மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்– 11-20– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

(கீழ் பேர் ஓத என்றாரே )அவன் திரு நாமத்தைச் சொல்லத் தானே காட்டக் காணும் அத்தனை -அல்லாதார்க்கு துர்ஜ்ஜேயன்-என்கிறது –

கூரியதான ஞானத்தை யுடையார்க்கு அல்லது அவனை அறிந்து தலைக் கட்டப் போகாது -என்கிறார் –

(நுண்ணறிவினான்-அறிய நுட்பமானவன் -ஸூஷ்மமான அறிவு கொண்டே-அறிவதற்கு அப்பால் உள்ளவன் என்று அறிய முடியும்)

நன்கோது நால்  வேதத்துள்ளான் நற விரியும்
பொங்கோதருவிப் புனல் வண்ணன்   -சங்கோதப்
பாற்கடலோன் பாம்பணையின் மேலான் பயின்று  உரைப்பார்
நூற் கடலான் நுண்ணறிவினான் —-11–

பதவுரை

நன்கு ஓதும் நால் வேதத்து உள்ளான்–நன்றாக ஓதப்படுகிற நான்கு வேதங்களாலும் பிரதி பாதிக்கப்படுபவனும்
நறவு இரியும்–தேன் தோற்கும்படியான போக்யதையை யுடையதாய்
பொங்கு ஓதம் அருவி புனல்–கடல் போலவும் அருவி நீர் போலவுமுள்ளதான
வண்ணன்–திருமேனியை யுடையவனும்
சங்கு ஓதம் பால் கடலான்–சங்குகளோடே கூடின அலைகளை யுடைத்தான திருப்பாற்கடலில் கண் வளர்த்தருள்பவனும்
பாம்பு அணையின் மேலான்–சேஷ சயனத்தின் மேல் துயில்பவனும்
பயின்று உரைப்பார் நூல் கடலான்–ஓதி யுணர்த்துகின்ற வைதிகர்களின் கடல் போன்ற சாஸ்த்ரங்களால்
பிரதபாதிக்கப் படுபவனுமான எம்பெருமான்
நுண் அறிவினான்–(தம் முயற்சியாலே அறிவார்க்கு) அறிய முடியாதவன்.

(திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு போக்யத்வத்துக்கு ஒன்றும் வண்ணத்துக்கு இரண்டு த்ருஷ்டாந்தங்கள் சொல்லி -ஸர்வ ரஸ ஸர்வ கந்த வஸ்துவுக்கு ஸத்ருசம் ஆகாதே)

நற விரியும்–நறவு இரியும்-தேன் தோற்கும்படியான இனிமையை யுடைத்தாய் –
நுண்ணறிவினான்-தம் முயற்சியால் அறிவிற்கு அறிய முடியாதவன் –

நன்கோது நால்  வேதத் துள்ளான்–
பிரதி நியத விசேஷங்களோடே கூட -சாங்க அத்யயனம் பண்ணின வேதங்களாலே-
வேதைஸ்ஸ சர்வை ரஹமேவ வேத்ய-என்கிறபடியே ப்ரதிபாதிக்கப் பட்டவன்–

(ஸ்வரம் தப்பின்னால் எஜமானனை இந்திரனுடைய வஜ்ராயுதம் எதிரிகளை முடிக்குமா போல் முடிக்கும்)

(ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ–மத்த ஸ்ம்ருதிர் ஜ்ஞாந மபோஹநம் ச–
வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ-வேதாந்த க்ருத் வேத விதேவ சாஹம்–৷৷15.15৷৷)

(நான் எல்லா ஜீவர்களுடையவும் ஹ்ருதயத்தில் ஆத்மாவாக நுழைந்து இருக்கிறேன்
அனைவருடைய நினைவும் வஸ்து நிர்ணயமும் மறதியும் என்னிடமிருந்தே உண்டாகின்றன
எல்லா வேதங்களாலும் நானே அறியப் படுகிறேன் –வேதங்களாலேயே நான் அறியப்பட்ட தீருவேன்
வேத விதிகளின் பலனை அளிப்பவனும் வேதத்தை அறிந்தவனுக்கு நானே)

நற விரியும்-தேன் தோற்கும்படியாகக் கிளர்ந்த கடல் போலேயும் –

பொங்கோதருவிப் புனல் வண்ணன்  –
அருவிப் புனல் போலேயும் இருந்துள்ள திருமேனியை யுடையவன்

சங்கோதப்-பாற்கடலோன்–சங்குகளோடு கூடின திரையை யுடைத்தான திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுமவன்

பாம்பணையின் மேலான்-அனந்த சாயி -பயின்று  உரைப்பார்-நூற் கடலான்–
சாதரமாக உரைக்குமவர்களாலே-இதிஹாச புராணங்களாலே ப்ரதிபாதிக்கப் படுமவன் –

(அடியார் திருமேனி ஸ்பர்சத்தில் அபி நிவேசம் கொண்டவன் -எளிமையும் இங்கு உண்டே
நம் முயற்சியால் அறிவதற்கு அரியவன் என்றும் அவனால் வரிப்பவருக்கு எளியவன் என்றும் உணரலாம்)

நுண்ணறிவினான் —-
ஸ்வ யத்னத்தாலே அறிவிற்கு துர்ஜ்ஜேயன் —

——————————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

கூரியதான ஞானத்தை யுடையார்க்கு அல்லது அவனை அறிந்து தலைக் கட்டப் போகாது -என்கிறார் –

ஸ்வர வர்ணாதிகளாலே நழுவுதல் வாராத படி ஆச்சார்ய உச்சாரண அநு உச்சாரண க்ரமத்தாலே நன்றாக ஒதப்படுமதாய்
ருகாதி பேதத்தாலே நாலு வகைப் பட்டு இருந்துள்ள வேதங்களாலே ப்ரதிபாதிக்கப் படுமவனாய்
நன்றாக விஸ்திருதம் ஆகா நிற்பதாய் (இவர் உரையில் தேன் விஷயமே இல்லை -நறவு இரிய )-கிளர்த்தியை யுடைத்தான கடல் போலேயும் –
அறிவிப் புனல் போலேயும் இருக்கிற திருமேனியின் நிறத்தையும் யுடையனாய் –
சங்குகளை கொழித்து ஏறிடா நின்ற திரைகளை யுடைத்தான திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவனாய் –
திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையின் மேலே பள்ளி கொண்டு அருளுமவன் ஆகையால் –
ஆஸ்ரித சம்ஸ்லேஷ ஏக ஸ்வபாவனாய்-
தர்ம வீர்ய ஞானத்தால் வேதார்த்தங்களை உத்தர உத்தரம் அவகாஹித்து -தரிசித்து –
லோக உபகாரகமாகச் சொல்லிப் போரும் மன்வாதி பரம ரிஷிகளால் நிர்மிதங்களான
ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள் ஆகிற சாஸ்திர வர்க்கங்களாலே ப்ரதிபாதிக்கப்படும் ஸ்வ பாவனாய்-
ஸூஷ்ம அர்த்த அவகாஹியான விலக்ஷண ஞானத்தால் அறியப்படும் ஸ்வபாவனாய் இருக்கும்-
பரிசலான அறிவால் அறியப்படுமவன் அல்லன் என்று கருத்து —

——————————————————————-

ஒருத்தருக்கும் அறியப் போகாதோ என்னில் -இப்படி அறிவிற்கு அறியலாம் என்கிறது –

ஆகில் அவனை ஒருவராகிலும் அறிந்து கண்டதாய்த் தலைக் கட்ட ஒண்ணாதோ என்னில்
நாம் சொல்லுகிற இவ் வழியாலே காண்பார்க்குக் காணலாம் -என்கிறார் –

அறிவென்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில்
செறிவென்னும் திண் கதவம் செம்மி -மறை யென்றும்
நன்கோதி நன்குணர்வார் காண்பரே நாடோறும்
பைங்கோத வண்ணன் படி  ——12-

பதவுரை

மறை–வேதத்தை
என்றும்–இடைவிடாது
நன்கு ஓதி–நன்றாக அத்யயநம் பண்ணி
அறிவு என்னும்–ஜ்ஞாநமாகிற
தாள் கொளுவி–(ஆத்ம பரமாத்ம ஞானம் ஆகிற )தாழ்ப்பாளை யிட்டு
ஐம்புலனும்–பஞ்சேந்திரியங்களையும்
தம்மில் செறிவு என்னும்–(வெளிச் சொல்லாமல்-தமக்கு வகுத்த விஷயத்தில் ) உள்ளே அடக்கி வைப்பதாகிற.
திண் கதவம் செம்மி–திடமான கதவை யடைத்து
நன்கு உணர்வார்–நன்றாக தியானிக்குமவர்கள்
பைங்கோதம் வண்ணன் படி–அழகிய கடலின் நிறம் போன்ற நிறமுடையனான எம்பெருமானது தன்மைகளை
நாள் தோறும்–தினந்தோறும்
காண்பர்–ஸாக்ஷித்தகரிப்பான்

(ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –யதா ஸப்த க்ரமம் வரிசைப்படியே அன்வயித்து  -முதலில் ஞானம் சம்பாதித்து யோகம் வந்தாலும் பிரமாணங்களை விடாமல் வேதங்களையும் ஓத வேண்டும்
ஸ்ரீ அப்பிள்ளை -மறை ஓதி முதலில் சொல்லி பின்பு அடுத்த இரண்டும் -ஸாஸ்த்ர அப்பியாசம் பின்பே யோகம் இவர்)

அறிவென்னும் தாள் கொளுவி–
திண்ணிதான ஸ்ரவண ஞானத்தை மூட்டி –

ஐம்புலனும் தம்மில்-செறிவென்னும் திண் கதவம் செம்மி –
பாஹ்ய இந்திரியங்கள் மனஸ்ஸோடே கூடி –
மனஸ்ஸூ ஆத்மாவோடு கூடி -இருக்கிற இந்த செறிவாகிற திண்ணிய கதவை இந்திரியங்கள்
பாஹ்ய விஷயங்களில் போகாதபடி செம்மி –

மறை யென்றும் நன்கோதி —
யோகாத் ஸ்வாத்யாய மா மநேத் -யோகம் கை வந்தாலும் பிராமண பிரமேயங்களினுடைய சேர்த்தி அனுசந்திக்க வேணும் –

நன்குணர்வார் காண்பரே நாடோறும்-பைங்கோத வண்ணன் படி  ——
உபாசனம் -த்ருவ அநு ஸ்ம்ருதி-(ஸ்ம்ருதி- நினைவு -அநு ஸ்ம்ருதி -தொடரும் நினைவு -த்ருவ அநு ஸ்ம்ருதி –விச்சேதம் இல்லாமல் அதே நினைவு -)
தர்சன-சாமானாகார ப்ரத்யக்ஷதாபத்தி -இவ்வளவாக உணர்ந்தவர்கள் நன்கு உணர்ந்தவர்கள் -ஆகிறார்
ஸ்ரமஹரமான வடிவை யுடையவனுடைய படி இப்படி யுணர்ந்தவர்கள் நாள் தோறும் காண்பார்கள் -(ஸதா பஸ்யந்தி ஸூரயா )

(இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற்பாரே–ஸ்ரீ திருக் குறும் தாண்டகம்–18-)

————————————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

ஆகில் அவனை ஒருவராகிலும் அறிந்து கண்டதாய்த் தலைக் கட்ட ஒண்ணாதோ என்னில்
நாம் சொல்லுகிற இவ் வழியாலே காண்பார்க்குக் காணலாம் -என்கிறார் –

ஸ்வாத்யாயோஸ் அத்யே தவ்ய -என்கிற விதியை அனுசரித்த்திக் கொண்டு –
அசேஷ ஜகத்துக்கும் ஹிதத்தை அநு சாஸிக்கை யாகிற நன்மையை யுடைத்தான வேதத்தை சக்ரமமாக ஓதி -(அங்கங்கள் உப அங்கங்களுடன் ஓதி )
ததர்த்த ஸ்ரவண ஜெனிதமாய்- -ஆத்ம பரமாத்ம விஷய பிரதானம் ஆகிற தாளை
பாஹ்ய விஷயங்களில் மனஸ்ஸூ ஒட்டாத படி உறைக்கக் கோத்து-
ஸ்ரோத்ராதிகளான ஐந்து இந்திரியங்களும் தம் தாமுக்கு அடைத்த இருப்பிடமான ஸூபாஸ்ரயத்திலே செறிந்து-
நிற்கப் பண்ணுகை யாகிற பலிஷ்டமான கதவை -புகவிட்ட மனஸ்ஸூ புறப்பட இடம் அறும் படி
யோக- அப்யாஸத்திலே செம்மிப் பொகட்டு -இப்படி யோக ஜெனிதமான மனசாலே
த்யேய வஸ்துவை–பச்சை நிறத்தை யுடைத்தான கடல் போலே ஸ்ரமஹரமான திரு நிறத்தை யுடையனான-
சர்வேஸ்வரனுடைய ரூப குண விபூதி யாதிகளான ஸ்வ பாவங்களை -சதா பஸ்யந்தி -என்கிறபடியே-
இன்று ஒன்றோடு அன்றோடு வாசி அற எப்போதும் கண்டு அனுபவிக்கப் பெறுவார்கள்-(இதிலும் காண அரியதே -காண்பரே -பிரிநிலை ஏவகாரம் )

இப் பாட்டிலும் கீழ் அறிய அரியன் என்றத்தை உபபாதித்தார் யாய்த்து –

(தாப்பாள் போட்டு  பின்பு கதவை சாத்த -மனஸ் அடக்கிய பின்பே -இதுவே தாழ்பாள் போடுவது -இது ப்ராதான்யம் என்பதால் இத்தைச் சொல்லி கதவவைச் சாத்துவது புலன்களை அடக்க வேண்டும்
இங்கு தான் ஸூபாஸ்ரய திருமேனி -2-61- பற்றி அருளிச் செய்கிறார்-கீழ் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானத்தில் இந்திரியங்கள் மனசிலும் மனஸ் ஆத்மாவிலும் என்பதே உள்ளது

தாநி ஸர்வாணி ஸம் யம்ய யுக்த ஆஸீத மத்பர–
வஸே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா—-৷৷2.61৷৷

எல்லா இந்த்ரியங்களையும் அடக்கி என்னிடமே ஈடுபட்டவனாய் மனத்தில் ஒருமைப் பாட்டுடன் வாழக் கடவன் –
எவனுக்கு இந்திரியங்கள் வசப் பட்டுள்ளனவோ அவனுக்கு அறிவு நிலை நிற்கிறது அன்றோ –
குறுக்கு வழியை சொல்லி – இந்திரியங்களை கொண்டு திரு மேனியில் வைத்து -ஸூ பாஸ்ரயம் -தானே அடங்கும் )

——————————————————————

இப்படி ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு வருத்தம் உண்டு இத்தனை போக்கி அவன் தானே
கொண்டு வந்து காட்டும் அன்று வருத்தம் அறக் காணலாம் -என்கிறார்-

(ஸ்ரீ த்ரிவிக்ரமனாய் உலகம் எல்லாம்-இவர்கள் அறியாமல் -பிரார்த்திக்காமல் – தனது பேறாகத் தானே தீண்டினானே)

படி வட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று
அடி வட்டத்தால் அளப்ப நீண்ட -முடிவட்டம்
ஆகாயமூடறுத்து அண்டம் போய் நீண்டதே
மா காயமாய் நின்ற மாற்கு ——–13-

பதவுரை

பண்டு–முன்னொரு காலத்தில்,
உலகம் நீர் ஏற்று–பூமி தானம் வாங்கிக் கொண்டு
தாமரை படி வட்டம்–தாமரை மலர்ந்தாற் போலே வட்ட வடிவமாயிருக்கிற பூமியை
அடி வட்டத்தால் அளப்ப–திருவடி வளையத்தினாலே அளப்பதற்காக
மா காயம் ஆய் நின்றமாற்கு–பெரிய திருமேனியாய் (த்ரிவிக்ரமனாய்) வளர்ந்து நின்ற எம்பெருமானுடைய,-மால் -சர்வேஸ்வரன்
நீண்ட முடி வட்டம்–நீண்ட திருவபிஷே வளையமானது
ஆகாயம் ஊடு அறுத்து–மேலுலகங்களின் வழியாகச் சென்று
அண்டம் போய் நீண்டதே–அண்ட கடாஹத்தளவாக வளர்ந்த்தே! இஃது என்ன ஆச்சரியம்!

படிவட்டத் தாமரை –
பூ வலயம் ஆகிற தாமரைப் பூவை

(தாவி வையம் கொண்ட தடம் தாமரை அன்றோ -முற்றுவமை)

பண்டுலகம் நீரேற்று- அடிவட்டத்தால் அளப்ப —
அடி வலயத்தாலே அளப்ப –

நீண்ட -முடிவட்டம்- ஆகாயமூடறுத்து அண்டம் போய் நீண்டதே-மாகாயமாய் நின்ற மாற்கு —
வடிவாலே பாரித்து வியாமோஹத்தை யுடையனானவனுக்கு திரு அபிஷேகமானது ஆகாசத்தை யூடறுத்து
அண்ட பித்திக்கு அவ் வருகே நீண்டது –

(ரஷ்யத்தின் அளவில்லாத ரக்ஷண பாரிப்பால் ஏழு உலகமும் அளந்தான்
உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்த –நிவந்த நீள் முடியன் -திருவடியைச் சொல்லி திருமுடியை அங்கும் உண்டே)

———————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படி ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு வருத்தம் உண்டு இத்தனை போக்கி அவன் தானே
கொண்டு வந்து காட்டும் அன்று வருத்தம் அறக் காணலாம் -என்கிறார்-

முன்பு ஒரு நாளிலே லோகத்தை மஹா பலி பக்கலிலே சென்று நீர் ஏற்று வாங்கிக் கொண்டு பூ மண்டலம்
ஆகிற தாமரையைப் பாத வலயத்தாலே அளக்க -அண்ட கடாஹம் வெடிக்கும் படி விம்ம வளர்ந்த சர்வேஸ்வரனுக்கு
பெருக்காறு சுழித்தால் போலே சுழித்துக் கிளருகிற ஒளி வெள்ளத்தை யுடைத்தாய் முசிவற வளர்ந்த
திரு வபிஷேகமானது அந்த்ரிஷாதிகளான ஊர்த்வ லோகங்களை ஊடுருவிக் கொண்டு போய்
அண்ட கடாஹத்து அளவும் செல்ல வளர்ந்ததே -இது என்ன ஆச்சர்யம் என்று அனுபவிக்கிறார் –

————————————————

அறிவு என்னும் தாள் கொளுவி-என்கிற பாட்டில் சொல்லுகிற படியே இந்திரிய ஜெயம் பண்ணி அறிகை அரிதாய் இருந்ததீ
அசக்தர் இழக்கும் அத்தனையோ என்னில் -இழக்க வேண்டாத உபாயம் சொல்கிறது –

(இந்திரிய ஜெயம் வேண்டுமானால் யோகம் கைவர வேண்டும் -யோகம் கை வந்தால் இந்திரிய ஜெயம் வரும் -அந்யோன்ய ஆஸ்ரய தோஷம் வருமே என்ன கண்ணாலே காணலாம் படி அவனே இங்கே வந்து சந்நிஹிதனாய் இருக்க அவனைக் காணவே தானே எல்லாமே அமையும்-உறங்குவான் கைப்பண்டம் போல் நழுவுமே -ஸகல மனுஷ நயன விஷய தாங்கதன் -அர்ச்சையிலே ஆஸ்ரயிக்கலாமே என்கிறார் )

கீழே ஐம்புலனும் தம்மில் செறிவு என்னும் திண் கதவம் செம்மி -என்று -இந்திரிய ஜெயம் பண்ணுகை -அரிது
இந்திரிய ஜெயம் பண்ணினார்க்கு அல்லது அவனைக் காண முடியாது -கண்டால் அல்லது இந்திரியங்களை ஜெயிக்க முடியாது
ஆன பின்பு அஜிதேந்த்ரியர் ஆனார்க்கும் கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி திருமலையிலே
வந்து ஸூலபன் ஆனான் -ஆன பின்பு அவனை எளிதாக ஆஸ்ரயிக்கலாம் -என்கிறார் –

(பரமாத்மநி ரக்த விரக்த  அபராத்மநி -ஸமஸ்த ஸம்ஸார போகங்கள் போல் இங்கும் உறங்குவான் கைப் பண்டம் போல் நழுவுமே )

மாற்பால் மனம் கழிப்ப மங்கையர் தோள்  கை விட்டு
நூற்பால் மனம் வைக்க நொய்விதாம் -நாற்பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பணிந்து –14-

பதவுரை

நாற்பால வேதத்தான்–நான்கு வகைப்பட்ட வேதங்களாலே பிரதி பாதிக்கப்படுபவனும்
வேங்கடத்தான்–திருமலையிலே நிற்கும் ஸௌலப்யமுடையவனும்
விண்ணோர் முடி தோயும் பாதத்தான்–நித்ய ஸூரிகளின் கிரீடம் உறையும் படியான திருவடிகளை யுடையவனுமான எம்பெருமானுடைய
பாதம்–திருவடிகளை
பணிந்து–ஆஸ்ரயித்து
மால் பால்–அந்த ஸர்வேஸ்வரனிடத்திலே
மனம் சுழிப்ப–நெஞ்சு பொருந்த (அதனாலே)
மங்கையர் தோள் கை விட்டு–ஸ்த்ரீகளின் தோளோடே அணைய வேணு மென்கிற காமத்தைக் கை விட்டு
நூல் பால்–(வேதம் முதலிய) சாஸ்திரங்களிலே
மனம் வைக்க–மனம் செலுத்துவதற்கு
நொய்விது ஆம்–எளிதாகும்.

நாற்பால வேதத்தான் –
நாலு வகையான வேதத்தாலே ப்ரதிபாதிக்கப் படுமவன் -வேதைக சமைதி கம்யன்
கண்ணாலே காண்கிற சப்தாதிகளை அனுபவிப்பார்க்குக் காண அரிது இறே என்னில்

வேங்கடத்தான்–
கண்ணாலே கண்டு அனுபவிக்கும் படி திரு மலையிலே வந்து நின்றவனை -ஆகில்
கண்ணாலே காணப் படுகிற சப்தாதிகளோடு ஒக்குமோ என்னில் –

விண்ணோர் முடி தோயும்-பாதத்தான் –
இப்படி திருமலையில் நிற்கிறவன் -நித்ய ஸூரிகளுக்கு ஸ்ப்ருஹணீயனானவன்-

(அங்குள்ளவன் இங்கு வந்துள்ளான் என்கிறார் அல்லர் -இங்கு உள்ளவனைக் காண அங்கு உள்ளவர்களும் வந்து ஆஸ்ரயிக்கும் படி அன்றோ இங்கு உள்ளான்)

பாதம் பணிந்து —
அவன் திருவடிகளிலே பணிந்து –

மாற்பால் மனம் கழிப்ப —
வியாமுக்தனாய் இருக்கிறவன் பக்கலிலே மனஸ்ஸூ சுழிக்க

(நாராயணன் -இத்யாதி -பதங்கள் இல்லாமல்- மால் -பித்தன் -ஏற்கனவே நம்மை அடைய க்ருஷி பண்ணி உள்ளம் புகுந்து -அத்வேஷம் போகும் அவகாசம் எதிர்பார்த்து உள்ளவன்)

மங்கையர் தோள்  கை விட்டு-
நரகத்திலே மூட்டக் கடவதான ஸ்த்ரீகளுடைய தோள்களைக் கை விட்டு (நாசமான பாசம் விட்டு )

நூற்பால் மனம் வைக்க நொய்விதாம்–
பிரமாணங்களிலே அல்பம் மனஸை வைக்க எளிதாம் –

நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண
நினைப்பார் பிறப்பொன்றும் நேரார் -மனைப்பால்
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம்
துறந்தார் தொழுதாரத் தோள்–ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி-42–

——————————————————-

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

கீழே ஐம்புலனும் தம்மில் செறிவு என்னும் திண் கதவம் செம்மி -என்று -இந்திரிய ஜெயம் பண்ணுகை -அரிது
இந்திரிய ஜெயம் பண்ணினார்க்கு அல்லது அவனைக் காண முடியாது -கண்டால் அல்லது இந்திரியங்களை ஜெயிக்க முடியாது
ஆன பின்பு அஜிதேந்த்ரியர் ஆனார்க்கும் கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி திருமலையிலே
வந்து ஸூலபன் ஆனான் -ஆன பின்பு அவனை எளிதாக ஆஸ்ரயிக்கலாம் -என்கிறார் –

நாலு வகைப்பட்ட வேதங்களாலே ப்ரதிபாதிக்கப் படுமவனாய் -இப்படி ஓலைப் புறத்திலே கேட்டுப் போகாதே
கண்டு அனுபவிக்கலாம் படி -திரு மலையிலே வந்து -நிற்கிற ஸுலப்யத்தை யுடையனாய் –
இப்படி ஸூலபனான நிலை தன்னிலே நித்ய ஸூரிகளும் திருவடிகளிலே தலை மடுத்து ஆஸ்ரயிக்கலாம் படி
பெரிய மேன்மையை யுடையனானவனுடைய திருவடிகளை ஆஸ்ரயித்து சர்வேஸ்வரன் பக்கலிலே மனஸ்ஸூ பிரவணமாக-
போக யோக்கியமான பருவத்தைக் காட்டி துவக்கக் கடவ ஸ்த்ரீகளுடைய தோளோடு அணைந்து அனுபவிக்க வேணும் என்னும்
நசையை சவாசனமாக விட்டு வேதாதி ஸாஸ்திரங்களில் மனஸை வைகைக்கு எளிதாம் –

(இங்கு உள்ளவன் ஸ்ரீ வைகுண்ட விரக்தனாய் வந்தமையை சொல்ல வில்லை -இங்கேயே வந்து அவர்கள் ஸுலப்யம் அனுபவிக்க வந்துள்ளார்கள் அன்றோ -கண்ணாவான் விண்ணோர்க்கும் வெற்பு அன்றோ)

———————————————————

அவனாலே ஸ்வயம் வரிக்கப் பட்டவனுக்கு துக்கம் ஒன்றும் இல்லை இறே -என்கிறது –

இப்படி அரியனானவனை நீர் கண்டு அனுபவிக்கப் பெற்றபடி எங்கனே என்ன-
நிர்ஹேதுகமாக என் ஹிருதயத்திலே புகுந்து கண் வளரக் கண்டேன் என்கிறார்

பணிந்து உயர்ந்த பௌவப் படு திரைகள்  மோத
பணிந்த பண மணிகளாலே அணிந்த -அங்கு
அனந்தன் அணைக் கிடக்கும் அம்மான் அடியேன்
மனம் தன் அணைக் கிடக்கும் வந்து —–15-

பதவுரை

பணிந்து உயர்ந்த–தாழ்ந்தும் எறியும் வீசுகின்றவையான
பௌவம் படு திரைகள்–கடலிலுண்டான அலைகளானவை
மோத–நாலு பக்கமும் அடிக்க,
பணிந்த–(அத் திவலைகள் திருமேனியில் படாதபடி குடை பிடித்தாற்போலே) கவிந்திருக்கிற
பணம்–படங்களிலுண்டான
மணிகளாலே–மாணிக்கங்களினாலே
அணிந்த–அலங்கரிக்கப்பட்டிருக்கிற
அனந்தன்–திருவனந்தாழ்வானாகிற
அணை–திருப் பள்ளி மெத்தையிலே
கிடக்கும்–திருக் கண் வளர்ந்தருளாகிற
அம்மான்–ஸர்வேஸ்வரன் (அந்தப் படுக்கையிற் பொருந்தாதே)
அங்கு–அங்கு நின்றும்
வந்து –புறப்பட்டு வந்து
அடியேன்–அடியேனுடைய
மனம் அணை–மனமாகிற படுக்கையில்
கிடக்கும்–சயனித்திரா நின்றான்

பணிந்து உயர்ந்த பௌவப் படுதிரைகள் மோத-
(பகவத் தர்சன அபி நிவேசத்தால் )தாழ்வது கிளறுவதான கடல் திரைகளை மோத-

மோத என்கிறது –
குறும் திவலை படிலும் திருமேனியிலே ஒரு மலை விழுந்தால் போலே இருக்கை -(ஸுகுமார்ய அதிசயம் இருந்த படி )

மோத பணிந்த பண மணிகளாலே —
அத் திவலைகள் திரு மேனியில் படாத படி காத்த பணத்தின் மணிகளாலே

அணிந்த -அங்கு-அனந்தன் அணைக் கிடக்கும் அம்மான் –
அதினாலே அலங்க்ருதனான திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே கிடக்கிற சர்வேஸ்வரன்

(ப்ரக்ருஷ்ட விஞ்ஞான பலம் கொண்டவன் அன்றோ அநந்தன்)

அடியேன்-மனம் தன் அணைக் கிடக்கும் வந்து —-
அப் பெரிய படுக்கையிலே கிடக்குமவன் பரியவும் அறியாதே
அப் படுக்கை வாய்ப்பும் இன்றிக்கே இருக்க
வந்து என் மனசிலே தங்கா நின்றான் -எங்கே தங்குமவன் எங்கே தங்கா நின்றான்
கிடக்க ஒரு படுக்கை இல்லாதவன் படுக்கை உள்ள இடம் தேடி வருமா போலே –
திரு அயோத்யையில் உள்ளார் அவனைச் சரணம் புக்குக் கிடக்க –ஆவாசந்த்வஹம் இச்சாமி என்று இருந்தால் போலே –

(ரிஷிகள் ஆஸ்ரமம் தேடி பெருமாள் வந்தது போல்)

————————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படி அரியனானவனை நீர் கண்டு அனுபவிக்கப் பெற்றபடி எங்கனே என்ன-
நிர்ஹேதுகமாக என் ஹிருதயத்திலே புகுந்து கண் வளரக் கண்டேன் என்கிறார்

ஸ்வ சந்நிதானத்தாலே மேலே கிளர்ந்தும்-கீழே விழுந்தும் செல்லுகிற கடலில் உண்டான அலைகள் ஆனவை
நாலு பாடும் கண் பாராமல் அலைக்க-அத் திவலைகள் திரு மேனியில் படாத படி குடை பிடித்தால் போலே
கவிந்து இருக்கிற பணா மண்டத்தில் உண்டான மாணிக்கங்களாலே அழகு பெற அலங்கரித்திக் கொண்டு
இருக்கிற திருவனந்த ஆழ்வான் ஆகிற திருப் பள்ளி மெத்தையில் பள்ளி கொண்டு அருளா நின்றுள்ள
சர்வேஸ்வரன் அந்த படுக்கையில் பொருந்தாதே அங்கு நின்றும் அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு
வந்து அநந்யார்ஹ சேஷ பூதனான என்னுடைய மனஸ்ஸூ ஆகிற படுக்கையிலே பள்ளி கொண்டு அருளா நிற்கும் –

(அநந்யார்ஹ சேஷத்வம் -சம்பந்த சாமான்யம் -அதிகாரி ஸ்வரூபம் -இசைவே வேண்டுவது)

————————————————————-

இப்படி வந்து தங்குகைக்கு அடி பிராட்டியோடே இருக்கை என்கிறார் –

திருப்பாற்கடலிலே நின்றும் தம் திரு உள்ளத்துக்கு வருகிற போது திருவல்லிக் கேணியிலே
வந்து தங்கினான் -என்கிறார் –

வந்துதித்த வெண் திரைகள் செம்பவள வெண் முத்தம்
அந்தி விளக்காம் மணி விளக்காம் -எந்தை
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
திருவல்லிக் கேணியான் சென்று   —-16–

பதவுரை

ஒரு அல்லி தாமரையாள்–ஒப்பற்றஅழகிய இதழ்களை யுடைய தாமரைப் பூவை இருப்பிடமாக வுடைய பிராட்டி
சென்று ஒன்றிய சீர் மார்பன்–வந்து பொருந்திய அழகிய திருமார்பை யுடையவனும்
வந்து உதைத்த வெண் திரைகள் செம் பவளம் வெண் முத்தம்–வந்து வீசுகின்ற வெளுத்த
அலைகளிலுண்டான சிவந்த பவழங்களும் வெளுத்த முத்துக்களும்
அந்தி விளக்கும் அணி விளக்கும் ஆம்–ஸ்ந்தியா காலத்தை விளக்குகின்ற மங்கள தீபங்களாக ஆகப்பெற்ற
திருவல்லிக்கேணியான்–திருவல்லிக்கேணியில் எழுந்தருளியிருப்பவனுமான பெருமான்
எந்தை–எனக்கு ஸ்வாமி

வந்துதித்த வெண் திரைகள் செம்பவள வெண் முத்தம்-அந்தி விளக்காம் மணி விளக்காம் -எந்தை–திருவல்லிக் கேணியான்–
வந்து உதையா நின்றுள்ள வெண் திரைகளாலே உண்டான சிவந்த பவளமும்
ஒளியை யுடைத்தான முத்தும் -அந்திக்கு பிரகாசகமாக நின்ற மங்கள தீபத்தை யுடைத்தான
திரு வல்லிக் கேணியிலே நின்றவன்(கிடந்த திருக்கோலம் மன்னாதன் -அடியேனை கைக்கொள்ள அவகாசம் பார்த்து நிற்கிறான் என்றபடி )

ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன் சென்று   —-
பஸ்யதாம் சர்வ -பார்த்துக் கிடக்க -திரு மார்பிலே ஏறினாள் –

(பெண்ணுக்கு பெண்கள் கோஷ்ட்டியில் வெட்கப்பட வேண்டாமே ஸ்த்ரீ பிராயர் அனைவருமே )
தயா வ லோகிதா தேவா –
பின்னை சர்வேஸ்வரன் இவர்களுடைய அலமாப்பைப் பாராய் என்று திரு உள்ளத்தால் நினைத்த படி -தோற்றப்
பின்னை அவளாலே பார்க்கப் பட்டவர்கள் –
ப்ரதேஹி ஸூபகே ஹாரம் -அவன் நினைவும் சொல்லும் அறிந்து இறே
சிலரைக் கடாக்ஷிப்பதும் -(சிலருக்கு )சிலரைக் கொண்டு கொடுப்பதும் –
பெரிய பிராட்டியார் தானே சென்று அடையும் திரு மார்பை யுடையனாய் திரு-

——————————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

திருப்பாற்கடலிலே நின்றும் தம் திரு உள்ளத்துக்கு வருகிற போது திருவல்லிக் கேணியிலே
வந்து தங்கினான் -என்கிறார் –

அழகிய அல்லியை யுடைத்தான தாமரையை இருப்பிடமாக யுடையளாய் -நிரதிசய போக்யையான பெரிய பிராட்டியார்
அமிருத மதன சமயத்திலே நிற்கிற தேவர்களை மதியாமல் சென்று -இறையும் அகலகில்லேன் -என்று பொருந்தி
வர்த்திக்கும் படியான அழகிய திரு யுடைத்தான திரு வல்லிக் கேணியிலே தங்கினவன் எனக்கு ஸ்வாமி –

(திருக்கண்ண மங்கை அபிஷேக வல்லித்தாயார் -சந்நிதியில் தேன் கூடாக இன்றும் உண்டே)

ஒரு வல்லித் தாமரையாள் -சென்று- ஒன்றிய சீர் மார்வனாய் -வெண் திரைகள்–வந்துதித்த-செம்பவள வெண் முத்தம்
அந்தி விளக்காம் மணி விளக்கான -திருவல்லிக் கேணியான்   –எந்தை-என்று அந்வயம் –

———————————————————————–

அவளோடு கூடி இருக்கையாலே பலத்துக்குத் தட்டு இல்லை -இனி என்னுடைய வாக்கானது
அவனை விச்சேதம் இன்றிக்கே அனுபவிப்பதாக –

இப்படிப்பட்ட சர்வேஸ்வரனை நம் பக்கல் வியாமுக்தன் என்று அறிவதொரு நாள் யுண்டானால்
இதுக்கு முன்பும் பின்பும் உள்ள காலம் எல்லாம் ச பிரயோஜனமாய்த் தலைக் கட்டும் கிடீர் என்கிறார் –

முன்பு உள்ள நாள் இந்த நாள் பலிக்க காரணமானதால் அவையும் நல்ல நாள்

அவள் புருஷகார பலத்தால் அவனே நம்மை ஸ்வீ கரித்த ஒன்றை அறிந்த பின்பு எல்லாமே வாழ் நாளாகுமே
செங்கண் மால் -சர்வேஸ்வரனே -எங்கள் மால்–வ்யாமுக்தன் ஆனபின்பு – என்று அறிந்த பின்பு எல்லாமே வாழும் நாள்களாகும்
அறியாமல் இருந்தால் பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழ வேணுமே

சென்ற நாள் செல்லாத நாள் செங்கண் மால் எங்கள் மால்
என்ற நாள் எந்நாளும் நாளாகும் -என்றும்
இறவாத எந்தை இணை யடிக்கே ஆளாய்
மறவாது வாழ்த்துக என் வாய் —-17-

பதவுரை

என்றும் இறவாத எந்தை–ஒருநாளும் அழிவில்லாதவனான எம்பெருமானுடைய
இணை அடிக்கே–உபய பாதங்களுக்கே
ஆள் அய்–ஆட் பட்டு
மறவாது–மறவாமல்
என் வாய் வாழ்த்துக–என் வாய் வாழ்த்த வேணும், (இங்ஙனேயாகில்)
சென்ற நாள்–கீழ்க் கழிந்த காலங்களும்
செல்லாத–இனி மேல் வரப்போகிற நாள்களும்
செங்கண் மால், எங்கள் மால் என்ற நாள்–‘புண்டரீகாக்ஷன் நம்மிடத்து வியாமோஹ முடையனாயிருக்கிறான்‘
என்று சொல்லப் பெற்ற நிகழ் காலமுமாகிய
எந்நாளும்–எல்லாக் காலங்களும்
நாள் ஆகும்–நல்ல காலமே யாகும்.

சென்ற நாள் செல்லாத நாள் செங்கண் மால் எங்கள் மால் என்ற நாள் எந்நாளும் நாளாகும் —
சர்வேஸ்வரன் என் பக்கலிலே வியாமோகத்தைப் பண்ணினான் என்று அறிந்த நாள்
கழிந்த நாள் -வரக் கடவ நாளான எல்லா நாளும் நல் விடிவாம் -இந் நாள் வரும் படி கழிந்த நாள் ஆகையால்
போன நாளும் அழகிது -மேல் விச்சேதம் இன்றிக்கே அனுபவிக்கப் பெறுகையாலே வரும் நாளும் அழகிது –

(அத்யமே சபலம் ஜென்ம -அக்ரூரர் மகிழ்ந்தது போல் ஆகுமே)

என்றும்-இறவாத எந்தை இணையடிக்கே ஆளாய் மறவாது வாழ்த்துக என் வாய் —-
ஒரு நாள் யுண்டாய் ஒரு நாள் இன்றிக்கே ஒழியும் உறவு இன்றிக்கே
நித்யனான பிதாவினுடைய வாக்கானது விச்சேதம் இன்றிக்கே வாழ்த்துக –

(வாக் -மானஸ காயிக -அனைத்துக்கும் உப லக்ஷணம்)

(ஆகாசம் கங்கை நீர் -மணல் எண்ண முடியாதது போல் பிறவிகளை எண்ண முடியாதே
இவன் தானே இறவாத எந்தை)

——————————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படிப்பட்ட சர்வேஸ்வரனை நம் பக்கல் வியாமுக்தன் என்று அறிவதொரு நாள் யுண்டானால்
இதுக்கு முன்பும் பின்பும் உள்ள காலம் எல்லாம் ச பிரயோஜனமாய்த் தலைக் கட்டும் கிடீர் என்கிறார் –

புண்டரீகாக்ஷனான சர்வேஸ்வரன் அந்தக் கண்ணாலே குளிர நோக்கி நம் பக்கலிலே வியாமோகத்தைப் பண்ணினான் -என்னும்
அறிவு பிறந்ததொரு நாள் யுண்டானால் -இந்நாள் மருவுகைக்கு யுடலாய்க் கொண்டு கழிந்த நாள்களும்
இப் பேற்றை அனுபவித்து இருக்கைக்கு உறுப்பாய்க் கொண்டு மேல் வரக் கடவ எல்லா நாள்களும்
அடிக் கழஞ்சு பெற்றுச் செல்லுகிற நல்ல நாளாகத் தலைக் கட்டும் –
ஒரு நாள் யுண்டாய் ஒரு நாள் இல்லையாய் இருக்கை அன்றிக்கே
பூதா நாம் யோ அவ்யய பிதா -என்கிறபடியே
சர்வ காலத்திலும் அழியாத என் பிதாவானவனுடைய ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகளுக்கே அடிமையாய்க் கொண்டு
என்னுடைய வாக் இந்த்ரியமானது விஸ்ம்ருதி பிரசங்கம் இன்றிக்கே ஏத்துவதாக –

———————————————————————————————–

உன்னுடைமையை ஒன்றும் சோர விடாத நீ என்னைக் கைக் கொண்டு அருள வேணும் என்கிறார் –

கால த்ரயத்திலும் அழிவு வராமல் அனுபவிக்கப் பெற்ற எனக்கு திருவடிகளிலே நித்ய கைங்கர்யத்தையும் தந்து
தத் விரோதியான சம்சார பயத்தையும் மாற்றி அருள வேணும் என்கிறார் –

(அனுக்ரஹம் இருந்தால் பிறவிக்கும் அஞ்ச வேண்டாமே -பிறந்த இடத்தில் அச்சம் இல்லாமல் தாண்டுவோம் என்கிற நிச்சய புத்தி இருக்குமே

ஸம்ஸாரத்தில் இருக்க கைங்கர்யத்துக்கு விச்சேதம் வருமே என்று அஞ்சி இருக்க -உனது அருள் கிட்டினால் அஞ்ச வேண்டாமே -என்றபடி)

(அடியேன் என்றுமே உடைமை பூமியைப் போலே -இசைவே வேண்டுவது -வஸ்து ஸ்திதிக்கு உள்ளே உறைந்தே இருப்பான் –
இசைந்த அன்று உவந்த உள்ளத்தனாய் கருடா வாஹனுமாயும் பரிஜன பத்னீ மார்கள் உடன் சேவை சாதிப்பானே)

வாய் மொழிந்து வாமனனாய் மாவலி பால்
மூவடி மண் நீ யளந்து கொண்ட நெடுமாலே -தாவிய நின்
எஞ்சா இணை யடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி
அஞ்சாது இருக்க வருள் —18-

பதவுரை

வாமனன் ஆய்–வாமந ரூபியாகி
மாவலி பால்–மஹாபலியினிடத்தில் (சென்று)
வாய் மொழிந்து–(மதுரமான சில) வாய்மொழிகளைச் சொல்லி
மூ அடி மண்–மூவடி நிலத்தை (இரந்து பெற்று)
அளந்து கொண்ட–அதை அளந்து கொண்ட
நெடு மாலே–ஸர்வேஸ்வரனே!-வ்யாமோஹனே என்றுமாம்
எஞ்சா–சுருங்குதலின்றி
தாவிய–ஸர்வ வ்யாபியான
நின் இணை அடிக்கே–உனது உபய பாதங்களுக்கே-அநந்யார்ஹ சேஷ பூதன் என்று -இணை அடிக்கே -ஏவ காரம் –
ஏழ் பிறப்பும்–எல்லா பிறவிகளிலும்
ஆள் ஆகி–நான் ஆட்பட்டவனாகி
அஞ்சாது இருக்க–பயங்கெட்டிருக்கும் படி
நீ அருள்–நீ கிருபை பண்ண வேணும்.

வாய் மொழிந்து வாமனனாய் —
ஸ்ரீ வாமனனாய் -மாவலீ மூவடி மண் தா -என்று அருளிச் செய்து

மாவலி பால்-மூவடி மண் நீ யளந்து கொண்ட நெடுமாலே —
அவன் தரப் பின்னை அளந்து கொண்ட ஸர்வேஸ்வரனே

தாவிய நின்-எஞ்சா இணை யடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி அஞ்சாது இருக்க வருள் —
திரு உலகு அளந்து அருளினவனுடைய கல்யாணமான திருவடிகளிலே நிர்ப் பயனாய்
காலம் எல்லாம் அடிமை செய்து இருக்கும் படி அருள்

ஒவ்க்ஷதத்தை சேவித்தான் ஒருவன் தனக்கு பயம் இன்றிக்கே
சர்ப்பத்தின் வாயிலே கை கொடா நின்றான் இறே –
அவனுடைய அருள் பெற்ற வன்றே சம்சாரத்திலே இருந்து பயம் கெட்டு இருக்கத் தட்டில்லை இறே —

(தூங்கார் பிறவிக்கள் இன்னம் புகப் பெய்து
வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சிப்
பாம்போடு ஒரு கூரையிலே  பயின்றாப் போலே
தாங்காது உள்ளம் தள்ளும் என் தாமரைக் கண்ணா —பெரிய திருமொழி-11-8-3-)

—————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

கால த்ரயத்திலும் அழிவு வராமல் அனுபவிக்கப் பெற்ற எனக்கு திருவடிகளிலே நித்ய கைங்கர்யத்தையும் தந்து
தத் விரோதியான சம்சார பயத்தையும் மாற்றி அருள வேணும் என்கிறார் –

சர்வாதிகனான நீ ஸ்ரீ வாமனனாகி ஆஸூர பிரக்ருதியான அவன் இரங்கும் படி -கொள்வன் நான் -என்றால் போலே
சில முக்த ஜலப்பிதங்களைப் பண்ணி -மஹா பலி பக்கலிலே சென்று மூன்றடி மண்ணை அபேக்ஷித்து
அவன் தரப் பின்னை அளந்து கொண்ட ஸர்வேஸ்வரனே –
வகுத்த சேஷியான உன்னுடைய அநாயாசேன ஜகத்தை அளந்து கொண்டதாய்
அசங்கோசமான அழகை யுடைத்தாய் பரஸ்பர சத்ருசமான திருவடிகளுக்கே
ஒழிவில் காலம் எல்லாம் -என்கிறபடியே கால தத்வம் உள்ளதனையும் அடிமை செய்து
இவ்வடிமைக்கு அழிவு வரில் செய்வது என் என்று நான் அஞ்சாதே நிர்ப்பரனாய் இருக்கும் படி பண்ணி அருள வேணும்
நெடுமால் -ஆஸ்ரிதர் பக்கல் வியாமுக்தன் என்னவுமாம் –

(அறிவு இல்லா விட்டால் பிறவி பயங்கரம் -துக்க கரம் ஆகும்
அறிவு வந்தால் பிறவு சுக கரம் என்று இல்லை-பயங்கரமாய் இருக்காது என்பதே அர்த்தம்)

—————————————————-

அருள் என்னும் காட்டில் அருளுமோ என்று திரு உள்ளம் விசாரிக்க –
நமக்கு அருளாது ஒழியுமோ -என்கிறார் –

அஞ்சாது இருக்க அருள் என்று நாம் அவனை நிர்ப்பந்தித்தால் -அவன் நம்முடைய அயோக்யதையைப் பார்த்து
உபேக்ஷித்தல் அன்றிக்கே நம் கார்யம் செய்கைக்கு சக்தன் இன்றிக்கே இருத்தல் செய்யிலோ
என்று திரு உள்ளம் பிற்காலிக்க
அவன் நம் கார்யம் செய்கைக்கு சக்தனே –
நம் அயோக்யதையைப் பார்த்து உபேக்ஷிப்பதும் செய்யான் -என்கிறார் –

(தகுதி இன்மை -கர்ம வல் வினைகள் உண்டே -அவனுக்கும் மலை பேர்ப்பது போல் அன்றோ செய்ய வேண்டியது என்று கவலை வேண்டாமே
அவனது அகடிகடநா சாமர்த்தியம் கண்டு -அங்க ஹீந பிள்ளை பக்கல் தாய் முந்துற பரிவாள் அன்றோ
ஆகவே நமக்கே முன் அனுக்ரஹம் அருளுவான் -)

அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று
தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் -இருளாத
சிந்தையராய்ச் சேவடிக்கே செம் மலர் தூயக் கை தொழுது
முந்தையராய் நிற்பார்க்கு முன் -19-

பதவுரை

இருளாத சிந்தையர் ஆய்–அஜ்ஞானவிருள் சேராத நெஞ்சை யுடையாய்க் கொண்டு
சே அடிக்கே–திருவடிகளுக்கு
செம் மலர் தூய்–நல்ல புஷ்பங்களை ஸமர்ப்பித்து
கை தொழுது–அஞ்ஜலி பண்ணி
முந்தையர் ஆய் நிற்பார்க்கு–‘நான் முன்னே நான் முன்னே‘ என்று நிற்கும் பக்தர்களுக்கு,
முன் அன்று–முன்பொரு காலத்தில்
தெருளாத பிள்ளை ஆய்–அறியாத சிறு குழந்தையாய்
ஆல் இலை மேல் சேர்ந்தான்–ஆலந்தளிரில் சயனித்த பெருமான்
அருளாது ஒழியுமே–கிருபை பண்ணாமற் போவனோ?

அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று-தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் —
ஆலிலையிலே சேர்ந்து வியாமுக்தனான பிள்ளை நமக்கு அருளாது ஒழியுமோ

இருளாத-சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர் தூயக் கை தொழுது-முந்தையராய் நிற்பார்க்கு முன் —
இருளாத சிந்தைகளை யுடையராய் திருவடிகளிலே புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு கைகளால் தொழுது
முற்பாடராய் இருக்கிறவர்களுக்கு முன் –

அருளாது ஒழியுமே-
முன்னே அருளானோ –

——————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

அஞ்சாது இருக்க அருள் என்று நாம் அவனை நிர்ப்பந்தித்தால் -அவன் நம்முடைய அயோக்யதையைப் பார்த்து
உபேக்ஷித்தல் அன்றிக்கே நம் கார்யம் செய்கைக்கு சக்தன் இன்றிக்கே இருத்தல் செய்யிலோ
என்று திரு உள்ளம் பிற்காலிக்க
அவன் நம் கார்யம் செய்கைக்கு சக்தனே –
நம் அயோக்யதையைப் பார்த்து உபேக்ஷிப்பதும் செய்யான் -என்கிறார் –

பகவத் விஷயத்தில் அஞ்ஞான ஏக தேசமும் ஊடு கலசாத ஹ்ருதயத்தை யுடையராய்க் கொண்டு சிவந்த திருவடிகளிலே
அழகிய செவ்விப் பூக்களை அடைவு கெடப் பணிமாறி -கைகளால் அஞ்சலி பந்தத்தைப் பண்ணி ஆஸ்ரயித்து
முற்பாடராய் இருக்கிற அதிகாரிகளுக்கு முன்னே -ஜகத்து பிரளயத்தில் அழிய புக்க வன்று  ஒரு பவனாய்
இருப்பதோர் ஆலந்தளிரின் மேலே அறிவு கலசாத முக்த சிசுவாய்க் கொண்டு பள்ளி கொண்டு அருளின
அகடிகடநா சமர்த்தன் அருளாது ஒழியுமோ —
யோக்கியருக்கு முன்னே அயோக்யரான நமக்கு தன் அகடிகடநா சாமர்த்தியத்தால் அருளும் –
நீ பயப்பட வேண்டா என்று திரு உள்ளத்தைக் குறித்து மாஸூச -என்று தேறி அருளுகிறார்-

(பாலன்  தனதுருவாய்  யேழுலகுண்டு ஆலிலையின்
மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் ஆலன்று
வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —ஸ்ரீ முதல் திருவந்தாதி–69-)

——————————————————-

அவன் தன்னை அபேக்ஷித்தார்க்கு தன்னை அழிய மாறி கார்யம் செய்யுமவன் அன்றோ என்கிறார் –

(ப்ரயோஜனாந்தர பரருக்கே கார்யம் செய்து அருளியவன் அநந்ய ப்ரயோஜனராய் உள்ள நமக்கு அருளாது ஒழியுமோ
கீழ் தகுதி இல்லாத நமக்கும் அருளியே தீருவான் என்றார்
ஸ்ரத்தை ஒன்றே அதிகாரம் – -ஆசை யுடையோர்க்கு எல்லாம் -என்று அன்றோ இவர்களுக்கும் உபகாரம் செய்து அருளினான் அன்றோ

கீழ் பிரார்திக்கத் தெரியாத உலகை உண்டாய் -இங்கு பிரார்த்தித்த இந்திரனுக்கு கார்யம்
இரண்டும் இல்லாத அநந்ய பிரயோஜனான -அநந்யார்ஹ சேஷ பூதனான எனக்கு உதவாமல் போவானோ என்கிறார் )

முன்னுலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு அவ்வுலகம் ஈரடியால்
பின்னளந்து கோடல் பெரிதொன்றே -என்னே
திருமாலே செங்கண் நெடியானே எங்கள்
பெருமானே நீ யிதனைப் பேசு ——-20-

பதவுரை

முன்–முன்பொரு காலத்தில்
உலகம்–உலகங்களை யெல்லாம்
உண்டு–திரு வயிற்றிலே வைத்திருந்து
உமிழ்ந்தாய்க்கு–பிறகு வெளிப்படுத்தின உனக்கு
அவ் வுலகம்–அந்த வுலகங்களை
பின்–பின்பொருகாலத்தில்
ஈர் அடியால்–இரண்டு திருவடிகளாலே
அளந்து கோடல்–அளந்து கொள்வதானது
பெரிது ஒன்றே–பெரியவொரு காரியமாகுமோ?
திருமாலே–திருமகள்  நாதனே!
செம் கண் நெடியானே–சிவந்த திருக் கண்களை யுடைய ஸர்வாதிகளே!
எங்கள் பெருமானே–எமக்கு ஸ்வாமியானவனே!
நீ இதனை பேசு–நீ இதை (எனக்குத் தெரிய)ச் சொல்ல வேணும்,
என்னே–இஃது என்னோ?

முன்னுலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு அவ்வுலகம் ஈரடியால் பின்னளந்து கோடல் பெரிதொன்றே —
உன் கையிலே பருத்தி பட்ட பன்னிரண்டும் பட்ட இந்த லோகம் தன்னையே
பெறாது பெற்றாயாக அளந்து கொள்கை -இது பெரியது ஒன்றே

என்னே-திருமாலே செங்கண் நெடியானே எங்கள் பெருமானே நீ யிதனைப் பேசு —
உன்னுடைய மேன்மைக்கும் இத் தாழ்ச்சிக்கும் -என்னே-எங்கே- சேர்த்தி யுண்டு
நீ இத்தைச் சொல்ல வேணும் என்று -எத்திறம் என்கிறார் –

பருத்தி பன்னிரண்டு படுகை யாவது
1-கொட்டை வாங்கி -2-பன்னிச் சுருட்டி –3-நூலாக்கியும்
4-பாவோடி –5-நெய்து –6-மடித்து –7-விற்று -8-பொகட்டும் படியும்
9-தோய்த்து –10-உலர்த்தி –11-உடுத்து –12-கிழித்து விடும்படியும்-

ஈஸ்வரன் தன்னில்
1-விபக்தமாக்கி
2-பஞ்சீ க்ருதமாக்கி
3-அண்டமாக்கி
4-தேவாதி சரீரங்கள் ஆக்கி
5-லோக வ்யவஸ்த்திதி உண்டாக்கி
6-அவாந்தர ஸ்ருஷ்டியைப் பண்ணி
-ரஷித்து
7-ப்ரஹ்மாதிகளுக்கு ஆக்கி
8-பிரளயத்திலே எடுத்து
9-எயிற்றிலே வைத்து
10-வயிற்றிலே வைத்து
11-உமிழ்ந்து
12-பின்பு சம்ஹ்ருதம் ஆக்கியும்
செய்த படிகளைக் கண்டு கொள்வது-

——————————————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

அவன் தன்னை அபேக்ஷித்தார்க்கு தன்னை அழிய மாறி கார்யம் செய்யுமவன் அன்றோ என்கிறார் –

முன்பொரு காலத்தில் ஜகத்தை எல்லாம் திரு உதரத்திலே எடுத்து வைத்து புறப்பட விடுவதாய்ச் செய்த உனக்கு
இப்படி இஷ்ட சர்வ சேஷ்டா விஷயமான (உண்டதும் உமிழ்ந்ததும் போல்வன )அந்த லோகத்தை
பின்பு ஒரு நாளிலே இரண்டு திருவடிகளால் அளந்து கொள்கையான இது ஒரு பெரிய செயலாகச் செய்தாயோ –

ஸ்ரீ யபதியாய் அவளோட்டைச் சேர்த்தியாலே சிவந்த திருக் கண்களை யுடையனாய் –
ஒருவராலும் அளவிட ஒண்ணாத பெருமையை யுடையையாய்-
எங்களுக்கு ஸ்வாமி யானவனே -நீ இத்தை அருளிச் செய்ய வேணும் –

இந்திரன் பல் காட்டினது பொறுக்க மாட்டாமல் உன் வியாமோஹத்தால் செய்த செயல் அத்தனை இறே –
என்னே இது என்ன ஆச்சர்யம் என்று வித்தாராகிறார் –

(விஷ்ணு பக்தி பரோ தேவா -இதுக்காகவாவது நம்மிடம் வந்தானே -என்ன உதாரன் என்று கொண்டாடினாயே)

————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading