இவர் இப்படி
நல்லார்கள் தம் தனயர் நீசர்க்கு ஆட் செய்ய சகிப்பரோ -என்றவாறே
நல்லார் பரவும் ராமானுசனான -ஸ்ரீ எம்பெருமானார் இவர் இங்கனே சொல்லப் பெறுமோ என்று
அத்தை சஹியாமல்
நல்லார்கள் நண்ணும் திரு நாட்டிலே நல்ல அமரரோடே ஒரு கோவையாக்கி
அவர்கள் அனுபவ கைங்கர்யத்தை இவருக்கு உண்டாக்க வேணும் என்கிற
அபிசந்தியை (திரு உள்ளத்தை ) யுடையராய் இருக்கிற ஆகாரத்தைக் கண்டு
இனி
பேறு தப்பாது -என்று அத்யவசித்து
அர்ச்சிராதி மார்க்கத்தாலே தேச விசேஷத்திலே ஏறப் போய்
பரமாத்ம சத்கார பர்யந்த்மான பல பரம்பரைகளை எண்ணி
அத்தை தாம் பெற்றதாக ஹ்ருஷ்டர் ஆகிறார் –
(ஆழ்வாரது சூழ் விசும்பு திருவாய் மொழி போல் பர ஞான தசையில் அருளிச் செய்கிறார் )
போம் வழியைத் தரும் என்னும் இன்பம் எல்லாம்
புசித்து வழி போய் அமுத விரசை யாற்றில்
நாம் மூழ்கி மலமற்றுத் தெளி விசும்பை
நண்ணி நலம் திகழ் மேனி தன்னைப் பெற்று
தாம் அமரர் வந்து எதிர் கொண்டு அலங்கரித்துச்
சத் கரிப்ப மா மணி மண்டபத்துச் சென்று
மா மலராள் கோன் மடியில் வைத்து உகக்கும்
வாழ்வு நமக்கு எதிராசன் அருளும் வாழ்வே-—20-
போம் வழியை–பரமபதத்துக்குப் போய் அனுபவிக்கும் ஆனந்தம் பரிச்சின்னம் என்னும் படி நிரவதிக போக்யமான அர்ச்சிராதி மார்க்கத்தை
தரும் என்னும் –கொடுக்கும் என்கிற
இன்பம் எல்லாம்-அவ்வழியில் உண்டான இன்பம் எல்லாம்
புசித்து –அனுபவித்து
வழி போய் –அர்ச்சிராதி மார்க்கத்திலே சென்று
அமுத விரசை யாற்றில்-அம்ருத மயமான விரஜை நதியிலே
நாம் மூழ்கி –தாப த்ரய துக்கங்கள் எல்லாம் தீர நாம் தீர்த்தமாடி
மலமற்று–ப்ராக்ருதங்களான மலங்கள் எல்லாம் கழிந்து
தெளி விசும்பை–பரிசுத்தமான பரமபதத்தை
நண்ணி –கிட்டி
நலம் திகழ் மேனி தன்னைப் பெற்று–ஸ்வரூப குணங்கள் எல்லாம் பிரகாசிக்கும் படி ஸூத்த ஸத்வ மயமான அப்ராக்ருத திவ்ய தேஹத்தைப் பெற்று
அமரர் தாம் –நித்ய ஸூரிகள்–
வந்து -எழுந்து அருளி –
எதிர் கொண்டு -ப்ரத்யுத்கரராய்
அலங்கரித்து–ப்ரஹ்ம அலங்காராதிகளாலே அலங்கரித்து
சத் கரிப்ப –ஸத் கரிக்க
அவர்கள் உடனே கூட
மா மணி மண்டபத்துச் சென்று–திரு மா மணி மண்டபத்திலே சென்று
மா மலராள் கோன் —ஸ்ரீ யப்பதியான ஸ்ரீ வைகுண்ட நாதன்
மடியில் வைத்து உகக்கும்–மடியிலே வைத்து உச்சி மோந்து உகந்து அணைக்கும்
வாழ்வு -ஸம்பத்து
எதிராசன்-எம்பெருமானார்
நமக்கு அருளும் வாழ்வே- இதில் அபேக்ஷையுடைய நமக்கு அருள் கொடையாகப் ப்ரஸாதித்து அருளும் ஸம்பத்தே –
இதில் அபேஷை யுடைய நமக்கு அருள் கொடையாக பிரசாதித்து அருளும் சம்பத்தே –
போம் வழியைத் தரும் -என்கிற ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திப்படியே
போய் புகுகிற தேச விசேஷத்தில்-
சத்காரம் எல்லாம் ஒரு சிறாங்காய் என்னும்படி
அபரிச்சேத்யமான மார்க்க சத்கார ஸூகத்தை எல்லாம் அனுபவித்து
கள்வன் கொல் ஸ்ரீ பிராட்டியைப் போலே-
அவன் முன்னே வழி நடத்த பின்னே போய்
விரஜ அம்ருதாகாரம் மாம் பிராப்ய மகா நதீம் -என்கிறபடியே
அம்ருத வாஹினியாய்-விரஜை என்னும் பேரை யுடைய சன்னதியிலே
தாப த்ரய துக்கங்கள் எல்லாம் தீர-நாம் அவஹாகித்து
அநந்தரம்
ஸ்வரூபத்துக்கு திரோதாயகமான பிராக்ருதங்களான மலங்கள் எல்லாம் கழிந்து
தெளி விசும்பு திரு நாடு என்கிற பிராப்ய தேசத்தைக் கிட்டி
ஸ்வரூப ரூப குணங்கள் எல்லாம் பிரகாசிக்கும்படி
ஸூத்த சத்வமான அப்ராக்ருத விக்ரஹத்தை லபித்து
பஹூ மந்தவ்யரான நித்ய ஸூரிகள் தாங்கள் பிரத்புக்தராய்
ப்ரஹ்ம அலங்காராதி களாலே அலங்கரித்து சத்கரிக்க-அவர்கள் உடனே கூட
திவ்ய மா மணி மண்டபத்திலே சென்று ஸ்ரீ யபதியான ஸ்ரீ வைகுண்ட நாதன்
அங்கே பரதம் ஆரோப்யம் உதித பரிஷஸ்வஜே -என்கிறபடியே
மடியிலே வைத்து-உச்சி முகர்ந்து உகந்து அணைக்கும் சம்பத்தை
எதிராசரான ஸ்ரீ எம்பெருமானார்
இதிலே அபேஷை யுடைய நமக்கு அருள் கொடையாக பிரசாதித்து அருளும் சம்பத்தே
இது ஒரு பேறு இருந்தபடியே-
(ஒழிவென்றில்லாத பல் ஊழிதோறூழி நிலாவ,போம் வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய், கழிய மிக நல்ல வான்கவி கொண்டு புலவீர்காள், இழியக் கருதியோர் மானிடம் பாடலென் னாவதே.)
————————————————–
எத்தனையேனும் அதிசய ஜ்ஞானராய் இருப்பார்க்கும் அப்ராப்யமாய் இருக்கும் பேற்றை
நீர் பெற்றதாக பேசா நின்றீர்
அது நமக்கு ஸூலபமாய் இருந்ததோ என்று தம் திரு உள்ளக் கருத்தாக
நம்முடைய ஆச்சார்யரான ஸ்ரீ பிள்ளை
நிர்ஹேதுகமாக வுபகரித்து அருளின ஜ்ஞானத்தைக் கொண்டு
அவனுடைய அபிமானமே உத்தாரகம் என்று நீ அத்யவசித்து இரு –
பெறுதற்கு அரிய பேற்றை ஸ்ரீ எம்பெருமானாரே பண்ணி அருளுவர் –
ஆகையால் இது விஷயமாக –
நிர்ப் பயோ நிர்ப் பரோஸ்மி -என்று இருக்கும் நமக்கு என்ன பயம் என்கிறார் –
(சம்சார பயம் இல்லை-ஈஸ்வர ஸ்வா தந்தர்ய பயமும் இல்லை)
திருமலை ஆழ்வார் திருவாய் மொழிப் பிள்ளை சீர் அருளால்
தரு மதி கொண்டு அவர் தம்மை யுத்தாரகராக வெண்ணி
யிரு மனமே அவர்க்காய் எதிராசர் எம்மைக் கடுகப்
பரம பதம் தன்னில் ஏற்றுவர் என்ன பயம் நமக்கே ––21-
திருமலை ஆழ்வார் -ஸ்ரீ சைல நாதர் என்னும் திரு நாமத்தை யுடைய
திருவாய் மொழிப் பிள்ளை -திருவாய் மொழிப்பிள்ளை தம்முடைய
சீர் அருளால்–நிர்ஹேதுக கிருபையாலே
தரு -ப்ரஸாதித்து அருளும்
மதி கொண்டு –ஞானத்தை ஸாதனமாகக் கொண்டு
அவர் தம்மை -இப்படி மஹா உபகாரகராய் இருக்கிற அந்தப் பிள்ளையை
யுத்தாரகராக –ஸம்ஸாரத்தில் நின்றும் உத்தரிப்பவராக
வெண்ணி யிரு மனமே –மனஸ்ஸே அத்யவசித்து இரு
அவர்க்காய் -இப்படி நம் ஆச்சார்யரான பிள்ளைக்காக
எதிராசர் –எம்பெருமானார்
எம்மை -ஸ்வ ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் என்று இருக்கிற நம்மை
கடுக–ஸீக்ரமாக
பரம பதம் தன்னில் –பரமபதத்தில்
ஏற்றுவர் –ஏற்றி அருளுவர்
என்ன பயம் நமக்கே –ஏதத் விஷயமாக நமக்கு என்ன பயம்
ஒரு பயமும் வேண்டாம் –
மார்பிலே கை வைத்து நிர்ப் பயமாய் உறங்கும் அத்தனை
அன்றோ என்று கருத்து
ஸ்ரீ திருமலை ஆழ்வார் என்று நிரூபகத்தை யுடையவராய்
பின்பு ஸ்ரீ திருவாய்மொழியில் அவகாஹநத்தாலே
ததேக நிரூபணீயராய் இருக்கிற ஸ்ரீ பிள்ளை தம்முடைய நிர்ஹேதுக கிருபையாலே பிரசாதித்து அருளும்
(அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணை: தாஸ்யம் உபாகத: கிருதஞ்ஜஸ்ய பஹுஞ்ஜஸ்ய லக்ஷ்மணோ நாமநாமத:)
பொருவில் மதி -என்னும்படியான தத் விஷய ஞானத்தை சாதனமாகக் கொண்டு
அந்த ஜ்ஞான பலமாக இப்படி மகோ உபகாரகராய் இருக்கிற
அந்த ஸ்ரீ பிள்ளையை-
உத்தாரயதி சம்சாராத் ததுபாய ப்லேவே நது-என்கிறபடியே
சம்சாரத்தில் நின்றும் உத்தரிப்பிக்குமவராக-மனசே அத்யவசித்து இரு
இப்படி-நம் ஆச்சார்யரான ஸ்ரீ பிள்ளைக்காக எதிகளுக்கு நாதரான ஸ்ரீ எம்பெருமானார்
தாமே
ஸ்வ ஆச்சார்ய (ஸதாச்சார்ய)அபிமானமே உத்தாரகம் -என்று இருக்கிற நம்மை ஏன்று கொண்டு
சீக்ரமாக ஏற்ற அரும் ஸ்ரீ வைகுந்தம் -(7-6-10)ஏன்று
துஷ் பிராபகமாய் சொல்லப்படுகிற பரம பதத்திலே ஏற்றி அருளுவர்
மனமே நையல் மேவுதற்கே -என்கிறபடி
ஏதத் விஷயமாக நமக்கு என்ன பயம் ஒரு பயமும் வேண்டா –
(ஏற்றரு வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர்குலத்து
ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றிக்
கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே.-7-6-10-அங்கு பலராமானுஜன் -இங்கு ராமானுஜர்)
மார்பிலே கை வைத்து உறங்கும் அத்தனை அன்றோ -என்ற கருத்து
அசிந்த்யஸ்த்வா பூமௌ-இத்யாதி
ப்ரபத்ய த்வாமத்ய -இத்யாதி-
(அத்தனாகி அன்னையாகி யாளும் எம்பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115)
நிஷ் கல்மஷைர் நிஹத ஜென்ம ஜரா விகாரைர் பூயிஷ்ட பக்தி விபவை அபவை அவாப்யம் அந்யைர் அதந்ய புருஷைர் மநசாபி அநாப்யம் வைகுண்ட நாம தவ தாம தத் ஆம நந்தி –-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்-45-
கல்மஷம் அற்றவர்களாயும் -பிறப்பு மூப்பு முதலிய விகாரங்களைத் தொலைத்தவர்களாயும் பக்திச் செல்வம் மிகுந்தவர்களாயும் உள்ள முமுஷுக்களாலே அடையத் தகுந்ததாய் மற்றையோர்களான தரித்ரர்களாலே நெஞ்சினாலும் அணுகத் தகாததாய் உள்ள -அப்படிப்பட்ட ஸ்ரீ வைகுண்டம் என்னும் ஸ்தானத்தை -எம்பெருமானே -தேவரீருடைய இருப்பிடமாகச் சொல்லுகின்றார்கள் –
—————————————————————-
என்ன பயம் நமக்கே -என்று நிர்பயரான இவர்
இதில்
அஸ்மத் குரு தாயாயத யதீந்தி ராங்கி க்ரியான்வய -என்கிறபடியே
ஸ்ரீ பிள்ளை யுடைய நிர்ஹேதுக கிருபையாலே ஸ்ரீ எம்பெருமானாருடைய அபிமான நாவா ரூடனாய்
சம்சார சாகரத்தைக் கடந்து ஸ்ரீ யபதியுடைய ஸ்ரீ பாத கூலத்தை பிராபிப்பேன் -என்று நிச்சயிக்கிறார் –
தீதற்ற ஞான திருவாய்மொழிப் பிள்ளை சீர் அருளால்
ஏதத்தை மாற்றும் எதிராசர் தமபிமானம் என்னும்
போதத்தை ஏறிப் பவமாம் புணரி தனைக் கடந்து
கோதற்ற மாதவன் பாதக் கரையைக் குறுகுவனே –22-
தீ தற்ற –குற்றம் அற்ற
ஞான –ஆத்ம ஞான குணங்களுடைய
திருவாய்மொழிப் பிள்ளை –திருமாலவன் கவியான திருவாய் மொழியிலே அவஹாகநத்தை யுடைய வராகையாலே அத்தையிட்டு நிரூபிக்கும் படியான ஆதிக்யத்தை யுடையரான பிள்ளையுடைய
சீர் அருளால்–நிர்ஹேதுக கிருபையாலே
ஏதத்தை –காமாதி தோஷங்களை
மாற்றும் -போக்கடிக்கிற
எதிராசர் தம் –எதிகளுக்கு நாதராய் இருக்கிற எம்பெருமானாருடைய
அபிமானம் என்னும்–அபிமானம் என்கிற
போதத்தை ஏறி-நிர் அபாயமான விஷ்ணு போதம் போன்ற வைஷ்ணவ கப்பலை ஏறி
பவமாம் புணரி தனைக் கடந்து–ஸம்ஸாரமாகிற பெரும் கடலைக் கடந்து
கோதற்ற மாதவன் பாதக் கரையை–விண்ணோர் பிரான் மாசில் மலரடிக்கீழ் -என்றும் -துயரறு சுடரடி -என்றும் சொல்லுகிறபடியே
அகில ஹேய ப்ரத்ய நீகமாய் –நிரவதிக தேஜோ ரூபமாய் -பரம ப்ராப்யமுமாய் இருக்கிற ஸ்ரீ யபதியினுடைய திருவடிகளாகிற தீரத்தை
குறுகுவன் –கிட்டப் பெறுவேன்
ஏ -பூரணம்
ஸ்ரீ விஷ்ணு போதம் போன்ற ஸ்ரீ வைஷ்ணவ கப்பல் ஏறி – விண்ணோர் பிரானார் மாசற்ற மலரடிக் கீழ் –
துயர் அறு சுடர் அடி -அகில ஹேய பரத்ய நீக-நிரவதிக தேஜோ ரூபமாய்-பரம பிராப்யம் –
தத் ஞானம் அஞ்ஞானம் அதோன்ய துக்கம் -என்றும்
வித்யான்ய அசிலபநை புணம்-என்றும் சொல்லுகிறபடியே-
பகவத் அந்ய பரமாம் குற்றம் அன்றிக்கே
தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -என்கிறபடியே
ஸ்ரீ யபதி விஷயமாக யுடைத்தாய்
அது தான் ததீய பர்யந்தமாக இருக்கிற ஞானத்தை யுடையராய்
அதுக்கு மேலே
வறை முருகலான ஆர்ஷ வசனங்களை த்ருணவக்கரித்து-
ஸ்ரீ திருமால் அவன் கவியான ஸ்ரீ திருவாய் மொழியில்
அவகஹா நத்தை யுடையவர் ஆகையாலே அத்தை இட்டு நிரூபிக்கும்படியான ஆதிக்யத்தை யுடையரான
ஸ்ரீ பிள்ளையினுடைய நிர்ஹேதுக கிருபையினாலே
காமாதி தோஷ ஹரராய்-எதிகளுக்கு நாதராய் இருக்கும் ஸ்ரீ எம்பெருமானார் தம்முடைய அபிமான ரூபமாய் இருப்பதாய்
இதம் ஹி வைஷ்ணவம் போதம் சம்ய தாஸ்தே பவார்ணவே-என்கிறபடியே
நிர் அபாயமான விஷ்ணு போதம் போன்ற ஸ்ரீ வைஷ்ணவ போதத்தை ஆரோஹித்து
சம்சார சாகரம் கோரம் -என்று சொல்லப்படுமதான சம்சாரம் ஆகிற சமுத்ரத்தைக் கடந்து –
(பிரிந்த துன்பக் கடல் கடத்தும் விஷ்ணு போத ஆந்ரு சம்ச்யம் நாவாயிலே நிழல் எழும் ..சூரணை -180-
( கிருபை -சாமான்யம் -ஆந்ரு சம்சயம் ஆஸ்ரிதர்களுக்கு விசேஷ கிருபை
மெலிவிலும் சேமம் கொள்விக்கும் கிருபை தென்னகரிலே நித்யம்-165 )
விண்ணோர் பிரானார் மாசற்ற மலரடிக் கீழ் – துயர் அறு சுடர் அடி –
அகில ஹேய பரத்ய நீக-நிரவதிக தேஜோ ரூபமாய்
வேறு ஒரு பிரப்யாந்தரத்தை அபேஷிக்கும்படியான கோது இன்றிக்கே
ஸ்ரீ யபதியினுடைய திருவடிகள் ஆகிற தீரத்தை கிட்டப் பெறுவன்-இது நிச்சயம் –
வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது
பேசும்படி யன்ன பேசியும் போவது நெய் தொடு வுண்
டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார்
மாசின் மலரடிக் கீழ் எம்மை சேர்விக்கும் வண்டுகளே -54
ஸ்ரீ பிராட்டி கடாஷத்துக்கு விஷயமான பின்பு ஸ்ரீ திருவடி
ராமஸ்ய லோக த்ரய நாயகஸ்ய ஸ்ரீ பாத கூலம் மனஸா ஜகாம-என்று அடைந்ததாக அத்யவசித்தான் இறே-
மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்டாய் மாதவா -என்று தொடங்கி
உன் தேனே மலரும் திருப் பாதம் வினையேன் சேருமாறு நீ அருளாய் -என்று அர்த்திக்க வேண்டிற்று இறே
கோதற்ற மாதவன் -என்று கோது அறுகையாவது அவனுக்கு விசேஷணம் ஆன போது
ஸ்ரீ பிராட்டியோடு கூடி இருக்கையாலே-திருவில்லாத கோது அற்றவன் என்னவுமாம்
ஸ்ரீ யபதி இறே நித்ய பிராப்யன் ஆவான் –
———————————————————-
கீழே இரண்டு பாட்டாலும்
ஸ்வ ஆச்சார்யகளான–பரம ஆச்சார்யகளான ஸ்ரீ பிள்ளை யுடையவும் ஸ்ரீ எம்பெருமானார் யுடையவும்
அபிமானத்தாலே பேறு தப்பாது என்று நிச்சயித்து
இப்படி நிச்சிதமான பின்பு
வடிவுடை மாதவன் -என்னும்படி
புதுக் கணிப்போடு சபரிகரனாய் -திவ்ய ஆஸ்தான மண்டபத்திலே
திவ்ய சிம்ஹாசனத்திலே திவ்ய மகிஷி பரிவ்ருதனாய் எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ மன் நாராயணான
ஸ்ரீ வைகுண்ட நாதனை கடுக அனுபவிக்கும்படி – எனக்கு நாதரான தேவர் பண்ணி யருள வேணும் – என்கிறார் –
(குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–10-9-8-)
அடியார்கள் குழாங்கள் அழகு ஓலக்கம் இருக்க
ஆனந்த மயமான மா மணி மண்டபத்து
படியாதுமில் படுக்கையாய் இருக்கும் அனந்தன்
பணா மணிகள் தம்மின் ஒளி மண்டலத்தின் இடையில்
வடிவாரும் மா மலராள் வலவருகும் மற்றை
மண் மகளும் ஆய்மகளும் இடவருகும் இருக்க
நடுவாக வீற்று இருக்கும் நாரணனைக் கடுக
நான் அனுபவிக்கும் வகை நல்கு என் எதிராசா —-23-
என் எதிராசா-அடியேனுக்கு ஸ்வாமியாய் –யதிகளுக்கு நாதரானவரே
அடியார்கள் குழாங்கள் -நித்ய முக்த ப்ருந்தங்கள் -அநந்த கருட விஷ்வக் ஸேந ப்ரமுகரான நித்ய வர்க்கமும் –பராங்குச பரகால யதிவராதிகள் தொடக்கமான முக்த வர்க்கமும்
மணிகளையும் முத்துக்களையும் நிறைத்தாப் போலே
அழகு ஓலக்கம் இருக்க-அழகு ஓலக்கமாக வரிசை அடைவே ஸேவித்து இருக்க
ஆனந்த மயமான மா மணி மண்டபத்து–நிரதிசய ஆனந்த ஜனகமான திரு மா மணி மண்டபத்திலே
படியாதுமில் -உபமானம் ஒன்றும் இல்லாமல் இருப்பதான
படுக்கையாய் இருக்கும் -திவ்ய பர்யங்கமாய் இருக்கும்
அனந்தன்–திரு வனந்தாழ்வானுடைய
பணா மணிகள் தம்மின் ஒளி மண்டலத்தின் இடையில்–பணா ரத்னங்களின் ஜ்யோதிர் மண்டலத்தின் நடுவே
வடிவாரும் மா மலராள் –வடிவாய் உன் வல மார்பினில் வாழ்கின்ற மங்கை -என்கிறபடியே
சவுந்தர்யத்தால் மிக்கு ஸுகுமார்யத்தை யிட்டு நிரூபிக்கும் படியான பெரிய பிராட்டியார்
வலவருகும் –வலது பக்கத்திலும்
மற்றை மண் மகளும் ஆய்மகளும் -தத் அந்யரான பூமிப்பிராட்டியும் நீளாதேவியும
இடவருகும் இருக்க-இடது பக்கத்திலும் ஸேவித்து இருக்க –
நடுவாக வீற்று இருக்கும் –இவர்களுக்கு நடுவே மூன்று மின் கொடிகளோடே கூடி தாமரை பூத்ததொரு காளமேகம் போலே
வீற்று இருந்து ஏழு உலகும் தனிக்கோல் செல்ல எழுந்து அருளி இருக்கிற
நாரணனை —ஸ்ரீ வைகுண்ட நாதனை
கடுக–சீக்கிரமாக
நான் -அடியேன்
அனுபவிக்கும் வகை –அனுபவிக்கும் பிரகாரத்தை
நல்கு –ப்ரஸாதித்து அருள வேண்டும்
என் எதிராசா நல்கு என்று இவ்விடத்திலே ஸம்போதிக்கவுமாம்
அடியேனுக்கு ஸ்வாமியாய்-எதிகளுக்கு நாதர் ஆனவரே
அடியார்கள் குழாங்கள் -என்றும்
மா மணி மண்டபத்து அந்தமில் பேரின்பத்து அடியவர் -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்ரீ அனந்த
ஸ்ரீ கருட
ஸ்ரீ விஷ்வக்சேன
பிரமுகரான நித்ய வர்க்கமும்
ஸ்ரீ பராங்குச
ஸ்ரீ பரகால
ஸ்ரீ யதிவராதிகள்
தொடக்கமான முக்த வர்க்கமும்
மணி முத்தாதிகளை நிறைத்தால் போலே அழகு ஓலக்கமாக வரிசை அடைவே சேவித்து இருக்கிற
ஆனந்த மயாய மண்டபாத் நாயநம-என்கிறபடியே நிரஸ்த அதிசய ஆனந்த ஜனகமான
திரு மா மணி மண்டபத்திலே-அசேஷ சேஷ வ்ருத்திகளுக்கும்
சைத்ய மார்த்வாதிகளுக்கும் உபமானம் அன்றியிலே இருப்பதான திவ்ய பர்யங்கம் ஆகிற
ஆயிரம் பைந்தலைய அனந்தன் -என்றும்
சிறப்புடைய பணங்கள் மிசைச் செழும் மணிகள் விட்டு எரிக்கும் -என்றும்
தெய்வச் சுடர் நடுவுள் -என்றும் சொல்லுபடியான பணா மண்டலங்களின் ஜோதிர் மண்டலத்தின் நடுவே-
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கை -என்றும்
வடிக் கோல வாள் நெடும் கண் மா மலராள் -என்றும் சொல்லுகிறபடியே
சௌந்தர்யத்தாலே மிக்கு சௌகுமார்யத்தை இட்டு நிரூபிக்கும் படியான ஸ்ரீ பெரிய பிராட்டியார் வலவட்டத்திலும்-
ஏவம் பூதைகளாய்
அவளுக்கு நிழல் போல்வனரான மற்றை ஸ்ரீ நாய்ச்சிமார் இடவட்டத்திலும் சேவித்து இருக்க
இவர்களுக்கு நடுவே
மூன்று மின் கொடிகளோடு கூடி தாமரைப் பூத்த தொரு காளமேகம்
வெள்ளி மலைக்கு இனியப் படிந்து இருக்குமா போலே
வீற்று இருந்து ஏழ் உலகம் தனிக் கோல் செல்ல எழுந்து அருளி இருக்கிற வாழ் புகழ் நாரணனான
ஸ்ரீ வைகுண்ட நாதனைக் கால விளம்பம் இன்றிக்கே கடுக நான் அனுபவிக்கும் பிரகாரம்
இவன் இத்தைப் பெற்றிடுவான் என்று ஸ ஸ்நேஹமாக உபகரித்து அருள வேணும் –
என் எதிராச நல்கு -என்று
இவ்விடத்தில் சம்போதிக்கவுமாம் –
அடியிலே ஆகவுமாம்-
————————————————————————
இதில் –
தேக விமோசகம் தொடங்கி-பலத்தின் எல்லையான
தேசிகரோடு ஒரு கோவையாய் இருக்கும் அளவாய் இருக்கிற
பேற்றை அபேஷித்து அருளுகிறார் –
இந்த வுடல் விட்டு இரவி மண்டலத்தூடு ஏகி
இவ்வண்டம் கழித்து இடையில் ஆவரணம் ஏழ் போய்
அந்தமில் பாழ் கடந்து அழகார் விரசை தனில் குளித்து அங்கு
அமானவனால் ஒளிக் கொண்ட சோதியும் பெற்று அமரர்
வந்து எதிர் கொண்டு அலங்கரித்து வாழ்த்தி வழி நடத்த
வைகுந்தம் புக்கு மணி மண்டபத்துச் சென்று
நம் திருமால் அடியார்கள் குழாங்களுடன் கூடும்
நாள் எனக்குக் குறுகும் வகை நல்கு என் எதிராசா--24-
என் எதிராசா–அடியேனுக்கு ஸ்வாமியுமாய் யதிகளுக்கு நாதரான எம்பெருமானாரே
இந்த வுடல் –ஹேயமான இந்த ஸ்தூல ஸரீரத்தை
விட்டு -த்யஜித்து
இரவி மண்டலத்தூடு ஏகி–ஸூர்ய மண்டலத்தைக் கீண்டு அவ்வருகே போய்
இவ்வண்டம் –இந்த ப்ரஹ்மாண்டத்தை
கழித்து -கடந்து
இடையில் -நடுவில் உள்ள
ஆவரணம் ஏழ் போய்–ஸப்த ஆவரணங்களையும் கடந்து
அந்தமில் –முடிவில்லாத
பாழ் கடந்து –மூலப் பிரக்ருதியைத் தாண்டி
அழகார் -அத்யந்த ரமணீயமாய் இருக்கிற
விரசை தனில் குளித்து -விரஜா நதியில் ஸ்நானம் பண்ணி
அங்கு-அவ்விடத்தில்
அமானவனால் -அமானவனுடைய கர ஸ்பர்சத்தாலே
ஒளிக் கொண்ட சோதியும் பெற்று -நிரவதிக தேஜோ ரூபமான திவ்ய தேஹத்தையும் பெற்று
அமரர் வந்து எதிர் கொண்டு –நித்ய ஸூரிகள் எதிர் கொண்டு எழுந்து அருளி
அலங்கரித்து -பர ப்ரஹ்மத்தை அலங்கரிக்குமா போலே அலங்கரித்து
வாழ்த்தி -ஸ்தோத்ரம் பண்ணி
வழி நடத்த–மார்க்கத்தில் நடப்பிக்க
வைகுந்தம் புக்கு -வைகுண்ட மா நகரத்தைப் பிரவேசித்து
மணி மண்டபத்துச் சென்று–திரு மா மணி மண்டபத்தைக் கிட்டி அடியார்களுமாகிற நித்ய ஸூரிகளுடைய
நம் திருமால் அடியார்கள் -நமக்கு ஸ்வாமிகளும் ஸ்ரீ யபதிக்கு
குழாங்களுடன் -ப்ருந்தங்களோடு
கூடும் நாள் –கூடுகிற அந்த தினமானது
எனக்குக் குறுகும் வகை -அடியேனுக்கு ஸமீபமாகிற பிரகாரத்தை
நல்கு -ப்ரஸாதித்து அருள வேணும்
அடியேனுக்கு ஸ்வாமியாய் -எதிகளுக்கு நாதரானவரே –
இம் மாய வாக்கை -என்னுமா போலே அத்யந்தம் ஹேய சமுதமாய் இருக்கிற இந்த ஸ்தூல சரீரத்தை
உபேஷையோடே மங்க ஒட்டு -என்று த்யஜித்து –
(என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே–10-7-3-)
(மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-)
மன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின் நன் நடுவுள் அன்ன தோர் இல்லியினூடு போய்(பெரிய திருமடல்) -என்கிறபடியே
அவன் மண்டலத்தைக் கீண்டு அவ்வருகே போய்
மற்றும் ஆதிவாஹிக புருஷர்களாய் யுண்டானவர்கள் லோகங்கள் எல்லாம் கடந்து
இமையோர் வாழ் தனி முட்டை கோட்டையாய்
கோடி யோஜனமான வளப்பத்தை யுதைத்தான அண்ட கபாலத்தை பேதித்து-அத்தை ஒரு படி கழித்து
மத்யே யுண்டான தசோத்தரமான ஆவரண சப்தத்தையும் கடந்து
அவ் வருகே போய்
காட்டி நீ கரந்துஉமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டைக்
கோட்டையினிற் கழித்து எனை உன் பொழுஞ்சோதி உயரத்துக்
கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?
முடிவில் பெரும் பாழான மூல பிரக்ருதியையும் கடந்து அத்யந்த ரமணீயமாய் இருப்பதொரு விரஜை என்று
பிரசித்தமான அந் நதியிலே ஸ்நானம் பண்ணி-அவ் விடத்தில் அவமானவன் கர ஸ்பர்சத்தாலே
ஒளிக் கொண்ட சோதியுமாய்-என்கிறபடியே
பஞ்ச உபநிஷண் மயமாகையாலே நிரவதிக தேஜோ ரூபமான திவ்ய விக்ரஹத்தை பெற்று
முடியுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள -என்கிறபடியே ஸ்ரீ நித்ய ஸூரிகள் பிரத்யுக்தராய்
ப்ரஹ்ம அலங்காராதி களாலே அலங்கரித்து ஸ்தோத்ரம் பண்ணிக் கொண்டு வழி நடத்திப் போய்
(களிப்பும் கவர்வுமற்றுப் பிறப்புப் பிணி மூப்பிறப்பற்று,
ஒளிக் கொண்ட சோதியுமா யுடன் கூடுவதென்று கொலோ,
துளிக்கின்ற வானிந்நிலம் சுடராழி சங்கேந்தி,
அளிக்கின்ற மாயப் பிரானடியார்கள் குழாங்களையே.)
ஸ்ரீ வைகுண்டம் ஆகிற திவ்ய நகரத்தை பிரவேசித்து பெரும் தெருவாலே உள்ளே போய்
ஆனந்த மயமான திரு மா மணி மண்டபத்தைக் கிட்டி சென்று
அடியார்கள் குழாங்கள் உடன் கூடுவது என்று கொலோ -என்றும்
மத் தேவதை பரிஜனைஸ் தவ சங்கிஷீய-என்கிறபடியே நமக்கு ஸ்வாமிகளாய் ஸ்ரீயபதியுடைய திருவடிகளிலே
ந்யஸ்த பரராய் அதுவே நிரூபகமாய் இருக்கிற ஸூரி சங்கங்கள் உடன் கூடுகிற அந்த திவசமானது
குறுக்கும் வகை யுண்டு கொலோ (9-8)-என்கிறபடியே அத்தை அபேஷிக்கிற எனக்கு
அது சமீபமாம் பிரகாரம் உபகரித்து அருள வேணும்
இவ் விடத்தில் நல்கல் -கொடுத்தல் –
(ப்ரஹ்மம் ஜகத் காரணமே -சமன்வய அத்யாயம்
ப்ரஹ்மமே ஜகத் காரணம் -அவிரோத அத்யாயம்
சாதன அத்யாயம்
பல அத்யாயம் -சூழ் புனல் -அர்ச்சிராதி மார்க்கம் -நச புனர் ஆவர்த்தி-ஸ்வரூப ஆவிர்பாவம்
அப்ராக்ருத திருமேனி-ஸாம்யாபத்தி-அநுபவ ஜெனித ப்ரீதி காரித வழு விலா நித்ய கைங்கர்யம்)
———————————————————-
நீரோ உம்முடைய அபராதம் பாராமல் கனத்த அப் பேற்றை அபேஷியா நின்றீர் –
அதுக்கு நாம் செய்வது என் என்று ஸ்ரீ எம்பெருமானாருக்கு நினைவாக
அடியேனை அங்கீ கரித்த அன்று தொடங்கி இன்றளவும் வர அடியேனுடைய அபராதங்களையும் பொறுத்து
உபேஷியாதே மோஷத்தையும் கொடுப்பாராக எண்ணி இருக்கிற தேவரீர் கால விளம்பம் பண்ணாமல்
அத்தைச் செய்து அருள வேணும் என்கிறார்-
என்று நிர்ஹேதுகமாக வென்னை யபிமாநித்து
யானும் அது அறிந்து உனக்கேயாய் இருக்கும் வகை செய்தாய்
அன்று முதல் இன்று அளவும் அநவரதம் பிழையே
அடுத்து அடுத்துச் செய்து அனுதவிப்பது இனிச் செய்யேன்
என்று உன்னை வந்து இரப்பதாம் என் கொடுமை கண்டும்
இகழாதே இரவு பகல் அடிமை கொண்டு போந்தாய்
இன்று திரு நாடும் எனக்கு அருள வெண்ணுகின்றாய்
இனிக் கடுகச் செய்து அருள வேண்டும் எதிராசா –25–
எதிராசா–யதிகளுக்கு நாதரான எம்பெருமானாரே
என்று -எந்த தினத்தில்
நிர்ஹேதுகமாக –காரணமின்றி
வென்னை யபிமாநித்து-அடியேனை இவன் நம்முடையவன் என்று அபிமானித்து அருளி
யானும் அது அறிந்து –அடியேனும் அந்த அபிமான விசேஷத்தை அறிந்து
உனக்கேயாய் இருக்கும் –தேவரீருக்கே அநந்யார்ஹ சேஷமாய் இருக்கத் தக்க
வகை செய்தாய்-பிரகாரத்தை செய்து அருளினீரோ
அன்று முதல் இன்று அளவும் -அந்தத் தினம் தொடங்கி இந்நாள் வரையிலும்
பூர்வ வாஸனை விடாமல்
அநவரதம் பிழையே-நிரந்தரம் அபராதமே
அடுத்து அடுத்துச் செய்து -இடைவிடாமல் செய்து விட்டு
அனுதவிப்பது -இப்படிச் செய்தோமே என்று அநு தவிப்பது
இனிச் செய்யேன் என்று -இனி மேல் செய்ய மாட்டேன்
உன்னை வந்து இரப்பதாம் -தேவரீரை அர்த்திப்பதாகிய
என் கொடுமை கண்டும்-அடியேனுடைய க்ரூர க்ருத்யங்களைக் கடாக்ஷித்தும்
இகழாதே –உபேஷியாமல்
இரவு பகல் அடிமை கொண்டு போந்தாய்-திவா ராத்ரமும் தேவரீர் திருவடிகளிலே கைங்கர்யம் கொண்டு அருளினீர்
இம் மாத்ரமும் அல்லாமல்
இன்று திருநாடும் -இன்றைய தினம் பரம பதத்தையும்
எனக்கு அருள வெண்ணுகின்றாய்-அடியேனுக்கு கிருபை செய்ய திரு உள்ளம் பற்றி அருளுகிறீர்
இப்படி அபார கருணா ஸம்ருத்தியை யுடையவராகையாலே
இனிக் கடுகச் செய்து அருள வேண்டும் -இனி ஸீக்ரமாக அதை கிருபை செய்து அருள வேணும்
எதிகளுக்கு நாதரான தேவரீர் இவ் வாத்மாவை என்று நிர்ஹேதுகமாக இவன் நம்முடையவன் என்று அபிமானித்து அருளி –
அடியேனும் அந்த அபிமான விசேஷத்தை அறிந்து தேவரீருக்கே அனன்யார்ஹமாம் படி செய்து அருளிற்று
அப்படியே அபிமானித்து அருளின அன்று தொடங்கி தேவரீர் திருவடிகளை பிராபிக்க இருக்கிற இன்றளவும்
நிரந்தரம் அபராதமே இடைவிடாமல் செய்து
இப்படி அக்ருதயமானவற்றைச் செய்தோம் என்று அனுதவிப்பது –
இனி இப்படிப் பட்ட அபராதங்களைச் செய்யேன் என்று தேவரீரை அர்த்திப்பதாகிய
என்னுடைய க்ரூர கர்மம் கண்டு உபேஷியாமல்
இங்கும் திவா ராத்திரி விபாகம் அற தேவரீர் திருவடிகளில் கைங்கர்யம் கொண்டு அருளினீர்
அவ்வளவும் அன்றிக்கே
இன்று சத்துக்களுக்கு கந்தவ்ய பூமியான ஸ்ரீ திரு நாட்டையும் யோக்யதை இல்லாத எனக்கு
பிரசாதிப்பதாக இச்சித்து அருளா நிற்கிறீர்
இப்படி செய்ய வேண்டியற்ற பின்பு காலக் கழிவு செய்யாமல் கடுக செய்து அருள வேணும்-
(புண்ணிய நோன்பு புரிந்துமிலேன் அடி போற்றி செய்யும்
நுண்ணரும் கேள்வி நுவன்றுமிலேன் செம்மை நூற் புலவர்க்
கெண்ணரும் கீர்த்தி இராமானுச ! இன்று நீ புகுந்ததென்
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற விக் காரணம் கட்டுரையே – – 92–)
(தவந்தரும் செல்வம் தகவும் தரும் சரியா பிறவிப்
பவந்தரும் தீவினை பாற்றித் தரும் பரந்தாம மென்னும்
திவந்தரும் தீதிலிராமானுசன் தன்னைச் சார்ந்தவர் கட்கு
உவந்தருந்தேன் அவன் சீரன்றி யான் ஒன்றும் உள் கலந்தே – – – 94- )
————————————————–
இவர் தம்மை அங்கீ கரித்த அன்று தொடங்கி இன்றளவும் உண்டான அபராத சஹத்வாதிகளை ஆவிஷ்கரித்த வாறே
நம்மை ஒழிய வேறு ஒருவர் இவர் குற்றங்களைப் பொறுத்து ரஷிக்க வல்லார் உண்டோ –
இனி இவருக்கு மேல் உண்டான காரியமும் நாமே செய்து அருளி தலைக் கட்ட வேணும்
என்று ஸ்ரீ எம்பெருமானாருக்கு நினைவாக
பாவஞ்ஞர் ஆகையாலே அவர் கருத்து அறிந்து இப்படி அகதிகளுக்கே கதியாக இருக்கிற தேவரை ஒழிய
என்னுடைய அபராதங்களைப் பொறுத்து ரஷிக்க எத்தனை குணவான்களான
ஸ்ரீ பெரிய பெருமாள் முதலானார்க்குத் தான் முடியுமோ –
(உண்ணின்று உயிர் களுக்கு உற்றனவே செய்து அவர்க்கு உயவே
பண்ணும் பரனும் பரிவிலனாம் படி பல்லுயிர்க்கும்
விண்ணின் தலை நின்று வீடளிப்பன் எம்மிராமானுசன்
மண்ணின் தலத் துதித்துய் மறை நாலும் வளர்த்தனனே – – -95-)
இனி
பிராப்ய ருசியையும் யுண்டாக்கி-பிராப்ய தேசத்தில் சேரும்படி பண்ணி அருள வேணும் என்கிறார்
அன்றிக்கே
அநவரதம் செய்கிற அபராதங்களை க்ஷமித்து ரஷிக்கும் போது
ஸ்ரீ பெரிய பெருமாள் முதலானார் ஆக வேண்டாவோ என்ன
அது நமக்கு அன்றி யாவர்க்கு முடியும் என்கிறார் ஆகவுமாம் –
தென்னரங்கர் தமக்காமோ தேவியர் கட்காமோ
சேனையர் கோன் முதலான ஸூரியர்கட்காமோ
மன்னிய சீர் மாறன் அருள் மாரி தமக்காமோ
மற்றுமுள்ள தேசிகர்கள் தங்களுக்காமோ
என்னுடைய பிழை பொறுக்க யாவருக்கு முடியும்
எதிராசா உனக்கன்றி யான் ஒருவர்க்கும் ஆகேன்
உன்னருளால் எனக்கு ருசி தன்னையும் யுண்டாக்கி
ஒளி விசும்பில் அடியேனை யொருப்படுத்து விரைந்தே—-26-
எதிராசா –எம்பெருமானாரே
அடியேனுடைய அபராதங்களை க்ஷமிக்க
தென்னரங்கர் தமக்காமோ –பெரிய பெருமாளுக்குத் தான் ஸக்யமோ
தேவியர் கட்காமோ–பெரிய பிராட்டியார் தொடக்கமான நாய்ச்சிமார்களுக்குத் தான் ஸக்யமோ
சேனையர் கோன் முதலான –சேனாதிபதியாழ்வான் தொடக்கமான
ஸூரியர்கட்காமோ-நித்ய ஸூரிகளுக்குத் தான் ஸக்யமோ
மன்னிய –நித்யமாய் இருக்கிற
சீர் –ஆஸ்ரித விஷயத்தில் வாத்சல்யாதி திருக்கல்யாண குணங்களை யுடையவரான
மாறன் -இன்ப மாரியான-நம்மாழ்வார்
அருள் மாரி –சேதனர் விஷயத்தில் கிருபையை வர்ஷிக்கிற திருமங்கை யாழ்வார்
தமக்காமோ–இவர்களுக்குத் தான் ஸக்யமோ
மற்றுமுள்ள தேசிகர்கள் -மற்றும் உண்டான நாத யாமுனாதிகளான ஆச்சார்யர்கள்
தங்களுக்காமோ-அவர்களுக்குத் தான் ஸக்யமோ
என்னுடைய பிழை பொறுக்க -அடியேனுடைய அபராதங்களை ஸஹிக்க
யாவருக்கு முடியும்–எவர்களுக்குத் தான் ஸக்யமாகும்
உனக்கன்றி –தேவரீருக்கு அன்றி
யான் ஒருவர்க்கும் ஆகேன்-அடியேன் மற்ற ஒருவருக்கு சேஷபூதன் ஆகேன்
உன்னருளால் –தேவரீருடைய கிருபையாலே
எனக்கு ருசி தன்னையும் யுண்டாக்கி-அடியேனுக்கு ப்ராப்ய ருசியையும் விளைத்து
ஒளி விசும்பில் –நிரவதிக தேஜோ ரூபமான பரமபதத்தில்
அடியேனை யொருப்படுத்து விரைந்தே-தாஸனை அதி ஸீக்ரமாக சேர்த்து அருள வேணும்
ஏ பாத பூர்ணம்
எதிகளுக்கு நாதரானவரே-ஸ்வதஸ் சர்வஞ்ஞனான ஸ்ரீ சர்வேஸ்வரனாலும் பரிகணித்து முடியாத
அடியேனுடைய அபராதங்களை ஷமிக்க-
தோஷா யத்யபி தஸ்ய ஸ்யாத்-என்றும்
என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றே செய்தார் -என்றும்
பேசும்படியான ஸ்ரீ பெரிய பெருமாளுக்குத் தான் சக்யமோ –
(மித்ர பாவேன ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதாஞ்சனா |
தோஷோ யதி அபி தஸ்ய ஸ்யாத் ஸதாம் ஏதத் அகர்ஹிதம் ||6-18-3
“எந்த வகையிலும், நட்பான தோற்றத்துடன் வரும் எவரையும், குறையிருந்தாலும் நான் கைவிடுவதில்லை. நல்ல மனிதர்களின் பார்வையில் அவர் ஏற்றுக்கொள்வது குறைபாடற்றது”)
(தன்னடியார் திறத்தகத்துத் தாமரையா ளாகிலும் சிதகு ரைக்குமேல்
என்னடியார் அதுசெய்யார் செய்தாரேல் நன்றுசெய்தா ரென்பர் போலும்
மன்னுடைய விபீடணற்காய் மதிளிலங்கைத் திசைநோக்கி மலர்கண் வைத்த
என்னுடைய திருவரங்கற் கன்றியும் மற்றொருவர்க்கு ஆளா வாரே.)
அவருக்கும் பொறைக்கு உவாத்தாய் –
ந கச்சின் ந அபராத்யதி -(யுத்த -146-44-)-என்றும்
கிமேதந நிர் தோஷக இஹ ஜகதி -என்றும் பேசும்படியான ஸ்ரீ பெரிய பிராட்டியார் தொடக்கமான
ஸ்ரீ நாய்ச்சிமார்களுக்குத் தான் சக்யமோ –
(மாதர் மைதிலி ராக்ஷஸீ: த்வயி ததைவ ஆர்த்ராபராதா: த்வயா
ரக்ஷந்த்யா பவநாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா
காகம் தஞ்ச விபீஷணம் சரணம் இதி உக்தி க்ஷமௌ ரக்ஷத:
ஸாந: ஸாந்த்ர மஹாகஸ: ஸுகயது க்ஷாந்தி: தவ ஆகஸ்மிகீ–50-
பிராட்டியுடைய ஷமா குணத்துக்கும் பெருமாளுடைய ஷமா குணத்துக்கும் பர்வத பரமாணு வோட்டை வாசி
பிதா இவ த்வத் ப்ரேயாந் ஜநநி பரிபூர்ணாகஸி ஜநே
ஹித ஸ்ரோதோ வ்ருத்யா பவதி ச கதாசித் கலுஷ தீ:
கிம் ஏதத் நிர்தோஷ: க இஹ ஜகதி இதி த்வம் உசிதை:
உபாயை: விஸ்மார்ய ஸ்வஜநயஸி மாதா தத் அஸி ந:–52-
அனைவருக்கும் தாயாக இருப்பவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அன்புக் கணவனான ஸ்ரீரங்கநாதன்,
குற்றங்கள் புரிகின்ற இந்த உலகில் உள்ள மக்களிடம், அவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு,
ஒரு தகப்பன் போல், அவர்கள் மீது கோபம் கொள்வான். அது போன்ற நேரங்களில் நீ அவனிடம்,
“என்ன செயல் நீங்கள் புரிகிறீர்கள்? இந்த உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்?”, என்று இதமாகப் பேசுகிறாய்.
இதன் மூலம் அவன் எங்கள் குற்றங்களை மறக்கும்படிச் செய்கிறாய். இதன் காரணமாக எங்கள் தாய் ஸ்தானத்தில் நீயே உள்ளாய்.)
இப்படியான இருவர்களுடையவும் சேர்த்தியில் அடிமையை ஆசைப் பட்டவர்களுக்கு அந்த கைங்கர்ய போகிபாகிகளாம்படி-
அஸ்மாத்பிஸ் துல்யோ பவதி -என்று கூட்டிக் கொள்ளும்
ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் தொடக்கமான ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்குத் தான் சக்யமோ
இவர்கள் தான்-
ஸ்ரீ விஷ்வக் சேன சம்ஹிதை-ஸ்ரீ விஹகேந்திர சம்ஹிதைகளிலே பிரபத்தி மார்க்க பிரதர்சகர் இறே-
நித்தியமாய் பொருந்தி இருப்பதான ஆஸ்ரித விஷய வாத்சல்யாதி குண உக்தராய்
அத்தை அனுஷ்டான சேஷமாம் படி
பயன் நன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்ளும் ஸ்ரீ நம் ஆழ்வார்
இவரோபாதி சேதன விஷயத்தில் கிருபையை வர்ஷிக்கிற ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் இவர்களுக்கு தான் சக்யமோ
மற்றும் ஆழ்வார்கள் கிருபைக்கு விஷயமாய் க்ருபா மாத்ரா பிரசன்னாச்சார்யர்களாய் இருக்கிற
ஸ்ரீ நாத ஸ்ரீ யாமுனாதிகள் ஆகிற அவர்கள் தொடக்கமாக இவ் வருகு உள்ள ஸ்ரீ ஆச்சார்யர்களுக்குத் தான் சக்யமோ
அபராத சஹாரான தேவர்க்கு ஒழிய
கீழ் உக்தரான எத்தனை அதிசய தயாவான்கள் ஆனாருக்குத் தான் இத்தைச் செய்து தலைக் கட்டப் போமோ
அது ஒருவருக்கும் அசக்யம் ஆகையாலே
நிகரின்ற நின்ற என் நீசதைக்கு நின் அருளின் கண் அன்றிப் புகல் ஒன்றும் இல்லை -என்கிறபடியே
தயைக சிந்துவாய்-சர்வ அபராத சஹராய் இருக்கிற தேவரீர்க்கு ஒழிய
அபராதநாமாலயனான நான் காகத்தைப் போலே வேறு ஒரு கோஷ்டிக்கு ஆள் ஆகேன் –
உபாய தசையில் ரஷித்தவோபாதி–உபேய தசையிலும் தேவர் கிருபையாலே
பிராப்ய ருசியையும் விளைத்து –
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதி -என்றும்
தெளி விசும்பு -என்றும்–சொல்லப் படுகிற பிராப்ய தேசத்தில் அடியேனை
அங்குற்றேன் அல்லேன் -என்னும்படி
ஆந்தராளிகன் ஆக விட்டு வைக்காமல் சீக்கிரமாக ஒருதலைப்பித்து அருள வேணும்
ஒரு கோடியிலே சேர்க்க வேணும் என்றபடி –
உனக்கு அன்றி என்ற இத்தை–கீழும் மேலும் கூட்டி நிர்வஹிப்பது –
ஒரு வேளையில் -ஷிபாமி – ந ஷமாமி -என்னும் நிரங்குச ஸ்வ தந்த்ரனுக்கும்
ஷமா லஷ்மீ பிருங்கீ சகல கரணோன்மாத நமது -என்றும்
திமிர் கொண்டால் ஒத்து நிற்கும் -என்றும் பேசும்படி உன்மஸ்தகமான போகத்தாலே
மதித்து ஸ்தப்தைகளாய் இருக்கும் அவர்களுக்கும்
அச் சேர்த்தியிலே கைங்கர்ய நித்ய நிரதராய் அஸ்தான சிநேக ரஷா வ்யசநிகளாய்
ஆங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழுமவர்களாய் இருக்குமவர்களுக்கும்
அச் சேர்த்தியை அனுபவிக்க ஆசைப்பட்டு
சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்-என்றும்
உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து -(5-7-2)என்றும்
உன்னைக் காண்டும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து-(4-9-3) -என்றும்
பக்தி பாரவச்யத்தால் ஆழம் கால் பட்டு இருக்குமவர்களுக்கும்
மற்றும் க்ருதக்ருதயராய் ஆக்கை விடும் பொழுதையும்
மாக வைகுந்தம் காண்கையையும்
மநோ ரதிக்கிற முமுஷூக்களுக்கும்
சர்வ அபராத அனர்த்தம் கண்டு பரோபதேசம் பண்ணுகை கூடாது இறே –
தம்மை அழிய மாறியும்-சம்சாரிகள் துர்க்கதி கண்டு அவர் பின் படரும் குணனாய்
அவர்கள் அவியதையைப் பாராமல் சர்வதா பரோபதேசம் பண்ணியும்
அத்தாலே
ஆளுமாளார் -என்கிறவனுடைய தனிமை தீரும்படி மங்களா சாசன பரரை யுண்டாக்கி
பர சம்ருத்தியே பேறாம்படி நடத்திக் கொண்டு போருவர் ஒருவர் ஆகையாலே
இவர்க்கே யாய்த்து இது கூடுவது –
அது திருத்தலாவதே -என்று கை விட்டத்தை இறே கைக் கொண்டு திருத்தி
ஸ்ரீ திருமகள் கேள்வனுக்கு ஆக்கி அருளிற்று –
ஆகை இறே இவரும் இப்படி அருளிச் செய்தது –
மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே இராமானுசன் செய்யும் சேமங்கள் மற்று உள்ளார் தரமோ
என்று இறே ஸ்ரீ அமுதனாரும் அருளிச் செய்தது –
பரம்ந்தத் கரீயாம்சம் -இத்யாதி –
(பொருளும் புதல்வரும் பூமியும் பூம் குழலாரும் என்றே
மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே மற்றுளார் தரமோ
இருள் கொண்ட வெந்துயர் மாற்றித் தன்னீறிலபெரும் புகழே
தெருளும் தெருள் தந்து இராமானுசன் செய்யும் சேமங்களே -39 –)
மற்றுளார் தரமோ –
கழுத்தில் ஓலை கட்டிக்-கொண்டு திரிந்தும் -சாரத்தியம் பண்ணியும் -பதினெட்டு அத்யாயம் உபதேசித்தும் –
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி – என்றும் –
அபயம் சர்வ பூதேப்யோ ததாம்யே தத்வ்ரதம் மம-என்றும்
அநேக பிரகாரமாக -படாதன பட்டும் –ஒருவனை ஆகிலும் சர்வேஸ்வரன் ரஷித்தான் அல்லன் –
நாராயண் மஹே திலோககுராவதந்தே கோமா-நுஷச் ரியமவாப சனாதனம் தாம் –
ராமானுஜே புவிமிதே சாகலோபி ஜந்துஸ் சம்சார திவ்ய பதயோர் நஹி வேத்தி பேதம் –-என்கிறபடியே
நெஞ்சே கண்டாயே எம்பெருமானார் நமக்கு பண்ணின உபகார பரம்பரை வாசா மகோசரம் ஆய்த்து –
———————————————————————–
இவர்
ஒளி விசும்பில் அடியேனை ஒருப்படுத்து விரைந்தே -என்ற அநந்தரம் -அவரும்
வானே தருவான் எனக்காய் –என்னும்படி
மோஷ பிரதானத்திலே சத்வராய் இருக்கிற படியை சாஷாத் கரித்து
இனி த்யாஜ்யமான இவ் விபூதியில் உண்டானது அடங்கலும்-அனுபாதேயமாய்
பிராப்யமான அவ் விபூதியில் உண்டானது அடங்கலும் உபாதேயமாய் அற்ற பின்பு
அவற்றின் விஸ்மரண அனு ஸ்மரணங்களான க்ருத்ய அக்ருத்யங்களை
தமக்கு விதேயமான திரு உள்ளத்தைக் குறித்து விதித்து அருளுகிறார் –
இவ் வுலகில் இனி ஒன்றும் எண்ணாதே நெஞ்சே
இரவு பகல் எதிராசர் எமக்கு இனி மேல் அருளும்
அவ் வுலகை யலர் மகள் கோன் அங்கு இருக்கும் இருப்பை
அடியார்கள் குழாங்கள் தமை அவர்கள் அனுபவத்தை
இவ் வுயிரும் அதுக்கு இட்டுப் பிறந்து இழந்து கிடந்தது
என்னுமத்தை என்றும் அதுக்கிடைச் சுவராய்க் கிடக்கும்
வெவ் வினையால் வந்த வுடல் விடும் பொழுதை விட்டால்
விளையும் இன்பம் தன்னை முற்றும் விடாமல் இருந்து எண்ணே—27-
நெஞ்சே–மனசே
இவ் வுலகில் இனி ஒன்றும் -இந்த லோகத்தில் இனி ஒன்றையும்
எண்ணாதே-சிந்தியாதே
இரவு பகல் -இராப் பகலும்
எதிராசர் –எம்பெருமானார்
எமக்கு இனி மேல் அருளும்-நமக்கு இனிமேல் ப்ரஸாதிக்கும்
அவ் வுலகை -வானுலகான அந்த லோகத்தையும்
யலர் மகள் கோன் –புஷ்ப வாஸிநியான பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான ஸர்வேஸ்வரன்
அங்கு இருக்கும் இருப்பை-அந்தப் பரம பதத்தில் திவ்ய ஸிம்ஹாஸனத்திலே எழுந்து அருளி இருக்கும் இருப்பையும்
அடியார்கள் குழாங்கள் தமை –நித்ய ஸூரிகளுடைய சமூகங்களையும்
அவர்கள் அனுபவத்தை-அவர்களுடைய ஹர்ஷத்துக்குப் போக்கு விட்டு அனுபவிக்கும் அனுபவத்தையும்
இவ் வுயிரும் –இந்த ஆத்ம வஸ்துவும்
அதுக்கு -அந்த போகத்துக்கு
இட்டுப் பிறந்து –ப்ராப்தனாய் நின்று
இழந்து கிடந்தது-அத்தைப் போக்கடித்துக் கொண்டு கிடந்தது
என்னுமத்தை -என்று சொல்லுமத்தையும்
என்றும் –எக் காலமும்
அதுக்கிடைச் சுவராய்க் கிடக்கும்-அந்த அனுபவத்துக்கு பிரதிபந்தகமாய்க் கிடக்கும்
வெவ் வினையால் –க்ரூர கர்மங்களால்
வந்த வுடல் விடும் பொழுதை -உண்டான தேஹ விமோசனமாகும் காலத்தையும்
விட்டால்-அந்த தேஹத்தை விட்ட பிறகு
விளையும் -பலிக்கும்
இன்பம் தன்னை –நிரதிசய ஆனந்தத்தையும்
முற்றும் -இந்த ஸமஸ்த விஷயங்களையும்
விடாமல் இருந்து எண்ணே—இடைவிடாமல் இருந்து சிந்தித்துப் போரு
பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவான மனசே –
அத தேக அவதாநே ச த்யக்த சர்வ இதர ஸ்ப்ருஹ-என்கிறபடியே இந்த கொடு வுலகில் ஹேயமாய் இருப்பதான
பிரகிருதி பிராக்ருதங்கள் எல்லாம் த்யாஜ்யம் என்று நேரே அறிந்த பின்பு
அல்ப அஸ்த்ரத்வாதி தோஷ துஷ்டமான அவற்றில் ஏக தேசமும் அங்கீகார யோக்யமாக விசாரியாதே
ஸ்ரீ எம்பெருமானார்
நமக்கு பிராப்ய ருசியையும் உண்டாக்கி அருளி
இனி மேல் அருள் கொடையாக அருளும் வானுலகமான அந்த லோகத்தையும்
அந்த லோகம் எல்லாம் நிறம் பெறும் படி
எழில் மலர் மாதரும் தானும் இவ் ஏழ் உலகை இன்பம் பயக்க இனிதுடன் வீற்று இருந்து -என்கிறபடியே
புஷ்பத்தில் பரிமளம் வடிவு கொண்டால் போலே இருக்கிற ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு
வல்லபனான வ்யாவ்ருத்தி தோற்ற அங்கே
திவ்ய சிம்ஹாசனத்திலே எழுந்து அருளி இருக்கும் இருப்பையும் –
அச் சேர்த்தியில் அடிமை செய்கிற அடியார்கள் குழாங்கள் -என்கிற பிராப்யமானவவர்கள் சமூஹம் தன்னையும்
அவர்கள் ஹர்ஷத்துக்கு போக்குவிட்டு அனுபவிக்கும் அனுபவத்தையும்
இவ் வாத்மாவும் அதுக்கு பிராப்யனாய் வைத்து அத்தை இழந்து கிடந்தது என்கிறவற்றையும்
அத்யாபி அந்த அனுபவத்துக்கு பிரதிபந்தகமாய் கிடக்கும்-பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -என்கிறபடியே
க்ரூர கர்மத்தால் யுண்டான தேக விமோசனமாம் காலத்தையும்
தேக விமோசன அநந்தரம் பலிக்கும் நிரதிசய ஆனந்தத்தையும்-இப்படி உக்தங்களாய்
ஸ்வரூப அனுரூபங்களாய் உள்ளவை எல்லாவற்றையும் -திவா ராத்திரி விபாகம் அற
இடைவிடாமல் ஒருப்பட்டு இருந்து சிந்தித்துப் போரு-
அன்றிக்கே
உக்தங்களான அவற்றில் ஒன்றும் விடாமல் ஒருப் பட்டு இருந்து சிந்தித்து – என்னவுமாம் –
இவ் வுலகினில் இனி ஒன்றும் எண்ணாதே -என்ற இதுக்கு
மருள் ஒழி நீ -என்று சொல்லுகிற
அந்திம தசா விரோதியான அர்ச்சாவதார பிராவண்யம் ஆகவுமாம்-
(திருவாறன் விளையே வேண்டும் என்றாரே முன்னம் -அந்த மருள் ஒழிக்க வேண்டுமே)
————————————————
செய்தது எல்லாம் செய்தும் இது நெடும் காலம் இல்லாத பிராப்ய ருசி இப்போது
ஸ்ரீ எம்பெருமானார் உடைய கிருபையாலே உண்டாயிற்று என்று
அந்த லாபத்தைப் பேசி அனுபவிக்கிறார் –
பண்டு பல வாரியரும் பாருலகோர் உய்யப்
பரிவுடனே செய்தருளும் பல் கலைகள் தம்மைக்
கண்டது எல்லாம் எழுதி யவை கற்று இருந்தும் பிறர்க்குக்
காதலுடன் கற்பித்தும் காலத்தைக் கழித்தேன்
புண்டரிகை கேள்வன் உறை பொன்னுலகு தன்னில்
போக நினை வொன்றும் இன்றிப் பொருந்தி யிங்கே யிருந்தேன்
எண்டிசையும் ஏத்தும் எதிராசன் அருளாலே
எழில் விசும்பை அன்றி இப்போது என் மனம் எண்ணாதே—-28-
பண்டு –பூர்வ காலத்தில்
பல வாரியரும் –ஆத்ம உஜ்ஜீவன தத் பரராய் இருக்கிற பூர்வாச்சார்யர்கள் அனைவரும்
ஏக கண்டராக
பாருலகோர் உய்யப்-இந்தப் பூ லோகத்திலுள்ள ஸமஸ்த சேதனர்களும் உஜ்ஜீவிக்க
பரிவுடனே -இவர்கள் இடத்தில் உண்டான ப்ரேமையினாலே
செய்தருளும் பல் கலைகள் தம்மை-அருளிச் செய்த பல பிரபந்தங்களை
கண்டது எல்லாம் -பார்த்தது எல்லாம்
எழுதி -லிகித்து
யவை -அவற்றை
கற்று இருந்தும் –ஆச்சார்ய முகத்தால் அப்யஸித்து இருந்தும்
பிறர்க்குக் காதலுடன் கற்பித்தும் -அந்நியருக்கு ப்ரேமையுடன் போதித்தும்
காலத்தைக் கழித்தேன்–காலத்தைப் போக்கினேன்
புண்டரிகை கேள்வன் –நளின வாஸி நியான பெரிய பிராட்டியாருக்கு வல்லபனானவன்
உறை பொன்னுலகு தன்னில்–நித்ய வாஸம் பண்ணுகிற நித்ய விபூதியாக பரம பதத்துக்கு
போக நினை வொன்றும் இன்றிப் –போக வேணும் என்று இருக்கிற ஸ்மரண லேசமும் இல்லாமல்
பொருந்தி யிங்கே யிருந்தேன்-இவ் விபூதியிலே ஆசை யுள்ளவனாய் வஸித்தேன்
எண்டிசையும் -அஷ்ட திக்கில் யுண்டானவர்களும்
ஏத்தும் –தன் வைபவத்தைச் சொல்லி ஸ்தோத்ரம் பண்ணும்படியான
எதிராசன் அருளாலே-எம்பெருமானாருடைய கிருபையாலே
எழில் விசும்பை அன்றி -விலக்ஷணமான பரம ஆகாசத்தை ஒழிய
இப்போது என் மனம் எண்ணாதே-இப்போது என் மனஸ்ஸானது ஸ்மரியாது –
நல்லடிக் காலமான பூர்வ காலத்திலே ஆத்ம உஜ்ஜீவன தத் பரராய் இருக்கிற ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் அனைவரும்
ஏக கண்டமாய் இந்த பூ லோகத்தில் உண்டான சமஸ்த சேதனரும் உஜ்ஜீவிக்க
இவர்கள் இடத்தில் ஸ ஸ்நேஹமாக செய்து அருளும் பல பிரபந்தங்கள் தன்னை
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழி பட்டும் பூசித்தும் போக்கினேன் போது -ஸ்ரீ நான் முகன் -63–
இத்யாதிப் படியே–ஆதார அதிசயத்தாலே
தேடி-கண்டவைகள் எல்லா வற்றையும் லிகித்து-அத்தை ஆச்சார்ய முகத்தாலே அப்யசித்து
தன் நிஷ்டனாய் இருந்தும்
இன் நிஷ்டை இல்லாத அந்யரும்-தன் நிஷ்டராய் உஜ்ஜீவிக்கும்படி அவர்களுக்கு ஆதாரத்தோடு அப்யசித்தும்
கால ஷேபம் பண்ணினேன்-
ஸ்ரீ தாமரையாள் கேள்வன் -என்னும்படி ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் ஆனவன் நித்ய வாசம் பண்ணுகிற
ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ வைகுண்டத்திலே போக வேணும் என்கிற ஸ்மரண லேசமும் இன்றிக்கே
இவ் விபூதியிலே சக்தனாய் வசித்தேன் –
திசை அனைத்தும் ஏறும் குணன் ஆகையாலே அஷ்ட திக்குகளில் உண்டானவர்களும்
தன் வைபவத்தை சொல்லி ஸ்தோத்ரம் பண்ணும்படியான ஸ்ரீ எம்பெருமானார் உடைய கிருபையாலே
விலஷணமான பரம ஆகாசத்தையே ஒழிய இப்போது என்னுடைய மனசானது ஸ்மரியாது –
இது ஒரு கிருபா விசேஷம் இருந்தபடி என் –என்று கருத்து –
இவ் விடத்தில் ஏகாரம் தேற்றத்தில் –
(கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே
மாறன் பணித்த மறை யுணர்ந் தோனை மதியிலியேன்
தேறும் படியென் மனம் புதுந்தானைத் திசை யனைத்தும்
ஏறும் குணனை இராமானுசனை இறைஞ்சினமே.–46-)
——————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply