மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -84-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

வேதைக சமதி கம்யனாய்
உள்ளவனை ஒருவரால் கண்டதாய்த்
தலை கட்ட ஒண்ணாது  –
கண்டாராகச் சொல்லுகிறவர்கள் அடைய
கவிகளைக் கொண்டாடினார்கள் அத்தனை
அல்லது
ஒருவரும் கண்டார் இல்லை
என்கிறார் –

———————————————————————-

உளனாய நான் மறையினுள் பொருளை உள்ளத்து
உளனாகத் தேர்ந்து உணர்வரேலும் உளனாய
வண்டாமரை நெடுங்கண்  மாயவனை யாவரே
கண்டாருகப்பர் கவி ———–84-

பதவுரை

நால் மறையின்–நான்கு வேதங்களினுடைய
உள் பொருள்–உள்ளுறை பொருளாக
உளனாயவனை–இருக்கின்ற எம்பெருமானை
தேர்ந்து–(ஜ்ஞாந யோகத்தாலே) ஆராய்ந்து
உள்ளத்து உளன் ஆக–நெஞ்சிலே பொருந்தி யிருப்பவனாக
உணர்வர் ஏலும்–(சில ஞானிகள்) அறிய வல்லாரென்றாலும்,
வண் தாமரை–அழகிய தாமரைப் பூப்போன்ற
நெடு கண்–நீண்ட தீருக் கண்களை யுடைய
மாயவன்–ஆச்சர்யபூதனாக
உளனாபவனை–இருக்கின்ற அப்பெருமானை
கண்டார் யாவரே–கண்டு அநுபவிக்கப்பெற்றார் யாவர்? (ஒருவருமில்லை)
கவி உகப்பர்–தோத்திரக் கவிகளை உகந்து வாயாற் சொல்லிக் கொண்டு போது போக்குவர்களத்தனை.

————————————————————————–

வியாக்யானம் –

உளனாய நான் மறையினுள் பொருளை –
வேதாந்த ரஹச்யமாய்க் கொண்டு
என்றும் ஒக்க உளனானவனை-
நான் மறையின் உட்பொருளாய்க் கொண்டாய்த்து   இவன் உளனாவது –
நிர்தோஷ பிரமாண சித்தன் ஆகையாலே
தான் உளனாய்
வேதத்தாலே பிரதி பாதிக்கப் பட்டவனை –

உள்ளத்து உளனாகத் தேர்ந்து உணர்வரேலும்-
இப்படி பிரமாணங்களிலே என்றும் ஒக்க
கேட்டுப் போகக் கடவ
அவனை ஹிருதயத்திலே சந்நிஹிதனாக அனுசந்தித்து
பரிச்சேதித்தார்களே யாகிலும்
கர்ம யோகத்தாலே ஞான யோகம் கை வந்து
ஞான யோகத்தாலே கண்டார்களே யாகிலும் –

உளனாய வண்டாமரை நெடுங்கண்  மாயவனை-
ஆஸ்ரிதர்க்கு அனுபவ யோக்யமான
விக்ரஹத்தை யுடைய
ஆச்சர்ய சக்தி யுக்தனை
யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ-என்று
சுருதி பிரசித்தமான கண் அழகை யுடையவனை
தமக்குக் காட்டின  வடிவு –

யாவரே கண்டார்-
ஆர் தான் காணப் பெற்றார்களோ  –

கண்டாராகச் சொல்லுகிறவர்கள் ஒன்றும் அன்றோ என்னில் –
உகப்பர் கவி –
அவர்களும் கவியை உகந்தார் இத்தனை போக்கி
காணப் பெற்றார்களோ
அவனுடைய ஸ்தோத்ரத்தை உகந்த அத்தனை -என்றுமாம் –

பகவத் விஷயத்திலே
கிஞ்சித் கரித்தோம் ஆக வேணும் என்று
தங்கள் ஆசையை கவி என்று ஒரு முகத்தாலே
வெளி இட்டார்கள் அன்றோ –

———————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading