மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்– 21-30– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

கீழ் திரு உலகு அளந்து அருளின இடம் ப்ரஸ்த்துதம் ஆகையால் அப்படி வரையாதே பரிமாறும்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தைச் சொல்லுகிறார் –

அவனை ஒருவராலும் அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் –

(ஆ பால கோபாலர் அனைத்தவரையும் தீண்டி ஆஸ்ரித பாரதந்தர்யம் திரு உள்ளத்தில் பட இப்பாசுரம் உதயம் –
தந்தவக்த்ரனைக் கொன்றொழித்தவனுமான எம்பெருமானுடைய சேஷ்டிதம் பற்றி அருளிச் செயல்களில் மிகவும் குறைவாகவே உண்டு)

(எவ்வளவு உயரப் பேசினாலும் அவ்வளவுக்கு நிற்பவன் -எவ்வளவு குறைய பேசவே முடிந்தாலும் அதுக்குத் தக்க தன்னை அமைத்துக் கொள்கிறான்
அலங்காரம் -ஆபரண சேர்க்கை -ஆயுத சேர்க்கை -விரோதி நிரஸனம் -போன்றவை பேசி முடிக்க முடியாதே)

பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே
வாச மலர்த் துழாய் மாலையான் -தேசுடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு —21-

பதவுரை

வாசம் மலர் துழாய் மாலையான்–மணம் மிக்க புஷ்பங்களோடு கூடின திருத்துழாய் மாலையை அணிந்தவனும்
தேசு உடைய சக்கரத்தான்–தேஜஸ்ஸை யுடைய திருவாழியை ஏந்தினவனும்
சங்கினான்–ஸ்ரீபாஞ்சஜந்யத்தை யுடையவனும்
சார்ங்கத்தான்–சார்ங்க வில்லை யுடையவனும்
பொங்கு அரவம் வக்கரனை கொன்றான்–மிக்க ஆரவாரமுடையனாய் வந்த
தந்தவக்த்ரனைக் கொன்றொழித்தவனுமான எம்பெருமானுடைய
வடிவு–ஸ்வரூப ஸ்வபாவங்கள் (எப்படிப்பட்டவை யென்னில்)-படி எடுத்துக் காட்டும் படி அல்லவே -திரு மேனி அழகு என்றுமாம்
பேசுவர்–பேசுகின்றார்களோ
அவ்வளவே–அவ்வளவேயாம்.

பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே-
பேசுமவர்களுக்கு யாதொரு அளவுண்டு அவ்வளவு பேசிப் போம் அத்தனை
விஷயத்தைப் பரிச்சேதித்துப் பேசப் போகாது

வாச மலர்த் துழாய் மாலையான் –தேசுடைய-சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான்-
பரிச்சேதித்துப் போக ஒண்ணாமைக்கு இவை தனித் தனியே ஹேதுக்கள்

பொங்கரவ-வக்கரனைக் கொன்றான் வடிவு —
விஸ்திருதமான (பரந்து விரிந்த -வி ஸத்ருசமான -பொருந்தாத )சப்தத்தை யுடையனான தந்த வக்தரனைக்
கொன்றவனுடைய வடிவு பேசுவார் எவ்வளவு பேசுவார் அவ்வளவே –

யத்வா ஶ்ரமாவதி யதாமதி வாப்ய ஶக்த:
ஸ்தௌம்யேவமேவ கலு தே’பி ஸதா ஸ்துவந்த: |
வேதாஶ் சதுர்முக முகாஶ்ச மஹார்ணவாந்த:
கோ மஜ்ஜதோர் அணுகுலாசலயோர் விஶேஷ: ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் ஶ்லோகம் 8 –

அல்லது, சக்தியற்ற நான் சோர்வடையும் வரையிலோ எனக்குத் தெரிந்த அளவிலோ அவனைக் கொண்டாடுவேன்;
இவ்வாறே, வேதங்களும், நான்கு முகங்களைக் கொண்ட ப்ரஹ்மா முதலியவர்களும் எம்பெருமானைக் கொண்டாடுகின்றனர்;
கடலுக்குள் மூழ்கி இருக்கும் சிறு கூழாங்கல்லுக்கும் பெரிய மலைக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? (ஒன்றும் இல்லை)

——————————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

அவனை ஒருவராலும் அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் –

பரிமளம் அலை எறியா நின்றுள்ள பூத்தாரை யுடைத்தாய் ஐஸ்வர்ய ஸூசகமான திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனாய்
நிரவதிக தேஜஸை யுடைத்தான திருவாழி ஸ்ரீ பாஞ்ச ஜன்யம்(படை போர் புக்கு முழங்கும் )ஸ்ரீ சார்ங்கம் -இவற்றை யுடையவனாய்
பெரிய கிளர்த்தியோடே எங்கே எங்கே என்று பெரிய ஆரவாரத்தைப் பண்ணிக் கொண்டு வந்த தந்த வக்ராசூரனை
முடித்துப் பொகட்டவனுடைய பிரகாரம் மாறு பாடுருவப் பேசுகைக்கு சக்தராய் இருக்கும் அவர்கள் தங்கள் ஞான சக்திகளைக்
கொண்டு எவ்வளவு பேச வல்லவர்கள் -அவ்வளவேயாய் இருக்கும் அல்லது -உள்ளபடி கண்டு பேச ஒண்ணாது -என்கை —

(வாராயின முலையாளிவள் வானோர் தலைமகனாம்
சீராயின தெய்வ நன்றோயிது தெய்வத் தண்ணந்துழாய்
தாராயினும், தழையாயினும் தன் கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே – நம்மாழ்வார் திருவிருத்தத்தில்,

விஷ்ணுவுக்கு துளசி மாலை, தழை, கொம்பு, வேர்
நின்ற மண், ஆகிய ஏதாயினும் ஒன்றால் அர்ச்சிக்க வேண்டும்.)

————————————————————

அவன் படி பரிச்சேதிக்கப் போகாத பின்பு அவன் தானே காட்டக் காண் என்கிறார் –

ஒருவராலும் அவனை அளவிட்டுப் பேச ஒண்ணாது என்றவர் தன் திரு உள்ளத்தைக் குறித்து -நீ முன்னம்
அவனை அழகிதாக சாஷாத் கரிக்கையிலே ஸ்ரத்தை பண்ணு கிடாய் -என்கிறார் –

வடிவார் முடி கோட்டி வானவர்கள் நாளும்
கடியார் மலர் தூவிக் காணும் -படியானை
செம்மையால் உள்ளுருகிச்   செவ்வனே நெஞ்சமே
மெய்ம்மையே காண விரும்பு –22-

பதவுரை

நெஞ்சமே–ஓ மனமே!
வானவர்கள்–நித்ய ஸூரிகள்
வடிவு ஆர்–அழகு பொருந்திய
முடி–கிரீடங்களை
கோட்டி–தாழ்த்தி-வணங்கச் செய்து
கடி ஆர் மலர்–மணம் பொருந்திய புஷ்பங்களை
நாளும்–நாள்தோறும்
தூவி –ஸமர்ப்பித்து–முறை கெட -ந ஸாஸ்த்ரம் ந க்ரம
காணும் படியானை-ஸேவிக்கப் பெற்ற திரு மேனியை யுடையனான எம்பெருமானை
செம்மையால்–முறைப்படியே
உள் உருகி–உருக்கங்கொண்டு
செவ்வனே–ருஜுவான வழியாலே
மெய்ம்மையே–உள்ள படியே
காண–ஸேவிப்பதற்கு
விரும்பு–ஆசைப்படு

(செம்மையால்–முறைப்படியே–உள் உருகி–உருக்கங்கொண்டு–செவ்வனே–ருஜுவான வழியாலே
மெய்ம்மையே–உள்ள படியே–காண–ஸேவிப்பதற்கு–விரும்பு–ஆசைப்படு-நாளும் மலர் தூவி என்றும் நாளும் காணும் என்றுமாம் –
அனைத்தும் முடியாதவற்றுக் காரணம் -ஆசைப்படவே காட்டி -அனைத்தையும் செய்யும் படி அருளுவான் அவன் அன்றோ)

வடிவார் முடிகோட்டி வானவர்கள் நாளும்–கடியார் மலர் தூவிக் காணும் -படியானை–
தர்ச நீயமாய் இருந்துள்ள முடிகளை வணக்கித் தேவர்கள் நாள் தோறும் பரிமளம் மிக்கு இருந்துள்ள
புஷ்ப்பத்தை கார்ய புத்தி இன்றிக்கே
திருவடிகளிலே பொகட்டுக் காணும் ஸ்வ பாவத்தை யுடையனாய் உள்ளவனை

(ப்ரயோஜனங்களை அபேக்ஷிக்காமல் ஸ்வயம் பிரயோஜனமாக -அத்யந்த பக்தி யுக்தனாய்)

செம்மையால் உள்ளுருகிச்   —-
அவன் சேஷீ -நான் சேஷ பூதன்- என்னும் முறையாலே -ஹிருதயம் சிதிலமாய் –

(ஸ்வாமி அவஸ்துவான எனக்கும் வந்து காட்ட வந்தானே என்று எண்ண உள்ளம் உருகுமே)

செவ்வனே -அவன் காட்டும் வழியாலே

நெஞ்சமே மெய்ம்மையே காண விரும்பு–
பிரயோஜன நிரபேஷமாகக் காண ஆசைப்படு –

(சேஷ சேஷி பாவம் அறிந்த நெஞ்சமே -முன்புற்ற நெஞ்சே -அவன் காட்டக் காணலாம் என்று அறிந்த நெஞ்சமே
மெய்ம்மையே -பூர்ணமாக என்றும் ஸ்வயம் ப்ரயோஜனமாக என்றுமாம்)

———————————————————————-

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

ஒருவராலும் அவனை அளவிட்டுப் பேச ஒண்ணாது என்றவர் தன் திரு உள்ளத்தைக் குறித்து -நீ முன்னம்
அவனை அழகிதாக சாஷாத் கரிக்கையிலே- ஸ்ரத்தை பண்ணு கிடாய் -என்கிறார் –

அழகு மிக்கு இருந்துள்ள அபிஷேகங்களை வணக்கி (கோடி வளைத்து -தாழ்த்தி )நித்ய ஸூரிகள் நாள் தோறும் பரிமளம் மிக்கு இருந்துள்ள
புஷ்பங்களை அக்ரமமாக பணி மாறி -யத்ர பூர்வே சந்தி தேவா சதா பஸ்யந்தி -என்கிறபடியே
இவை விடாமல் கண்டு அனுபவிக்கும் வடிவு அழகை யுடையவனை –
அவன் சேஷி நாம் சேஷ பூதர் என்னும் முறையாலே தத் வை லக்ஷண்யத்தை அனுசந்தித்து ஹிருதயம் சிதிலமாய்
நாம் ஒரு யத்னம் செய்யாது இருக்கத் தானே தன்னைக் கொடு வந்து காட்டக் காண்கிற
செவ்வை வழியாலே மனஸ்ஸே ஒரு குண ஆவிஷ்கார மாத்திரத்திலே தெகுட்டி விடாதே பத்தும் பத்தாக சாஷாத் கரிக்கையிலே
விருப்பத்தைப் பண்ணு –

வானவர்கள் என்று ப்ரஹ்மாதிகள் ஆகவுமாம்
படி -விக்ரஹம் -(ஸ்வ பாவம் பிரகாரம் என்றுமாம்)

———————————————————————-

உபதேசம் பலித்த படி சொல்கிறது –

காண விரும்பு -என்று இவர் சொன்ன வாய் மூடுவதற்கு முன்னே -திரு உள்ளம் அவன்
திருவடிகளிலே பிச்சேறி விழுகிற படியைக் கண்டு விஸ்மிதர் ஆகிறார் –

விரும்பி விண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்
சுரும்பு துளையில்  சென்றூத  -அரும்பும்
புனந்துழாய் மாலையான் பொன்னங்கழற்கே
மனந்துழாய் மாலாய் வரும் —23-

பதவுரை

வண் தார்–அழகிய மாலையிலே(பெண் வண்டுகள் இங்கு சுரும்பு மேல் ஆண் வண்டுகள் )
அம் சிறைய சுரும்பு–அழகிய சிறகுகளை யுடைய வண்டுகள்-
துளையில் சென்று ஊத–ரஸ நாடியிலே படிந்து ஊத (அதனால்)
அரும்பும்–அரும்புகள் உண்டாகப் பெற்ற
புனம் துழாய் மாலையான்–நல்ல திருத் துழாய் மாலையை அணிந்தவனான எம்பெருமானுடைய
விரும்பி விண் மண் அளந்த பொன் அம்கழற்கே–ஆசைப்பட்டு விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையுமளந்த மிகவழகிய திருவடிகள் விஷயத்திலேயே
மனம்–எனது மனமானது
துழாய்–அவகாஹித்து
மால் ஆய் வரும்–மயங்கிக் கிடக்கின்றது.

சுரும்பு -ஆண் வண்டு-

(விரும்பி-உவந்த உள்ளத்தனாய் -பகவான் விரும்பி -சுரும்பு விரும்பி ஊத -மனம் விரும்பி மாலாய் வரும்
வந்து -மனம் -மண் அளந்த -தத்வ த்ரயங்களையும் சொன்னபடி
விரும்பி விண்ணையும் மண்ணையும் அளந்த வண்டார் சுரும்பு என்றும் -பொன் அம் கழல் என்றுமாம்)

விரும்பி விண் மண்ணளந்த —
பொன்னங்கழற்கே விரும்பி என்னவுமாம் –
விருப்பத்தோடு விண்ணும் மண் அளந்த

அஞ்சிறைய வண்டார்-சுரும்புதுளையில்  சென்றூத  –
அழகிய சிறகை யுடைத்தான வண்டார்க்கும் சுரும்பு நரம்பு அறிந்து ஊத

அரும்பும்-புனந்துழாய் மாலையான் பொன்னங்கழற்கே மனந்துழாய் மாலாய் வரும் —
அரும்பா நின்றுள்ள புனந்துழாய் மாலையானுடைய விலக்ஷணமான கழலிலே
மனஸ்ஸானது வியாமோகத்தைப் பண்ணித் துழாவி வாரா நின்றது –

———————————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

காண விரும்பு -என்று இவர் சொன்ன வாய் மூடுவதற்கு முன்னே -திரு உள்ளம் அவன்
திருவடிகளிலே பிச்சேறி விழுகிற படியைக் கண்டு விஸ்மிதர் ஆகிறார் –

அழகிய சிறகை யுடைத்தான வண்டும் -அத்தை விட்டு நீங்காதே சேர்ந்து வர்த்திக்கக் கடவ சுரும்பும் ஆகிற இவை
ரஸ சிரைகளிலே (நரம்புகளில்)வாய் வைத்தூத –அவற்றால் கணுத் தோறும் அரும்பிச் செல்லா நிற்பதாய்
திரு மேனியின் ஸ்பர்சத்தாலே தன்னிலத்தில் நின்றால் போலே செவ்வி பெற்றுச் செல்கிற திருத் துழாய் மாலையாலே
அலங்க்ருதனாவனுடைய -ஆகாசம் பூமி முதலானவற்றை உகந்து அளந்து கொண்டு ஸ்ப்ருஹணீயமான திருவடிகளிலே
மனசானது முன்னடி தோன்றாமல் நின்ற நிலம் துழாவிக் கொண்டு பிச்சேறி வாரா நிற்கும் –
மனம் விரும்பித் துழாய் மாலாய் வரும் என்று மனசோடு சேர்க்கவுமாம் –

————————————————————————

ஆசை பிறந்த பின்பு விச்சேதம் இன்றிக்கே அனுபவிக்கப் பார்-

அபிநிவிஷ்டராய்க் கொண்டு எல்லாம் செய்தோம் இறே என்று இறுமாந்து இராதே-
நெஞ்சே -மேல் விழுந்து அவனை ஆஸ்ரயிக்கப் பார் கிடாய் என்கிறார் –

(விரும்பு விரும்பி விடாமல் விரும்பி மூன்று பாசுரங்களும் )

வருங்கால் இரு நிலனும் மால் விசும்பும் காற்றும்
நெருங்கு தீ நீருருவு மானான் -பொருந்தும்
சுடராழி ஒன்றுடையான் சூழ் கழலே நாளும்
தொடராழி நெஞ்சே தொழுது —-24-

பதவுரை

ஆழி நெஞ்சே—பெரியவனை அனுபவிக்க வேண்டிய-கம்பீரமான மனமே!
இரு நிலனும்–விசாலமான பூமியும்
மால் விசும்பும்–அளவிறந்த ஆகாசமும்
காற்றும்–வாயுவும்
நெருங்கு தீ–செறிந்த தேஜஸ்ஸும்
நீர் உருவும் ஆனான்–ஜல தத்துவமும் ஆகிய பஞ்ச பூதங்களுக்கும் அந்தர்யாமியானவனும்
பொருந்தும் சுடர் ஆழி ஒன்று உடையான்–பொருந்திய ஒரு சுடர்ச் சக்கரத்தை யுடையவனுமான எம்பெருமானுடைய-உபய விபூதி நாதத்வம்
சூழ் கழலே–அடியாரை அகப்படுத்திக் கொள்ளுகிற திருவடிகளையே
வருங்கால் நாளும்–மேலுள்ள காலமெல்லாம்
தொழுது–வணங்கி
தொடர்–(அவனையே) பின்பற்றி யிரு.

வருங்கால் இருநிலனும் மால் விசும்பும் காற்றும்-நெருங்கு தீ நீருருவு மானான் —
காரணமான பூத பஞ்சகமும் -லீலா விபூதிக்கும் உப லக்ஷணம் –

பொருந்தும்-சுடராழி ஒன்றுடையான்–
நித்ய விபூதிக்கும் உப லக்ஷணம் –

சூழ் கழலே நாளும்-தொடராழி நெஞ்சே தொழுது —
உபய விபூதி உக்தனுடைய சூழ் கழலே வரும் கால் நாளும்
ஆழி நெஞ்சே தொழுது தொடர் -கீழே விச்சேதித்து அநர்த்தப் பட்டது போரும் -முறையாலே ஆஸ்ரயி –

———————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

அபிநிவிஷ்டராய்க் கொண்டு எல்லாம் செய்தோம் இறே என்று இறுமாந்து இராதே-
நெஞ்சே -மேல் விழுந்து அவனை ஆஸ்ரயிக்கப் பார் கிடாய் என்கிறார் –

பரப்பை யுடைத்தான பூமியும் -அபரிச்சேத்யமான ஆகாசமும் வாயுவும் செறிந்த தேஜஸ்ஸும் ஜலமும் ஆகிற
இவ்வவ பதார்த்தங்களுக்கு அந்தர்யாத்மாவாய் நிற்கையாலே லீலா விபூதி நிஷ்டனாய் –
திருக் கையிலே பொருந்தி இருக்கும் அத்விதீயமான தேஜோ ரூபமான திரு வாழியை யுடையவன் ஆகையால்
நித்ய விபூதி விசிஷ்டனாய் இருக்கிற சர்வேஸ்வரனுடைய -ஆஸ்ரிதரை ஸ்வ வைலக்ஷண்யத்தாலே
தப்பாத படி சூழ்த்துக் கொள்ளுகிற திருவடிகளையே அளவுடைய நெஞ்சே -ஸ்வரூப அனுரூபமாக தொழுது
மேல் வரும் காலம் எல்லாம் ஆறி இராதே நாள் தோறும் பின்பற்றி ஆஸ்ரயி –

———————————————————–

நான் சொல்லுகிறது தப்புண்டோ என்கிறார் –

அவர் இப்படி உபதேசிக்கச் செய்தேயும் பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரித்து நிமிர்த்து இருக்கிற திரு உள்ளத்தைக் குறித்து
அவனை நீ கிட்டி ஆஸ்ரயித்ததால் உனக்கு வருவது ஒரு குறையில்லை காண் என்கிறார் –

(ஸம்ஸாரம் இருக்க எவ்வாறு என்றவாறே பிரதிபந்தகங்களைப் போக்கி அருளினவன்-நான்கு விஷயங்களைச் சொல்லி சமாதானம்
வயிற்றிலே வைத்து ரக்ஷகன் -அடியவர்க்கு எளியவன் -விரோதிகளை போக்கி -அடியவர்க்கு எளியவன்-வானவர்க்கு சேயன் நமக்கு அணியன் )

(நெஞ்சே சிறந்து
தூ நீருலகம் முழுதுண்டவனை தொழுதால் பழுதுண்டே
மொய் குழலாள் ஆய்ச்சி விழுதுண்ட வாயானை தொழுதால் பழுதுண்டே
மால் விடை ஏழ் செற்றானை தொழுதால் பழுதுண்டே
வானவர்க்கும் சேயானை தொழுதால் பழுதுண்டே)

(விரும்பு விரும்பி விடாமல் விரும்பி மூன்று பாசுரங்களும் சொல்லி இதில் பிரதிபந்தகங்களைப் போக்கி அனுபவிப்பான் என்கிறார்)

தொழுதால் பழுதுண்டே தூ நீருலகம்
முழுதுண்டு மொய் குழலாள் ஆய்ச்சி விழுதுண்ட
வாயானை மால் விடை ஏழ் செற்றானை வானவர்க்கும்
சேயானை நெஞ்சே சிறந்து ——-25–

பதவுரை

தூ நீர் உலகம்–நிர்மலமான நீரை யுடைய கடலோடு கூடின உலகங்களை
முழுது–முழுவதும்
உண்டு–திரு வயிற்றிலே வைத்தவனாயும்
மொய் குழலாள் ஆய்ச்சி–அழகிய கூந்தலை யுடையளான யசோதையினுடைய
விழுது–வெண்ணெயை
உண்ட வாயானை–அமுது செய்த வாயை யுடையவனாயும்–வாயிலே வெண்ணெய் நாற்றம் வீசும் என்பதால் வாயன் பத பிரயோகம்
மால் விடை ஏழ் செற்றானை–கொழுத்த ரிஷபங்களேழையும் முடித்தவனாயும்
வானவர்க்கும் சேயானை–பிரமன் முதலிய தேவர்களுக்கும் எட்டாதவனாயுமுள்ள எம்பெருமானே
நெஞ்சே–நெஞ்சமே!
சிறந்து–சிறப்புற
தொழுதால்–வணங்கினால்
பழுது உண்டே–குற்ற மேதேனுமுண்டோ?

விழுது–semi solid -கடை வெண்ணெய் -நக்கியே உண்ண வேண்டுமே –
லேகியம் லிக்-lick / மாதா -mathar / கொல்-kill

தூ நீருலகம்—வைத்து -முழுதுண்டு–
சூழ்ந்த கடல் அலையாத படிக்கு ஈடாக லோகத்தை எல்லாம் வயிற்றிலே வைத்து –

மொய் குழலாள் ஆய்ச்சி விழுதுண்ட வாயானை–
அனுகூலருடைய த்ரவ்யத்தால் அல்லது தரியாதவனை

மால் விடை ஏழ் செற்றானை-
நப்பின்னை பிராட்டியுடைய சம்ஸ்லேஷத்துக்கு விரோதியான மதித்த(மதம் பிடித்த )ஏறு ஏழையும் செற்றவனை

வானவர்க்கும்-சேயானை –
ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு மனஸூக்கும் வாக்குக்கும் தூரஸ்தான் ஆனவனை

சிறந்து ——நெஞ்சே–தொழுதால் பழுதுண்டே —
ஆஸ்ரிதற்கு ஸூலபனானவனைக் கிட்டித் தொழுதால் பழுது உண்டோ –

———————————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

அவர் இப்படி உபதேசிக்கச் செய்தேயும் பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரித்து நிமிர்த்து இருக்கிற திரு உள்ளத்தைக் குறித்து
அவனை நீ கிட்டி ஆஸ்ரயித்ததால் உனக்கு வருவது ஒரு குறையில்லை காண் என்கிறார் –

நிர்மலமான ஜலத்தை யுடைத்தான கடலோடு கூடின பூமியாதி லோகங்களை ஒன்றும் பிரி கதிர் படாத படி
கடலின் நீரும் கலங்காமல் இருந்த கட்டளையிலே எடுத்து -திரு வயிற்றிலே வைத்து -அவ்வளவிலும்
வயிறு நிறையாமையாலே -அழகிய குழலை யுடையளான யசோதை பிராட்டியாருடைய வெண்ணெயை அமுது செய்த
திருப் பவளத்தை யுடையனாய் -நப்பின்னைப் பிராட்டியைக் கைப் பிடிக்கைக்கு இடைச்சுவரான முரட்டு ரிஷபங்கள்
ஏழையும் முடித்துப் பொகட்டவனாய் -மிகை மிடுக்காலே காண ஒருப்படும் ப்ரஹ்மாதிகளுக்கும் சால தூரஸ்தனாய் இருக்கிறவனை
நெஞ்சே -சம்பந்தத்தை நினைத்து அங்குத்தைக்குத் தகுதியாய்க் கொண்டு ஆஸ்ரயித்ததால் உனக்கு வருவதொரு தப்பு உண்டோ –

—————————————————————————————————————

இப்படி கிட்டி ஆஸ்ரயித்த தம் திரு உள்ளத்தை உகந்து அருளின நிலங்களில் காட்டிலும்
அவன் விரும்பின படியை யருளிச் செய்கிறார் –

(இசைந்த பின்பு அனைத்து திவ்ய தேச அபிநிவேசங்களும் சிந்தையில் வைப்பான் -ஆகவே அத்தையே முதலில் அருளிச் செய்கிறார்

கடவார் கடமை யுடையவர் -நிர்வாஹகர் -என்றும் கடந்து போக மாட்டார் என்றுமாம் –
வெக்கா வேளுக்கை தனியாகச் சொல்லி -திருக்கச்சி யுள்ளும் –
கடவாமை இவ் விரண்டிலும் -ஆதி சேஷன் இடமும் எனது சிந்தையும் ஒரே அபிநிவேசம்
ஆறு இடங்களில் இருப்பத்தைச் சொல்லி -மற்ற நான்கிலும் உறைவார் -நம் திரு உள்ளத்துக்கு வர ஏணி போல் இவை என்றுமாம்

சிறந்த -ஹ்ருதயம் தானே விஸ்வஸ்ய ஆயத்தனம் மஹத் -நெஞ்சமே நீள் நகராகக் கொள்ளுமவன் அன்றோ –
என் பால் இடவகை கொண்டனையே -என்பார்களே )

சிறந்த வென் சிந்தையும் செங்கண் அரவும்
நிறைந்த சீர் நீள் கச்சி யுள்ளும் உறைந்ததுவும்
வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே
தாங்கடவார் தண் துழாயார்  ——–26–

பதவுரை

தண் துழாயார் தாம்–குளிர்ந்த திருத்துழாய் மாலையை அணிந்துள்ள எம்பெருமான்
கடவார்–ஒருநாளும் விட்டு நீங்காதவனாய்க் கொண்டு
உறைந்ததுவும்–நித்ய வாஸம் பண்ணுமிடங்கள் (எவை யென்றால்)
சிறந்த என் சிந்தையும்–சிறந்ததான என்னுடைய நெஞ்சமும்
செம் கண் அரவும்–சிவந்த கண்களை யுடைய திருவனந்தாழ்வானும்
நிறைந்த சீர்–நிறைந்த செல்வத்தை யுடைய
நீள்–பெரிய
கச்சி யுள்ளும்–கச்சித் திருப்பதியும்
வேங்கடமும்–திருமலையும்
வெஃகாவும்–திருவெஃகாவும்
வேளுக்கைப் பாடியுமே–திருவேளுக்கைத் திருப்பதியுமாம்.

சிறந்த வென் சிந்தையும் செங்கண் அரவும்-நிறைந்த சீர் நீள் கச்சி யுள்ளும் உறைந்ததுவும்
என்னுடைய சிந்தையுள்ளும் -திருவனந்த ஆழ்வான் மேலும்
கச்சியுள்ளும் சாதரமாக யுறைந்தது –

வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே-தாங்கடவார் —
திருமலையிலும் திரு வெஃகாவிலும் வேளுக்கை பாடியிலும் கடவரான மாத்திரம் –
கடவரான மாத்திரம் என்று சொன்ன உரம் எத்தாலே என்னில் –
தண் துழாயார்

நிறைந்த சீர் நீள் கச்சி யுள்ளும் -வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே–உறைந்ததுவும்–
சிறந்த வென் சிந்தையும் செங்கண் அரவும்-தாங்கடவார்–
உகந்த படுக்கையான திருவனந்த ஆழ்வானோபாதி என்னுடைய நெஞ்சை அதிக்ரமியார்-

(மற்ற திவ்ய தேசங்களைக் கடந்து என்னுள்ளத்திலே வந்தானே -இத்தைக் கடக்க மாட்டான் –
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் –

பிராட்டியைப் பிரிந்து இருந்தாலும் இளைய பெருமாளை பிரிய இயலாமல் பெருமாள் இருந்தாரே -)

அன்றிக்கே
திரு வனந்த ஆழ்வானையும் என்னுடைய நெஞ்சையும் தம்மதாக அபிமானித்து இருப்பது –
அல்லாத வற்றில் உறைந்த மாத்திரமே என்றும் அருளிச் செய்வார் –

(எனது நெஞ்சத்துக்கு இருந்தமைக்கு சத்ருசமாகச் சொல்லலாவது
திவ்ய தேசங்கள் நிறைந்த கச்சி என்பதால் அத்தையும் இங்கு சேர்த்து அருளுகிறார்)

——————————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படி கிட்டி ஆஸ்ரயித்த தம் திரு உள்ளத்தை உகந்து அருளின நிலங்களில் காட்டிலும்
அவன் விரும்பின படியை யருளிச் செய்கிறார் –

ஐஸ்வர்ய ஸூ சகமான குளிர்ந்த திருத் துழாயாலே அலங்க்ருதனான பெருமையை யுடைய தாம் -திரு உள்ளத்திலே
உகப்புடன் நித்ய வாசம் பண்ணி அருளிற்றும் -தாம் விரும்பி மேல் விழுகைக்குத் தகுதியான என்னுடைய ஹிருதயத்திலும்
மதுபான மத்தரைப் போலே நிரந்தர அனுபவத்தால் சிவந்த கண்களை யுடையனான திருவனந்த ஆழ்வான் பக்கலிலும்
திருப்பதிகளாலே நிறைந்த ஐஸ்வர்யத்தை யுடைத்தாய் போக்யதை அளவிறந்த இருந்துள்ள திருக்கச்சியிலுமாய் இருக்கும் —

(எனது நெஞ்சத்துக்கு இருந்தமைக்கு சத்ருசமாகச் சொல்லலாவது
திவ்ய தேசங்கள் நிறைந்த கச்சி என்பதால் அத்தையும் இங்கு சேர்த்து அருளுகிறார்)

திருமலையும் திரு வெக்காவும் திரு வேளுக்கைப் பாடியும் ஆகிற இவ்விடங்களை –
நிர்வாஹகரான நமக்கு விட ஒண்ணாதே என்று பிராப்தி மூலமாக விரும்பி இருப்பர் -(கீழே ப்ரீதி மூலம் )

திருக் கச்சி முதலான திருப்பதிகளிலும் ஸூரிகளில் பிரதானனான
திரு வனந்த ஆழ்வானில் காட்டிலும் தம் திரு உள்ளத்தை மிகவும் விரும்புகையாலே முந்துற திரு உள்ளத்தை அருளிச் செய்தார் –

(சென்றால் கு டையாம் –இத்யாதி போல் அனைத்து கைங்கர்யங்களையும் செய்ய ஆசை கொண்டவர் ஆழ்வாரும் என்றதாயிற்று)

——————————————————————-

அவன் படி இதுவான பின்பு -அவனை ஆஸ்ரயித்தும் தங்கள் பண்ணின பாபத்தின் பலம்
புஜிப்பார் யுண்டோ என்கிறார் –

இப்படிப்பட்ட அவனை ஆஸ்ரயித்தவர்களில் யாரேனும் ஒருத்தர் -தங்கள் பண்ணின பாப பலம்
புஜித்தார்களாகக் கேட்டு அறிவது யுண்டோ -என்கிறார் –

(ஆஸ்ரிதர் மேல் இவ்வாறு அபிநிவேசம் கொண்டவன் என்று அறிந்த பின்பு-உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ )

ஆரே துயர் உழந்தார் துன்புற்றார் ஆண்டையார்
காரே மலிந்த கருங்கடலை –  நேரே
கடைந்தானைக் காரணனை நீரணை மேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து —-27–

பதவுரை

கார் மலிந்த கரு கடலே–மேகங்கள் நிறைந்த பெரிய  கறுத்த  கடலை
நேரே கடைந்தானை–தானே முன்னின்று கடைந்தவனும்(தேவாதிகள் அந்தராத்மா -ஒல்லை நான் கடைவான் ஸாஷாத்தாக )
நாரணனை–ஸகல ஜகத் காரண பூதனும்
நீரணை மேல் பள்ளி அடைந்தானை–திருப்பாற்கடலில் (ஆதிசேஷனாகிற) சயனத்தின் மேல் பள்ளிக் கொண்டிருப்பவனுமான எம்பெருமானை
நாளும் அடைந்து–நாடோறும் பணிந்து (இருக்குமவர்கள்)
துயர் உழந்தார்–துக்கங்களுக்கு மூலமான பாபங்களைப் பண்ணினவர்களாயிருந்தாலும்
துன்பு உற்றார் ஆர்–துக்கங்களை அநுபவித்தவர்கள் யார்? (ஒருவருமில்லை) (அப்படிப்பட்டவர்கள்)
ஆண்டையார்–எங்கிருக்கிறார்கள்? (எங்குமில்லை)

காரே மலிந்த கருங்கடலை –  நேரே கடைந்தானைக்–
மேலே படிந்த மேகங்கள் சலியாதபடி அமிர்தம் படும் படிக்கு ஈடாகக் கடலைக் கடைந்தானை

காரணனை–ஜகத் காரண பூதனை -(மாதா நாராயணா பிதா நாராயணா இத்யாதி )

நீரணை மேல் பள்ளி-அடைந்தானை–
ஆஸ்ரிதர் கார்யம் செய்க்கைக்காக திருப் பாற் கடலிலே கிட்ட வந்து கிடந்தவனை

(ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதனன் -கூப்பீடு கேட்க்கும் இடம் வந்து ப்ரயோஜனாந்தர பரர்களும் அண்டும்படி அடைந்தான் அன்றோ)

நாளும் அடைந்து –ஆரே துயர் உழந்தார் துன்புற்றார் ஆண்டையார்–
தாம் தாம் பண்ணின நிஷித்த கர்மத்தினுடைய பலமான துக்கத்தை அவனை ஆஸ்ரயித்து அனுபவிப்பார் உண்டோ

ஆண்டையார் -என்றது
எங்குள்ளார் என்றபடி

நாளும் -என்றது
எக் காலத்திலும் என்றபடி

எக் காலத்தில் எத் தேசத்தில் யார் அவனைப் பற்றி துஷ் கர்ம பலத்தை அனுபவித்தார் –

(தேவதாந்த்ரங்களைப் பற்றி துன்பம் அடைந்தவர் பலர் உண்டே -பாணாசுரன் போல்வார் -)

(எழுவார் விடை கொள்வார் போல் அன்றிக்கே ப்ரீதியுடன் அநந்யார்ஹ ஸ்வயம் ப்ரயோஜன பரர்கள்
என்றுமே எப்பொழுதுமே வழுவா வகை நினைந்து தொழுவார்கள் அன்றோ)

——————————————————————-

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படிப்பட்ட அவனை ஆஸ்ரயித்தவர்களில் யாரேனும் ஒருத்தர் -தங்கள் பண்ணின பாப பலம்
புஜித்தார்களாகக் கேட்டு அறிவது யுண்டோ -என்கிறார் –

மேகங்களால் நிறைந்த பெரிய சமுத்திரத்தை மேற்படிந்த மேகங்கள் சலியாதபடி நேர் கொடு நேரே நின்று கடைந்தவனாய்
ஜகத் காரணத்வ பிரயுக்தமான உறவை யுடையவனாய் (மாதா நாராயணா பிதா நாராயணா இத்யாதி )-

இவற்றை ரஷிக்கைக்கு அவசர பிரதீஷனாயக் கொண்டு
கடைந்த கடலின் நீரிலே திரு வனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையின் மேலே கண் வளர்ந்து அருளுகிறவனை-
தேவையாக அன்றிக்கே போக ரூபமாக நாள் தோறும் ஆஸ்ரயித்து வைத்து துக்க ஹேதுவான பாபங்கள்
உச்சி வீடு விடாதே பண்ணினவர்களில் யார் தான் அந்த பாப பலமான துக்கத்தை அனுபவித்தார்-
அவர்கள் தான் எக்காலத்தில் உள்ளவர்கள் –

பகவத் ஸமாச்ரயணம் பண்ணுகைக்கும் பாப பலம் அனுபவிக்கைக்கும்
அக்னி நாசிஞ்சேத் என்ன சேர்த்தி உண்டு என்றபடி -(நெருப்பால் நனைப்பாய் சொல்லுவார் உண்டோ )

————————————————————————–

இவனைப் பற்றினார்க்கு பாப பலம் அனுபவிக்க வேண்டுவது பாண்டவர்கள் தங்கள்
சத்ருக்களைத் தாங்கள் நிரசிக்கும் அன்று அன்றோ என்கிறார் –

(தீர்ப்பாரை யாம் இனி எங்கனம் நாடுதும் ? அன்னைமீர்
ஒர்ப்பால் இவ் ஒண் நுதல் உற்ற நல நோய் இது தேறினோம்
போர் பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப் போர்த்
தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே –4-6-1

தேர் பாகன் -போர் பாகு -தேரை முன்னும் பின்னும் நடத்தியே போர் முடித்தவன் இவனே)

(அஹம் மத் ரக்ஷண பரோ மத் ரக்ஷண பலம் ததா
ந மம ஸ்ரீ பதே ரேவேத் யாத்மா நம் நிஷி பேத் புத -ஸ்ரீ ந்யாஸ சதகம்–1-

விஷயம் அறிந்தவன் -தனது ஆத்மா-ஆத்மாவைக் காக்கும் பொறுப்பு –
அவ்வாறே ஆத்மாவைக் காப்பதால் ஏற்படும் பிரயோஜனம் -எல்லாம் தன்னுடையது அல்ல –
திருமகள் கேள்வனுக்கே உரியது என்று ஆத்மாவை எம்பெருமான் இடம் சமர்ப்பிப்பான்)

(நான்கு சரித்திரங்கள் இங்கு சொல்லி -இவனது ரக்ஷண பிரகாரம் அருளிச் செய்கிறார்)

அடைந்தது அரவணை  மேல் ஐவர்க்காய் அன்று
மிடைந்தது பாரத வெம் போர் -உடைந்ததுவும்
ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே வாள் எயிற்றுப்
பேய்ச்சி பால்  உண்ட   பிரான் –28-

பதவுரை

வாள் எயிறு–வாள் போன்ற பற்களை யுடையளான
பேய்ச்சி–பூதனையினுடைய
பால்–முலைப் பாலை
உண்ட–உண்டு அவளை முடித்தவனான
பிரான்–ஸ்வாமியானவன்
அடைந்தது–பள்ளி கொண்டது
அரவு அணை மேல்–சேஷ சயனத்தின் மேலாம்
அன்று–முன்னொரு காலத்தில்
ஐவர்க்கு ஆய்–பஞ்ச பாண்டவர்களுக்காக
மிடைந்தது–நெருங்க நடத்தினது
வெம் பாரதம் போர்–கடுமையான பாரத யுத்தமாம்,
உடைந்ததுவும்–அஞ்சி நின்றதும்
ஆய்ச்சி பால்–இடைச்சியான யசோதைப் பிராட்டியினிடத்துண்டான
மத்துக்கே–மத்துக்காகவாம்,
அம்மனே–அந்தோ!

(அஞ்சிய நோக்கும் அந்நோக்கும் -தொழுத கையும் -தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே)

அடைந்தது அரவணை   மேல் —
உகந்தார்க்கு உடம்பு கொடுப்பது

ஐவர்க்காய் அன்று மிடைந்தது பாரத வெம் போர் –
ஆஸ்ரிதர்க்காக தன்னுடம்பை அழிய மாறி அம்பேற்றது –

உடைந்ததுவும் ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே–
பரிஹாரம் இன்றிக்கே ஒழிந்ததுவும் யசோதை பிராட்டிக்குப் பயப்பட்டு –

(அஞ்சலிக்கு பிரதி அஸ்திரம் இல்லாதவோ பாதி இவளது உடைந்த மத்துக்கும் பிரதி இல்லாமல் இருந்தானே)

வாள் எயிற்றுப்-பேய்ச்சி பால்  உண்ட   பிரான் —
பருவம் நிரம்பாதே இருக்கச் செய்தே வாள் போலே இருந்துள்ள எயிற்றை யுடைய பூதனையை முடித்த உபகாரகன்
அனுகூலையாய் இருப்பாள் ஒரு இடைச்சிக்குப் பயப்பட்டு
பரிஹாரம் இன்றிக்கே இருப்பதே –

அம்மனே -எத் திறம் –

———————————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இவனைப் பற்றினார்க்கு பாப பலம் அனுபவிக்க வேண்டுவது பாண்டவர்கள் தங்கள்
சத்ருக்களைத் தாங்கள் நிரசிக்கும் அன்று அன்றோ என்கிறார் –

பருவம் நிரம்பாதே இருக்கச் செய்தே வாள் போலே இருந்துள்ள எயிற்றை யுடையளான பூதனையுடைய பாலை
வேற்று முலை என்று வாசி அறிந்து அமுது செய்து -ஜகத்துக்கு ஒரு சேஷியைத் தந்த உபகாரகன் ஆனவன்-
தன்னால் அல்லது செல்லாத திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையில் யாய்த்து தன் செல்லாமை தோற்றப்
பள்ளி கொண்டு அருளிற்று -ஆஸ்ரிதரான தர்ம புத்திராதிகளுக்காக அவர்கள் வெறுவியரான வன்று
தன்னை அழிய மாறி மேன்மேல் என நெருங்கி ப்ரவர்த்தித்தது பாரதம் ஆகிற கொடிய பூசல் –
யசோதை பிராட்டி பக்கல் யுண்டான மத்துக்கே ஒக்கும் -தனக்கு சத்ருக்கள் அஞ்சுமா போலே தான் அஞ்சி
சிதிலம் ஆயிற்றதும் -அம்மே -இவன் வல்லபடி என் என்று வயிறு பிடிக்கிறார் –

——————————————————————-

அச்சத்துக்கு இவனுக்கு ஒப்பு இல்லாதாப் போலே
ஸ்நேஹத்துக்கு யசோதை பிராட்டிக்கு ஒப்பு இல்லை -என்கிறார் –

ப்ரஸ்துதையான யசோதைப் பிராட்டி யினுடைய ஸ்நேஹ குணங்களைச் சொல்லி
அவளும் ஒருத்தியே என்று கொண்டாடுகிறார் –

(அச்சமும் அன்பும் -கீழ் அச்சம் பற்றிய பாசுரம் -இங்கு அன்பு பற்றிய பாசுரம்)

பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து
ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே -வாய்த்த
இருளார் திருமேனியின் பவளச் செவ்வாய்
தெருளா மொழியானைச் சேர்ந்து —-29–

பதவுரை

பேய்ச்சி–பூதனையினுடைய
பால்–முலைப்பாலை
உண்ட–அமுது செய்த
பெருமானை–ஸ்வாமியானவனும்-ஸர்வேஸ்வரனை -விரோதி நிரசன காரியமே பூதனையை முடித்தது
வாய்ந்த இருள் ஆர் திருமேனி–அமைந்த இருள் போன்ற திருமேனியை யுடையவனும்-இருள் அன்ன திரு மேனி -பொருந்திய
இன் பவளம் செம்வாய்–அழகிய பழம் போற் சிவந்த அதரத்தை யுடையவனும்-பவளம் ஒளியே வாசி -மற்றவை எல்லாம் இருள் அவனும் பூதனையும்
தெருளா மொழியானை–உருத் தெரியாத மழைலைச் சொற்களைச் சொல்லும் சிறு குழந்தையுமான கண்ணபிரானை
சேர்ந்து–கிட்டி
ஆய்ச்சி–யசோதை யானவன்
பேர்ந்து எடுத்து–வாரி யெடுத்தணைத்து கொண்டு
அஞ்சாதே–சிறிதும் பயப்படாமல்
முலை கொடுத்தாள்–தன் முலையை உண்ணக் கொடுத்தாள்.

பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் –
பூதனையை முடித்தவனை

வாய்த்த-இருளார் திருமேனியின் பவளச் செவ்வாய்–
பூதனையினுடைய மடியிலே ஸ்ரமஹரமான வடிவை யுடையனாய்

பவளம் போன்று இருந்துள்ள அதரத்தை யுடையனாய் தெருளா மொழியானைச் சேர்ந்து —
பேர்ந்து எடுத்து-ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே –
பூதனை முகத்தில் முக்த ஜல்பிதம் பண்ணுகிறவனைக் கிட்டிக் கால் நடை தந்து எடுத்து
தாயானவள் அஞ்சாதே முலையைக் கொடுத்தாள்–
ஸ்வ ரூபத்தை அழிய மாறி முலையைக் கொடுத்தாள் -ஸ்த்ரீத்வ ப்ரயுக்தம் இறே அச்சம் –

——————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

(ஆய்ச்சி மத்துக்கே என்று )ப்ரஸ்துதையான யசோதைப் பிராட்டி யினுடைய ஸ்நேஹ குணங்களைச் சொல்லி
அவளும் ஒருத்தியே என்று கொண்டாடுகிறார் –

பூதனை பக்கல் யுண்டான முலைப் பாலை யுண்டு அவளை முடித்து -ஜகத்துக்கு சேஷியான தன்னை
யுண்டாக்கிக் தந்த உபகாரகனாய் -அவள் மடியிலே இருந்து முலை யுண்கிற போது ஆகர்ஷகமாய்த் தோற்றுகிற
அழகிய இருளோடு ஒத்த திரு மேனியையும் -உகப்புத் தோற்ற ஸ்மிதம் செய்த அழகிய பவளம் போன்ற
சிவந்த திரு வதரத்தையும் யுடையனாய்
அத் தசையில் அவள் முகத்தைப் பார்த்து ஆச்சி ஆச்சி என்றால் போலே சொல்லுகிற அறிவு கலசாத முக்த ஜலப்பிதங்களை
யுடையனுமானவனை -தாய் தன்னிடத்தும் நின்று போந்து கால் நடை தந்து வந்து கிட்டி யதா பூர்வம் சாதரமாக எடுத்துக் கொண்டு
ஸ்த்ரீத்வ பிரயுக்தமாயும் ஜென்மம் அடியாகவும் வரக் கடவ யுடையவள் அன்றிக்கே –
உண்ட நச்சுப் பாலுக்கு ப்ரத் ஒளஷதமாக முலை கொடுத்தாள் –
கெட்டேன்–(ஹந்த -இது என்ன ஆச்சர்யம் )ஒருத்தி யுடைய ஸ்நேஹம் இருக்கும் படியே -என்று வித்தாராகிறார் –

————————————————————

அவன் சந்நிஹிதன் ஆகையால் ஸ்நேஹித்தாள்-இப்போது நமக்கு சந்நிஹிதன் அன்றே என்னில்
அவன் சந்நிஹிதனான இடங்கள் சொல்லுகிறார் –

அன்று அங்கனே அவள் ஒருத்திக்கும் எளியனான நிலை எல்லாக் காலத்திலும் எல்லார்க்கும் யுண்டாம் படி
கோயில்களில் எல்லாம் வந்து நின்று அருளின படியை அருளிச் செய்கிறார் –

(எளியவனாகையாலே அவள் அன்பு காட்டினாள் -நாங்கள் எவ்வாறு அன்பு காட்டுவது என்ற சங்கைக்கு பதில் இப்பாசுரம்)

(பெருமாள் இருக்கும் இடங்கள் எட்டும் என்கிறார்-திருத்துழாய் யத்ர யத்ர திருத்துழாய் தத்ர தத்ர கேசவன் மது ஸூதனன் -இத்துடன் ஒன்பது –

வாய்ந்த -நிறை -அனைத்து இடங்களிலும் அந்வயம் -ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்தவன் அன்றோ -அனைத்திலும் பூர்ணம் –

கடலையும் சொல்லி அனந்தனையும் சொல்கிறார் ஆதர அதிசயத்தில்-கடல் -அநந்தன் இரண்டு திவ்ய தேசங்களும் ஒரே இடத்தில் இவருக்கு சேவை –
இறை திருமால் சேர்ந்த பாடி இவைகள் -என்றும் திருமால் சேர்ந்த- இறைபாடிகள் இவை என்றும் கொள்ளலாம் )

சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம்
நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பும் -வாய்ந்த
மறை பாடகம் அனந்தன் வண்டுழாய்க் கண்ணி
இறைபாடி யாய இவை  —-30–

பதவுரை

கடல்–திருப்பாற் கடலென்ன
குடந்தை–திருக்குடந்தை யென்ன
வேங்கடம்–திருமலை யென்ன
நேர்ந்த என் சிந்தை–நேர்பட்ட எனது ஹ்ருதயமென்ன-அவன் நேர்ந்த -கொடிய மா தவம் செய்தனன் கொல்
நிறை விசும்பும்–பரம்பின பரமபதமென்ன-இதம் பூர்ணம் –சர்வம் பூர்ணம் -எங்குமே பூர்ணம்
வாய்ந்த மறை–அமைந்த வேதமென்ன
பாடகம்–திருப்பாடகமென்ன
அனந்தன்–ஆதிசேஷனென்ன
ஆய இவை–ஆகிய இவையெல்லாம்
வண் துழாய் கண்ணி–அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ள
திருமால் சேர்ந்த–எம்பெருமான் நித்யவாஸம் பண்ணப்பெற்ற
இறை பாடி–ராஜதானிகளாம்.

சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம் நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பும்
ஸ்வாமிக்கு படை வீடான இவை —
ஸ்ரீ யபதி சேர்ந்த பாடியாய இவை –
இறையாய திருமால் சேர்ந்த -என்னவுமாம்

சிந்தை என்கையாலே
இத் திருப்பதிகளில் எல்லாம் வந்து இருக்கிறது எல்லாம் என் இருதயத்தில் புகுருகைக்காக என்கிறது

வாய்ந்த மறை -என்றதாலே
ப்ரமாணமான வேதத்திலே நின்றதோடு கண்ணாலே காணப்படுகிற
திருப்பதிகளோடு வாசியற இவர்க்கு பிரகாசமாய் இருக்கிற படி –

———————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

அன்று அங்கனே அவள் ஒருத்திக்கும் எளியனான நிலை எல்லாக் காலத்திலும் எல்லார்க்கும் யுண்டாம் படி
கோயில்களில் எல்லாம் வந்து நின்று அருளின படியை அருளிச் செய்கிறார் –

திருப் பாற் கடல் -திருக் குடந்தை –திருமலை -இவற்றிலும் காட்டில் ஆதரிக்கும் படி நேர்பட்ட என்னுடைய ஹிருதயம்-
த்ரிபாத் விபூதி -என்னும் படி பரப்பை யுடைத்தாய் பரம ஆகாச சப்த வாஸ்யமான பரம பதம் –
அவனை உள்ளபடி பிரதிபாதிக்க வல்ல அழகிய வேதம் -திருப் பாடகம் -அனந்தாழ்வான் ஆகிற இத்திருப்பதிகள் எல்லாம்
அழகிய திருத் துழாய் மாலையாலே அலங்கரித்துக் கொண்டு இருக்கிற சர்வ ஸ்வாமியான
ஸ்ரீ யபதி அத்யபி நிவிஷ்டனாய் சேர்ந்து வர்த்திக்கிற ராஜ தானியாய் இருக்கும் –

——————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading