ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —1-2-சீதக்கடல் உள்ளமுதன்ன தேவகி–

பிரவேசம்
கீழ்த் திரு மொழியிலே
திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் -என்று தொடங்கி-
திருக் கோட்டியூர் மன்னு நாரணன் நம்பி பிறந்தமை -என்று
திரு வவதார வியாபாரத்தை எல்லாம் அனுபவ பூர்வகமாக அருளிச் செய்தார் –

இனிமேல்
திருவடிகளில் நின்றும்
திரு முடி அளவாக அனுபவித்து
அனுபவித்த பிரகாரத்தை யசோதை பிராட்டி பாசுரத்தாலே விருப்பம் தோற்ற அருளிச் செய்கிறார் –

(விருப்பம் தோற்ற-பவள வாயீர் வந்து காணீரே –1-2-1
ஒண் நுதலீர் வந்து காணீரே –1-2-2-
காரிகையீர் வந்து காணீரே –1-2-3-
இவற்றுக்கு உள் கருத்து ஸ்வாபதேச அர்த்தங்கள் உண்டே )

————————————————————————————-

சீதக்கடல் உள்ளமுதன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்து உண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே –1-2-1-

பத உரை
சீதக் கடலுள்  அமுதன்ன = குளிர்ந்த கடலில் உள்ள அமுதாக பிறந்த பிராட்டியோடு ஒத்த
தேவகி = தேவகி பிராட்டி
கோதை =பூ மாலையால் அலங்கரிக்கப்பட்ட
குழலாள் = கேச பாசத்தை உடைய
அசோதைக்கு =யசோதை பிராட்டிக்கு
போத்தந்த = போக விட்ட
பேதை குழவி =பேதைமை உடைய சிசுவானது
பிடித்து = திருக் கைகளால் பிடித்து
சுவைத்து = ஆச்வாதித்து
உண்ணும் = திருப் பவளத்தில் வைத்து புஜியா நின்றுள்ள
பாதக் கமலங்கள் = திரு வடித்தாமரைகளை
வந்து காணீர் = வந்து காணும் கோள்
பவள வாயீர் = பவளம் போல் சிவந்த அதரத்தை உடைய பெண்டிர்காள்
வந்து காணீர் -கடுக வந்து பாரும் கோள்
காணீரே என்றதை இரட்டித்து சொன்னதால் ஆதரத்தின் மிகுதி தோற்றுகிறது-

சீதக்கடல் உள்ளமுதன்ன தேவகி
அகாதம் ஆகையாலே குளிர்ச்சி மாறாது இருக்கும் சமுத்ரத்தில் –
கடலுள் அமுது -என்கையாலே புறவமுது தோன்றிற்று இறே-
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுது -பெரிய திருமொழி -6-1-2-
பர உபகார சிந்தை பண்ணுகையாலே இந்த தேவகியும் பர உபகாரமாக ஈஸ்வரனை
திருவாய்ப்பாடி முதலாக எல்லார்க்கும் உபகரித்தாள்-இறே

இந்த உபகாரம் கம்ச பீதி மூலம் ஆகையாலே –
உள் அமுது அன்ன தேவகி -என்கையாலே
வைதர்ம்யத்திலே ஏக தேச திருஷ்டாந்தமாகக் கடவது –
பிறப்பிக்கப் பிறந்த அம்ருத துல்யையான சாது ஜனங்களுக்கு அக்ரேசரையான தேவகியார்-
(வைதர்ம்யத்திலே-நேர் எதிர்மறை -புற அமுது உள் அமுது
அமுதம் கடைய தானே பிறந்தது -பிறப்பிக்க பிறந்த அம்ருத )

கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
புஷ்பாதிகளாலே அலங்க்ருதமான குழலை யுடைய யசோதைப் பிராட்டிக்குப் போக விட்ட
போத்து -என்றது -போக்கின -என்றபடி –
அந்த -என்றது -சுட்டு ஆகவுமாம் –
அன்றிக்கே
போத்தந்த -என்று ஒரு சொல்லாய் கிடக்கிறதாய்-அத்தாலும் போக விட்டு -என்றபடி

பேதைக் குழவி –
பேதை -பருவத்துக்குத் தக்க அறிவில்லாமை –
குழவி -பருவம் –

பிடித்துச் சுவைத்து உண்ணும் –
திருக் கையாலே திருவடிகளைப் பிடித்து –
தேனே மலரும் திருப்பாதம் -திருவாய்மொழி -1-5-5-என்று
தன் திருவடிகளிலே விழுந்தவர்கள் சொல்லக் கேட்கையாலே
இது பரீஷிக்க வேணும் -என்று திருப்பவளத்திலே வைத்தான் -என்னுதல்
அழும் குழவி -பெருமாள் திருமொழி-5-1- -போல்வார் விரும்புகையால் தானும்
தாரக போக்யங்களாக விரும்பினான்-என்னுதல் –
(அவன் பேதைக் குழவி -ஸ்வாமி
ஆழ்வாராதிகள் அழும் குழவி -தாஸர் )

அன்றிக்கே
அந்தர்கதமான வையம் ஏழுக்கும் சிறைச் சோறு ஆக்கினான் ஆதல் –
இவை புறப்படாமல் திரு விரலாலே கண் செறி இட்டான் ஆதல்
இவர் அவதாரத்தில் மெய்ப்பாடு எல்லாம் தோற்றி அனுபவிக்கிறார் இறே-

பாதக் கமலங்கள் காணீரே –
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிய -திருவாய் மொழி -4-6-8-வேண்டுகையாலே
இவர் காட்டக் காணும் வேணும் இறே
(இதுவே ஸ்வாப தேசம்
யசோதை -ஆச்சார்ய ஸ்தானம் –
நாயகனாய் நின்ற –நீ நேச நிலைக் கதவம் நீக்கு போல் )
வேதப் பயன் கொள்ள வல்லார் -பெரியாழ்வார் -2-8-10-இவர் இறே
திருவடித் தாமரைகளை வந்து காணுங்கோள்-என்கிறார்
அறிவுடையார் காட்டக் காணும் வேணும் இறே-

பவள வாயீர் வந்து காணீரே –
என்று பின்பும் அருளிச் செய்கையால்
ப்ரபத்தியின் மேல் ஏறின பக்தியையும்
பவ்யதையும் யுடையவர்கள் நின்ற நின்ற நிலைக்குள்ளே
யுள்ளே புகுந்து தர்சிக்க யோக்யர் -என்கிறார் –

(தந்த பந்தி வெளுப்பு -பிரபத்தி நேர்மை
பக்தி ராகம் -சிகப்பு -பவள வாயீர்
பக்தி உபாயம் -ஸ்ரீ கீதை -இதுக்கு பிரபத்தி அங்கம் -பிரபன்னர் படி இல்லை
பாதகமலம் தான் உபாயம் -பிரபத்தி -இவர்களுக்கும் பக்தி வேண்டும்
கைங்கர்ய ருசிக்கு -ஸாத்யமான பக்தி -மேல் உள்ள காலத்துக்கு -பிரபத்திக்கு மேல் ஏறின பக்தி இதுவே –
வந்து காணீரே -பவ்யதை -சொன்னபடி கேட்க வேண்டும்
அடுத்து அடுத்த நிலைக்கு சென்று அனுபவிக்க வேண்டுமே
பரபக்தி -பரஞானம் -பரம பக்தி அவஸ்தைகளைச் சொன்னவாறு -)

———————————————————————

திருவடிகளில்
அகவாயில்
அழகை அனுபவித்தாராய் நின்றார் கீழ் –
இப்பாட்டில் திருவடிகளில் திரு வுகிருடனே திரு விரல்களை அனுபவிக்கிறார் –

முத்தும் மணியும் வயிரமும் நன் பொன்னும்
தத்திப் பதித்துத் தலைப் பெய்தாற் போல் எங்கும்
பத்து விரலும் மணி வண்ணன் பாதங்கள்
ஒத்திட்டு இருந்தவா காணீரே ஒண் நுதலீர் வந்து காணீரே –1-2-2-

பத உரை
முத்தும் மணியும் =முத்துக்களையும் ரத்னங்களையும்
வயிரமும் = வயிரத்தையும்
நன் பொன்னும் =நல்ல பொன்னையும்
தத்திப் பதித்து = மாறி மாறி பதித்து
தலை பெய்தாற் போல் =சேர்த்தாப் போல்
எங்கும் = எங்கும்
மணி வண்ணன் = மணி போன்ற வர்ணத்தை உடைய கண்ணனுடைய
பாதங்கள் =திருவடிகளில் உள்ள
பத்து விரலும் =விரல்கள் பத்தும்
ஒத்திட்டு = தன்னிலே சேர்ந்து
இருந்த ஆ = இருந்த படியை
காணீர் = காணும் கோள்
ஒண் நுதலீர் =அழகிய நெற்றியை உடைய பெண்டிர்காள்
வந்து காணீர் = வந்து பாரும் கோள்
ஏ -அசை

திருவடிகளுக்கு செம் பஞ்சு இட்டாள் ஆகையாலே
திரு விரல்களுக்கும்
மாறி மாறி ஒன்பது விரல்களுக்கும் நவ ரத்ன வர்ணத்தையும்
மற்றை ஒரு விரலுக்கு ஸ்வர்ண வர்ணத்தையும் இட்டு அலங்கரித்து
அவள் அனுபவித்த பிரகாரம் இவர் திரு உள்ளத்திலே பிரகாசித்து
அனுபவிக்கிற இவர்க்கு தாத் காலிகமாய்த் தோற்றுகிறது –

முத்தும் மணியும் வயிரமும் நன் பொன்னும்-தத்திப் பதித்துத் தலைப் பெய்தாற் போல்
என்றது -நவ ரத்னத்துக்கும் உப லஷணம்
ரத்னத்து அளவு அன்றிக்கே தன் பிரேமத்தால் முத்தை முற்பட இட்டு மாணிக்கத்தை இடுகையாலே –
தத்திப் பதித்து -என்கிறது –

தத்தி-என்றது -தத்தவாய் -மாறப் பதித்து என்றபடி
வணங்கி -என்றது வணங்க என்றால் போலே
தலைப் பெய்தாற் போலே என்கையாலே
நீளமுடைத்தான பத்து நீல ரத்னத்தின் அக்ரத்திலே
நவ ரத்ன வர்ணத்தையும்
பொன்னின் வர்ணத்தையும் சேர்த்தால் போல் இருந்தது என்கை

எங்கும் பத்து விரலும் மணி வண்ணன் பாதங்கள் ஒத்திட்டு இருந்தவா காணீரே –
ஓர் ஆபரணத்திலே நவரத்னத்தையும் முத்தையும் அழுத்திச் சேர அனுபவிப்பாரைப் போலே அனுபவித்து
இவை உபமானம் போராமையாலே
மணி வண்ணன் பாதங்கள் பத்து விரலும் ஒத்திட்டு இருந்தவா காணீரே -என்கிறார்

ஒண் நுதலீர் வந்து காணீரே –
ஒளியை யுடைத்தான நெற்றியை யுடையவர்கள் -என்றபடி
நுதல் -நெற்றி
ஒண் நுதல் -என்கையாலே
பிரபத்தி பிரகாசகமான தாந்தியை யுடையவள் என்றபடி-

(சாந்தி -தாந்தி
சமம் தமம்
பிரபத்தி -வெளிச்சமாக காட்டும் -புலன் அடக்கம் –
அவனே நிர்வாஹகன் என்று உணர்ந்தவர்கள் )

————————————————————

திரு உகிரை அனுபவித்து
திருக் கணைக் காலை அனுபவிக்கிறார் –

பணைத் தோள் இளவாய்ச்சி பால் பாய்ந்த கொங்கை
அணைத்து ஆர வுண்டு கிடந்த விப் பிள்ளை
இணைக் காலில் வெள்ளித் தலை நின்றிலங்கும்
கணைக்கால் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே –1-2-3-

பத உரை –
பணை = மூங்கில் போன்ற
தோள் = தோள்களை உடையளாய்
இள ஆய்ச்சி = இளைமை பருவத்தை உடையளான ஆய்ச்சியின்
பால் பாய்ந்த கொங்கை =பால் சொரிகிற முலையை
அணைத்து = திருக் கைகளால் அணைத்து
ஆர = திரு வயிறு பூரணனாம் படி
உண்டு = அமுது செய்து
கிடந்த = களித்து கிடந்த
இப்பிள்ளை = இந்த கிருஷ்ணனுடைய
இணை = சேர்த்தி அழகையுடைய
காலில் = திருவடிகளில்
வெள்ளி தளை நின்று = வெள்ளி தண்டை நின்று
இலங்கும் = விளங்கா நிற்கிற
கணை கால் இருந்த ஆ = கணைக் கால் இருந்த படியை
காணீர் = பாரும் கோள்
காரிகையீர் வந்து காணீர் = அழகிய பெண்களே வந்து காணும் கோள்
ஏ-அசை-

பசுத்த மூங்கில் போலே இருக்கிற தோளை யுடையவளுமாய்
பருவத்தால் இளையவளுமான ஆய்ச்சி
இப்போது இவளை வர்ணிக்கிறது –
பர்த்ரு சம்ச்லேஷ யோக்யமான காலங்களிலும் பிள்ளையை அணைக்கையாலே
பிள்ளையை அணைத்து
பிள்ளை வாய் வைப்பதற்கு முன்னே நெறித்துப் பாய்ந்த முலையைக் கொடுக்க
வயிறார யுண்டு

நிர்ப் பரனாய் கிடந்தது கண்டு
இப் பிள்ளை -என்று –சமுதாய சோபையை அனுபவிக்கப் புக்கு –
ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகளிலே பிரகாசிக்கிற வெள்ளித் தளை
சித்த அபஹாரம் பண்ணச் செய்தேயும்
அத்தை ஒழித்து –
அது மிகையான திருக் கணைக் காலை அனுபவித்து
இது இருந்த பிரகாரத்தை அனுபவ யோக்யரான நீங்களும் வந்து காணுங்கோள்-என்கிறார்

காரிகையீர் -என்கிறது
காம தந்திர ந்யாயத்தாலே வடிவு அழகில் வாசி அறிந்து
ஸ்நேஹிகளுமாய்
அவயவாந்தரத்தில் போக மாட்டாத யுவதிகளை அழைத்து
காணி கோள் காணி கோள்-என்கிறார்

காரிகையீர் -என்கையாலே
பக்தி பாரவஸ்யம் யுடையாரை அனுபவிக்க அழைக்கிறார் –
(அழகு –அவன் -பர-வசப்பட்டு- தன் வசம் இல்லாமல் இருப்பதே அழகு )

—————————————————————

திருக் கணைக் காலை அனுபவித்த அனந்தரம்
திரு முழம் தாளின் அழகை அனுபவிக்கிறார் –

உழந்தாள் நறு நெய் யோர் தடா வுண்ண
இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின்
பழந்தாம்பால் ஓச்சப் பயத்தால் தவழ்ந்தான்
முழந்தாள் இருந்தவா காணீரே முகிழ் முலையீர் வந்து காணீரே –1-2-4-

பத உரை –
உழந்தாள் = ஸ்ரமப் பட்டு தடாவில் சேர்த்தவளுடைய
நறும் நெய் = மணம் மிக நெய்யை
ஒரோ தடா = ஒவ்வொரு தடாவாக
உண்ண = அமுது செய்த அளவில்
இழந்தாள் = பிள்ளையை இழந்தாளாக நினைத்த தாய்
எரிவினால் = வயிற்று எரிச்சலாலே
ஈர்த்து = கையை பிடித்து இழுத்து
எழில் மத்தின் =அழகிய மத்திலே
பழம் தாம்பால் = சுற்றி கடைந்து பழகின தாம்பாலே
ஒச்ச = அடிப்பதாக ஓங்க
பயத்தால் = அச்சத்தாலே
தவழ்ந்தான் = அத்தை தப்பி போவதாக தவழ்ந்தவனுடைய
முழம் தாள் = முழம் கால்கள்
இருந்த ஆ = இருந்த படியை
காணீர் = காணும் கோள்
முகிழ் முலையீர் = முகிழ்ந்த முலையை உடைய பெண்களே
வந்து காணீர் –

ஆயாசித்து கடைந்து ஒரோ தடாக்களிலே சேர்த்து வைத்த நெய்யை உண்ணக் கண்டு
உண்ட நெய் பிள்ளைக்கு சாத்மியாது என்று
பிள்ளையை இழந்தாளாக நினைத்து பயப்பட்ட உழற்றியாலே –

ஈர்த்து -என்றது இழுத்து என்றபடி

எழில் மத்து -என்று
எயிறு விளங்கா நின்ற மத்து
மத்திலே சுற்றிக் கடந்த பழந்தாம்பால் -என்றபடி –

நல்ல தாம்பு தேடும் பொது இவனை விட வேணுமே
அத்தாலே கண்டதோர் கயிற்றை எடுக்கை இறே உள்ளது
தாம்பாலே ஓங்கின அளவிலே
அடித்தாளாக நினைத்து
பயத்தாலே தவளப் புகுந்தவாறே
கோபத்தை மறந்து –
தவழ்ந்தான் -தவழ்ந்தான் -என்று

தவழ்ந்து கன்றின் பின்னே போன முழந்தாளை
வெறும் புறத்திலே அவள் அனுபவித்த பிரகாரத்தை தாமும்
அனுபவித்து
அனுபவ யோக்யரை காணீர் காணீர் -என்று காட்டுகிறார்

முகிழ் முலையீர் -பக்த்யங்குரம்-
(முலை -பக்தி -கண் -ஞானம் -இடை வைராக்யம் )

——————————————————————————-

திரு முழந்தாளை விட்டுத் திருத் துடையை அனுபவிக்கிறார்-

பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு
உறங்குவான் போலே கிடந்த விப்பிள்ளை
மறம் கொள் இரணியன் மார்வி முன் கீண்டான்
குறங்குகளை வந்து காணீரே குவிமுலையீர் வந்து காணீரே –1-2-5-

பத உரை –
முன் = முற்காலத்திலே
மறம் கொள் = த்வேஷம் கொண்ட
இரணியன் = ஹிரணியன் உடைய
மார்வை = மார்வை
கீண்டான் = பிளந்தவனாய்
பிறங்கிய =கொடுமையால் வந்த பிரகாசத்தை உடைய
பேய்ச்சி = பூதனையின்
முலை = முலையை
சுவைத்து = பசி அறும்படி ஆச்வாசித்து
உண்டிட்டு = புசித்து
உறங்குவான் போல் =ஒன்றும் அறியாதவன் படி உறங்குமவன் போல்
கிடந்த இப்பிள்ளை =கிடந்த இப்பிள்ளையின்
குறங்குகளை = திருத் தொடைகளை
வந்து காணீர் = வந்து காணுங்கோள்
குவி முலையீர் = குவியா நின்ற முலைகளை உடைய பெண் காள்
வந்து காணீர்
ஏ -அசை

பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து –
விபரீத பிரகாசகையான பேய்ச்சி யுடைய முலையைச் சுவைத்து

உண்டிட்டு-
ஆஸ்வாசித்து –
அமுது செய்திட்டு –

உறங்குவான் போலே கிடந்த விப்பிள்ளை-
கண் வளருவாரைப் போலே ஆடப் பார்த்துக் கிடந்த
பிரகாரத்தைக் கண்டு
இப்பிள்ளை -என்கிறாள் –

மறம் கொள் இரணியன் மார்வி முன் கீண்டான்-
பிள்ளையைச் சீறி வெகுண்ட மறத்தாலே இறே ஹிரண்யனைப் பிளந்தது

குறங்குகளை வந்து காணீரே குவிமுலையீர் வந்து காணீரே
இப்படி பிளந்தவன் உடைய திருத் துடைகளை
ரத்த ஸ்பர்சத்தோடே காணீர் என்றால் போலே இருக்கிறது
இப்போது இது சொல்லுகிறது விருத்தி நிரசன சாமர்த்தியத்தாலும்
தரமி ஐக்யத்தாலும் இறே
அன்றிக்கே
ஸ்வாபாவிகமாக தழுவுகிற போதை திருக் குறங்குகளை வந்து காணீர் -என்கிறார் -என்றுமாம் –
குவி முலையீர் -என்று பக்தி வர்த்தகர் ஆகிறவர்களை அழைக்கிறார் –

————————————————————————

திருத் துடையை அனுபவித்து
திருக் கடிப் பிரதேசத்தை அனுபவிக்கிறார் –

மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய வச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே முகிழ் நகையீர் வந்து காணீரே –1-2-6-

பதவுரை

மத்தம்–மதத்தையுடைய
களிறு–யானைகளை நிர்வஹிக்குமவரான
வசுதேவர் தம்முடை–ஸ்ரீவஸுதேவருடைய
சித்தம் பிரியாத–மனத்தை விட்டுப் பிரியாத
தேவகி தன்–தேவகியினுடைய
வயிற்றில்–வயிற்றிலே
அத்தத்தின் பத்தாம் நாள்–ஹஸ்த நக்ஷத்ரத்துக்குப் பத்தாவதான திரு நாளிலே
தோன்றிய–திருவவதரித்த
அச்சுதன்–கண்ண பிரானுடைய
முத்தம் இருந்த ஆ–சண்ணமிருந்த படியை
காணீர்!!
முகிழ் நகையீர்–புன் சிரிப்பை யுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில் –
மதித்த ஆனைகளின் உடைய ஸ்ரீ வஸூதேவர்
தம்முடைய ஹிருதயத்துக்கு தகுதியாக பரிமாறுகிற தேவகியுடைய திரு வயிற்றிலே –

அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய வச்சுதன்-
திருவவதரித்த நஷத்ரத்தை
மங்களா சாசன பரராகையாலே
மறைத்து அருளிச் செய்கிறார்

தோன்றிய என்கையாலே
தேவகீ பூர்வ சந்த்யாயாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-2-என்கிறபடியே
சேதனனைப் போலே கர்ம நிபந்தம் இன்றிக்கே
அனுக்ரஹத்தாலே ஆவிர்பவித்தான் -என்கிறது –

அச்சுதன் என்கிறது
ஆஸ்ரிதரை எல்லா தசையிலும் நழுவ விடாதவன் -என்றபடி –

முத்தம் இருந்தவா காணீரே முகிழ் நகையீர் வந்து காணீரே –
முத்தம் -சண்ணம்
முகிழ் நகை -மந்த ஸ்மிதம் –

————————————————————————–

திருக் கடிப் பிரதேசத்திலே நின்றும் போந்து
திரு மருங்கின் அழகை-அனுபவிக்கிறார் –

இருங்கை மத களிறு ஈர்க்கின்றவனைப்
பருங்கிப் பறித்துக் கொண்டு ஓடும் பரமன் தன்
நெருங்கு பவளமும் நேர் நாணும் முத்தும்
மருங்கும் இருந்தவாறு காணீரே வாள் நுதலீர் வந்து காணீரே –1-2-7-

பதவுரை

இரு கை மத களிறு–பெரிய துதிக்கையை யுடைய மத்த கஜமான குவலயாபீடத்தை
ஈர்க்கின்றவனை–தன் வசமாக நடத்தா நின்றுள்ள பாகனை (அம்பத்தன் -பாகனின் பெயர் )
பருங்கி–கொன்று
பறித்துக் கொண்டு–(யானையின் கொம்புகளை) முறித்துக் கொண்டு
ஓடு–(கம்ஸனிருக்குமிடத்தைத் தேடிக்கொண்டு) ஓடின
பரமன் தன்–பரம புருஷனான கண்ணனுடைய
நெருங்கு–செறியக் கோத்த
பவளமும்–பவள வடமும்
நேர் நாணும்–அழகிய அரை நாணும்
முத்தும்–முத்துவடமும் (இவற்றோடே சேர்ந்த)
மருங்கும் இருந்த ஆ–திருவரையும் இருந்தபடியை
காணீர்!
வாள் நுதலீர்–ஒளி பொருந்திய நெற்றியை யுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

இருங்கை மத களிறு ஈர்க்கின்றவனைப் பருங்கிப் பறித்துக் கொண்டாடும் பரமன் தன் –
பெரிதான கையையும்
மதத்தையும் யுடைத்தாய் இருக்கிற –
குவலயா பீடத்திலே கொலை கருதி வந்த பாகனைக் கொன்று
ஆனையையும் நிரஸித்து
கொம்பைப் பறித்துக் கொண்டு
கம்சன் இருந்த உயர்ந்த இடத்தில் ஓடிச் சென்று குதித்த பரமன் -என்னுதல் –

ஊரில் இடைப்பிள்ளைகள்-மதம் பட்டது -என்று இழுத்துக் கொண்டு விளையாடுகிற களிறுகளை
அவர்களை விழத் தள்ளிப் பறித்துக் கொண்டு ஓடுகிற பரமன் என்னுதல் –

இங்கு -பரமன் -என்றது
ஓட்டத்தில் மிக்கவன் என்ற படி –
பரமன் தன்னுடைய –

நெருங்கு பவளமும் நேர் நாணும் முத்தும் மருங்கும் இருந்தவாறு காணீரே வாள் நுதலீர் வந்து காணீரே –
செறியக் கோத்த பவளமும்
நேரிதான பொன் நாணும்
முத்து வடங்களையும்
யுடைத்தான திருவரைக்கு மேலான
திரு மருங்குலை -அனுபவிக்கிறார் –

வாள் நுதல் -பிரகாசத்தை யுடைய தாந்தி –

————————————————————-

திரு மருங்குலின் நின்றும் திரு வுந்தியிலே போருகிறார்-

வந்த முதலைக் குழாத்தை வலி செய்து
தந்தக் களிறு போல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய
உந்தி இருந்தவா காணீரே ஒளி இழையீர் வந்து காணீரே –1-2-8-

பதவுரை

வந்த–(தன்னோடு விளையாட) வந்த
மதலை குழாத்தை–சிறு பிள்ளைகளின் கூட்டத்தில்
வலி செய்து–தன் வல்லமையைக் காட்டிக் கொண்டு
தந்தம் களிறு போல்–கொம்பு முளைத்த யானைக் குட்டி போல்
தானே–தானே முக்கியனாய் நின்று
விளையாடும்–விளையாடுமவனாய்
நந்தன்–நந்தகோபர்க்கு
மதலைக்கு–(விதேயனான) பிள்ளையாகிய கண்ணனுடைய
நன்றும் அழகிய–மிகவுமழகிதான
உந்தி இருந்த ஆ–நாபி இருக்கிறபடியை
காணீர்!
ஒளி–ஒளியால் விஞ்சின
இழையீர்–ஆபரணங்களணிந்த பெண்காள்!
வந்து காணீர்!!

வந்த முதலைக் குழாத்தை வலி செய்து தந்தக் களிறு போல் தானே விளையாடும் –
தன்னோடு விளையாட வந்த
தன்னேராயிரம் -3-1-1- பிள்ளைகளான முதலைக் குழாத்தை
தானும் மதலையாய் இருக்கச் செய்தே
வலி செய்து-
கொம்பு முகிழ்த்த இள வானைக் கன்று போலே
தானே ப்ரதாநநாய் ஓடி விளையாடா நிர்பானாய் –

நந்தன் மதலைக்கு
ஸ்ரீ நந்தகோபரைக் கண்டால் விநயம் தோன்ற நிற்கையாலே
நந்தன் மதலை -என்கிறது –
(யசோதை இளம் சிங்கம் நந்தகோபன் குமரன் )

நன்றும் அழகிய உந்தி இருந்தவா காணீரே ஒளி இழையீர் வந்து காணீரே –
இம் மதலைக்கு மிகவும் அழகியதாய் இருக்கிற
திரு வுந்தி இருக்கிற பிரகாரத்தைக் காட்டுகிறார் –

ஒளி இழை-என்றது ஆத்ம பூஷணம்
(சூடகமே –பராவரர் சூடும் ஆத்ம பூஷணம் -தாஸ்யம் -பாரதந்தர்யம் -சம தமங்கள் )

————————————————————–

திரு வுதரத்திலே பெருகுகிறார்

அதிரும் கடல் நிற வண்ணனை யாச்சி
மதுர முலையூட்டி வஞ்சித்து வைத்துப்
பதரப் படாமே பழந்தாம்பால் ஆர்த்த
உதரம் இருந்தவா காணீரே ஒளி வளையீர் வந்து காணீரே -1-2-9-

பதவுரை

அதிரும்–கோஷிக்கின்ற
கடல்நிறம்–கடலினது நிறம்போன்ற
வண்ணனை–நிறத்தை யுடைய கண்ணனுக்கு
(அடங்காப் பிள்ளைக்கு த்ருஷ்டாந்தம் )
ஆய்ச்சி–யசோதை யானவள்
மதுரம் முலை ஊட்டி–இனிய முலைப் பாலை ஊட்டி,
வஞ்சித்து வைத்து–(மேல், தான் இவனைக் கட்டப் போகிறதை இவனறிய வொண்ணாதபடி) ஏமாத்தி
பதறப் படாமே–தன் எண்ணம் தப்பாதபடி
பழ தாம்பால்–பழகின கயிற்றாலே
ஆர்த்த–கட்டி வைத்த
உதரம் இருந்த ஆ–வயிறு இருந்தபடியை
காணீர்!
ஒளி வளையீர்–ஒளி மிக்க வளையை யுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

(உரவிடை ஆப்புண்டு
இடைக் குறையாக உதர இடை -என்றும் –
நெஞ்சுடன் -அவளுடன் சேர்த்துக் காட்டினாள்
வரத வலி த்ரயம் சலேன
தாமோதரனை அறிய ஆமோ தரம்
பிரேமத்தால்-தழும்பு மாறாமல் )

அதிரும் கடல் நிற வண்ணனை யாச்சி –
கடல் நிற வண்ணன் -என்ன அமைந்து இருக்கச் செய்தே
அதிரும் கடல் -என்று விசேஷிக்கையாலே
இவனுடைய அடங்காமையும் தோற்றுகிறது-
இப்பிள்ளையை ஆச்சியானவள் –
(அடங்காமையும்-உம்மைத் தொகையால் -நீல நிற வண்ணமும் சேர்த்து இதுவும் )

மதுர முலையூட்டி வஞ்சித்து வைத்துப் பதரப் படாமே பழந்தாம்பால் ஆர்த்த
கட்ட நினைத்தவள் ஆகையாலே
இவன் அறிந்து ஓடாதபடியாக நினைத்து
முலை கொடுத்தாள் ஆதல் –

அன்றிக்கே –
கட்ட நினைத்தவள் ஆகையாலே
தான் கட்டவிழ்க்கும் அளவும் பிள்ளைக்கு தாரகமாக
அவன் அறியாமல் முலை கொடுத்தாள் ஆதல்
வஞ்சித்து வைத்து
பழந்தாம்பாலே கட்டின திரு வுதரத்தைக் காட்டுகிறாள் –

பிள்ளைக்கு ரசிக்க வேணும் என்று
தான் ரசவத் பதார்த்தங்களை புஜிக்கையாலே
இவள் முலைப் பாலும் மதுரம் -என்கிறது

பதரப் படாமே -தப்பாமே

உதரம் இருந்தவா காணீரே ஒளி வளையீர் வந்து காணீரே –

ஒளி வளை–என்று
பிரகாசகமான அனன்யார்ஹ சிஹ்னம் –

—————————————————————–

திரு வுதரத்தில் நின்றும் திரு மார்பிலே பெருகுகிறார் –

பெருமா வுரலில் பிணிப்புண்டு இருந்து அங்கு
இருமா மருதம் இறுத்த இப்பிள்ளை
குரு மா மணிப் பூண் குலாவித் திகழும்
திரு மார்வு இருந்தவா காணீரே சேயிழையீர் வந்து காணீரே –1-2-10-

பதவுரை

பெரு மா உரலில்–மிகப்பெரிய உரலோடு
பிணிப்புண்டு–கட்டுண்டிருந்து இருந்து
அங்கு–அந்த நிலைமையிலே
இரு மா மருதம்–இரண்டு பெரிய மருத மரங்களை
இறுத்த–முறித்தருளின
இ பிள்ளை–இக் கண்ண பிரானுடைய,
குரு மா–மிகவும் சிறந்த
மணி பூண்–கௌஸ்துபாபரணமானது
குலாவி திகழும்–அசைந்து விளங்கா நின்றுள்ள
திருமார்வு இருந்த ஆ காணீர்!
சே இழையீர்–செவ்விய ஆபரணங்களை யுடைய பெண்காள்
வந்து காணீர்!

மிகவும் பெரிய உரலோடே
கட்டுண்டு இரா நிற்கச் செய்தே
இரண்டு பெரிய மருதுகளையும் தவழ்ந்து முறித்தது

முறித்த ஓசையிலே
புரிந்து பார்த்து சிரித்த படி கண்டு -இப்பிள்ளை என்றது
இப்பிள்ளை யுடைய ஸ்ரீ கௌஸ்துபம் போலே விளங்கா நின்ற நீல ரத்னம் -என்னுதல்

ஏதேனும் ஒரு ரத்னம் ஆகிலும்
திரு மேனியின் பிரபையாலே நீலம் ஆய்த்து என்னுதல் –
ஏவம் பிரகாரமான திரு மார்பைக் காணீர் -என்கிறார்

சேயிழை -என்று
பக்தி பிரகாசகமான ஆத்ம பூஷணம்-

————————————————————————–

திரு மார்பில் நின்றும் திருத் தோளிலே பெருகுகிறார் –

நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே
தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய்
வாள் கொள் வளை எயிற்று ஆருயிர் வவ்வினான்
தோள்கள் இருந்தவா காணீரே சுரி குழலீர் வந்து காணீரே –1-2-11-

பதவுரை

நாள்கள்–(கண்ணன் பிறந்த பின்பு சென்ற) நாட்கள்
ஓர்நாலு ஐந்து திங்கள் அளவிலே–ஒரு நாலைந்து மாதத்தளவிலே
தாளை நிமிர்ந்து–காலைத் தூக்கி
சகடத்தை–சகடாஸுரனை
சாடிப்போய்–உதைத்துவிட்டு,
வாள் கொள்–ஒளிகொண்டதாய்
வளை–வளைந்திராநின்றுள்ள
எயிறு–கோரப்பற்களையுடைய பூதனையினது
ஆர் உயிர்–அரிய உயிரை
வவ்வினான்–முடித்த கண்ணனுடைய
தோள்கள் இருந்த ஆ காணீர்!
சுரி குழலீர்–சுருண்ட கேசத்தையுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே
திருவவதரித்த நாள் தொடங்கி சென்ற மாசத்தை
நாலு என்பது
ஐந்து என்பது
ஒன்பது என்பது
இருபது என்பதாக காலத்தை மயக்குகிறது –
காலக்ருத பரிணாம சக்தி இல்லாமை இறே
அன்றிக்கே
இது தன்னை திருஷ்டி தோஷ பரிஹார்த்தமாகவும் மயக்கி அருளிச் செய்கிறார் ஆகவுமாம்-

தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப் போய்
கண் வளருகிற இடத்திலே சகடாசூரன் வந்து கிட்டுகிற அளவில்
முலை வரவு தாழ்த்துச் சீறித் திருவடிகளை நிமிர்க்க
ப்ரதிகூலித்து கிட்டினவன் ஆகையாலே
அவன் முடிந்தமை தோன்றச் சாடினான் -என்கிறார் –

சாடிப்போய் -என்றது –
சாடி விட்டு -என்றபடி –

வாள் கொள் வளை யேயிற்று ஆருயிர் வவ்வினான்
இதுக்கு முன் செய்ததை பின்னை அருளிச் செய்தது
முன்புள்ள யுகங்களும் பிரகாசித்த படியாலே யாதல் –
அன்றியிலே
அந்வயத்தை நினைத்தாதல் –
ஒளியையும் வளைவையும் யுடைத்தான எயிற்றை யுடைய பேச்சி யுடைய –

ஆருயிர் வவ்வினான் –
முடித்தற்கு உரிய உயிரை வவ்வினான் –

தோள்கள் இருந்தவா காணீரே சுரி குழலீர் வந்து காணீரே-
தோள்கள் இருந்த பிரகாரத்தை வந்து காணீர் -என்கிறார்
வவ்வுதல் -வாங்குதலாய்-அப்போது நெளித்த தோள்கள் இறே

சுரி குழல் –
தாந்த ரூப பிரபத்தி –
(சமம் தமம் -புலன் அடக்கம் -மன அடக்கம் )

———————————————————————–

திருத் தோள்களில் நின்றும்
திருக் கைத் தலத்தில் போகிறார் –

மைத்தடம் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத்தலங்கள் வந்து காணீரே கனம் குழையீர் வந்து காணீரே –1-2-12-

பதவுரை

மை–மை யணிந்த
தட–பெரிய
கண்ணி–கண்களை யுடைய
அசோதை–யசோதைப் பிராட்டியாலே
வளர்க்கின்ற–வளர்க்கப் படுகின்றவனாய்
தலைசெய்–உயர்ந்த க்ஷேத்ரத்திலே (அலர்ந்த)
நீலம் நிறம்–கரு நெய்தல் பூவினது போன்ற நிறத்தை யுடையவான
சிறுபிள்ளை-(இந்த) பால க்ருஷ்ணனுடைய
நெய்–கூர்மை பொருந்திய
தலை–நுதியை யுடைய
நேமியும்–திரு வாழியும்
சங்கும்–திருச் சங்கும்
நிலாவிய–அமைந்திரா நின்றுள்ள
கைத்தலங்கள்–உள்ளங்கைகளை
வந்து காணீர்!
கனம்–பொன்னால் செய்த
குழையீர்–காதணிகளை யுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

மைத்தடம் கண்ணி யசோதை வளர்க்கின்ற –
ஒப்பனைக்கு உப லஷணம்-
வளர்ப்பார் பலர் உண்டாய் இருக்கச் செய்தேயும்
தானே இறே வளர்ப்பாள்

செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை –
பூ சாரம் உள்ள ஷேத்ரத்திலே அப்போது அலர்ந்த
நீலம் போலே இருக்கிற நிறத்தை யுடைய –

சிறுப் பிள்ளை –
இவனுடைய அதி மானுஷங்களைக் கண்டாலும்
சிறுப் பிள்ளை யாக விறே இவள் நினைத்து இருப்பது –

நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
1-கூரிய தலையை யுடைத்தான நேமி -என்னுதல்
2-அவன் நினைவை அறிகையாலே
கருதும் இடம் பொருது திருக் கையிலே நிற்கிற கூர்மை யாதல்
3-ஆயுத சாமான்யத்தாலே நெய் என்னவுமாம் –
4-திருக் கைகளோட்டை ஸ்பர்சம் ஆகவுமாம் –
கையெல்லாம் நெய் -பெரிய திருமொழி -10-7-3-என்னக் கடவது இறே

சங்கும் நிலாவிய-
ஆழ்வானைப் போலே போக்கு வரத்துச் செய்யாதே
இருந்த இடத்திலே இருந்து
கருதும் இடம் போர வல்ல
ஓசையை யுடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் இறே

இவை தன்னை இவன் தான் ஒவ்வொரு போது காட்டக் காணும் இறே
அப் பூச்சி காட்டுகிறான் -என்று இவற்றை இறே எம்பார் அருளிச் செய்தது –

நிலாவுதல் -வர்த்தித்தல்

கைத்தலங்கள் வந்து காணீரே கனம் குழையீர் வந்து காணீரே –
இப்படி இருக்கிற திருக் கைத் தலத்தை அனுபவிக்க வாருங்கோள் என்கிறார்-

கனம் குழை -என்றது –
காதுப் பணியாய்-ஸ்ரோத்தாக்களைச் சொல்லுகிறது –

———————————————————————

திருக் கைத் தலத்தில் நின்றும்
திருக் கழுத்திலே பெருகுகிறார் –

வண்டமர் பூம் குழல் ஆய்ச்சி மகனாக
கொண்டு வளர்க்கின்ற கோவலர் குட்டற்கு
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
கண்டம் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே –1-2-13-

பதவுரை

வண்டு அமர்–வண்டுகள் படிந்திருக்கிற
பூ குழல்–பூ அணிந்த குழலை யுடையளான
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டியானவள்
மகனாக கொண்டு–(தன்) புத்ரனாக ஸ்வீகரித்து
வளர்க்கின்ற–வளர்க்கப் பெற்றவனாய்
கோ வலர்–ஸ்ரீநந்தகோபருடைய
குட்டற்கு–பிள்ளையான கண்ண பிரானுடைய,
அண்டமும்–அண்டங்களையும்
நாடும்–(அவற்றினுள்ளே கிடக்கிற) சேதநாசேதநங்களையும்
அடங்க–முழுதும்
விழுங்கிய–(ப்ரளயகாலத்தில்) கபளீகரித்த
கண்டம் இருந்த ஆ–கழுத்திருந்த படியை

வண்டமர் பூம் குழல் ஆய்ச்சி மகனாக கொண்டு வளர்க்கின்ற கோவலர் குட்டற்கு –
பிள்ளை சீறாமல் நாட
பூவைப் பல காலும் முடிக்கையாலே
வண்டுகளுக்கு வஸ்தவ்ய பூமி இவள் குழல் இறே –
தன் மகனாக ஸ்நேஹித்துக் கொண்டு வளர்க்கிற ஸ்ரீ நந்தகோபர் மகனுக்கு –
இவர் அடி அறிந்தவர் ஆகையால் -மகனாக -என்றது -இவள் அபிமானம் -என்கிறார் –

அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய கண்டம் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே –
அண்டங்களும்
அண்டம் அந்தர் கதமான சேதன அசேதனங்களும்
திரு வயிற்றிலே ஒரு புடையிலே அடங்கும்படி
இடமுடைத்தான கண்டம் -என்கிறார்

காரிகையீர் -என்று –
பக்தி பாரவச்யம் யுடையாரை அழைக்கிறார்-

———————————————————————–

திருக் கண்டத்தில் நின்றும்
திருப் பவளத்தில் பெருகுகிறார் –

எந்தொண்டை வாய்ச் சிங்கம் வா என்று எடுத்துக் கொண்டு
அந்தொண்டை வாய் அமுது ஆதரித்து ஆய்ச்சியர்
தந்தொண்டை வாயால் தருக்கிப் பருகுமிச்
செந்தொண்டை வாய் வந்து காணீரே சேயிழையீர் வந்து காணீரே –1-2-14-

பதவுரை

ஆய்ச்சியர்–இடைப்பெண்கள்
தொண்டை–‘‘கொவ்வைக் கனி போன்ற
வாய்–அதரத்தை யுடைய (கோவை வாயாள் பொருட்டு போல் )
எம் சிங்கம்–எமது சிங்கக் குருவே!
வா என்று–(எம் பக்கல்) வா’’ என்று
எடுத்துக் கொண்டு–(இடுப்பில்) எடுத்துக் கொண்டு
அம் தொண்டை–அழகிய கொவ்வை போன்ற
வாய்–(கண்ணனுடைய) அதரத்தில்
அமுது–(ஊறுகிற) அம்ருதத்தை
ஆதரித்து–விரும்பி,
தம்–தங்களுடைய
தொண்டை வாயால்–கோவை வாயை
தருக்கி–(கண்ணன் வாயோடே நெருக்கி)
பருகும்–பானம் பண்ணப்பெற்ற
இ செம் தொண்டை வாய்–இந்தச் சிவந்த கோவை வாயை
வந்து காணீர்!
சேயிழையீர்! வந்து காணீர்!!

ஆ தொண்டை போலே இருக்கிற திருப் பவளத்தை யுடையனாய்
சிம்ஹக் கன்று போலே கர்வத்தையும் யுடையனாய் இருக்கிற பிள்ளையை

என் பிள்ளை என்று அணைத்து எடுத்துக் கொண்டு
இடைப் பெண்கள் எல்லாம்
அழகியதாய் இருக்கிற

தொண்டை வாயில் ஊருகிற அமிர்தத்தை ஆதரித்து
தங்கள் கோவை வாயாலே இவனுடைய திருப் பவளத்தை நெருக்கி பருக பருக

பின்னையும் செந் தொண்டை வாயாய் இருக்கிற ஆச்சர்யத்தை வந்து காணீர் -என்கிறார்

சேயிழை –
பக்தி பிரகாசகமான ஆத்ம பூஷணம்

——————————————————————-

திருப் பவளத்தில் நின்றும் போந்து
திருமுக மண்டலத்தில் சமுதாய சோபையை அனுபவிக்கிறார் –

நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால்
நாக்கு வழித்து நீராட்டும் இந் நம்பிக்கு
வாக்கு நயனமும் வாயு முறுவலும்
மூக்கும் இருந்தவா காணீரே மொய்குழலீர் வந்து காணீரே –1-2-15-

பதவுரை

அசோதை–யசோதைப்பிராட்டி
நோக்கி–(கண்ணபிரான் திருமேனியின் மென்மைக்குத் தக்க படி) பார்த்து ஆராய்ந்து
நுணுக்கிய–அரைத்த
மஞ்சளால்–மஞ்சட்காப்பாலே,
நாக்குவழித்து – ;
நீராட்டும்–ஸ்நாநம் செய்விக்கப் பெறுகின்ற
இ நம்பிக்கு–இக் கண்ணபிரானுடைய
வாக்கும்–திரு வாக்கும்
நயனமும்–திருக் கண்களும்
வாயும்–அதர ஸ்புரணமும்
முறுவலும்–புன் சிரிப்பும்
மூக்கும் இருந்த ஆ–மூக்குமிருந்தபடியை
காணீர்!
மொய்குழலீர்–செறிந்த குழலை யுடைய பெண்காள்! வந்து
காணீர்!

பிள்ளையை திரு மஞ்சனம் செய்விப்பதாக உபக்ரமித்து
திரு மேனிக்குத் தகுதியாக
மஞ்சள் காப்பும் நேராக அரைத்து
மற்றும் வேண்டும் உபகரணங்களும் சேர்த்து வைத்து
திரு மேனிக்குத் தகுதியோ என்று இவற்றையும் பார்த்த
அசோதை இம் மஞ்சளாலே திரு நாவும் வழித்து
நீராட்டுகிற போது அவளுக்கு வச வர்த்தியான குணங்களை
யுடையவன் ஆகையால் பூர்ணனுக்கு -என்கிறது –

மாதா முதலானாரை நாம க்ரஹணம் பண்ணுகிற வாக்கும்
என்னைப் பாரீர் என்னைப் பாரீர் என்கிறவர்களை கடாஷிக்கிற திரு நயனங்களும்
மந்த ஸ்மிதம் பண்ண உபக்ரமிக்கிற திரு வதர ஸ்புரத்தையும்
அந்த ஸ்புரத்தை யோடு கூடின மந்த ஸ்மிதமும்
ஒரு விசேஷணம் இட்டுச் சொல்ல வேண்டாத திரு மூக்கின்
அழகு மிகுந்த பிரகாரத்தை அனுபவிக்க அழைக்கிறார்

மொய் குழலீர் –
கைங்கர்யத்துக்கு பூர்வ ஷண வர்த்தியாய் பிரார்த்தனா ரூபையான பிரபத்திகள் –

———————————————————————

சமுதாய சோபையில் அனுசந்தித்த திருக் கண்களின் அழகு
பின்னாட்டுகையாலே
மீண்டும் அது தன்னையே அனுபவிக்கிறார் –

விண் கொள் அமரர்கள் வேதனை தீர முன்
மண் கொள் வசுதேவர் தம் மகனாய் வந்து
திண் கொள் அசுரரைத் தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே -1-2-16–

பதவுரை

விண் கொள்–ஸ்வர்க்காதி லோகங்களை இருப்பிடமாகக் கொண்ட
அமரர்கள்–தேவதைகளுடைய
வேதனை தீர–துன்பங்கள் தீரும்படி
முன்–முன்னே
மண் கொள்–பூமியை இருப்பிடமாகக் கொண்ட
வசுதேவர் தம்–வஸுதேவர்க்கு
மகனாய் வந்து–பிள்ளையாய் வந்து பிறந்து
திண் கொள்–வலிமை கொண்ட
அசுரர்–அஸுரர்கள்
தேய–க்ஷயிக்கும்படி
வளர்கின்றான்–வளரா நின்ற கண்ணனுடைய
கண்கள் இருந்த ஆ காணீர்!
கனம் வளையீர்–கநக கங்கணத்தை யுடைய பெண்காள்
வந்து காணீர்!!

விண் கொள் அமரர்கள் வேதனை தீர முன் மண் கொள் வசுதேவர் தம் மகனாய் வந்து –
அவதாரங்களுக்கு ஹேது சாது பரித்ராணாதிகள் இறே –
விண்ணைத் தங்களுக்கு வஸ்தவ்ய பூமியாய் கொண்டு இருக்கிற அமரர்களுக்கு
வந்த கிலேசம் தீர்க்கும் போது
அவர்கள் அடியாக மண் கொள் வசுதேவருக்கு வந்த கிலேசமும்
தீர்க்க வேணும் என்று இறே
அவருக்கு புத்ரனாக முற்பாடு வந்து திரு வவதரித்தது
அவர்கள் தங்கள் கிலேசம் தீர்த்தாராய் இருப்பதும் இவர் கிலேசம் தீர்த்தால் இறே

திண் கொள் அசுரரைத் தேய வளர்கின்றான் கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே –
பின்பு திரு வாய்ப்பாடியிலே -கம்சாதிகள் தேய -வளர்ந்தது
தன் கிலேசம் தீருகைக்காக விறே

திண்மை யாவது கம்சன் முதலானோர் உடைய ஆசூர பாவத்தாலும்
ஜன்மத்தாலும் நெஞ்சில் வலி -அதாவது
மாதா வென்றும் பிதா வென்றும் ஸ்வ ஸஹா வென்றும் பந்துக்கள் என்றும்
பாராமல் கல்லிடை மோதியும்
அல்பம் கிருபை பிறவாத கம்சன் முதலான அசூரர்களை
வயிற்று எரி கொளுந்தி ஷயிக்கும் படியாக விறே

திருவாய்ப் பாடியிலே போய் வளர்ந்து அருளுகிறதும்
வளருகின்றவனுடைய கடாஷம் தான்
அனுகூல வர்க்கம் தழைக்கவும்
பிரதிகூல வர்க்கம் முடியவுமாய் இறே இருப்பது

கன வளை –
ஸ்ப்ருஹா வஹமுமாய் -மமதா விசிஷ்டமுமான அனன்யார்ஹ சிஹ்னம் –

———————————————————————-

திருக் கண்களில் நின்றும்
திருப் புருவத்தில் பெருகுகிறார் –

பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய
திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய வொளி மணி வண்ணன்
புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே -1-2-17-

பதவுரை

பருவம்–வயது
நிரம்பாமே-முதிருவதற்கு முன்னமே
பார்எல்லாம்–பூமியிலுள்ளார் எல்லாரும்
உய்ய–உஜ்ஜீவிக்கும்படியாக
திருவின் வடிவு ஒக்கும்–பிராட்டியின் வடிவு போன்ற வடிவை யுடையளான
தேவகி–தேவகிப் பிராட்டியாலே
பெற்ற–பெறப் பட்டவனாய்
உருவு கரிய–உருவால் கறுத்ததாய்
ஒளி–உஜ்ஜவலமான
மணி–மணி போன்ற
வண்ணன்–வடிவை யுடையனான கண்ண பிரானுடைய
புருவம் இருந்த ஆ காணீர்
பூண் முலையீர்–ஆபரணம் பூண்ட முலையை யுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற –
திருவின் வடிவு ஒக்கும் தேவகி
பருவம் நிரம்பி ரஷகனாய் இருக்கச் செய்தேயும்
பாரெல்லாம் உஜ்ஜீவிப்பதாக நோற்றுப் பெற்ற

உருவு கரிய வொளி மணி வண்ணன் புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே –
மிக்க பிரகாசத்தை யுடைய நீல ரத்னம் போலே
இருக்கிற திரு மேனியை யுடைய
கிருஷ்ணனுடைய திருப் புருவங்களின் அழகைக் காணீர் -என்கிறார்

கீழ் -அமுதன்ன தேவகி -என்றத்தை
திருவின் வடிவொக்கும் தேவகி -என்று சாப்தமாக அருளிச் செய்கிறார் –
திருவின் வடிவு ஒக்குகையாவது -வை தர்ம்யத்தில் ஏக தேச திருஷ்டாந்தம் –

(ஹேது கர்ப்ப விசேஷணம்
தேவகிக்கு விசேஷணம் -உள் அமுது -திரு
அடைமொழி -என்றும் எடுத்துக்காட்டு
காரணத்தை உள்ளடக்கிக் கொண்டு இருக்கிற அடைமொழி
லோகம் உய்யப் பெற்றது -காரணம் -உலகம் உஜ்ஜீவனம் ஹேது இரண்டு இடத்திலும் பொருந்தும்
ஏக தேச த்ருஷ்டாந்தம் -முகம் சந்திரனைப்போல் )

பூண் முலை -என்றது
பக்தி பிரகாசகமான ஆத்ம பூஷணம் –
அதாவது பராவர குருக்கள் பிரகாசிப்பித்தது இறே-

(துளசி -திருமுடிக்கு ஆபரணம்
நெற்றிக்சுற்று -வணங்கு
குண்டலம் -ஸ்ரவணம்
கங்கணம் -அஞ்சலி
ஆச்சார்யர் முதலில் -ரஹஸ்ய த்ரயம் அருளுவது பர குரு
மேல் மேல் அடுத்த ஆபரணங்கள் தாத்பர்யம் -அபர குரு -அவரே )

—————————————————————–

திருப் புருவத்தின் நின்றும்
திரு மகரக் குழையிலே போகிறார் –

மண்ணும் மலையும் கடலும் உலகு எழும்
உண்ணும் திறத்து மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு
வண்ணம் எழில் கொள் மகரக் குழை இவை
திண்ணம் இருந்தவா காணீரே சேயிழையீர் வந்து காணீரே–1-2-18-

பதவுரை

மண்ணும்–பூமியையும்
மலையும்–மலைகளையும்
கடலும்–கடல்களையும்
உலகு எழும்–ஸப்தலோகங்களையும்
உண்ணுந்திறந்து–திருவயிற்றிலே வைக்கிறவளவில்
மகிழ்ந்து–உகந்து
உண்ணும்–திருவயிற்றிலே வைத்த
பிள்ளைக்கு–(இக்) கண்ணபிரானுடையதான
எழில் வண்ணம் கொள்–அழகிய நிறங்கொண்ட
மகரம் குழை இவை–இம்மகர குண்டலங்களின்
திண்ணம் இருந்த–திண்மை இருந்தபடியை
காணீர்! சேயிழையீர்! வந்து காணீர்!!

மண்ணும் மலையும் கடலும் உலகு எழும் –
சர்வ ஆதாரமான பூமியும்
பூதரங்களும்
பூமிக்கு ரஷகமாக சூழ்ந்த சமுத்ரங்களும்
மேலும் கீழுமான பதினான்கு லோகங்களும் –

உண்ணும் திறத்து மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு –
மகிழ்சியாவது -சம்சாரிகள் உடைய பாப கரணங்கள் ஒடுங்கப் பெற்றோம் -என்கை-

வண்ணம் எழில் கொள் மகரக் குழை இவை -திண்ணம் இருந்தவா காணீரே-
அழகிய நிறத்தை யுடைத்தாய்
கண்டவர்களுடைய சித்தத்தை அபஹரித்தால்
வாங்க ஒண்ணாத திண்மை இறே –

சேயிழையீர் வந்து காணீரே –
பூர்வவத் —

——————————————————————-

திரு மகரக் குழையில் நின்றும்
திரு நெற்றியில் பெருகுகிறார்

முற்றிலும் தூதையும் முன் கைம்மேல் பூவையும்
சிற்றில் இளைத்துத் திரி தருவோர்களைப்
பற்றிப் பறித்துக் கொண்டாடும் பரமன் தன்
நெற்றி இருந்தவா காணீரே நேரிழையீர் வந்து காணீரே–1-2-19-

பதவுரை

சிற்றில்–சிறு வீடுகளை (மணலினால்)
இழைத்து–செய்து கொண்டு
திரிதருவோர்களை–விளையாடித் திரியும் சிறு பெண்களை
பற்றி–(வலியக்) கையைப் பிடித்துக்
கொண்டு (அவர்களுடைய)
முற்றிலும்–(மணல் கொழிக்கிற)சிறு சுளகுகளையும்
தூதையும்–(மணற்சோறாக்குகிற)சிறு பானைகளையும்
முன் கை மேல்–முன் கை மேல் (வைத்து கொண்டு பேசுகிற)
பூவையும்–நாகண வாய்ப் புள்ளையும்
பறித்துக்கொண்டு–அபஹரித்துக் கொண்டு
ஓடும்–ஓடுகின்ற
பரமன் தன்–(தீம்பில்) சிறந்தவனான
கண்ண பிரானுடைய
நெற்றி இருந்த ஆ காணீர்!
நேர்–நேர்த்தியை யுடைய
இழையீர்–ஆபரணங்களணிந்த பெண்காள்!
வந்து காணீர்!

ஊரில் பெண்களாய்
கொட்டகம் எடுத்து விளையாடித் திரிகிறவர்கள் உடைய சிறு சுளகும்
மணல் கொழித்து சோறு இடுகிற சிறு பாத்ரங்களையும்
அவர்கள் பேச்சுக் கொண்டு விளையாடுகிற கிளி பூவைகளுமான லீலா உபகரணங்களை
இவர்கள் கையைப் பிடித்து பறித்து கொண்டு
பிடி கொடாமல் ஓடுகிற பரமன் தன்னுடைய
நெற்றி இருந்த பிரகாரத்தை காணி கோள்-என்கிறார்

நேரிழை-என்கையாலே –
சம்ஸ்லேஷத்திலும் கழற்ற வேண்டாத ஆபரணங்கள்
அதாவது
அத்யந்த ஸூஷ்ம ரூப ஜ்ஞானமான ஆத்ம பூஷணம் –

—————————————————————–

திரு நெற்றியில் நின்றும்
திருக் குழலிலே பெருகுகிறார் –

அழகிய பைம்பொன்னின் கோலம் கைக் கொண்டு
கழல்கள் சதங்கை கலந்து எங்கும் ஆர்ப்ப
மழ கன்றினங்கள் மறித்துத் திரிவான்
குழல்கள் இருந்தவா காணீரே குவி முலையீர் வந்து காணீரே —1-2-20-

பதவுரை

அழகிய–அழகியதும்
பைம் பொன்னின்–பசும் பொன்னால் செய்யப்பட்டதுமான
கோல்–மாடு மேய்க்குங் கோலை
அம் கை–அழகிய கையிலே
கொண்டு–பிடித்துக் கொண்டு
கழல்கள்–(கால்களிலுள்ள) வீரக் கழல்களும்
சதங்கை–சதங்கைகளும்
கலந்து–தன்னிலே சேர்ந்து
எங்கும் ஆர்ப்ப–போமிடமெல்லா மொலிக்க
மழ–இளமை பொருந்திய
கன்று இனங்கள்–கன்றுகளின் திரள்களை
மறித்து–(கை கழியப் போகாமல் மடக்கி)
திரிவான்–திரியுமவனான கண்ண பிரானுடைய
குழல்கள்–திருக் குழல்களானவை
இருந்த ஆ காணீர்!
குவி முலையீர்! வந்து காணீர்!!

ஷோடா ச வர்ணியான பொன்னாலே சமைக்கப் பட்ட அழகிய கோலை
(16 கலை பூர்ண சந்திரன் போல் –24-carat -பூர்ண ஸ்வர்ணம் -)
அழகிய திருக் கையிலே பிடித்து

திருவடிகளிலே சாத்தின வீரக் கழல் -சிலம்பு -சதங்கை –
இவை முதலான வற்றின் த்வனி எங்கும் பிரகாசிக்க

துள்ளிப் போன இளம் கன்றுகளும் த்வனி வழியே வரும்படியாக
மறித்து சஞ்சரிக்கிற போது

திருவடிகளை அதிர விட்டு ஒடுகையாலே
அசைந்து கவர்கிற திருக் குழல்களை காணீர் என்கிறார்
பிரசச்த கேசன் இறே

குவி முலை
பூர்வதத்

காணீர் காணீர் -இருபது பிரகாரமும்
முடிச் சோதி -திருவாய் -3-1- பிரகாரம் போலே இருக்கச் செய்தேயும்
பாதாதி கேசமாக அனுசந்தித்து
ப்ராப்ய அனுரூபம் ஸ்வரூபமாகவும்
ஸ்வரூப அனுரூபம் பிராப்யமாகவும்
அனுசந்தித்து இறே
இவை யுடையவர்களை அழைத்து
இரு கால் காணீர் காணீர் -என்றது

அவனுடைய உபேய பாவமும்
உபாய பாவமும்
அறியுமவர்களை என்னவுமாம் –

இப்படிக் காட்டக் கண்டால் இறே
மங்களா சாசன பரிபாகம் ஆவது -பரிகாரமாவது-

——————————————————————

நிகமத்தில் இத்திருமொழி கற்றாருக்கு பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார்

கருப்பார் குழலி யசோதை முன் சொன்ன
திருப்பாத கேசத்தை தென் புதுவைப் பட்டன்
விருப்பால் உரைத்த விருபதொடு ஒன்றும்
உரைப்பார் போய் வைகுந்தத்து ஒன்றுவார் தாமே–1-2-21-

பதவுரை

சுருப்பு ஆர்–வண்டுகள் படிந்து நிறைந்த-(சுரும்பு ஆர் -சுருப்பு ஆர்)
குழலி–கூந்தலை யுடையளான
அசோதை–யசோதைப் பிராட்டியால்
முன்–க்ருஷ்ணாவதார ஸமயத்திலே
சொன்ன–சொல்லப்பட்ட
திருப்பாத கேசத்தை–பாதாதிகேசாந்த வர்ணநப் பாசுரங்களை
தென் புதுவை பட்டன்–அழகிய ஸ்ரீவில்லிபுத்தூருக்கு (நிர்வாஹகரான) அழ்வார்
விருப்பால்–மிக்க ஆதரத்தோடு ( யசோதா பிராட்டி விட மிக்க )
உரைத்த–அருளிச்செய்த
இருபதோடுஒன்றும்–இவ்விருபத்தொரு பாட்டுக்களையும்
உரைப்பார் தாம்–ஓதுமவர்கள்
போய்–(இம் மண்டலத்தைக் கடந்து) போய்
வைகுந்தத்து–ஸ்ரீவைகுண்டத்திலே
ஒன்றுவர்–பொருந்தப் பெறுவார்கள்

பிள்ளை சீறாமல் நாட
பூ முடிக்கையாலே வண்டுகள் மாறாமல் செல்லும் இறே

இப்படிப் பட்ட யசோதை
பிள்ளையைக் கொண்டாடி
பலர்க்கும் காட்டி

அவன் தான் ஸ்ரீ மதுரையில் அவதரித்து
திருவாய்ப்பாடியிலே போந்தால் போலே இறே
இவர் தாமும் திருப் புத்தூரிலே திருவவதரித்து
திரு மாளிகையிலே போந்த படி

பட்டன் -ப்ராஹ்மண உத்தமன்
யசோதை விரும்பினால் போலே அன்று இறே
இவர் விரும்பி உரைத்தபடி

பூர்வ பூர்வ உச்சாரண க்ரமத்தாலே உரைப்பார்
சாபிப்ப்ராயமாக யுரைப்பார்
இவருடைய அபிமானத்தாலே சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே
என்கிற தேசத்திலே போய்
அவர்களோடு மங்களா சாசனம் பண்ணப் பெறுவார்-

(அவனை அனுபவித்து
மங்களா சாசனம் பண்ணி
இருக்கும் படி உபகரித்து அருளினார் இவர் என்றபடி
வை குண்டம் -குறைவு அற்ற -ஞானம் பக்தி ப்ரேமம் பூர்ணம் -ஒன்றி இருக்கப் பெறுவோம் – )

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading