மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -89-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை

இப்படி சர்வ சமாஸ்ரயநீயன் ஆனவனைக் கண்டு
அனுபவிக்கலாவது
திருமலையிலே கிடீர் -என்கிறார் –

திருமலையில்
குறவரோடு
மூங்கிலோடு
திருவேங்கடமுடையானோடு
வாசியற
எல்லாம் உத்தேச்யமாய்   இருக்கிறபடி –

————————————————————————————–

முடிந்த பொழுதில் குறவாணர் ஏனம்
படிந்துழு சால் பைந்தினைகள் வித்த -தடிந்து எழுந்த
வேய்ங்கழை போய் விண் திறக்கும் வேங்கடமே மேலோருநாள்
தீங்குழல் வாய் வைத்தான் சிலம்பு ———-89-

பதவுரை

முடிந்த பொழுதில் சூற வாணர்–மரணமடையும் நிலைமையிலுள்ள கிழவர்களான குறவர்கள்
ஏனம் படிந்து உழு சால்–காட்டுப்பன்றிகள் (தங்கள் செருக்காலே மூங்கில்கள் வேர்பறிந்து விழும்படி) படிந்து உழுதசால்களிலே
பை தினைகள் வித்த–புதிய தினைவிதைகளை விதைக்க
தடிந்து–அறுத்துப்போட்ட பின்பும்
எழுந்த–(நிலவளத்தினால்) ஓங்கிவளர்ந்த
வேய்ங்கழை–மூங்கில் தடிகளானவை
போய்–மேலேசென்று
விண் திறக்கும்–ஆகாசத்தை யளாவப்பெற்ற
வேங்கடம்–திருவேங்கடம்
மேல் ஒருநாள்–முன்பொருநாள்
தீம் குழல்–மதுரமான புல்லாங்குழலை
வாய் வைத்தான்–திருப்பவளத்தில் வைத்து ஊதின கண்ணபிரானுடைய
சிலம்பு–திருமலையாம்.

—————————————————————————————-

வியாக்யானம் –

முடிந்த பொழுதில் குறவாணர் –
சரம அவஸ்தையிலே
வர்த்திக்கிற குறவருக்கு நிர்வாஹகர் ஆனவர்கள் –
அப்போது முடிந்தார்கள் இப்போது முடிந்தார்கள்
என்னும்படியான தசையை உடைய குற விருத்தர்கள் –

ஏனம் படிந்துழு சால் பைந்தினைகள் வித்த –
தாங்களே பிடித்து உழுகைக்கு ஷமர் அல்லாமையாலே
வராஹங்கள் ஆனவை
தான் செருக்காலே படிந்து உழுத சால்களிலே
பசுந்தினைகள் உண்டு -அழகிய தினைகள்-
அவற்றைக் கொண்டு போய் வித்திப் -விதைத்துப் -போருவர்கள்  –
ஷமர் அல்லர் என்னா ஜாத்யுசித வ்ருத்தியைக் கை வாங்கி இரார்களே –

தடிந்து எழுந்த வேய்ங்கழை போய் விண் திறக்கும் –
இவர்கள் முன்னாள் நாயிறு பாடு போய்த் தினைகளை வித்திப்
பிற்றை நாள் விடிவோறே போய்க் காட்டை வெட்டிப் பொகட-
மூங்கில்கள் ஆனவை கிளைத்துப் போய்
ஆகாசத்தை ஊடுருவ வளர்ந்து நிற்கும் –

வேய்ங்கழை போய் விண் திறக்கும் -வேங்கடமே –
இவர்கள் ஏதேனும் ஒன்றை-தினையை -வித்திப் போக
ஏதேனும் ஓன்று -மூங்கில்கள் –
விளைந்து கிடக்குமாய்த்து –

மேலோருநாள் தீங்குழல் வாய் வைத்தான் சிலம்பு —
பண்டு ஒரு நாளில்
இனிய குழலைத் திருப் பவளத்திலே வைத்தூதி
திருவாய்ப்பாடியிலுள்ள சகலப் பிராணிகளையும்
தனக்காம் படி ஸ்வீகரித்துக் கொண்டவன் –

அப்படியே –
திருமலையிலே நின்று
சம்சாரிகளை வசீகரிக்கிரவன் உடைய திருமலை –

அன்றிக்கே –
முடிந்த பொழுதில் தீங்குழல் வாய் வைத்தான் -என்னவுமாம் –
சந்த்யா சமயத்திலே இறே குழல் ஊதுவது  –
அவனுடைய மௌக்த்யத்துக்கு சேர்ந்த திருமலை –

———————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading