பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -11-7-நீணாகம் சுற்றி நெடு வரை நட்டு ஆழ் கடலைப்-

இத் திருமொழியால் கரணங்கள் பகவத் விஷயம் அவஹாகித்து உஜ்ஜீவனம் பெறவே என்று உபதேசித்து
அப்படி அவஹாகிக்காதவர்களை நிந்தித்தும் அருளுகிறார்-

நீணாகம் சுற்றி நெடு வரை நட்டு ஆழ் கடலைப்
பேணான் கடைந்து அமுதம் கொண்டுகந்த பெம்மானைப்
பூணார மார்வனைப் புள்ளூரும் பொன் மலையைக்
காணாதார் கண் என்றும் கண் அல்ல கண்டாமே –11-7-1-

சேவிக்கப் பெறாதவர்கள் கண்கள் கண்கள் அல்ல புண்களே ஆகும் –
கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே -கண்ணிமைத்துக் கண்டார் தம் கண் என்ன கண்ணே
படுக்கைத்தலம் என்று பேணாதே பிரயோஜநாந்த   பரர்களுக்காக  -பேணான் கடைந்து
அமுதம் கொண்டு உகந்த -பிரயோஜநாந்தரம்-என்றாலும் இதைப் பெற தன்னை அண்டினான் என்று உகந்த
புள்ளூரும் பொன் மலையை -நீலமேகத் திரு வுருவனை ஹிரண்ய வர்ணாம் -நித்ய சம்ச்லேஷத்தால் பொன் மலை ஆனான்
காய்ச்சின பறவை மீதூர்ந்து பொன் மலையின் மீமிசைக் கார் முகில் போல் –
பொன் போலே விரும்பத் தக்க மலை என்னவுமாம்
கண்டாம் -கண்டோம் –

—————————————————-

நீள் வான் குறளுருவாய் நின்றிரந்து மாவலி மண்
தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை
தோளாத மா மணியைத் தொண்டர்க்கு இனியானை
கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே –11-7-2-

எம்பெருமானுடைய திருப் புகழை -ஸ்வரூப ரூப குண விபூதி விஸ்தாரங்களை இதிஹாச புராண முகேன கேட்பதற்கே செவிகள் –
கேட்கப் பெறாத செவிகள் நிலத்தில் உள்ள பாழிகளோடு அவற்றோடு ஒரு வாசி இல்லை –
நீள் வான் குறளுருவாய் -நீள்வதற்கு என்றே  ஸ்ரீ வாமன மூர்த்தியானான் -பதுங்கி நின்று பாயும் புலி சிங்கம் போலே
சுருங்க நின்றதனையும் பெருக்க வளருகைக்கு உறுப்பாக –
தக்கணைக்கு மிக்கான் -தஷிணைக்கு மிக சிறந்தவன் -பரம பூஜ்யன் -ராஜஸூய யோகத்திலே தெளிவே
தோளாத மா மணியே -துளை இட்டு அனுபவித்து ஒளி குன்றும் மணி போலே இல்லாமல்
கேட்டாம் -கேட்டோம் –

—————————————-

தூயானைத் தூய மறையானைத் தென்னாலி
மேயானை மேவாள் உயிர் உண்டு அமுது  உண்ட
வாயானை மாலை வணங்கி யவன் பெருமை
பேசாதார் பேச்சு என்றும் பேச்சல்ல கேட்டாமே –11-7-3-

தூயான் -அந்தர்யாமியாக இருக்கச் செய்தும் தானும் பரிசுத்தன் -நம்மையும் பரிசுத்தன் ஆக்குபவன்
தூய மறையோன் -வேதைக சமைதி கம்யன் -வேதங்களுக்கு தூய்மை அபௌருஷயத்வம் -அவனை சொல்லி அல்லாமல் நிற்கை
தென்னாலி மேயான் -பிரமாணங்களால் கேட்டுப் போகை மட்டும் இன்றி பிரத்யஷமாக கண்ணாரக் காணலாய் இருக்கை
இவன் பேச்சுக்களை பேசுவதே பேச்சு மற்றவை கடலோசை போலே-

———————————————-

கூடா விரணியனைக் கூருகிரால் மார்விடந்த
ஓடா வடலரியை யும்பரார் கோமானைத்
தோடார் நறுந்துழாய்  மார்வனை யார்வத்தால்
பாடாதார் பாட்டு என்றும் பாட்டல்ல கேட்டாமோ -11-7-4-

ஓடா அடலரி -விலஷணமான ஸ்ரீ நரசிம்ஹ மூர்த்தியாய்
ப்ரஹ்மாதிகளுக்கு குடியிருப்புக் கொடுத்து அருளி சர்வ ஸ்வாமித்வத்தை நிலை நிறுத்தி அருளியவனும்
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு விரோதியைப் போக்கி ரஷணத்துக்கு தனி மாலை இட்டுக் கொண்டு யுள்ளவனை
பிரேம பரவசராய்க் கொண்டு பாடுபவர்களின் பாட்டுக்களே பாடலாம்
அல்லாத பாட்டுக்கள் நரியூளை இடுதலோடே ஒக்கும்-

———————————————-

மையார் கடலும் மணி வரையும் மா முகிலும்
கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட
மெய்யானை மெய்ய மலையானைச் சங்கேந்தும்
கையானைக் கை தொழாக் கையல்ல கண்டாமே –11-7-5-

கடல் போலே எல்லை காண ஒண்ணாததாய்
மணி மலை போலே நெஞ்சுக்கு ஆகர்ஷகமாய்
காளமேகம் போலே குளிர்ந்து விடாயைத் தீர்ப்பதாய்
குவளைப் பூவும் காயம் பூவும் போலே வைத்த கண் வாங்காதே பார்த்துக் கொண்டே இருக்கும் படியான திரு மேனியை யுடையவன்
இப்படிப் பட்ட திவ்ய மங்கள விக்ரஹத்தை திரு மெய்ய மலையிலே  ஆஸ்ரிதற்கு முற்றூட்டாக கொடுத்துக் கொண்டு அருள்பவன்
திருச் சங்கேந்தும் திருக் கையனைத் தொழும் கைகளே கைகள்
தொழாத கைகள் உலக்கை -கை தொழாக் கையல்ல -என்றது -தொழாக்கை கை யல்ல -என்று அந்வயிப்பது-

—————————————————

கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும்
முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்
புள்ளாய் ஓர் ஏனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கு என்று
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக் கொள்ளோமே –11-7-6-

கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும்-தேன் பொருந்திய திருத் துழாயும்-அலரியும் -பில்வபத்திரத்தையும்
முள்ளார் முளரியும் ஆம்பலும் -முட்கள் நிறைந்த தாமரைப் பூவையும் -ஆம்பல் மலரையும் –
முன் கண்டக்கால்-இவை எம்பெருமானுக்கே சாத்த உரியன என்ற அத்யவசாயம் கொள்ளாதார் நெஞ்சு நெஞ்சு அல்ல -நஞ்சே தான்
திருத் துழாய் யுடன் விஜாதீய வஸ்துக்களையும் எடுத்தது-
செண்பக மல்லிகையோடு இருவாட்சி -என்று சிறப்பித்து சொல்லும் புஷ்பங்கள் வேண்டா
பரிவதில் ஈசனைப் பாடி விரிவது மேவலுறுவீர் பிரிவகையின்றி நன்னீர் தூயப் புரிவதுவும் புகை பூவே -திருவாய் -1-6-1-
பட்டர் -புரிவதுவும் புகை பூவே-சப்த ச்வாரச்யத்தையைத் திரு உள்ளம் கொண்டு ஏதேனும் ஒரு புகையும் பூவும் அமையும்
கண்டகாலிப் பூவும் சூட்டலாம்
ந கண்டகாரிகா புஷ்பம் தேவாய விநிவேதயேத்-சாஸ்திரம் விதித்து கையிலே முள் பாயுமே என்பதால் –
இவனது த்ரவ்யம் -பிரதானம் அன்று -சிநேக பிரதான்யம் –
ஸ்நேஹம் இல்லாதவன் இடில் திருத் துழாயும் ஆகாது -ஸ்நேஹத்தோடு இடில் அலரியும் ஆம் –
ஸ்ரீ ஜகன்னாத பெருமாள் -நீ இட்ட பூ கனத்து சுமக்க ஒண்ணாதே உள்ளது என்றாரே –

புள்ளாய்- ஏதேனும் ஒரு பஷியாகவும்
ஓர் ஏனமாய் -மிருகமாகவும்
தன்னை அமைத்துக் கொண்டவனுக்கு ஆகாதது எதுவும் இல்லை –
அவன் அவதார யோநியில் நியமம் கொள்ளாதாப் போலே உகந்து கொள்ளுகிற பதார்த்தங்களிலும் நியமம் இல்லை -என்றவாறு
உள்ளாதார் உள்ளத்தை என்றது -இவற்றை சமர்ப்பிக்க கூட வேண்டாம் மனத்தால் நினைத்தாலே போதுமே
நினைவே அமையும் செயல் மிகை -என்பர் பெரியவாச்சான் பிள்ளை-

————————————-

கனையார் கடலும் கரு விளையும் காயாவும்
அனையானை அன்பினால் ஆர்வத்தால் என்றும்
சுனையார் மலரிட்டுத் தொண்டராய் நின்று
நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சல்ல கண்டோமே –11-7-7-

கடல் கருவிளைப் பூ காயம் பூ -என்னும் இவற்றை ஒரு புடை ஒப்பாகச் சொல்லலாம் படியான திருமேனி
படைத்த எம்பெருமான் பக்கலிலே சுனைகளிலே யுள்ள புஷ்பங்களை கொணர்ந்து சமர்ப்பித்து
அடிமைத் தொழிலுக்கு இசைந்து அவனையே சிந்தித்து இருக்க மாட்டாத நெஞ்சு நெஞ்சே அன்று –
அன்பினால் ஆர்வத்தால் -அன்பாவது ஸ்நேஹம் -ஆர்வமாவது பெறாவிடில் முடியும் நிலை
சுனை ஆர் மலர் -புதிதாக புஷ்பங்களை சிருஷ்டிக்க வேண்டியது இல்லையே -இசைவு தானே வேண்டுவது
தாம் உளரே தம்முள்ளம் உளதே தாமரையின் பூ உளதே ஏத்தும் பொழுது யுண்டே  -பொய்கையார்-

———————————————

வெறியார் கரும் கூந்தல் ஆய்ச்சியர் வைத்த
உறியார் நறு வெண்ணெய் தான் உகந்து உண்ட
சிறியானைச்   செங்கண் நெடியானைச் சிந்தித்து
அறியாதார் என்றும் அறியாதார்  கண்டாமோ  -11-7-8-

ஆஸ்ரித ஹஸ்த ஸ்பர்சம் பெற்ற த்ரவ்யம் பெற்று பெறாப் பேறு பெற்றவனாய் வாரி அமுது செய்து அருளிய சிறு பிள்ளையை
செந்தாமரைக் கண்ணனை  -சர்வேஸ்வரனை -நினைத்து அறியாதவர்கள் –
சாஸ்திர ஞானத்தாலே சீரியர்களே யாயினும் அறிவில்லாதவர்களே ஆவார்
ஒண் தாமரையாள்  கேள்வன் ஒருவனையே நோக்கும் யுணர்வு என்பதால்
செங்கண் நெடியானைச் சிந்தித்து அறியாதார் என்றும் அறியாதார்  – ஆவார் –

———————————————–

தேனோடு வண்டாலும் திருமால் இருஞ்சோலை
தானிடமாக்கிக் கொண்டான் தட மலர்க் கண்ணிக்காய்
ஆன் விடை ஏழ்  அன்று அடர்த்தார்க்கு ஆளானார் அல்லாத
மானிடவர் அல்லர்  என்று    என் மனத்தே வைத்தேனே –11-7-9-

திருமால் இரும் சோலையிலே  நித்ய வாஸம் செய்து அருளும் எம்பெருமானுக்கு ஆட்படாதவர்கள் மனுஷ்ய யோநியிலே
பிறந்து வைத்தும் உணர்வின் பயன் பெறாதவர்கள் ஆகையாலே மானிடர் அல்லர் என்று சித்தாந்தம் செய்து கொண்டேன்
உண்டு உறங்கி விஷய போகங்களை அனுபவிக்கை மிருகங்களுக்கும் யுண்டே
என் மனத்தே வைத்தேனே -என்றதால் இது எவ்வித்ததாலும் மாற்ற முடியாத சித்தாந்தம் -என்கிறார் –

——————————————————-

மெய்நின்ற  பாவம் அகலத் திருமாலைக்
கைநின்ற ஆழியான் சூழும் கழல் சூடி
கைந்நின்ற வேற்க் கை கலியன் ஒலி மாலை
ஐ ஒன்றும்  ஐந்தும் இவை பாடி ஆடுமினே –11-7-10-

மெய் நின்ற பாவம் -பிரக்ருதியிலே அனுபவிக்க வேண்டி நின்ற பாவங்கள்
திருமாலை சூழும் கழல் சூடி -திருமகள் கொழுநன் யுடைய -சர்வ வியாபியான திருவடிகளை -முடி மேல் கொள்ளுமவராய்
கை கழலா நேமியானாய் இருந்து  அடியார்கள் வினைகளை அகற்றி அருளும் எம்பெருமான் யுடைய
திருவடிகளைத் தலை மேல் புனைந்து பாவங்கள் தொலையப் பெற்ற கொற்ற வேல் பரகாலன் கலியன் அருளிச் செய்த
இத் திரு மொழியைப் பாடி ஆடுமின் -பாடினால் வாக்கு சபலமாகும் -ஆடினால் சரீரம் சபலமாகும் –
பாடுதலும் ஆடுதலும் மனப் பூர்வகமாகவே உண்டாக வேண்டுதலால் அர்த்தாத் அந்த கரணமும் சபலமாகும் என்று
நாட்டாருக்கு வழி காட்டி அருளினார்-

—————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading