ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -43 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

பிராட்டிமார் சந்நிதி
எப்போதும் உண்டாகையாலே இனி விரோதியைப்
போக்குகை என்று ஒரு பணி இல்லை –

தம் தாமுடைய ருசிக்கு அநு ரூபமான வ்ருத்தியிலே அன்வயிக்கவே –
விரோதிகள் அடங்கலும் தன்னடையே விட்டோடிப் போம்
என்கிறார்

———————————————————————–

மனமாசு  தீரும் அருவினையும் சாரா
தனமாய தானே கை கூடும் புனமேய
பூந்துழாயான் அடிக்கே போதொடு நீரேந்தி
தாம் தொழா நிற்பார் தமர் ——-43–

பதவுரை

புனம் மேய பூ துழாயான் அடிக்கே–தன்னிலத்தி லிருப்பது போலவே செல்வி குன்றாதிருக்கிற
திருத் துழாயை அணிந்துள்ள எம்பெருமான் திருவடிகளில்
போதொடு நீர் ஏந்தி–(திருவாராதநத்துக்கு உப கரணமான) புஷ்பங்களையும் தீர்த்தத்தையும் எடுத்துக் கொண்டு
தொழா நிற்பார் தமர் தாம்–வணங்குமவர்களான பாகவதர்களுக்கு
மனம் மாசு தீரும்–மனக் குற்றங்கள் விட்டு நீங்கும்
அரு வினையும் சாரா–(ஸ்வ ப்ரயத்நத்தால்) நீக்க முடியாத தீ வினைகளும் அணுக மாட்டா:
தனம் ஆய–(பக்திமான்களுக்கு செல்வமாகிய பரம பக்தி முதலியவைகளும்
தானே கை கூடும்–தனக்குத் தானே வந்து கை புகுரும்

—————————————————————————

வியாக்யானம் –

மனமாசு  தீரும் –
மானச தோஷங்கள் விட்டு ஓடிப் போம்
பகவத அநு சந்தானத்துக்கு விரோதியான ஹ்ருதய காலுஷ்யங்கள் உண்டு
அவித்யாதிகள்
அவை அடையப் போம் -என்றபடி

அருவினையும் சாரா –
இவற்றை இடையிலே முறித்தாலும் பிரயோஜனம் இல்லை
அடி கிடக்கும் அன்று கிளைக்கக் கடவதாய் இருக்குமே
அடியான புண்ய பாப ரூப  கர்மங்கள் வாசனையோடு விட்டுப் போம் –

தனமாய தானே கை கூடும் –
மானச தோஷங்களும் போய்
சம்சரிக்கைக்கு அடியான புண்ய பாபங்களும் போன இவ்வதிகாரிக்கு தனமாவது
கைங்கர்யத்துக்குப் பூர்வ காலீ நமான ஜ்ஞான பக்திகள் இறே
அவை வருத்தமற வந்து  கை புகுரும்

அந்தரிஷகத ஸ்ரீ மான் -என்னுமா போலே
பக்திக்கு உறுப்பான சம தமாதிகளும் உண்டாம் –

குடிக்கிற வேப்பங்குடி நீர் இருக்கிற படி

புனமேய பூந்துழாயான் அடிக்கே போதொடு நீரேந்தி தாம் தொழா நிற்பார் தமர் –
தன் நிலத்திலே நின்றாப் போலே யாய்த்துத்
திருக் குழலிலே வைத்தாலும் வளையம் இருக்கும் படி –

சர்வேஸ்வரன் உடைய திருவடிகளிலே புஷ்பாத் யுபகரணங்களைத் தரித்துக் கொண்டு நின்று
சேஷ பூதரானவர்கள் தங்களுக்கு இனிதாக ஆஸ்ரயியா நிற்பார்க்கு
இவை யடங்க விட்டோடிப் போம்

இவன் தனக்கு வகுத்த இது செய்யா நின்றால்
அவன் தனக்கு வகுத்தது செய்யானோ

இவனுக்கு அடிமை செய்கை ஸ்வரூபம் ஆனாப் போலே
அவனுக்கு அடிமை கொள்ளுகை ஸ்வரூபமாய் இருக்கும் –

———————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading