திருத் தாயார் பேச்சாலே அருளிய இரண்டாவது திருவரங்கம் மங்களா சாசன திருப்பதிகம் –
அழகிய மணவாளனை அனுபவிப்பதில் ஆழ்வாருக்கு யுண்டான அபி நிவேசம் இத் திரு மொழியாகப் பரிணமித்தது போலும்-
வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்
மருவாள் என் குடங்கால் வாள் நெடுங்கண் துயில் மறந்தாள் வண்டார் கொண்டல்
உருவாளன் வானவர் தம் உயிராளன் ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட
திருவாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே–5-5-1-
விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
மந்தி பாய் வட வேங்கட மா மலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
பரமபதத்தில் இருந்து திருமலை வந்து இளைப்பாறி இங்கே கிடந்தது அருளுகிறான் –
மூல கந்தம் திருமலை யாதலால் வேங்கடமே வேங்கடமே -என்கிறாள்
பெருமாள் உடைய இங்குத்தை வரவாறே பிடித்து
ஆற்றாமைக்கு உடலாம்படி காணும்
பிறந்த ப்ராவண்ய அதிசயம் –
வடக்கு வாசலாலே புகுந்து கண் வளர்ந்து அருளுகிறான்
அன்று நேர்ந்த நிசாசரரை -தெற்கு வாசலாலே புகுந்து கண் வளர்ந்து அருளுகிறான்-
வேங்கடவன் வரையில் பேச மாட்டாத தளர்ச்சி வேங்கடத்திலே நிற்கிறாள்
பட்டர் -அழகிய மணவாளப் பெருமாள்
அனந்தாழ்வான் -திரு வேங்கடமுடையான்
நம்மாழ்வார் -தொலைவிலி மங்கலம்
பரகால நாயகி -வேங்கடமே
வடுக நம்பி -எம்பெருமானார்
இப்படி இவர்கள் அனுசந்தானம் விலஷணம்
மடியும் பொருந்தாமல் உள்ளாள் -என் குடங்கால் மருவாளால் -உறக்கத்தையும் மறந்தாள்-
தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றாருக்கும் யுண்டோ கண்கள் துஞ்சுதல் திரு விருத்தம் -97
இந்த நிலைமைக்கு கிருஷி பண்ணி அருளினவனும் அவனே -வண்டார் கொண்டல் உருவாளன்
வண்டு போலவும் ஆர்ந்த மேகம் போலவும் -உள்ளுள்ள நீர்மையின் போக்யதையினால் இழுக்கப் பட்ட
வண்டுகள் மொய்க்கப்பட்ட மேகம் போன்றவன்
பௌவம் கொண்ட திருவாளன் என் மகளை –
தன் விலஷணமான வடிவைக் காட்டி முன்பு திருப் பாற் கடலில் நின்றும் ஒரு பெண் பிள்ளையைக் கொள்ளை கொண்டான்
இன்று சம்சாரக் கடலில் நின்றும் என் பெண் பிள்ளையைக் கொள்ளை கொண்டான்
பெண் பிள்ளைகளை கொள்ளை கொள்வதே இவனுக்கு பணி போலும்-
எங்கனம் நான் சிந்திக்கேனே
இப்படிப் பட்ட விஷயீகார காரணம் அவனும் அறியான்
என் பெண் பிள்ளையும் அறியாள்
கரையில் நிற்கும் நான் எங்கனம் அறிவேன்
———————————————————-
கலையாளா வகலல்குல் கனவளையும் கை யாளா என் செய்கேன் நான்
விலையாளா வடியேனை வேண்டுதியோ வேண்டாயோ என்னும் மெய்ய
மலையாளன் வானவர் தம் தலையாளன் மராமரம் ஏழு எய்த வென்றிச்
சிலையாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே -5-5-2-
உடல் மெலிந்து போகவே அரையில் வஸ்த்ரமும் கையில் வளைகளும் கழன்று -சக்தி அற்று இருக்கச் செய்தேயும்
அவனை முன்னிலைப் படுத்தி -விலையாளா அடியேனை வேண்டுதியோ வேண்டாயோ என்கிறாள்
அடியேனை விலையாளா வேண்டுதியோ -என்று அன்வயித்து
கேசவா புருடோத்தமா கிளர்சோதியாய் குறளா என்று பேசுவார் அடியார்கள் எம் தம்மை விற்கவும் பெறுவார்களே -பெரியாழ்வார் -4-4-10–
சேஷத்வ காஷ்டை -அடியேனை விலையாளாக கொள்ளத் திரு உள்ளம்
அன்றிக்கே
விலையாளா அடியேனை -பிறர்க்கு விலைக்கு ஆட்படாத அடியேனை –
இழி தொழில் செய்து கூலி வேலை செய்து வயிறு வளர்க்காத அடியேனை – திரு உள்ளம் உவந்து பற்றுவாயோ மாட்டாயோ –
———————————————————
மானாய மென்னோக்கி வாள் நெடுங்கண் கண்ணீர் மல்கும் வளையும் சோரும்
தேனாய நறுந்துழாய் அலங்கலின் திறம் பேசி யுறங்காள் காண்மின்
கானாயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற
ஆனாயன் என் மகளைச் செய்தனகள் அம்மனைகீர் அறிகிலேனே -5-5-3-
இவள் கண் அழகில் ஈடுபட்டு அவன் ஊண் உறக்கம் இல்லாமல் வருந்த வேண்டி இருக்க
அவன் திரத்திலே ஈடுபட்டு இவள் வருந்துகிறாளே
அவன் சாத்தியுள்ள திருத் துழாய் -தேன் வெள்ளம் -தொடை அழகு -செவ்வி -குளிர்ச்சி -பரிமளம் -ஒவ் ஒன்றையும்
என் சொல்வேன் -என்று வாய் வெருவுகின்றாள்
இப்படி செய்து அருளினவன் கானாயன் கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் –
காட்டிலே ஆனவன் -என்றவாறு -ஆயன் என்ற பொருளில் இல்லை
கானாயர் கடி மனையில் -என்றும் பாடம்
என் மகளை இப்பாடு படுத்தவே நந்தன் நோன்பு நோற்று பெற்றான் போலும் தயிர் யுண்டு நெய் பருக இல்லை
காட்டிலே திரிந்து கனிகளை திருடி உண்ணத் தான் அறிவான் இவன் என்று இருந்தேன்
இவ்வாறு ஸ்ருங்கார விலாச சாமர்த்தியம் யுண்டு என்று உணர்ந்தேன் –
கடி மனை -கட்டுக் காவலுமான மனை
அம்மனைமீர் -என்றது அயல் வீட்டுப் பெண்களை-
———————————————————-
தாய் வாயில் சொல் கேளாள் தன் ஆயத்தோடு அணையாள் தட மென் கொங்கை
யேயாரச் சாந்து அணியாள் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
பேய் மாய முலை உண்டு இவ்வுலகுண்ட பெரு வயிற்றன் பேசில் நங்காய்
மா மாயன் என் மகளைச் செய்தனகள் மங்கைமீர் மதிக்கிலேனே –5-5-4-
ஆயத்தோடு-தோழி மார்களோடு
மென் கொங்கை -விரஹத்தை பொறுக்க மாட்டாமை -ஸூகுமாரன் -என்றால் பசி பொறுக்க மாட்டாதவன் என்பது போலே
பேய் மாய முலை யுண்டு
மாய முலையை யுண்டு -விஷம் தடவின முலை என்றுமாம்
நங்காய் -ஒருமையில் ஒருத்தி இடம் சொல்லி க்ரமேண பலர் கூடியதால் மங்கைமீர் -பன்மையில் முடிக்கிறாள்-
—————————————————————
பூண் முலை மேல் சாந்தணியாள் பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள்
ஏண் அறியாள் எத்தனையும் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
நாண் மலராள் நாயகனாய் நாம் அறிய வாய்ப்பாடி வளர்ந்த நம்பி
ஆண் மகனாய் என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே –5-5-5-
பூவை -கிளி -குயில் -நாகணவாய்ப் புள் -லீலார்த்த பறவைகள்
எத்தனையும் ஏணறியாள்-லோக சிந்தனையே இல்லை
எம்பெருமான் திருவரங்கம் எங்கே -ஒன்றே தொடர்ந்து வெருவுகிறாள்
இப்பாடு பாடுத்தினவன் ஸ்ரீ யபதி என்று பேர் பெற்று -ஒரு பெண் பிள்ளையைக் கொண்டு தன்னை நிரூபிக்க வேண்டும்படி இருப்பவன்
தயிர் நெய் வாரி விழுங்கி மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம்மிடம் புக்கு
கச்சோடு பட்டைக் கிழித்து காம்புதுகிலவை கீறி நிச்சலும் தீமைகள் செய்து திரிந்த ஒருவனே
இன்று ஆண் பிள்ளைத் தனத்தைக் காட்டி என் மகளை இங்கனே செய்து அருளினான் –
———————————————————————
தாதாடு வனமாலை தாரானோ என்று என்று தளர்ந்தாள் காண்மின்
யாதானும் ஓன்று உரைக்கில் எம்பெருமான் திருவரங்கம் என்னும் பூ மேல்
மாதாளன் குடமாடி மது சூதன் மன்னர்க்காய் முன்னம் சென்ற
தூதாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சொல்லுகேனே –5-5-6-
அவன் மார்வு அணிந்த வனமாலை வஞ்சியாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே -நாச்சியார் -13-3- என்று
முழுதும் சொல்ல மாட்டாதே வனமாலை தாரானோ -சொல்லிக் கொண்டே தளர்கிறாள்
நாம் ஹிதம் வார்த்தை சொல்ல வந்தால் அத்தை கேளாமல் காதை மூடிக் கொண்டு –
திருவரங்கம் பெரிய கோயில் -என்று கம்பீரமாக மிடற்று ஓசை செய்கின்றாள்
வனமாலை -ஆபாத பத்மம் யா மாலா வனமாலேதி சா மதா-என்று
வனம் -அழகு பொருளில் திருத் துழாய் மாலை
காடு -காட்டுப் பூக்களினால் தொடுத்த மாலை
காடுகளூடு போய் –கார்க்கோடல் போய் பூச் சூடி வருகின்ற தாமோதரா –
இப்படி செய்வித்தவன் -பூ மேல் மாதாளன் -பூவை நெருப்பு போலே விட்டிட்டு மார்விலே வந்து சேரும்படி அபஹரித்துக் கொண்டவன் –
குடமாடி -ஒருத்தி மட்டும் போதுமோ நமக்கு என்று அனைவரையும் வசப் படத்த குடக் கூத்தாடி -வியாஜ்யம் தான் இது
மன்னர்க்காய் முன்னம் சென்ற தூதாளன்-விதயத்வத்தை காட்டி
மதுசூதனன் -பிரதிபந்தகங்களை அழிக்க வல்ல வீரன்
மேன்மையையும் நீர்மையும் காட்டி என் மகளை வசப்படுத்துக் கொண்டான் –
——————————————-
வாராளும் இளம் கொங்கை வண்ணம் வேறாயின வாறு எண்ணாள் எண்ணில்
பேராளன் பேரல்லால் பேசாளிப் பெண் பெற்றேன் என் செய்கேன் நான்
தாராளன் தண் குடந்தை நகராளன் ஐவர் க்காய் அமரில் தேர் உய்த்த
தேராளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் செப்புகேனே –5-5-7-
இவளுக்கு இவ் உலக சிந்தனையும் தன்னைப் பற்றிய சிந்தனையும் இல்லை ஒழிய பகவத் சிந்தை மாறாமல்
சர்வேஸ்வரனுடைய திரு நாமங்களே வாயிலே வந்த படி இருக்கின்றன –
இப் பெண் பெற்றேன் நான் என் செய்கேன் நான்
வருத்தமும் -மகிழ்ச்சியும் தோன்ற
தாராளன் -ரஷிக்க வ்ரதம் பூண்டு தனி மாலை இட்டுக் கொண்டு இருப்பவன் என் மகளை இப்படி அழிக்கிறானே
தண் குடந்தை நகராளன்-திருக் குடந்தையில் சாய்ந்து அருளி அனைவரையும் ரஷிக்கும் பெருமான்
என் பெண்ணை இப்படி அழிக்கிறானே
ஐவர்க்காய் அமரில் தேர் உய்த்த தேராளன் பார்த்த சாரதி என்று அடியார்க்கு தாழ நின்று கார்யம் செய்த
பெருமான் என் மகளுக்கு கார்யம் செய்யாது ஒழிகிறானே-
—————————————————
உறவு ஆதும் இலள் என்று என்று ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்று ஆல்
மறவாதே எப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின்றாளால்
பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர் தங்கள்
அறவாளன் என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே -5-5-8-
தெளிவிலா கலங்கல் நீர் சூழ் திருவரங்கத்துள் ஓங்கும் ஒளியுளார் தாமே யன்றே தந்தையும் தாயும் ஆவார் -திருமாலை –
நாட்டார் பழி-திருத் தாயாருக்கு வெறுப்பும் மகிழ்வும்
ஆபாச பந்துக்களை விட்டு -சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாத்
தாய் தந்தையும் அவரே இனி யாவாரே -திருவாய் -5-1-8 என்றபடி
ஆப்த பந்துவான ஸ்ரீ மன் நாராயணனையே -உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கே ஒழிக்க ஒழியாது -திருப்பாவை
ஸ்திரமான உறவாக கொண்டாளே என்று திருத் தாயார் உகக்கிறாள்-
பர புருஷன் -அசல் புருஷன் -புருஷோத்தமன் -பரம புருஷன் என்றபடி –
பழிப்பே காரணமாக ஸ்மரணம் மாறாதே -மறவாமல் ஆச்சர்யமான குண சேஷ்டிதங்களை யுடையவனே –
பிராட்டியை அனுபவிக்கும் பரம ரசிகனே –
பிறவாத பேராளன் -பெருமையுடையவன் சர்வேஸ்வரன்-அஜாயமானோ பஹூதா விஜாயதே
என் நின்ற இனியுமாய் பிறந்தா இமையோர் தலைவா -எவ்வளவு செய்தும் ஒன்றும் செய்ய வில்லையே
என்ற அவன் திரு உள்ளத்தாலே பிறவாத பேராளன்
ஆஸ்ரிதர் யுடைய பிறப்பை அறுப்பதற்கு காரணமான திரு நாமங்களை யுடையவன்
-மூன்றும் பொருள்கள் –
பெண்ணாளன் -பெண் பிறந்தாரை இப்பாடு படுத்த -பிச்சேற்றி தனக்காகிக் கொள்ளுமவன்
விண்ணோர் தங்கள் அறவாளன் -நித்ய சூரிகள் கொண்டாடும் திருக் குணங்கள் யுடையவன்-
—————————————————————————–
பந்தோடு கழல் மருவாள் பைங்கிளியும் பாலூட்டாள் பாவை பேணாள்
வந்தானோ திருவரங்கன் வாரானோ என்று என்றே வளையும் சோரும்
சந்தோகன் பவுழியன் ஐந்து அழல் ஓம்பு தைத்ரியன் சாம வேதி
அந்தோ என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே -5-5-9-
பழையன அனைத்தும் விட்டு அவனையே அநவரதம் சிந்தை செய்து -பாவனை முற்றி
அவனே அருகே வந்தானாக நினைத்து -வந்தானோ திருவரங்கன் -எனபது
தழுவி முழுசிப் பரிமாற நினைத்து கை நீட்டின வாறே காணாமையாலே வாரானோ என்று தளர்ந்து மெலிந்து
வளைகள் கழலப் பெறுகின்றாள்
சகல வேத பிரதிபாத்யனானவன் என் மகளை இப்பாடு படுத்தினானே-
————————————————————————–
சேலுகளும் வயல் புடை சூழ் திருவரங்கத்து அம்மானைச் சிந்தை செய்த
நீல மலர்க் கண் மடவாள் நிறைவழிவைத் தாய் மொழிந்த வதனை நேரார்
கால வேல் பரகாலன் கலி கன்றி ஒலி மாலை கற்று வல்லார்
மாலை சேர் வெண் குடைக் கீழ் மன்னவராய்ப் பொன் உலகில் வாழ்வர் தாமே-5-5-10-
கீழ் ஒன்பது பாட்டும் திருத் தாய் பாசுரம் -இது தானாய் அருளிய பாசுரம்
இஹ லோக சாம்ராஜ்ய போகங்களை அனுபவித்து பின்பு ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு நித்ய கைங்கர்யம் செய்யப் பெறுவார்கள்
பரகாலன் கலிகன்றி ஒலிமாலை-தம்முடைய பக்திப் பெரும் காதலை தாமே அன்யாபதேசத்தாலே பேசிக் கொண்டார்
நேரார் காலன் அடை மொழி -வெளுக்கும் பரகாலனுக்கும்
மாலை சேர் -மன்னருக்கும் ஓத வல்லாருக்கும் அடை மொழி-
——————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply