ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் அவதரித்து அருளின மார்கழியில் கேட்டை யானது
பரம வைதிகராலே பரிபாலிக்கப் படுமதான நாள் என்று –
பரோபதேசம் – பண்ணுகிறார் –
கோதண்டே ஜ்யேஷ்ட நக்ஷத்ரே மண்டங்குடி புரோத்பவம்
சோளோர்வ்யாம் வனமால அம்சம் பக்த பத்ரேணும் ஆஸ்ரயே
கோதண்டே சாப மாசம் மார்கழி
வனமால அம்சம் -வைஜயந்தி அம்சம்
கலி பிறந்து 288- கிருஷ்ண பக்ஷம் சதுர்த்தசி செவ்வாய் கிழமை
துணை நூல் மார்பின் இல்லாமல் -பண்டிதர் -வித்யா விநத சம்பன்ன – சம தர்சனம்
மன்னிய சீர் மார்கழியில் கேட்டை இன்று மா நிலத்தீர்
என்னிதனுக்கு ஏற்றம் எனில் உரைக்கேன் -துன்னு புகழ்
மா மறையோன் தொண்டர் அடிப் பொடி யாழ்வார் பிறப்பால்
நான் மறையோர் கொண்டாடும் நாள் —11-
மன்னிய சீர் -மார்கழிக்கும் கேட்டைக்கும் ஆழ்வாருக்கும் –
மறையோன் -பாட பேதம்
ஜ்யேஷ்டாத்ய
தநுர் மாசி
ப்ரதிமா குதகா
விப்ரேந்த பக்த பத ரேணு அவதார யோகாத்
த்ரை வித்யா விருத்த
பஹு மான பதம்
ஜன
கதயாம் வஹம்
மன்னிய சீர் மார்கழியில் கேட்டை இன்று மா நிலத்தீர் –
மார்கழிக்கு சீர் மன்னுகையாவது –
மாசானாம் மார்கசீர்ஷோஹம் -என்னும்படி-வைஷ்ணவ மாசம் ஆகையாலும் –
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் -என்று
ஸ்ரீ ஆண்டாள் ஆதரித்துப் போம் படியான அதிசயத்தை யுடைத்தாயாகையாலும் –
திரு அத்யயனம் தொடங்கும் காலம் ஆகையாலும்–வந்த சீர்மையை யுடைத்தாகை –
அதுக்கு மேலே –
திருப்பள்ளி எழுச்சி என்கிற பிரபந்த முகேன ஸ்ரீ பெரிய பெருமாளை திருப்பள்ளி யுணர்த்துமவரான
இவர் அவதரணத்துக்குப் பாங்காக நேர்பட்ட ஏற்றம் உண்டு இறே –
(திருமாலை -பெருமாள் ஆழ்வாருக்கு உணர்த்தி -திருப்பள்ளி எழுச்சி -இவர் அவனை உணர்த்து )
அன்றிக்கே –
மன்னிய சீர் -மார்கழியில் கேட்டை இன்று -என்கிற இது கேட்டைக்கு விசேஷணமாய்
அது மாசங்களிலே ஸ்ரேஷ்டமானால் போலே-இதுவும் நஷத்ரங்களிலே ஜ்யேஷ்டமாய் இருக்கை –
விப்ராணாம் ஜ்ஞானதோ ஸ்ரேஷ்டம் -என்கிறபடியே
ஜ்ஞான ஆதிக்யத்தை யுடைய இவர்-அவதரித்து அருளின ஆதிக்யம் உண்டு இறே இதுக்கு –
(விப்ர நாராயணர் அன்றோ இவரும்
ஞான ஸ்ரேஷ்டர் மாச ஸ்ரேஷ்டத்தில் நக்ஷத்ர ஸ்ரேஷ்டத்தில் தானே அவதரிக்க வேண்டும் )
அன்றிக்கே –
இவர்-மன்னிய சீர் ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆகையாலே
அவர் அவதரித்து அருளின திரு நஷத்ரமும் சீர்மை மன்னி இருக்கும் இறே –
இப்படி பகவத் பாகவத சம்பந்தங்கள் மாறாதே போரும்படியான ஏற்றங்களை யுடைத்தான நன்னாள் ஆனது இன்றாவதே –
மா நிலத்தீர் –
ததீய சேஷத்வமே நிரூபகமாம் படியான மஹாத்ம்யத்தை யுடைய இவர் அவதரித்து அருளுகையாலே
தத் சம்பந்த யுக்தமான மஹா பிருத்வியிலே யுள்ளவர்களே –
என்னிதனுக்கு ஏற்றம் எனில் உரைக்கேன் –
இம் மாசத்தில் மற்றை நஷத்ரங்களும் யுண்டாய் இருக்க இதுக்கு ஏற்றம் என் என்கிறிகோள் ஆகில் –
இதன் ஏற்றம் அறிந்த நான் சொல்லக் கேளுங்கோள்-
துன்னு புகழ் மா மறையோன் தொண்டர் அடிப் பொடி யாழ்வார் பிறப்பால் –
அதாவது
துளபத் தொண்டாய தொல் சீரையும்–(திருமாலை-45-துளப ப்ருத்யர் அன்றோ இவர் )
கற்றினம் மேய்த்த எந்தை கழலினைக் கீழ் –உற்ற திருமாலைப் பாடும் சீரையும் யுடையார் ஆகையாலே
வந்த குணாவத்தா ப்ரதையை யுடையராய் இருக்கை –
இவர் தாம், மிக்க சீர் தொண்டர்-(பெரிய திருமொழி – 11-1-9-) -இறே –
செய்யும் பசும் துளபத் தொழில் மாலையும்-
செந்தமிழில் பெய்யும் தமிழ் மாலையையும் (ராமானுச )-இறே–இவர் செய்து கொண்டு போருவது –
இவருடைய -அஹம் சர்வம் கரிஷ்யாமி -இருக்கிறபடி –
(வாசகமும் காயிகமும் -விழித்து உள்ள போதும் உறங்கும் போதும் கைங்கர்யம் செய்தவர் அன்றோ )
இது இறே இவருக்கு சம்ருதமான யசஸ்ஸூ-மலி புகழ் வானவர்-(4-2-11) -என்னுமா போலே –
மா மறையோர் –
இதுக்கு எல்லாம் அடி வேதார்த்த விசாரம் பண்ணும்-விப்ர ஸ்ரேஷ்டர் ஆகை என்கை –
வைதிகரே மெய்ப்படியால் யுன் திருவடி சூடும் தகைமையினார் -(திரு விருத்தம் )-என்னும்படி
பரம வைதிகர் ஆகையாலே நித்ய கைங்கர்ய நிரதராய் இருக்கை –
அது இறே இவர்க்கு நிலை நின்ற புகழ் –
(நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர் போல் )
மா மறையோன் தொண்டர் அடிப் பொடி யாழ்வார் -பிறப்பால்
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருளான – ததீய தாஸ்யத்திலே நிலை நின்று போருமவர் ஆகையாலே
இவர்க்கு இவ் வபிதானம் ( திரு நாமம் ) ஆயத்து –
(வேதியர் -மிக்க வேதியர் –
பொருள் -உள் பொருள் –
ததீய தாஸ்யம் )
நம்பிக்கு அன்பர் தலை மீது அடிப்பொடி (ஆச்சார்ய ஹ்ருதயம் )என்று இறே-
ததீய பரதந்த்ரர் உடைய ஏற்றம் இருப்பது –
(நம்பிக்கு அன்பர் -மதுர கவி -இவர் அன்பர் தலை மீது அடிப்பொடி)
ஆழ்வார் பிறப்பால்-
ஆழ்வார் பிறப்பே பிறப்பாவது –
அல்லாதார் பிறப்பு தாழ்வாம் பிறப்பு இறே
என் செய்வான் தோன்றினேனே -( திருமாலை )-என்று இவர் தம்மை வ்யர்த்த ஜன்மாவாக அனுசந்தித்தாரே யாகிலும் –
இவர் ஸ்ரீ ஆழ்வார் பிறப்பு -என்னும் அதிசயமாக அருளிச் செய்கிறார் –
ஸ்ருஷ்டஸ்த்வம் வன வாஸாய -போலே –
(சுமித்ரை -இளைய பெருமாளுக்கு -இதுவே ஏற்றம் -இதுக்காகவே தோன்றினேனே என்னுமவர்
அவர் நைச்யமாக அருளிச் செய்ததுக்கும் இப்படி வியாக்யானம் )
நான் மறையோர் கொண்டாடும் நாள் –
இப்படி இவர் அவதரிக்கையாலே அவரைப் போலே வேத தாத்பர்யம் கைப்பட்டவர்கள் –
கோது கலமாக கொண்டாடும் நாளாய் இறே இருப்பது –
(கோது கலம் குட்டன் -கோது கலம்-பெரியாழ்வாரும் ஆண்டாளும் மட்டுமே தமிழில் பிரயோகம் –
குதூ கலம் இன்று மருவி வழக்கத்தில் )
மா மறையோர் –
பிறப்புக்கு அனுகுணமாக-நான் மறையோர் கொண்டாடுகை -ப்ராப்தம் இறே –
ஆகையாலே
மா நிலத்தீர் -ஆன நீங்களும் இதன் ஏற்றத்தை அறிந்து
இத்தைப் பரிபாலித்து உஜ்ஜீவியுங்கோள் -என்று கருத்து –
அதுக்கு மேலே
ஸ்ரீ பெரிய கோயிலையும்
ஸ்ரீ பெரிய பெருமாளையும்
பேணிக் கொண்டு போருமவராய்
ஸ்ரீ லோக குருவுக்கும் குருவான கௌரதயை யுடையரான
ஸ்ரீ பெரிய நம்பி அவதரித்து அருளின ஸ்ரேஷ்டதையும் யுண்டு இறே -மார்கழியில் கேட்டைக்கு –
(கமலாபதி கடாக்ஷம் நிறைய பெற்றவர் -மணல் திருத்திய ஐதிக்யம் )
(பெரிய திருமுடி அடைவில் பல பிழைகள்
மா முனிகள் அவதாரம் விஜய வருஷம் என்றும் –
எம்பார் சித்திரை புனர்வசு என்றும் தப்பாக உள்ளது )
———————————-
மகாயாம் மகரே மாஸே சக்ராம்சம் பார்கவோத் பவம்
மஹீ சார புரா தீசம் பக்தி ஸார அஹம் பஜே
ஒரு பிறவியிலே இரு பிறவி ஆனவர்
ஸூதர்சன அம்சம்
பக்திசாரர் -ருத்ரனால் சூட்டப் பட்டவர்
862901-கலி பூர்வ சந்தியில் -3700 இதிலும் முன்பும் -1100-த்வாபர யுக -உத்தர சந்தி –
ஞாயிறு கிருஷ்ண பக்ஷம் பிரதமை
ஸ்ரீ திரு மழிசைப் பிரான் அவதரித்த தையில் மகத்தின் ஏற்றத்தை
தாரணியில் யுன்டானவர்கள் எல்லாம் அறியும்படி அருளிச் செய்கிறார் –
தையில் மகம் இன்று தாரணியீர் ஏற்றம் இந்தத்
தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் –துய்ய மதி
பெற்ற மழிசைப் பிரான் பிறந்த நாள் என்று
நற்றவர்கள் கொண்டாடும் நாள் —-12-
தவம் -பிரபத்தி
நல் தவம் -சரம உபாயம் -கணி கண்ணன் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்று இருந்தவர்
தாராம் ஜனா ஸ்ருணி
தைஷா மகா க்ல அத்ய
தஸ்யா
அதிசய
மஹானு பாவம்
பிரசன்ன மதி லப்த பக்தி சாரார்
திவ்ய அவதாரம் திவ சோயம்
அபிஜ்ஜய லால்யா
தையில் மகம் இன்று தாரணியீர் –
தையொரு திங்களும் -என்னும்படியான தரத்தை யுடைய புஷ்ப மாசத்திலே மகம் இன்று –
தரணியில் யுண்டானவர்களே-
(தை பூசம் -அர்ச்சா திரு மேனி எழுந்து அருள நாள் -குரு புஷ்ய உத்சவம் பிரசித்தம் )
ஏகாம் தரணிமாச்ரிதா -என்கிறபடியே
(ஒரே தரணியில் இருந்தும் பிரிந்துள்ளோமே-பெருமாள் புலம்பும் ஸ்லோகம் -யுத்த 5-10- )
ஸ்ரீ திரு மழிசைப் பிரான் வந்து அவதரித்த இஜ் ஜகத்திலே ஜன்மமாம் படியான பாக்யத்தை யுடையவர்களே –
ஏற்றம் இந்தத் தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் —
என் –
மாசி மகம் அன்றோ மகா நஷத்ரமாக வழங்குகிறது –இதுக்கு ஏற்றம் என் என்றால்
இதுக்கு யுண்டான அதிசயத்தை சர்வ லோக பிரசித்தமாக நான் சொல்லக் கேளுங்கோள் —
இதுக்கு உண்டான ஏற்றம் தான் இன்னது -என்கிறது –
துய்ய மதி பெற்ற மழிசைப் பிரான் பிறந்த நாள் என்று நற்றவர்கள் கொண்டாடும் நாள் –
அதாவது
பரிசுத்தமான ஜ்ஞானத்தை ஸ்ரீ சர்வேஸ்வரன் பிரசாதத்தால்
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவராய்
ஸ்ரீ திரு மழிசைக்கு நிர்வாஹகரான ஸ்ரீ ஆழ்வார் அவதரித்து அருளின திரு நஷத்ரம் என்று
நல்ல தபஸ்சை யுடையவர்களாலே கொண்டாடப் படும் நாள் ஆகையாலே -என்கை –
துய்ய மதி –
என் மதிக்கு விண் எல்லாம் உண்டோ விலை-(நான்முகன் -51) -என்று தாமும் ஆதரித்து-பேசும்படியாய் இறே இருப்பது –
(துலாக் கோலால் -திவ்ய தேசமும் ஆழ்வாரும் -ஏற்றம் சொல்லும் படி அன்றோ திரு மழிசை )
மதிக்குத் தூய்மை யாவது –
தேவதாந்தரங்கள் பக்கல் பரத்வ புத்தி யாகிற மாலின்யம் அற்று இருக்கை –
மனனக மலமறக் கழுவி -(திருவாய் 1-1-3)–என்று தேவதாந்தர பரத்வ புத்தியை இறே மநோ மாலின்யமாக அருளிச் செய்தது –
இவர் தாம் –
தாதுலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன் நீதியால் வணங்கு பாத (திருச்சந்த -9)-என்றும்
போதில் மங்கை பூதலக் கிழத்தி தேவி -72–என்று தொடங்கி-
வேத நூல் ஓதுகின்றது உண்மை அல்லது இல்லை மற்று உரைக்கிலே 72-என்றும்
உள்ள நோய்கள் தீர் மருந்து வானவர்க்கு அளித்த எம் வள்ளலாரை அன்றி மற்றோர் தெய்வம் நான் மதிப்பனே -88-என்றும்
பார் மிகுந்த பாரம் 89–இத்யாதி-என்றும்
சீர் மிகுத்த நின்னலால் தெய்வம் நான் மதிப்பனே -என்றும்
நான்முகனை நாராயணன் படைத்தான்
நான்முகனும் தான் முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் -1–என்று தொடங்கி –
பிதிரு மனமில்லென் பிஞ்ஞகன் தன்னோடு எதிர்வன் அவன் எனக்கு நேரான் -64-என்றும்
கல்லாதார் இலங்கை கட்டழித்த காகுத்தன் அல்லால் ஒரு தெய்வம் நான் இலேன் -53–என்றும்
இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் யுன்னை 96–என்றும் இப்படி
ஸ்வ பிரபந்தங்களில்-ஆதி மத்திய அவசானங்கள் எல்லாவற்றிலும்
உறையிடை விடாதவர் -என்னும்படி
அதி பிரதிஹதமான தம்முடைய பராபர தத்வ ஜ்ஞானத்தை பிரகாசிப்பித்தது அருளினார் இறே –
மழிசைப் பிரான் பிறந்த நாள் என்று –
இப்படி திவ்ய ஜ்ஞானத்தை யுடைய இவர்
ஒரு பிறவியில் இரு பிறவியாக பிறந்த நாள் என்று –
நற்றவர்கள் கொண்டாடும் நாள் –
இவர் தாம் ருஷி புத்ரராக திரு வவதரிக்கையாலே நற்றவர்கள் கொண்டாடும் நாள் -என்கிறது –
(பார்க்கவ முனிவர் சத்ர யாகம் இங்கே செய்து கொண்டு இருக்க இவர் அவதாரம் )
பிறந்த நாள் -என்று –
அல்லாதார் பிறவி –
அன்று நான் பிறந்திலேன் -என்னும்படி அசத் கல்பமாய் இறே இருப்பது –
பிறந்த பின் மறந்திலேன் -என்று
பகவத் சம்பந்த ஜ்ஞானம் உடைய ஜன்மை இறே இவர் ஜென்மமாக அருளிச் செய்தது –
பிறந்த நாள் -என்று –
இப்படி திரு வவதரித்து அருளின விசேஷமான திரு நஷத்ரம் என்று விசேஷஞ்ஞர் ஆனவர்களால்
அந்த பிரதிபத்தியோடே பரிபாலிக்கப் படுமதாய் இருக்கும்-
தவம் ஆகிறது -பிரபத்தி
தஸ்மான் நயாச மேஷாம் தபஸா மதிரிக்த மாஹூ -என்றும் –
சார்வே தவ நெறி (திருவாய் )-என்றும் சொல்லக் கடவது இறே –
ஆகையால்
அடைக்கலம் புகுந்து-வேறாக வேத்தி இருக்கும் இவரது
தபஸ் சப்த வாச்யையான பிரபத்தி –
நற்றவம் ஆகிறது –
ஆச்சார்ய அபிமான நிஷ்டை -மற்றவரைச் சாத்தி இருப்பார் தவம் -என்னக் கடவது இறே-
அத்தை யுடையவர்கள் ஆகிறார் –
ஸ்ரீ கணி கண்ணர்—ஸ்ரீ பெரும் புலியூர் அடிகள் – போல்வார் –
இத்தால்-ஆச்சார்ய அபிமான நிஷ்டர்க்கு இது அவஸ்யம் ஆதரணீயம் -என்றது ஆய்த்து –
—————————————————————
கும்பே புனர் வசவ் ஜாதம் கேரளே சோள பட்டணே
கௌஸ்துப அம்சம் தராதீசம் குலசேகரம் ஆஸ்ரயே
ஸ்ரீ கௌஸ்துப அம்சம்
கலி -27-இவர் -நம்மாழ்வார் முதல் வருஷம் -சந்தித்தது இல்லை
பராபவ வருஷம் மாசி மாத சுக்ல பக்ஷம் துவாதசி வியாழக்கிழமை
திட வ்ரஜ பூ ராஜ தேவர் – நாத நாயகி அம்மையார் -தந்தை தாய்
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் திரு வவதரித்து அருளின மாசிப் புனர் பூசத்தின் அதிசயத்தை
மந்த மதிகளுக்கும் அறியும்படி பிரகாசிப்பித்தது அருளுகிறார் –
மாசிப் புனர்பூசம் காண்மின் இன்று மண் உலகீர்
தேசித் திவசத்துக்கு ஏது என்னில் -பேசுகின்றேன்
கொல்லி நகர்க் கோன் குலசேகரன் பிறப்பால்
நல்லவர்கள் கொண்டாடும் நாள் —-13-
நல்லவர்கள் இங்கு
நல் தவத்தவகள்ர் கீழே
கும்பே
புனர்வஸும்
அத்ய
விலோக யத்வம்
தேஜஸ் கிமக
கொல்லி புரீஸ நகர
ஜென்ம யோகாத்
ஸ்லாக்கியம் பவதி
தார இதம் புதா நாம்
மாசிப் புனர் பூசம் காண்மின் இன்று மண் உலகீர்-
மாசி முன்னாள் -(நாச்சியார்) -என்னும்படி-விலஷணமான பரிக்ரஹமான-
மாசி மாசத்தில் புனர் வஸூ நஷத்ரம் காணுங்கோள் –
பூதலத்தில் அவர்களாய் உள்ளவர்களே
அது தானும் இன்றாவதே உங்களுக்கு –
இன்று –
என்று பூத பவிஷ்யத்தாய் உள்ளது-வர்த்தமானம் போலே தோற்றுகிறது
தம்முடைய ஆதர அதிசயத்தாலே –
மாசிப் புனர்பூசம் –
சைத்ர மாசத்தில் புனர் வஸூ நஷத்ரத்திலே யாய்த்து ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் திரு வவதரித்து அருளினது –
எல்லையில் சீர் தயரதன் தன் மகனாய்த் தோன்றிற்று முதலாத் தன்னுலகம் புக்கது ஈறா-10-11–என்று
தத் வைபவத்தை பிரதிபாதிக்குமவர் ஆகையாலே இவர்க்கு நஷத்ரமும் அது வாய்த்து –
ராஜ குலங்களிலே அவதரிப்பார்க்கு நஷத்ரமும் அதுவாக வேணும் போலே காணும்
இப்படி பகவத் சம்பந்தம் யுடைய திரு நஷத்ரம் ஆயத்து இவர் திரு வவதரித்தது –
மண்ணுலகீர்-
பூ லோகத்தில் உண்டான போக போக உபகரணாதிகளை விரும்பி
பகவத் பாகவத விமுகராய்ப் போருகிற லௌகிகராய் உள்ளவர்களே –
அந்த வைமுக்யத்தைத் தவிர்ந்து
நான் சொல்லுகிற அர்த்தத்தைப் புத்தி பண்ணுங்கோள் –
விண்ணாட்டில் உண்டானவர்கள் விசேஷஞ்ஞர் இறே-
அவிசேஷஞ்ஞாராய் –உண்டியே உடையே உகந்து (-3-4-)
மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆள் செய்து-(3-3) -போருகிற உங்களுக்கு இறே
நான் உபதேசிக்க வேண்டுவது –
இப்படி எங்களுக்கு உபதேசிக்கைக்கு அடியான இத் திவசத்தின் இடைய பெரு மதிப்பு தான் ஏது என்ன –
பேசுகின்றேன் கொல்லி நகர்க் கோன் குலசேகரன் பிறப்பால்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக் கோன் குல சேகரன் -(2-10 )-என்று இவர் அருளிச் செய்த படியே
கொல்லி என்ற நகரத்துக்கு நாதராய்-சேர குலத்துக்கு சேகரரான ஸ்ரீ ஆழ்வார் அவதரிக்கையாலே வந்த
ஒஜ்ஜ்வல்யத்தை யுடைத்தாய்-அத்தாலே சத் பரிக்ராஹ்யமாய் இருக்கை –
குலசேகரன் பிறப்பு என்றால்
உடல் பிறவி அன்றிக்கே-உயிர் பிறவியே இறே இருப்பது
ஊனேறு செல்வத்து உடல் பிறவி யான் வேண்டேன் (4-1-)-என்னும் இத்யாதியாலும்
அத்தை அடியொத்தினவர்-ராஜாவான ஸ்ரீ குலசேகரப் பெருமாள்
ஸ்ரீ திருமலையிலே திர்யக் ஸ்தாவர ஜங்க மங்களை ஆசைப் பட்டார் என்றும் அருளிச் செய்யும் படி இறே
இவருடைய உபேஷையும் ஆகாங்ஷையும் இருக்கும் படி –
தாஸ்ய அநு குணமான ஜன்மம் இறே ஜன்மம் ஆவது –
ஆழி யங்கைப் பேராயர்க்கு ஆளாம் பிறப்பு விண்ணாட்டுத் தேசு (பெரிய திருவந்தாதி )- என்றார் இறே –
இப்படி சேஷத்வ அநு குணமான ஜென்மத்தை அபேஷிக்கும் படியான இவர் அவதரித்த இத்தால்
தேசு இத் திவசத்துக்கு உண்டாய்த்து –
ஆகையால் இத் திவசம் –
நல்லவர்கள் கொண்டாடும் நாள் –
நல்லவர்கள் ஆகிறார் –
கொல்லி காவலன் சொல் பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் (ராமானுஜ -14)-என்கை –
நல்லவர்கள் -சத்துக்கள் –
தங்களோபாதி பிறர்க்கும் கொண்டாடும் நாளாவது -அவர்களால் உபலாலிக்கப் படும் நாள் -என்கை –
(ராமானுஜர் தனியன் சாதித்து அருளுகிறார் அன்றோ பெருமாள் திருமொழிக்கு
அவர் போல்வார் )
இவர் தாம் –
எல்லையில் அடிமைத் திறத்தினில் என்றும் மேவும் மனத்தனனாம்-(2-10 )-என்னும்படியான
எல்லையான ததீய சேஷத்வத்திலே ஊன்றி போகும் நன்மையை யுடையவராய்
அத்தாலே அவர்களுக்குக்காக தாம் குடப்பாம்பில் கை இட்டுப் போரும் குணாதிகருமாய் இருக்கையாலே
அக் குணங்களுக்குத் தோற்று நன்மையை சம்பாதிக்குமவர்கள் –
அவர் திருவடிகளுக்கு நல்லராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களாலே ஆதரிக்கப் படுமதான நாளாய் இருக்கும் இறே –
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் –
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன் -என்றும்
உருப்பசி தன் அம்பொற் கலை யல்குல் பெற்றாலும் ஆதரியேன் -என்றும்
நல் பதத்தையும் வேண்டேன் –
ஸ்ரீ திருமலையிலே திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை ஆசைப்பட்டு போருமவர் ஆகையாலே
ஸ்ரீ திருமலையில் ஜென்மத்தை ஆதரித்து அடிமை செய்து போருவர் –
ஸ்ரீ கோவிந்த பெருமாளும்
த்ருணீ க்ருத விரிஞ்ச்யாதி நிரங்குச விபூதய -என்னும்படி
எல்லாவற்றையும் த்ருணீ கரித்து போருமவராய் –
ஹ்ருதி நாராயணம் பஸ்யன் நாப்யகசத்ர ஹச்சதா யஸ் ஸ்வ தார ரதேச்சாபி கோவிந்தம் உபாஸ்மஹே -என்றும்
இதர விஷய அனுபவத்துக்கு இருளும் ஏகாந்தமும் இல்லை என்று இருக்குமவர் ஆகையாலும்
இவர்க்கும் அந்த திரு புனர்பூசமே திரு வவதாரத்துக்கு அநு குணமான திரு நஷத்ரம் ஆயத்து –
அரசமர்ந்தான் அடி சூடுமவர் -என்னும்படி
ஸ்ரீ ராம பாத ஆஸ்ரயருமாய் இருக்குமா போலே
இவரும் ஸ்ரீ ராமானுஜ பதச் சாயயையாய் இருப்பார் –
தேவதாந்தர வைராக்யத்தில் வந்தால் ஸ்ரீ திருமழிசைப் பிரானோடு ஒப்பர் –
இவரும் ஒரு பிறவியில் இரு பிறவி ஆனவர் இறே –
இவை எல்லாவற்றாலும் இத் திரு நஷத்ரம் முப்புரி யூட்டினதாய் இருக்கும் என்கிற வைபவம் சொல்லுகிறது –
(வர்ணத்தால் இரு பிறவி திரு மழிசை ஆழ்வாரும் கிருஷ்ணனும்
ஸம்ப்ரதாயத்தால் இவர் )
————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply