திருச் சின்ன மாலை -ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு

———————————————————————————-

சிறப்புத் தனியன்கள் –

மன்னு திருமந்திரத்தின் வாழ் துவயத்தின் இன்பொருளும்
துன்னு புகழ்க் கீதை தனில் சொன்ன எண் நான்கின் இன் பொருளும்
அன்ன வயல் கச்சி யருளாளர் திருச் சின்ன வொலி
யின்ன படி என்று உரைத்தான் எழில் வேதாந்த்ரியனே –

எண் நான்கின் இன் பொருளும் -முப்பத்து இரண்டு அஷரங்களால் ஆகிய சரம ஸ்லோகத்தின் அர்த்த விசேஷங்களும் –

———

ஏகாந்த மூன்றும் எழிலால் உரை செய்து
மா காந்தம் செய்து அருளும் வள்ளலாய் -சாகாந்த
தேசிகனாம் தூப்புல் திரு வேங்கடேச குரு
வாசகமே எங்களுக்கு வாழ்வு –

மா காந்தம் செய்து அருளும் வள்ளலாய்-பெருமை மிக்க உலோகமான காந்தம் போலே பிறர் மனசைக் கவர்ந்து
அவர்களை உஜ்ஜீவிக்குமாறு அருள் புரியும்
சாகாந்த தேசிகனாம் -வேதாந்த தேசிகன் என்று பிரசித்தி பெற்ற –

——————————-

பரிச்சின்னமான விரு நாலு எழுத்தின் பல் வண்மை எலாம்
விரிச்சு நலம் பெற வோத வல்லார்க்கு இந்த மேதினிக்கே
மரிச்சு இன்னம் மீளப் பிறவாமல் வாழ்விக்கும் மால் வரதர்
திருச் சின்ன வோசை இனிமை யுண்டோ மற்றைத் தேவருக்கே –

—————————————————————————-

திவ்ய பிரபந்தங்கள் திரு வீதிகளில் சேவிக்கக் கூடாது என்ற ஆஷேபங்களை வென்று
இந்த பிரபந்தம் சாதித்ததாகச் சொல்லுவார்கள்
ஸ்ரீ பேர் அருளாளன் திரு உள்ளம் உகந்து திருச் சின்னங்களில் ஒன்றை ஸ்ரீ தேசிகன் இடம் அருளியதால்
இன்றும் ஒற்றைத் திருச் சின்னமே சேவிக்கப் படுகிறது –

——————————————————

ஈர் உலகைப் படைக்க வெண்ணி இருந்தார் வந்தார்
எழில் மலரோன் தன்னை யன்றே ஈன்றார் வந்தார்
மாருத மண் நீராகும் மாயோர் வந்தார்
வானொடு எரி தாமாகும் மறையோர் வந்தார்
சூரியர் தம்முடன் துலங்கு தூயோர் வந்தார்
சுரர்களுக்கு அன்று அமுது அருள் சுந்தரனார் வந்தார்
வாரி திகழ் வையகம் வாழ்வித்தார் வந்தார்
வண்மையுடன் வரம் தருவார் வந்தார் தாமே -1–

ஈர் உலகைப் படைக்க வெண்ணி இருந்தார் வந்தார் -சேதன அசேதனங்கள் -இருவகையும் சிருஷ்டிக்க சங்கல்ப்பித்தவர்
மறையோர் வந்தார் -வேதத்தால் போற்றப்படுபவர் வந்தார்
சூரியர் தம்முடன் துலங்கு தூயோர் வந்தார் -நித்ய சூரிகள் உடன் பிரகாசிக்கும் பரிசுத்தர் வந்தார் –

——————————————————————————-

அருமறையை யூழி தனில் காத்தார் வந்தார்
அது தன்னை யன்று யயனுக்கு அளித்தார் வந்தார்
தர்ம வழி யழியாமல் காப்பார் வந்தார்
தாமரையாள் உடன் இலங்கும் தாதை வந்தார்
திரு வுரையாய்த் தாம் பொருளாய் நிற்பார் வந்தார்
திருவருளால் செழும் கலைகள் தந்தார் வந்தார்
மருவலர்க்கு மயக்கு உரைக்கும் மாயோர் வந்தார்
வானேற வழி தந்தார் வந்தார் தாமே –2–

தர்ம வழி யழியாமல் காப்பார் வந்தார் -தர்ம மார்க்கம் கெடாமல் பல அவதாரங்களைச் செய்து ரஷிப்பவர் வந்தார்
திரு வுரையாய்த் தாம் பொருளாய் நிற்பார் வந்தார் -பிராட்டி சப்த ஸ்வரூபையாய் -தாம் அந்த சப்தத்தில் அர்த்தமாய் நிற்குமவர் வந்தார்
திருவருளால் செழும் கலைகள் தந்தார் வந்தார் -வ்ருத்தி அடையும் வித்யைகளை மஹர்ஷிகளின் வழியாக உலகுக்கு அருளியவர் வந்தார்
மருவலர்க்கு மயக்கு உரைக்கும் மாயோர் வந்தார் -தம்மை ஆஸ்ரயிக்காதவர்களுக்கு பல மோஹ சாஸ்த்ரங்களை வெளியிட்டு
அவர்களை நரகில் விழச் செய்திடுமவர் –மாயோர் -வஞ்சகமுடையார்-என்றபடி –

——————————————————————————————————

அனைத்து உலகும் காக்கும் அருளாளர் வந்தார்
அனைத்து உலகுக்கும் அதிபதியாய் நிற்பார் வந்தார்
தினைத்தினையும் திரு மகளை விடாதார் வந்தார்
தேசொத்தார் மிக்காரும் இல்லார் வந்தார்
நினைக்க நமக்கு இன்னறிவு தந்தார் வந்தார்
நிலை நின்ற வுயிர் தோன்ற நினைந்தார் வந்தார்
எனக்கிவர் நான் இவர்க்கு என்ன வினியார் வந்தார்
எழுத்து ஒன்றில் திகழ நின்றார் வந்தார் தாமே –3-

எனக்கிவர் நான் இவர்க்கு என்ன வினியார் வந்தார் எழுத்து ஒன்றில் திகழ நின்றார் வந்தார் தாமே —
எனக்கு இவர் ஸ்வாமி -நான் இவருக்கு சேஷன்-என்று அனுசந்திக்கும் போது பரம போக்யராய்த் தோன்றுமவர்-
ஓர் எழுத்தான பிரணவத்தாலே போற்றப் பட்டு பிரகாசிப்பவர் வந்தார் –

அனைத்து உலகும் அதிபதியாய் நிற்பார் வந்தார் -எல்லாம் சேஷம் -லுப்த சதிர்த்தியின் அர்த்தம்
திரு மகளை விடாதார் வந்தார் -உகாரார்த்தம்
தேசொத்தார் மிக்காரும் இல்லார் வந்தார் -அவனுக்கே சேஷம் -மற்றும் ஒரு உகாரார்த்தம்
நினைக்க நமக்கு இன்னறிவு தந்தார் வந்தார் -ஞானம் உடையவனாய்
நிலை நின்ற வுயிர் தோன்ற நினைந்தார் வந்தார் -ஸ்வயம் பிரகாசனான ஜீவ ஸ்வரூபம்
எனக்கிவர் நான் இவர்க்கு என்ன வினியார் வந்தார் எழுத்து ஒன்றில் திகழ நின்றார் வந்தார் தாமே-பிரணவார்த்தம் சொல்லிற்று

—————————————————————————

நாம் வணங்கத் தாம் இணங்கா நிற்பார் வந்தார்
நம்மை அடைக்கலம் கொள்ளு நாதர் வந்தார்
நாம் எமக்காம் வழக்கு எல்லாம் மறுத்தார் வந்தார்
நமக்கு இது என்று உரையாமல் வைத்தார் வந்தார்
சேமம் எண்ணி எம்மை யன்பர்க்கு அடைத்தார் வந்தார்
செழும் தகவால் திண் சரணாம் ஈசர் வந்தார்
தாம் அனைத்துத் தீ வினையைத் தவிர்ப்பார் வந்தார்
தமக்கேயாய் எமைக் கொள்வார் வந்தார் தாமே –4-

நாம் வணங்கத் தாம் இணங்கா நிற்பார் வந்தார் -நாம் சேவித்தால் நமக்குப் பலன் அளிக்க உடன்பட்டு நிற்பவர் வந்தார்
நமக்கு இது என்று உரையாமல் வைத்தார் வந்தார் -இந்த வஸ்து நம்மது என்று கூறாமல் இருக்கும் நல்ல அறிவைக் கொடுத்து நிறுத்தியவர் வந்தார்
நமஸ் சப்தார்த்தம் அருளுகிறார் –
நாம் வணங்கத் -நமஸ்காரம்
நம்மை அடைக்கலம் கொள்ளு நாதர் வந்தார் -பர சமர்ப்பணம் –
நாம் எமக்காம் வழக்கு எல்லாம் மறுத்தார் வந்தார் -அஹங்கார மமகாரங்கள் ஒழிந்து
நமக்கு இது என்று உரையாமல் வைத்தார் வந்தார் -எதையும் பற்றி சேஷித்வம் நமக்கு இல்லை
சேமம் எண்ணி எம்மை யன்பர்க்கு அடைத்தார் வந்தார் -பாகவத சேஷத்வம்
செழும் தகவால் திண் சரணாம் ஈசர் வந்தார் -உபாயத் தண்மை
தாம் அனைத்துத் தீ வினையைத் தவிர்ப்பார் வந்தார் -அநிஷ்ட நிவ்ருத்தி
தமக்கேயாய் எமைக் கொள்வார் வந்தார் தாமே –தமக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே –

————————————————————————————————

உலகு எல்லாம் உள்ளே வைத்து உமிழ்ந்தார் வந்தார்
உலகு உடம்பாய்த் தாம் உயிராய் நின்றார் வந்தார்
அலை கடலாய் ஆனந்தம் அடைந்தார் வந்தார்
அளவில்லா வருள் ஆழிப் பெருமாள் வந்தார்
திலகம் எனும் திரு மேனிச் செல்வர் வந்தார்
செழும் குணங்கள் இரு மூன்றும் உடையார் வந்தார்
இலகு சுடர் முழு நலமாம் இனியார் வந்தார்
எல்லார்க்கும் கதியானார் வந்தார் தாமே –5-

அலை கடலாய் ஆனந்தம் அடைந்தார் வந்தார் -குமிழி நுரை அலை முதலிய பல நிலைமையில் மாறும்
தன் சங்கல்பத்தால் பலவித பிரபஞ்சமாக ஆகி -அதனால் மகிழ்ந்தவர்
நாராயண சப்தார்த்தம் –ஆதாரத்வம் – காரணத்வம் -சரீராத்மா பாவம் -உபய விபூதி நாதத்வம் -திவ்ய மங்கள விக்ரஹம் –
திவ்ய கல்யாண குணங்கள் -ஜ்ஞான ஆனந்த ஸ்வரூபம் -உபாய உபேய தன்மைகள் -இவற்றை அருளிச் செய்கிறார் –

——————————————————————————–

அருளாலே விலங்கு இரண்டும் அழிப்பார் வந்தார்
அஞ்சிறையைக் கழித்து அருளும் அன்பர் வந்தார்
மருள் வாரா வகை நம்மைக் காப்பார் வந்தார்
வானேற வழி நடத்தி வைப்பார் வந்தார்
தெருளாரும் தெளி விசும்பு தருவார் வந்தார்
திண் கழல் கீழ் வாழ நமக்கு அருள்வார் வந்தார்
பெரு வானில் அடிமை நம்மைக் கொள்வார் வந்தார்
பிரியாமல் காத்து அளிப்பார் வந்தார் –6-

விலங்கு இரண்டும் -புண்ய பாப கர்மங்கள் ஆகிய இரண்டு விலங்குகளையும்
வானேற வழி நடத்தி வைப்பார் வந்தார் -பரம பத்தில் செல்லும் படி அர்ச்சிராதி மார்க்கத்தில் நடத்தி வைத்து அருளுபவர் வந்தார்
ஆய சப்தார்த்தம் -கைங்கர்யம் அருளிச் செய்து திருமந்த்ரார்த்தங்களை நியமிக்கிறார் இந்த பாட்டால் –

——————————————————————–

அகலகில்லாத் திருமகளார் அன்பர் வந்தார்
அடியிரண்டும் ஆறாகத் தந்தார் வந்தார்
புகலில்லார் புகலாகும் புனிதர் வந்தார்
பொன்னுலகில் திருவுடனே திகழ்வார் வந்தார்
அகிலம் எலாம் ஆனந்தமானார் வந்தார்
அடியிணைக் கீழ் வைத்து அடிமை கொள்வார் வந்தார்
பகல் நடுவே இரவு அழைக்க வல்லார் வந்தார்
பகல் ஒன்றாய் இரவு அழித்தார் வந்தார் தானே –7–

பகல் நடுவே இரவு அழைக்க வல்லார் வந்தார் -பாரத யுத்தத்திலே பகலின் நடுவே இரவைக் கொணரும் வல்லமை யுடையவர் வந்தார்
பகல் ஒன்றாய் இரவு அழித்தார் வந்தார் தானே-முக்தியில் ஒரே பகலாய் சம்சாரம் ஆகிய இரவைப் போக்கியவர் வந்தார்

திருத் த்வயத்தின் அர்த்தங்களை அருளுகிறார் இப்பாசுரத்தால் –
அகலகில்லாத் திருமகளார் -ஸ்ரீ மத்சப்தார்த்தம்
அடியிரண்டும் ஆறாகத் தந்தார் வந்தார் -சரனௌ சரணம் –
புகலில்லார் புகலாகும் புனிதர் வந்தார் -பிரபத்யே -புனிதர் -மஹா விஸ்வாசம் –
பொன்னுலகில் திருவுடனே திகழ்வார் வந்தார் -அகிலம் எலாம் ஆனந்தமானார் வந்தார் -ஸ்ரீ மதே நாராயணாய-சப்தார்த்தம்
அடியிணைக் கீழ் வைத்து அடிமை கொள்வார் வந்தார் -ஆய சப்தார்த்தம்
பகல் நடுவே இரவு அழைக்க வல்லார் வந்தார் -கர்மத்தால் ஞான சங்கோசம் -காட்டுவதின் வாயிலாக நமஸ் சப்தார்த்தம்
பகல் ஒன்றாய் இரவு அழித்தார் வந்தார் தானே –விரோதி ஒழித்து அருளுவார்-நமஸ் சப்தார்த்தம்

————————————————————————————————————–

தருமன் விடத் தாம் தூது போனார் வந்தார்
தரணி பொறாத் திண் பாரம் தவிர்த்தார் வந்தார்
அருமறையின் பொருள் அனைத்தும் விரித்தார் வந்தார்
அஞ்சின நீ என்னை யடை என்றார் வந்தார்
தருமம் எலாம் தாமாகி நிற்பார் வந்தார்
தாமே நம் வினை அனைத்தும் தவிர்ப்பார் வந்தார்
பரம் எனது நீ புலம்பல் என்றார் வந்தார்
பார்த்தனுக்குத் தேரூர்ந்தார் வந்தார் தாமே –8-

அருமறையின் பொருள் அனைத்தும் விரித்தார் வந்தார்-வேதார்த்தங்களை ஸ்ரீ கீதா முகமாக விளக்கி அருளியவர் வந்தார்
பரம் எனது நீ புலம்பல் என்றார் வந்தார் -ரஷிக்கும் பொறுப்பு என்னது -நீ வருந்தாதே -என்று உறுதி கூறியவர் வந்தார்
மா ஸூ சா -என்ற விதியின் அர்த்தம் –
இத்தால் சரம ஸ்லோகார்த்தம் வெளியிட்டு அருளுகிறார் –

—————————————————————————————————-

வஞ்சனையே செய் பூதனையை மாய்த்தார் வந்தார்
மல்லர் மத கரி மாள மலைந்தார் வந்தார்
கஞ்சனைப் போர் கடும் சினத்தால் கடிந்தார் வந்தார்
கண்ணுதன் முன் வாணன் தோள் கழித்தார் வந்தார்
வெம் சொல் தர வீடு கொடுத்து உகந்தார் வந்தார்
விலக்கில்லா வழி நடத்த விரைந்தார் வந்தார்
பஞ்சவரைப் பலவகையும் காத்தார் வந்தார்
பாஞ்சாலி குழல் முடித்தார் வந்தார் தாமே –9–

வெம் சொல் தர வீடு கொடுத்து உகந்தார் வந்தார் -சிசுபாலன் நிந்தித்தாலும் மோஷத்தை அருளி அதனால் உகந்தார் வந்தார்
விலக்கில்லா வழி நடத்த விரைந்தார் வந்தார் -தடையில்லா அர்ச்சிராதி மார்க்கத்திலே சேதனர்களை-பிரபன்னர்களை –
நடத்தி அருள விரைபவர் வந்தார் –

மாம் -அஹம் -சப்தார்த்தங்கள்-சர்வஜ்ஞ்ஞன் -சர்வ சக்தன் -விரோதி நிரசன சீலன் -சத்ய சங்கல்பம் கொண்டவன்
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-சப்தார்த்தங்கள் -வெளியட்டு அருளுகிறார்-

——————————————————————————

அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்
ஆனை பரி தேரின் மேல் அழகர் வந்தார்
கச்சி தனில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார்
கருத வரம் தரு தெய்வப் பெருமாள் வந்தார்
முத்தி மழை பொழியும் முகில் வண்ணர் வந்தார்
மூலம் என ஓலமிட வல்லார் வந்தார்
உத்தர வேதிக்குள்ளே யுதித்தார் வந்தார்
உம்பர் தொழும் கழல் உடையார் வந்தார் தாமே –10-

ஆனை பரி தேரின் மேல் அழகர் வந்தார் -யானை குதிரை தேர் வாகனங்கள் மீது எழுந்து அருளும் அழகர் வந்தார்
கருத வரம் தரு தெய்வப் பெருமாள் வந்தார் -மனசினால் அனுசந்தித்தால் வேண்டிய வரத்தைக் கொடுத்து அருளும் தேவ ஸ்ரேஷ்டர் வந்தார் –

————————————————————————————————-

மறைத்தலையில் இசை எழுத்தில் வணங்கும் வாக்கில் –
மந்திரத்தில் நாலு எழுத்தாம் திரு நாமத்தில் –
நிறைத்து இலகு வேற்றுமையில் -இரண்டாம் ஒன்றில் –
நெடுமால் தன் கீதை எலா நிறைந்த சொல்லில்
உறைத்தவர் கண்டு உரைத்த பொருளான வெல்லாம்
உயர் விரத வருளாளப் பெருமாள் தேசின் –
திறத்தில் இயை திருச் சின்ன மாலை பத்தும்
செவிக்கு இனிதாம் சிற்றின்பம் இசையாதார்க்கே -11–

மறைத்தலையில் இசை எழுத்தில் -வேதங்களின் ஆரம்பத்திலும் முடிவிலும் அமைந்த பிரணவத்திலும்
வணங்கும் வாக்கில் -வணக்கத்தைக் கூறும் நமஸ் சப்தத்திலும்
மந்திரத்தில் நாலு எழுத்தாம் திரு நாமத்தில் -திரு மந்த்ரத்தில் நான்கு அஷரங்கள் அமைந்த நாராயண சப்தத்திலும்
நிறைத்து இலகு வேற்றுமையில் -அந்த நாராயண சப்தத்தைப் பூர்த்தி செய்து பிரகாசிக்கின்ற நான்காம் வேற்றுமையிலும்
இரண்டாம் ஒன்றில் -இரண்டு பாகமாய் இருந்து ஒரு மந்த்ரமாய் உள்ள த்வயத்திலும்
நெடுமால் தன் கீதை எலா நிறைந்த சொல்லில் -ஸ்ரீ கீதார்த்தங்கள் நிறைந்த சரம ஸ்லோகத்திலும்
உறைத்தவர் -நன்கு பரிச்சயம் செய்த நம் ஆச்சார்யர்கள்
கண்டு உரைத்த பொருளான வெல்லாம்
உயர் விரத வருளாளப் பெருமாள் தேசின் -திறத்தில் சரணாகத ரஷனம் என்னும் உயர்ந்த வ்ரதத்தை கொண்டுள்ள
பேர் அருளாள பெருமாளின் பெருமையின் விஷயத்திலே
இயை திருச் சின்ன மாலை பத்தும் செவிக்கு இனிதாம் சிற்றின்பம் இசையாதார்க்கே –சிற்றின்பம் ஆகிய சம்சார ஸூகத்தை விரும்பி
அங்கீ கரிக்காதவர்களுக்கு காதுக்கு மதுரமாய் இருக்கும் –

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading