ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –
கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –
சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –
———————————————————
பத்தி முதலாம் அவற்றில் பதி எனக்கு கூடாமல்
எத்திசையும் உழன்று ஓடி யிளைத்து விழும் காகம் போல்
முத்தி தரும் நகர் ஏழின் முக்கியமாம் கச்சி தனில்
அத்திகிரி யருளாளர்க்கு அடைக்கலம் நான் புகுந்தேனே –1-
———————————————–
சடை முடியன் சதுமுகன் என்று இவர் முதலாம் தாம் எல்லாம்
அடைய வினைப் பயனாகி அழிந்து விடும் படி கண்டு
கடி மலராள் பிரியாத கச்சி நகர் அத்திகிரி
இடமுடைய வருளாளர் இணையடிகள் அடைந்தேனே –2-
—————————————————–
தந்திரங்கள் வேறின்றித் தமது வழி யழியாது
மந்திரங்கள் தம்மாலும் மற்றுமுள்ள யுரையாலும்
மந்திரம் கண்டு அடி பணிவார் அனைவர்க்கும் அருள் புரியும்
சிந்துர வெற் பிறையவனார் சீலம் அலது அறியேனே –3-
————————————————-
காகம் இராக்கதன் மன்னர் காதலி கத்திற பந்து
நாகம் அயன் முதலா நாக நகரார் தமக்கும்
போகமுயர் வீடு பெறப் பொன்னருள் செய்தமை கண்டு
நாகமலை நாயகனார் நல்லடிப் போது அடைந்தேனே –4-
——————————————————
உகக்கும் அவை யுகந்து உகவா வனைந்தும் ஒழிந்து உறவு குண
மிகத் துணிவு பெற வுணர்ந்து வியன் காவல் என வரித்துச்
சகத்தில் ஒரு புகலில்லாத் தவம் அறியேன் மதிட்கச்சி
நகர்க்கருணை நாதனை நல்லடைக்கலமாய் யடைந்தேனே –5-
————————————————-
அளவுடையார் அடைந்தார்க்கும் அதன் உரையே கொண்டவர்க்கும்
வளவுரை தந்தவன் அருளே மன்னிய மா தவத்தோர்க்கும்
களவொழிவார் எமர் என்ன விசைந்தவர்க்கும் காவலராம்
துளவ முடி யருள் வரதர் துவக்கிலெனை வைத்தேனே –6-
ஸ்வ நிஷ்டர் பிரபன்னர் –உக்தி நிஷ்டை பிரபன்னர் – ஆசார்ய நிஷ்டர் பிரபன்னர் –பாகவத நிஷ்டர் பிரபன்னர் -நான்கு வகையில்
ஏதேனும் ஒன்றை அனுஷ்டித்தார்க்கு அபீஷ்டங்களை தந்து அருளும் பேர் அருளாளன் உடன்
நெருங்கிய சம்பந்தம் உடையவன் ஆக்கிக் கொண்டேன் என்றவாறு –
————————————————————-
உமது அடிகள் அடைகின்றேன் என்று ஒரு கால் உரைத்த வரை
யமையும் இனி என்பவர் போல் அஞ்சல் எனக் கரம் வைத்தும்
தமது அனைத்தும் அவர் தமக்கு வழங்கியும் தாம் மிக விளங்கும்
அளைவுடைய வருளாளர் அடியிணையை யடைந்தேனே –7-
———————————————————————-
திண்மை குறையாமைக்கும் நிறைகைக்கும் தீ வினையால்
உண்மை மறவாமைக்கும் உளமதியில் உகக்கைக்கும்
தண்மை கழியாமைக்கும் தரிக்கைக்கும் தணிகைக்கும்
வண்மை யுடை யருளாளர் வாசகம் கண் மறவேனே –8-
————————————————————-
சுருதி நினைவிவை யறியும் துணிவுடையார் தூ மொழிகள்
பரிதி மதி யாசிரியர் பாசுரம் சேர்ந்து அருக கணங்கள்
கருதி யொரு தெளிவாளால் கலக்கம் அறுத்து அத்திகிரிப்
பரிதி மதி நயனமுடைப் பரமனடி பணிந்தேனே –9-
————————————————————
திருமகளும் திருவடிவும் திருவருளும் தெள்ளறிவும்
அருமையிலாமையும் உறவும் அளப்பரிய வடியரசும்
கருமமும் அழிப்பு அளிப்பு அமைப்பும் கலக்கமிலா வகை நின்று
வருள் வரதர் நிலையிலக்கில் அம்பு என நான் அமிழ்ந்தேனே –10-
————————————————————-
ஆறு பயன் வேறில்லா வடியவர் அனைவர்க்கும்
ஆறும் அதன் பயனும் இவை ஒரு காலும் பல காலும்
ஆறு பயன் எனவே கண்டு அருளாளர் அடியிணை மேல்
கூறிய நல் குண வுரைகள் இவை பத்தும் கோதிலவே –11–
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply