இத் திரளுக்கு எல்லாம் நிர்வாஹகையாய் –
எல்லார்க்கும் முன்னே உணர்ந்து
எல்லாரையும் எழுப்பக் கடவேன் என்று சொல்லி வைத்து
அத்தை மறந்து
சுருக்கம் ஒழிய உணர்ந்து கிடக்கிறாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –
(பாசுரத்தில் இன்னும் தூங்கிக் கொண்டு இருப்பதாக இல்லையே –
எழுந்திராய் என்பதால் தூங்கிக் கொண்டு இருப்பது ஸூசகம்
சுருக்கம் ஒழிய -குறை இல்லாமல் )
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்
தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்-
பதவுரை
உங்கள் புழைக்கடை தோட்டத்து வாவியுள்-உங்கள் (வீட்டுப்) புழைக்கடைத் தோட்டத்திலிருக்கிற தடாகத்திலுள்ள
செங் கழுநீர்-செங்கழுநீர்ப் பூக்களானவை
வாய் நெகிழ்ந்து-விகஸிக்க,
ஆம்பல் வாய் கூம்பின-ஆம்பல் மலர்களின் வாய் மூடிப் போயின;
(அன்றியும்,)
செங்கல் பொடி கூறை வெண் பல் தவத்தவர்–காவிப் பொடியில் (தோய்த்த) வஸ்திரங்களையும் வெளுத்த
பற்களையுமுடையராய் தபஸ்விகளாயிருந்துள்ள ஸந்நியாஸிகள்,
தங்கள் திருக் கோயில் சங்கு இடுவான்-தமது திருக் கோயில்களைத் திறவு கோலிட்டுத் திறக்கைக்காக
போகின்றார்–போகா நின்றனர்;
எங்களை-எங்களை
முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய்-முந்தி வந்து எழுப்புவதாகச் சொல்லிப் போன நங்கையே!
நாணாதாய்-(‘சொன்னபடி எழுப்ப வில்லையே!’ என்னும்) வெட்கமுமில்லாதவளே
நா உடையாய்-(இனிய பேச்சுக் பேச வல்ல) நாவைப் படைத்தவளே!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தட கையன்-சங்கையும் சக்கரத்தையும் தரியா நின்றுள்ள விசாலமான திருக் கைகளை யுடையவனும்
பங்கயக் கண்ணனை-தாமரைபோற் கண்ணனுமான கண்ண பிரானை
பாட-ப்ரீதிக்குப் போக்குவீடாக பாடுகைக்கு
எழுந்திராய்-எழுந்திரு;
ஏல் ஓர் எம் பாவாய்!
நாங்கள் வந்து உன் வாசலிலே நிற்க எழுந்து இராதே ஒழிவதே என்ன –
விடிவுக்கு அடையாளம் என் –
எழுந்து இருக்கும் போது விட வேணுமே என்ன
(செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
வாவியுள்–செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
தோட்டத்து வாவியுள்–செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்–செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்–செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
இப்படி ஒவ்வொன்றாகக் கூட்டி வியாக்யானம் )
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்-
செங்கழு நீர் அலர்ந்து ஆம்பல் மொட்டிக்குமது அடையாளம் அன்றோ -என்ன
நீங்கள் இவ் வாசலிலே வந்த ப்ரீதி பிரகர்ஷத்தாலே உங்கள் கண்கள் அலர்ந்து –
நான் வார்த்தை சொல்லா விட்ட வாறே நீங்கள் வெறுத்து லஜ்ஜித்து வாய் மூடினதும்-
செங்கழு நீர் அலர்ந்ததாகவும் ஆம்பல் மொட்டிட்டதாகவும் தோற்றுகிறது என்ன –
அது ஊரிலது இறே-
வாவியுள் செங்கழு நீர் காண் என்ன —
வயல் எல்லாம் உலாவி -அலருவன அலர்த்தி
மொட்டிப்பன மொட்டுவிக்கை யன்றோ உங்களுக்கு இரவு எல்லாம் பணி என்ன
தோட்டத்து வாவியுள்
தடமணி வயல்களிலும் -(திருவாய் 10-1-1-திரு மோகூர் வயல்)
அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனிகளிலும் (பெரிய திருமொழி 7-5-10-தேரழுந்தூர் கழனி )உள்ளவை அல்ல –
தோட்டத்தில் அவை காண் என்ன —
அவ்விடங்களிலும் நீங்கள் உலாவினி கோளாம் அத்தனை என்ன
புழக்கடை தோட்டங்காள்–என்ன –
அத்தனை இடம் போக வேண்டாதே
அணித்தான அத்தனை அன்றோ என்ன –
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்-என்கிறார்கள் –
அஸூர்யம் பஸ்யமான உன்னுடைய தோட்டத்தில் வெய்யில் பட அன்றிக்கே –
கால பாகத்தாலே அலர்ந்தவையும் மொட்டைத்தவையும் அடையாளம் அன்றோ –
சோலைச் செறிவாலே உச்சிப்பட்டாலும்
ஆதித்ய ரஸ்மி காண ஒண்ணாத உன்னுடைய புழக்கடையில் அவை அன்றோ –
தாங்கள் புறம்பே உள்ளுப் புகுரப் பெறாதே நிற்கிறவர்கள் –
இவள் புழக்கடையில் அவை அலர்ந்தவை அறிந்தபடி என் என்னில்
புறம்பு உள்ளவை அலர்வன மொட்டிப்பன வானபடியைக் கண்டு
அநு மித்திச் சொல்லுகிறார்கள்
இவள் எழுந்து இராத இன்னாப்பாலே உங்கள் புழக்கடை -என்று
வேறு கூறிட்டுச் சொல்கிறார்கள் – –
நீர் நுமது -என்றும்
யானே என் தனதே -என்றும்
அஹங்காரம் மமகாராம் த்யாஜ்யமாக உணர்ந்தவர்கள் –
உங்கள் எங்கள் -என்கை விருத்தம் அன்றோ என்னில்
தேஹாத்ம அபிமானத்தால் வரும் அஹங்காரம் த்யாஜ்யம் ஆவதும்
பகவத் சம்பந்தத்தால் வரும்து உபாதேயம் ஆவதும் –
அச்யுத அஹம் தவ அஸ்மி சம்சார பேஷஜம் -என்றும் –
அபிமான துங்கன் செல்வனைப் போலே திருமாலே நானும் உனக்கு பழ அடியேன் -என்றும் –
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பி -என்றும் -சொல்லிற்று இற்று இறே
(ஆத்மஞானம் கை வந்த தால் -நீர் உன்னுடையது – அதுவே எனக்கு உத்தேச்யம்
என்றானே மின்னுடைய மடவார் பதிகத்தில்
சாத்விக அஹங்காரம் உபா தேயம் உத்தேச்யம் என்பதற்கு இந்த பிரமாணங்கள் )
பதார்த்தங்கள் ஆகின்றன –
கால க்ருத பரிணாமியாய் யன்றோ இருப்பது என்ன –
(ப்ராத)சந்த்யா சமயத்தில் படியாய் அன்றே
மத்திய ராத்திரியில் படி இருப்பது –
அலர உபக்ரமித்த மாத்திரமே கொண்டு கழிய அலர்ந்ததாகவும் –
மொட்டிக்கத் தொடங்கின போதே மொட்டித்ததாகவும்
உங்கள் த்வரையாலே பிரதம தசையில் இப்படியே தோற்றுகிறது –
இது ப்ராதர் லக்ஷணம் அன்று –
வேறு அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள் என்ன
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்-தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
தமஸ் பிரசுரரும் கூட உணரும் காலமாய்த்து -இது விடிவுக்கு உடல் அன்றோ என்கிறார்கள் –
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்-தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
அளற்றுப் பொடியில் புடைவையைப் புரட்டி –
இரவு எல்லாம் வெற்றிலை தின்று கிடந்து
ப்ரஹ்மசர்யமும் விரக்தியும் தோற்ற பல்லை விளக்கி
சபையார் பெரியவர்கள் கோமுற்றவர் தண்டம் கொள்வார் என்று
தபோ வேஷத்தை யுடையரான சிவ த்விஜரும் கூட பயப்பட்டு
உணர்ந்து தங்கள் தேவதைகளை ஆராதிக்கும் காலமாய்த்து
திருக் கோயில் -என்றது
அவர்கள் சொல்லும் படி —
சங்கு -என்று பரிகரத்துக்கும் கொத்துக்கும் உப லக்ஷணம்
சங்கிடுவான் என்றது குச்சி இடுவான் என்றுமாம்
தாமச பிரக்ருதிகளை சொல்லுகிறது -என்று எம்பார் –
தமஸ் பிரசுரர் உணர்ந்தார்கள் என்று சொல்லியோ எழுப்புவது என்று
அவள் நினைத்து இருக்கும் என்று
சத்துவ நிஷ்டரான ஸந்நியாசிகளை சொல்லுகிறது என்று திருமலை நம்பி –
யதஹரேவ விவ்ரு ஜேத் ததஹரேவ ப்ரவ்ரஜேத் (ஜாபால உபநிஷத் )–என்று
பரமாத்மனி யோரக்தோ விரக்த அபரமாத்மனி -என்று
பகவத் விஷயத்தில் சக்தராய்
இதர விஷயங்களில் விரக்தராய் -காஷாய வஸ்த்ரங்களைத் தவிர்த்து –
போக்கிய த்ரவ்யங்களில் விரக்தராய்
சாத்விகராய் இருக்கும் சந்நியாசிகள் சந்த்யா வந்தனங்களைப் பண்ணி
அகங்களிலே திருவாராதனம் பண்ணும் காலம் ஆயத்து என்ன
சததம் கீர்த்த யந்தோமாம்–நமஸ் யந்தச்ச மாம் பக்த்யா நித்ய யுக்தா உபாஸதே -என்றும்
அநவரதம் ஸ்நேஹத்தோடே உபாசிப்பவர்கள் என்றும் சொல்லப் படுபவர்கள்
விடிவோரே ஒருக்கால் சமாராதானம் பண்ணி
அல்லாத போது பேசாதே இருப்பார்களோ
இது விடிவுக்கு அடையாளம் அன்றே –
இது தான் பிரமாணமும் அன்றே -என்ன –
அதுக்கு உத்தரமாகச் சொல்லுகிறது மேல் –
எங்களை முன்னம் எழுப்புவான்-
தர்மஞ்ஞ சமய பிரமாணம் வேதாச் ச –யத்ய தாசரதி ஸ்ரேஷ்ட
(வேதமும் பிரமாணம் என்று இவர்கள் செயல்களே முக்ய பிரமாணம்-)என்றும் –
மேலையார் செய்வனகள் -என்னுமது பிரமாணமாக நீ சொன்னாயே
சாத்விக அக்ரேசசரையாய் இருக்கிற நீ எங்களை எழுப்புவதாகச் சொல்லி வைத்து
அத்தை மறந்து கிடந்து உறங்குகிறாய் அன்றோ
தர்மஞ்ஜையான உன்னுடைய சமயமும் பிரமாணம் அன்று இறே என்கிறார்கள் –
எங்களை முன்னம் எழுப்புவான் –
எல்லாரையும் நானே எழுப்புகிறேன் என்று சொன்னது உன் பக்கல் கண்டிலோமே
வாய் பேசும்
ஹிருதயத்தில் இல்லாதது வாயாலே பேசலாமோ தான் –
யுக்தி மாத்ரமேயாய் அனுஷ்டானம் இன்றிக்கே இருக்கை
நினைவும் சொல்லும் விபரீதமாய் இருக்கும்
கிருஷ்ணனோடு பழகிச் சேர்த்தியாய் இருக்கிற உனக்கு பொய் சொல்லுகை வம்போ –
நங்காய் –
உன்னுடைய லாபத்துக்கு நாங்கள் வேண்டாத படியாய் இருந்ததே இறே –
எங்களை ஒழிய நீ நிரபேஷையாய் இருந்தாய் இறே
எனக்கு உங்களை ஒழியச் செல்லாது -என்று இருந்தது எல்லாம் கண்டோம் இறே
சொல்லும் செயலும் சேராதார்க்கு ஒரு பூர்த்தியும் வேணுமோ –
இரண்டும் சேர்ந்த இடத்தில் அன்றோ பூர்த்தி உள்ளது
அது இல்லாத இடத்தில் ஆதித்யர்கள் பக்கல் ஒவ்பசாரிகமாகச் சொல்லும் பகவத் சப்தம் போலே அன்றோ
ஒரு காலும் பிரிகிலேன்(பெரிய திருமொழி – 7-4 )என்றதும் பொருள் இதுவோ
எழுந்திராய்
எங்கள் குறை தீர்க்க எழுந்திராய்
நாணாதாய்
நீ தான் எழுந்து இருக்க வேணுமோ –
நாம் பிற்பாடார் ஆனோமே என்று கிடந்த இடத்தே கிடந்து
சொன்ன படி செய்யப் பெற்றிலோமே என்று லஜ்ஜிக்கத் தான் பெற்றதோ –
நீ இருந்த ஊரிலே பூசணியும் காயாதோ –
ஹ்ரீ ரேஷா ஹி மமாதுல-(ராமபிரானே ரிஷிகள் இடம் வெட்கப்பட்டாரே )-என்னுமவனோடே அன்றோ உனக்கு வாசனை
எங்களை லஜ்ஜிப்பிக்கத்தான் பெற்றோமோ –
நாட்டார் அளவோ உனக்கு நாக்கு
நாவுடையாய்
என்னை ஷேபித்துக் கொண்டாகிலும் வருகிறது என் என்ன –
நாவுடையாய்
ந ரிக்வேத விநீ தஸ்ய ந யஜுர்வேத தாரிண -என்றும்
நூநம் வியாகரணம் க்ருத்ஸ்னம் -என்றும்
சம்ஸ்ரவே மதுரம் வாக்கியம் -என்றும்
நீ எல்லாம் படுத்தினாலும் உன் பேச்சின் இனிமை கேட்க்கும் படி நா வீறுடையவள் அன்றோ –
நான் உங்களுக்குத் செய்ய வேண்டுவது என் என்ன
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்-பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்
கிருஷ்ணன் திரு நாமங்களை பாட –
திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச சன்னியத்தையும் ஏந்தி அந்த ஸ்பர்சத்தால் வந்த
வளர்த்தியை யுடைய திருக் கைகளை யுடையனாய்
ஆழ்வார்களில் வந்து அலை ஏறி கிற திருக் கண்களையும் யுடையனான கிருஷ்ணனை
(தாமரைக்கண்ணன் -சுரி சங்கு ஆழி ஏந்தி –
தாமரை மலரவும் மொட்டிக்கவும் இவை இரண்டும் -அங்கு மலரும் குவியும்
கண் நாடு பிடிக்க வளர ஆழ்வார்கள் அளவும் நீண்டு இருக்குமே
ஆராவமுத ஆழ்வான் உத்சவர் இன்றும் சேவித்தால் சங்கு சக்கரம் காதுகளுக்கு அருகிலே இருக்குமே )
கூராழி வெண் சங்கு ஏந்தி —
ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் யுடைய அடிகளை –
ஆசைப்படப் பண்ணுமதுவும்
அறிவு கெடப் பண்ணுமதுவும் திவ்ய ஆயுதங்கள் யுடைய சேர்த்தியே இறே
பங்கயக் கண்ணானை
முற்பட பெண்களுக்கு தன்னை எழுதிக் கொடுத்து எழுத்து வாங்கப் பண்ணும் கண்கள் –
தூது செய் கண்கள் –
விடவே செய்து விழிக்கும் -(1-7)
கண்களுக்கு அற்றுத் தீர்ந்து –
ஜிதந்தே –
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகன் (2-6)-என்று
உபய விபூதியையும் தோற்பிக்கும் கண் அழகு யுடையவனை –
சந்த்ர ஆதித்யர்கள் சேர உதித்தால் போல் இருக்கிற இரண்டு திவ்ய ஆயுதங்களையும் கண்டு –
ஆங்கு மலரும் குவியும் என்கிற
திரு நாபீ கமலம் போலே திருக் கண்களும் அலருவதும் மொட்டிப்பதாகவுமாகா நிற்கும்
கிருஷ்ணன் கையில் ஆழ்வார்கள் யுண்டோ என்னில் –
எப்போதும் உண்டு –
அது பெண்களுக்குத் தோற்றும் –
ஆண்களுக்குத் தோற்றாது
உப ஸம்ஹர-என்றது உகாதார்க்கு கூசி இறே –
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய (1-2-)-என்று
யசோதை பிராட்டி தாலாட்டுகையாலே இவர்களுக்குத் தோற்றத் தட்டில்லை
(பெண்களுக்குத் தோற்றியதுக்கு பிரமாணம்
கம்சனை வதம் செய்யும் வரை மறைக்கச் சொன்னார்களே –
இயற்கையாகவே உண்டே )
பாட
உன் ப்ரீதிக்கு போக்கு விட்டுப் பாட –
ஒரு நீர்ச்சாவி போலே கிடக்கிற இத் திரள் உஜ்ஜீவிக்கும் படி வர்ஷியாய்
பங்கயக் கண்ணானைப் பாட
உத்காயாதீநாம் அரவிந்த லோசனம் –
(இந்த பாகவத ஸ்லோகத்திலும் பங்கயக் கண் உண்டே )
————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply