அவதாரிகை –
ஒருத்தரால் அறியப் போகாதாகில்
வாழ்த்துவார் பலராக –திருவாய் மொழி -3-1-7-என்னும்படியே
பூமியில் உள்ளார் எல்லாரும் கூடினால்
அறியப் போமோ-என்னில்
எல்லாரும் அடையத் திரண்டு
தந்தாமுடைய கரண சக்திகளைக் கொண்டு
அவனை ஸ்தோத்ரம் பண்ண வென்று புக்கால்
பின்னையும் அவர்கள்
நின்ற நிலைக்கு இவ்வருகாய் அன்றோ
அவ்விஷயம் இருப்பது
என்கிறார் –
————————————————————————————–
கவியினார் கை புனைந்து கண்ணார் கழல் போய்ச்
செவியினர் கேள்வியராய்ச் சேர்ந்தார் புவியினார்
போற்றி யுரைக்கப் பொலியுமே பின்னைக்காக
ஏற்று யிரை யட்டான் எழில் —–85-
பதவுரை
கவியினார்–தோத்திரங்கவிகளைச் சொல்லு பவராய்க் கொண்டு
கை புனைந்து–அஜ்ஞலிபண்ணி
கண்–தமது கண்கள்
ஆர் கழல் போய்–(அவனது) விலக்ஷணமான திருவடிகளிலே சென்று சோப்பெற்று
செவியின் ஆர் கேள்வியர் ஆய்–காது நிறைந்த கேள்விகளை யுடையராய்க் கொண்டு
சேர்ந்தார்–வந்து பணிந்தவர்களான
புவியினார்–பூமியிலுள்ளா ரெல்லாரும்
போற்றி உரைக்க–(ஒன்று கூடிப்) போற்றி யுரைத்தாலும்,
பின்னைக்காய் ஏறு உயிரை அட்டான் எழில் பொலியுமே–நப்பின்னைப் பிராட்டிக்காக ரிஷபங்களினுயிரை மாய்ந்த
பெருமானுடைய அழகு சிறப்புறச் சொல்லப்பட்ட தாகுமோ?
——————————————————————————————-
வியாக்யானம் –
கவியினார் கை புனைந்து –
வாயாலே நல்ல கவிகளைச் சொல்லி
கையைக் கூப்பி
ஸ்தோத்ரத்தாலே-அபிமான சூன்யராய்த்
தொழுது —
வாயாலே கவியைச் சொல்லி
கையாலே அஞ்சலியைப் பண்ண –
கண்ணார் கழல் போய்ச் –
கண்களானவை –
ஆர் கழல் -அழகு நிறைந்துள்ள –
விலஷணமான திருவடிகளை அடைந்து
நிரதிசய போக்யமான
திருவடிகள் அளவும் சென்று கிட்டி –
செவியினர் கேள்வியராய்ச் சேர்ந்தார் புவியினார் –
செவி நிறைந்த அவனுடைய
கல்யாண குணங்களிலே
கேள்வியை யுடையராய்
சேர்ந்தாரான பூமியில் யுள்ளார் எல்லாரும்
ஸ்ரவணத்தை யுடையராய் –
இப்படிக் கிட்டினாரான பூமியில் உள்ளார் –
போற்றி யுரைக்கப் பொலியுமே –
எல்லாரும் கூடி மங்கள வாசகங்களான
சப்தங்களைக் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணினால் தான்
எல்லை காணப் போமோ –
தம்தாமுடைய ஜ்ஞான சக்திகளையும்
அவன் கொடுத்த ஜ்ஞான சக்திகளையும் கொண்டு
சகல லோகங்களும் ஒரு மிடறாய் ஏத்தப் புக்கால் தான்
சிறிது குறைந்து காட்டுமோ –
விஞ்சிக் காட்டும் அத்தனை -என்கை –
பொலியுமே –
அங்குத்தைக்கு ஏதேனும் அதிசயத்தைப்
பண்ணப் பெற்றோமே -என்றுமாம்
வர்ஷாயுதைர் யஸ்ய குணா ந சக்யா வக்தும் சமேதைரபி சர்வ லோகை-
இப்படி ஏத்த ஒண்ணாது ஒழிகிறது தான் அவன்
படிகள் எல்லாம் கூடத் திரண்டத்தையோ –
என்னில் –
பின்னைக்காக ஏற்று யிரை யட்டான் எழில் –
அவனுடைய ஒரு அபதானம்
எல்லை காணப் போகாது -என்கிறது –
நப்பின்னை பிராட்டி பக்கல்
கலவிக்கு பிரதிபந்தகமான
ருஷபங்களின் உடைய பிராணனை முடித்தவன்
உடைய சமுதாய சோபையை-
புவியினார் போற்றி யுரைக்கப் பொலியுமே –
அவனுடைய மணக் கோலத்தையும்
ருஷபங்களை யடர்த்த ஒரு செயலையும்
வடிவு அழகையும்
சொல்லப் போமோ –
———————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply