சங்கம் இருப்பார் போல் -என்று கீழே பெண்கள் சொன்ன வார்த்தையைக் கேட்டு –
அநந்ய கதிகளாய் வந்தோம் என்று சொல்லுவதே
நப்பின்னை பிராட்டி பரிகரமாய் இருந்து வைத்து என்று
திரு உள்ளத்திலே போரப் புண் பட்டு –
பின்னை நெடும் பணை தோள் மகிழ் பீடுடை (1-7 ) என்று
அவளுடைய சம்பந்தமே நமக்கு ஏற்றமாக நமக்கு நல்லோர்கள் சொல்லா நிற்கச் செய்தே-
அவளோடு ஒரு கோவையாய் இருந்து வைத்து
நம் முன்னே இப்படிச் சொல்லுவதே –
நாம் ஆரானோம் -என்று தன்னை நொந்து கொண்டு
பரம ரிஷிகள் ஆர்த்தராய் வர
தன் காவல் சோர்வை நினைந்து சாபராதர் செய்தவற்றை
நிரபேஷரான பூர்ணர் பொறுக்கும் அத்தனை அன்றோ
கர்ப்ப பூதர் என்று நினைத்து இருக்க
உங்களால் வந்த தன்றே -உங்கள் வியசனத்தை காண்கையாலும்
அதுக்கு அடி நம் குற்றம் ஆகையாலும்
உங்கள் அளவல்ல நமக்கு லஜ்ஜை –
முதலிலே ரக்ஷகன் ஆனவனுக்கு சென்று ரஷிக்க வேணும்
அதிலே ஆர்த்தரை ஐயோ என்று வினவ வேணும் –
இப்படி இருக்க
நோவு படுகிறி கோளும்-
அது வந்து அறிவிப்பு கோளும் நீங்களாம் படி பிற்பாடார் ஆனோமே –
அத்தை நீங்கள் பொறுக்க வேணும் என்று ஷமிப்பித்துக் கொண்டால் போலேயும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ராவணன் பின்னே பிறந்த என்னை ஆராயாதே அருள் பாடிடுவதே -என்று
தரையைப் பார்த்து கவிழ்ந்து நிற்க
அவன் இலங்கையில் பட்ட நெருக்கும்
முதலிகளால் வந்த சிலுகும் எல்லாம் நம்மாலே வந்தது அன்றோ –
நீர் இருந்த இடத்திலே வந்து கொண்டு போராதது
நம் குறை யன்றோ என்று சாபராதரரைப் போலே சாந்தனவம் பண்ணினால் போலேயும் –
ஆண்கள் விஷயத்தில் அகப்பட இப்படி இருக்கக் கடவ நாம்
பெண்கள் வந்து எழுப்பப் பார்த்து இருப்போமே-என்று பெண்களுக்கு இனிதாகச் சொல்லி
உங்கள் கார்யம் அழகிதாகச் செய்து தரக் கடவோம் –
செய்ய வேண்டுவது என் சொல்லுங்கோள் என்ன-
இங்கண் குன்னங்குறிச்சியாகக் கேட்டு அருள ஒண்ணாது –
பேர் ஓலக்கமாக இருந்து கேட்டருள வேணும் என்று
ஆஸ்தானத்திலே புறப்பாடு
இருக்கும் க்ரமத்தை
பாசுர பரப்பு அறக் கையோலை செய்து கொடுக்கிறார்கள்-
(கிடாம்பி)ஆச்சான் -அகதிம் சரணாகதம் -என்று விண்ணப்பம் செய்ய
நம் இராமானுசனை யுடையாய் இருந்து வைத்து நம் முன்னே இப்படி சொல்லப் பெறாய்-என்றார் அழகர் –
அபராத ஸஹஸ்ர பாஜநம் பதிதம் பீமபவார்ணவோதரே |
அகதிம் ஶரணாகதம் ஹரே! க்ருபயா கேவலமாத்ஸமாத் குரு ||-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —-48
மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப் பூ வண்ணா வுன்
கோயில் நின்று இங்கனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
கார்யம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்-
பதவுரை
மாரி–மழைக் காலத்தில்
மலை முழஞ்சில்–மலையிலுள்ள குஹைகளில்
மன்னி கிடந்து–(பேடையும் தானும் ஒரு வஸ்து என்னலாம்படி) ஒட்டிக் கொண்டு கிடந்து
உறங்கும்–உறங்கா நின்ற
சீரிய சிங்கம்–(வீர்யமாகிற) சீர்மையை யுடைய சிங்கமானது
அறிவுற்று–உணர்ந்தெழுந்து
தீ விழித்து–நெருப்புப் பொறி பறக்கும்படி கண்களை விழித்து
வேரி மயிர்–(ஜாதிக்கு உரிய) பரிமளமுள்ள உளை மயிர்களானவை
பொங்க–சிலும்பும்படி
எப்பாடும்–நாற் புறங்களிலும்
பேர்ந்து–புடை பெயர்ந்து (அசைந்து)
உதறி–(சரிரத்தை) உதறி
மூரி நிமிர்ந்து–சோம்பல் முறித்து
முழங்கி–கர்ஜனை பண்ணி
புறப்பட்டு போதரும் ஆ போலே–வெளிப் புறப்பட்டு வருவது போல,
பூவைப் பூ வண்ணா–காயம் பூப் போன்ற நிறத்தை யுடைய பிரானே!
நீ–நீ
உன் கோயில் நின்று–உன்னுடைய திருக் கோயிலினின்றும்
இங்ஙனே போந்தருளி–இவ்விடத்தேற (ஆஸ்தாநத்தில்) எழுந்தருளி
உன் கோயில் நின்று
கோப்பு உடைய–அழகிய ஸந்நிவேசத்தை யுடைய
சீரிய–லோகோத்தரமான-மேன்மை பெற்ற
சிங்காசனத்து-எழுந்தருளியிருந்து
யாம் வந்த காரியம்-நாங்கள் (மநோ ரதித்துக் கொண்டு) வந்த காரியத்தை
ஆராய்ந்து–விசாரித்து
அருள்–கிருபை செய்ய வேணும்’
ஏல் ஓர் எம் பாவாய்
மாரி
வைரம் கொள்ளும் மார்க்கங்களும்-
சலிலே நஸமீக்ருதா-என்னும் படி
தேசம் அடைய ஒரு நீர்க் கோப்பாக வர்ஷம் பெய்து
வழிகள் எல்லாம் தூறு எழுந்து சஞ்சார யோக்யதை இன்றியிலே ஒழிகையாலே
ராஜாக்களும் தம் தாம் சத்ருக்கள் பக்கல் த்வேஷங்களையும் மறந்து
எடுத்து விடுகையும் தவிர்ந்து
கை கழியப் போனவர்களும் வர்ஷாவாகப் புகா நின்றது என்று
தம் தாம் வீடுகளைக் குறித்து வந்து நின்று
நாலு மாசமும் உகந்த விஷயங்களோடு கூடி இருக்கும் படியாய் இறே இருப்பது
மஹாராஜரும் தாரை யுடைய ஸ்தநோஷ்மாவைப் பற்றிக் கிடந்து
பெருமாளோடே பண்ணின சமயத்தையும் மறந்த படியால் பெருமாளும் சீறி –
ச பாந்தவமாக அறுக்கக் கடவோம் என்று இளைய பெருமாளுக்கு அருளிச் செய்து விட
அவரும் கிஷ்கிந்தை வாசலிலே சீரிய நாண் எரிய
நின்ற திருவடியைப் பார்த்து போக்கடி சொல் என்ன –
அவனும் தீரக் கழிய அபராதம் பண்ணின உனக்கு ஓர் அஞ்சலி நேராமல் போகாது என்ன
தான் சாபராதன் ஆகையால் நேர் கொடு நேர் புறப்பட மாட்டாமையாலே
தாரையைப் புறப்பட விட
அவளும் உமக்கு கோபம் காரணம் என் –
உமக்கு கோபத்துக்கு போரு வாரும் உண்டோ என்று பொறுப்பித்துக் கொள்ளும் படி
பண்ணும் காலம் இறே வர்ஷா வாகிறது
பெருமாள் தானும் மால்ய வானிலே எழுந்து இருந்து
சலீலாதி பாரத்தை வஹித்துக் கொண்டு ரண உத்யு க்த்ங்களான யானைகள் போலே கிளம்பி
நீர்க் கனத்தாலே மலைக் கொடு முடிகளில் படிந்து
சோபன பங்க்திகள் படுத்தால் போலே கிடக்கிற கிடையைக் கண்டு
அர்ச்சிராதி கதியாலே பரம பததத்துக்கு ஏறுவாரைப் போலே
இவற்றிலே அடி இட்டு ஆகாசத்தில் ஏறி பறித்துக் கொள்ள வேண்டாத படி
நினைத்த படி அள்ளிப் பரிமாறலாம் படி இருக்கிற
இக் காலத்துக்கு அடைத்த பூக்களைக் கொண்டு
ஆதித்ய அந்தர விருத்தியான
பெரிய பெருமாளை சமாராதனம் பண்ணலாய் இருந்தது –
எடுத்துக் கை நீட்டுவார் இல்லை யாயிற்றே என்கிற
இழவோடே வர்ஷா காலத்தில் இருக்கும் படிகள் எல்லாம் அருளிச் செய்தார் இறே
மாரி
பிரிந்தார் கூடும் காலம் –
கூடினார் போக ரசம் அனுபவிக்கும் காலம் –
புஜிக்கிறவர்கள் கை நெகிழில் உடம்பு வெளுத்து அணையும் காலம்
மாரி
பெண்களோடு மேகம் அறையிடும் காலம் –
பிரிந்தார் கொடுமை குழறும் காலம் –
கலந்தார் வர எதிர் கொள்ளும் காலம் -(திருவிருத்தம் )
பெண் நீர்மை ஈடு அழிக்கும் காலம் (நாச்சியார் -8- )
மாரி
சிம்ஹங்களும் எதிரிகளான யானைகளின் வாசலில் நின்று பிளிறவும்-
அது செவிப் படாதே தனக்கு ஒரு விரோதி இல்லை என்று
பர்வத குகைகளில் பற்றிக் கிடந்து உறங்கும் காலம்
இனி இவர்களுக்கு ஊராரும் இசைந்து
அவர்கள் ஒரோ இடங்களிலே அடங்கவும் பெற்று
இவர்களுக்கு பலம் கொடுக்கிற கிருஷ்ணனும் நப்பின்னை பிராட்டி கட்டிலிலே உறங்கி
இவர்கள் சென்று எழுப்ப வேண்டும் படியான காலம் இறே
மலை முழஞ்சில்
ஸிம்ஹம் தான் மலைக்கு ஆபரணமாய் இறே இருப்பது –
இவனும் நப்பின்னையினுடைய துங்க ஸ்தன கிரிதடியில் ஸ்தன ஆபரணம் போலே தங்குகிறான் இறே
மன்னிக் கிடந்து-
மிடுக்காலே ஒருவர்க்கு அஞ்ச வேண்டாமையாலே
மலைக் குவடு போலே பொருந்தி வீசு வில் இட்டு எழுப்பினாலும் கிளப்பப் போகாத படி
ஒட்டிக் கொண்டு கிடக்கை –
அன்றிக்கே –
தன் பெடையோடே ஏக வஸ்து என்னலாம் படி பொருந்திக் கிடக்கும் என்றுமாம் –
வைத்துக் கிடந்த மலர் மார்பா -என்னும் படி இறே கிடக்கிறது –
அடங்க வஞ்சிறை கோலி என்னுமா போலே
கிடந்து உறங்கும்
ஸ்பர்ச ஸூகம் மயக்கின படி ஒழிய
தமோ குண அபீபூதமாய் உறங்குகிறது அன்றே இவன் உறக்கம்
தன்னால் அல்லது செல்லாதே வியதிரேகத்தில்
ஆற்றாதார் வரும் அளவும் குறு விழி கொள்ளுகை இறே –
உறங்கும் சீரிய சிங்கம்
உறங்கா நிற்கச் செய்தே கிட்ட மாட்டாதே
ஷூத்ர மிருகங்கள் கண்ட காட்சியில் மண் உண்ணும் படி வீர ஸ்ரீ யை யுடைத்தான ஸிம்ஹம்
ஸூக ஸூப்தி பண்ணா நிற்கச் செய்தே எதிரிகள் தப்பிக்கும் படி கிடக்கையாலே
உணர்த்தி கொள்ளும் காலத்திலும் உறக்கமே நன்றாய் இருக்க
ஏன் யுணர்த்தினோம் என்னும் படி
மடி கொடுத்தார் துடிக்கும் படி இறே இவன் உறக்கம் இருப்பது
சீரிய சிங்கம்
ம்ருகேந்த்ரன் என்றும்
மிருக ராஜன் என்றும்
ஒருத்தர் முடி சூட்ட வேண்டாதே பிறப்பே நிரங்குசமான வைபவம் யுண்டாகை
சீரிய சிங்கம்
நர ஸிம்ஹம் போலே கலந்து கட்டியாய் சீர்மை கெட்டு இராதே
சிற்றாயர் சிங்கத்துக்கு(பெரியாழ்வார் – 3-3)
அறிவுற்றுத்
மேலிட வல்லது ஓன்று இல்லை –
கிட்டி எழுப்புவார் இல்லை –
காலம் உணர்த்த உணரும் அத்தனை இறே –
அறிவுற்று
அறிவு இல்லாத தொரு பதார்த்தத்துக்கு அறிவு புகுந்து நடை யாடினால் போலே இருக்கை –
ஆஸ்ரித அர்த்தமாக உணர்ந்த போது இறே இவன் அறிவுடையவன் ஆவது –
பூ அலர்ந்தால் போலே காலம் உணர்த்த உணர்ந்த படி –
தீ விழித்து
நம் எல்லைக்குள் புகுந்தார் ஆர் என்னுமா போலே
பார்க்கும் பார்வையில் உள்ள வெம்மை –
பிரதம கடாக்ஷ சந்நிபாதத்தில்
சர்வ காலமும் அணையும் பேடைக்கும் குட்டிகளுக்கும் அணைய ஒண்ணாது இருக்கை –
பூங்கோதையாள் வெருவ —
வானோர் கலங்கி ஓட (பெரிய திருமொழி -1-7 )-என்னும் படி இறே
கோபித்து விழித்தால் எரி வட்டக் கண்களாலே (நான்முகன் )
ஐஸ்வர்யமான தேஜஸ்ஸூ பிரவஹிக்கும் படி –
இவையா பிலவாய் திறந்து எரி கான்ற
இவையா வெரிவட்டக் கண்கள் -இவையா
வெரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்
அரி பொங்கிக் காட்டும் அழகு–(நான்முகன்-21)
ஐந்தலைப் பாம்போடு விளையாடுகிறவனார்
பாண்டவ சாரதி க்ருத்தனானால் பிழைக்கிறவனார் என்று
சிவக்கப் பார்த்தால்
ப்ரஹ்ம ருத்ராதிகளாலும் நோக்க ஒண்ணாத படியாய் இறே இருப்பது
தீ விழித்து
இவனைக் கொண்டு வேறு ஒரு பிரயோஜனம் கொள்ளுமவர்கள் அன்றிக்கே
இவன் இருந்த படியே உத்தேச்யம் என்று இருக்குமவர்கள் ஆகையாலும்
கொண்ட சீற்றம் -என்று
ஆஸ்ரித அர்த்தமான சீற்றைத்தை நிதி யுண்டு என்று நினைத்து இருக்குமவர்கள் ஆகையாலும்
ஏதேனுமாக இவன் செய்கை இவர்களை நைவிக்கையாலும் –
சீரிய சிங்கம் என்றதோடு –
அறிவுற்று என்றதோடு –
தீ விழித்து -என்றதோடு –
வாசி அற
இவை எல்லாம் போக்யமாய் இருக்கிறபடி –
இவையா இவையா என்று
தனித் தனியே ஆகர்ஷகம் இறே
வேரி மயிர் பொங்க
பரிமளத்தை யுடைத்தான உளை மயிர்களானவை சிலும்ப
வேரி மயிர்
சிம்மத்துக்கு ஜாதி உசிதமான கந்தம் –
சர்வ கந்த என்கிற விஷயம் ஆகையால்
உபமேயத்தில் உள்ளது எல்லாம் உபமானத்திலே இட்டுச் சொல்லக் கடவது இறே –
தண் துழாய் விரை நாறக் கடவது இறே
வெப்பாடும் பேர்ந்து
அறிவு கலந்து நடையாடச் செய்தேயும்
நித்ர பாரவசயத்தாலே வந்த கலக்கத்தாலே ஒரு கார்யப் பாடு அற நாலு பாடும் பேருகிற படி
உதறி
உறங்கும் போது அவயவங்களை சேர இட்டுக் கிடைக்கையாலே வந்த
திமிர்ப்பு போம்படி அவயவங்களைத் தனித் தனியே உதறி
மூரி நிமிர்ந்து
உலாவுகைக்கு சரீரம் விதேயமாகைக்காக அவயவியான உடலை ஒன்றாக நிமிர்த்து
முழங்கி
இதர துஷ்ட மிருகங்கள் கிடந்த இடத்திலே முழுக்காயாக அவிந்து கிடக்கும் படி
முழங்கி
மேகம் போன்ற கிருஷ்ணனுடைய முழக்கம் எதிரிகளை மண் உண்ணும் படி பண்ணி
பெண்கள் வந்து எதிர் கொள்ளக் கடவதாய் இருக்கும் –
புறப்பட்டு-போதருமா போலே
கிரி குஹரத்தில் நின்றும் இப்படிப் பட்டதொரு ஸிம்ஹம் புறப்பட்டு
ஸ்வைர சஞ்சாரம் பண்ணுமா போலே
இங்கனே போர வேணும் என்கிறார்கள்
பெண்காள் -நம்மை ஸிம்ஹம் புறப்படுமா போலே புறப்படவோ சொல்லுகிறது –
ராகவ ஸிம்ஹமாய் புறப்படவோ
நர ஸிம்ஹமாய் புறப்படவோ -என்ன –
உன்னுடைய மேன்மை அந்யாயத்தம் அன்று என்கைக்காகவும்-
ஸ்வா பாவிகமான
ஸுர்யத்துக்கும்
காம்பீர்யத்துக்கும்
சிம்மத்தை த்ருஷ்டாந்தமாகச் சொன்னோம் அத்தனை அல்லது
ஸிம்ஹம் போலே என்றோமோ என்ன
ஹிரண்ய ராவணாதிகள் முன்னே நிற்குமா போலே நிற்கவோ தேடுகிறது பிரானே
நீ பூவைப் பூ வண்ணா
உன்னை நீ அறிய வேண்டாவோ –
எதிரிகளான சிசுபாலாதிகள் முன்னே நிற்கிலும் இவ் வழகு குலையாமே நிற்குமவன் அல்லையோ நீ
சிம்ஹத்தால் உன்னுடைய
வடிவு அழகையும்
குளிர்த்தியையும்
ஸுகுமார்யத்தையும் ஏறிட்டுக் கொள்ளப் போமோ
உன் வடிவுக்குப் பூவை பூவை ஓர் ஆகாரத்துக்கு த்ருஷ்டாந்தம் இடுகிற மாத்ரம்
ஸுர்யாதிகளுக்கு ஒரு போலி சொன்னோம் அத்தனை அன்றோ
பிரிந்தார்க்குப் பிழைக்க ஒண்ணாத படி வடிவு படைத்ததோ அது –
பூவைப் பூ வண்ணா
வண்டு அறாப் பூவை தான் கண்ணனார் வடிவுக்கு ஸ்மாரகமாய் இறே இருப்பது -(பெரிய திருவந்தாதி 49)
கொண்டல் தான் மால் வரை தான் மா கடல் தான் கூரிருள் தான்
வண்டு அறாப் பூவை தான் மற்றுத் தான் -கண்ட நாள்
காருருவம் காண்டோறும் நெஞ்சு ஓடும் கண்ணனார்
பேருருவம் என்று எம்மைப் பிரிந்து –49-
வடிவைக் கொண்டாட நின்றி கோள்
உங்களுக்கு அனுபவிக்க ஆசையாகில் உள்ளே புகுருங்கோள் என்றான்
வுன்-கோயில் நின்று இங்கனே
எங்களை உள்ளே அழையாதே நீ தான் உள்ளில் நின்றும் புறப்பட்டாலோ –
படுக்கைத் தலையிலே எடுத்துக் கை நீட்டுவித்துக் கொள்ளும் அளவன்று
எங்களை அழகு ஓலக்கத்தே அடிமை கொண்டு அருள வேணும் –
பூவைப் பூ வண்ணா நின் கோயில் நின்று
இவ் வடிவு அழகை எல்லாம் இட்டளத்தில் வெள்ளம் ஆக்குகிறது என்
உன் கோயில்
நந்தகோபனுடைய கோயில் -என்றார்கள் கீழ் –
இங்கே உன் கோயில் என்கிறார்கள் –
வாச பூமி ஒன்றாய் -அது இருவருக்கும் பொதுவாய்த்து இருப்பது –
இவன் வர்த்திக்கும் கோயிலுக்கு சேஷ சேஷிகளுடைய ப்ராதான்யம் கொள்ளக் கடவது இறே –
பிரணவம் போலவும் –
ஹ்ருதயக் கமலம் போலவும்
திருவரங்கம் நம்மூர் -(திருநெடும் தாண்டகம் )
எம்பெருமான் கோயில் என்றேற்க்கு இது வென்றோ எழில் ஆலி-(திருநெடும் தாண்டகம் )-என்னக் கடவது இறே –
(உபய பிரதானம்
அர்ஜுனன் தேர் தட்டு
ராச மண்டலம்
ஆழ்வார் தேவநாதன் தேவஸ்தானம் போல் )
இங்கனே போந்து அருளி-
பெருமாள் திரு மாளிகையில் நின்றும் ஸூமந்த்ரனைக் கையைப் பிடித்துக் கொண்டு
பிராட்டி பின் தொடரப் புறப்பட்டால் போலே –
ஞாலத்தூடே நடக்க ஒண்ணாது (திருவாய் -6-9-3 )
என்கொல் அம்மான் திருஅருள்கள்?* உலகும் உயிரும் தானேயாய்*
நன்கு என் உடலம் கைவிடான்* ஞாலத்தூடே நடந்து உழக்கி*
தென் கொள் திசைக்குத் திலதமாய் நின்ற* திருமாலிருஞ்சோலை*
நங்கள் குன்றம் கைவிடான்* நண்ணா அசுரர் நலியவே.
இங்கனே –
எங்கள் முன்னே நடக்க வேணும் –
எங்களுக்குத் தனியே சில நிர்பந்தம் உண்டு காண் –
கண் வளர்ந்து அருளின படி கண்டு வாழ்ந்தோம்
இனி நடை அழகு கண்டு வாழ வேணும் –
நடைச் சக்கரவத்து பிடிக்கலாம் படி இறே இந்நாலு அடியும் இருப்பது
கிருஷ்ணனுடைய லளித கதியை அநு கரித்து தரிக்கத் தேடுகிறவர்கள்
தாங்கள் உட்பட
கண்ணுடையார் அடங்கலும் கண்டு வாழுங்கோள் என்னும் படி இறே இருப்பது –
கானகம் படி யுலாவி யுலாவி (பெரிய திருமொழி 3-6)-என்று
கிருஷ்ணன் நடக்கும் போது ஆடல் பாடல் மறக்கக் கடவது இறே (பெரியாழ்வார் 3-3 )
அப்சரஸ்ஸூக்கள் உட்பட ஆடுமது கண்டு
கை தொழ வீதி வருவான் -காலும் நடையும் கண்டு கை எடுப்பார் மடல் எடுப்பார் அவர்கள் இறே பெண்கள் –
போந்தருளி
சதுர்க்கதி இறே –
ரிஷபத்தினுடைய செருக்கும் –
மத்த கஜத்தினுடைய திமிர்ப்பால் வந்த பிசுகுதலும்-
புலியினுடைய சிவிடகுடைமையால் வந்த உறட்டுதலும் –
ஸிம்ஹத்தினுடைய மேனானிப்பால் வந்த பராபிபவனமும் –
(ராகவ ஸிம்ஹம்
யாதவ ஸிம்ஹம்
ரெங்கேந்திர ஸிம்ஹம்
கர்ப்ப க்ருஹம் எழுந்து அருளும் பொழுது நம்பெருமாள் இடம் ஸர்ப்ப கதியும் உண்டே )
ஆயர் பாடி கவர்ந்து உண்ணும் கார் ஏறு –(நாச்சியார் )
வாரணம் -(1-8) பைய நின்று
சிற்றாயர் சிங்கம் (பெரியாழ்வார் 1-3 )-என்கிற கிருஷ்ணனுக்குச் சொல்ல வேணுமோ
புருஷ ரிஷப –
ராம சார்த்தூலம் –
மத்த மாதங்க காமி நம் —
பத்மதள பத்ராக்ஷம் -சிம்ம விக்ராந்தகாமி நம் -என்று சக்கரவர்த்தி பிள்ளை உட்பட விருது பிடியா நிற்க –
(இங்கும் இரண்டும் உண்டே )
இவை எல்லாம் நமக்கு நம் பெருமாள் நடை அழகிலே காணலாம்
போந்து கேட்க்கும் அத்தனை அன்றோ கார்யம் வேண்டுவது என்றான்
கோப்புடைய சீரிய சிங்காசனத்து இருந்து
படுக்கையில் வார்த்தையாக ஒண்ணாது
கோப்புடைய
உபய விபூதியில் உண்டான சராசர பதார்த்தங்களை அடங்கலும் தொழிலாக வகுப்புண்டு இருக்கை
சீரிய சிங்காசனம்
சீரிய சிங்கத்துக்கு சத்ருசமான ஆசனம்
சீரிய
பெண்களுக்கு பொய் குறிக்கும் கிருஷ்ணனே யாகிலும்
இவ்வாசனத்திலே இருந்தால் பொய் சொல்ல ஒண்ணாதே –
சொன்னது அமோகமாய் இருக்கை –
ஆசனத்துக்கு சீர்மையாவது –
கடல் கரை வெளியிலே வானர சஹாசத்திலே வார்த்தை போலேயும் –
பூசல் களரியிலே தேர்த் தட்டில் வார்த்தை போலேயும்
பெண்கள் திரளில் திவ்ய சிம்ஹாசனத்தில் இருந்து பொய் நம்பியான கிருஷ்ணன் சொன்னதே யாகிலும்
ஆசன விசேஷத்தாலே பழுது போகாத படி யாய் இருக்கும் –
தர்ம ஆசனத்தில் இருந்தால் தோற்றிற்றுச் சொல்ல ஒண்ணாது இறே –
இது தான் தர்மாதி பீடம் இ றே –
ராஜாக்கள் மெய்க்காட்டுக்கு இன்ன மண்டபத்திலே இன்ன ஆசனத்தில் இருந்து நினைப்பிட்டது
என்றால் தப்பாதால் போலே
உன் கோயில் நின்று இத்யாதி
நம்பெருமாள் கோயில் ஆழ்வாரில் நின்றும் புறப்பட்டு அருளி
பெரிய திரு மண்டபத்திலே சேர பாண்டியனிலே (முத்துப் பத்துப்பந்தலின் கீழே )
நாய்ச்சிமாரோடு கூடி இருந்து நினைப்பிட்டது என்றால் தப்பாதால் போலே
சீரிய சிங்காசனம்
ஓர் அணு சென்று அடியிடிலும்
கிருஷ்ணனோடு ஸாம்யா பத்தியைக் கொடுக்கும் ஆசனம் –
இருந்தால் சிங்காசனமாம் -என்கிற
ஆசனத்தில் ஏறல் இறே தங்களுக்கு கணிசம்
கண் வளருகிற போதை அழகும் –
உலாவுகிற போதை அழகும் –
கண்டால் -இருக்கும் போதை அழகும் காண வேணும் இறே
இருந்தமை காட்டினீர் (திருவாய் 6-5-5 )-என்று இறே உத்தேச்யம்
குழையும் வாள் முகத்து ஏழையைத்* தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு,*
இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண்பிரான்* இருந்தமை காட்டினீர்,*
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு* அன்று தொட்டும் மையாந்து,* இவள்
நுழையும் சிந்தையள் அன்னைமீர்!* தொழும் அத் திசை உற்று நோக்கியே.
தடம் கொள் தாமரைக் கண் விழித்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ உலகும் தொழ இருந்து அருளாய் திருப் புளிங்குடி கிடந்தானே-
கிடந்தமை கண்டாலும்
நடந்தமை கண்டாலும்
கண்களின் விடாய் கெட்டு குளிராது –
கண்ணிணை குளிர புது மலர் ராகத்தைப் பருக இருந்திடாய்-
சீரிய சிங்காசனத்து இருந்து
நாங்கள் சுற்றும் ஓலக்கம் இருக்க நீ சிம்ஹாசனத்தில் இருந்தால் அன்றோ –
பல்லாயிரம் பெரும் தேவிமாருடனே –எல்லாரும் சூழ
சிங்காசனத்தே இருந்தானைக் கண்டவர்கள் உண்டு என்கிற பிரசித்தி உனக்கு படைத்தாலாவது
இருந்து
காவலும் கட்டுமாய் நில் என்பார் இன்றிக்கே
நினைத்தபடி அனுபவிக்கலாம் படி இருந்த இருப்பு இறே
யாம் வந்த
எங்களை அறிவுதி இறே –
நீ வர இருக்குமவர்கள் அன்றோ நாங்கள்
வந்த
விரஹ துர்பல்யத்தாலே கால் நடை தாராத நாங்கள் அன்றோ வந்தோம்
கார்யம்
கார்யம் இன்னது என்னா விடுகிறது -அவசரத்தில் சொல்ல வேணும் என்று நினைத்து –
ஸ்ரீ பரத ஆழ்வான் தம்மோடு ஒத்த ஆர்த்தரானார் எல்லாரையும் திரட்டிக் கொண்டு சென்று
திருவடிகளில் விழ இரங்குவர் என்று வர
அவன் நினைத்து வந்தததுக்கு அவசரம் இல்லாமையால்
அணுக ஒண்ணாத படி இருந்து திருவடி நிலைகளைக் கொடுத்து விடும் ஸ்வ தந்த்ரன் ஆகையால்
இப்போது சொல்லுவோம் அல்லோம் –
இன்னம் இரண்டு அடி புகுர நின்ற வாறே –
உற்றோமே யாவோம் -என்கிறோம் என்று
கார்யம் இன்னது என்னும் இடத்தை
கார்யம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்-சிற்றம் சிறு காலைக்கு வைக்கிறார்கள்
(சரணாகதி கறவை யிலும்
அதற்குப் பின்பே கார்யம் கைங்கர்ய பிராப்தி )
காரியம்
ஸ்வ ஸ்வரூபா பத்தி அளவும் இறே விதிக்கு விஷயம் உள்ளது –
அவ்வருகு பரிமாற்றத்தால் வருமவை எல்லாம் பிரமாண விஷயமாய்
பேச்சுக்கு நிலமாய் இராதே
அது தானும் காரிய வறுதி பிறந்தால் இறே சொல்லுவது
ஆராய்ந்து அருள்
நாம் போம் இடம் தேடிக் காலம் பார்த்து எதிர் சூழல் புக்கு புருஷகாரமாகப் பற்றி
நாம் படுவது எல்லாம் நீங்கள் படுவதே
நீங்கள் என் செய்திகோள்-
என் பட்டி கோள் -என்று ஆராய வேணும் –
பெண்காள் –
ஒருவரை ஒருவர் எழுப்பி –
எல்லாரும் திரண்டு
நம் வாசல் காக்குமவனை எழுப்பி –
ஐயரை எழுப்பி
ஆய்ச்சியை எழுப்பி
நம்மை எழுப்பி
அண்ணரை எழுப்பி
மீளவும் நம்மை எழுப்பி போர வியசனப் பட்டி கோளே-என்று
திரு உள்ளம் பற்றி கிருபை பண்ணி அருள வேணும் –
(வடநாட்டு ஹிந்துஸ்தான் வித்வான் -வந்து பாடி –
அரையர் சம்பாவனை பிரார்த்திக்க –
திருக் கைத்தலை சேவை மூன்று அர்ச்சகர்கள் சேர்ந்து –
நடந்து சேவை சாதித்து 700 காதம் நடந்த அவனுக்கு ஏழு அடி நடந்த ஐதிக்யம் உண்டே
ஒருநாள் புறப்பாடு காணா விடில் மாய்ந்தே போவார்கள் பூர்வர்கள் – )
———————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply