மெச்சூது -பிரவேசம் –
ஆழ்வார்களில் சிலர் தாங்களும் யுவதிகளாய்-
பிராட்டிமார் அவஸ்தையும் பாவித்து
அவனையும் பஞ்ச விம்சதி வார்ஷிகனான யுவா குமாரனாக பாவித்தால்
பிறக்கக் கடவ சர்வாங்க சம்ஸ்லேஷத்தை –
தம்மை மாதாவாகப் பாவித்து
அவனுடைய நீர்மையை ஸ்வரூபம் ஆக்கி
அத்தாலே அவனை தமக்கு புத்ரனாக்கி
அவனுடைய மேன்மையை குண பாவமாக்கி
அவனுடைய அவதாரத்தில் மெய்ப்பாடு தோன்ற நின்ற ஸைசவ அவஸ்தையை
யசோதா பிராட்டியார் முதலான அனுபவித்த பிரகாரங்களை வ்யாஜமாக்கி
வண்ண மாடம் தொடங்கி-
அனுபவித்துக் கொண்டு போந்து –
அச்சோ என்றும்
புறம் புல்குவான் -என்றும்
இரண்டு திருமொழி யாலும் சர்வாங்க சம்ஸ்லேஷத்தை பெற்றாராய் நின்றார் கீழ் –
இதில்
அவன் திரு வாய்ப்பாடியில் யுள்ளார் உடன் அப் பூச்சி காட்டி விளையாடி ரசிப்பித்த
நிஷ் பிரயோஜன வியாபாரத்தை தமக்கும் அவன் காட்டக் கண்டு அனுபவித்தார் -என்னுதல் –
அன்றிக்கே –
பண்டு அவன் செய்த கிரீடை -என்கிறபடியே
அக் காலத்திலே தாமும் ஒக்க நின்று கண்டால் போலே அனுசந்தித்தார் -என்னுதல் –
———————————————————————
மெச்சூது சங்கம் இடத்தான் நல்வே யூதி
பொய்ச் சூதில் தோற்றி பொறை யுடை மன்னர்க்கார்ய்ப்
பத்தூர் பெறாத அன்று பாரதம் கை செய்த
அத் தூதன் அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் -2-1-1-
பதவுரை
மெச்ச–(அனைவரும்) கொண்டாடும்படி
ஊது–ஊதுகின்ற
சங்கம்–ஸ்ரீ பாஞ்ச ஜந்யத்தை
மிடத்தான்–இடக் கையில் ஏந்தியுள்ளவனும்
நல்வேய்–நல்ல வேய்ங்குழலை
ஊதி–ஊதுபவனும்
பொய் சூதில்–க்ருத்ரிமமான சூதிலே
தோற்ற–(தம்முடைய சொத்துக்களை யெல்லாம்) இழந்தவர்களாய்
பொறை உடை–பொறுமை சாலிகளான
மன்னர்க்கு–பாண்டவர்கட்கு
ஆய்–(தான் எல்லா வகைத்) துணையுமாயிருந்து
(துர்யோதநாதிகளிடத்துத் தூது போய்க் கேட்டுப் பார்த்தும் அவர்களிடத்தினின்றும்)
பத்து ஊர்–பத்து ஊரையும்
பெறாது–அடைய முடியாமல்
அன்று–அக் காலத்திலே
பாரதம்–பாரத யுத்தத்தை
கை செய்த–அணி வகுத்துச் செய்து
அத் தூதன்–அந்தப் பாண்டவ தூதனான கண்ணன்
அப் பூச்சி காட்டுகின்றான்–அப்படிப் பட்ட (மிகவும் பயங்கரமான) பூச்சி காட்டுகின்றான்;
அம்மனே–அம்மா!
அப் பூச்சி காட்டுகின்றான்-.
(தலை கேசம் வைத்து மறைத்து -கண்ணை புரட்டி -சங்கு சக்கரம் காட்டி -அப்பூச்சி காட்டுதல் )
மெச் சூது சங்கம் இடத்தான் நல்வே யூதி –
ஆஸ்ரித பாரதந்த்ரன் –
பாண்டவ பஷ பாதி -என்று
இரண்டு திறத்தில் யுள்ளாரும் விஸ்வசிக்கும் படி யாக முன்னே தெளிவித்து ஊதுகிற
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்துக்கு இடத் திருக் கையை நிரூபகம் ஆக்கினவன் –
திருக் கைக்கு ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் நிரூபகமாகை அன்றிக்கே
திருக் கை நிரூபகம் ஆகையால் விசேஷண நிரூபகம் குண பரமாகையால் மாறி அருளிச் செய்யுமாம் இறே –
(இடது கையில் பிடித்த சங்கம் -சங்கத்துக்கு முக்யத்வம்
அடைமொழி -அடையாளம் -சங்கம் இடத்தான் -)
நல்வே யூதி –
பிராமணர்க்கு சிக யஞ்ஞோபவீதாதிகளும் சந்த்யா வந்த நாதிகளும் விசேஷண நிரூபகம் ஆகுமா போலே
கோப குலத்துக்கு குழலும்
குழலூதுகையும்
நிரூபகமாய் இறே இருப்பது
ஸ்வரூப நிரூபகத்திலும் விசேஷண நிரூபகம் பிரதானம் ஆகையால் -நல் வேய் -என்கிறார்-
பொய்ச் சூதில் தோற்றி பொறை யுடை மன்னர்க்கார்ய்ப்
சூது போதுகை லீலா ரசம் மாத்ரம் அன்றிக்கே
அதுவே வ்யாஜ்யமாகக் கொண்டு துர்யோ நாதிகள் பர அநர்த்த சிந்தனை செய்கையாலே –
பொய்ச் சூது -என்கிறார் –
துர்யோ நாதிகள் இவர்கள் சர்வ ஸ்வமும் அபஹரித்துக் கொண்டு இருக்கச் செய்தேயும்
இவர்கள் ஷமை ஒன்றும் அபஹரித்து கொள்ள மாட்டாது இருந்தது
தர்ம புத்ராதிகளுக்கு இத்தனையும் யுடைமையுமாய்க் கிடைக்கையால் பொறை யுடை மன்னர் -என்று
இவர்களுக்கு நிரூபகமாய்க் கிடக்கறது
இது ஒழிந்த சர்வ ஸ்வமமும் க்ருத்ரிமத்தாலே அபஹரித்துக் கொள்ளுமது ஒழிய
இந்த பொறையை இவர்கள் பிரார்த்திக் கொடுத்தாலும்
இந்த சரீரத்தோடு அவர்கள் கைக் கொள்ள மாட்டார்கள் இறே அவர்கள் –
இந்த பொறை தான் இந்த தர்ம புத்ராதிகளுக்கு உடைமை யாயிற்றதும் இவர்கள் அத்வேஷத்தோடே போகையாலே இறே –
திருதராஷ்ட்ரன் இவர்கள் பக்கல் பொறையை பரிஷிப்பனாக -தர்ம புத்ராதிகள் போகிற அளவில் விக்ருதராய் போனார்களோ -என்று கேட்க
ஹர்ஷத்தால் வந்த விக்ருதி ஒழிய அவர்கள் பக்கல் க்ரோத விக்ருதி கண்டிலோம் -என்ன
என் பிள்ளைகளிலும் ஒருவராகிலும் சேஷிக்கும் படியாக அழன்று வாய் விட்டுப் போய்த்திலனே மகா பாபி -என்றான் இறே
புறக் கண்ணும் கெட்டால் போலே உட் கண்ணும் மறைந்த படியாலே –
துர்யோத நாதிகளுக்கு ராஜ்ய ப்ராப்தியில் தாய விபாகத்தால் உடைமையான தேசமும்
இவர்கள் பக்கல் அபஹரித்த தேசமும்
அவர்கள் கொடுத்தாலும் இவர்கள் க்ருத்ரித்ம தோல்வி நியாயத்தாலே அனுவர்த்தித்தாலும் கொள்ளார்கள் இறே
இது என் -அவரோடு விபாகித்து வர்த்திக்கை அரிது என்று போனார்கள் ஆனாலோ என்னில்
அது கந்தர்வ பரிபவத்தில் காணலாம் இறே
ஆகையால் உடைமை கண்ட விடத்தே எல்லாரும் சேர்வர்கள் இறே
உடைமை யாவது பொறை இறே
அத்தாலே இறே ஈஸ்வரன் தானும் சேர்ந்தது –
பத்தூர் பெறாத அன்று பாரதம் கை செய்த அத் தூதன் அப் பூச்சி காட்டுகின்றான் –
இவர்களுக்காக ஸ்ரீ தூது எழுந்து அருளி –
எல்லார்க்கும் உள்ளார்க்கும் உள்ள ப்ராப்திகள் அம்சித்து நீங்களும் உங்களுக்கு அம்சமானதும் கொண்டு ஜீவிக்கப் பார்க்கில்
தீர்க்க ஜீவிகள் ஆகலாம் -என்று அருளிச் செய்த அளவில்
அவர்கள் இசையாத படியாலே
சிறிது குறைத்தாலும் கொடுத்து பொருந்தப் பாருங்கோள்-
நான் அவர்களைப் பொருத்துகிறேன் -என்ற அளவிலும் அவர்கள் இசையாமையால்
ஆளுக்கு இரண்டூராக ஐவர்க்கும் பத்தூர் கொடுங்கோள் -என்ன
அவர்கள் அதுக்கும் இசையாமல் –
வீர போக்யை அன்றோ வஸூந்தரை -ராஜாக்களுக்கு யுத்தம் அன்றோ கர்த்தவ்யம் -என்ன
ஆனால் அந்த தர்மத்தை செய்யுங்கோள் -என்று இசைந்து போந்து இவர்களையும் இசைவித்து –
பாரதம் கை செய்த –
மகா பாரதத்திலே கையும் அணியும் வகுத்து சாரதியாய் நின்ற அத் தூதன் -என்னுதல் –
பத்தூர் பெறாத அத் தூதன் -என்னுதல் –
தூதனாய் சமனாய் இருக்கச் செய்தேயும்
தன்னுடைய ஆஸ்ரித பஷ பாதித்வம் அவர்கள் நெஞ்சிலும் பட வேண்டும் என்று
மம ப்ராணா ஹி பாண்டவ -என்று மேல் விளையும் கார்யம் ஏற்கவே அறிவித்த அத் தூதன் -என்னுதல்
அப் பூச்சி காட்டுகின்றான் –
அந்த ஆஸ்ரித பஷ பாதம் தோற்ற அப் பூச்சி காட்டுகின்றான் -என்கிறார் –
இவ் விடத்தே ஸ்ரீ உஞ்சப்பிள்ளை பாடா நிற்கச் செய்தே -திரு ஓலககத்திலே –
அத் தூதன் -என்று பெருமாளைக் காட்டுவது –
அப் பூச்சி என்று கண்ணை இறுத்துக் கொண்டு வருவதாய் அபி நயிக்க-
உடையவர் பின்னே சேவித்து எழுந்து அருளி இருந்த ஸ்ரீ எம்பார்
திருக் கைகளை திருத் தோளோடு சேர்த்துக் காட்ட
அவரும் அப்படியே அபி நயித்துக் கொண்டு வர –
இதுக்கடி என்-என்று விசாரித்து ஸ்ரீ உடையவர் புரிந்து பார்த்து
ஸ்ரீ கோவிந்த பெருமாள் இருந்தீரோ -என்று அருளிச் செய்தார் என்று அருளிச் செய்வர் –
அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் -என்று கை நெறித்து இறே அவர் மீண்டும் அபி நயித்தது-
அப் பூச்சி என்றது இரண்டு திருக் கையில் ஆழ்வார்களையும்
நீர்மையாலே வஸ்து நிர்தேசமானால் மேன்மையை அப் பூச்சி என்னலாம் இறே
மாம் வ்ரஜ என்கிற மேன்மை போல் அன்று இறே-
————————————————————————-
(மாயன் அன்று ஓதிய வாக்கு -ஸ்ரீ கீதாச்சார்யன் -உபநிஷத் பசுவைக் கறந்து
அருளிச் செய்த ஸ்ரீ கீதாம்ருதம் -அலைவலை-பஹு ஜல்பிகம் -சொல்லலாமோ )
அதிகார அனு குணமாக வார்த்தை சொல்லாதவன்
அப் பூச்சி காட்டுகின்றான் -என்கிறார் –
மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும்
பலர் குலைய நூற்றுவரும் பட்டழியப் பார்த்தன்
சிலை வளையத் திண் தேர் மேல் முன்னின்ற செங்கண்
அலை வலை வந்து அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் –2-1-2-
பதவுரை
மலை புரை–மலையை ஒத்த
தோள்–தோள்களை யுடைய
மன்னவர்–அரசர்களான
மாரதரும்–மஹா ரதரும்-(பீஷ்மாதிகள்- ஆத்மாநம் -அஸ்வங்களை ரக்ஷித்து போர் செய்வார் )
மற்றும் பலரும்–மற்றும் பலவகை அரசர்களும்
குலைய–அழியவும்
நூற்றுவரும்–(துர்யோதநாதிகள்) நூறு பேரும்
பட்டு–மரணமடைந்து
அழிய–வேர் அற்ற மரம் போல் உருவமழிந்து போகவும்
பார்த்தன்–அர்ஜுனனுடைய
சிலை–(காண்டீவமென்னும்) வில்
வளைய–வளையவும்
(நூற்றுவரை வெல்வதை விட ஐவரை வேள்வித்ததே பெரிய விஷயம் )
திண் தேர் மேல்–(அந்த அர்ஜுனனுடைய) வலிய தேரின் மேல்
(பார்த்த சாரதி இருப்பதாலேயே வந்த திண்மை உண்டே )
முன் நின்ற–(ஸாரதியாய்) முன் புறத்தில் நின்ற
செம் கண்–(வாத்ஸல்ய ஸூசகமாகச்) சிவந்த கண்களை யுடையனாய்
அல வலை–(அர்ஜுநனுடைய வெற்றியைப்) புகழ்பவனான கண்ணன்
(பிதற்றுவது போல் -ஜயத்தையே சொல்லி புகழுமவன்
வெல்ல வைக்க ஸ்ரீ கீதையை வெளியிட்டு அருளினவன் )
வந்து அப் பூச்சி காட்டுகின்றான்-.
மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் –
மஹத்தான பர்வதங்கள் சலித்தாலும் நம்முடைய தோளுக்கு சலனம் யுண்டோ -என்று
இருக்கிற ராஜாக்களும்
யுத்த உன்முகரான-பெரிய தேராளிகளும் –
மற்றும் பலர் குலைய
அது ஒழிய பரிகரிக்க ஒண்ணாத -ஆனை-குதிரை -காலாள் -என்று சொல்லப்பட்ட பரிகரத்தில் உள்ளவர்களும்
குலைய -நடுங்க
அவர் இவர் என்றால் போலே சில வ்யக்தி நிரூபணம் பண்ணலாம் அது ஒழிய
நடுக்கம் எல்லாருக்கும் ஒத்து தோற்றுகையாலே ஒரு சொல்லாலே குலைய -என்கிறார் –
இந்த நடுக்கத்துக்கு ஹேது முன்பே மிகை விருதூதுவது வீரக் கழல் இடுவதானது இறே –
நூற்றுவரும் பட்டழியப் –
பலர் குலைய என்றதிலே இவர்களும் அந்தர்கதம் இறே
ஆயிருக்கச் செய்தே இவர்களைப் பிரித்து -பட்டழிய -என்றது –
அஹங்கார அக்னி ப்ராசுர்யத்தாலே –
மகா வ்ருஷங்கள் ஆனவை பசுமை குலைய வற்றி வரண்டு கோடரகதமான அக்னியாலே வெந்து விழுமா போலே
இறே நூற்றுவரும் பட்டழிந்த படி-
பார்த்தன் சிலை வளையத் திண் தேர் மேல் முன்னின்ற -செங்கண் அலைவலை வந்து அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் —
இது போலேயோ அவன் சிலை வலையைப் பட்ட பாடு –
விஸ்ருஜ்ய ச சரம் சாபம் -கீதை -1-47-என்றவனை –
கரிஷ்யே வசனம் தவ -கீதை -18-73-என்னப் பண்ணின-அருமை – பெருமை
அதாவது
பெரிய வ்யவசாயத்தோடே யுத்த உன்முகனாய் தேரிலே ஏறினவன் –
யுத்த உன்முகரான பந்துக்களை ரஷிக்கை தர்மம் என்றும்
வைதமானத்தை அதர்மம் என்றும்
சிநேக காருண்ய வத பீதிகளாலே –
கினனோ ராஜ்யேன கோவிந்த –
கிம் போகைர் ஜீவிதே நவா -(கீதை -1-35-)-என்று இவன் நிற்கையாலும்
அவள் -விரித்த குழல் முடியேன் -என்று தனக்கு சரணாகதி திரு நாம பிரபாவ மாத்ரத்தாலே பலித்த கர்வத்தாலே –
நாம் நினைத்தது எல்லாம் பலிக்கும் -என்று பிரதிஞ்ஞை பண்ணி நின்றாள்-
இனி இவனைத் தெளிவித்து
சிலையை வளைத்து
மயிரை முடிப்பிக்க வேணும் -என்று திரு உள்ளம் பற்றி அருளி
இவனுக்கு சில அர்த்த விசேஷங்களை உபதேசிக்கக் கோலி
தர்மத்தை அதர்மம் என்ற பிரமம் மீளாமையாலே
அதர்மத்தை தர்மத்தை என்றால் அத்தை தர்மம் என்று கைக் கொள்ளுமாகில்
இவன் அதர்மம் என்று நீக்கின தர்மத்தை இவன் இசைந்த தர்மத்துக்கு
யோக்யதா பாதகம் ஆக்குவிப்போம் -என்று பார்த்த அளவிலும் அது கூட்ட இவன் இசையாமையாலும்
அது ஒழிய இது தர்மம் ஆக மாட்டாமையாலும் வெறுத்து அருளி
இனி அதி குஹ்ய ரஹஸ்யம் ஒழிய சொல்லலாவது இல்லை என்று திரு உள்ளம் பற்றி அருளி
தர்மங்கள் எல்லா வற்றையும் ஓன்று ஒழியாமல் விடு என்கையாலே –
அலவலை -என்கிறார் –
(நின்மலமாக வைத்தவர்
ஞானப் பிரானை ஞானத்து வைமின் என்ற இது
தத்வ விவேக
நித்யத்வாநித்யத்வ
நியந்த்ருத்வ
சௌலப்ய
சாம்ய
அஹங்கார இந்திரிய தோஷ பல
மன பிராதான்ய
கரண நியமன
ஸூஹ்ருதி பேத
தேவாஸூர விபாக
விபூதி யோக
விஸ்வரூப தர்சன
சாங்க பக்தி பிரபத்தி த்வை வித்யாதிகளாலே
அன்றோதிய கீதா சமம் என்னும் –ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -189-)
இவன் கை விட்ட தர்மம் கூடாத போது –
தான் இது தர்மம் என்ன இசைந்தானோ என்னில் -இசைந்தான் –
இசைந்த பிரகாரம் தான் என் என்னில்
இது தர்மம் –
துஷ்கரத்வாதி தோஷ தர்சனத்தாலும்
கீழே பார தந்த்ர்யத்தை கேட்கையாலே அந்த பாரதந்த்ர்யத்துக்கு விரோதமாய் தோற்றுகையாலும்
என்னால் செய்யப் போகாது –
மற்றொரு கதி அறிகிலேன் -என்று இவன் சோகித்த பின்பு
இவன் சோக நிவ்ருத்தி யர்த்தமாக த்யஜிக்க சொல்லும் போதும்
இது அசக்தி யோக த்யகமாம் போதும் அவனுடைய பிரமத்தாலே தர்ம சப்த வாச்யமாம் இத்தனை
இவற்றினுடைய துஷ்கரத்வாதி தோஷ தர்சனம் பண்ணினவன் பிரமித்தானோ என்னில்
இதுக்கு யோக்யதா பாதக தர்மத்தை கூட்டப் பெறாமையாலும் பிரமித்தான் –
சக்த்யா அனுகுணமாக செய்யவுமாய்-
தேக தர்ம-(ஷத்ரிய தர்ம ) மாத்ர விஹிதமுமாய் தான் செய்யக் கடவோம் என்று உபக்ரமித்து ஒருப்பட்டதுமாய்
முன்பு ஊர்வசி முதலானார் அளவிலும் தவறாமல் செய்து போந்ததுமாய்
ஸ்ரேயான் ஸ்வ தர்மோ வி குண-(கீதை -3-35-)என்ற
கீத உபநிஷத் ஆச்சார்ய வசனத்தாலும் செய்ய வேண்டுவதான ஸ்வ தர்மத்தை
பந்துக்கள் பக்கல் ஸ்நேஹாதிகளால் பிரமித்து தானே விடுகையால்
இதுவும் அசக்தி யோக த்யாகத்தாலும் தர்ம சப்த வாச்யமாக கூடாமையாலும்
இனி ஒரு திவ்ய தேச வாசம் -திரு நாம சங்கீர்த்தனம் -தீப மாலாதிகளில் இவனுக்கு அந்வயம் இல்லாமையாலும்
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்ற பிரகாரம் தான் எங்கனே என்று நிரூபிக்க வேண்டி வரும் இறே-
தன் சௌந்த்ர்யாதிகளால் அலவலைமை தவிர்த்தவன் (ஐயப்பாட்டு அறுக்க -அழகன் அன்றோ )
இவனுடைய அலவலைமை தவிர்க்க வேண்டி இறே அலவலை யானான் –
இவனுக்காக இவ் வர்த்தம் எல்லாம் வெளியிட வேணுமோ –எருக்கிலைக்காக –
என்று அலைவலை -என்கிறார் –
இங்கன் வெளியிட்டான் ஆகில்
அவள் பிரதிஞ்ஞை நோக்கும் படி என்
இவன் வில் வளையும் படி என் என்னில்
இவன் பின்பு சொன்னத்தை-(கரிஷ்யே வசனம் தவ-18-73-) முன்பே செய்தான் ஆகில்
பிரதிஞ்ஞையும் தலைக் காட்டி வில்லும் வளையும் இறே
பின்பு தானும் -ப்ராமயன் -18-61-என்ற போதே
செய்து முடித்தான் ஆகில் –
சர்வ தர்மான் -என்ன வேண்டா இறே –
இவை எல்லாத்தாலும் இவள் பிரதிஞ்ஞை தலைக் கட்டலாய் இருக்க
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்று லோக சாஸ்த்ரமாக உபகரிக்கலும்
அவள் சங்கல்பம் வ்யாஜ மாத்ரமோ பாதி –
இவன் பக்கலிலும் ஒன்றைக் கண்டு வ்யாஜ மாத்ரம் ஆக்கக் கொள்ள வேணும் இறே
அது தானும் இவனுக்கு உண்டோ என்னில் –
கார்ப்பண்ய தோஷோ பஹத ஸ்வ பாவ -கீதை 2-7-என்றும்
தர்ம சம்மூட சேத -என்றும் சொன்ன போதே
தர்ம அதர்மங்கள் அறிந்திலேன் -என்று அனுதபித்து
ப்ருச்சாமி த்வாம் -என்று அபேஷித்து
யச் ஸ்ரேயஸ் ச்யான் நிச்சிதம் ப்ருஹி -என்று
உனக்கு நான் சிஷ்யன் நியாமகன் பிரபன்னன்-என்று தன் அதிகாரத்தைச் சொல்லி
நிச்சிதம் ப்ருஹி என்ற போதே ப்ராப்தமான அர்த்த வ்யாஜ்யமும் தோன்றும் இறே
இவன் தானும் சக்தி யோக தர்மத்தை அசக்தி யோகத்தா லன்றே விட்டதும் –
நடுவு பரந்தது எல்லாம்
இவன் சொன்னது சத்தியமோ என்று இவன் நெஞ்சை சோதிக்கைக்காகவும் இறே –
ஆகையால் ஈஸ்வரன் அலைவலை வல்லவாய் இருக்க
இவர் அவனை அலவலை என்னும் போது
தம்முடைய அபிப்ப்ராயத்தால் அருளிச் செய்தாராம் இத்தனை இறே-
(நெறி எல்லாம் எடுத்து உரைத்த
மாயன் அன்றோ ஓதிய -இவையே அலைவலை )
இவர் அபிப்ராயம் தான் என் என்னில்
வாழாள்-என்றும்
கூழாள்-என்றும் வகை யிட்டு
பகவச் சரணார்த்திகள்-கைவல்யார்திகள் -என்று பாராதே இவர்களை இசைவித்து
தம்மோடு கூட மங்களா சாசன பரராக்கி ப்ராப்தி தசையிலும்
சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே -என்று இதுவே யாத்ரையாக ஆக்கி
வேதப் பயன் கொள்ள வல்லவர்க்கு
இது அலைவலைத் தனமாய் தோற்றாது இராது இறே
தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பார் -என்று அவர் நாக்கு வளைத்து இருப்பார் –
இப்போது என்னளவில் பண்ணுகிற தீம்பு திருச் செவி சாத்தில்-என்று ஆண்டாளும் அருளிச் செய்தாள் இறே –
(மெய்ம்மைப் பெரு வார்த்தை-கொண்டாட்டம் -அங்கு
இங்கு அலைவலை )
பிராட்டியும் -ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம் -என்று எங்கள் ஐயர் கேட்கில்
பெண்ணுக்கு பெண்ணைக் கொடுத்தோம் -என்று
என்னை நிருத்திப் போகில் போர வெறுத்துச் சொல்லுவர்
அது என்னால் கேட்கப் போகாது என்று கிடீர் எனக்கு கிலேசம் -என்றார் இறே
நீர் நிறுத்திப் போனால் நிற்கும் பாபம் எனக்கும் இல்லை
நீர் தாமும் நிறுத்திப் போகிறவரும் இல்லை
ஆயிருக்க இந்த நெஞ்சு ஒழிந்த பல வார்த்தை சொல்லி அலவலையாக வேணுமோ -என்றாள் இறே –
குறும்பறுத்த நம்பியும் திருவேங்கடமுடையான் ஆகிற அலைவலை வெளியிட்டானோ -என்றார் இறே-
த்யஜ்ய -வ்ரஜ -மாஸூச – என்னக் கேட்டு
அவனும் ஸ்திதோஸ்மி கத சந்தேக கரிஷ்யே வசனம் தவ -18-73-என்ற பின்பு இறே
நூற்றுவரும் பட்டழிய பார்த்தன் சிலை வளைத்ததும் –
ரதிக்கு திண்மை குலைந்து விஸ்ருஜ்ய ச சரம் சாபம்
ரதோபஸ்த உபாவிசத் -1-47- என்று இவன் இருக்கும் படி
ரதம் திண்மை குலையாது இருந்தது இறே -இவர் தேர் மேல் முன் நிற்கையாலே
மேல் நின்ற பார்த்தனுக்கு முன்பே
தாழ நின்று –
உரஸா பிரதி ஜக்ராஹா -என்று மார்பிலே அம்பேற்ற அலவலை வந்து
(சொல்லாலும் செயலாலும் அலை வலை )
அப்பூச்சி காட்டுகின்றான் என்கிறார் –
செங்கண்-
பலகாலும் -அர்ஜுனன் தேரில் நின்றும் குதித்து ஓடிப் போகிறானோ என்று பார்த்து சிவந்தது -என்னுதல்
சத்ருக்கள் அளவில் சீறிச் சிவந்தது என்னுதல்
ஸ்வா பாவிகமான ஐஸ்வர்ய ஸூசகமான சிவப்பு என்னுதல் –
——————————————————————————————
ஆயர் குலத்துக்கு காரணன் ஆனவன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் -என்கிறார் –
காயுநீர் புக்குக் கடம்பேறிக் காளியன்
தீய பணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி
வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற
ஆயன் வந்து அப் பூச்சி காட்டுகின்றான் யம்மானே அப் பூச்சி காட்டுகின்றான் –2-1-3-
பதவுரை
காயும்–(காளியனுடைய விஷாக்நியால்) கொதிக்கின்ற
நீர்–மடுவின் ஜலத்திலே
புக்கு–புகுந்து (கலக்கி)
(அம் மடுவினுள்ளிருந்த காளியனென்னும் பாம்பைக் கோபத்தோடு படமடுக்கச் செய்து)
கடம்பு ஏறி–(அம் மடுவின் கரையிலிருந்த) கடம்ப மரத்தின் மேலேறி
காளியன்–அந்தக் காளியனுடைய
தீய பணத்தில்–கொடிய படத்திலே
சிலம்பு ஆர்க்க–(தன் திருவடியிலணிந்து கொண்டிருந்த) சிலம்பு சப்திக்கும்படி
பாய்ந்து–குதித்து
ஆடி-கூத்தாடி
(இச்செய்கையைக் கண்டு என்ன தீங்கு வருமோ! என்று கலங்கினவர் மகிழ)
வேயின் குழல் ஊதி–மூங்கினாலானாகிய குழலை ஊதி
(இப்படி)
வித்தகன் ஆய் நின்ற–விஸ்மயநீயனாயிருந்த
ஆயன்–கண்ண பிரான்
வந்து அப் பூச்சி காட்டுகின்றான்-.
காயுநீர் புக்குக் கடம்பேறிக் காளியன்
காளியன் புக்கு -காயு நீர் கடம்பேறி –
முன்பு அம்ருத ஜலமாய் இறே அந்த மடு தான் இருப்பது –
காளியன் பீதி மூலமாக வந்து புகுந்த பின்பு காயு நீர் ஆயிற்று –
(ரிஷி சாபம் -பெரிய திருவடிக்குப் பயந்து இந்த பொய்கையில் புக்கான் )
பண்டு நீர்க் கடம்பாய் குளிர்ந்து நின்ற பாதபம் பட்டது விஷ ஜலத்தாலே இறே
ஆனால் அது இவன் ஏற பொறுத்த படி என் -என்று நஞ்சீயர் கேட்க
ஏறுகிறவன் பார்த்து (கடாக்ஷித்து ) ஏறுகையாலே விஷத்தால் வந்த தோஷம் அவன் பார்வையாலே தீர்ந்து
பிராணன் பெற்று பச்சிலைப் பூம் கடம்பாயிற்று -என்று பட்டர் அருளிச் செய்தார்
நெறுஞ்சியைப் புல்லாக்கினவன் கடாஷத்துக்கு கூடாதது இல்லை இறே
அன்றிக்கே
நம்பிள்ளை அருளிச் செய்தாராக ஆச்சான் பிள்ளை அருளிச் செய்யும்படி
வெந்து போன உத்தரை தன் சிறுவனையும் உய்யக் கொண்ட திருவடிகள் இறே
அந்தத் திருவடிகளால் மிதித்து ஏறினால் பச்சிலை பூம் கடம்பாகாதோ -என்று
திருவடிகளாலே கல்லைப் பெண் ஆக்கினான் என்றதும் ஓர் ஆச்சர்யமோ இதுக்கு
அந்தக் கடம்பில் ஏறி அந்த விஷத்துக்கு ஆஸ்ரயமாய் –
(அம்ருத கலச துளி விழுந்து என்று முன் சொல்லி –
ஆரா அமுதம் கடாக்ஷம் -திருவடி ஸ்பர்சம் இருக்க அப்படி சொல்ல வேணுமோ -என்றும் அருளிச் செய்வர் )
தீய பணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி
தீயதான பணத்தில் மேலே இறே சிலம்பார்க்க பாய்ந்து ச சம்பிரம ந்ருத்தம் செய்தது
அந்த ந்ருத்தம் தான் பாரத சாஸ்தரத்துக்கு ஹேது என்னலாம் இறே –
வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற
கரையில் ஏறி இனிதான வேயின் குழலூத
அந்த த்வனியின் தெளிவு கண்டு இறே
அந்த காளியனுக்கு பிழைத்தான் -என்று ஆய்ச்சிமார் ஆயர்கள் தெளிந்த அளவு அன்றிக்கே
இவரே இறே தெளிந்தாரும்
இன்னமும் -இவன் இறே -என்று வயிறு மறுகினாரும்
வித்தகனாய் நின்ற -ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்-யம்மானே அப்பூச்சி காட்டுகின்றான் —
ஆயர் குலத்துக்கு காரண பூதன் என்னுதல் –
பசுக்களும் கன்றுகளும் இடையரும் இடைச்சியும் பயம் கெட்டு தங்கள் இஷ்டத்திலே
தண்ணீர் குடிக்கலாம் படி காளியனை ஒட்டி விட்ட சாமர்ர்த்யத்தை யுடையவன் என்னுதல் –
ஆயன் –
எல்லாம் செய்தாலும் ஜாதி உசிதமான இடைத் தனத்தில் குலையாமையாலே இறே
வ்யக்தி பேர் கிடக்க (கண்ணன் ) ஜாதிப் பேர் (ஆயன் )அருளிச் செய்தது
அன்றிக்கே
வாயன் –
குழலூதின ஆயன் என்னவுமாம்-
———————————————————————–
தீம்பன் ஆனவன் வந்து அப் பூச்சி காட்டுகிறான் -என்கிறார்
இருட்டில் பிறந்து போய் ஏழை வல்லாயர்
மருட்டைத் தவிர்ப்பித்து வன் கஞ்சன் மாளப்
புரட்டி யந்நாள் எங்கள் பூம் பட்டுக் கொண்ட
அரட்டன் வந்து அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் –2-1-4-
பதவுரை
இருட்டில்–இருள் நிறைந்த நடு நிசியில்
பிறந்த–(மதுரையிலே) தேவகீ புத்ரனாகத் தோன்றி
போய்–(அங்கு நின்றும் அப்போதே ஆய்ப் பாடிக்குப்) போய்
ஏழை–அவிவேகிகளான
வல்–(கிருஷ்ண ஆஸ்ரயத்தால் -தன்னைப் பற்றி யிருக்கும்) மன வலிமையை யுடைய
ஆயர்–இடையர்களின்
(கண்ணனிடத்திலுள்ள ப்ரேமத்தாலும் கம்ஸனிடத்திலுள்ள கோபத்தாலும் தாமே கம்ஸனைக்
கொல்ல வல்லவர்கள் போலே செருக்கிச் சொல்லுகிற)
மருட்டை–மருள் வார்த்தைகளை
தவிர்ப்பித்து–போக்கினவனாயும்
வல் கஞ்சன்–கொடிய கம்ஸன்
மாள–மாண்டு போம்படி
புரட்டி–(அவனை மயிரைப் பிடித்து அடித்துப் பூமியிலிட்டுப்) புரட்டினவனாயும்
அந் நாள்–(நாங்கள் யமுனையில் நீராடிய) அக் காலத்திலே
எங்கள்–எங்களுடைய
பூம் பட்டு–அழகிய பட்டுப் புடவைகளை
கொண்ட–வாரிக் கொண்டு போன
அரட்டன்–தீம்பனாயுமுள்ள கண்ணன்
வந்து அப் பூச்சி காட்டுகின்றான்-.
இருட்டில் பிறந்து போய்
அவன் தான் பிறக்கப் புகுகிறான் என்று ஏற்கவே உருவின வாளும் கையுமாய் நிற்கிற
விரோதிகள் கண்ணில் தோற்றாமைக்காக இறே
இருட்டிலே திரு வவதரித்தது
இருட்டிலே யாகிலும் தாய் முலைப் பாலைக் குடித்துக் கிடக்கலாம் இறே
இதுக்கு விரோதிப்பார்கள் என்று இறே வழியிலே மிருக்யமும் பாராமல் இருட்டிலே
திருவாய்ப்பாடி ஏற எழுந்து அருள வேண்டிற்று –
பிறந்து போய் –
திருவவதரித்து எழுந்து அருளி-
ஏழை வல்லாயர் மருட்டைத் தவிர்ப்பித்து –
வல்லாயர் ஏழை மருட்டைத் தவிர்ப்பித்து-
வல்லாயர் –
ஆயர்க்கு வலிமையாவது –
அறிவு கேட்டில் வலியராகை இறே-
புது மழைத் தண்ணீரையும் குடுவையில் சோற்றையும் ஜீவித்து இடையர் கோலாடி விளையாடும் போதுகளிலே
நாம் இத்தனை பேர் யுண்டாய் இருக்க நம்முடைய கையிலே இந்த பசு மேய்க்கிற கோல்கள் இருக்க
கம்சனுக்கு நாம் திறை இடுகையாவது என்-
இந்த கோல்களாலே கம்சனையும் சாகவடித்து இழுத்துப் பொகடக் கடவோம் -என்று இவர்கள் சம்மதித்த அளவிலே
நீங்கள் எல்லாரும் வேணுமோ
நான் ஒருவனுமே அவனை சாகடித்து இழுத்துப் பொடேனோ-என்று இவன் எழுந்து இருந்த அளவில்
ஆயர் பலரும் எழுந்து இருக்க
நீங்கள் இங்கன் சொல்லிச் செய்ய வல்லாரைப் போலே மருட்டாதே ஒழியுங்கோள்-என்று
அவர்களையும் நீக்கி
அண்ணரும் நாமும் அமையும் -என்று ஸ்ரீ மதுரைக்கு புறப்பட்ட அளவிலே-
அக்ரூரன் -எழுந்து அருள வேணும் -என்று தேரும் கொண்டு உறவு பேசி வர –
அவனுடன் எழுந்து அருளுகிற அளவிலே
வல்லாயர் ஏழைகளாய் -இவனுடன் மருவின பெண்கள் எல்லாரும் திரண்டு வந்து
அக்ரூர க்ரூர ஹிருதய -என்று இவரை நிஷேதித்து
தேரைத் தகைந்து –
நீங்கள் போகில் நாங்கள் இத்தனை பேரும் இப்போதே முடிவோம் -என்ன
மாற்று வாயாகில் இப்படி சொல்லுகிறது ஒழிய நீங்கள் நினைத்த போதே முடியலாய் இருக்குமோ –
முடிக்கிறோம் என்று என்னை மருட்டாதே கொள்ளுங்கோள் -என்று
இவர்கள் மருட்டையும்
நம்பி மூத்த பிரானையும் கொண்டு தவிர்ப்பித்தான் இறே
அவர்களுடைய ஸ்நேஹத்தை இறே மருட்டு என்கிறது –
அத்தைத் தவிர்த்த பிரகாரம் தான் ஏது என்னில்
நாங்கள் போய் மாமடியோடே உறவு செய்து
மீண்டு வருகிறோம் என்ன –
அது கூடுமோ –
நகர ஸ்திரீகளைக் கண்டால் கொச்சைகளாய் இருக்கிற எங்களை நினைத்து
நீங்கள் வரக் கூடுமோ -என்று அவர்கள் சோகிக்க
அவர்கள் அளவில் கிருஷ்ணனுக்கு கிருபை பிறக்கக் கூடும் என்று இவர்கள் மருட்டிலே முடிய
அகப்படாதே அவர்கள் ஆசை அறும்படியாக-
நாம் தாம் ராஜ புத்ரர்கள் அன்றோ
நமக்கு அவர்களோடு பரிய உறவாய்க் கிடந்ததோ -போரீர் என்று கொண்டு –
வன் கஞ்சன் மாளப் புரட்டி –
போயன்றோ மதுரையில் புக்கு அவன் செய்த வஞ்சனைகளை காண்கையாலே அவற்றையும் முடித்து
அவன் தான் இருந்த உயரத்திலே பாய்ந்து
அவனை தலை கீழாக புரட்டித் தள்ளி
அவன் மேலே குதித்த அளவிலும் -வன் கஞ்சன் -என்னும்படி -பிராணன் போகாமையாலே
மீண்டும் புரட்டிக் குஞ்சி புடித்து மாளும்படி அடித்துப் பொகட்டான் -என்கிறார்-
அதுக்கு பின்போ பூம் பட்டு அபகரித்தது
விரோதி போனால் அன்றோ
அனுபவம் ஆகையால் இப்பொழுது இவர் கண்டு அனுபவிக்கிறார்
எங்கள் -அவர்களில் தாமும் ஒருவராக பெரியாழ்வார் அனுபவிக்கிறார்
யந் நாள் எங்கள் பூம் பட்டுக் கொண்ட அரட்டன் வந்து அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான்-
நம்பி மூத்த பிரான் இல்லாத போதுகளிலே -இந்த அடிக் கழிவுக்கே ஒண்ணாது -என்று
நியமிக்கைகாக தாமும் (பெரியாழ்வாரும் ) அங்கே சென்று
அவர்கள் எங்களது -என்ன –
இவன் -உங்களது அன்று -என்ன
அவர்கள் எங்களது -என்ற வார்த்தையை அனுகரித்து தாமும் எங்களது என்று வாங்கி
அவர்கள் கையிலே கொடுத்து அடிக் கழிவு பரிஹரிக்கலாம் இறே-
ஆனால் இவர் அவர்கள் திரளில் சென்றால் அவர்கள் குத்சியார்களோ
நம்பி மூத்த பிரானைப் பொறுப்பார்கள் ஆகிலும் இவரைப் பொறுப்பார்களோ என்னில்
ஸ்ரீ வேத வியாச பகவானைக் கண்டு நீரிலே குதித்த பெண்கள் ஸ்ரீ ஸூக ப்ரஹ்ம ரிஷியைக் கண்ட பின்
கரையிலே ஏறித் தங்களைப் பேணாமல் எதிரா நின்றார்கள் இறே
அந்த ருஷியும் இவரும் ஸ்ரீ கிருஷ்ண கிரீடை இறே கொண்டாடுவது
அவ்வளவல்ல இறே இவருடைய அவகாஹனம்
சேற்றுக்கும் புழுதிக்கும் பூர்வ பாவியில் வாங் நியதியும் கூட அறியாதவர் இறே இவர் –
(சொட்டு சொட்டு எனது துளிக்க துளிக்க -இவர் அன்றோ அனுபவித்தார்
நீர் ஆகாரம் -அவதார மெய்ப்பாடு -திருமேனி கழிவு பட்டு புழுதி பார்த்தோமே
ப்ரஹ்ம ஞானி -வாக்கு நியமம் பார்க்காமல் அருளிச் செய்தார் அன்றோ )
அன்றிக்கே
எங்கள் பூப் பட்டு -என்று
தாமும் அவர்களில் ஒருவராய் நின்று
அவன் கன்றாமை நோக்கி
அவனை உளனாகப் பரிய வேண்டி
அவன் க்ரீடையிலே ஒருப்பட்டு -எங்கள் பூம் பட்டு -என்கிறார் ஆகவுமாம்-
அவனோடு எல்லா முறைமையும் யுண்டு இறே இவருக்கு –
சென்றால் குடையாம் -முதல் திருவந்தாதி -52
யதா யதா ஹி கௌசல்யா -அயோத்யா -12-68-
தாசஸ் சகா ஆசனம் வாஹனம் த்ரயீ மய -ஸ்தோத்ர ரத்னம் -61-
நின்ற நின்ற நிலைகளிலே பரிகை இறே யுள்ளது
அரட்டு -தீம்பாதல் -பலமாதல் –
அந் நாள் அவனை மாளப் புரட்டி –
இந் நாள் எங்களை பூம் பட்டு கொண்ட அரட்டன்-என்று
அவர்கள் -எங்கள் -என்ற பாசுரமும்
தம் பேறாகையாலே அனுகரிக்கிறார் –
யுகே யுகே சம்பவாமி -(கீதைப்) படி யாகவுமாம் –
——————————————————————————
மாதாவால் கட்டுண்டவன் அப் பூச்சி காட்டுகின்றான் -என்கிறார்-
சேப்பூண்ட சாடு சிதறித் திருடி நெய்க்
காப்பூண்டு நந்தன் மனைவி கடை தாம்பால்
சோப்பூண்டு துள்ளித் துடிக்கத் துடிக்க அன்று
ஆப்பூண்டான் அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் –2-1-5-
பதவுரை
சேபூண்ட–எருதுகள் கட்டுதற்கு உரிய
காடு–சகடம்
(அஸுராவேசத்தாலே தன்னைக் கொல்ல வர முலைக்காக அழுகிற பாவனையாலே தன் திருவடியைத் தூக்கி அச் சகடத்தை)
சிதறி–உருக்குலையும்படி உதைத்து
நெய்க்கு–நெய்க்கு ஆசைப்பட்டு
திருடி–களவு செய்து
ஆப்பூண்டு–(உடைமைக்கு உரியவர் கையில்) அகப்பட்டுக் கொண்டு
(அவர்கள் யசோதை கையிற் காட்டிக் கொடுக்க)
நந்தன் மனைவி–நந்தகோபன் தேவியான அவ் யசோதை
கடை தாம்பால்–(தயிரைக்) கடையும் தாம்பாலே (அடிக்க)
துள்ளித் துடிக்க –துடிக்க துடிக்க
சோப்பூண்டு–அள்ளி மிகவும் துடிக்கும் படி அடி யுண்டு
(அதனோடு நில்லாமல்)
அன்று–அக்காலத்தில்
ஆப்பூண்டாள்–(எங்கும் சலிக்க முடியாதபடி உரலில்) கட்டுண்டவனுமாகிய கண்ணன்
அப்பூச்சி காட்டுகின்றான்
சேப்பூண்ட சாடு சிதறித்-
கொடிச் சேக்களைப் பூட்டினாலும் சேக்களால் சலிப்பிக்க ஒண்ணாத சாட்டின் கீழே இறே
பிள்ளையை வளர்த்திப் போச்சுது –
முஹூர்த்த விசேஷம் தான் ப்ரதிகூலித்துக் கிட்டினால் முடியும் வேளை யாகையாலே
கட்டுக் குலைந்து சிந்தி பிந்தியாய் போயிற்று இறே
சலிப்பிக்க ஒண்ணாத மாத்ரமே அன்றிக்கே
நிலை மரத்திலே சேர்ந்தால் போலே இருக்கிற பெரிய சாடு
தளிர் புரையும் திருவடிகளை முலை வரவு தாழ்த்துச் சீறி நிளிர்த்த அளவிலே சிந்தி பிந்தியாய்ப் போயிற்று இறே-
திருடி நெய்க் காப்பூண்டு நந்தன் மனைவி கடை தாம்பால் சோப்பூண்டு துள்ளித் துடிக்கத் துடிக்க வன் றாப்பூண்டான்
ஊரில் நெய்க் களவு போகா நின்றது -என்று பலரும் வந்து யசோதைக்கு முறைப்பட்ட படியாலே
இப் பிள்ளையையோ நீங்கள் இது எல்லாம் சொல்லுகிறது –
நீங்கள் கண்டி கோளாகில் இவன் கழுத்திலே கட்டிக் கொண்டு வாருங்கோள்-என்று இவள் போர வெறுத்து
நீங்களும் எல்லாம் இவனை ஒக்கும் பிள்ளைகளைப் பெற்று வளர்க்கிறி கோள் இறே -என்று –
இவள் சொன்ன வார்த்தையைக் கேட்டுப் போய்
ஒற்றி இருந்து
இவன் நெய்க்கு ஆசைப்பட்டு களவிலே வந்து அமுது செய்கிற அளவிலே கண்டு பிடித்து
இவர்கள் இடைச்சிகள் ஆகையால் யசோதை சொல்லி விட்ட வார்த்தையின் கருத்து அறியாமல்
ராஜ புத்திரன் என்றும் மதியாமல் இவனைப் பாத்ரத்தோடே கட்டி
கள்ளனைக் கண்டோம் -என்று ஊரிலே வார்த்தை யாக்கி
இவனாலே புண்பட்ட பெண்கள் பண்ணின பாக்யத்தாலே
இவன் முகத்திலே விழிக்கப் பெற்றோம் -என்னும்படி
தெருவிலே கொண்டு வந்து
யசோதைக்கு காட்டின அளவிலும்
இவள் இவர்கள் முன்னே இவனை ஒரு கடைத் தாம்பை எடுத்து
நந்தன் மனைவி பிள்ளை வளர்த்த படி என்-என்று கோபியா
துள்ளித் துடிக்க துடிக்க அவர்கள் காண அடித்து
உரலோடு கட்டி
உங்கள் தமப்பனார் காணும் படி அவர் வரும் அளவும் பதையாமல் இரு -என்ன
இருந்தவன்
அங்கே இராமல்
இங்கே இருந்து அப் பூச்சி காட்டுகின்றான்
ஆப்பூண்கை-கட்டுண்கை
நெய் திருடினதுக்கு ஆப் பூண்டு -என்று பத அந்வயம்-
—————————————————————————
சர்வ ரஷகனானவன் வந்து அப் பூச்சி காட்டுகின்றான் -என்கிறார்
செப்பிள மென் முலைத் தேவகி நங்கைக்குச்
சொப்படத் தோன்றித் தொறுப்பாடியோம் வைத்த
நெய்யும் பாலும் தயிரும் விழுங்கிய
அப்பன் வந்து அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் –2-1-6-
பதவுரை
செப்பு–ஸ்வர்ண கலசங்கள் போன்ற
இள மெல் முலை–இளமையையும் மென்மையையுமுடைய முலைகளை யுடைய
தேவகி நங்கைக்கு–தேவகிப் பிராட்டிக்கு (மகனாக)
சொப்பட தோன்றி–நன்றாகப் பிறந்து
தொறுப்பாடியோம்–ஆய்ப்பாடியிலுள் ளவர்களாகிய நாங்கள்-(தொறு – பசு)
வைத்த–சேமித்து வைத்த
துப்பமும்–நெய்யையும்
பாலும்–பாலையும்
தயிரும்–தயிரையும்
விழுங்கிய–உட் கொண்ட
அப்பன்–ஸ்வாமி (உபகாரகன்)
வந்து அப் பூச்சி காட்டுகின்றான்-.
செப்பிள மென்முலைத் தேவகி நங்கைக்குச் சொப்படத் தோன்றித்-
இப்போது இவள் முலையை வர்ணிக்கிறது அவன் அமுது செய்த முலை யாகையாலே இறே
செப்பு என்று
உபமானம் ஆக்கி
முது முலைப் பாலில் வீர்யம் இல்லாமையால்
பிள்ளைக்கு தாரகாதிகள் ஆகவேணும் என்று இள முலை -என்கிறார்
அவன் முலை பிடித்து அமுது செய்த போது நைந்து குழைந்து இருக்கையாலே மென் முலை -என்கிறார்
தேவகி நங்கைக்கு –
ஒழுகு பேர் எழில் -பெருமாள் திருமொழி -7-7-என்று முலை கொடுக்கப் பெறாமல் இழவு படா நிற்கச் செய்தேயும்
எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே-7-5- என்று
அவள் பேறு தன் பேறாக அநுசந்திக்க வல்ல குண பூர்த்தியாலே-
தேவகி நங்கை -என்கிறார் ஆதல்
தேவகி நங்கைக்கு சொப்படத் தோன்றி -என்கையாலே
அவன் அவதரித்த போது
சர்வ ஸ்மாத் பரத்வம் தோன்ற நாலு திருத் தோள்களோடும் திவ்ய ஆயுதங்களோடும் அவதரிக்கக் கண்டு
நாயந்தே -நாங்கள் கம்சன் கோபுர நிழல் கீழே இருக்கிறோம் –
பூ ஸூரர் ரிஷிகள் தேவர்கள் -என்கிற சப்தமும் கூடப் பொறாதவன் உம்மை இப்படிக் காணில் விடான்
அறுவரிலும் எழுவராவாரிலும் காட்டில் எப்போதோ என்று கறுவிப் பார்த்துக் கொண்டு இருக்கிறான்
இந்த வடிவையும் உப சம்ஹரித்து
ப்ராப்தமான குழந்தை வடிவையும் என்னருகு கிடவாமல்
ஏதேனும் ஒரு பிரகாரங்களால் மறைத்து அருள வேணும் என்று
இவள் பிரார்த்தித்த படியாலே
இத்தையும் பிறந்த நாளையும் விகல்பித்து
மறைத்தத்தை தம் பேறாக்கி மங்களா சாசனத்தில் கூட்டிக் கொண்டு
நங்கை -என்கிறார் ஆதல் –
சொப்பட -நன்றாக
தன் படிகளில் ஒன்றும் நழுவாமல் -என்றபடி
ஆதி யம் சோதி யுருவை -திருவாய் -3-5-5-மாத்ரு வசன பரிபாலன அர்த்தமாக விறே
மறைத்துப் போந்ததும் –
தொறுப்பாடியோம் வைத்த –
தொறுப்பாடி –
தொறு -பசு
தொறுவர் -இடையரும் இடைச்சிகளும்
பாடி -அவர்களூர்
தொறுப்பாடியோம்-நாங்கள் -என்றபடி
நெய்யும் பாலும் தயிரும் விழுங்கிய அப்பன் வந்து அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் —
அப்பன் -உபகாரகன்
இப்படி விழுங்கி வாழ்வித்தவன் -என்று ஷேபம் ஆகவுமாம்
———————————————————————
கோளரியான மிடுக்குத் தோன்ற அப்பூச்சி காட்டுகின்றான் –
தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ
சித்த மனையாள் யசோதை இளம் சிங்கம்
கொத்தார் கரும் குழல் கோபால கோளரி
அத்தன் வந்து அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் -2-1-7-
பதவுரை
(இந்தப் பிள்ளையை யசோதை)
தத்து கொண்டாள் கொல் ஓ–தத்த-ஸ்வீ க்ருத – புத்ரனாக வளர்த்துக் கொண்டாளோ!
(அல்லது)
தானே பெற்றாள் கொலோ–ஸ்வயமாகவே மெய் நொந்து பெற்றெடுத்தாளோ!
சித்தம் அனையாள்–(கண்ணனுடைய) மனக் கருத்தை ஒத்து நடப்பவளாகிய
அசோதை–யசோதையினுடைய
இளஞ்சிங்கம்–சிங்கக்குட்டி போன்றவனும்
நந்தகோபன் குமாரன் யசோதை இளம் சிங்கம் -திருப்பாவை
கொத்து ஆர் கருங்குழல்–பூங்கொத்துக்களை யணிந்த கரிய கூந்தலை யுடையவனும்
கோபாலர் கோன் அரி–இடையர்கட்கு (அடங்காத) மிடுக்கைக் கொண்ட சிங்கம் போன்றவனுமாகிய
மீண்டும் சிங்கம் இங்கு
அத்தன்–ஸ்வாமியான இவன்
வந்து அப்பூச்சி காட்டுகின்றான்-.
தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ
அசோதை இளம் சிங்கம் என்னா-
இவள் தத்த ஸ்வீ காரம் செய்யக் கண்டிலோம் –
இவள் பெறுகிற போது இவளைப் பார்த்து பேணிக் கொண்டு இருந்த நாம் எல்லாம் இவள் பெறக் கண்டிலோம் –
அயர்த்து உறங்கி விட்டோம் –
இவள் தான் -நான் பெற்றேன் -என்று சொல்லக் கேட்டோம் இத்தனை இறே-
தத்த ஸ்வீ காரம் முன்னாகவும் ஔரசம் பின்னாகவும் இவர்கள் சொன்ன அடைவை
வேதப் பயன் கொள்ள வல்ல -2-2-8-இவர் அங்கீ கரிக்கையாலும்
ஔரசம் முன்னான அடைவே தர்ம சாஸ்த்ராதி பிரவர்த்தகர் அங்கீ கரிக்கையாலும்
இரண்டும் உத்தேச்யமாக வேண்டி வரிலும்
அது இதிலே சேருமத்தனை போக்கி இது அதிலே சேர்க்கை போர அரிது இறே –
(சாதாரண சாஸ்ரஞ்ஞர் பெற்றதை-ஔரசம்- முன்னதாகவும் ஸ்வீ காரம் பின்னாகவும் சொல்லுவார்கள்
இது சாமான்ய சாஸ்திரம்
இங்கு விசேஷ சாஸ்திரம் -தத்து முன்னாக -)
அரிதான படி என் என்னில் –
அவர்கள் இத்தை முஹூர்த்த விசேஷ தோஷத்தால் அந்ய பரம் ஆக்குகையாலும்
இதில் அத் தோஷங்கள் ஒன்றும் இல்லாமையாலும்
பித்ராதிகளால் வந்த தோஷம் ஒழிய கர்பாதானத்தில் கேவல மோஹ ஜாதத்வ பரிஹாரம் ஔரசனுக்கும் வேண்டுகையாலும்
சங்கர ஜாதத்வாதிகள் தரிக்க வேண்டுகையாலும்
உக்த லஷணத்திலே இவை பரிஹரியாத போது இந்த மாதா பிதாக்களுக்கும் இந்த வாசனையாலே
அநாசார துராசாரங்கள் மேலும் பிரவர்த்தமாகாமல் அனுதபித்து பிராயச்சித்தம் பண்ண வேண்டுகையாலும்
அல்லாத போது அனுபவ விநாஸ்யமாகையும் கூட அரிதாகையாலும்
இன்னமும் இவன் ஜாதனான அளவில் சாஸ்திர சித்தமான ஸ்நேஹம் ஒழிய அத்யந்த ப்ராவண்யம் நடக்கக் கூடும் இறே-
ஔரச புத்ரனான இவனுக்கும் யுண்டோ தோஷம் என்னில்
ஆத்மாவை -புத்ர நாமா அஸி-(மந்திர பிரசனம் )-என்கிற நியாயத்தால் உபாதான தோஷம் யுண்டாம் –
அத்தாலே ருசி வாசனைகள் யுண்டாம்
அந்த ருசி வாசனைகள் உபாதானம் தொடங்கி வருகையாலே
இவை உத்தர பாக சம்ஸ்கார விசேஷங்களாலும்
சத் சஹ வாச விசேஷங்களாலும்
நீக்கும் போதும் அரிதாய் இறே இருப்பது
ஆனால் அந்த உபாதான தோஷம் இங்குக் கூடாதோ என்னில் –
உபாதானம் கூடும்
தத் கதமான தோஷம் ஜாத கர்ம சங்கல்பம் வேறிடுகையாலே கூடாது –
ஆனாலும் ஸ்வீ கரிக்கிறவனுடைய தோஷங்களும் கூடாதோ புத்ரனுக்கு என்னில் -கூடும்
அது கூடினாலும் முன்பு சொன்ன சம்ஸ்கார சஹ வாசங்களாலே நீக்கி
மங்களா சாசனத்தில் -வாழாள்-என்று இவர் மூட்டும் போது அருமைப் பட்டு இராது
ஆகையால் ஒன்றுக்கு ஓன்று அத்தனை வாசி யுண்டு –
இந்த வாசிகள் தான் என்-
புத்ரான் பந்தூன் சகீன் குரோன் -என்றும்
பிதரம் மாதரம் தாரான் -என்றும்
நீக்கும் காலத்து இந்த தார தம்யம் தான் ஜீவிக்கை யாகாது இறே
புத்திரன் முன்னாக சொல்ல வேண்டிற்று -புத்திரன் யுண்டாய் பிதா யுண்டாக வேண்டுகையாலே –
ஆனால் பிதரம் மாதரம் என்னும் போதும் -இன்னானுடைய பிதா மாதா -என்ன வேணும் இறே
(புத்ரன் இல்லாத ஒருவன் இருக்கலாம் -பிதா இல்லாத புத்ரன் இருக்க முடியாதே
பிள்ளை இருந்தால் தான் அப்பா பட்டம் கிடைக்கும் )
இவற்றினுடைய அநாதாரம் தோன்றும்படி இறே -பிதரம் மாதரம் -என்று அருளிச் செய்ததும் –
ஆகை இறே ஔரசத்துக்கு முன்னே தத் கத ஸ்வீ காரத்தை அங்கீ கரித்ததும் –
இவை தான் எல்லாம் என்
தான் பெற்றாள் என்னுமது அறியாதவளும்
பெற்றாளாக பாவித்து அத்யந்த சிநேக பஹூ மானங்கள் பண்ணா நின்றால்
ஸ்வீ கரித்தவர்களுக்கும் பெற்றவர்களுக்கும் அஞானத்த்தாலே வருகிற
சிநேக தாரதம்ய பஹூ மானம் சொல்ல வேணுமோ-
சித்தம் இத்யாதி –
பிள்ளை யுடைய நினைவே தனக்கு நினைவாய்
அஞ்ச யுரப்பாதே ஆணாட விட்டு இருக்கையாலே -அசோதை இளம் சிங்கம் என்கிறது
தத்துக் கொள்ளுதல் -தானே பெறுதல் -செய்தாள் ஆகில் –
இப்படி சிம்ஹக் கன்று போலே வேண்டிற்று செய்ய விடுமோ –
கொத்தார் கரும் குழல் –
திருவாய்ப்பாடியில் பெண்கள் பலரும் ஒரொரு கொத்தாக சூட்டுகையாலே
கரும் குழல் -பூம் கொத்து மாறாமல் செல்லும் இறே –
கோபால கோளரி-
தாய்க்கு அடங்காதானோ ஊருக்கு அடங்கப் புகுகிறான்-
கோபாலர்க்கு மிடுக்கு யுடைத்தான சிம்ஹ புங்கவம் போலே அடங்காமல் திரிகிறவன் –
அத்தன் -ஸ்வாமி –
——————————————————————————-
(ராமன் -கமல பத்ராஜன் -கண் அழகு உடையவன் -கண்ணன் என்னலாமே )
ஸூ லபனானவன் அப்பூச்சி காட்டுகின்றான் -என்கிறார் –
கொங்கை வன் கூனி சொற்கொண்டு குவலயத்
துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கருளி வன் கானிடை
அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் –2-1-8-
பதவுரை
கொங்கை–(முதுகில்) முலை யெழும்பினாற் போன்ற
வல்–பலிஷ்டமான
கூனி–கூனை யுடையளான மந்தரையினுடைய
சொல்–சொல்லை
கொண்டு–அங்கீகரித்து
எங்கும்–எல்லாவிடங்களிலுமுள்ள
குவலயம் துங்கம்–இப் பூமியில் (இருப்பவற்றுள்) சிறந்தனவான
கரியும்–யானைகளையும்
பரியும்–(அங்ஙனொத்த) குதிரைகளையும்
இராச்சியமும்–ராஜ்யத்தையும்
பரதற்கு–பரதாழ்வானுக்கு
அருளி–கொடுத்துவிடல்
வல் கான் அடை–கொடிய காட்டை அடைந்த
அம் கண்ணன்–அழகிய கண்ணையுடையனான இவன்
அப்பூச்சி காட்டுகின்றான்
கொங்கை வன் கூனி சொற்கொண்டு –
குப்ஜைக்கு கொங்கை போலே இறே முதுகிலே வலிய கூன் இருப்பது
இவளுடைய யுடம்பில் வக்கிரம் போலே காணும் இவளுடைய அறிவும்
இவளுடைய வசனத்தைக் கொண்டு -மாத்ரு பித்ரு வசன பரிபாலனம் செய்யப் போனார் என்கை ஒழிந்து
குப்ஜா வசனம் செய்யவோ போய்த்து என்னில்
கூன் தொழுததை கடிய சொல்லும் யுண்டாயிற்று
அந்தக் கடிய சொல்லைக் கேட்டு இறே சக்கரவர்த்தி அனுமதி செய்தது
எல்லாத்துக்கும் ஹேது இவள் ஆகையாலே இவள் சொல் கொண்டு போனார் என்னலாம் இறே -பீஜாங்குர நியாயத்தாலே-
குவலயத் துங்கக் கரியும் பரியும் இராச்சியமும் எங்கும் பரதற்கருளி –
பூமியில் யுண்டான ஆனைகளில் விஞ்சின சத்ருஞ்ஜயன் முதலான ஆனைகளும்
உச்சைஸ்ரவஸூ போலே இருக்கிற குதிரைகளும்
அகண்டகமான ராஜ்யமும்
எங்கும் -தாம் எழுந்து அருளுகிற காடு தானும் –
தாம் எழுந்து அருளுகிற காடும் பரதற்கு கொடுத்தாரோ என்னில்
வாலி ராம சரத்தை பிடித்து வைத்து -என்னைக் கொன்றத்தால் உனக்கு என்ன லாபம் யுண்டு
என்று நாநா வான விகல்ப விசேஷங்களைச் சொல்ல
அவன் சொன்னதுக்கு எல்லாம் போரும்படி
பரத ராஜ்யத்தில் நீ பிரதாவினுடைய ஸ்திரீயை ஸ்வீ கரிக்கக் கடவையோ என்ன
அந்த தோஷம் அவனுக்கும் இல்லையோ என்ன
அப்படிச் சொல்லுவுதியாகில் கண்டவிடம் எல்லாம் கழுமலை யாக்குவேன் என்றார் இறே
ஆகையால் காடும் பரத ராஜ்ஜியம் -என்னுதல்
(தனி ஸ்லோக வியாக்யானம் -ஆறு கேள்விகள் ஆறு பதில்கள் விவரணம் உண்டே )
அன்றிக்கே
தர்மத்தாலும் சௌர்யத்தாலும் நீ எறிந்து கொள்ள வல்லது எல்லாம் உனக்குத் தந்தோம் என்னுதல்
பெருமாள் நாம் தந்தோம் என்னாரே -ஐயர் தந்தார் -என்னும் இத்தனை ஒழியவாய் இருக்க
பெருமாள் தந்தார் என்பான் என் என்னில்
சக்கரவர்த்தி கொடுத்தாலும் பெருமாள் அனுமதி வேணும் இறே
அப்ரதிஷித்தம் அனுமதம் பவதி இறே –
வன் கானிடை அங்கண்ணன் அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் –
துன்னு வெய்யில் வறுத்த வெம் பரலாய்
புகும் வழி தெரியும் இத்தனை ஒழிய புறப்படும் வழி தெரியாது இறே
அப்படி இருக்கிற காட்டிலே திருவடிகள் நோவ எழுந்து அருளுகையாலே
அழகிய ஸூலபன் என்கிறார் –
—————————————————————————————–
பெரு மிடுக்கன் அப்பூச்சி காட்டுகின்றான் -என்கிறார் –
பதக முதலை வாய்ப் பட்ட கயிறு
கதறிக் கை கூப்பி என் கண்ணா கண்ணா வென்ன
உதவப் புள்ளூர்ந்து அங்கு உறு துயர் தீர்த்த
அதகன் வந்து அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் –2-1-9-
பதவுரை
பதகம்–பாதிக்குந் தன்மையை யுடைய
முதலை–முதலையின்
வாய்–வாயிலே
பட்ட–அகப்பட்ட
களிறு–ஸ்ரீகஜேந்த்ராழ்வான்
கதறி–(தன் வருத்தந்தோன்றக்) கூப்பிட்டு
கை கூப்பி–கையைக் குவித்துக் கொண்டு
என் கண்ணா கண்ணா என்ன–என்னுடைய கண்ணனே! என்று பலகாலழைக்க
(முக் கரண வியாபாரங்கள் )
அங்கு–அப்போதே
உதவ–(அந்த யானைக்கு) உதவும்படி
புள் ஊர்ந்து–பெரிய திருவடியை வாஹநமாகக் கொண்டு சென்று
உறு துயர்–(அந்த யானையின்) மிக்க வருத்தத்தை
தீர்த்த–போக்கின
அதகன்–(ஆஸ்ரித ரக்ஷணத்தில்) மிடுக்கை யுடையவன்
வந்து – அப் பூச்சி காட்டுகின்றான்-.
பதக முதலை வாய்ப் பட்ட கயிறு
பதக முதலையின் வாயிலே அகப்பட்ட பகவத் பக்தனான ஸ்ரீ கஜேந்த்திரன் –
கஜ ஆகர்ஷே தே தீர க்ரஹா ஆகர்ஷே தே ஜல -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -69-46-என்று
நெடும் காலம் நீருக்கு இழுக்க -கரைக்கு இழுக்க
பகவத் பக்தனான கஜேந்த்ரனை விரோதித்தது பாதகமோ
இதுக்கு ஹேதுவானது பாதகமோ என்னும் விகல்பம் தோன்றினால்
சாப உபஹதனாய்க் செய்ததுமாய்-சாப விமோசன சாபேஷனுமாய்ச் செய்ததும் ஆகையால்
இதுக்கு ஹேதுவான பூர்வ பாவமே பாதகமாம் இத்தனை இறே
ஆனாலும் பதக முதலை -என்று முதலையின் மேலே பாதகத்தை வைத்தாரே –
கதறிக் கை கூப்பி என் கண்ணா கண்ணா வென்ன -உதவப் புள்ளூர்ந்து
நாராயணா ஒ மணி வண்ணா -என்றால் போலே இறே கண்ணா கண்ணா என்றதும்
கதறி என்பான் என் என்னில் –
அதிகாரத்துக்கு தகுதி அல்லாததைச் சொல்லுகையாலே
தகுதி தான் என் என்னில்
நெஞ்சுக்கு விஷயமான தேவாத அந்தர்யாமி -என்னுதல் –
ஸ்வ அந்தர்யாமி -என்னுதல்
இந்த ஆபத்து
மழுங்காத ஞானமே படையாக நீங்கும் -என்று நெடும் காலம் சென்ற அளவிலும்
நீங்காமை யாலே
திக் பலம் ஷத்ரிய பலம் என்ற விசவா மித்ரனைப் போலே
பக்தி மார்க்கத்தை திக்கரித்து
பிரபக்தி மார்க்கத்திலே போந்து
சக்ரவர்த்தி சப்த வேதியாய் எய்தாப் போலே இறே
கண்ணா கண்ணா என்ற சொல் முடிவதற்கு முன்னே அவன் கண்ணிலே தோன்றும்படி
(ஸப்த ஸஹன் அன்றோ )
அந்தபுர கை நெரிக்க சத்ர சாமரங்கள் பிற்பட
வெறும் தரையிலே நாலிரண்டு அடி யிட்டு
பெரிய திருவடியை பண் செய்யப் பெறாமல் ஊர்ந்து சென்று நின்று
பூர்வ பக்தி தன்னையே சாத்தியம் ஆக்கினான் இறே-
அங்கு உறு துயர் தீர்த்த
அங்கு என்றது -முதலை கவ்வின இடத்திலே
உறு துயர் -ஆனையின் துயர் ஆனைக்கும் தனக்கும் தக்கது உண்டு இறே
அன்றிக்கே
அங்கு -என்றது துதிக்கை முழுத்தும்படியான ஆபத்தாய்
களகள சப்தம் தோன்ற கிலேசிக்கிற அளவிலும்
நின்று ஆழி தொட்டான் -என்னும்படி நின்றது
இன்னமும் பூர்வ உபாசன வாசனையாலே புரியுமோ வென்று இறே
அந்த பிரபத்தி ஸ்வீ காரத்திலும் உபாய புத்தி கழியாத போது இத்தனை அருமை யுண்டு போலே காணும்
இத்தனை காலமும் இவனுக்கு நடந்த சக்தி இன்று குலைய வேண்டிற்று இறே
இந்த ஸ்வீ கார பிரபத்தி தனக்கும் இந்த பிரபத்தி தனக்கும் பல பிரதானம் செய்ய வேண்டிற்று ஆகில்
சங்கல்ப சஹஸ்ர ஏக தேசமே போரும் இறே
இத்தைப் பற்ற இறே பட்டர் -பகவதஸ் த்வராய நம -என்று அருளிச் செய்ததும் –
அங்கன் இன்றிக்கே இப்படி த்வரித்திலன் ஆகில் -மறையும் மறையும் -என்றார் இறே சிற்றாட் கொண்டார் –
உறு துயர் தீர்த்த அதகன் வந்து அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் —
நல் விரகு அறிந்து உறு துயர் தீர்த்த பெரு மிடுக்கன்
அன்றியே
க்ருபா பிரேரகனாய்
சங்கல்ப நிபந்தனமான ஸ்வா தந்த்ர்யம் பின் செல்லும் படியான
சக்திமான் என்னவுமாம்
வந்து அப் பூச்சி காட்டுகின்றான் -அதகன் -மிடுக்கன் –
——————————————————————————-
நிகமத்தில் இத் திரு மொழி கற்றாற்கு பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –
வல்லாள் இலங்கை மலங்கச் சரம் துரந்த
வில்லாளனை விட்டு சித்தன் விரித்த
சொல்லார்ந்த அப்பூச்சி பாடலிவை பத்தும்
வல்லார் பொய் வைகுந்தம் மன்னி இருப்பரே –2-1-10-
பதவுரை
வல்லாள்–பலசாலிகளான வீரர்களை யுடைய
இலங்கை–லங்கையானது
மலங்க–பாழாம்படி
சரம் துரந்த–அம்பைச் செலுத்திய
வில் ஆளனை–வில்லையேந்தி ஸ்ரீராமனாக (முன்பு) திருவவதரித்த கண்ணனைப் பற்றி
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
விரித்த–பரக்க கூறிய
சொல் ஆர்ந்த–சொல் நிரம்பிய
அப் பூச்சி பாடல் இவை பத்தும்–அப் பூச்சி காட்டுதலைப் பற்றிய இப் பத்துப் பாசுரங்களையும்
வல்லார்–கற்க வல்லவர்
போய்–(அர்ச்சிராதிமார்க்கமாகப்) போய்
வைகுந்தம்–ஸ்ரீவைகுண்டத்திலே
மன்னி இருப்பர்–நித்ய வாஸம் பண்ணப் பெறுவர்.
1-பாரதம் கை செய்த அத்தூதன் -என்கிற இடத்தில் என் வருகிறதோ என்ற பயமும்
2-நூற்றுவர் தம் பட்டழியத் திண் தேர் மேல் முன்னின்ற அலவலையான பயமும்
3-காயு நீர் கடம்பேறித் தீய பணத்தில் பாய்ந்த பயமும்
4-இருட்டில் பிறந்து போன விடத்தில் வந்த பயங்களும்
5-அனுகூல பிரதிகூலரால் வந்த பயங்களும்
6-விழுங்கின துப்பமும் பாலும் தயிரும் தன் பருவத்துக்கு சாத்மியாதோ என்கிற பயமும்
7-அசோதை இளம் சிங்கம் -கோபால கோளரி-என்னும்படி கர்வோத்தரமான வியாபாரங்களால் வந்த பயமும் –
8-அவதாரத்துக்கும் ஹேதுவாய் அவன் கானிடை நடந்த பயமும் –
9-ஆனைக்கு அருள் செய்து உதவ புள்ளூர்ந்த பயமும்
10-வல்லாள் இலங்கை மலங்கச் சரம் துரந்த காலத்து ராஷசரால் வந்த பயமும்
எல்லாம் நிவ்ருத்தமாகைக்காக
திருக் கையிலே ஆழ்வார்களைக் காட்டி அருள
பூதனா சகட யமளார்ஜுனர்களால் வந்த விரோதத்துக்கு பயப்பட்ட
திருவாய்பாடியிலே பெண்களுக்கும்
இவர் தமக்கும் அவை பய வர்த்தகங்களாய் இருக்கை யாலே இறே
அப்பூச்சி -என்றது
ஆழ்வார்களைக் காட்டினவாறே பெண்கள் அப்பூச்சி என்று அருளக் கூடும் –
அவர்களுடைய ஸ்நேஹமும் பய பாவனை ஆகையாலே –
நெய்த்தலை நேமி -1-2-12-என்றது முதலாக
பல இடங்களிலும் கண்டார்களே யாகிலும்
மறக்கவும்
இப்போது கண்டோமே -என்று நினைக்கவும் கூடுமாகையாலே –
இவர் வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு -என்று தொடங்கி பல இடங்களிலும் ஆழ்வார்களோடு
பழகிப் போந்தவர் அப் பூச்சி என்பான் என் என்னில்
இவருக்கு ஸ்வரூபம் இது தானே யாய்ச் சொல்லுகையாலே என்னுதல்-
பெண்கள் பாசுரத்தை வியாஜ்யம் ஆக்கினாலும் இது தானே இறே இவருக்கு ஸ்வரூபம்
ஆகிலும் அப் பூச்சி என்கிற பாசுரம் இல்லை யாகிலும்
என் செய்ய என் வயிறு மறுக்கினாய்-(3-3)
அப் பூச்சி
என்கிற இவை தானே இறே இவர்க்கு யாத்ரை
இவர் அருளிச் செய்த இடங்களிலும் திரு உள்ளத்தில் கிடப்பது இது தானே இறே –
வல்லாள் இலங்கை மலங்கச் சரம் துரந்த-
வலிமையால் பறித்துக் கொண்டதாகையாலே -வல்லாள் இலங்கை -என்கிறார் –
மலங்க –
செருப்பும் தேவாரமும் ஒக்கக் கட்டும் படியாக –
இலங்கையில் தேவாரமும் யுண்டோ என்னில்
அக்னி ஹோத்ராச்ச வேதாச்ச ராஷசானாம் க்ருஹே க்ருஹே -என்கிறபடியே
அவையும் யுண்டாதல்
(தேவாரம் -ராஷஸர் ஆராதிக்கும் தெய்வங்கள் -ராவணன் ப்ராஹ்மண ராக்ஷஸன் தானே )
அன்றியிலே
அவர்கள் விரும்பினவை அவர்களுக்கு தேவாரம் இறே
சரம் திறந்த வில்லாளன் -ராம சரம் பிரசித்தம் இறே
மாறு நிரைத் திரைக்கும் சரங்கள் -திருவாய்மொழி -7-4-7- இறே
ஒருவர் இருவர் ஓர் மூவர் -திருவாய் மொழி -8-6-3-என்னக் கடவது இறே-
தொடங்கும் போதே திருப் பல்லாண்டிலும் ராம வ்ருத்தாந்தம் உண்டே
சொல்லார்ந்த அப் பூச்சி பாடல் –
சுருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள் எல்லா வற்றுக்கும் சொல் நிரப்பும் யுண்டாவதும்
இப் அப் பூச்சி பாடலாலே இறே
இது தான் காட்டுகிறவன் நிர் பயனாய் –
கண்டவன் பயப்படுமது இறே
அப் பூச்சி
வல்லார் –
இத்தை சாபிப்ப்ரயமாக வல்லார் என்னுதல்
அன்றிக்கே
இவர் அபிமானத்திலே ஒதுங்கி
இச் சப்த மாதரத்தையே உத்தேச்யமாக
ஓதி
ஒதுவித்துப் போருமிதே
யாத்ரையாக வல்லார் -என்னுதல்
போய் வைகுந்தம் போய் மன்னி இருப்பரே –
இவ் வாழ்வார் அபிமானமே வழியாக போய்
த்ரிபாத் விபூதியிலே சென்று பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து
பல்லாண்டு பல்லாண்டு -என்று கால தத்வம் உள்ளதனையும் ஏத்துகை பலமாகப் பெறுவார் -என்கிறார் –
————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply