சர்வேஸ்வரன் தானே காட்டக் கண்டு
திருவல்லிக் கேணி கண்டேனே -என்று உகந்து பேசுகிறார் இத் திரு மொழியிலே –
தொண்டைமான் சக்ரவர்த்திக்காக திரு வேங்கடமுடையான் ஸ்ரீ கண்ணபிரானாக தனது குடும்பத்தோடு சேவை சாதித்து அருளும் ஸ்தலம் –
அல்லிப் பூக்கள் நிறைந்த -புஷ்கரணி -கைரவணி -திரு வல்லிக் கேணி –
மயிலைக்கு அடுத்து உள்ளதால் மயிலைத் திரு வல்லிக் கேணி -எனப் பெயர் பெரும் –
————————————————————————-
விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
செற்றவன் தன்னைப் புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன்னின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே-2-3-1-
ஸ்ரீ பார்த்த சாரதியின் சிறு சேவகங்களைச் சொல்லி ஏத்துகிறார்
வில்லுக்கு பெரிய பூஜை நடத்துவதாகச் செய்த மகோத்சவம் -வேழமும் பாகனும் மல்லர்களும் கஞ்சனும் மடிய வில் விழ முடிந்தது
வீழ -நாசமடைய
களைதேவை -வினைத் தொகை -தனது பரத்வத்தை வெளியிட்ட படி
கையிலே கோல் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்ற சரிதை பிரசித்தம்
சிற்றவை -சிறிய தாய் கைகேயி
அந்த கண்ணனும் ராமனும் -நம் போன்ற -பிற்பட்டார்களையும் வாழ்விக்க இங்கே சேவை சாதித்து -நித்ய சந்நிதி பண்ணி -அருளுகிறான்
——————————————————————
வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை விழுமிய முனிவர் விழுங்கும்
கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக் குவலயத்தோர் தொழுது ஏத்தும்
ஆதியை யமுதை யென்னை யாளுடையப்பனை ஒப்பவரில்லா
மாதர்கள் வாழும் மாட மா மயிலைத் திரு வல்லிக்கேணிக் கண்டேனே—2-3-2-
வேத பிரதிபாத்யன் –வேதங்களை வெளியிட்டு அருளினவன் -என்பதால் அவனை வேதத்தை என்கிறார்
உலகோர் விருப்பங்கள் உபாயங்கள் பலன்கள் வேறுபடுமே -வேதத்தின் சுவைப் பயனே -என்கிறார்
வியாசர் பராசரர் வால்மீகி போன்றார்க்கு இனிய கனி -விழுமிய முனிவர் விழுங்கும் கோதிலின் கவி
நந்தனார் களிறு –
தினம் சேவிக்கத் தக்க வடிவு அழகு
சர்வேஸ்வரத்தால் வந்த செருக்கு
நித்ய சம்சாரிகளையும் நித்ய சூரிகளின் கோவையாக்க வல்ல -கேட்பார் அல்லாத -நிரந்குச ஸ்வா தந்த்ர்யம் –
உபாயாந்தராங்கள்ளல் தன்னை அடைய விரும்பினார்க்கும் தன்னைக் கொடுக்கும் சீலமும்
அடியார்களின் விரோதிகளை ஆராயாமல் அழிக்கும் நிரசன ஸ்வ பாவமும்
தன்னை அடைய பக்தியைத் தானே தருகிற ருசி ஜனகத்வமும்
யுடையவன் ஆதாலால் களிறு என்னலாம் படியான ஸ்வ பாவன் –
—————————————————————————-
வஞ்சனை செய்யத் தாயுருவாகி வந்த பேயலறி மண் சேர
நஞ்சமர் முலை யூடுயிர் செக வுண்டநாதனைத் தானவர் கூற்றை
விஞ்சை வானவர் சாரணர் சித்தர் வியந்துதி செய்யப் பெண்ணுருவாகி
அஞ்சுவை யமுத மன்றளித்தானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே–2-3-3-
விஷம் தடவின முலை வழியாக பூதனை யுடைய உயிரையும் -பிராணனும் முடியும்படியாக முலைப் பால் யுண்ட ஸ்வாமி
தானவர் கூற்றை -பிலம்பன் கேசி தேனுகன் அறிஷ்டன் போல்வார் பலருக்கும் யமன் போன்றவன்
விஞ்சை -வித்யா
வித்யாதரர் சாரணர் சித்தர் -தேவதைகளின் வகுப்பு
வியந்து துதி செய்ய -வியந்துதி செய்ய -சங்கு கதை -சங்கதை போலே
———————————————————–
இந்திரனுக்கென்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திடத் தளர்ந்து ஆயர்
எந்தமோடின்வானிரை தளராமல் எம்பெருமான் அருள் என்ன
அந்தமில் வரையால் மழை தடுத்தானைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே —2-3-4-
வருஷம் தோறும் இந்த்ரன் பூஜை பெரிய திரு நாளாக கொண்டாடுவதால் -எழில் விழவு-எனப்பட்டது
பழ நடை செய் -அநாதி ஆசாரமாக செய்து வருகிற
அந்தமில் வரையால் -அளவில்லாத பெரிய கோவர்த்தன மலையைக் கொண்டு
மந்திர விதி -இடையர்களுக்கு மந்திர விதி உண்டோ -ஆலோசனை -சங்கேதம் என்றபடி –
————————————————————–
இன் துணைப் பதுமத் தலர்மகள் தனக்குமின்பன் நற் புவி தனக்கிறைவன்
தன் துணை யாயர் பாவை நப்பின்னை தனக்கிறை மற்றை யோர்க்கெல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றியங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே–2-3-5-
ஸ்ரீ தேவி பூ தேவி நீளா தேவி திவ்ய மகிஷிகள் மூவருக்கும்
தக்கார் பலர் தேவிமார் சால யுடையீர் -பெரிய திரு -10-8-8-
பதினாறாயிரம் தேவிமார் பணி செய்யத் துவரை என்னுமதில் நாயகராக வீற்று இருந்த மணவாளர் -பெரியாழ்வார் -4-9-4-
பத்மம் -பதுமம் -பத்மத்தலர் -தாமரைப் பூ
பெருமாள் திரு வதாரத்துக்கு தக்க திருவதரிக்கும் பிராட்டி -இன் துணை
இப்படி திவ்ய மகிஷிகளுக்கு வல்லபனாய் இருந்து போகங்களில் பராக்காய் இருப்பானோ என்னில்
அன்பர்களுக்கு கையாளாக உழைக்குமவன்-பாண்டவர் தூதன்
பரத்வ சௌலப்யம் திகழ சேவை சாதிக்கிறான் இங்கே –
————————————————————————
அந்தகன் சிறுவன் அரசர் தமரசற் கிளையவன் அணி யிழையைச் சென்று
எந்தமக்குரிமை செய்யெனத் தரியாது எம்பெருமான் அருள் என்ன
சந்தமில் குழலாள் அலக் கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே –2-3-6-
கோவிந்த புண்டரீகாஷ ரஷமாம் சரணாகதம் –
பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் ஆண்டங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் -பெரியாழ்வார் -4-3-6-
துரியோதனன் ராஜாதிராஜன் என்று அஹங்காரம் கொண்டு இருந்ததால் அரசர்தம் அரசன் -என்கிறார் –
எம்தமக்கு உரிமை செய் -துச்சாச நச்சாபி சமீஷ்ய கிருஷ்ணாம் அவேஷமாணான் க்ருபணான் பதீம்ஸ்தான்
ஆதூய வேகேன விசம்ஜ்ஞ கல்பாம் உவாச தாஹீதீ ஹசன் ச சப்தம் –சபா பருவ ஸ்லோகம் -89-56
ரஜஸ்வலையாய் இருக்கும் தன்மையையும் கணிசியாமல் தலை மயிரைப் பிடித்து மான பங்கம் செய்தானே
சந்தம் அல் குழலாள் -அழகு இருள்
அலக்கண் -மன வருத்தம்
இந்த்ரன் சிறுவன் -அர்ஜுனன் -யுதிஷ்ட்ரன் -யம தர்ம ராஜ புத்திரன் -பீமசேனன் -வாய் தேவ புத்திரன்-
————————————————————————–
பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்
இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை யெம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-7-
பிரிவில் தரியாமையை -ந ச சீதா த்வயா ஹீநா நஸாஹமபி ராகவ -முஹூர்த்தமபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத் த்ருதௌ-என்று
இளைய பெருமாள் அருளிச் செய்ததால் இப்படி சேர்த்து அருளுகிறார் –
நால்வரைச் சொன்னது வானர முதலிகளையும் தேவதா சமூஹங்கங்களை மகாரிஷிகளையும் சேர்ந்து -உப லஷணம்-மூலம் குறிக்கும் –
இவர்கள் துதிப்பது இராவணன் சம்ஹாரம் ஆகிற வீரச் செயல் -இராவணாந்தகனை –
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்து அறியா -குளிர் பொழிலுக்கும் விசேஷணம்
நிழல் பாங்கு பரிமளம் -குயில்கள் பாட மயில்கள் ஆட -இங்கே சேவை சாதித்து அருளுகிறான்
————————————————————
பள்ளியில் ஓதி வந்த தன சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம்
ஒள்ளியவாகிப் போத வாங்கு அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்பப் பிறை எயிற்று அனல் விழிப் பேழ்வாய்
தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-8-
தூணிலும் உளன் -துரும்பிலும் உளன் -எங்கும் உளன் –
இங்கு உளனோ என்று எதிரில் இருந்த தூணைப் புடைக்க
பிறை போன்ற பற்களையும் -நெருப்புப் பொறி பறக்கின்ற கண்களையும்
நா மடித்த பெரிய வாயையும் கொண்ட நரசிம்ஹ மூர்த்தியாய் தோன்றி அருளி
அஸ்மாதாதிகளையும் காத்தருளவும் நம்முடைய விரோதிகளைப் போக்கி அருளவும் இங்கே சேவை சாதியா நின்றான் –
தெளிசிங்க பெருமாள் -துள சிங்க பெருமாள் தவறான பாடம் –
சீறி வெகுண்டு -ஒரு பொருள் பன் மொழி -மிகவும் கோபம் கொண்டு -என்றபடி –
—————————————————————-
மீனமர் பொய்கை நாண மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த
கானமர் வேழம் கை எடுத்து அலறக் கராவதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-9-
நாள் மலர் -புதிய புஷ்பங்களை
இந்த்ரத்யும்னன் -மகா விஷ்ணு பக்தன் -அரசன் -அஹச்த்ய முனிவன் சாபத்தால் ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் –
ஹூ ஹூ -கந்தர்வன் -தேவலன் முனிவன் சாபத்தால் முதலையாக
ஆனையின் துயரம் -செவ்விப் பூவை திருவடிகளில் சமர்ப்பிக்க முடியாத துயரம்
ஆழி விட்டானை -என்னாமல் -ஆழி தொட்டானை என்றது கார்யத்தின் லாகவத்தை தெரிவிக்கும் –
————————————————————-
மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும்
தென்னன் தொண்டையர்கோன் செய்த நன் மயிலைத் திருவல்லிக்கேணி நின்றானை
கன்னி நன் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க் கலிகன்றி
சொன்ன சொல் மாலை பத்துடன் வல்லார் சுகமினி தாள்வர் வானுலகே–2-3-10-
கன்னி நல் மாடம் -அழிவில்லாத நல்ல மாடங்கள் என்றபடி
காமரு சீர் -சிறந்த ஸ்ரீ வைஷ்ணவ லஷ்மியை யுடையவர்
பாண்டிய மன்னன் தொண்டைமான் சக்ரவர்த்தி ஏறி அருளப் பண்ணின திவ்ய தேசம் –
நகர பிரதிஷ்டையும் இவன் கைங்கர்யம் என்பர்
மலயத்வஜன்-பாண்டியன் -தென்னன் –
கொன்னவில் கூர் வேல் கோன் நெடுமாறன் தென் கூடல் கோன் தென்னன் -பெரியாழ்வார்
அவன் வம்சத் தோன்றல் தொண்டைமான் சக்ரவர்த்தி -தென்னன் தொண்டையர் கோன்
ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும் மாட மா மயிலை -மஹிளா புரீ -சமீபம் -இந்த திவ்ய தேசம் -மயூர புரீ என்னவுமாம் –
திரு நாட்டிலே சென்று நித்ய கைங்கர்யம் பண்ணப் பெறுவார்கள் -என்று பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார்-
——————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply