பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -8-6-தொண்டீர் உய்யும் வகை கண்டேன் துளங்கா வரக்கர் துளங்கா முன்-

இத் திரு மொழி தொடக்கமாக மேல் ஐந்து திரு மொழிகளும் தானான தன்மையில் அருளிச் செய்கிறார் –
ஆழ்வீர் நீர் இங்கனே  பரிதபிப்பான் என் -விபவம் போலே அடியார்களை ரஷிக்கைக்காக அன்றோ
இங்கே நித்ய சந்நிதி செய்து அருளுகின்றேன்
உமக்கு ஒரு குறை உண்டோ-என்று தேற்ற – -ஆழ்வார் தேறி அருளிச் செய்கிறார்-

அநுகூல வர்க்கத்தைப் பார்த்து -சர்வேஸ்வரன் நம்முடைய ரஷணத்தில் உத்யுக்தனாய்க் கொண்டு
திருக் கண்ண புரத்திலே சந்நிஹிதன் ஆனான் –
நாமும் அவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிப்போம்- போருங்கோள் என்கிறார்   –

—————————-

தொண்டீர் உய்யும் வகை கண்டேன் துளங்கா வரக்கர் துளங்கா முன்
திண் தோள் நிமிரச் சிலை வளையச் சிறிதே முனிந்த திரு மார்பன்
வண்டார் கூந்தல்  மலர் மங்கை வடிக்கண் மடந்தை மா நோக்கும்
கண்டான் கண்டுகொண்டுகந்த கண்ண புரம் நாம் தொழுதுமே -8-6-1-

தொண்டீர் உய்யும் வகை  கண்டேன் –கண்ண புரம் நாம் தொழுதுமே – தொடங்கி
தம்முடைய உகப்பை வெளியிடுகிறார் –
கீழே பட்ட அலமாப்பு எல்லாம் பகலவனைக் கண்ட பனி போலே அகன்று ஒழிந்தமை தோன்றுமே
தொண்டு பூண்டு அமுது உண்ண பாரித்து இருக்கும் அன்பர்களே சத்தை பெற விரகு கண்டேன் –
திருக் கண்ணபுரம் தொழுவோம் வம்மின் -என்கிறார்-

துளங்குதல் -வருத்தப் படுத்தல் -அச்சப் படுத்தல் -கலங்குதல்
சிறிதே முனிந்த -பஞ்சவடியில் -பிராட்டியைப் பிரிந்து அளவு கடந்த கலக்கத்தால் -ஜகத் ச சைலம் பரிவர்த்தயாம் யஹம் –
முற்ற முனிந்தால் ஜகத்துக்கே உப சம்ஹாரம் –
இங்கே இலங்கையில் உள்ள ராஷசர் அளவிலே மட்டும் என்பதால் சிறிதே முனிந்த –
திரு மார்பன் -வீர ஸ்ரீக்கு குடி இருப்பான மார்வு படைத்தவன்
மிதுனத்திலே கைங்கர்யமே ஸ்வரூப பிராப்தம் –
வண்டார் கூந்தல் மலர் ம்ங்கை -ஒழிக்க ஒழியாத சம்பந்தம் இச் சேதனக்கும் நமக்கும் உண்டே
நம் வலையில் அகப்படுவார் யார் என்று நாம் திரியா நிற்க -போன்ற உபதேசம் பலியாத பொழுது
கண்ணைப் புரட்டி -கச்சை நெகிழ்த்து கூந்தல் முதலிய அழகைக் காட்டி
அவனை பிச்சேறும்படி பண்ணி அங்கீ கரிக்க பண்ணுமவள்-என்பதால்
வண்டார் கூந்தல் மலர் மங்கை -வடிக்கண் மடந்தை மா நோக்கும் கண்டான் கண்டுகொண்டுகந்த-என்கிறார்
உபதேசத்தால்  மீளாத போது சேதனனை அருளாலே திருத்தும் –
ஈஸ்வரனை அழகாலே திருத்தும் -ஸ்ரீ வசன பூஷணம் –

——————-

பொருந்தா வரக்கர் வெஞ்சமத்துப் போன்ற வன்று புள்ளூர்ந்து
பெரும் தோள் மாலி தலை புரளப் பேர்ந்த வரக்கர் தென்னிலங்கை
இருந்தார் தம்மை உடன் கொண்டு அங்கு எழிலார் பிலத்துப் புக்கு ஒழிப்பக்
கருந்தாட் சிலை கைக் கொண்டானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே -8-6-2-

ஸூகேசன் என்னும் அரக்கனுக்கு மாலியவான் -மாலி -ஸூமாலி மூன்று பிள்ளைகள்
மாலியைக் கொன்ற வரலாறு
ஸூமாலி மகள் கைகஸிக்கு இராவணன் போன்றவர்கள் பிள்ளைகள்
விரோதி நிரசனம் பண்ணி அருளியவன் இன்றும் நம்முடைய விரோதிகளை களைந்து அருள
இங்கே நித்ய சந்நிதி கொண்டு அருளுகிறான் –

——————————–

வல்லி இடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கை யார் கோவை
அல்லல் செய்து வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுத்த வாற்றலான்
வல்லாளரக்கர் குலப்பாவை   வாட முனி தன வேள்வியைக்
கல்விச் சிலையால் காத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே -8-6-3-

ஸ்ரீ  ராமாவதாரம் பின்னாட்டிய படி –
வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுத்த ஆற்றலான் -நீ இளைத்த சமயத்தில் உன்னை அழிக்கை போராது காண் –
ஆஸ்வாச்ய-இவன் இளைத்தால் தன் பரிகரத்தில் உள்ளாரை ஆஸ்வசிப்பிக்குமா போலே –
நீ போய் ஆஸ்வசித்து வா -என்றான் இ றே –
வாட -உபசார வழக்கு -மாண்டு போக என்றபடி
கல்விச்சிலையால்  காத்தான் -பயிற்சிக்குப் பிடித்த தொரு வில்லைக் கொண்டு  முனி தன் வேள்வியைக் காத்தானூர் -என்றபடி-

—————————–

மல்லை முந்நீர் அதர்பட வரி வெஞ்சிலை கால் வளைவித்துக்
கொல்லை விலங்கு பணி செய்யக்   கொடியோன்  இலங்கை புகலுற்றுத்
தொல்லை மரங்கள் புகப் பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவக்
கல்லால் கடலை அடைத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-4-

மலை முந்நீர் அதர்பட வரி வெஞ்சிலைகால் வளைவித்து
அத்தாலே கடலரசன் பணிய
விலங்கு பணி செய்ய –கல்லால்  கடலை அடைத்தவன்
பணைகளில் பாவித் திரியக் கடவ குரங்குகள் பணி செய்ய
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகள் செய்யக் கடவ கைங்கர்யத்தை இடக்கை வலக்கை அறியாத திர்யக்குகள் செய்ய –
கொல்லை-மரங்கள் அடர்ந்த சோலை
துவலை நிமிர்ந்து -சரியான பாடம் -மோனை இன்பத்துக்கு இணங்கும் -திவலை என்றே பொருள்-

——————————–

ஆமையாகி யரியாகி அன்னமாகி அந்தணர் தம்
ஓமமாகி ஊழியாகி உவரி சூழ்ந்த நெடும் புணரிச்
சேம மதிள் சூழ் இலங்கைக் கோன் சிரமும்  கரமும் துணித்து முன்
காமன் பயந்தான் கருதுமூர் கண்ண புரம் நாம் தொழுதுமே–8-6-5-

திருவவதாரங்கள் பல செய்து அருளி விரோதிகளை தொலைத்து அடியார்களை ரஷித்து தர்மங்களை நிலை நிறுத்தி அருளி –
காமனைப் பயந்த காளை-இங்கே சேவை சாதித்து அருளுகிறான்
ஓமம் -ஹோமம் -இலஷணையால் ஹவிஸ்ஸைக் குறிக்கும்
உவரி சூழ்ந்த நெடும் புணரி -சரியான பாடம்
உலகு சூலந் நெடும் புணரி -பாடாந்தரம்
புணரி -அலைக்கும் கடலுக்கும் பெயர்
நெடும் புணரி உவரி சூழ்ந்த செம மதில் சூழ் இலங்கை -என்று அந்வயம்-

——————————–

வருந்தாது இரு நீ மட நெஞ்சே நம் மேல் வினைகள்  வாரா   முன்
திருந்தா வரக்கர் தென்னிலங்கைச் செந்தீ யுண்ணச் சிவந்தொரு நாள்
பெருந்தோள் வாணற்க்கு அருள் புரிந்து பின்னை மணாளனாகி முன்
கருந்தாள் களிறு ஓன்று ஒசித்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே–8-6-6-

கரு தாள் களிறு -வலிமை யுடைய கால்களை யுடைய குவலயா பீடம்
திருக் கண்ணபுரம் தொழப் பெற்றோம் அன்றோ இன்று நாம் -அதனாலே வருந்தாது இரு மட நெஞ்சே –
நம் மேல் வினைகள் வாரா –
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணனாய் திருவவதரித்து விரோதிகளை நிரசித்து அருளியவனே இவன்-

———————

இலையார் மலர்ப் பூம் பொய்கை வாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு
கொலையார் வேழம் நடுக்குற்றுக் குலைய வதனுக்கு அருள் புரிந்தான்
அலைநீர் இலங்கைத் தசக்ரீவற்கு இளையோருக்கு அரசை அருளி முன்
கலைமாச் சிலையால் எய்தானூர்  கண்ண புரம் நாம் தொழுதுமே -8-6-7-

ஸ்ரீ கஜேந்த்ரனை ரஷித்து அருளிய அவனே பஞ்ச இந்த்ரியங்களால்  பீடித்த நம்மையும் ரஷித்து அருள
இங்கே நித்ய சந்நிதி பண்ணி அருளுகிறான் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானைக் கைக் கொண்டது போலே நமக்கும் கைங்கர்ய சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் செய்து அருளுவான்
மாரீச மாய மானை அம்பு கொண்டு முடித்ததால் போலே நம்முடைய மாயங்களையும் முடிக்க வல்லவன் இவன்-

———————-

மாலாய் மனமே யருந்துயரில் வருந்தாது இரு நீ வலி மிக்க
காலார் மறுத்தும் காய்சினத்த கழுதும் கதமாக் கழுதையும்
மாலார் விடையும் மத கரியும் மல்லர் உயிரும் மடிவித்து
காலால் சகடம் பாய்ந்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே -8-6-8-

தமது நெஞ்சை தேற்றுகிறார் இதிலும் மேல் பாட்டைப் போலே -சம்சாரத்தில் வீணாக மயங்கி வருந்துதலை விட்டிடு
விரோதி நிரசனமே தொழிலாக கொண்டவன் இவன்
கிருஷ்ணன் போலே நம்முடைய விரோதி சமூகங்கள் அனைத்தையும் கிழங்கு எடுப்பதற்கு வந்து நிற்கிறான் –
கழுது -பிசாசு – பேய்ச்சியாகிய பூதனையைச் சொன்னபடி
தேனுகாசுரன் கழுதை வடிவு கொண்டு -பணை மரத்தின் மேல் கால்களை பிடித்து எறிந்து அழித்தான் கண்ணபிரான்-

——————————-

குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியேர் இடையாள் பொருட்டாக
வன் தாள் விடை ஏழு அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன்
சென்றான் தூது பஞ்சவர்க்காய்த் திரிகால் சகடம் சினம் அழித்துக்
கன்றால் விளங்காய் எறிந்தானூர்  கண்ண புரம் நாம் தொழுதுமே -8-6-9-

ஸ்ரீ கிருஷ்ணனாய் செய்த பல சேஷ்டிதங்களை அனுசந்தித்து அவனே இவன் நம்முடைய விரோதிகளை களைந்து
நித்ய அனுபவம் அளிக்க இங்கே சந்நிதி பண்ணி அருளுகிறான் என்கிறார்-

——————————

கருமா முகில் தோய் நெடுமாடக் கண்ண புரத் தெம்மடிகளைத்
திரு மா மகளால் அருள் மாரிச் செழு நீராலி  வள நாடன்
மருவார் புயல்கைக் கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார்
இரு மா நிலத்துக்கு அரசாகி யிமையோர் இறைஞ்ச  வாழ்வாரே -8-6-10-

இங்கே குறைவின்று எல்லா ஆட்சிகளையும் அனுபவித்து
விருப்பம் யுண்டாகில் ஸ்வர்க்க லோக அனுபவங்களையும் அனுபவித்து
பரம பதத்து ஏறப் புகுந்து
விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர் பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர் -பேற்றைப் பெறுவார்கள்
திரு மகளால் அருள் மாரி –
பெரிய பிராட்டியார்  முழு நோக்கு -பூர்ண கடாஷம் -பெற்ற படியால் -அருள் மாரி என்றது
தன்னையே திரு நாமமாக யுடையார் யாயிற்று –
மருவார் புயல்கைக் கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார் –
என்றும் ஒக்க உண்டாய்
குறைவற வர்ஷிப்பதான புயல் உண்டாகில் ஆயிற்று
இவர் கைக்கு ஒப்புச் சொல்லல் ஆவது –
என்றும் ஒக்க குறைவறக் கொடுக்கிறவர்க்கு
காதாசித்கதமாக தோற்றி ப்ராதேசிகமாக வர்ஷிக்கிறது ஒப்பாக மாட்டாதே –

இருமா நிலத்துக்கு அரசாகி -பூமிக்கும் ஸ்வர்க்கத்துக்கும் –
இருமை -பெருமை -பெரிதான இம்மா நிலத்துக்கு அரசாகி -என்றுமாம் –

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading