திரு நாங்கூர் வண் புருடோத்தம திருப்பதி மங்களா சாசன திருப் பதிகம் –
கம்பா மா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடி யவை பத்தும்
அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில்
செம்பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ்
வம்புலாங்கமுகு ஓங்கிய நாங்கூர் வண் புருடோத்தமே—4-2-1-
தென்னிலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து மின்னிலங்கு பூண் விபீடண நம்பிக்கு
என்னிலங்கு நாமத்தளவுமா சென்ற -பெரியாழ்வார்
கதிர் முடி யவை பத்தும் -முடி -கிரீடம் /தலை -கிரணம் வீசுகின்ற கிரீடங்கள் அணிந்த பத்துத் தலைகளையும் -என்றபடி
பரம உதாரனான எம்பெருமான் யுடைய ஸ்தலம் -வண் புருடோத்தமம் -என்றதாயிற்று-
——————————————————
பல்லவம் திகழ் பூங்கடம்பு ஏறி அக்காளியன் பணம் அரங்கில்
ஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடம் செய்த உம்பர்கோன் உறை கோயில்
நல்ல வெந்தழல் மூன்று நால் வேதம் ஐ வேள்வியோடு ஆறங்கம்
வல்ல வந்தணர் மல்கிய நாங்கூர் வண் புருடோத்தமமே–4-2-2-
கண்ணபிரான் திருவடி சம்பந்தத்தால் பல்லவம் திகழ் பூம் கடம்பம் ஆயிற்று -பூத்த நீள் கடம்பேறி -நாச்சியார்
இங்கு உள்ள அந்தணர்களின் ஞான அனுஷ்டான வைபவம் மேலே அருளிச் செய்கிறார்-
—————————————————-
அண்டரானவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சோறது எல்லாம்
உண்டு கோனிரை மேய்த்தவை காத்தவன் உகந்து இனிது உறை கோயில்
கொண்டலார் முழவில் குளிர் வார் பொழில் குல மயில் நடமாட
வண்டு தான் இசை பாடிடு நாங்கூர் வண் புருடோத்தமமே–4-2-3-
அண்டர் ஆனவர் -இடையர்கள்
கோவர்த்த கிரி தாரியே இன்றும் நம்மை எல்லாரையும் ரஷிக்கக் கோலி இங்கே நித்ய வாஸம் செய்து அருளுகிறான்
இங்கு திருச் சோலைகளிலே கூத்தும் பாட்டுமாக செல்லுகின்றன –
மேகங்கள் முழங்குவதையே வாத்ய கோஷமாகக் கொண்டு -மயில்கள் கூத்தாட -வண்டுகள் ரீங்கரிக்கின்றன-
————————————————
பருங்கை யானையின் கொம்பினைப் பறித்து அதன் பாகனைச் சாடி புக்கு
ஒருங்க மல்லரைக் கொன்று பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில்
கரும்பினூடு உயர் சாலிகள் விளை தரு கழனியில் மலி வாவி
மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர் வண் புருடோத்தமமே-4-2-4-
ஆஸ்ரித விரோதிகளை முடிப்பதற்காக கண்ணபிரான் நித்ய வாஸம் செய்யும் திவ்ய தேசம்
கரும்பு உடன் சமமாக ஓங்கி வளர்ந்த செந்நெல் பயிர்கள் யுடைத்தான வயலிலே
நிறைந்து இருக்கும் பொய்கைகளின் பக்கம் எல்லாம் சோலைகள் செழித்து இருக்கும் திவ்ய தேசம்-
——————————————–
சாடு போய் விழத் தாழ் நிமிர்த்து ஈசன் தன் படை யோடும் கிளையோடும்
ஓட வாணனை யாயிரம் தோள்களும் துணித்தவன் உறை கோயில்
ஆடுவான் கொடி யகல் விசும்பு அணைவிப் போய் பகலவன் ஒளி மறைக்கும்
மாட மாளிகை சூழ் தரு திரு நாங்கூர் வண் புருடோத்தமமே-4-2-5-
வாணனைப் போன்ற ஆசூர பிரக்ருதிகளை அழித்து அடியார்களைக் காத்து அருள நித்ய வாஸம் செய்து அருளுகிறான்
மாட மாளிகைகள் மீது உள்ள த்வஜங்கள் ஆட சூரியன் மறைக்கப் பட நிழல் பரவும் -ஒக்கம் சொல்லிற்று ஆயிற்று-
—————————————————
அங்கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த
கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய கண்ணன் வந்து உறை கோயில்
கொங்கை கொங்கு அவை காட்ட வாய் குமுதங்கள் காட்ட மா பதுமங்கள்
மங்கைமார் முகம் காட்டிடு நாங்கூர் வண் புருடோத்தமமே–4-2-6-
கோ சஹஸ்ர பிரதாதாரம்
அலம் புரிந்த நெடும் தடக்கை அமரர் வேந்தன் -யாசகனாய் சென்று-ருத்ரன் புனிதனாக –
நாம் எல்லாம் அடி தொழும்படி நம்மையும் புனிதராக்க நித்ய வாஸம் செய்து அருளுகிறான்
கோங்கு மரங்கள் அரும்புகள் -மாதர்கள் கொங்கை
அலர்ந்த அரக்காம்பல் மலர்கள் அதரங்கள்
செவ்வி பெற அலர்ந்த செந்தாமரைப் பூக்கள் முகங்கள்
உள் வீதிகளுக்கும் வெளி நிலங்களுக்கும் வாசி இல்லை-
————————————————–
உளைய ஒண் திறல் பொன் பெயரோன் தனது உரம் பிளந்து உதிரத்தை
யளையும் வெஞ்சினத் தரி பரி கீறிய அப்பன் வந்து உறை கோயில்
இளைய மங்கையர் இணை அடிச் சிலம்பினோடு எழில் கொள் பந்தடிப்போர் கை
வளையில் நின்றொலி மல்கிய வண் புருடோத்தமமே-4-2-7-
ஆஸ்ரித விரோதிகளை நிரசிக்கும் பொருட்டு நித்ய வாஸம் பண்ணி அருளுகிறான் என்கிறார் மீண்டும்
சிறுமிகள் நர்த்தனம் -பந்தாட்டம் -செய்வதால் கால் சிலம்பு ஒலியும் கை வளையல்கள் ஒலியும் ஓங்கி
மற்ற நகர கோஷங்களைக் கீழ்ப் படுத்தி -நகரச் சிறப்பு அருளுகிறார் –
————————————————
வாளையார் தடம் கண் உமை பங்கன் வன் சாபம் மற்றது நீங்க
மூளையார் சிரத்து ஐயம் முன் அளித்த எம் முகில் வண்ணன் உறை கோயில்
பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின் வன் பழம் விழ வெருவிப் போய்
வாளை பாய் தடம் சூழ் தரு நாங்கூர் வண் புருடோத்தமமே-4-2-8-
அர்த்த நாரீஸ்வரன் -உமை பங்கன்
மூளையார் சிரத்து -ரக்த ஸ்பர்சம் ஒன்றும் இன்றிக்கே வெறும் அஸ்தியேயாய் இருக்கிற தலை ஓட்டிலே –
பாக்குச் சோலைகளின் நடுவே தென்னை மரங்கள் ஓங்கி வளர
தென்னம் காய்கள் குளங்களிலே விழ -மீன்கள் பயந்து துள்ள -அஸ்தானே பய சங்கை பண்ணும் பரிவர்கள் போலே-
—————————————————
இந்துவார் சடை ஈசனைப் பயந்த நான்முகனைத் தன் எழிலாரும்
உந்தி மா மலர் மீ மிசைப் படைத்தவன் உகந்து இனிது உறை கோயில்
குந்தி வாழையின் கொழும் கனி நுகர்ந்து தன் குருளையைத் தழுவிப் போய்
மந்தி மாம்பணை மேல் வைகு நாங்கூர் வண் புருடோத்தமமே–4-2-9-
நான்முகனை நாராயணன் படைத்தான் -போலே பிரமனுக்கும் தந்தையான பெருமாள்
உலகங்களை காத்தருள பாங்காக நித்ய சந்நிதி கொண்டு அருளுகிறான்
மந்திகள் தங்கள் குட்டிகள் உடன் துள்ளித் திரியும் -ஸ்வபாவ உக்தி –
———————————————-
மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர் வண் புருடோத்தமத்துள்
அண்ணல் சேவடிக் கீழ் அடைந்து உய்ந்தவன் ஆலிமன் அருள் மாரி
பண்ணுளார் தரப் பாடிய பாடல் இப்பத்தும் வல்லார் உலகில்
எண்ணிலாத பேரின்பம் உற்று இமையவரோடும் கூடுவரே–4-2-10-
மண்ணுள் ஆர் புகழ் -பூமியில் நிறைந்த புகழை யுடைய வைதிகர்கள்
மண்ணுளார் புகழ் -பூமியில் உள்ள எல்லாராலும் புகழப் படும் வைதிகர்கள் -இங்கு புகழ் – வினைத் தொகை
இத் திருமொழியை கற்பார் இங்கே எல்லை இல்லா ஆனந்தங்களை அனுபவித்து
நித்ய சூரிகளோடும் அந்வயித்து நித்ய அனுபவம் பெறப் பெறுவார்கள்-
————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply