ஸ்ரீ திருப்பாவை — -நாயகனாய் நின்ற –ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் வியாக்யானம் – ஆறாயிரப்படி —

முதல் ஐந்து பாட்டாலே
பகவத் அனுபவ உபகரணங்கள் அருளிச் செய்யப் பட்டன

ஆறாம் பாட்டாலே –
பகவத் ஏக போகரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் -அநந்ய பிரயோஜனராய் -இவ்விஷயத்தில்
தேசிகர் இன்றிக்கே இருப்பாரை அவர்கள் பக்கல் பரிவாலே
தேசிகர் ஆக்குகை தங்களுக்கு க்ருத்யம் என்று இருக்கை
ஸ்ரீ வைஷ்ணத்வ லக்ஷணம் என்று அவர்களுடைய ஸ்வ பாவத்தை சொல்லுகிறது –

ஏழாம் பாட்டாலே –
பகவத் விஷயத்திலே ஞாதமான அர்த்தம் ஒருத்தனுக்கு விஸ்திருதம் ஆனால்
தங்கள் பரிவாலே
போதயந்த பரஸ்பரம் என்கிறபடியே அறிவிக்கை ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிறது –

எட்டாம் பாட்டில் –
பகவத் அனுபவத்தில் பிரத்யா சன்னராய் இருப்பாரைக் குறித்து சாபேஷாராய் இருக்கையும்
அவர்களை முன்னிட்டு ஈஸ்வரனைப் பற்றுகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிறது –

பத்தாம் பாட்டில் –
ஞாநித்வாத்மைவமே மதம் -என்றும் –
அஹம் சச மம ப்ரிய என்றும் –
அவன் பக்ஷபதித்து இருப்பார் பக்கல் நித்ய சாபேஷராய் இருக்கை ஸ்வரூபம் என்கிறது –

11-பாட்டில் –
பகவத் சம்பந்தம் விச்சேதியாதே போந்த ஆச்சார்ய சந்தான ப்ரஸூதர் நமக்கு பூஜ்யர்
அவர்கள் அடியாக பகவத் ஸமாச்ரயணம் பண்ணுகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிறது

12-பாட்டில்
பகவத் விஸ்லேஷம் அஸஹ்யமாம் படி அவகாஹித்தார்கள் நமக்கு உத்தேச்யராம் அளவு அன்றிக்கே
தத் சம்பந்தி சம்பந்திகளும் உத்தேசியர் என்று இருக்கை ஸ்வரூபம் என்கிறது –
13-பாட்டில்
பகவத் அனுபவ பரிகரமான ஞான வைராக்ய பக்திகளால் பூர்ணராய் இருப்பார் திறத்து
ததர்த்தமாக ஸ்ரீ வைஷ்ணவர் சாபேஷராய் இருக்கை ஸ்வரூபம் என்கிறது

14-பாட்டில்
பகவத் விஷயத்திலே மூட்டுகையாலே அதிகரித்த நிர்வாஹகர் முன்னாக
பகவத் அனுபவம் செய்கை ஸ்வரூபம் என்கிறது –

15-பாட்டில் –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸமூஹம் அபிமதமாய் இருக்குமவர்களைக் கண்டால்
அந்த சமூகமாக அவர்களை உகத்தல் ஸ்வரூபம் என்கிறது –

பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களையும் தனித்தனியே எழுப்பின படிக்கு உப லக்ஷணம் –
இப் பத்து பெண்களையும் எழுப்பினது –

முற்பட உணர்ந்த பெண்கள் உறங்குகிறவர்களையும் எழுப்பி –
எல்லாரையும் கூட்டி பெரும் கூட்டமாகத் திரண்டு
ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகையில் சென்று
கோயில் காப்பானையும்
திரு வாசல் காக்கும் முதலிகளையும்
திருவாசல் திருக் காப்பு நீக்க வேணும் என்று இரக்கிறார்கள்-

செய்யாதன செய்யோம் -என்று
பண்ணின ப்ரதிஞ்ஜையை அனுஷ்டான பர்யந்தம் ஆக்க வேணும் இறே –

உகந்து அருளின நிலங்களில் உள்ளுப் புகும் போது
ஷேத்ராதிபதிகளையும்
த்வாராத்யஷர்களையும் அனுமதி கொண்டு
புக வேணும் என்று ஸ்ரீ பகவத் சாஸ்த்ரங்களிலே சொல்லுகிற அர்த்தம்
இவர்கள் ஆயர் சிறுமியர்களாய் அறிந்திலர்களே ஆகிலும்
உள்ளே புகுர விட வேணும் என்னும் ஆசை யோடே இருக்கையாலே
ஞானாதிகருடைய அனுஷ்டானமும் கோல் விழுக்காட்டாலே பலிக்கிறது –

ஜனபத சரி தந்த ரீப–(ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் )
ஸ்மேராநநா ஷிக மலை–(ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் )
த்வதீய கம்பீர மநோ நு சாரிண (ஸ்ரீ ஆளவந்தார் )-என்கிறபடியே
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆசாரத்தை வைதிக விதிகள் பின் செல்லும் அத்தனை இறே

ராகத்தால் ஸ்வயம் ஏவ ப்ரவ்ருத்தாராம் இடத்தில் ராகத்துக்கு விதி முற்பட மாட்டாது

ராகம் தனக்கும் விதி அடி ஆகாதே –
அருளினன்(1-1-1 ) என்கிற பகவத் பிரசாதம் அடி யாய்த்து இறே

இனி ஓர் அடி இட வேண்டினாலும் ருசி கார்யம் ஆகையால்
ருசி உத்பாதகனான அவன் தானே அடியாம் அத்தனை இறே

இது தான் இதர விஷயத்திலே ருசி அன்றே –
வகுத்த விஷயத்திலே ருசி இறே –
காம்ய கர்மாதிகாரிகளுக்கும் த்யாஜ்யமாய் இறே இது இருப்பது

தச் ஸ்ரேஷ்டம் ஜென்ம -என்கிறது ஜென்மமாய்-
சா வித்யா யா வி முக்தயே–என்கிறது வித்யையாய் –
யன்ன பந்தாய -என்கிறது கர்மமாய் –
வரும் வழி அறியும் போது
சாஸ்த்ர சங்கத்தை வரியடைவே கற்று அர்த்த நிர்ணயத்துக்கும் அனுஷ்டானத்துக்கும் நெடும் காலம் செல்லும்

அத்தை அப்யசித்தவர்கள் அதனுடைய தாத்பர்யத்தை கேட்ட அநந்தரம் அனுஷ்ட்டிக்கலாய் இருக்கும்

குளிகை கைப் பட்டால் இரும்பு பொன்னாமா போலே பலிப்பதும் செய்யும்

நஞ்சீயர் நம் பிள்ளைக்கு -ரச வாதம் கைப்பட்டவன் இருந்த இடம் எல்லாம் பொன்னாமா போலே
ப்ரமேயம் கைப் பட்டவனுக்கு சொல்லிற்று எல்லாம் வார்த்தையாம் -என்றார் –

முமுஷூர் வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்கிற ஸ்ருதியினுடைய
உப ப்ரும்ஹண மான அபய பிரதானத்திலே
நிவேதயதமாம்-என்கிற ஸ்லோகத்தில்
அவனைப் பெறும் இடத்தில் ததீயர் முன்னாக பெற வேணும் என்று சொன்ன அர்த்தத்தை
இப் பாட்டாலே சொல்லுகிறது –

நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண
வாசல் காப்பானே மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறிமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே யம்மா நீ
நேச நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்-

பதவுரை

நாயகன் ஆய் கின்ற–(எமக்கு) ஸ்வாமி யாயிருக்கிற
நந்தகோபனுடைய–நந்த கோபருடைய
கோயில்–திரு மாளிகையை
காப்பானே-காக்குமவனே!
கொடி-த்வஜ படங்கள்
தோன்றும்-விளங்கா நிற்கப் பெற்ற
தோரணம் வாசல்–தோரண வாசலை
காப்பானே–காக்குமவனே!
மணி-அழகிய
கதவம்-கதவினுடைய
தாள்–தாழ்ப்பாளை
திறவாய்–திறக்க வேணும்’
ஆயர் சிறுமி யரோ முக்கு–இளமை தங்கிய இடைப் பெண்களாகிய எமக்கு
மாயன்–ஆச்சர்யச் செயல்களை யுடையவனும்
மணி வண்ணன்–நீல மணி போன்ற திரு நிறத்தை யுடையவனுமான கண்ண பிரான்
நென்னலே–நேற்றே
அறை பறை வாய் நேர்ந்தான்–ஒலி செய்யும் பறைளைத் தருவதாக வாக்களித்தான்’
துயில் எழ–(அவ் வெம்பெருமான்) துயிலினின்றும் எழுந்திருக்கும்படி
பாடுவான்-பாடுகைக்காக
தூயோம் ஆய்–பரிசுத்தைகளாய்
வந்தோம்–(அடியோம்) வந்திருக்கின்றோம்’
அம்மா–ஸ்வாமி!
முன்னம் முன்னம்–முதல் முதலிலே
வாயால்–(உமது) வாயினால்
மாற்றாதே–மறுக்காதொழிய வேணும்’ (அன்றியும்)
நேசம் நிலை கதவம்–கண்ண பிரான் பக்கலில்) பரிவுற்றிருக்கும் நிலைமையை யுடைய கதவை
நீ–நீயே
நீக்கு–நீக்க வேணும்’

நாயகனாய் நின்ற –
நாயகனாய் என்கிற நாயகத்வம் திரு வாசல் காக்கும் முதலிகளுக்கு விசேஷணம் ஆகவுமாம் –
ஸ்ரீ நந்த கோபர்க்கு விசேஷணம் ஆகவுமாம் –
உத்தேச்யமாய் பாவிக்கிற கிருஷ்ணன் பக்கல் சொல்லாது (செல்லாது )ஒழியும் அத்தனையே வேண்டுவது
(நாயகனாய் நின்ற மணி வண்ணன் மாயன் சேராதே இப்பொழுது )
கடகரை சேஷி என்று இருக்குமவர்கள் இறே இவர்கள் –

ஆளவந்தார் எம்பெருமானை ஸ்தோத்ரம் பண்ண என்று புக்கு ஆச்சார்ய ஸ்தோத்ரத்திலே இழிந்தார் –
அதுக்கு அடி –
ஒருத்தன் ரத்னத்தைக் கொடுத்தால் அதன் விலை அறிய -அறியக்
கொடுத்தவன் பக்கல் விருப்பம் பிறக்குமா போலே
சாஸ்திரங்கள் எங்கும் அப்யஸித்து பார்க்கும் இடத்து
உபாயமாகத் தோற்றுகிற கர்ம ஞான பக்திகள் பேற்றுக்கு சாதனமாக மாட்டாது –

பகவத் சம்பந்திகளை முன்னிட்டுக் கொண்டு அவனையே உபாயமாகப் பற்றுமது பேற்றுக்கு உடல் என்று
ஸ்வ பிரபந்தத்தில் முதலிலும் முடிவிலும்
பரமாச்சார்யரான பெரிய முதலியாரைப் பற்றினார் –

த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே என்று
தாம் பண்ணின ப்ரபத்தியையும் கீழில் அவற்றோடு காற்கடைக் கொண்டு –
நாத முனிம் வி லோக்ய -என்று பெரிய முதலியாரை முன்னிட்டார் –

பிரபத்தி பண்ணுகிறவன் இவன் ஆகில் –
பேறு அவனாலே யாகில் –
இவர்களை முன்னிடுகிறது என் என்னில்

சாபராதனான இவன் பிரபத்தி பண்ணுகிறான் என்று இவனுடைய பூர்வ அவஸ்தையை நினைத்து
ஈஸ்வரன் சிவிட்க்கு என்னவும் கூடும்
அது செய்யாத படி மறுக்க ஒண்ணாத மனிசரை இட்டுப் பொறுப்பிக்கவும் வேணும் –

இவனுக்குப் பிறக்கும் அத்யவசாயமும் போட்கனாகையாலே
மெய்யான வியவசாயம் யுடையாரை முன்னிட்டு அல்லது கார்யகரம் ஆகாது என்று முன்னிடுகிறது

பாபிஷ்ட -க்ஷத்ர பந்துச் ச புண்டரீகச் ச புண்யக்ருத் ஆச்சார்ய வத்தயா முக்தவ் தஸ்மாத் ஆச்சார்யவான் பவேத் –

வேறாக வேத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரை சாத்தி இருப்பார் தவம் -(நான்முகன் )
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் -(திருவாய் -7-10-11 )
அடிகள் அடியே நினையும் அடியவர்கள் தம் அடியான் -(பெரிய திருமொழி -2-6)
ஆர் தொழுவார் பாதமவை தொழுவது அன்றே (இரண்டாம் )-என்றும் இவை இறே ஆழ்வார்கள் படி –

உன் அடியார்க்கு ஆட் படுத்தாய் —
அடியார்க்கு என்னை ஆட்படுத்த -ஈஸ்வரனுடைய கிருஷிக்கு பலம் இவர்களோடு சம்பந்திக்கை இறே –
செல்வனைப் போலே -ஏத்த வல்லார் அடியோம் -என்ற பெரியாழ்வார் இருக்கை இறே
தங்கள் தேவரை வல்ல பரிசு தருவிப்பரேல் -என்று ஆண்டாள் இருந்தது

பட்டர் -நஞ்சீயரை -பெரிய பெருமாள் தஞ்சம் என்று இருக்குமவரை தஞ்சம் என்று இரும் என்று அருளிச் செய்தார்

நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
நாயகன் முழு வேழ் உலகுக்குமாய் (6-4 )-என்றும் –
தொல்லை வானவர் தம் நாயகன் -என்றும் –
சகல லோகங்களுக்கும் சகல தேவதைகளுக்கும் நாயகனான சர்வேஸ்வரன் நம்முடை நாயகன் என்று
யசோதை பிராட்டி உட்பட சொல்லும் படி ஆயர் நாயகனாய் நிற்க

உந்தம் அடிகள் முனிவர் -என்று
பிரசித்தமாம் படி ஸ்வாமிகளாய் நியமிக்கிறார் ஸ்ரீ நந்தகோபர் ஆகையால்
உபய விபூதி நாயகனான கிருஷ்ணனுக்கும் நாயகர் ஆகையால்
ஸ்ரீ நந்த கோபரை-
நாயகனாய் நின்ற நந்தகோபன் -என்கிறார்கள் –

நந்த கோபனுடைய கோயில்
கிருஷ்ணன் உகப்பது பாரதந்தர்யம் ஆகையால் –
ஸ்ரீ வைகுண்டத்தில் இழவு தீர -ஸ்ரீ நந்த கோபற்குப் பிள்ளையாய்
நந்தகோபன் மகன் -என்று அவரை இட்டுத் தன்னைச் சொல்லும் படி
தான் பரதந்த்ரனாய் க்ருதார்த்தனான இடம் ஆகையால்
அவர் அபிமானத்தில் இவன் ஒதுங்கினான் என்னும் இடம் தோற்ற
கிருஷ்ணனுடைய கோயில் என்னாதே
நந்த கோபனுடைய கோயில் என்கிறது

யுவராஜா மம அந்நிய -என்று சக்கரவர்த்தி ஆசைப்பட்டு பெறாத போனதை –
நந்தகோபன் இளவரசு என்கையாலே
ஸ்ரீ நந்த கோபர் பெற்றார் –

வாசுதேவன் மதுரை மன்னன் -என்கையாலே –
இப் பேறு ஸ்ரீ வாசுதேவர்க்கும் இல்லை

நந்தன் பெற்றனன் வாசுதேவன் பெற்றிலன் -என்று
ராஜ குலங்களில் பிரசித்தம் இறே

பரம பதம் தன்னிலும் வான் இளவரசு இறே –
அதுவும் வானவர் நாடாய் –
கடவர்கள் முடியுடை வானவராய்-
அவர்கள் தான் (மூத்தவராய் )மூதுவராய் -(ஸாத்ய சந்தி தேவர் )
இவன் அவர்கள் மடியிலே கிடப்பது –
சிறகில் ஒதுங்குவது –
பிரம்புக்கு அஞ்சி சொன்னதுக்கு எல்லாம் அப்படி அப்படி என்னும் இளவரசாய் இறே வளருவது –

தத்ர காஷாயிநோ வ்ருத்தான் —
மேலாப்பின் கீழ் வருவான் –
அனந்த போக பர் யங்கே நிஷண்ணம் -என்றும் சொல்லக் கடவது இறே –

பக்வனான பின்பு ஸ்ரீ சத்ய பாமை பிராட்டி பக்கலிலே ராஜ்ய தூரை ( பொறுப்பை ) வைத்து
தூதுவ சாரத்யங்களிலே இறே அதிகரித்தது –

நந்த கோபனுடைய கோயில் –
ராஜ தாநீ பிதுர் மம(பெருமாள் சீதா பிராட்டி இடம் திரும்பி வரும் பொழுது சொன்னது )

கோயில் காப்பானே
தங்களுடைய மவ்க்த்யத்தாலும்-
அவன் உகக்குமதாகையாலும் அவன் தொழிலை இட்டுச் சொல்லுகிறார்கள்

கோயில் காப்பானே
இத்தால்
சேஷ வ்ருத்தி ப்ரயுக்தமான பேரே ஆத்மாவுக்கு நிலை நின்ற பேர் என்னும் இடம் தோற்றுகிறது
யதோசிதம் சேஷ இதீரி தேஜநை (ஆளவந்தார் )-என்றும் –
ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்ய நைவ க்ராம குல -என்றும் சொல்லக் கடவது இறே

கோயில் காப்பானே
தான் காக்கும் இயல்வினன் ஆகையால் –
பொழில் ஏழும் காவல் பூண்டு சகல லோக ரக்ஷணம் பண்ணுகிற எங்கள் நிதியை
செப்போடே நோக்குகிறவன் அன்றோ –

ஸ்ரீ நந்தகோபர் தாழ்த்தார் –
கம்சன் வெட்டியன் –
காப்பாரும் இல்லை –
என்று நாங்கள் வயிறு எரிந்து இருக்க –
எங்கள் வயிறு எரிதல் தீர்க்கிறவன் அன்றோ –

கோயில் காப்பானே –
ஏஷ ஸூப்தேஷூ ஜாகர்த்தி -என்று
சம்சாரிகள் பக்கல் உணர்த்தி பெறுவதற்கு முன்பு தான் உணர்ந்து இருக்கும்

இவர்கள் அனுமதி பெற்ற பின்பு
நிஸ் ருஷ்டாத்மா ஸூஹ்ருத் ஸூ ச (ஸ்ரீ இராமாயண யுத்த காண்டம் )-என்று
தன்னுடைய ரக்ஷகத்வத்தை இவர்கள் தலையில் வைத்து
தான் உறங்கா நிற்கும் –
மஹேந்திர கல்பம் பரிபாலயம்ஸ் ததா -என்னக் கடவது இறே
(குகன் மஹேந்திரனைப் போன்று இருந்த பெருமாளை நானும் லஷ்மணனும் ரஷித்தோம் என்று பரதன் இடம் )

காப்பானே –
இவை அனைத்தும் புறம் சூழ் காப்ப-என்று
பலர் நோக்கும் இடத்தில் ஆறில் ஓன்று கொள்ளாதே எல்லாருடைய காவலும் நீ ஒருவனே கொள்ளுகிறவனே –
(கோலார்ந்த நெடும் சங்கம்-பஞ்சாயுதம் கருடன் ஆறும் அங்கு )

கோயில் காப்பானே
உன்னைக் காவலாக வைத்தது
உகவாதார் புகுராமைக்கும்
உகப்பாரை புகுரா விடுகைக்கும் அன்றோ –
ஆன பின்பு அவனை ஆசைப்பட்ட எங்களுடைய ஆர்த்தியையும் ஆராய வேண்டாவோ –

அவன் கண்ணாலே போங்கோள்-என்று சொல்ல –
திரு வாசல் காக்கும் முதலியை எழுப்புகிறார்கள் –

கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பானே
இரண்டும் ஒருவனையே சொல்லிற்று ஆகவுமாம் –
கோயில் காப்பானே என்று ஷேத்ராதிபதியைச் சொல்லி
வாசல் காப்பானே என்று திரு வாசல் காக்கும் முதலியைச் சொல்லிற்று ஆகவுமாம் –

யாராலே விக்னம் வருகிறதோ என்று பயப்பட்டு எல்லார் காலிலும் விழுகிறார்கள் –

சர்வான் தேவான் நமஸ் யந்தி -என்று
தேவதாந்த்ரங்கள் காலில் விழுமவர்கள் பரிவர் காலிலே விழச் சொல்ல வேணுமோ

கொடித்  தோன்றும
அல்லாத மாளிகைகள் எல்லாம் தன் மாளிகையோடு ஒத்து இருக்கையாலே
பெண்கள் மத்திய ராத்திரியில் வந்தால் தடுமாற ஒண்ணாது
அவற்றில் காட்டில் நம் மாளிகைக்கு வாசி தெரிய வேணும் என்று கொடியும் தோரணமும் நட்டு வைத்தார் –

பெருமாளைக் காணப் பெறாதே ஆர்த்தனான ஸ்ரீ பரத ஆழ்வான்
ராம ஆஸ்ரம ஸூ சகமான தூம வல் கலங்களைக் கண்டு தரித்தால் போலே
கொடியையும் தோரணத்தையும் கண்டு இவர்கள் தரிக்கைக்காக வாய்த்து நட்டு வைத்தது

தண்ணீர் பந்தல்கள் தடாகங்கள் சமயத்தவர்கள் த்ருஷார்த்தற்கு தூரத்திலே தோற்ற வேணும் என்று
கொடியும் தோரணமும் நட்டு
தண்ணீர் பந்தலையும் கடையையும் காட்டுமா போலே அன்றோ
அடையாளங்களையும் பண்ணி எங்களுக்காக அன்றோ உன்னை இங்கு வைத்தது

வாஸத் தடம் இறே உள்ளுக் கிடக்கிறது –
க்ரீஷ்மே சீதமிவஹ்ருதம் -என்கிற தண்ணீருக்கு
கொடி அணி நெடு மதிலும் வாசலில் வானவரும் வைக்குமா போலேயும்
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்துக்கு
பதாகாபிர் அலங்க்ருதாம் –தத்ர காஷாயி நோ வ்ருத்தான் என்று
கொடியும் காவலும் கடை கட்டினால் போலேயும் –

வாசல் காப்பானே
கொடியும் தோரணமும் அசேதனம் ஆகையால் அழைக்க மாட்டாது –
உள்ளுக் கொண்டு புகாது –
நீ சேதனனான வாசி நாங்கள் பெற வேண்டாவோ –

அர்ஜுனன் ஸூபத்ரையைக் கொண்டு போகக் கடவன் என்று
வாசல் காக்கும் முதலைகளை அனுமதி பண்ணி இருங்கோள் என்று அருளிச் செய்து வைத்தால் போலே
இவனுக்கும் பெண்கள் புகுரக் கடவர்கள் என்று கிருஷ்ணன் சொல்லி வைக்கும்
அத்தாலே இவன் நம்மை உள்ளும் புக அனுமதி பண்ணும் என்று இருக்கிறார்கள் –

மணிக் கதவம்
மாமன் மகளே மணிக் கதவம் -என்று
பெண்கள் மாளிகை எல்லாம் மணிக் காதவமாம் படி சாதரம்யம் கொடுக்கிற
கிருஷ்ணன் மாளிகை வாசல் மணிக் கதவமாகச் சொல்ல வேணுமோ

மணிக் கதவம்
பூவியில் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டு-(திருவாய் -6 -7) புற வாயில் போக்யதை வாசலில் வர ஒட்டாது –
கார்ய வசத்தால் வருந்தி வாசலில் வந்தவர்களை –
சதத் அந்தப்புர துவாரம் என்று வாசல்
தன் அழகால் உள்ளுப் புகுவாரைக் காற்கடைக் கட்டும் –

அவன் புக்காரை புறப்படாத படி நுழையும் சிந்தையராக்கி-(திருவாய்- 6-5-5) கால் கட்டும் தன் போக்யத்தையாலே –
உள்ளுப் புகும் போது ஒரு வண்ணம் சென்று புக வேணும் -(திருவாய் -6-1 )
உள்ளுப் புக்கால் –
மற்று ஒன்றினைக் காணாவே என்னப் பண்ணும் –

மணிக் கதவம் தாள் திறவாய்
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு (பெரிய திருமொழி )-என்னுமா போலே
கதவில் போக்யதையில் நெஞ்சும் கண்ணும் பிணிப்பு உண்ணாமல் திறந்து உள்ளே விடுகிறிலையே –

தாள் திறவாய் -என்றவாறே –
மத்திய ராத்திரியிலே வந்து திறக்க அழைக்கிறவர்கள் தான் யார் பயம் மிக்க தேசத்திலே என்ன

பயாநாம அபஹாரி இருந்த தேசத்தில் பயம் என் என்ன –

த்ரேதா யுகம் ஆகையால் காலமும் நல்லடிக் காலமுமாய் –
தமப்பனார் ஸம்ப்ராந்தகனுமாய்
பிள்ளைகள் தாமும் ஆண் புலிகளாய் –
அவர்கள் தான் வழியே போய் வழியே வருமவர்களாய்-
ஊரும் திரு அயோத்யையாய் –
அஞ்சாதே பாலில் உண்டு பனியில் கிடக்கிறதோ

காலம் கலிக்குத் தோள் தீண்டியான த்வாபராந்தமாய் –
தமப்பனார் சாது ஸ்ரீ நந்தகோபராவது –
இவர்கள் சிறு பிள்ளைகளாவது –
அதிலே தீம்பாராவது –
ஊர் இடைச்சேரி யாவது –
அது தான் கம்சன் படை வீட்டுக்கு அணித்தாய் –
அவனுக்கு இறை இறுக்கும் ஊராவது
கம்சன் தான் சத்ருவாவது –
எழும் பூண்டு எல்லாம் அசுர மயமாவது –
ஆன பின்பு பயம் கெட்டோ இருக்கிறது

பயப்பட வேண்டும் இடத்தில்
மத்திய ராத்திரியில் கதவு திறக்கச் சொல்லுகிறவர்கள் தான் யார் என்றான் –
எங்களுக்கு அஞ்ச வேணுமோ -நாங்கள் பெண் பிள்ளைகள் அல்லவோ என்ன –

சூர்ப்பணகை ஸ்த்ரீ அன்றோ –
அஞ்சுவன் வெஞ்சொல் நங்காய்-(பெரிய திருமொழி 3-7)என்று
பிற்பாடாரும் (பரகால நாயகி )கூட அஞ்சும் படியாக அன்றோ அவள் நலிந்தது-
ஒரு மாளிகையும் வாசல் காப்பாரும் இல்லாமை அன்றோ என்ன –

அவள் ராக்ஷஸி -நாங்களோ இடைப்பெண்கள் அன்றோ என்ன

பூதனை இடைச்சி அன்றோ -இடைச்சிகளுக்கு அன்றோ மிகவும் அஞ்ச வேண்டுவது என்றான்

ஆயர் சிறிமியரோமுக்கு
இவனுக்கு என் வருகிறதோ என்று வயிறு பிடிக்கும் இடையருக்கு பிறந்த க்ருத்ரிமம் அறியாத கன்னிகைகள் அன்றோ –
எட்டும் இரண்டும் அறியாத எங்கள் பருவத்தைப் பாராய் –
பூதனையைப் போலே தனித்து வந்தோம் அல்லோம்
அஞ்சு லக்ஷம் குடியில் பெண்கள் எல்லாரும் கூடி அன்றோ வந்தது -என்று -ஆயர் சிறுமியரோம் -என்கிறார்கள்

பாலைகள் என்ன ஒண்ணுமோ –
கன்றாய் அன்றோ வந்து நலியப் பார்த்தது –
பருவம் கொண்டு விசுவசிக்க ஒண்ணாது
உங்கள் வார்த்தையிலே அறியலாம் -வந்த கார்யம் சொல்லுங்கோள் என்றான் –

அறை பறை
நோன்புக்கு பறை வேண்டி வந்தோம் என்று தங்கள் மௌக்யம் தோற்ற சொன்னார்கள்

பறை வேண்டி வந்தோம் என்றவாறே –
அதுவாகில் திருப் பள்ளி உணர்ந்த வாறே விண்ணப்பம் செய்து தருகிறோம் நில்லுங்கோள் என்றான்

மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்
நீ இன்று அறிவிக்க வேண்டாத படி நென்னேற்றே தருவதாக அருளிச் செய்தான்

மாயன் –
பெண்கள் கோஷ்ட்டியில் தாழ நின்று கையைக் காலைப் பிடித்துப் பரிமாறின படி

மாயன்
எங்களுக்கு இஷ்ட விநியோக அர்ஹனானவன்

மணி வண்ணன்
தாழ நில்லாதே அபவ்யனாய் காதுகன் ஆனாலும் விட ஒண்ணாத வடிவு அழகை யுடையவன்

மணி வண்ணன்
இவர்களைக் கிடந்த இடத்திலே கிடக்க ஒட்டாதே இப்படி படுத்துகிற வடிவு அழகு

நென்னலே –
இப்படி நிவாரகர் இன்றிக்கே கிட்டி அனுமதி கொள்ளப் பெற்ற நென்னேற்றும் ஒரு நாளே
இன்று உன்னை அனுமதி கொள்ளுகைக்கு உன் கால் பிடிக்க வேண்டுகிற இன்று போலேயோ
அவன் காலைக் கையைப் பிடிக்க இருக்கும் நென்னேற்று நாள்
எங்களுக்கு சர்வ ஸ்வ தானம் பண்ணின நாள்

வாய் நேரந்தான்
நென்னலே வாய் நேரந்தான்
திருமூளையினன்று நென்னேற்றை கையார் சக்கரமும் ஒரு நாளே என்னுமா போலே

மணி வண்ணன் –வாய் நேரந்தான் –
பூவலரும் போதை நெகிழ்ச்சியால் பிறக்கும் செவ்வி போலே
வார்த்தை அருளிச் செய்கிற போது பண்ணின ஸ்மிதமும்
நின்ற நிலையும்-வடிவும் -இருந்த படி காண் –
வாக்மீ ஸ்ரீ மான் —
சோதி வாய் திறந்து –(9-2 )

நேர்ந்தான்
ஓலக்கத்திலே ஒரு வார்த்தை அருளிச் செய்தானாகில் -அத்தை மெய் என்று இருக்கவோ –
அந்தரங்கமாகச் சொல்ல வேண்டாவோ -என்றான்

சொல்லாது ஒழிந்தவன்-செய்யலாவது இல்லை –
இத்தனை சொன்ன பின்பு அவன் வார்த்தையில் பழுது உண்டோ
ராமோ த்விர் நாபிபாஷதே —
அன்ருதம் நோக்த்த பூர்வம் மே —
ந மே மோகம் வசோ பவேத் -என்றும்
செய்ய நினைக்கிலேன் ஆகில் சொல்லான் –
சொன்னான் ஆகில் தப்பாது –

அவன் உங்கள் கார்யம் செய்கிறோம் என்றான் ஆகிலும் எங்களை இங்கு வைத்ததுக்கு பிரயோஜனம் வேண்டாவோ
பத்து எட்டு திரு முகம் மறுக்கப் பெற்று உடையோம் அன்றோ நாங்கள் –
எங்கள் பணிக்கு அவனோ கடவான்-
ஆராய இருக்கிற எனக்கு உங்களுடைய அகவாய் அறிய வேண்டாவோ
உங்கள் நினைவு தெரியாதே ஆராய்ந்து அன்றி விடேன் என்றான்

தூயோமாய் வந்தோம்
நாங்கள் ஆராய வேண்டும் படி வந்தவர்கள் அல்லோம் —
உனக்கு அங்கன் பயப்பட வேண்டும் படி பாவ தோஷம் இல்லை
எங்கள் தலையிலும் ஒன்றும் கிடக்க வந்தோமும் அல்லோம் –
அவனுடைய ரக்ஷையும் அவனுடைய பிரயோஜனமும் ஒழிய
ஸ்வ யத்னமாதல்
ஸ்வ பிரயோஜனமாதல் பற்ற வந்தோமும் அல்லோம் –
உபயாந்தரங்களைக் கொண்டு பெறுவாரும் அல்லோம் –
பிரயோஜனாந்தரங்களைக் கொண்டு அகல்வாரும் அல்லோம் –

தூயோமாய் வந்தோம்
தூய்மை யாவது தான்
சிலவற்றை ஏறிட்டுக் கொள்ளாதே நம்முடைய ரக்ஷை அவனாலேயே என்று இருக்கை
ராவண பவனத்தை விட்டுப் போந்தவன் வழியிலே முழுகி வந்தான் என்று இல்லையே –
தூசி ஏறின படை நடுவே நின்று இறே பரம ரகஸ்யம் கேட்டது

தூயோமாய் வந்தோம்
திருவடி -திருவாழி மோதிரமும் -தன் வடிவும் காட்டாதே மிடற்று ஓசை காட்டி விசுவசித்திப்பித்தால் போலே
இவர்களும் தங்கள் ஆர்த்த த்வனியைக் காட்டுகிறார்கள்
ஹனுமான் விலலாபஹ –
உவாஸ பிராணா தச்ச மஹா நேஷ –ஸ்வ ரேண மஹாதா மஹான் -என்று ஆர்த்த நாதம் கேட்டவாறே
ஆநயைநம் -என்றும்
அஸ்மாபிஸ் துலயோ பவது -என்னவும் பண்ணிற்று இறே

(அவனிலும் தண்ணியன்-அவன் பிறந்த வயிற்றில் பிறந்தேன் என்று சொல்லிக் கொண்டான் விபீஷணன்
இவர்கள் தூயோமாய் வந்தோம்
அவன் அசுத்தியும் இவர்கள் சுத்தியும் கார்யகரம் இல்லை
அவன் நினைவே கார்யகரம் ஆகும் )

வந்தோம் –
எங்கள் வரவிலே தெரியாதோ பாவ சுத்தி –
இங்கு வர்த்திக்கிற உனக்கு அடைவு தெரியாமை இல்லையே
அவன் செய்யக் கடவதை நாங்கள் செய்தோம் –
எங்களை ஒத்த ஆர்த்தி உடையார் இருந்த இடத்திலே அவன் சென்று
கார்யம் செய்ய வேண்டி இருக்க நாங்கள் அல்லவோ வந்து கொடு நின்றோம் –

உங்கள் தூய்மை நாடி அறியும் படி நீங்கள் அநந்ய பிரயோஜனைகள் என்கைக்கு அடையாளம் சொல்லுங்கோள்-
உங்கள் ஆற்றாமை வந்த போதே பறையின் அளவுள்ள வென்றான் –

துயில் எழப் பாடுவான்
என்கிறார்கள் –
அவன் உணர்ந்து அருளும் போதை அழகுக்கும் மங்களா சாசனம் பண்ண வன்றோ நாங்கள் வந்தது –
பிரயோஜனாந்தர பரர்கள் அன்றோ ஓலக்கத்தில் புகுவார் –
அநந்ய பிரயோஜனர் இறே கண் வளர்ந்து அருளுகிற இடத்திலே புகுரப் பெறுவார் –

துயில் எழப் பாடுவான்
ச மயா போதிதஸ் ஸ்ரீ மான் -என்று
பிராட்டி உறங்குகிற படி கண்டு உகந்தாள்-
இவர்கள் உணரும் படி காண ஆசைப்படுகிறார்கள் –

உறகல் உறகல் -என்று உணர்ந்து இருப்பாரையும் உணர்த்தி அசிர்க்கும் பெரியாழ்வார்
பெண் பிள்ளைகள் உன்னையும் அசிர்ப்போம் சிலர் –
மடியாது இன்றே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான் -என்றும்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்து அருளாயே -என்றும்
எழுப்புமவர்களோட்டை வாசனையால் இப்போது பள்ளி உணர்த்த வந்தோம் –

இவர்கள் பாவ சுத்தியை அறிந்து குணக்ரஹணம் பண்ணி வைத்தே
இவர்கள் பேச்சு கேட்க்கைக்காக இன்னமும்
ஒரு நிலை நின்று புகுர விட வேண்டும் என்று நினைக்குமே-
அத்தை இவர்கள் பாவஞ்ஞஜை களாகையாலே அறிந்தார்கள்

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே –
நெஞ்சால் சில நல்லது நினைத்தாயாகிலும்
வாயாலே நெருப்பைச் சொரிந்தால் போலே நிஷேதியாது ஒழிய வேணும்-
இவர்களுக்கு இவன் வாயது இறே வாழ் நாள் –
வாசா தர்மம் அவாப்னுஹி-என்று ஒரு வாய்ச் சொல்லாலே
தண்ணீர் பந்தல் வைக்கலாய் இருக்க ஏன் தான் இழக்கிறாயே

மாற்றாதே –
என்று நிஷேதிக்கிறது என்ன பிராப்தி கொண்டு என்ன –
சேஷ பூதராய் இருப்பாரை முட்டத் தொடரலாமா பிரானே -என்கிறார்கள்

அம்மா –
பிரதான சேஷிகளை நாங்கள் அறிந்தோமோ –
த்வார சேஷிகள் அன்றோ எங்களுக்கு கடவர்கள்-
அவன் வாய் நேர்ந்தாலும் கார்யம் தலைக் காட்டித் தருவாய் நீ அன்றோ-
வத்யதாம் என்றவர்களே
அஸ்மா பிஸ் துல்யோ பவது-என்ன வேண்டிற்று இறே
தாநஹம் த்விஷத -என்றவன் –
ததாமி -என்றாலும் -நீங்கள் வேண்டாத இடத்தில் ந ஷமாமி -என்னும்

(அசுரர் யோனியில் தள்ளுவேன்
சரண் அடைந்தால் புத்தி யோகம் தருவேன்
அவனும் பாகவத அபசாரம் செய்தால் பொறுக்க மாட்டேன் என்றானே )

அம்மா
தாரா பித்ரு க்ருதா இதி -என்று நீ புக விட்டால் அன்றோ எங்களை உகப்பது
இவர்கள் அர்த்தித்தவத்தையும்-
தனக்கேற பாவ சுத்தியையும் கண்டவாறே
நான் நிஷேதிக்கிறேன் அல்லேன் –
தள்ளிக் கொண்டு புகுருங்கோள் என்றான்

நீ-நேச நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்-
அது உன்னிலும் பரிவுடைய கதவு -எங்களால் தள்ளப் போகாது –
நீயே திறக்க வேணும் –
இவன் விலக்குகிறது ஸ்நேஹத்தாலே யானால் தள்ளப் போகாதே இருக்கிறது ஸ்நே ஹத்தாலே என்று இருக்கிறார்கள்
திறந்து கொள்வார் முகத்திலே அறையும் போலே –

கம்சன் பரிகரம் அடைய பிரதி கூலமாய் இருக்குமா போலே
திருவாய்ப்பாடியிலே சேதன அசேதன விபாகம் இன்றியிலே எல்லாம் அனுகூலமாய்த்து இருப்பது
அகால பலிநோ வ்ருஷா–அபி வ்ருஷா பரிம்லாநா –என்று அன்வய வியதிரேகங்களில்
ஹர்ஷ சோகம் உண்டானால் ஸ்நேஹம் உண்டாக்காத தட்டில்லை-

சகடத்திலே அசுரன் கிடந்தவோபாதி-
அனுகூலரும் சேதன சமாதியில் அங்குத்தைக்கு உறுப்பாவாறே

படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே என்னும் படியாய் கிடக்கிறாரோபாதி
நிலையும் கதவுமாய் நிற்பாரையும் கிடக்கும் இறே

நேச நிலைக் கதவம்
நிலையும் கதவும் பொருந்தின பொருத்தம் ஆகவுமாம் –
ஆன பின்பு நீயே திறந்து புகுர விட வேணும் என்கிறார்கள் –

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading