நான்காவது திருவரங்க மங்களா சாசன திருப்பதிகம் —
பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும்
பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும்
அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தானே–5-7-1-
நான்கு வேதங்களையும் தானே வெளியிட்டு அருளினவன் -வேதங்களால் பிரதி பாதிக்கப் பட்டவன் -என்றுமாம் –
கேள்விப் பதங்களும் -பத ரூபத்தாலும் அஷர ரூபத்தாலும் ஸ்ரவணம் பண்ணி அறிய வேண்டும் படி இருக்கிற
வியாகரண சாஸ்திரமும் –
பிண்டமாய் விரிந்த -மூல காரணம் -காரண அவஸ்தைக்கு வாசகம்
அவ்யகதம் காரண அவஸ்தை மஹதாதி ரூபத்தாலே கார்யப் பொருளாக விரியுமே
அனைத்தும் சரீரமாய்
நம் போல்வாருக்கு கண்கள் குளிரும்படி விலஷணமான திவ்ய மங்கள விக்ரஹத்தை பரிஹரித்து இங்கே கண் வளர்ந்து அருளுபவன்-
——————————————————
இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண்ணில் பல் குணங்களே யியற்ற
தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றி நின்று அகலாப்
பந்தமும் பந்தம் அறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம்
அந்தமும் வாழ்வுமாய எம்பெருமான் அரங்க நகர் அமர்ந்தானே -5-7-2-
ப்ரஹ்மாதிகள் அஹங்காரம் ஒழிந்து-அவனுடைய திருக் குணங்களை சொல்லி துதித்து ஆஸ்ரயிக்க இங்கே கண் வளர்ந்து அருளி
ஹிதமே நடத்தும் பிதாவாயும்
பிரியத்தை நடத்தக் கடவளான தாயாயும்
நரகத்தை கடத்தும் புத்ரர்களாயும்
ஜ்ஞாதி பந்து வர்க்கமும்
எல்லா உறவுமுறையையும் இருப்பவன் –
சம்சாரத்தை அறுக்க வல்ல மருந்தாயும் இருப்பவன்
நிஷ்கள ஸ்வ பாவன்
சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்கங்களுக்கு கடவன்
இந்த்ரனை முதலிலே சொல்லி அவனை போலே பரத்வம் இவர்களுக்கு இல்லை என்பதை காட்ட
பான்மை -வந்தேறி அல்லாத ஸ்வ பாவம் –
————————————————————-
மன்னு மா நிலனும் மலைகளும் கடலும் வானமும் தானவருலகும்
துன்னு மா இருளாய்த் துலங்கு ஒளி சுருங்கித் தொல்லை நான்மறைகளும் மறைய
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப் பிறந்கிருள் நிறம் கெட ஒரு நாள்
அன்னமாய் அன்று அருமறை பயந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-3-
ஹம்ச ரூபமாய் -வேதங்கள் மறைந்து இருள் மூடிக் கிடந்தமையை ஒழித்து அருள் புரிந்தவன் –
———————————————————–
மாயிரும் குன்றம் ஓன்று மத்தாக மாசுணம் அதனோடும் அளவி
பாயிரும் பௌவம் பகடு விண்டலறப் படுதிரை விசும்பிடைப் படர
சேயிரு விசும்பும் திங்களும் சுடரும் தேவும் தாமுடன் திசைப்ப
ஆயிரம் தோளால் அலைகடல் கடைந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே–5-7-4-
மா இரு குன்றம் -அகன்றும் உயர்ந்தும் உள்ள மனதார மலையை
பா இரு பௌவம் பரந்தும் நீண்டும் இருக்கிற சமுத்ரம்
பகடு விண்டு அலற -யானை பிளிருமா போலே பிளிரவும் -பகடு -யானை –
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் -நான்கு தோள்கள் கொண்டு வ்யாபரித்த படி தான்
ஆயிரம் தோள் கொண்டு வ்யாபரித்தான் என்னலாம்படி யாய்த்து –
————————————————————————
எங்கனே யுய்வர் தானவர் நினைந்தால் இரணியன் இலங்கு பூண் அகலம்
பொங்கு வெங்குருதி பொன் மலை பிளந்து பொழி தரும் அருவி ஒத்து இழிய
வெங்கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல் விண்ணுறக் கனல் விழித்து எழுந்தது
அங்கனே ஒக்க வரி யுருவானான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-5-
எங்கனே உய்வர் தானவர் நினைந்தால் –
இது நமக்காகச் செய்த செயல் என்று நினைத்துப் போவார் உஜ்ஜீவித்து போவார்கள்
சத்ருபஷமான அசுர வர்க்கம் இந்த வரலாற்றை நெஞ்சாலே நினைத்த மாத்ரத்ரத்தாலே இடி விழுந்தால் போல் உக்கிப் போவார்கள்
பொன்னிற ஹிரண்யன் -ரத்த வெள்ளம் பாய்வதொரு பொன் மலை பிளந்து அருவி பெருகுவது ஒக்கும்
நரசிம்ஹ மூர்த்தி வெண்ணிறம் கொண்டதால் வெள்ளி மலையை உவமை கூறினார் –
————————————————————————
ஆயிரம் குன்றம் சென்றது தொக்கு அனைய அடல் புரை எழில் திகழ் திரள் தோள்
ஆயிரம் துணிய அடல் மழுப்பற்றி மற்று அவன் அகல் விசும்பு அணைய
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறி துயில் அலைகடல் நடுவே
ஆயிரம் சுடர் வாய் அரவணைத் துயின்றான் அரங்க மா நகர் அமர்ந்தானே–5-7-6-
அகல் விசும்பு அணைய -வீர ஸ்வர்க்கம் பெற்றானே
தேவர்கள் மகிழ்ந்து திருப் பாற் கடலிலே சென்று துதிக்கக் கேட்க வேணுமோ
ஐந்து பைந்தலை ஆடரவணை மேவி பாற் கடல் யோக நித்ரை சிந்தை செய்த எந்தாய் -என்கிறார் நம் ஆழ்வார்
இவர் -ஆயிரம் சுடர் வாய் அரவணைத் துயின்றாய் –
இவ் எண்ணில் நிர்பந்தம் இல்லை -மகிழ்ச்சியின் மிகுதியால் வாய்கள் பல்லாயிரமாகப் பணைக்குமே-
———————————————————————–
சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை யரக்கன்
எரி விழித்து இலங்கு மணி முடி பொடி செய்து இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி
வரி சிலை வளைய வடு சரம் துரந்து மறிகடல் நெறிபட மலையால்
அரி குலம் பணி கொண்டு அலைகடல் அடைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே-5-7-7-
மறி கடல் நெறி பட -அலை மடிகின்ற கடல் வழிபட்டு அமைந்திட
அனந்யா ராகவேணாஹம்-என்றும்
அனந்யா ஹி மயா சீதா -என்றும்-ஏக தத்வமாய் இருக்கும் திவ்ய தம்பதிககளாய் இருக்கிற இருவரையும்
இரண்டு இடத்திலே யாம்படி பண்ணி பிரித்து வைத்தானே பாவி –
ஸ்ரமம் எல்லாம் தீர இங்கே சாய்ந்து அருளினான்
அடு சரம் துரந்து -கடல் அரசன் மேல் பாணப் பிரயோகம் செய்ய முயன்று என்றபடி-
——————————————————————
ஊழி யாய் ஓமத்து உச்சியாய் ஒரு காலுடைய தேர் ஒருவனாய் உலகினில்
சூழி மால் யானைத் துயர் கெடுத்து இலங்கை மலங்க வன்று வடுசரம் துரந்து
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளிப் பகலவன் ஒளி கெடப் பகலே
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே -5-7-8-
பாரத யுத்தம் 14 நாள் ஆழியால் மறைத்து அர்ஜுனன் ஜெயத்ரனை தலை துணித்தான்
13 நாள் அர்ஜுனன் மகன் அபிமன்யுவை கொன்றதற்கு பழி வாங்கும் முகமாக –
ஓமத்து உச்சியாய் -ஹோமம் -ப்ரதானன்-அஹம் ஹி சர்வ யஜ்ஞநாம் போக்தா –
போக்தாராம் யஜ்ஞ தபஸாம் -சர்வ யஜ்ஞ சமாராத்யன் -என்றபடி
சூழி மால் யானை -சூழி -முகபடாம் -போர்வை-
———————————————————————
பேயினார் முலை யூண் பிள்ளையாய் ஒரு கால் பெரு நிலம் விழுங்கி யது உமிழ்ந்த
வாயனாய் மாலாய் ஆலிலை வளர்ந்து மணி முடி வானவர் தமக்குச்
சேயனாய் அடியேற்கு அணியனாய் வந்து என் சிந்தையுள் வெந்துயர் அறுக்கும்
ஆயனாய் அன்று குன்றம் ஓன்று எடுத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே–5-7-9-
பேய் முலை யுண்டவனும்
பிரளய ஆபத்தில் ரஷித்து அருளியவனும்
ஆலிலை மேல் துயின்று அகடிதகனநா சாமர்த்தியத்தை வெளிப்படுத்தினவனும்
ப்ரஹ்மாதிகளால் எட்டப் படாதவனும்
அடியவர்களுக்கு எளியனானவனும்
இந்நிலையை கோவர்த்தன உத்தாரண முகத்தால் வெளிப் படுத்தி அருளியவனும் இவனே –
———————————————————-
பொன்னு மா மணியும் முத்தமும் சுமந்து பொரு திரை மா நதி புடை சூழ்ந்து
அன்னம் மாடுலவு மலை புனல் சூழ்ந்த வரங்க மா நகர் அமர்ந்தானை
மன்னு மா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே -5-7-10-
அன்னப் பறவைகள் களித்து விளையாடும் சந்திர புஷ்கரணி முதலிய புஷ்கரணி களால் சூழப் பட்ட திருவரங்கம்
இப்பதிகத்தை ஓதுவார்கள் முன்னைத் தீ வினைகள் முற்றும் வேர் அறுத்து விடுவார்கள் –
எம்பெருமானுக்கு நித்ய கைங்கர்யம் செய்யப் பெறுவார்கள்
பொன்னும் மா மணியும் முத்தும் -பொன்னும் முத்தும் நவ மணிகளில் இருக்க தனித்து சொன்னது மற்ற ரத்னங்களுக்கு வாசகமாக
மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய-பெரியாழ்வார் -2-1-2- போலே –
———————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply