(ஸ்ரீ பெரும் புதூர் இப் பாசுரம் இரண்டு தடவை சேவிப்பார்கள்
அனந்தல் -ஆற்ற அனந்தல் -உறக்கம் -பேர் உறக்கம் -நான்கு பாசுரங்கள்
பிரதம ஸ்வ கத -பர கத -சரம ஸ்வ கத பர கத ஸ்வீ காரங்கள் நான்கையும் சொன்னவாறு –
எம்பெருமானார் -உலகு-உயிரை – உடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை –
நண்ணறு ஞானம் பெற்று நாரணற்கு ஆளானார் நம் அண்ணல் ஸ்வாமி வந்து தோன்றிய
அப்பொழுதே அனைத்தில்லத்தாரும் அறிந்தார்கள் அன்றோ -)
பெருமாளை பின் தொடர்ந்து நோக்கிக் கொண்டு திரியும் இளைய பெருமாளை போலே
கிருஷ்ணனை அல்லது அறியாதே பின் தொடர்ந்து
கிருஷ்ண விஷயத்தில் போரப் பரிவனாய் இருப்பான் ஒருவனுடைய தங்கை யாகையாலே
ஸ்லாக்யையாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –
ஸ்வ தர்மத்தை அனுஷ்டிப்பார்கள் உடைய பெண் பிள்ளையை எழுப்பிற்று கீழ்
இதில் ஸ்வ தர்மத்தை காற்கடைக் கொண்டவனுடைய தங்கையை எழுப்புகிறது-
அவர்களுடைய அனுஷ்டானமும்
இவனுடைய அநனுஷ்டானமும் உபாயம் அன்று –
யாது ஓன்று உபேயத்தை தர வற்றது அது இறே உபாயம் –
விடச் சொன்னவையும் பற்றச் சொன்னவையும் அன்று இறே உபாயம் –
விடுவித்து பற்றுவித்தவன் இறே உபாயம்
கனைத்திளம் கற்று எருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்
பனித் தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித் தான் எழுந்திராய் யீதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்-
பதவுரை
இள கன்று எருமை-இளங்கன்றுகளையுடைய எருமைகளானவை
கனைத்து–(பால் கறப்பார் இல்லாமை யாலே) கதறிக் கொண்டு
கன்றுக்கு இரங்கி–(தன்) கன்றின் மீது இரக்கமுற்று
நினைத்து–(கன்று ஊட்டுவதாக) நினைத்து (அந்நினைவினால்)
முலை வழியே நின்று பால் சோர-முலை வழியால் இடைவிடாமல் பால் பெருக, (அப்பெருக்கினால்)
இல்லம்-வீட்டை
நனைத்து – (முழுவதும்) ஈரமாக்கி
சேறு ஆக்கும் நல் செல்வன்-சேறாகப் பண்ணுகையாகிற சிறந்த செல்வத்தை யுடையவனுடைய
கிருஷ்ண கைங்கர்யமாகிய நல்ல செல்வம் உடையவன்
தங்காய்-தங்கையானவளே!
பனி-பனியானது
தலை வீழ-எங்கள் தலையிலே விழும்படி
நின் வாசல் கடை பற்றி-உனது மாளிகையின் வாசற் கடையை அவலம்பித்துக் கொண்டு,
பந்தல் நிற்க தண்டியம் கட்டி இருக்க அத்தைப் பற்றி
சினத்தினால்-(பிராட்டியைப் பிரித்தான் என்னுஞ்) சீற்றத்தினால்
தென் இலங்கை கோமானை-தென் திசையிலுள்ள லங்காபுரிக்கு அரசனான இராவணனை
தென்-திருவடி மதித்த ஐஸ்வர்யத்தைச் சொன்னபடி
செற்ற-கொன்றொழித்தவனும்
மனத்துக்கு இனியானை–சிந்தனைக்கு இனியனுமான இராம பிரானை
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் கண்ணனுக்கு இவள் கொடுக்கும் பட்டம்
பாடவும்-(நாங்கள் பாடா நிற்கச் செய்தேயும்
நீ-நீ
வாய் திறவாய்-வாய் திறந்து பேசுகிறாயில்லை,
இனித் தான்-எங்களாற்றாமையை அறிந்து கொண்ட பின்பாகிலும்
எழுந்திராய்-எழுந்திரு;
ஈது என்ன பேர் உறக்கம்-இஃது என்ன ஓயாத தூக்கம்?
அனைத்து இல்லத்தாரும்-(இச் சேரியிலுள்ள) எல்லா வீட்டுக் காரர்களாலும்
அறிந்து-(நாங்கள் உன் மாளிகை வாசலில் திரண்டு நிற்கிற விது) அறியப் பட்டதாயிற்று:
கனைத்து
உதாரர் கொடுக்கப் பெறா விட்டால் (துன்பம் )படுமா போலே –
ஆஸ்ரிதர் கார்யம் செய்யப் பெறா விட்டால் –
ரிணம் ப்ரவ்ருத்தம் -என்னுமா போலே ஈஸ்வரன் –
ப்ராப்த காலத்திலேயே கறப்பார் இல்லாமையாலே முலை கடுத்து –
இவ் வாசலிலே கன்று காலியாய் நாம் பட்டதோ என்று குமுறி
கறக்க வேண்டும் போதிலே இவற்றைக் கறவாதே
காற்கடைக் கொள்ளுவான் என் என்னில்
இளைய பெருமாளுக்கு அக்னி காரியத்தில் அந்வயம் உண்டாம் அன்று
இவனுக்கு இவற்றினுடைய ரக்ஷணத்தில் அந்வயம் உள்ளது –
இளைய பெருமாளுக்கு பெருமாளை பிரிய மாட்டாமையாலே –
இவன் கிருஷ்ணனை பிரிய மாட்டாமையாலே –
(சயமே அடிமை கோதில் அடியார் பிரியா அடியார் -மூன்றும் உண்டே )
இப்படி பகவத் விஷயத்தில் ப்ரேமத்தாலே பிரிய அவசரம் இல்லாமை –
ஸ்வ தர்மத்தை அனுஷ்டியாது ஒழிகை –
விடுகை யாவது -அல்லது –
ஆலஸ்யத்தாலே(சோம்பலால் ) விடுமது விடுகை என்று –
தொழில் எனக்குத் தொல்லை மால் தன் நாமம் ஏத்தப் பொழுது எனக்கு மற்றதுவே போதும் -என்னும் படியே –
தொழில் எனக்கு தொல்லை மால் தன் நாமம் ஏத்த
பொழுது எனக்கு மற்றதுவே போதும் -கழி சினத்த
வல்லாளன் வானவர் கோன் வாலி மதன் அழித்த
வில்லாளன் நெஞ்சத்து உளன் தொழில் எனக்கு -நான்முகன் திருவந்தாதி–85–
இளம் கற்று எருமை
இளம் கன்றான எருமை என்னுதல்-
இளம் கன்றை யுடைய எருமை என்னுதல் –
இரண்டாலும் பாடு ஆற்றாமை சொன்ன படி
கறவா மட நாகு தன் கன்று உள்ளினால் போலே-(7-1) என்னக் கடவது இறே
(அங்கு கன்று தாயை உள்ளினது
இங்கு எருமை கன்றை உள்ளினது )
கன்றுக்கிரங்கி
தன் முலைக் கடுப்பு கிடக்க கன்று என் படுகிறதோ -என்று இரங்கி-
எம்பெருமான் ஆஸ்ரித விஷயத்தில்
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி -என்று
அவன் படும் பாட்டுக்கு நிதர்சனமாய் இருக்கிறது –
அவன் எருமைகள் கறவா விட்டால் அவை படும் பாட்டை –
நாங்கள் உன் வாசலிலே வந்து நின்று புகுரப் பெறாமையாலே படா நின்றோம்
நினைத்து
மனஸா சிந்த யத்தரிம் -என்று (கஜேந்திரன்)நினைத்த அநந்தரம் –
த்வராயை நம -என்னும் படி திரு உள்ளம் அங்கே ப்ரவணம் ஆனால் போலே
(கஜேந்திர வரதன் நிலை போல் அன்றோ இந்த எருமை பாடு )
நினைத்து முலை வழியே நின்று பால் சோர–
கன்றை அகல கட்டி வைப்பார்கள் -அத்தை நினைத்து -பாவன பிரகர்ஷத்தாலே –
கன்று முலையிலே வாய் வைத்ததாகக் கொண்டு
கை வழியும் அன்றிக்கே –
கன்றின் வாய் வழியும் அன்றிக்கே
முலை வழியே பால் சொரியா நிற்கும் –
நின்று பால் சோர
மேகங்களுக்கு கடலிலே புக்கு முகந்து கொண்டு வர்ஷிக்க வேணும் —
அவ் வருத்தமும் இவற்றுக்கு இல்லை –
நினைவு ஊற்றாக சொரிகிற பால் ஆகையால் –
(அவன் சங்கல்பத்தாலே அனைத்துமே பண்ணுமா போல் )
நினைவு மாறாமையாலே –
திரு மலையிலே திரு அருவிகள் போலே பால் மாறாதே செல்லும்
பால் சோர-
பகவத் விஷயம் கேளாதே இருக்க தன் செல்லாமையாலே சொல்லுவாரைப் போலே –
அர்ஜுனன் கேளாதே இருக்க –
பூய ஏவ மஹா பாஹோ ஸ்ருணுமே பரமம் வச-என்றவன் தன்னைப் போலே
(பூய ஏவ மஹாபாஹோ ஸ்ருணு மே பரமம் வச:
யத்தேऽஹம் ப்ரீயமாணாய வக்ஷ்யாமி ஹிதகாம்யயா-ஸ்ரீ பகவத்கீதை–10-1-
ஸ்ரீபகவாநுவாச-பகவான் சொல்லுகிறான்,
மஹாபாஹோ-பெருந்தோளுடையாய்,
ப்ரீயமாணாய-மிகவும் அன்பு கொண்டவனான,
தே அஹம்-உனக்கு நான்,
ஹிதகாம்யயா-உன் நலம் கருதி,
யத் பூய ஏவ வக்ஷ்யாமி-எதை மீண்டும் கூறுவேனோ,
மே-என்னுடைய
பரமம் வச:-மிகவும் உயரிய அந்த வாசகத்தை,
ஸ்ருணு-கேள்.
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பெருந்தோளுடையாய், பின்னுமோர் முறை நான் சொல்லப் புகும் மிகவுயர் சொல்லினைக் கேளாய்;
நீ எனக்கு உகந்தவன்; ஆதலால், நினது நலம் வேண்டி இங்கதனை விளம்புவேன் நினக்கே )
நனைத்தில்லம் சேறாக்கும்
பால் வெள்ளம் இருக்கையாலும் –
எருமைகள் துகைக்கையாலும் சேறாய்க் கிடக்கும்-
இல்லம் சேறாக்கும்-
எத்தனையேனும் ஏறிப் பாயாதே மேடும் பால் வெள்ளத்தால் சேறான படி
கடலை அகழ் செய்து கொண்டு கிடந்தால்-
ஓடம் ஏறிப் புகுதல் –
சேற்றுக்கு அளற்றுப் பொடி இட்டுப் புகுதல் செய்ய வேண்டும் படி இருக்கை –
நற் செல்வன்-
கர்மத்தாலே யாதல் –
தேவதாந்த்ர பஜனத்தாலே யாதல் வரும் ஐஸ்வர்யம் அந்தவத்தாய் இருக்கும்
பெருமாளை பிரியாத இளைய பெருமாள் உடைய ஐஸ்வர்யம் போலே –
கிருஷ்ணனைப் பிரிய ஷமன் அன்றிக்கே
அவனை நோக்குகிற ஐஸ்வர்யம் இறே நிரந்தர சேவை போலே நிலை நின்ற ஐஸ்வர்யம் –
லஷ்மனோ லஷ்மி சம்பன்ன -கைங்கர்ய சம்பத் இறே
இவ் வாத்மாவுக்கு நிலை நின்ற சம்பத்து –
நதேவ லோகாக்ரமணம் -என்னும் படியே
ப்ராப்ய விரோதிகளில் நசை அற்ற படியால் தோற்றி மாயும் சம்பத் அன்றியிலே இருக்கை –
லஷ்மீ சம்பன்ன –
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -என்று ஆழ்வாருடைய கைங்கர்ய ஸ்ரீ
விசேஷஞ்ஞரோடே அவிசேஷஞ்ஞரோடே வாசி அற ஏறிப் பாய்ந்தது போலே –
இவனுடைய கைங்கர்ய ஸ்ரீயும் நாட்டுக்கு எல்லாம் குறை யற்று இருக்கை –
தங்காய்-
உங்களுக்கு ரஷ்ய வர்க்கத்தை நோக்காமை ஜென்ம சித்தம் இறே
நற் செல்வன் தங்காய் –
ராவணஸ்ய அனுஜோ பிராதா -என்று
தமையனுடைய தண்மை சொல்ல வேண்டாத ஏற்றம் உண்டு இறே உனக்கு –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானிலும்
அவன் மகளான த்ரிஜடை
பிராட்டிக்கு அடிமை செய்தது போலே
கிருஷ்ணனை நோக்கின தமையினில் காட்டிலும் எங்களை நோக்க வேண்டாவோ
கிருஷ்ணன் ரஷ்யமான போதே நாங்களும் அந்தர் பூதைகள் அன்றோ –
பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றிச்
ஆழி மழைக் கண்ணனில் வர்ஷிக்க நியமிக்கையாலே-மேல் வர்ஷமாக-
கீழ் பால் வெள்ளம் இட நின்று அலைகையாலே
தெப்பம் பற்றுவாரைப் போலே தண்டியத்தைப் பற்றிக் கொண்டு நின்றோம் –
ப்ராப்ய பூமியில் ஐஸ்வர்யம் இங்கே கை புகுரச் செய்தே
அவ் வருகே போகத் தேடுகிறது எங்களுடைய அபி நிவேச அதிசயம் இறே
ஈஸ்வரன் அபிநிவேசம் அறிந்து –
விள்கை விள்ளாமை விரும்பி உள் கலந்தார்க்கு (1-6-5 )தன்னைக் கொடுக்குமா போலே
இவர்கள் அபி நிவேசம் அறியும் அளவும் பேசாதே கிடக்க
அவள் நினைவு அறியாதே தங்கள் செல்லாமையாலே சொல்லுகிறார்கள்
கொள்கை கொளாமை இலாதான் எள்கல் இராகம் இலாதான் –
விள்கை விள்ளாமை விரும்பி –உள் கலந்தார்க்கு ஓர் அமுதே —-திருவாய்மொழி-1-6-5-
சினத்தினால்
பெண்களுக்காகில் சேர்க்கைப் பல்லி போலே கிருஷ்ண விருத்தாந்தம் சொல்லுகை பணி இறே
அதவா கிம் ததா லாபை-என்று
பெண்களை தீரா மாற்றமாக நெஞ்சாரல் படும் படி பண்ணுமத்தை நினைத்து கிடக்கிறாள்
உண்ணாது உறங்காது –
அனித்ரஸ் சததம் ராம (நைவ தம்சான் ந மசகான்–-சுந்தர -36-44)-என்று
பெண்களை பிரிந்தால் ஊணும் உறக்கமும் இன்றிக்கே
பெண் பிறந்தார்க்கு தஞ்சமான சக்கரவர்த்தி திருமகனை சொல்லுவோம் இவள் எழுந்து இருக்கைக்காக என்று
ராம விருத்தாந்தத்தை சொல்லுகிறார்கள் –
உண்ணாது உறங்காது* ஒலிகடலை ஊடறுத்துப்*
பெண் ஆக்கை யாப்புண்டு* தாம் உற்ற பேது எல்லாம்*
திண்ணார் மதில் சூழ்* திருவரங்கச் செல்வனார்*
எண்ணாதே தம்முடைய* நன்மைகளே எண்ணுவரே*
விரோதிகளைப் போக்கி நமக்கு உபகரித்தானாய் இருக்கும் கிருஷ்ணனைப் போல் அன்றிக்கே –
ஆஸ்ரித விரோதிகளை போக்குமது தன் சினம் தீர்ந்தானாக நினைத்து இருக்கை –
தண்ணீர் போலே இருக்கிற சக்கரவர்த்தி திரு மகனுக்கும் சினம் உண்டோ என்னில் –
தன் திரு மேனியில் அம்பு பட்ட போது ஆறி இருந்தார் –
திருவடி மேலே அம்பு பட்ட போது சீறினான் இறே –
ததோ ராமோ மஹா தேஜோ ராவணேன க்ருத வ்ர்ணம் த்ருஷ்ட்வா ப்லவக சார்த்தூலம் கோபஸ்ய வசமே இவான்
ததோ ராமோ மஹா தேஜோ -திருவடி மேல் அம்பு பட்ட அநந்தரம்
நீரிலே நெருப்பு எழுந்தால் போலே பெருமாள் அநபிபவ நீயரானார்
ராவணேன க்ருத வ்ர்ணம் த்ருஷ்ட்வா -தான் பருவம் நிரம்பாத காலத்தில் பண்ணிக் கொண்டது அன்றிக்கே
தரம் அல்லாத ராவணனால் நோவு படக் கண்டவாறே
ப்லவக சார்த்தூலம் -திருவடி தன் மேல் அம்பு படப் பட
வர்ஷம் காணப் பணைக்கும் பதார்த்தங்கள் போல்
மேநாணித்து கொடுத்தான் –
கோபஸ்ய வசமே இவான்-திருவடி -தரம் அல்லாத ராவணன் கையிலே புண் பட்டவாறே
க்ரோதம் ஆஹாரயத் என்று இருக்கக் கடவ தாமும்
கோபம் இட்ட வழக்கானார்
ஆஸ்ரித கார்யம் என்றும் தம் கார்யம் என்றும் இரண்டு அன்று –
மஹா ராஜர் சீற்றம் பிறந்து வாலியைக் கொல்ல வேணும் என்ற போது எய்தார்
அவனுக்கு ஸவ்ப்ராத்ரம் பின்னாட்டி கண்ண நீர் பாய்ந்த வாறே தாமும் கூட அழுதார் –
தென்னிலங்கை
பையல் செய்த அநீதியை நினைத்து பறைச் சேரி பறைச் சேரி -என்பாரைப் போலே –
அத் திக்குக்கும் அஸஹ்யமான படி
தென்னிலங்கை கோமானைச் செற்ற
யத் யதர்மோ ந பலவான்-என்றும் –
அஹோ வீர்யம் அஹோ ரூபம் -என்றும் -திருவடி மதித்த ஐஸ்வர்யம் இறே
ஓர் அம்பாலே தலையைத் தள்ளி விடாதே –
படையைக் கொன்று –
புத்ர பவித்ராதிகளை தலை சாய்த்து
ஆயுதங்களை முறித்து –
அரக்கர் தங்கள் கோன் போலும் -என்கிற அபிமானத்தை அழித்து-
பட்ட எளிவரவு எல்லாம் அறிவிப்பார் இல்லாத படி தரம் கெடுத்து நெஞ்சாரால் படுத்திக்க கொன்ற படி
தான்போலு மென்றெழுந்தான் தரணி யாளன் அதுகண்டு தரித்திருப்பா னரக்கர் தங்கள்,
கோன்போலு மென்றெழுந்தான் குன்ற மன்ன இருபதுதோ ளுடன்துணித்த வொருவன் கண்டீர்,
மான்போலு மென்னோக்கின் செய்ய வாயார் மரகதம் போல் மடக்கிளியைக் கைமேல் கொண்டு,
தேன்போலு மென்மழலை பயிற்றும் நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.
மனம் ராவணன்- விவேகம் சரம் -பத்து தலை பத்து இந்திரியங்கள்
யோ வஜ்ரா பாத அசனி சந்நிபா தான் நசு ஷூ பே நாபி சசால ராஜா -ச ராம பாணாபிஹதோட் ரு சார்த்தச்-
சசால சாபஞ்ச முமோச வீர மாதங்க இவசிம் ஹேந கருடே நேவ பன்னக
அபிபூதோ பவத் ராஜா ராகவேண மஹாத்மனா -கச்சா நுஜானா மிரனார்த்தித்த ஸ் த்வம் பிரவிசய ராத்ரிஞ்ச ரராஜா லங்காம்
ஆசுவாஸ்ய நிர்யாஹிர தீச தன்வீத தா பலம் த் ரக்ஷ யசி மே ரதஸ்த
(சசால சாபஞ்ச முமோச வீர-ராமன் முன் கதி அற்று வில் இல்லாமல் வெறும் கையாக இருந்தால் வீரன்
சிங்கம் யானை -கருடன் பாம்பு போல்
இன்று போய் நாளை வா )
மனத்துக் கினியானைப்
அர்த்திகள் ஒருத்தன் பக்கல் பெறா விட்டால் –
சொல்லாய் சீமான் என்னுமா போலே பெண்களை ஓடி இருந்து துடிக்க இட்டு வைத்து
பின் இரக்கம் இன்றிக்கே துடிப்பைக் கண்டு இத்தனை கண்ண நீரும் விழ விடாதே
படு குலை படிக்கும் தீம்பனான கிருஷ்ணனைப் போல் அன்றிக்கே
ரீபூணாம் அபி வத்சலனாய் சத்ருக்களுக்கும் கூட கண்ண நீரை விழா விடுபவனை அன்றோ பாடுகிறது
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்-என்று
நம்மை நலியும் கிருஷ்ணனுடைய பேரையும் காற்கடைக் கொண்டு
இத உபரி ம்ருத சம்ஜிவனம் ராம வ்ருத்தாந்தம் (பராசர பட்டர் )-என்னும் படியே
கிருஷ்ண விரஹத்தாலே கமர் பிளந்த நெஞ்சு பதம் செய்யும் படிக்காக
சக்கரவர்த்தி திருமகனைப் பாடச் செய்தேயும் போன உயிர் மீளும்படியானவனை பாட வாய் திறக்கின்றிலை –
உயிர்க்கு அது காலன் என்று* உம்மை யான் இரந்தேற்கு நீர்*
குயில் பைதல்காள்* கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்*
தயிர்ப் பழஞ்சோற்றொடு* பால் அடிசிலும் தந்து* சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர்* பண்பு உடையீரே! –9-5-8-
வேம்பேயாக வளர்த்தாள்-என்று
பெற்ற தாயையும் குற்றம் சொல்லும் படி இறே இவன் படி
கௌசல்யா லோக பார்த்தாராம் -என்று
பெற்றவளையும் கொண்டாடும் படி இறே அவன் படி –
வெற்றிக் கருள கொடியான்றன் மீமீ தாடா வுலகத்து
வெற்ற வெறிதே பெற்ற தாய் வேம்பே யாக வளர்த்தாளே
குற்ற மற்ற முலை தன்னைக் குமரன் கோலப் பணைத் தோளோடு
அற்ற குற்ற மவைதீர அணைய வமுக்கிக் கட்டீரே–நாச்சியார்
பாடவும் நீ வாய் திறவாய்
பிறர் அநர்த்தத்துக்காக நீ விசேஷஞஜை யாவதே –
எங்களுக்காக அன்றிக்கே
உன் ஹர்ஷத்துக்காக போக்கு விட வேண்டாவோ
இனித் தான் எழுந்திராய்
எங்கள் ஆர்த்திக்கு உணரா விட்டால்
உன் பேற்றுக்கு உணர வேண்டாவோ –
எங்கள் ஆற்றாமையை அறிந்த பின்பும் எழுந்திராது ஒழிவதே
யீதென்ன பேருறக்கம்
வைதிகமும் இன்றிக்கே
லௌகீகமும் இன்றிக்கே இருபத்தொரு உறக்கம் உண்டாவதே –
பரார்த்தமாக
உலகு எல்லாம் நன்கு ஒடுங்க உறங்கும்
ஈஸ்வரன் உறக்கமும் இன்றிக்கே
தாபார்த்தராய்
தமோ குண அபிபூதராய் கிலேசம் போக உறங்கும்
சம்சாரிகள் படியும் இன்றிக்கே
இரண்டிலும் வியாவிருத்தமாய்-
இது ஒரு பத்தொன்பதாம் பாஷையாய் இருந்ததீ
பிறர் ஆர்த்திக்கு த்வரித்து உணருமவன் உடன் பழகி வைத்தும்
இங்கனம் உறங்குவதே
அனைத்து இல்லத்தாரும்
பர ஸம்ருத்தியே ஏக பிரயோஜனம் ஆகையால்
பாலைகளாய் இருப்பாரும் உணர்ந்து வர வேணும் என்று இருக்கிறாயாகில் –
அது எல்லாம் செய்தற்றது –
நாங்கள் உன் வாசலில் வந்து எழுப்பவும் நீ சிறிது போதும் உணராது ஒழியவும் –
இத்தால் வந்த மதிப்பு எல்லாரும் அறிய வேணும் என்று இருந்தாயாகில் –
அது எல்லாரும் அறிந்தது
இனித் தான் எழுந்திராய்-
பகவத் விஷயம் ரகஸ்யமாக அனுபவிக்கும் இத்தனை –
புறம்பு இதுக்கு ஆள் உண்டோ என்று கிடக்கிறாய் ஆகில்
பெண்களையும் கிருஷ்ணனையும் சேர ஒட்டாத ஊரடைய ப்ரஸித்தமாய்த்து என்றுமாம்
எம்பெருமானார் அவதரித்தது போலே காணும் இப் பெண் பிள்ளையும் –
————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply