(ஸ்வாபதேசம்
அந்யாபதேசம்
உள்ளுறைப் பொருள்
ஸ்ரீ கிருஷ்ண தத்வம் -பிறந்தவாறும் வளர்ந்தவாறும் –
அபதேசம் இவை
பர உபதேசம் -ஸூவ உபதேசம் நெஞ்சுக்கு சொல்வது போல் )
அவதாரிகை —
ஸ்ரீ யபதியாய் -அவாப்த சமஸ்த காமனாய் –சமஸ்த கல்யாண குணாத்மகனாய் -சர்வ ரஷகனாய் -சர்வ நியந்தாவாய் –
இருக்கிற சர்வேஸ்வரனை
ரஷ்யமாக நினைத்து திருவவதார விசேஷங்களுக்கு மங்களா சாசனம் பண்ணினார்
திருப் பல்லாண்டிலே-
அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை–பல்லாண்டு பாடுதும் -என்றும்
இராக்கதர் வாழ் இலங்கை பாழாளாக படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதுமே -என்றும்
ஸ்ரீ நரசிம்ஹ ப்ராதுர்பாவத்துக்கும்
ஸ்ரீ ராமாவதாரத்துக்கும் மங்களா சாசனம் பண்ணி இருக்கச் செய்தேயும்
மாயப் பொரு படை வாணனை -என்றும்
ஐந்தலைய -இத்யாதிகளால்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்துக்கு பிரசுரமாக மங்களா சாசனம் பண்ணுகையாலும்
இவ் வதாரத்துக்கு ஹேதுவாக படுத்த பைந் நாகணைப் பள்ளி கொண்டு அருளின ஸ்ரீ பெரிய பெருமாள்
ஆல மா மரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய் ஞாலம் எழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்-என்றும்
வையம் யுண்டு ஆலிலை மேவு மாயன் மணி நீண் முடிப் பை கொள் நாகத் தணையான்-பெரிய திருமொழி -5-4-2-என்றும்
ஸ்ரீ கோயிலில் நின்றும் திரு மாளிகைகளில் புகுந்து
(நாச்சியார் திரு மாளிகை -ஸ்ரீ வில்லுபுத்தூர் –
நாச்சியார் கோயில் -திரு நறையூர் )
ஸ்ரீ வடபெரும் கோயிலுடையானாக கண் வளர்ந்து அருளுகையாலும்-
பயின்றது அரங்கம் திருக்கோட்டி -(பூதத்தாழ்வார் )-என்று ஸ்ரீ கோயிலில் நின்றும் தங்கு வேட்டையாக எழுந்து அருளி ஸ்ரீ திருக் கோட்டியூரிலே
உரக மெல்லணையனாய்க் -பெரியாழ்வார் -4-4-4- கண் வளர்ந்து அருளுகையாலும்
அணி கோட்டியூர் அபிமானத் துங்கன் செல்வனைப் போலே இத்யாதி படியே
இவ் வாழ்வாருக்கு மங்களா சாசனத்துக்கு சஹகாரியான ஸ்ரீ செல்வ நம்பியுடன் ஸ்ரீ திருக் கோட்டியூர் ப்ரஸ்துதம் ஆகையாலும்
ஸ்ரீ திருக் கோட்டியூரானே-பெரிய திருமொழி -9-10-1-என்றும்
கன்று கொன்று விளங்கனி எறிந்து -பெரிய திருமொழி -9-10-7-என்றும்
அவனே இவன் என்று ஆழ்வார்கள் ஸ்ரீ கிருஷ்ணாவதார கந்தமாக ஸ்ரீ திருக் கோட்டியூரை அருளிச் செய்கையாலும்
செந்நாள் தோற்றி சிலை குனித்த திரு மதுரையில் காட்டிலும் ஸ்ரீ திருக் கோட்டியூர் உத்தேச்யம் ஆகையாலும்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரச் செய்தேயும்
கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் மடிய வஞ்சனையில் வளர்ந்த மணி வண்ணன் -பெரியாழ்வார் -4-3-2-என்று
ஈஸ்வரத்வம் நடையாடுகையாலும்
மற்ற அவதாரங்களுக்கு காலமும் நன்றாய் தாமும் ராஜ குலத்தில் அவதரிக்கையாலும்
பந்துக்களும் ராஜாக்களுமாய் பலவான்களுமாய் ஆகையாலும்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்துக்கு காலமும் த்வாபர அந்தமாய்
பந்துக்களும் சாதுக்களான ஆயராய்
முளைப்பது எல்லாம் தீப்பூண்டு களாகையாலே
மங்களா சாசனம் வேண்டுவது ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்துக்கே ஆகையாலும்
அந்த ஸ்ரீ கிருஷ்ணன் அர்ச்சாவதாரமாக நின்றவிடத்தில் அர்ச்சாவதாரம் அர்ச்சக பராதீன சமஸ்த வ்யாபாரமாய்ப் போருகையாலே
மங்களா சாசனம் மிகவும் வேண்டுவது அர்ச்சாவதாரம் ஆகையாலும்
சென்னியோங்கு அளவும் இவர்க்கு அர்ச்சாவதார பர்யந்தமாக மங்களா சாசனம் நடக்கும் இறே-
(3-6- வரை கிருஷ்ண அவதாரம் அனுபவம்
4-2- தொடங்கி அர்ச்சாவதார அனுபவம் )
(வக்த்ரு -விஷய -பிரபந்த -வை லக்ஷண்யம்
ப்ரவேசத்தால் -எத்திறம் -இத்யாதிகளால் விக்த்ருதராம் படி -ஸ்ரீ கிருஷ்ண -விஷய வை லஷ்ண்யம்
ஆழ்வார்களை விட பொங்கும் பரிவு -வக்த்ரு வை லக்ஷண்யம்
பிரேமத்தால் யசோதை வார்த்தைகளால் -பிரபந்த வை லக்ஷண்யம் )
——————————————————————
(இருட்டை சேவிப்பாரே -வாழி கனை இருளே -பிள்ளை உறங்கா வல்லி தாசர்
பிருஸ்னி ஸூதபா
அதிதி கஸ்யபர்
வசுதேவர் தேவகி -மூன்று தடவை )
முதல் பாட்டு -அவதாரிகை –
ஸ்ரீ கிருஷ்ணாவதார கந்தமான ஸ்ரீ திருக் கோட்டியூரிலே அர்ச்சாவதார பர்யந்தமாக
மங்களா சாசனம் பண்ணுகிறார் -வண்ண மாடத்தால் –
வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்து அளறு ஆயிற்றே –1-1-1-
பதவுரை
வண்ணம்–அழகு பொருந்திய
மாடங்கள்–மாடங்களாலே
சூழ்–சூழப்பட்ட
திருக்கோட்டியூர்–திருக்கோட்டியூரில் (எழுந்தருளியுள்ள)
கேசவன்–கேசவனென்ற திருநாமமுடையனாய்
நம்பி–கல்யாண குண பரிபூர்ணனான
கண்ணன்–ஸ்ரீக்ருஷ்ணன்
இன் இல்–(நந்த கோபருடைய) இனிய திரு மாளிகையிலே
பிறந்து–திரு வவதிரித்தருளின வளவிலே,
(திருவாய்ப்பாடியிலுள்ளார்)
எண்ணெய்–எண்ணெயையும்
சுண்ணம்–மஞ்சள் பொடியையும்
எதிர் எதிர் தூவிட–(ஸந்தோஷத்தாலே ஒருவர்க்கொருவர்) எதிர்த்துத் தூவ,
கண்–விசாலமாய்
நல்–விலக்ஷணமான
முற்றம்–(நந்தகோபர் திருமாளிகையில்) திருமுற்றமானது
கலந்து–(எண்ணெயும் மஞ்சள் பொடியும் துகையுண்டு) தன்னிலே சேர்ந்து
அளறு ஆயிற்று–சேறாய் விட்டது.
வண்ண நன் மணியும் -பெரியாழ்வார் -4-4-3-இத்யாதிபடியே
நாநா ரத்னங்களாலே சமைந்து அழகும் நிறமும் உடைத்தாகையாலே
தர்ச நீயங்களான மாடங்களாலே சூழப் பட்ட திருக் கோட்டியூரிலே
கண்ணன் –
கண்ணில் கூர்மை உடையராய் நிபுணராய் இருப்பாராலே பரிக்ராஹ்யமான
தேவகி புத்ர ரத்னம் திருஷ்டி கோசரம் ஆகையால் கண்ணன் என்கிறார்
(கண் -ஸூஷ்ம தர்சீ களுக்குக் காட்சி கொடுத்து அருளுபவர் -ஞானக் கண்ணால் அறியப்படுபவன்
பத்திமை -பக்தி அஞ்சனம் -ஞாதும் த்ரஷ்டும் பிராப்தி -)
கேசவன் நம்பி
அவனுடைய சர்வ காரணத்வத்தையும்
விரோதி நிரசனத்தையும் தாம் ஏறிட்டுக் கொள்ளுகையாலே
அவன் போக்யதைக்கு மங்களா சாசனம் பண்ணி
பிரசச்த கேசன் -கல்யாண குண பூரணன் -என்கிறார்
(ப்ரஸஸ்த கேசன்
கேசி அசுரனைக் கொன்றதால் -கேசவன் -விரோதி நிரசன சீலன்
க ஈஸா நியந்தா-சர்வ காரணத்வம்
நம்பி -கல்யாண குண பூர்ணன் –
பெரியாழ்வார் தாமே ஏறிட்டுக் கொண்டாரே -)
பிறந்தினில்
இன் -இல்-பிறந்து
ஸ்ரீ மதுரையில் சிறைக் கூடம் போல் பொல்லாங்கு இல்லாதபடியாலே
திரு வாய்ப்பாடியிலே பிறப்பை இனிய இல்லிலே பிறந்தான் என்கிறார்-
திருக் கோட்டியூரிலே வ்யாவ்ருத்தி சொல்ல மாட்டாரே
ஆகையால் சிறைக் கூடத்தில் வ்யாவ்ருத்தி திருவாய்ப் பாடிக்கு உண்டு என்கிறார்
எண்ணெய் சுண்ணம் இத்யாதி
எள்ளில் நெய்யையும் மஞ்சள் பொடியையும் ஒருவர் மேலே ஒருவர் தூவி என்னுதல்
ஒருத்தருக்கு பிரீதியாக ஒருவர் தூவி என்னுதல் –
கண்ணன் முற்றம்
ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்தே போதே க்ருஹ நிர்வாஹகன் பிள்ளையாக ஸ்ரீ நந்த கோபர் நினைக்கையாலே
கண்ணன் முற்றம் என்னுதல்
இடமுடைத்தான தர்ச நீயமான முற்றம் என்னுதல் (கண் நல் முற்றம் )
கலந்து அளறு ஆயிற்றே
இவை தம்மிலே சேர்ந்து சேறாயிற்று -என்கிறார்
————————————————————————-
இரண்டாம்பாட்டு -அவதாரிகை –
இவ்வளவிலே யன்றி
தம் திரு உள்ளத்துக்குப் பொருந்த
திருவாய்ப்பாடியில் உள்ளார் ப்ரியம் கண்டபடியாலே
ஸ்லாகிக்கிறார்-
ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே–1-1-2-
உகந்து-ஒவ்வொன்றிலும் அந்வயிக்க வேண்டும்
உகந்து ஓடுவார்
உகந்து விழுவார்
உகந்து ஆலிப்பார்-
பதவுரை
ஆய்ப்பாடி–திருவாய்ப்பாடியானது,
ஓடுவார்–(ஸ்ம்ப்ரமித்து) ஓடுவாரும்
விழுவார்–(சேற்றிலே வழுக்கி) விழுவாரும்
உகந்து–உகப்புக்குப் போக்குவீடாக
ஆலிப்பார்–கோஷிப்பாரும்
நாடுவார்–(பிள்ளையைத்) தேடுவாரும்
நம் பிரான்–நமக்கு உபகாரகனான கண்ணன்
எங்கு உற்றான் என்பார் –எங்கு தான் என்பார்–எங்கே தான் (இரா நின்றான்) என்பாரும்
பாடுவார்களும்–பாடுவார்களும்
பல் பறை–பலவகை வாத்யங்கள்
கொட்ட–முழங்க
நின்று–அதற்குப் பொருந்த நின்று
ஆடுவார்களும்–கூத்தாடுவாருமாக
ஆயிற்று–ஆய்விட்டது.
ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
ப்ரீதி பிரகர்ஷத்தாலே
ஒரு பிரயோஜனம் கருதாமல் ச சம்ப்ரமமாக ஓடுவார் –
ஓடச் செய்தே அளற்றிலே வழுக்கி விழுவார்
பிரியப் பட்டு கர்விப்பார்
நாடுவார்-
பிள்ளை எங்கே -தேடுவார்
நம் பிரான் எங்குற்றான் என்பார் –
ராஜ புத்திரன் ஆகையாலே -எங்களுக்கு ஸ்வாமி யானவன் எங்கே என்பார் -கண்டிருக்கச் செய்தேயும்
பாடுவார்களும்
ப்ரீதிக்கு போக்கு விட்டுப் பாடுவார்களும்
பல் பறை கொட்ட நின்று ஆடுவார்களும்
நாநா விதமான வாத்தியங்களைக் கொட்டுவார்களும்
கொட்டுக்குப் பொருந்து நின்று ஆடுவார்களும்
அன்றியே
சிலர் தங்களுக்கு தோற்றினபடி கொட்ட
சிலர் அனந்வயமாக கூத்தாட என்னுதல் –
ஆயிற்று ஆய்ப்பாடியே
இப்படி திருவாய்ப்பாடியிலே பஞ்ச லஷம் குடியில் உள்ளாரில்
ஒருத்தரும் விக்ருதர் ஆகாமல் இருந்தார் இல்லை –
(சாதன ஸப்தகம்
அநவசாதம் அனு ஹர்ஷம் -கூடாது அப்ராப்த விஷயத்தில்
இங்கு கிடைக்க விடில் அழுதும்
கிட்டினால் ஹர்ஷமும் -ப்ராப்த விஷயம் என்பதால் -உகந்து -அனைத்திலும் உண்டே -)
————————————————————————–
பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்
காணத் தாம் புகுவார் புக்குப் போதுவார்
ஆண் ஒப்பார் இவன் நேரில்லை காண் திரு
வோணத்தான் உலகாளும் என்பார்களே–1-1-3-
பதவுரை
சீர் உடை =ஸ்ரீமானான குணங்களை உடைய
பிள்ளை=பிள்ளையான கிருஷ்ணன்
பேணி =கம்சாதிகள் கண் படாதபடி தன்னைக் காத்து வந்து
பிறந்தனில்=பிறந்த அளவில்
தாம் =ஆய்ப்பாடி ஆயர்கள்
காண =பிள்ளையை காண ஆசைப் பட்டு
புகுவார் =உள்ளே நுழைவாரும்
புக்கு =உள்ளே போய் கண்டு
போதுவார் =புறப்படுவாரும்
ஆண் ஒப்பார் =பும்ஸ்த்வம் உடையாரில்
இவன் நேர் இல்லை காண் =இவனோடு ஒத்தவர் இல்லை காண்
இவன்
திரு வோணத்தான் =சர்வேஸ்வரனுடைய
உலகு ஆளும் -லோகங்களை எல்லாம் ஆளக் கடவன்
என்பார்கள் -என்று சொல்லுவாருமாக ஆனார்கள் –
பேணிச் சீருடைய பிள்ளை –
சீருடைப் பிள்ளை பேணிப் பிறந்தினில் –
சீருடைய பிள்ளை என்று சிறைக் கூடத்தில் திரு வவதரித்த போதை திவ்ய சேஷ்டிதத்தைக் கண்டு
கம்ச பயத்தாலே பயப்பட மாதா பிதாக்கள் -உபசம்ஹர -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-13-என்ற போதே
உகவாதார் காணாத படி மறைக்கையாலும்
ஸ்ரீ ராமாவதாரம் போலே வளர்ந்த பின்பு பித்ரு வசன பரிபாலனம் பண்ணுகை யன்றி அப்போதே பேணிப் போருகையாலும்
பிறந்தினில்
வழியில் உள்ள வ்யசன பாஹூள்யத்தை அறிந்தவர் ஆகையால் கம்சனுக்குப் பிழைத்து திருவாய்ப்பாடி புகுந்த பின்
திருவவதாரமாக பிரதிபத்தி பண்ணி -பிறந்தினில் -என்கிறார்
காணத் தாம் புகுவார்-
தாம் காணப் புகுவார் -அக் காலத்தில் பிள்ளை பெற்றவர் தாங்களும் ஹர்ஷ அதிசயத்தாலே
தம்தாம் புத்ர முகம் -பிள்ளைகளை -காணும் காட்டில் பிள்ளையைக் காணப் புகுவார்
புக்குப் போதுவார் –
சோபனம் சொல்ல வேணும் என்கிற த்வரையாலே புகுந்து சொல்லியும் சொல்லாதும் போதுவார்
போதுவார்
பும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரிணம் -அயோத்ய -3-29-இது என்ன அருமை தான் –
(கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண பிரான் அன்றோ -)
ஆண் ஒப்பார் இவன் நேரில்லை காண் திரு வோணத்தான் உலகாளும் என்பார்களே-
சாமுத்ரிகா லஷணம் -போவான் இவனைப் பார்த்து புமான்களில் இவனுக்கு சத்ருசம் இல்லை -என்பார்களும்
திருவோணத்தான் உலகாளும் -என்பார்களுமாய்
ப்ரீதி வ்யவஹாரம் பண்ணினார்கள் என்று ஹ்ருஷ்டர் ஆகிறார்
திருவோணம் ஸ்ரீ வைஷ்ணவ நஷத்ரம் ஆகையால் திருவோணத்தான் உலகு என்று
உபய விபூதியையும் ஆளும் -என்கிறார்கள் என்றபடி
(வாமனன் -திரிவிக்ரமன் -உலகு அளந்து ஸ்வாமித்வம் காட்டினான் )
———————————————————————
உறியை முற்றத்து உருட்டி நின்றாடுவார்
நறு நெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்
செறி மென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கு
மறி வழிந்தனர் ஆய்ப்பாடி யாயரே –1-1-4-
பதவுரை
ஆய்ப்பாடி–திருவாய்ப்பாடியிலுள்ள
ஆயர்–இடையர்கள்
உறியை–(பால் தயிர் சேமித்து வைத்த)உறிகளை
முற்றத்து–முற்றத்திலே
உருட்டி நின்று–உருட்டிவிட்டு
ஆடுவார்–கூத்தாடுவார் சிலரும்,
நறு–மணம்மிக்க
நெய் பால்தயிர்–நெய்யையும் பாலையும் தயிரையும்
நன்றாக–நிச்சேஷமாக
தூதுவார்–தாநம் பண்ணுவார் சிலரும்,
செறி மென்–நெருங்கி மெத்தென்றிருக்கிற
கூந்தல்–மயிர்முடியானது
அவிழ–அவிழ்ந்து கலையும்படி
திளைத்து–நர்த்தநம்பண்ணுவார் சிலருமாக,
எங்கும்–சேரியடங்கலும்
அறிவு அழிந்தனர்–தங்களூடைய விவேகம் ஒழியப் பெற்றனர்-
(கிருத்ய அக்கருத்ய விவேக சூன்யர் ஆனார்கள்)
உறியை முற்றத்து உருட்டி நின்றாடுவார் நறு நெய் பால் தயிர்
உறியின் மேலே வைத்த நறு நெய்யும் பாலும் தயிரும் உடனே த்ரவ்ய கௌரவம் பாராதே
அறுத்துக் கொண்டு போந்து முற்றத்திலே உருட்டி நின்றாடுவார்
நன்றாகத் தூவுவார்
க்ருத ஷீர தத்யாதிகளை -பிள்ளைக்கு நன்மையாக வேணும் -என்று தானம் செய்வார்
செறி மென் கூந்தல் அவிழத் திளைத்து –
செறிந்து மெல்லிதான குழல்கள் கட்டு அவிழும்படி ஸ்திரீகள் புறப்பட்டு ஆடி லீலா போகிகளாக
எங்கு மறி வழிந்தனர் ஆய்ப்பாடி யாயரே —
திருவாய்ப்பாடியில் திருவாயர் முழுக்க
க்ருதக்ருத்ய விவேக சூன்யர்கள் ஆனார்கள் –
(மதுவனம் அழித்த முதலிகள் போல் )
ஆய்ப்பாடி ஆயர் –
வளர்ப்பும் மேய்ப்பும் அன்றியே ஜாதி ஆயர் -என்றபடி-
(பிறப்பாலே ஆயர் என்றபடி )
————————————————————————–
கொண்ட தாளுறி கோலக் கொடு மழு
தண்டினர் பறியோலைச் சயனத்தர்
விண்ட முல்லை அரும்பன்ன பல்லினர்
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார் –1-1-5-
பதவுரை
தான்கொண்ட–கால் நெருக்கத்தையுடைய
உறி–உறிகளையும்
கோலம்–அழகிய
கெரடு–கூர்மையான
மழு–மழுக்களையும்
தண்டினர்–தடிகளையுமுடையராய்
பறி–(தாழைமடலினின்றும்) பறிக்கப்பட்ட
ஓலை-ஓலைகளினாற்செய்த
சயனத்தர்–படுக்கையையுடையராய்
விண்ட–விசஹித்த
முல்லை அரும்பு அன்ன–முல்லையரும்பு போன்ற
பல்லினர்–பற்களையுடையவரான
அண்டர்–இடையரானவர்கள்
மிண்டி–(ஒருவருக்கொருவர்) புகுந்து
நெய் ஆடினார்–நெய்யாடல் ஆடினார்கள்.
கொண்ட தாளுறி -இத்யாதி
தாள் கொண்ட என்று கால் நீண்ட உறிகளை தங்கள் கையிலே தூக்கி நின்றாடுவார்
பரிசுண்டாய் –கூரியதான மழுக்களையும்
அளவுண்டாய் -நன்றான தடிகளையும்
மடலில் நின்றும் பறிக்கப் பெற்ற ஓலையாலே கோத்து சமைக்கப் பட்ட சய்யையும் உடையராய்க் கொண்டு
முல்லை யரும்பு விண்டால் போலே இருக்கிற பல்லு தோன்ற ரச விவாத கோலாகலராய்
நெருங்கிப் புகுந்து நெய்யாடினார் இடையர் எல்லாரும் –
விண்டின் முல்லை என்ற பாடமான போது -விண்டு என்று குன்றாய்
குன்றில் முல்லை நெருங்கப் பூத்தால் போலே தோற்றுப் பல்லர் என்னவுமாம்
இடைக் கூத்தாடுவார்க்கு தோற்றுப் பல்லாய் இறே இருப்பது
அண்டர் -என்று தேவ ஜாதிகளுக்கும் பெயர் –
(இங்கு இடையரைச் சொல்லிற்று )
————————————————————————–
கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர்
பைய வாட்டிப் பசும் சிறு மஞ்சளால்
ஐய நா வழித் தாளுக்கு அங்காந்திட
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே –1-1-6-
பதவுரை
கையும்–திருக்கைகளையும்
காலும்-திருவடிகளையும்
நிமிர்த்து–(நீட்டி) நிமிர்த்து
கடாரம்–கடாரத்தில் (காய்ச்சின)
நீர்–திருமஞ்சனத் தீர்த்தத்திலே
பசு சிறு மஞ்சளால்–குறுங்கண்ணான பசு மஞ்சளால்
பைய–திருமேனிக்குப் பாங்காக
ஆட்டி–ஸ்நாநம் செய்வித்து
ஐய-மெல்லிதான
நா–நாக்கை
வழித் தாளுக்கு–வழித்தவளான யசோதைக்காக
அங்காந்திட-(கண்ணன்) வாயைத்திறக்க, (யசோதையானவன்)
பிள்ளை–கண்ணபிரானுடைய
வாயுள்–வாயினுள்ளே
வையம் ஏழும்–உலகங்களையெல்லாம்
கண்டாள்–ஸாக்ஷத்கரித்தாள்.
வடதள சாயிக்கு அல்லாதது எல்லாம் உண்டாக சொல்லா நின்றது இறே –
கடாரத்தில் மருந்துகளும் பரிமளத் த்ரவ்யங்களும் இட்டு
ஸூ கந்தவத்தாய்க் காய்ந்த நீரிலே
திருக்கைகளையும் திருவடிகளையும் நிமிர்க்க வேணும் என்று தானே பிரார்த்துத்
தான் நிமிர்ந்து நிமிர்ந்தான் என்று கொண்டாடி –
மெள்ளத் திரு மஞ்சனம் செய்தருளி
குறும் கண்ணான பசு மஞ்சளை திரு மேனியிலே சாத்தி கையிலே மஞ்சளை எடுத்து
மெல்லிதான நாவை நீட்டி அருள வேணும் என்று பிரார்த்திக்க
இங்கேயும் மாத்ரு வசன பரிபாலனம் பண்ணி அருள வேணும் என்று
நாக்குக்கும் வாய்க்கும் வாசி அறியாத பிள்ளைகளை போலே அங்காந்து காட்டின நாவை வழித்தவளுக்கு
திவ்ய சஷூஸ் சைக் கொடுத்து விஸ்வரூபம் காட்டினால் போலே
இவளுக்கு திருப் பவளத்துக்கு உள்ளே சமஸ்த லோகங்களையும் காட்ட இவளும் கண்டாள் இறே
வடதள சாயி திரு வயிற்ருக்கு உள்ளே அகடித பிரமாண சித்தமானது இறே இவள் கண்டது-
—————————————————————————
வாயுள் வையம் கண்ட மட நல்லார்
ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன்
மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே –1-1-7-
பதவுரை
வாய் உள =பிள்ளை உடைய வாயின் உள்ளே –
வையகம் = உலகங்களை
கண்ட =பார்த்த
மட நல்லார் =மடப்பத்தையும் நன்மையையும் உடைய மாதர் =கோப ஸ்திரீகள்
இவன்
ஆயர் புத்திரன் அல்லன் =கோப குமாரன் அல்லன்
அரும் தெய்வம் -பெறுவதற்கு அரிய தெய்வம்
பாய சீருடை =பரம்பின குணங்களை உடையனாய்
பண்புடை =நீர்மையை உடையனான
பாலகன் =இந்த சிறு பிள்ளை
மாயன் =ஆச்சர்ய சக்தி யுக்தன்
என்று = என்று சொல்லிக் கொண்டு
மகிழ்ந்தனர் =மிகவும் ஆனந்தித்தார்கள்
ஏ-அசை
இனி மேல் கண்டவள் வார்த்தை இறே
இப்படிக் கண்டு பவ்யதையையும் ஸ்நேஹத்தையும் உடையவள் அன்றியே
மட நல்லார் -என்று இவன் காட்ட கண்டவர்களும் உண்டு என்று தோற்றுகிறது-
இவன் -ஆயன் புத்திரன் அல்லன் -என்றும்
ஸ்வ யத்னத்தால் பேர் நினைப்பார்க்கு நிர்தேசிக்கவும் கூட அரியன் -என்றும்
வ்யதிரேகத்தில் நிர்ணயமும்-(ஆயன் புத்திரன் அல்லன்)
நிர்தேசத்தில் அருமையும் -(அரும் தெய்வம்)
நடவா நிற்கச் செய்தேயும்
பரந்த சீரையும் பண்பையும் உடைய பாலகன் -என்று நிர்ணயித்து
பின்னையும் மாயன் என்கையாலே
ஆச்சர்ய சக்தி உக்தன் என்று இவள் சொல்லுகையாலே
திருவாய்ப்பாடியிலே ஸ்த்ரீ வர்க்கம் முழுக்க மாயன் ஆகையாலே
ஸ்வ லாப சித்திக்கு ஹேது பூதன் என்று மகிழ்ந்தார்கள் இறே
(அவனே அவனை அடைய உபாயம் -மாயம் இதுவே -மம மாயா துரத்யயா -இத்யாதி -இதுவே ஸ்வாபதேசம் )
———————————————————————-
பத்து நாளும் கடந்த விரண்டா நாள்
எத் திசையும் சயமரம் கோடித்து
மத்த மா மலை தாங்கிய மைந்தனை
உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே –1-1-8-
பத்து நாளும் கடந்த =பத்து நாளும் கழிந்த
இரண்டாம் நாள் = இரண்டாம் நாளான நாம கரண தினத்திலே
எத்திசையும் =எல்லா திக்குகளிலும்
சய மரம் = ஜய சூசுகமான தோரணங்களை
கோடித்து = நாட்டி அலங்கரித்து
மத்த மா மலை = மதித்த யானைகளை உடைய -கோவர்த்தனம் -என்னும் மலையை
தாங்கிய = தரித்து கொண்டு நின்ற
மைந்தனை = மிடுக்கனான கண்ணனை
ஆயர் = இடையர்கள்
உத்தானம் செய்து = கைத்தலத்திலே வைத்து கொண்டு
உகந்தனர் =சந்தோஷித்தார்கள்
ஏ -அசை —
பத்து நாளும் கடந்த விரண்டா நாள்
இவர் மங்களா சாசன பரர ஆகையாலே அவதரித்த நாளை ஒழித்து
பன்னிரண்டாம் நாள் என்கிறார்
எத் திசையும் சயமரம் கோடித்து-
எல்லா திக்குகளிலும் ஒருவருக்கு ஒருவர் மேலாக வேணும் என்று வெற்றி கொண்டு
ஒன்றுக்கு ஓன்று மேலாக தோரணங்கள் நாட்டி கோடித்து கொடி கட்டி
மத்த மா மலை தாங்கிய மைந்தனை –
மத்த கஜங்கள் முதலானவை மறிந்து விழும்படியாக மலையைத் தாங்கின மைந்தன் என்றது
யுகே யுகே சம்பவாமி படியே
மைந்து -மிடுக்கும் பிள்ளையும்
உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே
ஒருவருக்கு ஒருவர் கைகளிலே எடுத்து ஆயர்கள் எல்லாரும் உகந்து செல்லா நின்றார்கள் –
——————————————————————–
பருவத்துக்குத் தக்க அல்லாத சேஷ்டிதங்களை அனுசந்தித்து –
திருத்தாயார் -சந்நிஹிதர் ஆனவர்களுக்கு சொன்ன பாசுரத்தை –
அவளான பாவனையிலே தாம் அனுபவித்து -இனியர் ஆகிறார்
கிடக்கில் தொட்டில் கிழிய வுதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய் –1-1-9-
நங்காய் =பூர்ணைகளான ஸ்திரீகளே
கிடக்கில் = இப்பிள்ளை தொட்டிலில் கிடந்தானாகில் –
தொட்டில் = தொட்டிலானது
கிழிய = சிதில மாம் படி
உதைத்திடும் -உதையா நிற்கும்
எடுத்து கொள்ளில் -இப்பிள்ளையை இடுப்பில் எடுத்து கொண்டால்
மருங்கை = இடுப்பை
இறுத்திடும் =முறியா நிற்கும்
ஒடுக்கி =வியாபார ஷபன் அல்லாதபடி செய்து
புல்கில் = மார்வில் அணைத்து கொண்டால்
உதரத்து -வயிறறிலே
பாய்ந்திடும் = பாயா நிற்கும்
மிடுக்கு = இந்த சேஷ்டைகளை பொறுக்க வல்ல சக்தி
இல்லாமையால் -பிள்ளைக்கு இல்லாமையால் –
நான் = தாயான நான் –
மெலிந்தேன் = மிகவும் இளைத்தேன்
ஏ -அசை
கிடக்கில் என்கையாலே ஓர் இடத்தில் கிடவாமை தோற்றுகிறது
தொட்டில் கிழிய உதிக்கும் -என்கையாலே
திருவடிகளில் மார்த்வத்துக்கு பயப்படுகிறார் –
தளிர் புரையும் திருவடிகள் இறே
எடுத்துக் கொள்ளில் மருங்கை முறியும்படி நோவப் பண்ணுகையாலே
இந் நோவு பிள்ளைக்கு மிக வுண்டாம் என்று பிள்ளையுடைய சேஷ்டிதங்களை அமைத்து
மார்போடு அணைக்கில் வயிற்றில் பாயா நிற்கும்
முக்த சேஷ்டிதங்கள் பல வாகையாலே இவற்றை எல்லாம் பொறுக்க வல்ல சக்தி
பிள்ளைக்கு போராது என்று போர இளைத்தேன்
நங்காய் -என்கிறது ஜாதி ஏக வசனத்தாலே
நீங்கள் எல்லாம் பருவத்துக்கு தக்க சேஷ்டிதங்களை யுடைய பிள்ளையை வளர்த்து போருகிற பூர்ணைகள் இறே-
—————————————————————————-
செந்நெலார் வயல் சூழ் திருக் கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல் விட்டு சித்தன் விரித்த விப்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே–1-1-10-
செம் நெல் =செந்நெல் தான்யமானது
ஆர் =நிறைந்து இருக்கிற
வயல் =கழனி களாலே
சூழ் = சூழப் பட்ட
திரு கோட்டியூர் =திரு கோட்டியூரிலே
மன்னு = நித்ய வாசம் பண்ணுகிற
நாரணன் = நாராயண சப்த வாச்யனாய்
நம்பி = குண பூர்ணனான கண்ணன்
பிறந்தமை = அவதரித்த பிரகாரத்தை
மின்னு நூல் = விளங்கா நின்ற யஜ்ஜோபவீதத்தை உடைய
விட்டு சித்தன் =பெரிய ஆழ்வார்
விரித்த = பரப்பி அருளி செய்ததாய்
இப்பன்னு பாடல் = ஜ்ஞானிகள் அநவரதம் அனுசந்திக்கும் படியான இப் பாசுரங்களை
வல்லார்க்கு = கற்கும் அவர்களுக்கு
பாவம் இல்லை = பாபம் இல்லை
ஏ -அசை
இத்திருமொழி கற்றாருக்கு பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார்
செந்நெலாலே நிறைந்த வயலாலே சூழப் பட்ட திருக் கோஷ்டியூரிலே நித்ய வாசம் பண்ணுகிற
திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி என்று தொடங்கி
மன்னு நாரணன் நம்பி -என்று நியமிக்கையாலே
சாதாரண அசாதாரண வ்யாவ்ருத்தமான வாக்ய த்வய குண பூர்த்தியை
மன்னு நாரணன் நம்பி -என்று அருளிச் செய்கிறார்
(ஆத்ம குணங்களை ஸ்வரூப குணங்களை சொல்லாமல் திருமேனி குணங்கள்
சரணவ்-திருவடி -திரு மேனி அழகு -பூர்வ உத்தர வாக்கியம் -திருமேனிக்கு கைங்கர்யம்
ஆகவே ஆழ்வாருக்கு திருமேனியில் பரிவு தோற்ற அருளிச் செய்கிறார் )
பிறந்தமை –
பிறந்த பிரகாரத்தை என்றது
முற்பட்ட பிறவியை ஒளித்து தாம் தொடங்கின திருவாய்ப் பாடியில் பிறப்பை
கம்ச நகரியில் நின்றும் போரப் பெறுகையாலே மறு பிறப்பாக நிகமிக்கிறார்
புனர்ஜாதம் -பால காண்டம் -77-5-என்னக் கடவது இறே
(பெருமாள் -மீண்டும் உயிர் பெற்றார் -பரசுராமன் வந்ததும் மயங்கி எழுந்து -தசரதர் வார்த்தை போல் )
பட்டர் பிரான் ஆகையால் -மின்னு நூல் -என்கிறார் ஆதல்
வேதப் பயன் கொள்ள வல்ல விட்டு சித்தன் -2-8-10-என்று
இவருடைய விஷ்ணு சப்தமும் அசாதாரணமாக சகல சாஸ்த்ரங்களாலும் பிரகாசிக்கையாலே –
மின்னு நூல் என்கிறார் ஆதல்
விஷ்ணு சித்தன் -என்று
விஷ்ணுவை தன திரு உள்ளத்திலே உடையவர் ஆகையாலே மற்று ஓன்று அறியாதவர்
விரித்த -என்கையாலே
சகல சாஸ்திரங்களையும் மங்களா சாசன பர்யந்தமாக விரித்து அருளிச் செய்தார் என்கிறது
இம் மங்களா சாசன தார தம்யம் பலருக்கும் உண்டாகையாலே
இப் பன்னு பாடல் -என்று வ்யாவர்த்திக்கிறது
வல்லார்க்கு -என்கிறது
சாபிப்ராயமாக வல்லார்க்கு என்றபடி
அதாவது
இவ் வபி மானத்தில் ஒதுங்கினார்க்கும்-
இப் பிள்ளையுடைய ஸ்திதி கமன சயநாதிகளாலே
இவரைப் போலே வயிறு மருக வேண்டும் பாபமும் இல்லை என்கிறது
————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply