கீழ்த் திரு மொழியில் -நம் பெண்மை சிந்தித்து இராது போய்த் தூமலர் நீர் கொடு தோழீ-நாம் தொழுது ஏத்தினால்
கார் முகில் வண்ணரைக் கண்களால் காணலாம் கொலோ –
என்று ஸ்வரூப விருத்தமாக அதி பிரவ்ருத்தி பண்ணி யாகிலும் காணப் பெறுவோம் என்று ஆழ்வார் கோலின அளவிலே –
இதனைப் பொறுக்க மாட்டாத எம்பெருமான் வந்து முகம் காட்டி
தன் செல்லாமை அடங்கலும் காட்டி அருள -ஆழ்வார் அதை எல்லாம் அனுசந்தித்து -தாஹித்தவன் சிறிது தண்ணீர் கிடைத்தால்
அது தாஹ சாந்திக்கு உடலாகாதே- மேலும் மேலும் விடாயை வளரச் செய்யுமா போலே விடாயைப் பிறப்பிக்க
அதனாலே மிகவும்நோவு பட்டு -அவனைக் கிட்டி நித்ய அனுபவம் பண்ணப் பெற்றிலோம் ஆகிலும்
இவ்விடாயும் பதற்றமும் இவ் விஷயத்திலே ஆகப் பெற்றோமே என்று திருப்தியுடன் பேசித் தலைக் கட்டுகிறார் –
இதுவும் நாயகி பாசுரம் -அந்தாதி தொடையில் அமைந்த பதிகம்-
———————————
மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து மா வலியைப்
பொன்னிலங்கு திண் விலங்கில் வைத்துப் பொரு கடல் சூழ்
தென்னிலங்கை ஈடழித்த தேவர்க்கிது காணீர்
என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே –11-3-1-
மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழியப் பார்த்தன் சிலை வளையத்
திண் தேர் மேல் முன்னின்ற-பெரியாழ்வார்
பாதாளத்தில் சிறை வைத்து அருளியதால் -பொன்னிலங்கு திண் விலங்கில் வைத்து -என்கிறார்
இவனைப் பெற வேண்டி ஆசைப்பட்ட நான் பெற்ற பேறு வளை இழந்ததும் நிறம் இழந்ததுமே காணீர்-
———————————————
இருந்தான் என்னுள்ளத்து இறைவன் கறை சேர்
பருந்தாள் களிற்றுக் கருள் செய்த செங்கண்
பெருந்தோள் நெடுமாலைப் பேர் பாடி யாட
வருந்தாது என் கொங்கை யொளி மன்னு மன்னே -11-3-2-
வருத்தம் தலை மடிந்து மகிழ்ச்சி தோற்ற பேசும் பாசுரம்
ஹிருதயத்திலே நித்ய வாஸம் செய்து அருளுகிறானே
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு அருள் செய்த வாத்சல்யம் எல்லாம் திருக் கண்களிலே தோற்றும் படி எழுந்து அருளி யுள்ளானே
அவன் திரு நாமங்களை ப்ரீதிக்கு போக்குவீடாக பாடி -உடல் இருந்த இடத்தே இருக்க மாட்டாதே ஆடி –
கொங்கைகள் வருத்தம் தீர்ந்து புகர் பெற்ற படியைப் பாராய்
கறை சேர் -கறை-உதிரம் என்னும் பெயரில் -இறால் போன்ற பருத்த அடிக்க -இங்கே -உதிரம் பொருளிலும் கொள்ளத் தக்கதே-
அன்னே-பாத பூர்ணம் -தோழீ-என்னவுமாம் –
————————————————-
அன்னே இவரை அறிவன் மறை நான்கும்
முன்னே உரைத்த முனிவர் இவர் வந்து
பொன்னேய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து
என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே –11-3-3-
இன்னார் என்று அறியேன் அன்னே ஆழியோடும் பொன்னார் சார்ங்கமும் யுடைய அடிகளை இன்னார் என்று அறியேன் –
என்ற தமது வாயாலே -அன்னே இவரை அறிவன் -என்கிறார் –
நெருங்க கலந்த போதாக -இன்னார் என்று அறியேன் -என்னிலும் -என்னும் –
காதாசித்கமாக சம்ச்லேஷித்த போது-ஸ்வா பாவிக சேஷித்வத்தாலும் முகத்தில் தண்ணளி யாலும் -அறிவேன் என்னிலும் -என்னும் –
சிருஷ்டியின் ஆரம்பத்தில் -ஒவ் ஒரு கல்பத்தின் தொடக்கத்திலும் -நான்முகனுக்கு வேதங்களை உபதேசம் செய்து அருளினவர் –
கர்த்தா இல்லை -அபௌருஷேயம் –
அப்படி அறப் பெரியவர் எனது பொன் வளையல்களிலே ஆசை கொண்டு என் நெஞ்சிலே புகுந்து போகாதே இருக்கிறார்
இன்னம் என்ன என்ன செய்ய திரு உள்ளம் பற்றி உள்ளாரோ அறியேன்
பிரிவை யுண்டாக்கி உடலை இளைப்பித்து வளையல்கள் கழலும் படி செய்யவே மனத்துக்குள் புகுந்து போகாமல் யுள்ளார் -என்றவாறு-
—————————————————
அறியோமே யென்று உரைக்கலாமே யெமக்கு
வெறியார் பொழில் சூழ் வியன் குடந்தை மேவிச்
சிறியானோர் பிள்ளையாய் மெள்ள நடந்திட்டு
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தார் தம்மையே –11-3-4-
இவரை அறிவேன் என்பதே யுண்மை –
இங்கே போதும் கொலோ இன வேல் நெடும் கண் களிப்ப கொங்கார் சோலைக் குடந்தை கிடந்தமால் இங்கே போதும் கொலோ
என்று நான் மநோ ரதித்த படியே வெறியார் பொழில் சூழ் வியன் குடந்தை மேவிய பெருமானே இங்கே எழுந்து அருளி இருக்கின்றார் –
இளம் பிராயத்தை யுடையனாய் பொய்யடி இட்டுப் போய்ப் புக்கு ஆஸ்ரிதர் யுடைய ஹஸ்த ஸ்பர்சம் யுள்ள த்ரவ்யத்தை பெற்றோமே என்று உகந்து போலே
என்னைத் தழுவி அணைத்து-தலை தடுமாறாகப் பரிமாறி
தொல்லை இன்பத்தின் இறுதி கண்ட இவரை அறியோம் என்று எங்கனே சொல்லக் கூடும் –
————————————————
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத்
தம்மையே ஒக்க அருள் செய்வராதலால்
தம்மையே நாளும் வணங்கித் தொழுது இறைஞ்சி
தம்மையே பற்றா மனத்து என்றும் வைத்தோமே –11-3-5-
வணங்கி -தொழுது -இறைஞ்சி -முக்கரணங்களாலும் நமஸ்கரித்து
தேவாந்தர பஜனம் -உபாயாந்தர சங்கம் -பிரயோஜனாந்த -போல்வனவற்றை -சிந்தையில் கொள்ளாதவராய்
இருப்பவர்களுக்கு பரம சாம்யாபத்தியை அருளுபவன்
அவனையே இடைவிடாமால் முக் கரணங்களால் வணங்கி சரணமாக உறுதி கொண்டேன்
தம்மையே பற்றா -பற்றாக என்றபடி -உபாயம் உபேயம் இரண்டுமே அவனாக கொண்டோம் –
————————————–
வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம்
உய்த்தார் ஒளி விசும்பில் ஓரடி வைத்து ஓரடிக்கும்
எய்தாது மண் யென்று இமையோர் தொழுது ஏத்தி
கைத்தாமரைக் குவிக்கும் கண்ணன் என் கண்ணனையே –11-3-6-
ஒளி விசும்பில் ஓரடி வைத்து ஓரடிக்கும் எய்தாது மண் யென்று-சந்தரன் சூர்யன் போன்ற ஒளிப் பொருள்கள் உள்ள ஆகாசத்திலே
ஓரடி ஓங்க வைத்து மற்று ஒரு திருவடிக்கு பூமி போதாது என்று –
இமையோர் தொழுது ஏத்தி-ப்ரஹ்மாதி தேவர்கள் வணங்கித் துதித்து –
கைத்தாமரைக் குவிக்கும்-தங்களுடைய கைகளை தாமரை மொக்கு போலே அஞ்சலி செய்யப் பெற்ற
பிரான் உன் பெருமை பிறர் யார் அறிவார் யுராய் உலகளந்த நான்று வராகத்து எயிற்று அளவு
போதாவாறு என் கொலோ எந்தை அடிக்களவு போந்த படி -முதல் திருவந்தாதி -84-
என் -கண்ணன் –கண்ணனையே -எனது கண் போன்ற ஸ்ரீ கிருஷ்ணனை
அடியார் மனத்தினில் வைத்தார் – வைத்து இன்பம் உய்த்தார் -பரம ஆனந்தத்தை பெற்றவர் ஆவார்-
——————————————–
கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள்
என்னோ கழன்ற விவை யென்ன மாயங்கள்
பெண்ணானோம் பெண்மையோம் நிற்க வவன் மேய
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே–11-3-7-
நோக்கி நோக்கி யுன்னை காண்பான் யான் எனதாவியுள்ளே நாக்கு நீள்வன் ஞானம் இல்லை நாள் தோறும்
என்னுடைய ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தின் யுள்ளும் நீக்கம் இன்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே -திருவாய் -4-7-6-
அவயவம் தோறும் இருந்தமை யுணர்ந்து கண்ணால் காண ஆசை கொண்ட நம்மாழ்வார் போலே இவரும் திருப்தி அடையாமல் வளை இழக்கிறாள்
பெண்ணானோம் பெண்மையோம் -கண்ணன் மனத்துக்கு உள்ளே நிற்கவும் வளை இழந்த நமக்கும் பெண்மைக்கும் வெகு தூரம் யுண்டு
இவ்விஷயம் எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்
குளிரருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி அழியாத மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே -நாச்சியார் -8-3-
அவன் விரும்பி யுறையும் திரு வரங்கத்தையும் திரு மலையையும் பாடுவோம் -பெண்மைக்கு கேடு வந்தால் வரட்டும்
அன்றிக்கே
பெண்ணானோம் பெண்மையோம் -பெண்ணாய்ப் பிறந்த நாம் பெண்மைக் குணத்தை வழுவாதபடி யுடையராய்க் கொண்டு
சத்தை பெற்று நிற்கும் படியாக -என்றவாறும் –
—————————————————–
பாடோமே எந்தை பெருமானைப் பாடி நின்று
ஆடாமே ஆயிரம் பேரானைப் பேர் நினைந்து
சூடாமே சூடும் துழாய் அலங்கல் சூடி நாம்
கூடாமோ கூடக் குறிப்பாகில் நன்னெஞ்சே —11-3-8-
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷாயா-
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் –
நெஞ்சு அனுகூலித்ததாகில் அருமையானது ஒன்றுமே இல்லையே
நன்னெஞ்சே கூடக் குறிப்பாகில் -பாடோமே எந்தை பெருமானைப் பாடி
நன்னெஞ்சே கூடக் குறிப்பாகில் நின்று ஆடாமே -மொய்ம்மாம் பூம் பொழில் பொய்கை -போலே
நன்னெஞ்சே கூடக் குறிப்பாகில் ஆயிரம் பேரானைப் பேர் நினைந்து சூடாமே -நாமம் ஆயிரம் ஏத்த நாராயணனை சிந்தித்துக் கொண்டு –
நன்னெஞ்சே கூடக் குறிப்பாகில் சூடும் துழாய் அலங்கல் சூடி நாம் கூடாமோ
என்று நான்கு வாக்யார்த்தம்
குறிப்பாகில் -எம்பெருமானுக்கு திரு உள்ளம் ஆகில் -என்றுமாம் –
அரியதும் எளியதாகும் -இல்லையானால் எளியதும் அறியதாகுமே-
———————————————————
நன்னெஞ்சே நம்பெருமான் நாளும் இனிதமரும்
அன்னம் சேர் கானல் அணியாலி கை தொழுது
முன்னம் சேர் வல்வினைகள் போக முகில் வண்ணன்
பொன்னம் சேர் சேவடி மேல் போதணியப் பெற்றோமே –11-3-9-
ஆகாசம் பாராமல்
ஆறுமே கடவாமல்
மலையும் ஏறாமல்
நாம் இருந்த திருவாலி நாட்டிலே நித்ய சந்நிதி பண்ணி இருக்கும்படியான பாக்யம் பெற்றோமே –
கைப்பட்ட பொருளைக் கணிசியாமல் கைக்கு எட்டாப் பொருளை ஆசைப்பட்டு உடம்பு வெளுக்க வேண்டுமோ
இருந்த இடத்திலே எம்பெருமான் திருவடி மலர்களைச் சூடி புனிதராகப் பெற்றோமே -உகப்போடே தலைக் கட்டுகிறார்
நெஞ்சு இசைந்ததனால் பெற்ற பேறு ஆகையாலே முந்துற முன்னம் நெஞ்சைக் கொண்டாடுகிறார் –
கீழே நன்னெஞ்சே -என்றார் -அனுகூலிக்கைக்காக கொண்டாடின கொண்டாட்டம் –
இப்பாட்டில் அனுகூலித்ததற்கு கொண்டாடுகிற கொண்டாட்டம் –
——————————————————
பெற்றார் ஆயிரம் பேரானைப் பேர் பாடப்
பெற்றான் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
கற்றோர் முற்று உலகு ஆள்வர் இவை கேட்க
உற்றார்க்கு உறு துயர் இல்லை யுலகத்தே –11-3-10-
இத் திருமொழியை அதிகரிப்பவர்கள் இவர் தம்மைப் போலே ஆயிரம் பேரானைப் பேர் பாடப் பெற்று
ஆராத காதலை யுடையராய் இருப்பார்கள் –
இவ்வளவே அல்லாமல் முற்று உலகையும் ஆளும் செல்வச் சிறப்பையும் பெறுவார்கள்
இத் திரு மொழியைக் கற்பவருக்கு மாத்ரமே அன்று பலன்
இத்தை செவி தாழ்த்து கேட்க விரும்புவர்கட்கும் அவசியம் அனுபவித்தே அற வேண்டிய துயர்களும் தொலைந்து விடும்-
———————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply