இவ்விவ இடங்களிலே வந்து நிற்கிறவன் ஆஸ்ரித விரோதிகளை போக்கி துர்மானிகளோடும்
புறையறக் கலக்கும் ஸீலவான் கிடீர் -என்கிறார்
இவையவன் கோயில் இரணியனதாகம்
அவை செய்தரியுருவமானான் -செவி தெரியா
நாகத்தான் நால் வேதத்துள்ளான் நறவேற்றான்
பாகத்தான் பாற் கடலுளான் —–31–
பதவுரை
இரணியனது–ஹிரண்யாஸுரனுடைய
ஆகம்–மார்பை
அவை செய்து–இருபிள வாக்க
அரி உருவம் ஆனான்–நரசிங்கமாகத் தோன்றினவனும்
செவி தெரியா நாகத்தான்–கண்ணையே செவியாக வுடையனாகையாலே தனிப்பட செவி தெரியாமலிருக்கிற ஆதிசேஷனைப் படுக்கையாக வுடையவனும்
நால் வேதத்து உள்ளான்–நான்கு வேதங்களுக்கும் பொருளாயிருப்பனும்
நறவு என்றான் பாகத்தான்–தேன் போன்ற கங்கையை ஏற்றுக் கொண்டவனான ருத்ரனைத் திருமேனியின் ஒரு பாகத்திலே உடையவனும்
பாற்கடலுளான்–திருப்பாற்கடலில் பள்ளி கொள்பவனுமான
அவன்–அப்பெருமானுடைய
கோயில் இவை–கோயில் கீழ்ப்பாட்டில் சொன்ன திருப்பதிகளாம்.
செவி தெரியா-நாகத்தான் –
கண்ணையே செவியாக யுடையவன் ஆகையால் தனிப்பட செவி தெரியாமல் இருக்கிற
திருவனந்த ஆழ்வானை படுக்கையாக யுடையவனும்
நறவேற்றான்-பாகத்தான் –தேன் போன்ற கங்கையை ஏற்றுக் கொண்டவனுடைய /நறவையும் ஏற்றையும் யுடைய-ருத்ரனை
திருமேனியில் ஏக தேசத்திலே கொண்டவன் –
இரணியனதாகம்-அவை செய்தரியுருவமானான் —
உபசயாத்மகமான ஹிரண்யனுடைய சரீரத்தைப் பலவாகச் செய்து சிம்ம ரூபியானான் –
உபசயாத்மகமான-வளர்ந்து கொண்டே -பரியனாகி வந்த அவுணன் உடல் அன்றோ –(தேகம் வளர்ந்து -சரீரம் இளைத்து )
செவி தெரியா-நாகத்தான் —
ஒரு இந்த்ரியத்தாலே எல்லாவற்றையும் க்ரஹிக்குமவன் -சஷூஸ் ஸ்ரவா இறே -(ஸங்கல்பத்தாலே அனைத்தும் அறிபவன் )
நால் வேதத்துள்ளான் –
நாலு வேதங்களாலும் பிரதிபாதிக்கப்பட்டவன்
நறவேற்றான்-பாகத்தான்–
நறவை ஏற்றவன் –நறவையும் ஏற்றையும் யுடைய ருத்ரனுக்குத் திருமேனியிலே இடம் கொடுத்த சீலவானாவான்-
பாற் கடலுளான்–
திருப் பாற் கடலிலே உள்ளவன்
இவை யவன் கோயில்-கீழ்ச் சொன்னவை -நெஞ்சை வருந்தி அனுவர்த்தித்தபடி –
(ஆகவே நெஞ்சே இவ்வாறு எளியவனாகையாலே அவனை விட்டு விடாமல் இருக்க வேண்டும் என்றவாறு)
—————————————————————–
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை
இவ்விவ இடங்களிலே வந்து நிற்கிறவன் ஆஸ்ரித விரோதிகளை போக்கி துர்மானிகளோடும்
புறையறக் கலக்கும் ஸீலவான் கிடீர் -என்கிறார்
அவன் உகந்து நித்ய வாசம் பண்ணுகிற ஸ்தலங்களாய் இருக்கும் கீழ்ச் சொன்ன இந்தத் திருப்பதிகள் எல்லாம்
ஹிரண்யனுடைய முரட்டு உடம்பை சின்னம் பின்னம் என்னும்படி பல கூறாம் படி பண்ணி அவன் வாரத்துக்கு
உள்ளடங்காத நரசிம்ஹ ரூபியானவன் –
சஷூஸ் ஸ்ரவா யாகையாலே சஷூர் இந்திரியம் கொண்டே ஸ்ரோத்ர இந்திரிய காரியமும்
கொள்ள வல்லவன் ஆகையால் செவியால் தெரியும் தெரிவின்றிக்கே இருக்கிற திருவனந்த ஆழ்வான் உடைய
திரு மேனியில் நிரந்தர சம்ச்லேஷம் பண்ணி வர்த்திக்குமவனாய்
நிர்தோஷ ப்ரமாணமான நாலு வேதங்களுக்கும் ப்ரதிபாத்யனாய் வர்த்திக்குமவனாய் –
ஹேயமான மதுவையும் ருஷபத்தையும் யுடைய துர்மாணியான ருத்ரனைத் திருமேனியின் பார்ஸ்வத்திலே
யுடையவன் ஆகையால் அத்யந்தம் ஸூ சீலனுமான சர்வேஸ்வரன் ப்ரஹ்மாதிகளுக்கு ஆசிரயணீயனாய்க் கொண்டு
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினான் –
——————————————————————–
இப்படி சீலவானான அவன் எழுந்து அருளி இருக்கும் இடங்களுக்கு ஓர் எல்லை இல்லை -என்கிறார்
பாற் கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூற் கடலும் நுண்ணூல தாமரை மேல் -பாற் பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்து ஒசித்த கோபாலகன் ——-32-
பதவுரை
குருந்து–குருந்த மரத்தை
ஒசித்த–முறித்தொழித்த(மருத மரங்கள் சகடத்தால் முறித்தது வேறே சரித்திரம் )
கோபாலகன்–கண்ணபிரான்
பால் கடலும்–திருப்பாற் கடலையும்
வேங்கடமும் திருமலையையும்
பாம்பும்–திருவனந்தாழ்வானையும்–ஸுசீல்யம் சொல்ல வந்த இடம் என்பதால் இப்பத பிரயோகம்
பனி விசும்பும்–(ஸம்ஸார தாபங்கள் தட்டாமல்) குளிர்ந்திருக்கிற பரம பதத்தையும்
நூல் கடலும்–கடல் போன்ற சாஸ்த்ரங்களையும்
துண் நூல தாமரை மேல் பால் பட்டிருந்தார் மனமும்–ஸூஷ்மமான சாஸ்த்ரங்களால் பிரதிபாதிக்கப்பட்ட
ஹ்ருதய கமலத்திலே கரணங்களெல்லாம் ஊன்றி யிருக்கும்படி யோகத்தில் நிலை நின்ற யோகிகளினுடைய நெஞ்சையும்
இடம் ஆக கொண்டான்–வாஸஸ்தானமாகக் கொண்டிருக்கிறான்.
பாற் கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூற் கடலும் —
இதிஹாச புராணங்கள் ஆகிற கடலும் –
நுண்ணூல தாமரை மேல் –
இதிஹாச புராணங்களில் ஹ்ருதய கமலம் என்று
பாற் பட்டு-
சொல்லப் படுகிறதின் மேல் வைக்கப் பட்ட
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்-
இந்திரியங்களை யுடைய மனஸை தனக்கு இருப்பிடமாகக் கொண்டான்
குருந்து ஒசித்த கோபாலகன் —-
விரோதியைப் போக்கி ஸூலபனானவன்-
இவனுடைய உண்மை எல்லாம் பரார்த்தம் என்கிறது –
(மாயப் பிரானென வல்வினை மாய்ந்தற,
நேயத்தி னால் நெஞ்சம் நாடு குடி கொண்டான்,
தேசத் தமரர் திருக்கடித் தானத்தை,
வாசப் பொழில் மன்னு கோயில் கொண் டானே.–8-6-4-
நெஞ்சநாடு – சோழநாடு தொண்டைநாடு பாண்டிநாடு மலைநாடு தென்னாடு வடநாடு என்கிறாப்போலே நெஞ்சநாடென்றும் ஒரு நாடு உண்டாயிற்றுப்போலும்.– ஈடு, “ஸம்ச்லேஷ விச்லேஷங்களாலே ஒரு த்ரிபாத் விபூதியாக்கினானாயிற்று இவர் திருவுள்ளத்தை“)
——————————————————————–
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை
இப்படி சீலவானான அவன் எழுந்து அருளி இருக்கும் இடங்களுக்கு ஓர் எல்லை இல்லை -என்கிறார்
குருந்தத்தை அநாயாசேன முறித்துப் பொகட்ட கோப குல அவதீர்ணனான கிருஷ்ணன் -திருப் பாற் கடலும் -திரு மலையும்
திருவனந்த ஆழ்வானும் -சம்சார வெக்காயம் தட்டாத படி -குளிர்த்தி மிக்கு நிரதிசய போக்யமான ஸ்ரீ வைகுண்டமும்
ஸ்ருதி ஸ்ம்ருதி யாதிகளான (ஆதி -இதிஹாஸ புராணங்கள் )சாஸ்திர சமுத்திரமும் –பத்ம கோச ப்ரதீகாசம் ஹ்ருதயம் சாப்யதோமுகம்-என்று
(அதோமுகம் தலை கீழ் வைத்த ஹ்ருதய தாமரை )அதி ஸூ ஷ்மமான வேதாந்த சாஸ்திர ஸித்தமான ஹ்ருதய கமலத்தின் மேலே ஸமஸ்த கரணங்களும்
ப்ரவணமாம் படி யோகத்தில் ஸூ பிரதிஷ்டராய் இருக்கிற பரம யோகிகளுடைய மனஸ்ஸூம் ஆகிற
இவ்விவ ஸ்தலங்களை அபிமதமான இருப்பிடமாகக் கொண்டான் –
——————————————————————-
இப்படி இருக்கிறவன் அபேக்ஷித்தார் அபேக்ஷித்தத்தை எல்லாம் கொடுக்குமவன் கிடீர் என்கிறார் –
(இப்படி சர்வ ஸூலபனாய் இருந்தால் -நமது அபேக்ஷிதங்களைத் தர வல்லவனோ என்னில்
நாம் விரும்பாமல் இருந்த காலத்தும் தந்தவன் -ப்ரயோஜனாந்தர பரர்களுக்கும் கேட்டதை அளித்தவன் என்று சங்கதி)
பாலகனாய் ஆலிலை மேல் பைய உலகெல்லாம்
மேலோருநாள் உண்டவனே மெய்ம்மையே -மாலவனே
மந்தரத்தால் மா நீர்க் கடல் கடைந்து வானமுதம்
அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ யன்று —33–
பதவுரை
மேல் ஒரு நாள்–முன்னொரு காலத்தில்
பாலகன் ஆய்–சிறு குழந்தை வடிவமுடையனாகி
ஆல் இலை மேல்–ஆலந்தளிரிலே
உலகு எல்லாம்–உலகங்களையெல்லாம்
பைய–மெல்ல
மெய்மையே–உண்மையாகவே
உண்டவனே–அமுது செய்து கிடந்தவனே!
மாலவனே–ஸர்வாதிகளே!
நீ–இப்படிப்பட்ட நீ,
அன்று–அன்றொருநாள்
மந்தரத்தால்–மந்தர மலையைக் கொண்டு
மா நீர்க் கடல் கடைந்து–மிக்க நீரை யுடைய கடலைக் கடைந்து
வான் அமுதம்–திவ்யமான அமிருதத்தை
அந்தரத்தார்க்கு–தேவர்களுக்கு
ஈந்தாய்–அளித்தாய்.
பாலகனாய் ஆலிலை மேல் பைய உலகெல்லாம்–
ஒரு பாவனாய் இருபத்தொரு ஆலிலையின் மேலே பருவம் நிரம்பாப் பிள்ளையாய் –
மேலோருநாள் உண்டவனே —
லோகங்களை எல்லாம் நோவு படாமல் மெள்ளத் திரு வயிற்றிலே வைத்தவன் –
(எஞ்சாமல் வயிற்றில் வைத்து –பேதைக் குழவி பிடித்து சுவைத்து உண்ணும் பாத கமலம்)
மெய்ம்மையே —
ஐந்த்ர ஜாலகரைப் போலே யன்றிக்கே சத்யமே–
மாலவனே மந்தரத்தால் மா நீர்க் கடல் கடைந்து வானமுதம் அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ யன்று–
பிராணனைக் கொடுக்க வல்ல மிடுக்கை யுடைத்தான அம்ருதத்தை ஆகாசத்தே நிற்கிறவர்களுக்குக் கொடுத்தாய் நீ அன்று –
(வானமுதம்-சிறப்பு மிக்க அமுதம் அன்றோ)
(கீழே வந்ததாக இவர்களுக்கு நினைவே இருக்காதே -எண்ணம் ஸ்வர்க்கத்திலே இருப்பதாகவே உள்ள தேவர்கள்)
(இப்படிப்பட்டவர்களுக்கு அபேக்ஷிதங்களை அளிப்பவன் அவனைக் கேட்டால் நமக்குத் தராமல் இருப்பானோ நெஞ்சே என்றபடி)
———————————————————————–
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை
இப்படி இருக்கிறவன் அபேக்ஷித்தார் அபேக்ஷித்தத்தை எல்லாம் கொடுக்குமவன் கிடீர் என்கிறார் –
தனக்கு சிலர் பரிய வேண்டும் படி முக்த சிஸூவான விக்ரஹத்தை யுடையவனாய்க் கொண்டு பவனாய் இருபத்தொரு
ஆலந்தளிரின் மேலே பூர்வ காலத்திலே லோகங்கள் எல்லாவற்றையும் நெருக்குப் படாதபடி மெள்ள இந்த்ர ஜாலமாக வன்றிக்கே
பரமார்த்தமாக திரு வயிற்றிலே வைத்து நோக்கினவனாய் -(பிரளய ஆபத்தில் அபேக்ஷியாத காலத்திலேயே ரஷித்தவன் அன்றோ )
இந்த அகடிகடனா சாமர்த்தியத்தால் சர்வாதிகன் என்று தோற்ற இருக்கிறவனே-
ஏவம் விதமான சக்தி மஹாத்ம்யத்தை யுடைய நீ தேவர்கள் -சாகாமைக்கு மருந்து தேடித் தர வேணும் -என்று
அர்த்தித்த அன்று மந்த்ர பர்வதத்தாலே-மிக்க ஜலத்தை யுடைத்தான திருப் பாற் கடலைக் குளப்படி போலே கலக்கி
உடம்பைப் பூண் கட்டிக் கொடுக்கும் உரப்பை யுடைத்தான அம்ருதத்தை ஸ்வர்க்க வர்த்திகளான தேவர்களுக்கு கொடுத்து அருளினாய் –
——————————————————————
அவனுடைய சத்தை பரார்த்தமான பின்பு அவனைக் காண ஆசைப்படாய் -என்று
தம்முடைய நெஞ்சைக் குறித்துச் சொல்கிறார் –
ஸ்ரீ காஞ்சீ புரத்தில் பல திருப்பதிகளிலும் நிற்பது இருப்பது கிடப்பது ஆகிற அவன் படியை அனுசந்தித்து முன்பு
திரு உலகு அளந்து அருளின போதை சிரமத்தாலே வந்ததாகக் கொண்டு அஞ்சுகிறார் –
இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால்வரைச்சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக்கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே— திருச்சந்தவிருத்தம்
மடியா தின்னே நீதுயில் மேவி மகிழ்ந்ததுதான்,
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ? அன்றேல்,
இப்படிதான் நீண்டு தாவிய அசைவோ? பணியாயே.–8-3-5-
இப்பாட்டில் திருக்கோளூரையும் திருப்புளிங்குடியையும் பிரஸ்தாவித்தது மற்றுமுள்ள சயனத்திருப்பதிகளுக்கும் உபலக்ஷணம்.
* நாகத்தணைக் குடந்தை வெஃகாத் திருவெவ்வுள், நாகத் தணையரங்கம் பேரன்பில் * என்று திருமழிசைப்பிரானும்,
* அரங்கம் மெய்யம் கச்சி பேர்மல்லை * என்று திருமங்கை மன்னனும் தொடுத்தருளின சயனத் திருப்பதிகள் பலவும் இங்கே விலக்ஷிதமாகலாம்.
இத்திருப்பதிகளிலே ஆடாமல் அசையாமல் நீ திருக்கண்வளர்ந்தள்வதற்கு என்ன காரணம்? மஹத்தான சிரம்மோ?
திருவடிகளிலே சரணம் புகுந்த இந்திராதி தேவர்களுக்காக ராவணாதிகளை அழியச்செய்து அவர்களது துக்கங்களைப் போக்கின. விளைப்போ? அன்றியே, அன்றே பிறந்து அன்றே வளர்ந்து. ஸுகுமாரமான திருவடிகளைக் கொண்டு உலகமெல்லாம் தாவியளந்த சிரம்மோ? என்கிறார்.
கொடியார் மாடம் – மாடங்களுக்கு கொடிகட்டியிருப்பதும் ஆழ்வார்க்கு அச்சத்தை விளைக்கிறதென்று நம்பிள்ளை திருவுள்ளம்பற்றி யருளிச் செய்யுமழகு பாரீர் – “சத்ருக்கள், கிடந்தவிடமறிந்து அபிசரிக்கும்படி கொடி கட்டிக்கொண்டு கிடக்கவேணுமோ? கொடிக்கு பயப்படவல்லார் இவரைப் போலில்லை, கம்ஸ பயத்தாலே ஒளித்துவளர்ந்தாப்போலே யிருக்கலாகாதோ?“ என்பன ஈட்டு ஸ்ரீஸூக்திகள்
அன்றிவ்வுலகம் அளந்த அசைவே கொல்
நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய் -அன்று
கிடந்தானைக் கேடில் சீரானை முன் கஞ்சைக்
கடந்தானை நெஞ்சமே காண்–34–
பதவுரை
நெஞ்சமே–மனமே!
அன்று–முன்பொரு காலத்தில்
நின்று–நின்று கொண்டே
இவ்வுலகம்–இவ்வுலகங்களை யெல்லாம்
அளந்த–அளந்ததனாலுண்டான
அசவே கொல்–சிரமத்தினாலேயோ
வேளுங்கை–திருவேளுக்கையிலே
இருந்து–வீற்றிருந்து
நீள் நகர் வாய்–(திருவெஃகா வென்கிற) சிறந்த திருப்பதியில்
அன்று–ஒரு காலத்தில்
கிடந்தானை-பள்ளி கொண்டவனும்–
கேடு இல் சீரானை-ஒரு காலு மழிவில்லாத திருக் குணங்களை யுடையவனும்
முன்–முன்னொரு கால் கம்ஸனை
கடந்தானை–கொன்று ஓழித்தவனுமான பெருமானை
காண்–ஸேவி
கேடில் சீரானை —
நித்ய ஸித்தமான கல்யாண குணங்களை யுடையவனை —
முன் கஞ்சனைக் கடந்தானை நெஞ்சமே காண்–
கம்சன் நினைத்த வஞ்சனையை அவன் தன்னோடு போம்படி முடித்து உபகாரகன் ஆனவனை –
அன்றிவ்வுலகம் அளந்த அசைவே கொல்-நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய் -அன்று-கிடந்தானை-
பூமி அடங்கலும் நின்று அளந்த வருத்தத்தாலேயே திரு வெஃகாவில் கண் வளர்ந்து அருளுகிறதும் –
திரு வேளுக்கையில் இருக்கிறதும் என்று நெஞ்சே அநுஸந்தி
(நீள் நகர் என்றதே திரு வெக்கா என்று ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு உள்ளம்)
————————————————————————-
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை
ஸ்ரீ காஞ்சீ புரத்தில் பல திருப்பதிகளிலும் நிற்பது இருப்பது கிடப்பது ஆகிற அவன் படியை அனுசந்தித்து முன்பு
திரு உலகு அளந்து அருளின போதை சிரமத்தாலே வந்ததாகக் கொண்டு அஞ்சுகிறார் –
திரு வேளுக்கையிலே எழுந்து அருளி இருந்து -மஹா நகரமான திரு வெஃகாவில் சாய்ந்து அருளினவனாய் –
நித்ய ஸித்தமான கல்யாண குணங்களை யுடையனாய் முன்பு ஒரு நாளிலே விரகிலே நலியப் பார்த்த கம்சனை
முடித்துப் பொகட்டுத் தன்னை நோக்கித் தந்தவனை –
நினைவற எல்லார் தலையிலும் திருவடிகளை வைக்கிற அன்று
அநாயாசேன நின்று காடு மோடையுமான இஜ் ஜகத்தை அளந்து கொண்ட அலசுதலாலேயோ இருப்பது கிடப்பது ஆகிறது
என்று வயிறு எரிச்சலாலே நெஞ்சே அனுசந்திக்கப் பார்-
————————————————————————
நெஞ்சமே காண் என்று உபதேசித்தார் கீழ் -இந்திரியங்கள் தாம் முற்பட்டு இவரை மூட்டுமளவாயிற்று -என்கிறது –
நெஞ்சமே காண் என்று உபதேசித்து -இவர் வாய் மூடுவதற்கு முன்னே சஷூராதியான பாஹ்ய கரணங்கள்
தாம் முற்பட்டுத் தம்மையும் ப்ரேரித்துக் கொண்டு அங்கே மேல் விழுகிற படியைக் கண்டு ஆச்சர்யப்படுகிறார் –
(ஜிஹ்வே கீர்தய கேஶவம் முரரிபும் சேதோ ப⁴ஜ ஶ்ரீத⁴ரம்
பாணி த்³வந்த்³வ ஸமர்சயாச்யுத கதா:² ஶ்ரோத்ர த்³வய த்வம் ஶ்ருʼணு ।
க்ருʼஷ்ணம் லோக்ய லோசந த்³வய ஹரேர் க³ச்சா²ங்க்⁴ரி யுக்³மாலயம்
ஜிக்⁴ர க்⁴ராண முகுந்த³பாத³துளஸீம் மூர்த⁴ந் நமாதோ⁴க்ஷஜம் ॥–ஸ்ரீ முகுந்த மாலை 16॥)
கண் காண் என விரும்பும் கண்கள் கதிரிலகு
பூண் தார் அகலத்தான் பொன் மேனி -பாண் கண்
தொழில் பாடி வண்டறையும் தொங்கலான் செம்பொற்
கழல் பாடி யாம் தொழுதும் கை ——35–
பதவுரை
கண்கள்–என்னுடைய கண்களானவை
கதிர் இலகு–ஒளிவிளங்கா நின்றுள்ள
பூண்–திவ்ய ஆபரணங்களையும்
தார்–மாலையையும்
அகலத்தான்–திருமார்விலே உடையனான எம்பெருமானுடைய
பொன்மேணி–அழகிய திருமேனியை
கண் காண் என விரும்பும்–காணவேணுங் காண வேணுமென்று ஆசைப்படா நின்றன.
வண்டு–வண்டுகளானவை
பாடி–இசைப்பாடிக்கொண்டு
அறையும்–ஒலி செய்யப் பெற்ற
தொங்கலான்–மாலையை யுடையனான அப்பெருமானுடைய
தொழில்–சேஷ்டிதங்களை
பாண் கண் பாடி–ராகத்திலே அமைத்துப்பாடி
யாம்–நாம்
கை–கைகளினாலே
செம் பொன் கழல் தொழுதும்–சிவந்த பொன்போல் சிறந்த (அவனுடைய) திருவடிகளை வணங்குவோம்
காண் காண் என விரும்பும் கண்கள் கதிரிலகு பூண்டார கலத்தான் பொன் மேனி —
காண் காண் என விரும்பும் கண்கள்–ஒளி விடா நின்ற ஹாரத்தையும் தாரையும் யுடைத்தான –
திரு மார்பை யுடையவனுடைய ஸ்ப்ருஹணீயமான திருமேனியைக் கண்கள் காண் காண் என விரும்பா நின்றது –
பாண் கண்-தொழில் பாடி —
பாட்டிலே தொழில் யுண்டாக பாடி –பாண் தொழில் உண்டாகப் பாடி என்றுமாம்-
அவனுடைய தொழிலைப் பாட்டிலே வைத்துப் பாடி என்னவுமாம் –
வண்டறையும் தொங்கலான செம்பொற்-கழல் பாடி யாம் தொழுதும் கை —-
வண்டுகள் சப்தியா நின்றுள்ள மாலையை யுடைய ஸ்ப்ருஹணீயமான திருவடிகளைக் கையாலே தொழுவோம் –
(ஸ்வரத்துடன் பாடி -பாணர்கள் தொழில் செய்து -அவன் உடைய அழகிய பாண் -அழகு -சேஷ்டிதங்களைப் பாடி மூன்று அர்த்தங்கள்)
————————————————————————-
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை
நெஞ்சமே காண் என்று உபதேசித்து -இவர் வாய் மூடுவதற்கு முன்னே சஷூராதியான பாஹ்ய கரணங்கள்
தாம் முற்பட்டுத் தம்மையும் ப்ரேரித்துக் கொண்டு (முன்புற்ற கரணங்கள் ஆயினவே )அங்கே மேல் விழுகிற படியைக் கண்டு ஆச்சர்யப்படுகிறார் –
என்னுடைய கண்களானவை புகர் ஒளி விடா நின்றுள்ள ஆபரணங்களையும் திரு மாலையையும் யுடைத்தான
அகன்ற திரு மார்வை யுடைத்தானவனுடைய பொன்மலை போலே ஸ்ப்ருஹணீயமான திருமேனியைக்
காண வேணும் காண வேணும் என்று ஷாம காலத்தில் சிறு பிரஜைகள் சோறு சோறு என்று அலையுமா போலே
மிகவும் ஆசைப்படா நின்றன –
பாட்டினிடத்திலே அவனுடைய சேஷ்டிதங்களை வைத்துப் மதுபான மத்தமாய்க் கொண்டு
வண்டுகள் சப்தியா நின்றுள்ள திரு மாலையாலே அலங்க்ருதனானவனுடைய –சிவந்த பொன் மேலே அதி சிலாக்யமான
திருவடிகளை நாம் வாயாரப் பாடி –கையாலே அத்யபி நிவேசம் அடங்கும் படி -தொழுவோம்
பாண் -என்று பாட்டாய் -கண் என்று இடமாய் -பாட்டின் இடத்திலே தொழிலை வைத்துப் பாடி என்றபடி –
அன்றிக்கே -பாண் என்று அழகாய் அழகிய தொழிலைப் பாடி என்னவுமாம் –
பாணருடைய தொழிலிலே-ரீதியிலே பாடி -என்னுதல்
பாட்டுக்களைத் தொழில் யுடைத்தாம் (ஸ்வரங்களுடன் )படி பாடி என்னவுமாம் –
—————————————————————————
யாம் தொழுதும் என்று மநோ ரதித்த படியே அனுபவிக்கிறார் –
(அவன் தொழிலைப் பாட ஆசைப்பட்டபடியே திவ்ய ஆயுதங்களின் சேர்க்கையும்
திரு அனந்தாழ்வான் மேல் திருப்பாற்கடலில் கண் வளர்ந்து அருளி
அங்கு இருந்தும் உலகு அளந்த சேஷ்டிதங்களைப் பாடி மகிழ்கிறார்-)
கையனலாழி கார்க் கடல் வாய் வெண் சங்கம்
வெய்ய கதை சார்ங்கம் வெஞ்சுடர்வாள் -செய்ய
படை பரவை பாழி பனி நீருலகம்
அடியளந்த மாயரவர்க்கு —–36–
பதவுரை
பனி நீர் உலகம்–குளிர்ந்த நீரை யுடைய கடல் சூழ்ந்த உலகங்களை
அடி–தனது திருவடியினாலே
அளந்த–அளந்து கொண்ட
மாயர் அவர்க்கு–ஆச்சரியச் செய்கையை யுடையரான அப்பெருமாளுக்கு
கனல் ஆழி–தீஷ்ணமான சக்கரமும்
கார் கடல் வாய் வெண் சங்கம்–கருங்கடலில் தோன்றின வெளுத்த சங்கும்
வெய்ய–வெவ்விதான
கதை–கதையும்
சார்ங்கம்–சார்ங்கமும்
வெம் சுடர்வாள்–வெவ்விய சுடரையுடைய நந்தகவாளும் ஆகிய
செய்ய படை–அழகிய இவ்வாயுதங்கள்
கைய–திருக்கையிலுள்ள,
பரவை–கடலானது
பாழி–படுக்கையாயிருக்கின்றது.
அனலாழி கார்க் கடல் வாய் வெண் சங்கம்-வெய்ய கதை சார்ங்கம் வெஞ்சுடர்வாள் –
செய்ய–படை –கைய-
இவை கையில் உள்ளன
செய்ய என்று -ஆபரணமான போது புகரைச் சொல்லுகிறது –
செய்ய என்று-ஆயுதமான போது விதேயமான ஆயுதங்கள் -கருதும் இடம் பொரும் அன்றோ
பரவை பாழி—-திருப் பாற் கடல் படுக்கை —
பனி நீருலகம்-அடியளந்த மாயரவர்க்கு —
கடல் சூழ்ந்த பூமி யளந்த சர்வேஸ்வரனுக்கு –
—————————————————————————
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை
யாம் தொழுதும் என்று மநோ ரதித்த படியே அனுபவிக்கிறார் –
குளிர்ந்த நீரை யுடைத்தான கடல் சூழ்ந்த பூமியைத் திருவடிகளாலே அளந்து கொண்ட ஆச்சர்ய பூதனான அந்த
சர்வேஸ்வரனுக்கு பிரதி பக்ஷத்தின் மேலே நெருப்பை உமிழா நின்றுள்ள திரு வாழி —
கறுத்த நிறத்தை யுடைத்தான கடல் இடத்தே பிறந்த வெளுத்த நிறத்தை யுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் –
வெவ்விதான ஸ்ரீ கதை -அப்படி இருந்துள்ள ஸ்ரீ சார்ங்கம் -வெவ்விய தேஜஸ்ஸை யுடைய திருக் குத்துடை வாள் –
இவை யாகிற அழகிய திவ்ய ஆயுதங்கள்- திருக் கையிலே யுளவாய் இரா நின்றன –
திருப் பாற் கடல் படுக்கையாய் இரா நின்றது -என்று வித்தராய் அனுபவிக்கிறார் –
———————————————————————-
நாம் அடிமையில் அந்வயிக்க (35-36 பாசுரங்களில் )ஸுபரியைப் போலே அநேகம் வடிவு கொண்டு புஜிக்க ஆசைப்படா நின்றான் -என்கிறது –
(ஆபாச விருத்திக்கு அங்கு -தர்மபூத வியாப்தி -இவனுக்கோ ஸ்வரூப வியாப்தி ப்ராப்ய விஷயத்தில்)
இப்படி தாம் அவனை அனுபவிக்கப் புக்கவாறே அவனும் தன் பெருமையைப் பாராமல் தம் பக்கலிலே
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு பல வடிவு கொண்டு தம்மை அனுபவியா நின்றான் என்கிறார் –
(வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணிலென்று
ஆர்வற்ற வென்னை யொழிய என்னில் முன்னம்
பாரித்து தானென்னை முற்றப் பருகினான்
காரொக்கும் காட்கரை யப்பன் கடியனே.–9-6-10- திருவாய்மொழி யாயிரத்தினுள்ளும் இப் பாட்டு உயிரானதென்னலாம்.)
(ஈஸ்வர லாபம் சேதநர்களுக்குப் புருஷார்த்தமா? சேதந லாபம் ஈஸ்வரனுக்குப் புருஷாத்தமா? என்றொரு விசாரம் ஸம்ப்ரதாய ரஸிகர்கள் செய்வதுண்டு; சேதந லாபந்தான் ஈஸ்வரனுக்குப் புருஷார்த்தம் என்பதே ஸித்தாந்தம்.
எம்பெருமான் ஸ்ருஷ்டி யவதாரதி முகத்தாலே க்ருஷி பண்ணுவதெல்லாம் ஒரு சேதகன் நமக்குக் கிடைப்பனாலென்கிற நப்பாசையினாலன்றோ.
ஸஹஸ்ர சீர்ஷா -எங்கும் வியாபித்து -அத்யதிஷ்டதி தசாங்குலம்- பொருளைத் தாண்டி பத்து மடங்கு நின்று ரக்ஷணத்தில் பாரிப்பு இருந்தபடி –
அதே போல் என்னுள்ளும் உள்ளும் இருந்து ரக்ஷிக்கிறானே)
அவர்க்கு அடிமை பட்டேன் அகத்தான் புறத்தான்
உவர்க்கும் கருங்கடல் நீருள்ளான் -துவர்க்கும்
பவள வாய்ப் பூ மகளும் பன் மணிப் பூணாரம்
திகழும் திரு மார்வன் தான் ——37–
பதவுரை
உவர்க்கும் கரு கடல் நீர் உள்ளான்–உப்புக் கரிக்கின்ற கரிய கடல்நீரிலுமுள்ளவனாய்
துவர்க்கும் பவளம் வாய் பூ மகளும்–சிவந்த பவளம் போன்ற வாயை யுடையளான பிராட்டியும்
பல் மணி பூண்–பலவகையான ரத்னங்களழுத்தின திருவாபரணங்களும்
ஆரம்–ஹாரங்களும்
திகழும்–விளங்கப் பெற்ற
திரு மார்வன் தான்–திருமார்பை யுடையனான எம்பிரான்-திரு வார மார்பன் -ஆரமும் திருவும் திகழும் மார்பன் அன்றோ
அகத்தான் புறத்தான்–உள்ளிலும் வெளியிலும் வாசி யறக் கலந்திருக்கின்றான்.
அவற்கு–அப்படிப்பட்ட பெருமானுக்கு-கீழ் சொன்னபடி திவ்ய ஆயுதங்கள் தரித்து உலகு அளந்த சர்வேஸ்வரனுக்கு
அடிமை பட்டேன்–ஆட்பட்டவனானேன்.
(அகத்தான் புறத்தான்-அனைத்து வாசகமும் இவனையே சொல்லும் -இந்திரா ஸகல ஐஸ்வர்யம் கொண்டவன் -என்றும் அந்தர்யாமிதயா என்றும் உண்டே)
அவர்க்கு அடிமை பட்டேன் அகத்தான் புறத்தான் உவர்க்கும் கருங்கடல் நீருள்ளான் —
திருப் பாற் கடலை வாசஸ் ஸ்தானமாக உடையனாய்
(இவர் திருமேனி நிழலீட்டால் -நீலக்கடல் கடைந்தாய் உன்னைப் பெற்றும் இனி போக்குவேனோ என்றார்)
துவர்க்கும்-பவளவாய்ப் பூ மகளும் பன் மணிப் பூணாரம் திகழும் திரு மார்வன் தான் —-
பெரிய பிராட்டியாரையும் அநேகம் மாணிக்கங்களையும் யுடைத்தாய் இருந்துள்ள
பூண் ஆரத்தாலே திகழா நின்றுள்ள திரு மார்பையும் யுடையவன் -அவனுக்கு அடிமைப் பட்டவன்-
குறைவற்ற மேன்மையையும் -வடிவு அழகையும் யுடைய ஸ்ரீயபதியானவன் நான் அடிமையிலே அந்வயித்த
மாத்திரத்திலே உள்ளும் புறமும் விட சக்தன் ஆகிறிலன்-
(உப்புக் கரிக்கும் கடலிலும் உள்ளான் -மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் -அதே போல் பாற் கடலிலும் கண் வளர்ந்து அருளுகிறான் என்றவாறு
அனுபவிக்க ஸ்தானம் -அனுபாவ்யம் -அனுபோக்தாக்கள் -குறைவற்ற அவன் அன்றோ இவ்வாறு என்னிடம் உள்ளான்)
(அந்தர் பஹிஸ்ய தத் சர்வம் வியாப்ய நாராயணன் ஸ்தித -எல்லார் இடமும் உண்டே
ஆழ்வார் போல்வாருக்கோ சரோ லஷ்மி விசிஷ்டானாய் சகல திவ்ய மங்கள விக்ரஹத்துடன் வியாபித்து இருப்பானே)
—————————————————————-
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை
இப்படி தாம் அவனை அனுபவிக்கப் புக்கவாறே அவனும் தன் பெருமையைப் பாராமல் தம் பக்கலிலே
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு பல வடிவு கொண்டு தம்மை அனுபவியா நின்றான் என்கிறார் –
அப்படிப்பட்ட வைபவத்தை யுடையனானவனுக்கு ஒரு பிரகாரத்தாலே அடிமை புக்கேன் -அநந்தரம் பூமியைச் சூழ்ந்து
லவண உத்தரமாய் -கறுத்து இருந்த கடல் நீரிலே கண் வளர்ந்து அருளுமவனாய் -சிவந்த பவளம் போலே இருந்துள்ள
திரு அதரத்தை யுடையளான பெரிய பிராட்டியாரையும் -பல வகைப்பட்ட ரத்தினங்களை யுடைத்தான ஆபரணங்களையும் –
திரு ஆரத்தையும் யுடைத்தாய்க் கொண்டு விளங்கா நின்றுள்ள திரு மார்வை யுடையனான அவன் தான் –
அந்த ஒப்பனையையும் குறைவற்ற மேன்மையையும் பிராட்டியுடைய ஆதாரத்தையும் புரிந்து பாராமல் ஸுபரியைப் போலே
பல வடிவு எடுத்துக் கொண்டு உள்ளொடு புறம்போடு வாசி அறக் கலந்து நின்று அனுபவியா நின்றான்-
ஒருவனுடைய அபி நிவேசம் இருக்கும் படியே என்று ஈடுபடுகிறார் –
(அடியேன் ஒரு பிரகாரத்தாலே மட்டுமே -வாசிக கைங்கர்யத்தில் மட்டுமே அடிமை புக்கேன்-
அவனோ ஸர்வ பிரகாரத்தாலே அபி நிவேசம் மிக்கு இருக்கும் படியை -தானே நீரைப் படைத்து
அதனுள்ளே தானே கண் வளர்ந்து அருளும் இவன் அன்றோ இவ்வாறு உள்ளான் என்று நினைத்து ஈடுபடுகிறார் )
———————————————————————
இப்படி என்னை மேல் விழுந்து விரும்புகிறவன் ஒரு கா புருஷன் அல்லன் -சர்வேஸ்வரன் கிடீர் -என்கிறார் –
தானே தனக்குமவன் தன்னுருவே எவ்வுருவும்
தானே தவவுருவும் தாரகையும் –தானே
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடருமாய விறை –38-
பதவுரை
எவ் உருவும்–எல்லாப் பொருள்களும்
தன் உருவே–அவன் தனக்கு சரீரமாகவே யிருக்கும்,
தவம் உருவும்–தபஸ்ஸு பண்ணிப் புண்ய சரீரமுடையராயிருக்கிற பிரமன் முதலானவர்களும்
தாரகையும்–நக்ஷத்ரங்களும்
தானே–அவன் தன் வடிவாகவே யிருக்கும்,
எரி சுடரும்–ஜ்வலிக்கின்ற அக்நியும்
மால் வரையும்–பெரிய குல பர்வதங்களும்
எண் திசையும்–எட்டு திக்குகளும்
அண்டத்து–மேலுலகிலுள்ள
இரு சுடரும்–சந்த்ர ஸூர்யர்களும்
தானே ஆய இறை–தனக்கு ப்ரகாரமாயிருக்கப் பெற்ற எம்பெருமான்-ஸர்வ ஸ்வாமியானவன்
தனக்கு தானே உவமன்–(ஒப்பற்றனாகையாலே) தனக்குத் தானே உபமானமாயிருப்பவன்.-அத்விதீயம் நம்மது -அத்வைதம் போல் அல்லவே
(நளிர் மதி சடையன் என்கோ -முனியே நான்முகன் முக்கண் அப்பா -அரி யயனை அலற்றி–நீராய் நிலனாய் சிவனாய் அயனாய் -ஸரீராத்ம பாவத்தால் ஸாமாநாதி கரண்யம்-வியாப்த கத தோஷம் தட்டாதவன் -ஸர்வ ஸ்வாமியானவன் -உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் )
(சரீரம் பிரகாரம் -அப்ருதக் ஸித்த விசேஷணம் -பூ மணம் மாணிக்கம் ஒளி –
பிரகாரமாக இருப்பவை எல்லாம் சரீரமாக இருக்க வேண்டாமே –
சரீரமாக இருப்பவை எல்லாம் பிரகாரமாகவே இருக்கும்
நம்மது -பிரகாரி அத்வைதம் -சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் போல் இன்னும் ஓன்று இல்லையே -ஆகவே பிரகாரி அத்வைதம்)
தானே தனக்குமவன் –
தனக்கு உபமான ரஹிதன் —
உபமான ராஹித்யத்துக்கு அடி -சகல பதார்த்தங்களும் அவனுக்கு
பிரகாரங்களாய் -தான் பிரகாரியாய் -பிரகாரி யந்த்ரம் இன்றிக்கே இருக்கை –
தன்னுருவே எவ்வுருவும் -எல்லா பதார்த்தங்களும் அவனுக்கு சரீரம் –
(ஜகத் சர்வம் சரீரந்தே -பவான் நாராயணோ தேவ –ஆத்மநாம் மானுஷம் மன்யே)
தானே தவவுருவும் –தபஸ் ஸூ பண்ணி- புண்ய சரீரான -அதிகாரிகளும் அவனுக்குப் பிரகாரம் –
(யுக கோடி ஸ–த்ரை லோகாய ப்ராப்தாவான் -அடைந்தான்
மஹாதேவ்சன் சர்வமேத யாகத்தில் தன்னையே ஆஹுதியாகக் கொடுத்து சிவா பதவி பெற்றான்
பரன் திறம் அன்றி தெய்வம் மற்று இல்லை(
————————————————————-
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை
இப்படி என்னை மேல் விழுந்து விரும்புகிறவன் ஒரு கா புருஷன் அல்லன் -சர்வேஸ்வரன் கிடீர் -என்கிறார் –
தன்னை ஒழிந்த சகல பதார்த்தங்களும் தனக்கு சரீரமாய் இருக்கும் -தபஸ்ஸைப் பண்ணின புண்ய சரீரராய் –
ஸ்ருஷ்ட்யாதி கார்யங்களிலே அதிகரித்த ப்ரஹ்மாதி பதார்த்தங்களும் நக்ஷத்ரங்களும் தான் என்கிற சொல்லுக்குள்ளே
அடங்கும் படி தனக்கு பிரகாரமாயேயாய் இருக்கும் -ஜ்வலன ஸ்வபாவமான அக்னியும் -பெரிய குல பர்வதங்களும் –
எட்டு திக்குகளும் -அண்டாந்தர வர்த்திகளான சந்த்ர ஸூரியர்கள் ஆகிற இரண்டு வகைப்பட்ட தேஜஸ் பதார்த்தங்களும்-
தனக்கு பிரகாரமாய் இருக்கும் -இப்படி கார்ய காரண ரூபமான சகல பதார்த்தங்களும் தனக்கு பிரகாரமாய்-
தான் பிரகாரியாய் -தனக்கு ஒரு பிரகாரி யந்த்ரம் இன்றிக்கே இருக்கக் கடவ சர்வேஸ்வரன் தனக்குத் தானே
உபமானமாய் இருக்கும் –
இன்னமும் இப்படி இருப்பான் ஒரு ஈஸ்வரன் உண்டாகில் இறே ஒப்புக் சொல்லலாவது என்று கருத்து–
(ஜ்யோதி விஷ்ணு புவநாநி விஷ்ணு வனாநி விஷ்ணு ஏவ ஸர்வம் -யத் அஸ்தி நாஸ்தி ச விப்ரவர்யா -ஸ்ரீ விஷ்ணு புராணம்
ஸர்வம் கலு ப்ரஹ்மம்–ப்ரஹ்மம் ஒக்கடே -)
——————————————————————–
இப்படி ஜெகதாகாரனாய் நின்ற சர்வேஸ்வரன் திருமலையிலே வந்து சந்நிஹிதனாய்-
பின்பு என் ஹிருதயத்தை விட்டுப் போகிறிலன் -என்கிறார் –
(திருமலை-சாதனம் -உள்ளம் ஸாத்யம் -பேரேன் என்று நெஞ்சு நிறைய புகுந்தான்
மூன்று அடிகளால் கோர மா தவம் செய்து
உள்ளத்தின் உள்ளே வருவதற்காகவே)
இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்
மறையாய் மறைப் பொருளாய் வானாய்-பிறை வாய்ந்த
வெள்ளத்தருவி விளங்கொலி நீர் வேங்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே உளன் —–39-
பதவுரை
இறை ஆய்–ஸர்வ ஸ்வாமியாய்
நிலன் ஆகி–பூமிக்கு அந்தர்யாமியாய்
எண் திசையும் தான் ஆய்–எட்டு திக்குக்களிலுமுண்டான ஸகல வஸ்துக்களையும் தனக்கு ப்ரகாரமாக வுடையனாய்
மறை ஆய்–வேதங்களுக்கு ப்ரவர்த்தகனாய்
மறை பொருள் ஆய்–அந்த வேதங்களின் பொருளாயிருப்பவனாய்
வான் ஆய்–நித்ய விபூதி நிர்வாஹகனாய்
பிறை வாய்ந்த–சந்திர பதத்தைக் கிட்டியிருப்பதும்
வெள்ளம் அருவி–மிக்க ஜலத்தை யுடைய அருவிகளினுடைய
விளங்கு ஒலி–விளங்குகின்ற கோஷத்தை யுடைத்தான்
நீர்–நீரை யுடையதுமான
வேங்கடத்தான்–திரு வேங்கட மாலையில் வாழ்பவனான எம்பெருமான்
உள்ளத்தின் உள்ளே உளன்–என்னெஞ்சினுள்ளே இருக்கின்றான்
இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்-மறையாய்
உபய விபூதி உக்தனாய் -பூமியும் எட்டுத் திக்குகளும் வேதங்களும் தான் இட்ட வழக்கு –
(வையம் தகளியாய் –ஆழியான் -என்ற போதே உபய விபூதி நாதத்வம் சொல்லி வருகின்றார்கள் அன்றோ)
மறைப் பொருளாய்
வேத ப்ரதி பாத்யனாய் –
வானாய்-பிறை வாய்ந்த வெள்ளத் தருவி விளங்கொலி நீர் வேங்கடத்தான்-
சந்த்ர பதத்தில் கிட்டின வெள்ளத்தை யுடைத்தாய் இருந்துள்ள திருமலையில் நின்று
உள்ளத்தின் உள்ளே உளன்-
என்னுடைய ஹிருதயத்திலே புகுர அவசர பிரதீஷனாய் இருக்கிறான் –
(குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர் திரு வேங்கட மாமலை,
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.–3-3-8-
தாள் பரப்பி மண் தாவிய ஈசனை,
நீள் பொழில் குரு கூர்ச் சட கோபன் சொல்,
கேழில் ஆயிரத்திப் பத்தும் வல்லவர்,
வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே.–3-3-11-தாவி வையம் கொண்டவன் அன்றோ இன்று இங்கே நித்ய வாஸம் செய்து அருளுகிறான்)
ஸ்ரீ ஈட்டு ஸ்ரீஸூக்திகள் பரமபோக்யம்; அவை வருமாறு; “(ஆலினிலை மேல துயின்றான்.) தன்னைக் கொண்டு காரியமுடையார் சிலரைக் கண்டிலன்; எல்லார்க்கும் ஆராய்ச்சிப் படும்படியான செயலைச் செய்வோமென்று பார்த்தான்; வேண்டாவென்பாரைக் கண்டதில்லை. அது ஸாத்மித்தவாறே நித்யஸூரிகளும் தானுமாகவந்து திருமலையிலே நின்றான்; அதுவும் ஸாந்மித்தவாறே இவருடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்தான்; இங்கு விலக்குவார்ல்லாமையாலே ஸ்தாவர ப்ரதிஷ்டையாக இருந்தான்.* பனிக்கடலில் பள்ளி கோளைப் பழகவிட்டோடி வந்து இவருடிடய மனக்கடலிலே வாழப் பு’கான்.’‘
————————————————–
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை
இப்படி ஜெகதாகாரனாய் நின்ற சர்வேஸ்வரன் திருமலையிலே வந்து சந்நிஹிதனாய்-
பின்பு என் ஹிருதயத்தை விட்டுப் போகிறிலன் -என்கிறார் –
சர்வ ஸ்வாமியாய் -பூமிக்கு அந்தர்யாமியாய் -எட்டுத் திக்கில் யுண்டான ஸமஸ்த சேதனரையும் தனக்கு
பிரகாரமாக யுடையனாய் -சேதனர்க்கு ஹித அஹித ஞாபகமான வேதங்களுக்கு நிர்வாஹகனாய் –
பரம ஆகாச சப்த வாஸியான பரம பதத்தையும் பிரகாரமாக யுடையனாய் -சந்த்ர பதத்தைக் கிட்டி இருப்பதாய்-
மிக்க ஜலத்தை யுடைத்தான திரு அருவிகளினுடைய விளக்கத்தை யுடைத்தாய் த்வனியா நின்றுள்ள
ஜல ஸம்ருத்தியோடே கூடி இருப்பதுமான திருமலையை வாசஸ் ஸ்தானமாக யுடையனான சர்வேஸ்வரன்
திருமலையிலே நிலை இங்கே வந்து புகுருகைக்கு அவசரம் பார்த்து நின்ற நிலை என்று தோற்றும்படி
என்னுடைய ஹிருதயத்தின் உள்ளே நித்ய சந்நிஹிதனாய் இரா நின்றான் –
——————————————————
இப்படி சர்வாதிகனானவன் என் பக்கலிலே வந்து புகுந்த பின்பு நெஞ்சே நமக்கு இனி
ஒரு குறைகளும் இல்லை -கிடாய் என்கிறார் –
(சத்தை சொல்ல வந்த இடம் இங்கு அல்லவே -தான் உளனாக அவன் திரு உள்ளம் நம்மை ரஷித்து தனது தாளிணைக் கீழ் இருத்தும் அன்று தானே
இசைவித்து இருத்துவான் அன்றோ -நாமோ யாதானும் பற்றி நீங்கும் விரதம் கொண்ட அதமர்கள்-விலக்காமையே வேண்டுவது
அனைத்தும் செய்தாலும் ருணம் ப்ரவர்த்தனாக நினைத்துக் கொள்ளுபவன் அன்றோ
என்றுமே உத்தமன் உளன் -நாம் இசையாத அன்றும் -அவன் திரு உள்ளம் இப்படியே அன்றோ -தீஷிதம் விரத ஸம்பன்னம்
உள்ளுவார் உள்ளத்து திவ்ய மங்கள ரூபம் காட்டி அருளி அதுவும் தனது பேறாகக் கொள்பவன் அன்றோ)
உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்கத் தான் அளந்த மன் ——-40-
பதவுரை
நல் நெஞ்சே–எனக்குப் பாங்கான மனமே!–அவனை உளனாகிய நன்மை
விண் ஒடுங்க–மேலுலகங்களெல்லாம் ஒரு முலையில் ஒதங்கும்படி
கோடு–சிகரங்கள்
உயரும்–உயர்ந்தோங்கி யிருக்கப் பெற்றதும்
வீங்கு அருவி–நிறைந்த அருவிகளை யுடையதுமான
வேங்கடத்தான்–திருமலையில் எழுந்தருளி யிருப்பவனும்
மண்–பூமிப் பரப்பெல்லாம்
ஒடுங்க–(திருவடியின் ஒரு பாகத்திலே) ஒருங்கிப் போம்படி
தான் அளந்த–தான் அளந்து கொண்டவனுமான
மன்–ஸ்வாமி யானவன்
உளன் கண்டாய்–(நம்மை ரக்ஷிப்பதனாலே) ஸத்தை பெற்றிருப்பவன் காண்,
உத்தமன்–புருஷோத்தமனான அப்பெருமான்
என்றும் உளன் கண்டாய்–எக் காலத்திலும் (நம்மை ரக்ஷிப்பதிலே தீக்ஷை கொண்டு) இருக்கிறான் காண்,
உள்ளுவார் உள்ளத்து–ஆஸ்திகர்களுடைய மனத்திலே
உளன் கண்டாய்–நித்ய வாஸம் பண்ணுமவன் காண்
உளன் கண்டாய்-
அவனுடைய ஜீவனம் நம்முடைய சத்தா ஹேது —இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த சத்தா –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -36-
(இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த சத்தா
நித்யம் பிரியாஸ் தவ து கேசந தே ஹி நித்யா
நித்யம் த்வத் ஏக பரதந்த்ர நிஜ ஸ்வரூபா
பாவத்க மங்கள குணா ஹி நிதர்சனம் ந –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -36-
எம்பெருமானே சகல பதார்த்தங்களினுடைய சத்தையானது தேவரீருடைய இச்சையினாலேயே யாகும்
தேவரீருடைய நித்ய இச்சைக்கு விஷய பூதங்களான சில வஸ்துக்கள் நித்ய வஸ்துக்கள் ஆகும்
எப்போதும் தேவரீர் ஒருவருக்கே அதீனமான ஸ்வரூபத்தை யுடையவைகளான தேவரீரது
திருக்கல்யாண குணங்களே இவ்விஷயத்தில் நமக்கு உதாஹரணங்கள் ஆகும்)
நன்னெஞ்சே –
எம்பெருமான் நம்முடைய சத்தா ஹேது என்று சொல்லுகைக்கு பாங்கான நெஞ்சே –
உத்தமன் என்றும்-உளன் கண்டாய் –
நம்முடைய சத்தா ஹேது அவன் என்று நினைத்திராத அன்றும் -என்றும் -அவன் இருக்கும் படி இதுவே –
உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்-
புகுரப் புக்கால் விலக்காதாருடைய ஹ்ருதயத்தில் உளன் –
(விலக்காமையே வேண்டுவது-விலக்காமல் இருந்தால் தன்னுடைய க்ருஷி பலித்ததே என்று உகக்குமவன் அன்றோ)
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான் மண் ஒடுங்கத் தான் அளந்த மன் —
உத்தமன் என்றும் உளன் கண்டாய் -என்கிறதை உபபாதிக்கிறது –
உபரிதன லோகங்களும் சில எல்லை யுண்டு என்று இராதே இவை வேண்டா என்று கொண்டு உயரா நின்ற
ஆகாசாதி லோகங்கள் எல்லாம் ஒடுங்கும் படிக்கு ஈடாக உயரா நின்ற சிகரத்தை யுடைத்தாய் இருந்துள்ள
திருமலையிலே நின்றவன் பரப்பின திருவடிகளிலே பூமி தோற்றாத படி அளந்து கொண்ட மன்னன் -உடையவன்
இந்திரன் இழந்தது பெறுகையாலும் -மஹா பலியைப் பறித்து வாங்கிக் கொடுக்கையாலும்
இவனை உடையவன் என்று தோற்றா நின்றது –
————————————————————————
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை
இப்படி சர்வாதிகனானவன் என் பக்கலிலே வந்து புகுந்த பின்பு நெஞ்சே நமக்கு இனி
ஒரு குறைகளும் இல்லை -கிடாய் என்கிறார் –
அவனுடைய உண்மைக்கு இசைந்து அத்தை சபலமாக்கின நல்ல நெஞ்சே -நம் பேறு தன் பேறாக விரும்பி ரஷிக்கும்
ஸ்வபாவனான சர்வேஸ்வரன் நம்மை உஜ்ஜீவிப்பிக்கையிலே உளனாய் இருக்குமவன் கிடாய் –
நாம் அவனுடைய உண்மைக்கு (சத்தைக்கும் நமது தாரகத்துக்கும் )இசைந்த இன்றோடு இசையாத முன்போடு வாசி அற சர்வ காலத்திலும்
நம்முடைய ரக்ஷணத்திலே உத்யுக்தனாய்க் கொண்டு உளனாய் இருக்குமவன் கிடாய் -அவன் தானே வந்து புகுரும் இடத்திலே
விலக்காமல் பொருந்தி அனுசந்தித்து இருக்குமவர்களுடைய ஹிருதயத்திலே உளனாய் இருக்குமவன் கிடாய்-
ஆகாசாதிகளான ஊர்த்வ லோகங்கள் அடங்க ஓர் அருகே ஒதுங்கும் படி சிகரங்கள் ஓங்கி இரா நிற்பதாய்-
நாலு பாடும் நிறைந்து துளும்பி வெள்ளம் இடுகிற திரு அருவிகளை யுடைத்தான -திருமலையை இருப்பிடமாக
உடையனானவன் பூமிப் பரப்பு அடங்கலும் திருவடிகளுக்கு உள்ளே அடங்கும் படி தான் அளந்து கொண்ட ராஜாவாய் இருக்கும் –
—————————————————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply