திருக் கண்ணபுரத் தெம்பெருமான் பல திரு வவதார சேஷ்டிதங்களை அடைவே ஆழ்வாருக்கு
ப்ரத்யஷ சாமாநாகாரமாக ஆக்குவிக்க -அவற்றை எல்லாம் பேசி இனியர் ஆகிறார் இத் திரு மொழியில் –
மத்ஸ்ய கூர்ம வராஹ நரசிம்ஹ வாமன பரசுராம தசரதராம பலராம
ஸ்ரீ கிருஷ்ணாவதாரங்களை-பாட்டடைவே அனுபவிக்கிறார்-
———————-
வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி யுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண் தாமரைக்கண்ணன்
ஆனா வுருவிலானா யவனை யம்மா விளை வயலுள்
கானார் புறவில் கண்ண புரத்தடியேன் கண்டு கொண்டேனே-8-8-1-
ஆனா வுருவிலானா யவனை -விகாரம் அற்ற உருவை -சதைக ரூப ரூபாய -அவிகாராய சுத்தாய -என்னும்படி
யுடைய ஸ்ரீ கிருஷ்ணனனே மத்ஸ்ய திருவவதாரம் செய்து -அருளிய பெருமான் -கிருபை அடியாக –
லஷம் யோஜனை நீளமும் -பதினாயிரம் யோஜனை பருமனும் –
ஒற்றைக் கொம்பும் -ஸ்வர்ண வர்ணமும் -சர்வ லோக மநோ ஹாரியான ரூபமும் –
வலியுருவின் மீனாய் வந்து -கடல் வெள்ளத்தை அடைய தன்னுடைய ஒரு செலுவிலே
அடக்க வல்ல மிடுக்கை உடைய மத்ச்யமாய் வந்து-
————————
மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக அங்கோர் வரை நட்டு
இலங்கு சோதி யாரமுதம் எய்தும் அளவோர் ஆமையாய்
விலங்கல் திரியத் தடங்கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை
கலங்கல் முந்நீர்க் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே-8-8-2-
மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக -உள்ளுக் கிடக்கிற மீன் சாதிகள் தடுமாறும் படியாக பெரிய வெள்ளம் குழம்பும் படியாக
மலங்கு மீன்களில் ஒரு ஜாதி
அங்கோர் வரை நட்டு இலங்கு சோதி யாரமுதம் எய்தும் அளவோர் ஆமையாய்-
மந்திர பர்வதத்தை நாட்டி -தேஜஸ் யுடைய அமிர்தம் தோன்றும் அளவும் -ஒரு அத்விதீயமான கூர்ம ரூபியாய் –
விலங்கல் திரியத் தடங்கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை-
அந்த மந்திர பர்வதம் நால் புறமும் திரிந்து வரும்படியாக பெரிய அக்கடலிலே
அம்மலையைத் தாங்கிக் கொண்டு இருந்த ஆச்சர்ய பூதனான பெருமானை
கலங்கல் முந்நீர்க் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேன் -கடலை அணித்தாக யுடைய இங்கே கண்டு கொண்டேன்
மன்னு வடமலையை மத்தாக மாசுணத்தால் மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும்
தன்னினுடனே சுழல மலை திரித்து -பெரிய திரு மடல் அனுசந்தேயம் –
———————————
பாராரளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில்
ஏரார் உருவத் தேனமாய் எடுத்த வாற்றல் அம்மானை
கூரார் ஆரல் இரை கருதிக் குருகு பாயக் கயல் இரியும்
காரார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே -8-8-3-
ஸ்வேத வராஹ கல்பத்துக்கு முன் உள்ள பாத்ம கல்பத்தைப் பற்றிய பிரளயத்தின் இறுதியில்
ஸ்ரீ வராஹ திருவவதாரம் -அவனே இவன் –
வயல் வளம் -பொழில் வளம் -மிக்க திவ்ய தேசம்-
கூரார் ஆரல் இரை கருதிக் குருகு பாயக்
கூரார் குருகு-நாரைகள் -ஆரல் மீன்களை -ஆஹாரமாக கொள்ள நினைத்து பாய
கயல் இரியும் -கயல் மீன்கள் அஞ்சியோடும்
காரார் புறவில் கண்ண புரத்து–மேகங்கள் படிந்த சோலைகள் உள்ள தேசம்
————————-
உளைந்த வரியும் மானிடமும் உடனேத் தோற்ற ஒன்றுவித்து
விளைந்த சீற்றம் விண் வெதும்ப வேற்றொன் அகலம் வெஞ்சமத்து
பிளந்து வளைந்த வுகிரானைப் பெரும் தண் செந்நெல் குலை தடிந்து
களம் செய் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே-8-8-4-
திருத் துழாய் நறு மணத்தோடு அங்குரிக்குமா போலே பகவத் பக்தியோடு பிறந்த ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான்-
சிதா ஷீரான் யான்யேன சங்க மிதாங் சம் -ஸ்ரீ ரெங்க ராஜ உத்தர சதகம்
சக்கரையும் பாலும் கலந்தால் போலே நர உருவும் சிங்க உருவும் பொருந்திற்று -உடனே ஒன்றுவித்து -என்கிறார்
வளைந்த சீற்றம் விண் வெதும்ப -ஈஸ்வரன் அவதரித்து பண்ணின ஆனைத் தொழில்கள் எல்லாம்
பாகவத அபசாரம் பொறாமை -என்று ஜீயர் அருளிச் செய்வர் –
த்வயி கிஞ்சித் சமா பன்னே கிம் கார்யம் சீதாய மம-
கோபம் ஆஹாரயத் தீவரம் -சமுத்திர ராஜன் இடம் –
ததோ ராமோ மகா தேஜா ராவணணேன க்ருத வ்ரணம் த்ருஷ்ட்வா ப்லவக சார்த்தூலம் கோபச்ய வசமே யிவான் –
களம் -இருள் -நெற்கதிர்கள் செழிப்பாக முற்றி எங்கும் இருண்டு கிடக்கிற படி
களம் -நெற்களம் -என்றுமாம் –
—————————–
தொழு நீர் வடிவில் குறள் உருவாய் வந்து தோன்றி மா வலி பால்
முழு நீர் வையம் முன் கொண்ட மூவா வுருவின் அம்மானை
உழு நீர் வயலுள் பொன் கிளைப்ப ஒரு பால் முல்லை முகையோடும்
கழு நீர் மலரும் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே-8-8-5-
தொழு நீர் வடிவில் குறள் உருவாய் வந்து தோன்றி மா வலி பால்-
கண்டார் அடங்கலும் தொழும் படியாவதையே இயற்கையாக யுடையதாம் எம்பெருமானுடைய திரு உருவம்
மணி விடம்பி நி தஸ்ய மநோ ஹரே வபுஷி மகன்மநா முநீ மண்டலீ –
ஜபம் உஞ்சத ஹோமம் உஞ்சத வ்ரதம் உஞ்சத வேதம் உஞ்சத –
யதார்ஹம் கேசவே வ்ருத்திம் அவசா பிரதிபேதிரே-
கழல் மன்னர் சூழக் கதிர் போல் விளங்கி எழலுற்று மீண்டே இருந்து உன்னை நோக்கும் சுழலைப்
பெரிதுடைச் துச்சோதனன் -பெரியாழ்வார்
பரவசமாகவே தொழ நேரிடும் -தொழு நீர் வடிவின் –
முழு நீர் வையம் முன் கொண்ட-
தாரை வார்த்து கொடுத்தது மூவடி யாகிலும் -எம்பெருமான் திரு உள்ளத்தால் மூவடியும் மூ உலகம்
ஆதலால் முழு நீர் வையம் கொண்டான்
மூவா வுருவின் அம்மானை-
இளகி வரும் உருவத்தை யுடையவன்
உழு நீர் வயலுள் பொன் கிளைப்ப ஒரு பால் முல்லை முகையோடும் கழு நீர் மலரும் –
பொன் போன்ற நெற்கதிர்கள் விளைவு
கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே-
—————–
வடிவாய் மழுவே படையாக வந்து தோன்றி மூ வெழு கால்
படியார் அரசு களை கட்ட பாழியானை அம்மானை
குடியா வண்டு கொண்டு உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்
கடியார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே -8-8-6-
விரோதிகளை களைந்து ஒழிந்த உபகாரத்துக்குத் தோற்று -துதிப்பது மாதரம் உண்டு -உபாசனைக்கு இல்லை
கோக்குல மன்னரை மூ வெழு கால் ஒரு கூர் மழுவால் போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் –
வண்டுகள் உண்ணுமாறு மலர்கள் மதுவைப் பெருக்குகின்றன என்றும்
வண்டுகள் எதேஷ்டமாக உண்ட பின்பும் மலர்கள் மதுவை மேலே மேலே பெருக்கிக் கொண்டே இருக்கின்றன –
குடியா வண்டு கொண்டு உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும் –
பசல்களோடும் குட்டிகளோடும் வண்டுகள் வந்து புஜிக்க-
பின்னையும் தர்ச நீயமான நீலமானது மதுவை பிரவஹியா நிற்கும் –
கடலிலே ஒரு சிறாங்கையை புஜிக்கும் காட்டில் கடல் வற்றாது இறே-
——————–
வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி
வெய்ய சீற்றக் கடியிலங்கை குடி கொண்டோட வெஞ்சமத்து
செய்த வெம்போர் நம்பரனைச் செழும் தண் கானல் மண நாறும்
கைதை வேலிக் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே-8-8-7-
த்விதா பஜ்யேய மப்யேவம் ந நமேயம் து கஸ்யசித் -என்பனை குடும்பத்தோடு களைந்து ஒழிந்தமை-
——————–
ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒரு பால் தோன்றத் தான் தோன்றி
வெற்றித் தொழிலார் வேல் வேந்தர் விண் பால் செல்ல வெஞ்சமத்து
செற்ற கொற்றத் தொழிலானைச் செந்தீ மூன்றும் இல்லிருப்ப
கற்ற மறையோர் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே -8-8-8-
ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒரு பால் தோன்றத் தான் தோன்றி-
ஒரு காதில் தொங்குகிற திருக் குண்டலமும்
ஒரு பக்கத்தில் கலப்பையும் விளங்க பலராமனாய்த் திரு வவதரித்து –
நம்பி மூத்த பிரான் -ஹலாயுதன் –
கண்ணபிரானுக்கு துணையாக இருந்ததாலும் கம்சன் தம்பி ஸூநாமா முதலியோரை தானே கொன்றிட்டது பற்றியும்
வெற்றித் தொழிலார் வேல் வேந்தர் விண் பால் செல்ல வெஞ்சமத்து செற்ற கொற்றத் தொழிலானைச்-என்றது
நித்ய அக்னி ஹோத்ரிகளாயும் வித்வான்களாயும் ஞான அனுஷ்டான சம்பன்னர்களும் திரண்ட திவ்ய தேசம் –
—————————
துவரிக் கனிவாய் நிலமங்கை துயர் தீர்ந்து உய்யப் பாரதத்துள்
இவரித் தரசர் தடுமாற இருள் நாள் பிறந்த வம்மானை
உவரியோதம் முத்துந்த ஒரு பால் ஒரு பால் ஒண் செந்நெல்
கவரி வீசும் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே -8-8-9–
துவரிக் கனிவாய் நிலமங்கை துயர் தீர்ந்து உய்யப் பாரதத்துள்-பூமிக்கு அதிஷ்டான தேவதை பூமிப் பிராட்டி
பூ பாரம் தொலைக்க அவதரித்து அருளினான்
இவரித் தரசர் தடுமாற -இவரித்தல் -எதிர்த்தல்
இருள் நாள் பிறந்த வம்மானை-கிருஷ்ண பஷத்து நடு நிசி திருவவதாரம்
-கடல் அலைகள் முத்துக்கள் கொழித்து தள்ள
செந்நெற் பயிர்கள் கதிர்களை வணக்கி சாமரம் வீச அழகு மிக்க திருக் கண்ணபுரம்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரம் -திருவாய் -9-10-1-
முற்காலத்தில் கடல் அணித்தாய் இருந்து இருக்கலாம் —
——————————
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன் கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே -8-8-10-
வடதிசை கண் உள்ள சம்பளக் கிராமத்தில் வாசம் செய்யும் விஷ்ணுயசஸ் மனைவி ஸூமதி கர்ப்பத்துள் புகுந்து
பன்னிரண்டு ஆண்டு உறைந்-ஸ்ரீ கல்கி திருவவதாரம் ஆகும்
பரசுராமன் இடம்
விஸ்வஜித் அஸ்வமேதம் யாகம் செய்வாராம்
முன்னம் பௌத்தர்கள் ராஜ்யம் படை எடுத்து முடிப்பாராம்
பின்பு யௌனர்கள் ராஜ்யம் – மிலேச்சர்கள் -வெட்டி தன்னை அனுவர்த்தித்தாரை பட்டாபிஷேகம் செய்வித்து
பின்பு கலி புருஷனை ஓட விரட்டி
கலி புருஷன் நண்பர்களான கோகன் விகோகன் இருவரையும் ஒரே சமயத்தில் அழித்து
அதர்மத்தை வேர் அறுத்து கிருதயுகத்தை ப்ரவர்த்திப்பித்து
அவதார பிரயோஜனம் தலைக் கட்டினவாறே ஸ்ரீ பத்ரிகாச்ரமம் எழுந்து அருளி
அப்ராக்ருத திவ்ய ஸ்வரூபத்தை ஆவிஷ்கரித்து
தன்னடிச் சோதிக்கு எழுந்து அருளுவார்
தானாய் -ஸ்ரீ ராமாவதார ஏற்றம் சொல்லும்
இத் திரு மொழியை கற்பார் நித்ய நிஷ் கல்மஷர் ஆவார் -என்று பயன் உரைத்து தலைக் கட்டுகிறார் –
———————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply