுடைய அயன்மலை அடைவது -அதுவே நமக்கு பரம ஹிதம் -என்கிறார் –
———————————————–
கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
வருமழை தவழும் மாலிரும் சோலை
திருமலை யதுவே யடைவது திறமே –2-10-4-
நிரஸ்த பிரதிபந்தகராய்க் கொண்டு தன் திருவடிகளிலே நாம் அடிமை செய்து உஜ்ஜீவிக்கைக்காகவே
பரம காருணிக்கனான தான் வந்து உறைகின்ற ஸமஸ்த ஸந்தாப நாசகமான திருமலையை அடைகையே அடிமை செய்கைக்கு உபாயம் -என்கிறார்
———————————————–
திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது
அற முயலாழிப் படையவன் கோயில்
மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை
புறமலை சாரப் போவது கிறியே –2-10-5-
விரகாலும் பலத்தாலும் தீ வினை பெருக்காதே -ஆஸ்ரித ரக்ஷண ஏக ஸ்வ பாவனான திருவாழியை திவ்யாயுதமாக யுடையனானவன் நின்று அருளுகிற
நிர்மலமாய் சர்வ போக்யமாய் இருந்த சுனைகளை யுடைத்தான மாலிருஞ்சோலை மலையினுடைய புறமலை சாரப் போவது பரம ப்ராப்யம் -என்கிறார் –
————————————————–
கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே
உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில்
மறியோடு பிணை சேர் மாலிரும் சோலை
நெறி படவதுவே நினைவது நலமே –2-10-6-
இத்தையே பரம ப்ராப்யம் என்று நினையுங்கள் -வேறு ஒன்றை ப்ராப்யம் என்று நினையாதே –
உறியமர் வெண்ணெய் யுண்டவன் -அச்சுவடு அழியாமே நின்று அருளுகிற சர்வ போக்யமான திருமலையை
அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு நினைக்கும் அதுவே ப்ராப்யம் -என்கிறார் –
————————————–
நலமென நினைமின் நரகழுந்தாதே
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில்
மலமறு மதி சேர் மாலிரும் சோலை
வலமுறை எய்தி மருவுதல் வலமே –2-10-7-
இதுவே ப்ராப்யம் என்று நினையுங்கள் -வேறு ஒன்றை ப்ராப்யமாக நினையாதே –
நிலமுன மிடந்தான் என்றைக்கும் தனக்கு கோயிலாகக் கொண்ட பரம புருஷ நிர்மல ஞான ஜனகமான திருமலையை அநந்ய ப்ரயோஜனராய்க் கொண்டு
வலம் செய்து மருவுங்கள்-இதுவே பரம ப்ராப்யம் -என்கிறார் –
———————————————————-
வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –2-10-8-
ஹேய விஷயங்களிலே விநியோகித்து அருமந்த பலத்தைப் போக்காதே ஆச்சர்ய பூதனாய் ஆஸ்ரித ஸூலபனாய் இருந்த எம்பெருமானும்
அயர்வறும் அமரர்களும் வலம் செய்து கொண்டு அனுபவிக்கிற திருமாலிருஞ்சோலையை வலம் செய்து நாளும் மருவுகை வழக்காவது -என்கிறார் –
———————————————————
வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி யட்டான் அமர் பெரும் கோயில்
மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே –2-10-9-
வேறு ஒன்றை யுக்தம் என்று பாராதே இதுவே யுக்தம் என்று பார்த்து ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வபாவனாய் இருந்தவனுடைய
அபிமதமான திவ்ய ஸ்தானமாய் சர்வாத்ம போக்யமாய் இருந்த திருமலையைத் தொழுவோம் என்று உண்டான
சங்கல்ப உத்யோக மாத்ரத்தைப் பண்ணுகை அவனுக்கு அடிமை செய்கைக்கு நல்ல உபாயம் -என்கிறார் –
—————————————————–
சூதென்று களவும் சூதும் செய்யாதே
வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை
போதவிழ் மலையே புகுவது பொருளே –2-10-10-
புருஷார்த்தமான செயலைச் செய்கிறோம் என்று கொண்டு சவ்ர்ய க்ருத்ரிமங்களைச் செய்யாதே –
சர்வ வேதங்களுக்கும் தானே ப்ரதிபாத்யன் -என்னும் இடத்தை ஸ்ரீ கீதையாலே அருளிச் செய்து அருளினை
அந்த மஹா குணத்தை யுடைய எம்பெருமான் தனக்கும் கூட ஸ்ரூஹணீயமான திருமலையில் போய்ப் புகுவதுவே பரம புருஷார்த்தம் -என்கிறார் –
————————————————–
பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-
சம்சாரிகளான ஆத்மாக்களினுடைய ஸம்ருத்தியே நமக்கு பிரயோஜனம் -என்று பார்த்து தத் சம்ருத்த்யர்த்தமான ஜகத் ஸ்ருஷ்டியைப் பண்ணி அருளினவன்
குணங்களில் ஓர் அஞ்ஞானம் கந்தம் இன்றியே இருந்த -வண் குருகூர் சடகோபன்-எல்லாருக்கும் எம்பெருமானை
ப்ரத்யஷித்தால் போலே அறியலாம் படி சொன்ன இப்பத்து அழகர் திருவடிகளிலே சேர்வித்து முடிக்கும் -என்கிறார் –
———————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply