அவதாரிகை –
இப்படி ருத்ரனுக்கும் கூட ரஷகனான உன்னை ஆஸ்ரயிக்கப்
பெற்றவர்கள் இறே
விரோதிகளைப் போக்கப் பெற்று நல் வழி போனார் ஆகிறார்
என்கிறார் –
———————————————————-
காப்புன்னைக் யுன்னக் கழியும் அருவினைகள்
ஆப்புன்னை யுன்ன வவிழ்ந்து ஒழியும் மூப்புன்னைச்
சிந்திப்பார்க்கு இல்லை திரு மாலே நின்னடியை
வந்திப்பார் காண்பர் வழி—75-
பதவுரை
திருமாலே–லக்ஷ்மீ நாதனே!
உன்னை–(பரம புருஷனான) உன்னை
உன்ன–ரக்ஷகனாக ஆநுஸந்திக்கு மளவில்
காப்பு–பிரதிபந்தகங்கள்
கழியும்–விட்டு நீங்கும்;
உன்னை உன்ன–உன்னை நினைக்கு மளவில்,
அரு வினைகள் ஆப்பு–போக்க முடியாத கருமங்களின் பந்தமும்
அவிழ்ந்து ஒழியும்–அவிழ்ந்து போம்;
உன்னை சிந்திப்பார்க்கு–உன்னை த்யானிப்பவர்களுக்கு
மூப்பு இல்லை–கிழத்தனம் முதலிய ஷட் பாவ விகாரங்களும் இல்லையாம்;
நின் அடியை வந்திப் பார்–உன் திருவடிகளை ஆஸ்ரயிக்கு மவர்கள்
வழி–அர்ச்சிராதி மார்க்கத்தை
காண்பர்-கண்டு அனுபவிக்கப் பெறுவர்கள்.
——————————————————————————–
வியாக்யானம் –
காப்புன்னைக் யுன்னக் கழியும் –
தர்மஸ்ஸ ஜாநாதி நரஸ்ய வ்ருத்தம்-என்று
ஈஸ்வரனுக்குப் புரவர் போலே
பதினாலு பேர் உண்டு இறே –
சூர்யன் -சந்தரன் -காற்று -நெருப்பு -ஆகாயம் -பூமி நீர்
மனம் -யமன் -பகல் இரவு -ப்ராதாஸ் சந்த்யை -சாயம் சந்த்யை -தர்மம் –
இச் சேதனர் செய்யும் கர்மங்களை ஆராயக் கடவர்கள்
அவர்கள் உன்னை அனுசந்திக்க
விட்டுக் கடக்க நிற்பார்கள்
அவனுடையாரை நோக்கக் கடவன் அவனே யன்றோ -நாம் என்-என்று கடக்க நிற்பார்கள் –
ப்ரபுரஹம் அந்ய ந்ருணாம் ந வைஷ்ணவா நாம் -ஸ்ரீ விஷ்ணு பிராணம் -3-7-4-
தேவர்ஷி பூதாப்த -பாகவதம் -11-5-41-இத்யாதி –
கர்ம வஸ்யனாகை இறே இவர்கள் காக்கைக்கு அடி
அது போம்படி சொல்லுகிறது
அரு வினைகள் ஆப்புன்னை யுன்ன வவிழ்ந்து ஒழியும் –
ஆக்கை புகுகைக்கு அடியான
அவித்யாதிகளால் உண்டான பந்தங்கள் எல்லாம் உன்னை அனுசந்திக்க தாமே கழன்று போம் –
மூப்புன்னைச் சிந்திப்பார்க்கு இல்லை –
காப்பும் அருவினையும் போன அதிகாரிக்கு மூப்பாவது கைவல்யம்
அன்றிக்கே
பிறந்தான் இறந்தான் என்று சொல்லக் கடவ
ஷட் பாவ விகாரங்கள் வந்து கிட்டா –
திரு மாலே –
இவை எல்லாம் வந்து கிட்டாமைக்கு அடி இருக்கிறபடி
ஈஸ்வரன் ஸ்வாதந்த்ர்யத்தாலே ஆராயப் புக்காலும்
பிராயச்சித்த சாத்யம் அல்லாத பாபம் நாம் பொறுக்கும் அத்தனை யன்றோ என்று
ஆற்றுவாள் ஒருத்தி அருகே உண்டு என்கிறது
தாஸீ நாம் ராவணஸ் யாஹம் -யுத்த் -113-41-
ராஜ சம்ஸ்ரய வச்யா நாம் –யுத்த -113-38-
என்னும்படியே தன்னைக் கழிக்குமோ பாதி
பிராப்யானாம் போது பிராட்டி கூட வேணும் –
நின்னடியை வந்திப்பார் காண்பர் வழி –
தேவர் திருவடிகளை ஆஸ்ரயித்தவர்கள் இறே நல் வழி போனார் ஆகிறார்
வழி என்று
அர்ச்சிராதி கதியைச் சொல்லிற்று ஆகவுமாம் –
பரமபதம் போலே இறே பரமபதத்துக்கு போம் வழி
வந்தியாருக்கு முள்ளும் முடுக்குமான வழி
மூப்பு உன்னைச் சிந்திப்பார்க்கு இல்லை திருமாலே –
யுவா குமாரா
யுவதிஸ்ஸ குமாரிணீ-என்கிற
உங்களை ஆஸ்ரயித்தால்
உங்களைப் போலே பரம சாம்யம் உபைதி இறே –
———————————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply