அவதாரிகை –
கீழே ப்ரஸ்துதமான
ராம வ்ருத்தாந்தம் தன்னிலே திரியவும் ஆழங்கால் பட்டுப்
பேசுகிறார் –
கீழே
கலங்கா பெரு நகரம் காட்டுவான் -என்றாரே
ருசி உடையாருக்குப் பரமபதம் கொடுக்கும் அத்தனையோ-என்னில் –
ருசி பிறப்பிப்பானும் அவனே –
என்கிறது –
—————————————————————————————
எய்தான் மரா மரம் ஏழும் இராமனாய்
எய்தான் அம்மான் மறிய ஏந்திழைக்காய் -எய்ததுவும்
தென்னிலங்கைக் கோன் வீழச் சென்று குறளுருவாய்
முன்னிலம் கைக் கொண்டான் முயன்று ——-52-
பதவுரை
இராமன் ஆய்–ஸ்ரீராமனாகத் திருவவதரித்து
மராமரம் ஏழும்–ஸப்த ஸால வ்ருஷங்களையும்
எய்தான்–அம்பு செலுத்தித் துளைத்தான்,
ஏந்து இழைக்கு ஆய்–தரிக்கப்பட்ட ஆபரணங்களை யுடைய பிராட்டிக்காக
அ மான் மறிய–அப்படிப்பட்ட மாரீச மாயா மிருகக்குட்டியை
எய்தான்–பின்சென்றான்,
எய்த்துவும்–அம்புகளைச் செலுத்தினதும்
தென் இலங்கை கோன் வீழ–தென்னிலங்கைக்கு அரசனான இராவணன் முடியும் படியாகவாம்,
முன்–முன்பொரு காலத்திலே
குறள் உரு ஆய்–வாமன ரூபியாய்
சென்று–மாவலியிடத்திற் சென்று
முயன்று–(வடிவழகு காட்டுதல், மழலைச் சொற்களைச் சொல்லுதல் முதலிய) முயற்சிகளைச் செய்து
நிலம் கைக் கொண்டான்–பூமியைக் கைப்பற்றினான்.
——————————————————————————————–
வியாக்யானம் –
எய்தான் மராமரம் ஏழும் இராமனாய் –
ஓர் ஆஸ்ரிதனை
விஸ்வசிப்பிக்கைக்காக
சக்கரவர்த்தி திரு மகனாய்க் கொண்டு
அவன் ஒன்றை எய்யக் கோலி
மரா மரங்கள் ஏழும் துளை பட எய்தான் ஆயிற்று –
ருசி இல்லாதாருக்கு ருசியைப் பிறப்பிக்கும் போதும்
ருசி யுடையாருக்குச் செய்யுமா போலே
செய்யும் -என்றபடி –
எய்தான் அம்மான் மறிய ஏந்திழைக்காய் –
பிராட்டி சொல்லு மறுக்க மாட்டாமையாலே
அந்த மான் புரண்டு விழும்படியாக எய்தான் –
அன்றிக்கே –
மான் மறியை -என்ற பாடம் ஆய்த்தாகில்
இளமான் -என்றாய் -மான் குட்டி என்று பாராதே
கிடீர் எய்தது -அவள் அருளிச் செய்கையாலே –
ஏந்திழைக்காய் —
கண்ணாஞ்சுழலை இடப் பண்ணின அழகு இறே –
புரேவ மே சாறு தத்தி ம நிந்திதாம் -ஆரண்ய -64-78-
இத்தாலும் அவளுடைய ருசியை வர்த்திப்பித்த படி –
எய்ததுவும் தென்னிலங்கைக் கோன் வீழச்-
எய்தது தெற்கு திக்கில் உண்டான இலங்கைக்கு
நிர்வாஹகனான ராவணனை –
அழகுக்கு இலக்காகாதாரையும்
புக்கு இலக்காக்கின படி –
சென்று குறளுருவாய் முன்னிலம் கைக் கொண்டான் முயன்று –
முன்பு குறளுருவாய் சென்று
முயன்று
பூமியைக் கையிலே கொண்டான் –
முன்னிலம் கைக் கொண்டான் முயன்று –
லோகத்தை யடங்கக் கைக் கொண்டான் –
முயன்று –
கொள்வன் நான் -திருவாய் -3-8-9-
இத்யாதிகள் செய்தவை
இத்தால்
ப்ராப்தி பண்ணா நின்று கொண்ட படி –
———————————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply