ஸ்ரீ பெரிய திருமொழி-11-8—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

(அடியிலே சூழ் புனல் குடந்தையே தொழுது
உபக்ரமித்து
குடந்தை பாடி ஆடும் என உபதேசித்தாலும்
விஷய ப்ரவணராய் இருக்க
இந்திரியங்கள் -ஆத்மா இவற்றை நிந்தித்து
மீளவும் இந்த சாற்றுப் பாசுரத்திலும் பலம் சொல்லாமல் பாடி ஆடும் என்று உபதேசிக்கிறார்
எதனால் என்பதற்கு பதில் அருளிச் செய்து சங்கதி –
ஆழ்வார் திரு உள்ளத்தில் ஓடும் நிரூபண விஷயம்
அனைத்தும் அவன் செயல்
அநாதரித்தான் அவன் தானே
இவர்களை நிந்திக்க வழி இல்லை
அவன் ஆதரித்து இருக்க இப்பிரபந்தம் அந்வயிக்க பிரதிபந்தகங்கள் கழிந்து பேறு கிட்டும் என்றார்
சர்வேஸ்வரன் மேல் குற்றம் சொல்லுவது-வாதி பிரதிவாதமாக -சங்கதி அருளிச் செய்கிறார் –
நான்கு கேள்விகள் நான்கு பதில்கள் இதில் உண்டே
மாற்றம் -ஜாதி ஏக வசனம் )

மாற்றமுள–பிரவேசம் –

அடியிலே வாதி பிரதிவாதிகளாய் யாயிற்று இழிகிறது –
இவர் தாம் ஒரு வார்த்தை சொன்னால் இறே-
அவனுக்கு மறு மாற்றம் உள்ளது –

இவர் சொன்ன வார்த்தை ஏது என்றல் –
இவ் வாத்ம வஸ்து வானது அங்குத்தைக்கு-
ஸ்ரீ   கௌஸ்துபத்தோ   பாதியும் -பூணார மார்வனை –
நாய்ச்சியார் திரு முலைத் தடத்தோபாதியும்-தட மலர்க் கண்ணிக்காய் –
ஸ்ப்ருஹ விஷயமுமாய்
போக்யமுமாய் இருந்தது –

அநாதி காலம் இழந்து அதபதிக்க வேண்டுவான் என் -என்று கேட்டால்
சொல்லலாவன சில வார்த்தைகள் உள-
அவ்வார்த்தைகள் தான் என் என்னில்

அங்கைத் தலத்திடை (நாச்சியார் -12-)-இத்யாதி -என்றும் ஒக்க ஈஸ்வரன் முகத்தில்
(கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா -என்று இருந்து இருக்க வேண்டும் )
விழியேன் என்று பிரதிஞ்ஞையைப் பண்ணி
நம் பக்கலில் விமுகனாய்
சப்தாதிகளிலே பிரவணனாய்
நம் பக்கலிலே அத்வேஷமும் இன்றிக்கே
போருகையாலே சம்சரித்துப் போந்தான் -இது ஒரு வார்த்தை –
(ருசி இல்லாமையால் கீழே விழுந்தார்கள் )

அநித்யம் சுகம் லோகம் (ஸ்ரீ கீதை)-இத்யாதி
சம்சார பீதனாய்க் கொண்டு
நம் பக்கல் புகுராதே
நம் பக்கல் நிரபேஷனாய்
கர்ம சாபேஷையைப் பண்ணிப்  போந்த
அநாதி கால வாஸிதமான புண்ய பாப ரூபமான கர்ம பரம்பரை யானது
ஜன்ம பரம்பரைகளிலே மூட்ட -அவ் வழிகளாலே சம்சரித்துப் போந்தான் –
(கர்மத்தால் விழுந்தார்கள் இரண்டாவது வார்த்தை இது )

இனி
கர்த்தா காரயிதா -என்றும்
கர்த்தா சாஸ்த்ரத்வாத் -என்றும்
சாஸ்திர பலம் பிரயோக்தரி -என்றும்
சொல்லுகிறபடியே
கர்த்த்ருத்வ போக்த்ருத்வங்கள்
சைதன்ய க்ருத்யமாய் யாயிற்று இருப்பது –
அது இல்லாமையாலே சம்சரித்துப் போந்தான் என்றாப் போலே சொல்லலாம் –
இவை உனக்கு வார்த்தை அல்ல –

(ஞானம் இல்லாமல் பிறக்கிறான் மூன்றாம் வார்த்தை
நாலாவது ஸ்பஷ்டமாக இல்லை -உஊகிக்க வேண்டும் –
செய்பவன் செய்விப்பவன் தூண்டுபவர் ஆமோதிப்பவர் -நான்கும் அவனே )

ஆகிலும் சொல்லுவன்-
இது பக்நமாம் படி  -இவற்றுக்கு மேலே உத்தரம் சொல்லுவன்-
எங்கனே என்னில் –
ருசி இல்லை என்றே முதல் வார்த்தை –
ருசி அசுருசிகளுக்கும் அடி ஏது என்னில் -மனஸ்ஸாயே யாய் இருப்பது –
அந்த மனஸ்ஸூ நீ இட்ட வழக்கு அன்றோ –
சர்வஸ்ய சாஹம்  ஹ்ருதி சந்நிவிஷ்ட –
தீ மனம் கெடுத்தாய் –
மருவித் தொழும் மனமே தந்தாய் –
என்று சொல்லுகிறபடியாலே-ருசி ஜனகன் நீயான பின்பு
ருசி இல்லை என்று சொன்ன இடம் வார்த்தை இல்லை –

அநந்தரம்
கர்மம் அடியாக சம்சரித்து போந்தான் என்னாதே –
கர்ம ஸ்வரூபத்தைப் பார்த்தால் -அது கிரியா ரூபம் ஆகையாலே அப்போதே நசிக்குமே –
கிரியாவான் மறக்குமே –
அது நிக்ரஹ அனுக்ரஹ ரூபேண உன் திரு உள்ளத்தில் கிடந்து அன்றோ  அனுபாவ்யம் ஆவது –
உனக்கு நிவாரகர் இல்லாமையாலே -அத்தை ஷமிக்கத் தீருமே –
ஆகையால் அதுவும் வார்த்தை அல்ல –

இனி
கர்ம கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் சைதன்ய க்ருத்யம்-
அது இல்லாமையாலே சம்சரித்துப் போந்தான் -என்னதுவும் வார்த்தை அல்ல –
உனக்கு இது சரீரதயா பரதந்த்ரம் ஆகையாலே  –
ஸ்வ தந்திர க்ருத்யமான கர்த்ருத்வம் பரதந்த்ரனுக்கு கூடாமையாலே -அதுவும் வார்த்தை அல்ல –

(ரக்ஷணம் அவனே பண்ணிக் கொள்ள வேண்டுமே என்பது
நாலாவது வார்த்தையாக கொண்டு அதுக்கு மறு மாற்றம் மேல் )

சரீர ரஷணம் சரீரி அன்றோ பண்ணுவான் –
சம்பந்தத்தையும் மறந்தாயோ -என்கிறார்

ஆன பின்பு உன்னுடைய அநாதாரமே ஹேது –

இருவரும் என் நினைத்து சொன்னார்கள் -என்னில் –
1-அவன் -கர்மத்தைப் பற்றி நின்று வார்த்தை சொன்னான் –
இவர் ப்ரஹ்மத்தை பற்றி நின்று அத்தை அழித்தார்-
(இசைவித்து அன்றோ நீ உனது தாள் இணைக்கீழ் கொள்ள வேண்டும் -ருசி ஜனகனும் நீயே )

2-அவன் வேதத்தை பற்றி நின்று வார்த்தை சொன்னான் –
இவர் வேதாந்த தாத்பர்யத்தைப் பற்றி நின்று அத்தை அழித்தார் –
(வேதாந்த தாத்பர்யம் கிருபாதீனம் -ரஹஸ்யார்த்தம் )

3-அவன் ஸ்வரூபத்தை பற்றி நின்று வார்த்தை சொன்னான் –
இவர் ஸ்வரூப யதாம்யத்தைப் பற்றி நின்று அத்தை அழித்தார் –
(அடியேன் உள்ளான் -ஆழ் நிலை ஸ்வரூபம் பாரதந்தர்யம் )

4-அவன்  பாரதந்த்ர்யத்தைப் பற்றி நின்று சாத்திய உபாயத்தை பற்றி நின்று சொன்னான்
இவர் பாரதந்த்ர்ய காஷ்டையைப் பற்றி நின்று
சித்தோ உபாயத்தைப் பற்றி
அத்தை அழிக்கிறார்-

இது காணும் உபாசகனில் காட்டில் பிரபன்னனுக்கு ஏற்றம் –
மக்கள் தோற்றக் குழி -தொடங்கி
மேல் பாட்டு குறையும் இவற்றைச் சொன்னபடி –

(சர்வஞ்ஞன் -அவனால் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் வாதம் பிரதிவாதம்
வேத பூர்வ உத்தர வாக்கியம் பற்றி ருசி
சாரமான திருமந்த்ரம் இரண்டாம் வார்த்தை
அதிலும் மத்யம பதம் நம பற்றி மூன்றாம் வார்த்தை
ஆர்த்தமான அவனே உபாயம் -அசித் போன்ற பாரதந்தர்யம் பற்ற நான்காம் வார்த்தை )

(பர உபதேசம் இறுதி பாசுரம் இதுவே
பரம கிருபையால் மீளவும் இதில் பர உபதேசம்
மேல் பர உபதேசம் இல்லையே –
அதனால் ஆதரவுடன் மீண்டும் வியாக்யானம் அதுக்கு இங்கு )

மெய்நின்ற -இத்யாதி
போக்யதை அளவிறந்தது
அனுபவித்து வாழுங்கோள் நாடடைய -என்கிறார் –

மெய்நின்ற பாவம் அகல –
அனுபவித்து அல்லது நசியாத படியான பாபமானது போக -என்னுதல் –
தேஹோபாதிகமானது அகல -என்னுதல் –

திருமாலை –
விரோதி என்று பேர் பெற்றவை அடைய போக்குவிக்கும் பிராட்டியை அருகே உடையவனை –

கைநின்ற-
எப்பொழுதும் கை கழலா நேமியானாய் இருக்கிற
சர்வேஸ்வரனுடைய போக்யதை மிக்கு இருந்துள்ள திருவடிகளை -என்னுதல்
ஸூலபமான திருவடிகளை  சிரஸா வஹித்து -என்னுதல்

சர்வேஸ்வரன் ஐஸ்வர்ய ப்ரகாசகமான திரு வாழியைக் கையிலே உடையவன் ஆனால் போலே
சேஷத்வ பிரகாசகமான வேலை உடைய ஆழ்வார் அருளிச் செய்த இப்பத்தையும்
பாடுவது ஆடுவது ஆங்கோள்-
விரோதி போக்குகையில் பணி இல்லை  –
அது தன்னடையே போம் –
மேல் உள்ளத்து உங்களுக்கு ஹர்ஷமே –

பகவத் விஷயத்தில் அந்வயியாதார் உடைய கரணங்கள்
அவர்கள் அவற்றைத் தங்களுக்கு உறுப்பு என்று நினைத்தார்களே யாகிலும் –
அவை அவர்களுக்கு அடைத்தவை அல்ல வென்றும்
பகவத் ப்ராவண்யம் இல்லாதார் முதலிலே சேதனர் அல்லர் என்றும் சொன்னார் கீழில் திரு மொழியில் –
இவர் தாம் பிறர் குறை அறிந்து பரிஹரிப்பாராய் நின்றார் –
நாம் நின்ற நிலை ஏது என்று ஆராய்வோம்
இவர் தாம் தம் குறை கிடக்க பிறர் குறை பரிஹரிக்கப் பார்க்கிறது –
தான் குறைவற்றவராக நினைத்து இருந்தோ –
அன்றிக்கே –
தம்முடைய கிருபா குண ப்ராசுர்யத்தாலேயோ –
தயாவான்களாய் இருப்பார் தம்தாம் குறை கிடக்கச் செய்தேயும்
பிறர் குறையைப் பரிஹரிக்கப் பார்ப்பார்கள் இறே –
பெருமாள் பிராட்டியைப் பிரிந்து
தடுமாறி
கண்ணாஞ்சுழலை இட்டு வாரா நிற்கச் செய்தேயும்
மகா ராஜர் இழவைக் கண்ட பின்பு அவற்றை மறந்து
அத்தைப் பரிஹரிக்கப் பார்த்தார் இறே –

(இந்த பிரபந்தம்-11-7- அனுசந்தானம் -கீழே -பிராட்டி திரு உள்ளம் யூகிக்க மேலே ஹர்ஷமே
அடியிலே குடந்தையே -ஆராவமுதைப்பருகி
உக்காந்து அருளினை நிலங்களில் பிரவணராய்
தூ விரிய –தூது விட்டும்
ஏழை ஏதலனில் சரணமும் புக
இவரை இன்னமும் உகந்து அருளினை நிலங்களில்
ஒரு நல் சுற்றம் வரை பரிபூர்ண அனுபவம் செய்து
பர்யாப்த்தம் ஆகாமல்
மீண்டும் திருவாலி எம்பெருமான் போது அணியப்பெற்றோம் என்றும் அவன் இடம் கைங்கர்யமும்
இருக்கும் படி ஆராவமுதனைப் பருக சொல்ல
செய்யாமல் இருக்க நிந்திக்க
இவ்விபூதியில் இவர் இருப்பை அறிவித்தான்
இப்படி சங்கதி )

இவை கிடக்க –
இவர் தாம் நின்ற நிலையை இவருக்கு அறிவிப்போம் –
சம்சாரத்தின் உடைய பொல்லாங்கை அறிவித்தால்
இதுவே அமையும் என்று அறிந்தார் ஆகில் இங்கே வைக்கிறோம்
இதில் பொருந்தாத படி ஆனார் ஆகில் அமர்ந்த நிலத்திலே கொடு போகிறோம் -என்று பார்த்து
பிறரை இகழ்கிற நீர் தான் நின்ற நிலையைப் பார்த்து காணீர் -என்ன

தம்மைப் பார்த்தார் –
ஜ்ஞான லாபம் உண்டே யாகிலும்
அவன் உபேஷித்த அன்று  இவ்வருகே போகைக்கும் உடலாய்
அவன் ஆதரித்த போது அவ்வருகே போகைக்கும் உடலாம் படி
பொதுவான நிலத்திலே
தேக சம்ஸ்ருஷ்டராய் இருக்கிற இருப்பைக் கண்டார் –
குறைவற்றார் இருக்கிற் கோடியிலேயுமாகப் பெற்றது இல்லை –
இக் குறை நெஞ்சில் படாதே போது போக்கி இருக்கிறவர்கள் கோடியிலேயுமாகப் பெற்றது இல்லை-
(அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் -உன்னைக் காணும் அவாவினால் எங்கு உற்றேன் அல்லேன் போல் )

இது தான் –
தேஹமாயும்
இந்த்ரியமாயும்
போக்யமாயும்
பந்தகமாயும்   -தோற்றி இருந்தது –
இது தான் அசத் கல்பபாம் படி இறே பிறந்த ஜ்ஞானம் –
அந்த ஜ்ஞானம் தான் ஆறி இருக்கைக்கு உடல் அன்றிக்கே –
த்வரிக்கைக்கு உடலாய் இருக்கும் இறே –

(இங்கே தேறி இருக்காமல் –
ஞானம் உண்டானால் உடலைக் கைங்கர்யத்துக்கு உடலாக்கலாமே என்னில்
போது அணியப் பெற்றேன் என்றவருக்கு பயம்
மலர்ந்த ஞானத்தால் உடல் கெடுக்கும் என்றே பார்க்க வைக்கும்
சம்சாரம் தேகம் பாம்பு புற்றில் இருக்க
ஞானமே பய ஹேது ஆகுமே
ப்ரபன்னன் அஞ்ச வேண்டாமே -உபநிஷத் சொன்னாலும்
ஏழை எதலினில் சரணம் புகுந்தார்
அது போதாதோ என்னில்
போகும் வரை கால் கட்டி அறுத்துக் கொள்ள வேண்டும் படியேயாய் இருக்குமே )

புற்றின் அருகே பழுதை கிடந்தாலும் -பாம்பு -என்றே பயம் அனுவர்த்திக்கும் இறே
ஆகையால் இது தான்
அவசியம் பரிஹரித்து கொள்ள வேண்டுவது ஒன்றாய் இருக்கிற படியும் –
தம்மால் பரிஹரித்து கொள்ள ஒண்ணாத படியாய் இருக்கிற படியும் –
அவனையே கால் கட்டி பரிஹரித்துக் கொள்ள வேண்டி இருக்கிற படியையும்  –
அனுசந்தித்து –

த்வத் அனுபவ விரோதியான தேக சம்பந்தத்தை
அறுத்துத் தந்து அருள வேணும் என்று
திருவடிகளிலே விழுந்து சரணம் புகுகிறார் –

——————————————————————-

மாற்றமுள வாகிலும் சொல்லுவன் மக்கள்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய்  கொல் என்று இன்னம்
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன்
நாற்றச் சுவை யூறொலியாகிய நம்பீ—11-8-1-

(கண்ணுக்கு உண்டான ரூப அனுபவம் சொல்லாமல் விட்டது –
பேதை பாலகன் -அதாகும் போல் -இவர் அது கூடச் சொல்லாமல் விட்டார்
மாற்றமுள வாகிலும்-அவனுக்கு மாற்றங்கள் பல சொல்லலாம் –
சொல்வதற்கு உத்தரம் -யுக்தி பிரதி யுக்தி -அஞ்சுகிறேன் என்றே சொல்வேன் -சித்தாக இருப்பதாலே –
பயப்படத் தான் சித் போல் -பரிகாரம் செய்ய அசித் போல் தேடிக் கொள்ள மாட்டாமல் உள்ளேன்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய்-கர்மாதீனமாகப் பிறந்தாலும் -என்று சொல்லலாம் படி ஞானம் கொடுத்தானே )

மாற்றமுள –
இவ் வாத்ம வஸ்துவானது கௌஸ்துபாதிகளோபாதி
நிர் தோஷமாய்
உன்னாலே தரிக்கப் படுவது ஒன்றாய் இருக்க
(பிறர் நன் பொருள் அன்றோ )
இது அநாதி காலம் சம்சரிக்கும் படி விட்டு வைத்தாய் நீ -என்று
பிராப்த அப்ராப்த விவேகம் பண்ணிச் சொன்னால்
அதுக்கு உனக்கு சொல்லலாம் மறு மாற்றங்கள் உள –

மாற்றமுள –
அதுக்கு அர்த்தம் இல்லை –
சம்பந்தத்திலே ஒரு கண் அழிவு உண்டாகில் இறே
ஒரு மறு மாற்றம் சொல்லி
கடக்க இருக்கலாவது
(பிதா ரஷக சேஷி இத்யாதி நவவித சம்பந்தங்களில் குறை இல்லையே
ஒழிக்க ஒழியாத உறவு உண்டே )

உன்னோடு உண்டான குடல் துடக்கு -போட்கன்  அல்ல –
உன் கண் வட்டத்தே சம்சரிக்கிற இத்தை இல்லை செய்ய ஒண்ணாது
இதுக்கு நீ என்ன மறு மாற்றம் சொல்லுவது –
(தாமரைக் கண் என்பதால் கண் வட்டத்தில் -உனக்கு ஆட்பட்டும் இன்னம் உழல்வேனோ )

உள –
(பஹு வசனம் )
நீ சேதனன் ஆன பின்பு
பேற்றுக்கு உடலாக நீயே அனுவர்த்தித்து வர வேண்டாவோ -என்று உனக்குச் சொல்லலாம் –

நாம்
ஆள் பார்த்து உழி தருவானாய்
எதிர் சூழல் புக்கு திரியா நிற்க
நீரே யன்றோ இவ்வளவாக மிறுக்குப் பண்ணினீர் என்றும் சொல்லலாம்

ஆவேன் என்று இசைந்த அன்று வர நிற்கைக்கு உறுப்பாக அன்றோ
நாம் முதலிலே சக்தியையும் பிரவ்ருத்தியையும் தந்து விட்டது -என்று சொல்லலாம் –

நீ ஒரு உத்தரம் தேடிச் சொல்லும் காட்டில் நான் படுகிற கிலேசத்துக்கு பரிஹாரம் ஆயிற்றோ
நான் படுகிற கிலேசத்தை பரிஹரித்து கொடு நின்று அன்றோ உத்தரம் சொல்லுவது –

வாகிலும் சொல்லுவன் –
நான் சொன்ன வற்றுக்கு எல்லாம் நீ உத்தரம் சொன்னாயே யாகிலும்
அதுக்கு மேலே உத்தரம் சொல்லுகிறேன் –

மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல்  என்று -இன்னம் –
நீ சொன்னவற்றுக்கு  மறு மாற்றம் சொன்னாயே யாகிலும் பின்னையும்
உன்னை வடிம்பிட்டுக் கேட்க வேணும் என்னும்
நிர்பந்தம் இல்லாத
மனுஷ்யர்கள் உடைய கர்ப்ப ஸ்தானத்திலே என்னுடைய கர்ம அனுகுணமாக சம்சரிப்பிக்கிறாயோ-என்று
சம்சரிக்கைக்கு கர்மம் பண்ணுவான் அவன் இறே –
அதுக்கு ஈடாக பிரவர்த்திக்கும் அது  அன்றோ வேண்டுவது
ஆனாலும் சரீரத்தோடு இருக்கச் செய்தே அன்றோ உமக்கு ஜ்ஞானம் பிறந்தது  -என்ன

நெடு நாள் தேவோஹம் மனுஷ்யோஹம் -என்று
அகன்று போந்ததும்
இச் சரீரத்தோடு அன்றோ –

இன்னம் கழிந்த காலம் அநாதி
மேல் உள்ள காலம் அநந்தம்
ஆன பின்பு ச்ம்சரித்த காலம் போராதோ
இது தண்ணியது என்றும்
அத்தைக் கழித்துத் தருவாய் நீ என்றும் அறிந்த பின்பும்
இந்த நோவு பட வேணுமோ –

ஆனாலும் இத்தைக் கழித்துத் தருவோம் நாம் -என்னும்
அறிவைப் பிறப்பித்தோமே -என்ன

ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் –
ஆகில் நீ பிறப்பித்த ஜ்ஞானத்துக்கு பலம் இதுவோ –
சைதன்யத்தால் கொள்ளும் கார்யம் பய ஸ்தானம் -என்கை-

ஆறு பெருகித்  தன் வேரை அகழ்ந்து   பொகடா நின்றால்
பேர நிற்றல்
பரிஹரித்துக் கொள்ளுதல்
கூப்பிடுதல்
செய்வது அறியாது இறே

பயத்தில் வந்தால் சேதனன் ஆகியும்
பரிஹாரத்தில் வந்தால் அசித் சமனாகையும்-ஆயிற்று இவனுக்கு ஸ்வரூபம் –
பயமே இறே இவனுக்கு உள்ளது –
அஹம் பீதோஸ்மி -(ஜிதந்தா ஸ்தோத்ரம் )
நன்றும் அஞ்சுவன் -(திருவாய் )
மாஸூச -என்பான் வேறு ஒருவன் இறே –
பரிஹரிக்கை -அஹம் -என்கை இறே
உன்னுடைய அஹம் புத்தியை நினைத்து அஞ்சினாய் ஆகில்
என்னுடைய அஹம் புத்தியை அனுசந்தித்து ஆறி இருக்கப் பாராய் -என்றான் இறே –

நாற்றச் சுவை யூறொலியாகிய நம்பீ-
பயத்துக்கு பரிஹாரமும்-உத்பாதகனும் -நீயாய் இருந்தாய் –
(பயக்ருத பய நாஸன )
அதுக்கு பய ஸ்தானம் ஆறு –
உமக்கு பய ஸ்தானம் ஏது என்ன –
அதுக்கு ஆறு ஓன்று
எனக்கு ஐஞ்சு ஆறு அகழ்ந்து பொகடுகிறது –
(அகற்ற வைத்த நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள் )

அஞ்சும் ஆறும் ரசோக்தி
விஷயங்கள் ஐந்தும்  –  தத் க்ராஹங்கள் ஆறும்
கர்மேந்த்ரியங்கள் ஐந்தும் -ஜ்ஞாநேந்த்ரியங்கள் ஆறும் –
ரூபத்தை சொல்லாமல் விட்டது -பயத்தாலே கண்ணாஞ்சுழலை இட்டமை தோற்றுகைக்கு –

உன் பக்கல் நின்றும் அகற்றுகைக்கு பரிகரம் சப்தாதிகள் –
அத்தைப் பரிஹரிக்கும் நீ பூர்ணனாய் இருந்தாய் –
மம மாயா துரத்தயா மாமேவ யே ப்ரபத்யந்தே –
நான் பிணைத்த பிணை ஒருவராலும் அவிழ்க்கப் போகாது
என்னையே கால் கட்டி அவிட்கும் அன்று கழிக்கலாம் என்றாய் இறே
பிள்ளை திரு நறையூர் அரையர் வார்த்தையை நினைப்பது-

————————————————-

(நாம் சஹஜ ஸுஹார்த்தம் உண்டவனாய் இருக்க
த்வம் மே என்றால் அஹம் மே சொல்லி விலகினாலும் – -ஈரவாடை பிரதிஜ்ஜை -செய்தாலும் –
இப்பொழுது இன்னம் தோற்றுவிப்பாய் என்று நிற்கிறனனனைச் சொல்லுவது போல் சொல்லி
கையும் திருவாலியுமான ஆகாரத்தை -ஆதிக்யத்தையும் பாராமல்
என் சொன்னீர் சீறி சிவந்து இருக்க
பாவஜ்ஜராய்
அத்தையும் அநு மதித்து மேலும் சொல்ல உள்ளவை
மாற்றம் உள -வாதம் பிரதிவாதம் போல்
இங்கு தம்மிடம் தப்புக்கள் இருப்பது போல் அங்கீ கரித்து அருளிச் செய்கிறார் –
சகுந்தலை துஷ்யந்தனை வைத்தால் போல் சொன்னாலும்
இழவு கர்மம் அடியாகவே என்று உணர்ந்து அருளிச் செய்கிறார் –
சகுந்தலை சொன்ன ஸ்லோகத்துக்கே வியாக்யானம் )

சீற்றமுள வாகிலும் செப்புவன் மக்கள்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் என்று அஞ்சி
காற்றைத் திடைப் பட்ட கலவர் மனம் போல்
ஆற்றத் துளங்கா நிற்பன் ஆழி வலவா  —11-8-2-

சீற்றமுள –
திரு உள்ளத்துக்கு சீற வேண்டுவன குவாலைச் செய்து வைத்து
அவை ஒன்றையும் பாராதே -அனுகூலரைப் போலே –
திரு முன்பே நின்று சில வார்த்தை சொல்லப் புக்கவாறே
கேட்டு அருளுகிற தேவர் சர்வஞ்ஞர் ஆகையாலே
அப்போது அவற்றைச் செய்து -இப்போது இவற்றைச் சொல்லா நின்றான் இவன்
என் செய்தான் ஆனான் -என்று
திரு உள்ளத்துக்கு சீற வேண்டுவன குவாலுள-

ஏகோஹம் அஸ்மீதி சம அன்யசே த்வம்-
கெடுவாய் -ஜீவ பரர்கள் இருவர் உண்டு என்கிற பிரமாணம் கேட்டு அறியாயோ –
நீ தான் ராஜாவாய் ப்ரமாணிகர் சேவிக்கவே தான் இருந்து போந்தது –

நஹ்ருச்சயம் –
அப்போது ஒன்றை சொல்லி இப்போது ஒன்றைச் செய்கிற
உன்னுடைய நினைவுக்கு வாய்த்தலை யாய் இருக்கிற
அவனை ஒன்றும் புத்தி பண்ணிற்று இலையோ பாவி

முநிம் -புராணம்
அவன் தான் உன்னைப் போலே ஜ்ஞான சங்கோசம் உண்டாய் ஒரு கால்
விஸ்த்ருத்முமவன் என்று இருந்தாயோ –

பழகியான் தாளே பணிமின்( நான்முகன் ) -என்னக் கடவது இறே –
பரிஹரித்த சரீரம் தோறும் புதியனாய் இறே இவன் போருவது –
முன்பு நின்ற நிலை அறியான் –
நடு நிற்கிற நிலை அறியான் –
மேல் போக்கடியும் அறியான் இவன் –

முநிம் -புராணம்-
முன்பு நின்ற நிலையம் அறிந்து -இவனுக்கு சாத்மிக்கும் அதுவும் அறிந்து –
மேல் போக்கடியும் அறிவான் அவன் இறே

வாத பிரகிருதி பித்த பிரகிருதி என்று அறிந்து
ஒரோ குடிக்காக பரிஹரித்து போரும் வைத்தியர்களைப் போலே
முன்பு தான் அசித் கல்பனாய் கிடக்கும் –
பின்பு தான் -கார் பீர் -என்னக் கதறா நிற்கும் இவன்
முன்புத்தை நிலை அறிவான் ஒருவன் பலாநுபவம் பண்ணுவிக்கும் அத்தனை இறே –

யோவேதிதா -இத்யாதி –
முன்பு சொன்ன வார்த்தையையும்
இப்போது செய்கிற செயலையையும்
உள்ளபடி அறிவான் யாவன் ஒருவன்
அவ்வீஸ்வரன் முன்பே இருந்து அமணக் கூத்தாடி யாதே கொள்ளாய்-

1-திரு உள்ளத்துக்கு பொறுக்க ஒண்ணாத படி பர ஹிம்சைகளைப் பண்ணுவது
2-தேவரீர் இவை நல் வழி போக வேணும் என்று ஹிதம் பார்த்து வைத்தால் அவ்வழி போகாது ஒழிவது-
3-சரீர பரிக்ரஹம் பண்ணி  நிற்கையாலே   அதுக்கடியான அவித்யாதிகளுக்கு வச்யன் ஆவது –
4-சப்தாதிகளிலே ஆபிமுக்கியம் பண்ணி உன் பக்கலிலே வைமுக்க்யம் பண்ணுவது
5-உன் பக்கலிலே பொறுக்க ஒண்ணாத வற்றைச் செய்வது –
6-உன் அடியார் விஷயத்தில் பொறுக்க ஒண்ணாத வற்றைச் செய்வது –
7-இரண்டு இடத்திலும் நிர்நிபந்தனமாகச் செய்யுமவை
இவ்வழி யாலே  அநேகம் இறே -தேவருக்கு பொறுக்க ஒண்ணாதவை –

பகவத் அபசாரம் ஆவது –
ஈஸ்வர சேஷமான ஆத்ம வஸ்துவை -என்னது என்று இருக்கை –
(நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் )
அவனுடைய அனுக்ரஹ ஜென்மத்தை -கர்ம நிபந்தன ஜன்மத்தொடு சமானமாக புத்தி பண்ணுகை –
அவன் தன் கிருபையாலே இவன் கோலிற்று ஒன்றை திரு மேனியாகப் பரிக்ரஹித்தால்
அத்தை இதர சஜாதீயமாக பிரதிபத்தி பண்ணுதல் செய்கை –

பாகவத அபசாரம் ஆகிறது –
அர்த்த காம நிபந்தனமாக பாகவதர்களோடு பொறாமை கொண்டாடுகை –

அசஹ்ய அபசாரம் ஆகிறது -இவை இரண்டு விஷயத்திலும் பிரயோஜன நிரபேஷமாக செய்கை –

இப்படியால் தேவரீர் திரு உள்ளத்துக்கு சீற வேண்டுவன குவாலுள –

வாகிலும் செப்புவன்-
சீறுகைக்கு வேண்டுமவை  இல்லாமை சொல்லுகிறேன் அல்லேன்
ஆகில் பின்னை சொல்லுகிறது என் என்ன –
புறம்பு புகல் இல்லாமையாலே –
தமேவ சரணம் கத (காகாசூரன் போக்கிடம் இல்லாமல் வந்து விழ ) -என்னுமா போலே சொல்லுகிறேன் –

மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் என்று அஞ்சி –
உனக்குச் சீற வேண்டும்படியான செயலுக்கு அடியான
கர்ம அனுகுணமாக நான் போக
நீ அதுக்கு அனுமதி தானத்தைப் பண்ணி
உதாசீனரைப் போலே இருக்கிறாயோ -என்று அஞ்சி –
தன்னால் வந்ததுக்கும்
அவனால் வந்ததுக்கும்
அவனை இன்னாதாகலம் படி இறே பிராப்தி இருப்பது –
பிரஜை கிணற்றிலே விழா நின்றால்
வாங்காத தாயைத் தானே தள்ளினாள் என்னக் கடவது இறே

(ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது –
பகவத் குண அனுசந்தானம் அபய ஹேது –ஸ்ரீ வசன பூஷணம் –சூரணை -366

பய அபயங்கள் இரண்டும் மாறாடில் அஜ்ஞதையே சித்திக்கும் –சூரணை-367-

ஆனால்
நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் –
ஆற்றம் கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் –
என்கிற பாசுரங்களுக்கு
அடி என் -என்னில் –
அஜ்ஞதையே சித்திக்கும் -என்ற இத்தை தள்ளுகைக்காக -ஆழ்வார்கள் பாசுரங்கள் கொண்டு –
பயத்ய ஸ்தானம் பண்ணினவர்கள் சங்கையை அனுவதிக்கிறார் –சூரணை -368-

பந்த
அனுசந்தானம் –
அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –
அதாவது
பேறு இழவுகள் இரண்டும் அவனாலே என்னலாம் படி -நிருபாதிக ரஷகன் ஆனவனோடு
தங்களுக்கு உண்டான சம்பந்தத்தினுடைய அனுசந்தானம் -என்கை–சூரணை -369-

பிரஜை தெருவிலே இடறி –
தாய் முதுகிலே குத்துமா போலே –
நிருபாதிக பந்துவாய் –
சக்தனாய் -இருக்கிறவன் –
விலக்காது ஒழிந்தால் –
அப்படிச் சொல்லாம் -இறே –சூரணை -370-

பந்த அனுசந்தானத்தாலே இப்படி தன்னால் வரும் அவற்றை -அவன் குறையாக சொல்லலாமோ என்ன –
ஆம் என்னும் இடத்தை -ச த்ருஷ்டாந்தமாக –
அருளிச் செய்கிறார் –

பிரஜையை கிணற்றின் கரையின் நின்றும் வாங்காது ஒழிந்தால் –
தாயே தள்ளினாள் என்னக் கடவது -இறே –சூரணை -371-

இவனுடைய அனுமதி பேற்றுக்கு ஹேது அல்லாதாப் போலே –
அவனுடைய அனுமதியும் இழவுக்கு ஹேது அன்று –சூரணை -372-

இழவுக்கு அடி கர்மம் –
பேற்றுக்கு அடி கிருபை –சூரணை -374-

மற்றைப்படி சொல்லில்
இழவுக்கு உறுப்பாம் –சூரணை -375-

இங்கன் அன்றிகே -மாறிச் சொல்லும் அளவில் வரும் அனர்ததத்தை
அருளி செய்கிறார் மேல்-
எடுக்க நினைக்கிறவனை தள்ளினாய் என்கை – எடாமைக்கு உறுப்பு-இறே –சூரணை -376-

சீற்றம் உள என்ற
அனந்தரத்திலே-
இவ் அர்த்தத்தை –
தாமே அருளி செய்தார் -இறே-சூரணை -377-

அப்படி சொல்லுகை ஈஸ்வரனுக்கு சீற்றத்துக்கு உடல் என்னும் இது
லௌகிக ந்யாயம் கொண்டு சொல்ல வேணுமோ –
தத்வ தர்சிகளான-திருமங்கை ஆழ்வார் -பூர்வோக்திக்க அனந்தரத்திலே –
தாமே அருளிச் செய்தார் இறே -என்கிறார் –

அதாவது –
இன்னம் மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் -என்று –
ஈஸ்வரன் தன் ஸ்வாதந்த்ர்யத்தாலே சம்சரிப்பிக்கிறான் ஆக சொன்ன இது –
கர்ம அநு குணமாக சம்சரிக்கிற ஆத்மாவை -சம்சாரத்தில் நின்று எடுக்கைக்கு
கிருஷி பண்ணிப் போரும் அவன் திரு உள்ளம் சீறுகைக்கு உடல் என்று நினைத்து –
கீழ் விண்ணப்பம் செய்த வார்த்தையாலே திரு உள்ளத்துக்கு சீற்றம் உண்டு என்ன
முதல் வார்த்தைக்கு அநந்தரம் -இழவுக்கு அடி அவனாக சொல்லுகை -நிக்ரஹ ஜனகம் -என்னும்
இவ் அர்த்தத்தை -முன்பு அப்படி அருளிச் செய்த தாமே – அருளிச் செய்தார் -என்கை

சீற்றம் உள–பெரிய திருமொழி -11–8–2- என்ற -அனந்தரத்திலே–மாற்றம் உள- சொன்னதுக்கு பின்பு -இவ் அர்த்தத்தை -தாமே அருளி செய்தார் -இறே-
எடுக்க வந்தவனை தள்ளினாப் போலே -கோபம் வரும் -என்று அறிந்தும் -சொல்லுவேன் -ஆகிலும் சொல்லுவேன் -என்றாரே –
கர்ப்பக் குழியுள் – தோற்றக் குழியில் நீ தள்ளினாய் -என்று சொல்லத் தான் போகிறேன் -என்றாரே -/ உண்மையில் எடுக்க நினைத்தாய் –
எதனால் நான் சொல்லுகிறேன் என்னில் -எனக்கு உம்மை விட்டால் ஆள் இல்லையே என்பதால் சொல்லுவேன் —
அடியேன் அநந்ய கதித்வம் காட்டத் தான் இப்படி சொல்லுகிறேன் –ஈன்ற தாய் அகற்றிடினும் அவளை நினைந்தே -இருக்கும் குழவி போலே –பந்தம் அறிந்து சொல்லுவேன் —
கீழே லோக த்ருஷ்டாந்தம் -பர தந்த்ரனான என்னை ஸ்வ தந்த்ரனான நீ தள்ளினாய் என்று உண்மைப்படி சொல்லி -உடனே சீற்றம் உள –
மக்கள் தோற்ற குழியிலே தோற்றுவிக்கிறாய் -உடனே ஆகிலும் செப்புவேன் -நம்மாழ்வார் நம்முடன் நிறுத்தி ஆகிலும் சொல்லுவேன் -சொன்னால் விரோதமானாலும் –
கர்ப்ப ஜென்மாதிகளிலே உளள வைத்தீர் என்று சொல்லியே கூசாமல் -சொல்லி -பொய்யான இத்தைக் கூட கூசாமல் சொல்லி –
காரணம் பந்தம் தானே -பயந்து உள்ளேன் -பல த்ருஷ்டாந்தங்கள் கொண்டு பயத்தை காட்டிய பிரகரணம் –
பூர்வ யுக்தி -சீற்றம் உள -உத்தர யுக்தி – ஆகிலும் செப்புவேன் / மாற்றம் உள- பூர்வ யுக்தி -உத்தர யுக்தி- தோற்ற குழியில் தோற்றுவிப்பாய் என்றுமாம் –

சீற்றம் உண்டு என்று -அறிந்தால்
சொல்லும்படி என் -என்னில் –
அருளும் –
அர்த்தியும் –
அநந்ய கதித்வமும்
சொல்லப் பண்ணும் –சூரணை -378-

சீற்றம் உளன் -என்ற பின்பும்
ஆகிலும் செப்புவன் -என்று முன்பு சொன்னது -தன்னையே சொல்லுகைக்கு
ஹேதுவை -ப்ரச்ன உத்தர ரூபேண-பிரகாசிப்பிகிறார் –

அதாவது –
கீழ் சொன்ன இத்தால் ஈஸ்வரன் திரு உள்ளத்துக்குச் சீற்றம் உண்டு என்று அறிந்தால் –
பின்னையும் இவ் வார்த்தையை கூசாமல் திரு முன்பே சொல்லும்படி எங்கனே -என்னில் –
அவன் சீற்றத்தை தன் சந்நிதியில் ஜீவிக்க ஒட்டாத -பர துக்க அசஹிஷ்ணுத்வ ரூபையான கிருபையும் –
உன் சீற்றம் கண்டு அஞ்சி வாய் மூட ஒட்டாதபடி கரை இழந்து செல்லுகிற சம்சார ஆர்த்தியும் –
சீறி எடுத்து எறியிலும் வேறு புகல் இல்லாமையாகிற -அநந்ய கதித்வமும் –
சொல்லும்படி பண்ணும் -என்கை –
இத் திரு மொழி யிலே-11-8-
அடைய அருளாயே -நினைக்கும் தன் அருளே -6
துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு -7
தொண்டரானவர்க்கு இன்னருள் செய்வாய் -9-என்று பல இடங்களிலும் அவன் அருளையும் –
ஆற்றம் கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் -1
காற்றத்திடை பட்ட கலவர் மனம் போலே ஆற்ற துளங்கா நிற்பன் -2-கலவர் -மரக்கலத்தில் இருப்பவர் –
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றால் போல் தாங்காது உள்ளம் தள்ளும் -3
இருபாடு எரி கொள்ளியின் உள் எறும்பு போல் உருகா நிற்கும் என் உள்ளம் -4-
வெள்ளத்திடைப் பட்ட நரி இனம் போலே உள்ளம் துளங்கா நிற்பன் -5-என்றும்- பல த்ருஷ்டாந்தகளாலும் தம்முடைய
ஆர்த்தி-
அநந்ய கதித்வங்களையும் அருளி செய்தார்-இறே-

ஸ்வ தந்த்ர ஸ்வாமி -சீற்றம் உள -அஞ்சாமல் சொல்லும் படி என் என்னில்- திருவடியை அடையும் படி அருள–சீற்றத்தை அடக்கி ஆளும்படியான இன் அருள் -அனுக்ரஹம் –
கோபத்தை அடக்கி ஆளும் -ஜித க்ரோத -குணம் உண்டே -அஞ்சுகிறேன் பலகாலும் சொல்ல -சீற்றம் மாறி அருளுவாயே –
அடக்கி ஆளும் இன் அருளை -நம்பி பேசலாமே / இதுக்கும் மேலே கரை யற்ற சம்சார ஆர்த்தியும் உண்டே -/ இதுக்கும் மேலே
வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாதே -அநந்ய கதித்வமும் உண்டே -உன் சேவடி தவிர வேறு ஒன்றும் நயவேன் -மேல் விழும்படியான கத்யந்த்ர ஸூந்யதவமும் உண்டே –
சீற்றம் உள என்று அறிந்தும் வாய் விட்டு பேசப் பண்ணுமே -இப்படி பல சூரணைகளுக்கும் இந்த திரு மொழி பிரமாணம்-
அவன் சீற்றத்தை தன் சந்நிதியில் ஜீவிக்க ஒட்டாத -பிராட்டி -தேவ்யா காருண்ய ரூபயா ரக்ஷகத்வ சர்வ சித்தாந்தம் –காருண்யம் வர்த்தயதி -சத்தை பெற செய்கிறாள் இவள் –

———

சீறினாலும் காலைக் கட்டிக் கொள்ளலாம் படி இருப்பான்
ஒருவனைப் பெற்றால் எல்லாம் சொல்லலாம் இறே–சூரணை -379-

இப்படி அநந்ய கதித்வாதிகள் உண்டானாலும் அவனுக்குச் சீற்றம் பிறக்கும் படி சிலவற்றைச் சொல்லலாமோ என்ன –
அருளிச் செய்கிறார் –

அதாவது சீறின காலத்திலும் சீற்றத்துக்கு விஷயமானவர்களுக்குச் சென்று திருவடிகளைப் பூண்டு கொள்ளலாம் படி
பரம க்ருபாவானாய் இருப்பான் ஒருவனைப் பெற்றால் நினைத்தபடி எல்லாம் சொல்லலாம் இ றே என்கை –

பஹுவிதமாக சொல்லி இல்லாத தப்புக்களையும் சொல்லலாம் -பெத்த பாவிக்கு விடப் போமோ
தொண்டரானவர்க்கு இன்னருள் செய்யும் பரம கிருபாவணனாய் இருப்பவனைப் பெறப் பெற்றால் அஞ்சாமல் உள்ளது எல்லாம் –
மனசில் தோன்றுவது எல்லாம் -பந்தம் உறவு கொடுத்த பலத்தால் சொல்லலாமே –
தயையால் எடுக்க வந்தவனை பார்த்து அன்றோ இப்படி அருளிச் செய்கிறார் —
கதறுகின்றேன்-பக்தி யோக நிஷ்டனுக்கும் பிரபன்னனுக்கும் வாசி அறியாமல் கத்துகின்றேனே -அதே போலே இங்கும் திரு மங்கை ஆழ்வார் –
வேறே கதி இல்லாமல் -அருளிச் செய்கிறார் -உடனே காரியவாகிப் புடை பெயர்ந்து மிளிர்ந்து நீண்ட அப்பெரியவாய கண்கள் –
கொண்டு கடாக்ஷித்து திருவடிக் கீழ் சேர்த்து கொள்வான்

————————————–

க்ருபயா பர்யபாலயத் –
அரி சினத்தால் –சூரணை -380-

சீறின தசையிலும் காலைக் கட்டிக் கொள்ளலாய் இருக்கும் படிக்கு பிரமாணம் காட்டுகிறார் –

அதாவது –
சதம் நிபதி தம் பூமவ் சரண்யச் சரணாகதம்
வதார்ஹமபி ககுஸ்த்ச க்ருபயா பர்யபாலயத் –ஸூ ந்தர காண்டம் -38—என்று அபராதத்தை தீரக் கழியச் செய்து –
ப்ரஹ்மாஸ்ரத்துக்கு இலக்காய்-புறம் புகல் அற்றவாறே வந்து -திருவடிகளிலே விழுந்த காகத்தை – கிருபையாலே ரஷித்தார் ஆகையாலும் –
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன்னருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே -என்று –
பெருகைக்கு வருந்தி -வரம் கிடந்தது -பெற்ற தாயானவள் -இது செய்த தீங்கைக் கண்டு –
எறிந்து பொகட வேணும் சீற்றத்தை உடையவளாய் கொண்டு -கிட்ட வர ஒட்டாமல் தள்ளி விட்டாலும் -வேறு போக்கடி அற்று
சீறி எடுத்து எறிகிற அவளுடைய முகத்து இரக்கத்தையே நினைத்து -அழுது காலைத் தழுவிக் கொள்ளும் குழவி போலே –
என் அபராதத்தைக் கண்டு அருகு வராதபடி தேவரீர் தள்ளி விடப் பார்க்கிலும் –
திருவடிகள் அல்லது வேறு போக்கடி அற்று இருந்தேன் என்று -ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்கையாலும் –
சீறினாலும் காலை கட்டிக் கொள்ளலாம் படி இருப்பான் ஒருவன் -என்னும் இடம் சித்தம் -என்கை –
இப்படி ஆழ்வார் அருளி செய்த இவ் வர்த்தத்தை-
நிராஸ கஸ்யாபி நதாவதுத் சஹே மகேசஹாதும் தவ பாத பங்கஜம்-
ருஷா நிரச்தோசபி சிசுச்த நந்த்தயோ நஜாதுமாதுச் சரணவ் ஜிஹாசதி -என்று ஆளவந்தாரும் அருளி செய்தார் -இறே

ஆக
இவ்வளவும்
பய அபயங்கள் இரண்டும் மாறாடில் அஜ்ஞ்ஞதையே சித்திக்கும் –
என்கிறதின் மேல் வந்த சங்கா பரிகாரங்கள் பண்ணப் பட்டது –

த்ருதீய பிரகரணம் சம்பூர்ணம் –)

இது( ப்ரபன்னனான ஜீவன் ) உன்னை அகன்று நோவு பட வேண்டுகிறது –
நீ கை விடுகை அன்றோ என்னலாய் இருக்கும் இறே –
சம்சாரிகளான மனுஷ்யர்கள் கர்ம அனுகுணமாக சம்சரிக்கும்
கர்ப்ப ஸ்தானத்திலே பிரவேசிப்பிக்கிறாயோ -என்று அஞ்சி –

காற்றைத் திடைப் பட்ட கலவர் மனம் போல் ஆற்றத் துளங்கா நிற்பன் –
பெரும் காற்றிலே அகப்பட்ட மரக் கலத்துக்கு உள்ளே
சேதனர் உடைய நெஞ்சு போலே
பயப் படுக்கைக்கு மேற்பட பரிஹாரத்தில் அந்வயம் இல்லை இறே

அதுக்கு உட்பட்ட மனுஷ்யர் எல்லாருக்கும் உள்ள பயம் இவர் ஒருவருக்கும் உண்டாய் இருக்கிறது –
மிகவும் நடுங்கா நிற்பன் -சரீர வியோக மாத்ரத்திலே இவர்களுக்கு –

அனால் பின்னை நம்மைச் செய்யச் சொல்லுகிறது ஏது என்ன
ஆழி வலவா  –
உன் கையில் திரு வாழிக்கும்
எனது உள் நடுக்கத்துக்கும்
சேர்த்திச் சொல்லிப் போ –

உனக்கு அசக்தி உண்டு என்று சொன்னாய் ஆதல்
என் நடுக்கைத்தை பரிஹரித்தல் செய் –

————————

(இவ்வாழ்வார் தம்மிடம் குற்றம் சொல்லிக் கொண்டு நம்மையும் வெறுத்து
பேசுவது சம்பந்த உறைப்பாலேயே
என்று திரு உள்ளம் உகந்து
உகப்பு திருக் கண்களிலே தோற்ற
ஆழ்வீர் -நாம் செய்தபடி செய்கிறோம் என்று ஆறி இருக்க வேண்டாவோ என்ன
என் உள்ளம் நின்றவா நிற்கும் நெஞ்சாக இருக்கிறதே
என் செய்வேன் -என்கிறார் -)

தூங்கார் பிறவிக்கள் இன்னம் புகப் பெய்து
வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சிப்
பாம்போடு ஒரு கூரையிலே  பயின்றாப் போலே
தாங்காது உள்ளம் தள்ளும் என் தாமரைக் கண்ணா -11-8-3-

(வாங்காய் என்று சிந்தித்து-மீளுகைக்கு தாமும் கூட்டு என்பதுக்கு வார்த்தை இல்லையே
பரிகாரம் செய்யார் -அசித் போல்
சேதன கார்யம் அஞ்சுவதே –
பாம்பு -விஷயாந்தரங்கள் )

தூங்கார் பிறவிக்கள் – தூங்குதல் -அசைவும் உறங்குதலும் –
அசைவு மிக்க ஜன்மம் -என்னுதல்-
தம பிரசுரமான ஜன்மம் -என்னுதல்

இன்னம் புகப் பெய்து –
இதுக்கு முன்பு பட்டது போராதோ –

வாங்காய் என்று-
மீட்க்கைக்கு தாமும் கூட்டு என்னும் இடத்துக்கு
பாசுரம் இட்டுச் சொல்லுகிறிலர் –

சிந்தித்து நான் அதற்கு அஞ்சிப் –
பரிஹாரத்தில் வந்தால் தம்மை அசித் சமராக நினைத்தாரே ஆகிலும்
சேதனரான வாசிக்கு பயம் அனுவர்த்திக்கையும் தவிராதே –

பாம்போடு –
அவை ஒழியில் நாட்டார் பிழையாதபடி இருக்கிறவை
இவருக்கு இருக்கிற படியாயிற்று இது –
வெய்யிலிலே நொந்தவன் ஆடுகிற சர்ப்பத்தின் நிழலிலே போய் ஒதுங்கி
அது அள்ளிக் கொள்ளும் என்று அறியாதே சுகிக்கப் பார்க்குமா போலே இருப்பது ஓன்று இறே
அது அள்ளிக் கொண்டது அப்போது இறே –
(மயர்வற மதி நலம் அருளுவதற்கு முன்னே )

ஒரு கூரையிலே  பயின்றாப் போலே  —
கண்டது அடைய அது சங்கா ஹேது வாயிற்று –

தாங்காது உள்ளம் தள்ளும் –
தரியாதே ஹிருதயமானாது தடுமாறா நின்றது –

அதற்கு நான் செய்ய வேண்டுவது என் என்ன –
என் தாமரைக் கண்ணா –
ஆஜகாம -என்று இலங்கையில் பொருந்தாதே போனவன் தானே
பெருமாளாதானவாறே-
விபீஷண விதேயம் ஹி -என்னலாம் படி அங்கே பொருந்தினான் இறே –

அப்படியே நீயே உன் திருக் கண்களால் நோக்கப் பெறில்
நான் இது தன்னிலும் இருக்க வல்லேன் –
ஸ்வம் சம்பந்தத்தாலே பார்த்த அன்று இறே  இவ்விடம் த்யாஜ்யம் ஆவது
அவன் சம்பந்தத்தை இட்டு பார்த்த போது இது தானே உத்தேச்யமாய் இருக்கும் இறே –

இதில் அரை ஷணம் பொருந்தாத படியாய் இருக்கிற இவர் பாசுரத்துக்கும்
இது ஒழியச் செல்லாத படியாய் இருக்கிற நம் பாசுரத்துக்கும் வாசி அறியாதான் ஒருவன்
சரண்யனாகப் பெறில் நமக்கு அப் பேறு பெறலாவது-என்று அருளிச் செய்த தாமே
அநந்தரம் –
மித்ர பாவேன சம்ப்ராப்தம் -என்கிறபடியே
இத் தலையில் உள்ளது போட்கன் ஆனாலும் நான் அவனை விடேன் -என்று
அருளிச் செய்த படியால் நமக்குப் பெறுகைக்கு தட்டில்லை -என்று அருளிச் செய்து அருளினார் நஞ்சீயர் –

இது மெய்யாதல் -இல்லை யாகில்
பரிஹாரம் இன்றிக்கே போதல் -செய்யும் அத்தனை
இது பொய்யாகிலும் நமக்கு அஞ்ச வேண்டா –
இத்தால்  பொய்யாகாது என்ற படி –
இது பொய்யாகில்-நரகாத்ய அனுபவங்களை  சொல்லுகிறவையோ மெய்யாகப் புகுகிறது  –

————————————-

(அடியிலே நம் கடாக்ஷம் பெற்றததால் தானே
பாம்போடு -தாங்காது -அஞ்சுகிறீர் -என்ன
இப்படி அஞ்சுவாரை விஷயாந்தரங்கங்கள் கிட்டாதே
நீ அச்சம் படும் இடத்தில் வைக்க
நீ ஸ்வ தந்திரனோ
ஆஸ்ரித பரதந்த்ரன் என்பதை மறந்தீரோ
சரீராந்தரம் வந்தால் மீண்டும் பழைய நிலையிலே அழுந்துவேன் –
ஆகவே அருள வேண்டும் -)

உருவார் பிறவிக்குள் இன்னம் புகப் பெய்து
திரிவாய் என்று சிந்தித்தி என்றதற்கு அஞ்சி
இருபாடு எரி கொள்ளியினுள் எறும்பே போல்
உருகா நிற்கும் என் உள்ளம் ஊழி முதல்வா –11-8-4-

உருவார் பிறவிக்குள் -இன்னம் புகப் பெய்து-
நாசதோவித்யதே-(ஸ்ரீ கீதை இரண்டாம் அத்யாயம் )-இத்யாதி
அநேக ரூபமாய் -ஒருபடிப் பட்டு இராமையாலே
அசத்தான இது விநாச யோகியாய் இருக்கும்   –
ஏக ரூபமாய் இருக்கையாலே ஆத்ம வஸ்துவானது அவிநாசியாய் இருக்கும்  –

இப்படி இரண்டுக்கும் தத்வ தர்சிகளாய்  இருக்குமவர்களாலே நிர்ணயம் காணப் பட்டது –
நிரூபணஸ் நிர்ணயாந்த் தத்வாத் நிர்ணயாந்தோத் திருஷ்ட –
ஆத்ம வஸ்துவானது -அஹம் புத்தி போத்யமாய் -பிரத்யக் வஸ்துவாய் இருப்பது ஒன்றாய் –
தேஹம் ஆகிறது -கடாதிகளைப் போலே -இதம் புத்தி போத்யமாய் -பராகார்த்தமாய் – அநாத்மாவாய் –
ஆத்மாவோடு அதி தூரமாய் இருக்க
இத் தேஹத்தில் அஹம் புத்தி பண்ணலாம் படி பொருந்திப் போந்த ஜன்மங்களிலே
தேஹத்திலே அஹம் புத்தி பண்ணிப் போருகையாலே
அதுவே விஸ்த்ருதமாய்-ஆத்ம வஸ்து தேய்ந்து போம் இறே
தேஹாத்மா அபிமான ஜனகமாய் இருக்கிற ஜன்மங்களிலே
இன்னமும் என்னுடைய கர்மானுகுணமாக பிரவேசிப்பித்து –

திரிவாய் என்று –
திறந்து கிடந்த வாசல் தோறும் நுழைந்து திரியும் பதார்த்தம் போலே
தேவாதி சரீரங்கள் தோறும் புக்கு
தேவோஹம் மனுஷ்யோஹம் -என்று இங்கனே கிலேசப் பட்டு திரிவான் என்று நீ நினைத்து இருக்கிறாயோ –
என்று அஞ்சா நின்றேன் –

சிந்தித்தி என்றதற்கு அஞ்சி –
உனக்கு சிந்தா மாதரம் –
என்னுடைய கிலேசத்துக்கு அவதி இல்லை –
நானே  கர்மங்களைப் பண்ணி வைப்பேனே –
பின்பு அவை தானே கொண்டு நடத்துமே-
அனுமதி தானத்தை பண்ணி இருக்கும் அத்தனை இறே உனக்கு வேண்டுவது –

இருபாடு எரி கொள்ளியினுள் எறும்பே போல் –
இரண்டு தலையும் நெருப்பு பற்றி எரியா நிற்க
நடுவே அகப்பட்டு நோவு படுகிற ஷூத்ர பதார்த்தம் போலே யாயிற்று
ஜன்ம மரணங்கள் இரண்டிலும் அகப்பட்டு நோவு படுகிற படி –
அவ்வருகு போக்கின்றிக்கே இவ்வருகு பொறுக்க  மாட்டாதே  படுகிற பாடு
கொள்ளியின் உள் எறும்பு என்னவுமாம்   –

உருகா நிற்கும் என் உள்ளம் –
கிலேசத்துக்கு ஒரு அவசாதம் உண்டாகில் இறே
ஓர் அளவிலே உருகி வலிப்பது –

அதுக்கு  நாம்  பின்னை  செய்வது என் என்ன –
ஊழி முதல்வா –
பிரளயத்தில் அகப்பட்டு
அழிந்து போகப் புக்கதை
எடுத்து ரஷித்தவன் அன்றோ –

—————————————-

(கீழே பழ மொழிப் பதிகம் பார்த்தோம்
இதிலும் -ஆத்ம பரமாத்ம சம்பந்தம்
நீ குளிர நோக்கில் பெற்றால் இதில் தன்னிலும் இருக்கப் பெறுவேன் என்று அருளிச் செய்தீர்
ஸ்ரீ விபீஷணன் -த்ருஷ்டாந்தம் முண்டே சொன்னீர்
நல்லவன் என்று நினைத்தீர் ஆகில் பிரளயம் உத்தரணம் போல் பண்ணச் சொல்கிறீர்
இரண்டு படியும் சொன்னால் நான் செய்வது என்ன
மீளவும் சம்சார பிரளயத்தில் அகப்படுத்தாமல்
நிர்ணயம் பண்ணி அருளிச் செய்கிறார்
சம்சாரம் வெல்ல தோற்றோம் மட நெஞ்சம் -ஜிதந்தே சொல்லித்தானே முடியும்
தெளிவு படுத்தி அருளிச் செய்கிறார் -)

கொள்ளக் குறையாத விடும்பைக் குழியில்
தள்ளிப் புகப்பெய்தி கொல் என்றதற்கு அஞ்சி
வெள்ளத்திடைப் பட்ட நரியினம் போலே
உள்ளம் துளங்கா நிற்பன் ஊழி  முதல்வா —11-8-5-

(தள்ளி-நீயே தள்ளினாய் -பந்த ஞான உறைப்பால் சொல்லலாமே -இது ஒரு பிறவியில்
புகப்பு எய்து-பிறவி சூழலில் –
ஷிபாமி -ஆசூரப்பிறவியில் -நூறு நூறு பிறவிகளில் -ஸ்ரீ கீதை –
இத்தையே தமிழ் படுத்தி தள்ளி புகப்பெய்தி -என்கிறார் –
கீழே மரம் அஞ்சாது -சைதந்யம் இல்லாத
இங்கு நரிக்கூட்டம் -பயம் உண்டு -ஆனாலும் பரிகாரம் தேடவும் தெரியாது
மனிதன் -லோக இன்பத்தில் ஈடுபட்டு இது கண்மட்டு பயப்படாமல் கோஷ்ட்டி
ஆழ்வார் இவற்றில் இல்லாமல் -மயர்வற மதி நலம் அருளப் பெற்று
அஞ்சி பரிகாரமும் அவனே என்று உறுதி கொண்டு அருளிச் செய்கிறார் –
நரியினம்–அவை எல்லாவற்றுக்கும் உள்ள பயம் இவர் ஒருவருக்குமே -)

கொள்ளக் குறையாத விடும்பைக் குழியில்
கிலேசப் படவுமாயிற்று இறே-
அனுபவ விநாச்யமாகப் பெற்றதாகில் காலம் எல்லாம் அனுபவியா நின்றாலும்
முதலில் குறையாத படி இருக்கிற கிலேசத்தை விளைப்பதான கர்ப ஸ்தானத்திலே –

தள்ளிப்-
எல்லாவற்றுக்கும் அவனை இன்னாதாகலாம் படி இறே பிராப்தி இருப்பது
(இத்தலையால் வந்தாலும்–அத்தலையால் வந்தது என்று சொல்லலாம் படி – -பிராப்தி உண்டே )
கிணற்றிலே விழுகிற பிரஜையை வாங்காத தாயை தானே தள்ளினாள்-என்னக் கடவது இறே –
அடியிலே நீ பரிஹரியாமை அன்றோ
இது அகல வேண்டிற்று –

(இதுக்கு லௌகிக திருஷ்டாந்தமும்
உதங்க ப்ரஸ்னதுக்கு உத்தரம் இல்லாத இதிஹாச த்ருஷ்டாந்தமும் மேலே அருளிச் செய்கிறார் –
பொது நின்ற பொன் அம் கழலாக இருந்தாலும் ஆஸ்ரித பக்ஷ பாதி
பிள்ளை -வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை -த்வாராகா தீசனாக இல்லாமல் -)

உதங்கன் துர்யோ நாதிகள்  கிடக்கிற படியைக் கண்டு
பிள்ளை பக்கலிலே வந்து
சீற்றத்தாலே சிவந்த கண்களும் தானுமாய்
சர்வ சாதாரணனாய் இருக்கிற நீ ஒரு தலையிலே பஷபதித்து
இவர்களை அழியச் செய்தாயே -என்ன
நானும் இரண்டு தலையையும் பொருந்த விடலாமோ என்று ஆவுதெல்லாம் பார்த்தேன்
அவர்கள் ஒரு கோல் குற்று நிலமும் கொடோம் என்ற பின்பு காண் நாம் அழியச்  செய்தது -என்ன
அவர்கள் இசையும் படியாகவும் நீயே பண்ணா  விட்டது என் -என்றான் இறே –
(ஆகவே அனைத்துக்கும் அவனையே பொறுப்பாளான் ஆக்கலாமே )

தள்ளிப் புகப்பெய்தி கொல் என்றதற்கு அஞ்சி –
நெருப்பிலே அகப்பட்டு எரிகிறவனை
திரிய அதுக்கு உள்ளே தள்ளி –
ஒன்றை இட்டு அமுக்குவாரைப் போலே –

வெள்ளத்திடைப் பட்ட நரியினம் போலே உள்ளம் துளங்கா நிற்பன் –
வெள்ளத்துக்கு உள்ளே அகப்பட்டு –
நோவு படுகிற நரிக்கூட்டம் போல் –
அவை எல்லாவற்றுக்கும் உள்ள பயம் இவர் ஒருவருக்குமே –

ஊழி  முதல்வா  –
நீ பரிஹரித்த
பிரளய  ஆபத்தின் அளவல்ல
நான் நோவு படுகிற சம்சார பிரளயம் –
அங்கு
ஒருவருமே அபேஷியாது இருக்க பரிஹரித்தாய்
இங்கு
நான் அபேஷிக்க வேண்டுகிற ஹேது என் –

——————————————

(கீழே -சம்சார பிரளயம் -பண்ணாத படி நிர்ணயம் பண்ணி அருளிச் செய்தவாறே
வயலாலி மணவாளன் ஆழ்வார் இடம் சாபலத்தாலே
சூட்டு நன் மாலைகள் இத்யாதி –வீற்று இருந்தோம்
உமக்காகவே இங்கே வந்தோம் -பக்தி வளர்க்கவே இங்கே தக்க வைக்கவே அர்ச்சாவதாரம்
இஷ்ட விநியோக அர்ஹமாம் படி
போது அணியப் பெற்றோம் ஹ்ருஷ்டராம் படி இருந்தோம்
இப்படி இருக்க
நம்மை விட்டு தேசாந்தரம் போக அடுக்குமோ
அப்படி சொல்ல ஒண்ணாது
உடம்பு விரோதி
ஆர்த்தி தோற்ற அலற்ற
அதுவே அமையும் –
அலற்றுவதே அமையும் -என்றும் அங்கு செல்வதே அமையும் -என்றுமாம் )

இப் பாட்டுக்கு இயல் அருளிச் செய்யும் போது
இதுவே அமையும்  என்னும் படி  ஆர்த்தி தோற்ற அருளிச் செய்து அருள்வர் –

(வெட்டுப்பட்ட மரம் இல்லை -இடையன் எறிந்த மரம்
மொத்தமே பிடுங்கிப் போட்ட தாமரையே அலர்ந்தால் இது ஸாத்யமே என்று சொல்லவும் வேண்டுமோ )

படை நின்ற பைம் தாமரையோடு அணி நீலம்
மடை நின்று அலரும் வயலாலி மணாளா
இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே
அடைய வருளாய் எனக்கு உன் தன் அருளே –11-8-6-

படை நின்ற பைம் தாமரையோடு அணி நீலம் -மடை நின்று அலரும்-
இரண்டு அருகும் உழுது போகா நிற்க
நடுவு கலப்பைக்கு அறாதே இருக்கும் இடத்தை  -படை -என்னக் கடவது இறே –
படையிலே தப்பி நின்ற தாமரையும்
நீலமும் களையாகப் பறித்து எறட்டால்
புகட்ட மடையிலே கிடந்தது அலரும் ஆயிற்று வயல் –
படையிலே தப்பி நின்ற
விகசிதமான தாமரையோடு
தர்ச நீயமான நீலமானது
பறித்துப் பொகட்டு மடையிலே நின்று அலரும் படியான –

வயலாலி மணாளா –
வயலை உடைத்தான
திருவாலியிலே சந்நிஹிதன் ஆனவனே –

இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே –
இது வாயிற்று இவருடைய தசை
இடையரானவர்கள் ஆடுகள் மற்றை யவற்றுக்கு
கையிலே கத்தியை இட்டு ஓடி எறிந்து சாய்த்துப் போவார்கள் ஆயிற்று மரங்களை –
அவை ஓர் இடம் பச்சையாய்
ஓர் இடம் உலர்ந்து கிடக்கும்
அது போலே யாயிற்று ஜ்ஞான லாபத்தாலே வந்ததோர் அம்சமும்
அசந்நேவ-என்னலாம் படி சூழ்ந்து கொடு நிற்கிற நிலையும்

அடைய வருளாய் –
நான் உன்னை அடையும் படியாக அருள வேணும் –
அம் மரத்தின் உலர்ந்த அம்சமும் தன்னிலே ஒன்றிப் பச்சையாம் படி பண்ண  வேணும் –

அது பின்னை செய்யப் போமோ என்னில்
வேர் பறிந்தவையும் புகட்டிடத்தே செவ்வி பெறும்படி பண்ணும்
தேசத்தில் அன்றோ நீ வர்த்திக்கிறது
முதல் பறிந்ததுக்கு செவ்வி  பெறுத்த வல்ல உனக்கு
உள்ளத்துக்கு ஒரு பசுமை பண்ண தட்டு என் –

எனக்கு உன் தன் அருளே   –
தய நீயனான எனக்கு
கொள்வர் தேட்டமான உன் அருளை
அருள வேணும் –

———————————————–

(வயலாலி மணவாளன் சாபல்யம் மிக்கு
ஆபத்து மிகுதியால் மறுக்க மாட்டாமையாலும்
ஏழை ஏதலன் -சரணம் புக்க
பேசாமல் -அவாக்யராக இருக்க
இவர் அரங்கத்து அம்மானை முன்னிலை யாக்கி
இதிலும் அடுத்த பாசுரங்களில்
நீ மதி கேட்டை நீக்கி அருளினது போல்
சாடு -உஜ்ஜீவனம் -சந்திரன் க்ஷய ரோகம் -மதிக்கு வந்த கேட்டை நீக்கினாய்
இங்கு ஆதி சேஷ சயனம் -பாம்பின் அணைப் பள்ளி கொண்டாய்-
அடுத்ததில் அரங்க நரகரப்பா-ஸ்பஷ்டம்
இதுவே-விரோதி போக்கி -ஆதிசேஷனுக்கு உம்மையே கொடுத்தது போல்
எனக்கும் அனுபவிக்க நீயே வந்து அருள வேணும் -)

வேம்பின் புழு வேம்பன்று உண்ணாது அடியேன்
நான் பின்னும் உன் சேவடி யன்றி நயவேன்
தேம்பல் இளம் திங்கள் சிறை விடுத்து ஐ வாய்ப்
பாம்பின் அணைப் பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ –11-8-7-

(வேம்பையே விடாமல் இருக்க கரும்பை விடாதே சொல்ல வேண்டுமோ
வேம்பாக இருந்தாலும் -விடேன்
குண க்ருத தாஸ்யத்தை விட ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யமே ஸ்ரேஷ்டம்
அடியேன் -நான் -இரண்டையும் சொல்லுகிறார் இதில் -)

வேம்பின் புழு வேம்பன்று உண்ணாது –
வேம்புக்கு இட்டுப் பிறந்த புழுவானது கரும்பை காணச்
சாமாயிற்று-( சாப்பிடுமாயிற்று -என்றவாறு )
அப்படியே நீரும் நமக்கு இட்டுப் பிறந்தீரோ என்ன

அடியேன் நான்-
என் ஸ்வரூபம் இருக்கும் படி திரு உள்ளம் பற்றுகிறது இல்லையோ –
அனன்யார்ஹன் அன்றோ –

(அநந்ய கதித்வம் -வேம்பையே விடாது என்றால் கரும்பை விடுமோ –
கடல் மல்லைக் கிடந்த கரும்பு அன்றோ இவன்
அடியேன் ஸ்வரூபம் -அநந்யார்ஹன் அன்றோ –
என்னைத் தெரியாதா அடியேன் நான்
நான் -ஞாத்ருத்வம் -அசித் வ்யாவ்ருத்தி
அடியேன் -ஈஸ்வர வ்யாவ்ருத்தி )

பின்னும் உன் சேவடி யன்றி நயவேன் –
கடல் மல்லைக் கிடந்த கரும்பே -என்னக் கடவது இறே
இப்படி நிரதிசய போக்யனான நீ தானே
வேம்பாவன வன்றும்
நான் உன்னை விடுகைக்கு பிரசங்கம் இல்லை –

இத்தால் சொல்லிற்று ஆயிற்று –
விசத்ருச த்ருஷ்டாந்தமாய் இருந்ததீ என்ன –
அந்வயம் -விச்சேதத்தைப் பொறுக்கும்
வ்யதிரேகம் அப்படி விச்சேதத்தைப் பொறாது இறே
அத்தைப் பற்றச் சொல்லிற்று –

(கரும்பாக இருந்தால் விட மாட்டார்
வேம்பாக இருந்தால் விட மாட்டார் சொல்ல முடியாதே
ஆகவே அந்வயம் விச்சேதத்தைப் பொறுக்கும்
வ்யதிரேகம் அப்படி விச்சேதத்தைப் பொறாது
கரும்பை வேம்பாக சொல்லுவதுக்கு தாத்பர்யம்
உறைப்பு தோற்ற அருளிச் செய்கிறார்
வேம்பாக இருந்தாலும் விட மாட்டேன் என்கிறார் –
தோஷாவானாகவே இருந்தாலும் விடேன் என்றாளே ஸ்ரீ ஸீதாப் பிராட்டி )

அநசூயை  பிராட்டிக்கு -ஸ்திரீகளுக்கு தெய்வம்
பர்த்தாவே கிடீர்
நீர் பெருமாள் விஷயமாக அனுகூலித்துப் போரும் -என்ன
லஜ்ஜித்தாள் –
எனக்கும் பெருமாள் பக்கல் பாவ பந்தம் ஸ்வத உண்டாய் இருக்கச் செய்தே
அவர் தாம் குணாதிகராய் இருக்கையாலே
என்னுடைய பாவ பந்தத்தை குண நிபந்தனம் என்று இருப்பார்கள் நாட்டார்
அவ வாஸ்ரயத்தை குணங்களோடு வ்யதிரேகித்து காட்ட ஒண்ணாமையாலே
நான் அவர் பக்கல் இருக்கும் இருப்பை அறிவிக்கப் பெறுகிறிலேன் –
குண ஹீனருமாய் விரூப ரூபமான வன்றும் நான் அவர் பக்கல் இப்படி காணும் இருப்பது –

சமஸ்த கல்யாண குணாத்மகமான விஷயத்தை சொல்லும் போது
கிடந்த படியே யோஜிக்கை ஒழிய  -வெட்டிக் கொடு மூட
இப்படி நிர்வஹிக்கிறது என் என்னில் –
1-தாம் சொல்ல நினைக்கிற அநந்ய கதித்வத்துக்கு உபயோகியாய் இருக்கையாலும் –
2-மேல் சொல்லுகிற குணங்களோடும் வை லஷ்யண்யத்தோடும் சேர வேண்டுகையாலும் –
3-அவனுடைய போக்யதையைச் சொல்லுகிற பிரமாணங்களோடும் சேரச் சொல்லி தலைக் கட்ட வேண்டுகையாலும் –
இப்படிச் சொல்லுகிறது –
இங்கன் அன்றாகில் –
சர்வ ரச -என்கிற வஸ்துவுக்கு கீழ்ச் சொன்ன படியே த்ருஷ்டாந்தமாகக் கொள்ளும் அன்று
மேலில் பதங்களோடு அநந்வயமே பலித்து விடும் –

தேம்பல் இளம் திங்கள் சிறை விடுத்து ஐ வாய்ப்
பாம்பின் அணைப் பள்ளி கொண்டாய் -என்கையாலே குணாதிக்யம் சொல்லுகிறது –
பரஞ்சோதீ -என்கையாலே வடிவு அழகைச்  சொல்லுகிறது –

தேம்பல் இளம் திங்கள் சிறை விடுத்து ஐ வாய்ப் பாம்பின் அணைப் பள்ளி கொண்டாய் –
தேம்பிப் பருவம் நிரம்பாத சந்த்ரனுக்கு வந்த ஷயத்தைப் போக்கினாய் –
உன்னைக் கொண்டு விரோதியைப் போக்கிக் கொள்ள அமையும் என்று இருப்பாருக்கு
விரோதியைப் போக்கிக் கொடுப்புதி –
உன்னோடு அணைய வேண்டும் என்று ஆசைப் பட்டாருக்கு நித்ய சம்ச்லேஷம் பண்ணுகைக்கு உடம்பு கொடுப்புதி –

நீ வேண்டா பிரயோஜனமே அமையும்   என்று இருப்பாருக்கு அத்தைக் கொடுத்து
உன்னையே பெற வேணும் என்று இருப்பாருக்கு உன்னைக் கொடுப்புதி –

பரஞ்சோதீ –
நீ அணைக்குக்கு உடம்பைக் கொடுக்காதே
ஷயத்தை வர்த்திப்பான் ஒருவன் ஆனாலும்
உன்னை விடலாயோ வடிவு அழகு இருப்பது –

———————————————————–

பரஞ்சோதி என்ற வடிவும்
திருவரங்க -நிருபாதிக சம்பந்தமும் -வ்யூஹ ஸுஹார்த்தம் -பிரதானம்
வன் பெரு வானகம் –இத்யாதி – உய்யவே இனிதாக கண் வளர்கிறார் இங்கு
அங்குள்ள போக்யத்தை திரு உள்ளத்தில் பட
அச்சம் தீர்ந்து
மா ஸூ ச -ஒரு வார்த்தை சொன்னால் போதுமே
பிரார்திக்கிறார்

அணியார் பொழில் சூழ் அரங்க நரகரப்பா
துணியேன் இனி நின்னருளால் அல்லது யெனக்கு
மணியே மணி மாணிக்கமே மது சூதா
பணியாய் யெனக்கு உய்யும் வகை பரஞ்சோதி  -11-8-8-

(அணியார் பொழில்-அழகும் செறிவும்
அரங்க நரகரப்பா–கிருபையால் -நிருபாதிக பந்து -ஆகவே உத்தேச்யம்
தேசத்தின் போக்யத்தையாலும் உத்தேச்யம் )

அணியார் பொழில் சூழ் –
அழகு மிக்கு இருந்துள்ள பொழில் -என்னுதல்-
திரட்சி மிக்க பொழில் -என்னுதல் –

அரங்க நரகரப்பா –
நிருபாதிக பந்துவானவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் ஆகையாலே உத்தேச்யம் –
வாசஸ் ஸ்தானமான தேசம் தான் நிரதிசய போக்கியம் ஆகையாலும் உத்தேச்யம் –

துணியேன் இனி நின்னருளால் அல்லது யெனக்கு  –
ஸ்ரமஹரமான தேசத்திலே வந்து சாய்ந்து அருளின
நிருபாதிக பந்துவான தேவர்
அவசர ப்ரதீஷராய் வந்து நிற்க
நான் வேறு சிலரை அபாஸ்ரயமாக நினைத்திரேன் –
தேவரீருடைய சௌஹார்த்தம் ஒழிய
வேறு ஒன்றைத் தஞ்சம் என்று வ்யவசிதனாய் இரேன் –

உம்மை இப்படி துணிவித்தார் ஆர் என்ன –
மணியே மணி மாணிக்கமே மது சூதா –
(அழகும் மதிப்பும் விரோதி நிரசனமும் மூன்றும் தேவரீர் தானே -மற்று யார் )
மற்று ஆர் –
தேவரீர் உடைய வடிவு அழகு இறே-

மணியே –
கண்டார் கண் குளிரும்படி நீல மணி போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவனே –
கேவலம் அவ்வடிவு  அழகேயாய்
அஸ்ரேஷ்டமதாய் இருக்குமது அன்றிக்கே

மணி மாணிக்கமே –
பெரு விலையனான ரத்னம் போலே ஸ்வாபாவிகமான மேன்மையை உடையவனே –

மது சூதா –
இப்படி நீர் வடிவு அழகை அனுபவிக்கும் இடத்தில் உம்முடைய விரோதியைப் போக்குவார் ஆர் என்ன –
அதுவும் தேவரே –
மதுவாகிற அசுரனைக் களை எடுத்தால் போலே
தேவர் என் விரோதியைப் போக்கித் தர நான் அனுபவிக்கும் அத்தனை –

நீர் சொல்லலுகிற அவை எல்லாம் எமக்கு உண்டு
உமக்குச் செய்ய வேண்டியவை எல்லாம் சொல்லீர் -என்ன –
பணியாய் யெனக்கு உய்யும் வகை –
சோகித்த அர்ஜுனனைக் குறித்து
உன்னுடைய சர்வ பரங்களையும் நம் தலையிலே ஏறிட்டு
நம்மையே தஞ்சமாக நினைத்து இரு –
நாம் உன் விரோதிகளைப் போக்குகிறோம்
மாஸூச -என்னுமா போலே
நான் உஜ்ஜீவிக்கும் படி யெனக்கு ஒரு வார்த்தை யருளிச் செய்ய வேணும் –

(ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி
தமிழ் படுத்துகிறார் )

(திரு முகம் விகசித்து மந்தஸ்மிதம்
கார்யம் செய்பவர் சொல்ல வேண்டாமே
சிரிக்க
சொல்லும் பொழுது செவ்வி காண வாகிலும் சொல்லி அருள வேணும் –
வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு போல்-)

பரஞ்சோதி  —
பூ வலரும் போதை விகாசம் போலே
வார்த்தை அருளிச் செய்யும் போது-
திருமேனியில் பிறக்கும் செவ்வி காண வாயிற்று ஆசைப் படுகிறது –

கக்ரீடாதி -(ககா க்ரீடேதி -காகாஸூர வ்ருத்தாந்த ஸூந்த்ர -ஸ்லோகம் )
ஆஸ்ரித விஷயத்தில் உண்டான ஓரத்தாலே
அவர்கள் விரோதியைப் போக்குகைக்கு -நான் இருந்தேனே -என்கிற போதை
சீற்றம் தோற்றி யாயிற்று வார்த்தை அருளிச் செய்யும் போது இருப்பது

கக்ரீடாதி –
தோற்ற அரவிலே முடிக்க வல்ல தொரு மகா சர்ப்பம்
உறங்குகிறவற்றை எழுப்பி
அத்தோடு போது போக்கி பிழைக்கப் புகுகிறவன் தான் ஆர் –

சா ரோஷேண-
அதுக்கு ஆற்றல் உண்டாக பெற்றிடம் ஜீவிப்பார் உடைய பாக்யத்தாலே யாயிற்று –

பஞ்ச வக்த்ரேண
ஐந்தலை நாகம்

போகி நா –
அது எல்லாம் வேணுமோ
வடிவைக் காண அமையாதோ முடிகைக்கு –

ப்ரக்ருதயா தர்ம சீலரானவாறே இப்படிச் சொல்லுகிறார் –
சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்து மர்ஹதி –
(ஆஸ்ரித பக்ஷ பாதி
ஆஸ்ரித விரோதிகள் இடம் கோபித்த இடம்
தர்ம சீலன் -ராமனுக்கும் பலிக்கும் -விபீஷணன் எண்ணம் )

அக்கரைப் படுகைக்கு கடல் இடைச் சுவராய்க் கிடந்தது –
கடல் கடக்கும் படி சொல்லும் தோழனாரே -என்ன –

தேவர் உடைய குடிப் பிறப்பும் அளவுடைமையும் இருந்த படியால்
இவ் வுபாய பரிக்ரஹம் பண்ணுகைக்கு வேண்டும் யோக்யதை போரும்
கடுக இவ் வுபாயத்தைப் பரிஹரிக்கப் பாரும்  –
ஒரு குடிப் பிறப்பும் அளவுடைமையும் இல்லாதாருக்கு பலித்த படி கண்டால்
அது உடையாருக்குப் பலிக்கச் சொல்ல வேணுமோ -என்று இருந்தான் –

ப்ரக்ருத்யா தர்ம சீலச்ய -என்றும்
பிறர்க்கும் பின்னாடு மேய்க்க என்றால் உகப்பான் -(பின்னாடு மேய்க்க-ஆஸ்ரித பாரதந்தர்யம் )
ஆஸ்ரித பரதந்த்ரனாகை -வென்றால் உகப்பார் ஒருவர் ஆயிற்று –

—————————————————————

(நந்தும் நரகம் அது
நந்தா அணையா சம்சாரம்
அடியிலே இவ்வாழ்வார் திரு மந்த்ரத்தை லாபித்து
சூழ் புனல் திருக்குடந்தையில் அனுபவித்து
பிறருக்கும் கொடுத்து
களித்து
அவ்வர்த்த அனுசந்தானம்
உகந்து அருளினை
திருமந்த்ரம் பிறந்த இடம்
திருவதரி வணங்கி
வைத்தார் ஆஸ்ரமம் தொழுது
சாளக்கிராமம்
நைமிசாரண்யம்
சிங்க வேள் குன்றம்
திருவேங்கடத்தில் சரணாகதி
திரு எவ்வுள் வணங்கி
திரு வல்லிக்கேணி அனுபவம்
திரு நீர் மலை
திருக்கடல் மல்லை
திரு இட எந்தை
திரு அட்ட புயகரத்தான்
பரமேஸ்வர விண்ணகரம்
திருக்கோவலூர்
திரு வஹிந்த்ர புரம்
தில்லை நகர் சித்ர கூடம் –
காழி சீராம விண்ணகரம்
திருவாலி -தூது விட்டும்
மணி மாடக்கோயில் -தொடங்கி -திருப்பார்த்தன் பள்ளி -திரு நாங்கூர்
திரு இந்தளூர் அனுபவம்
திரு வெள்ளியங்குடி
புள்ளம் பூதம் கூடி
ஆதனூர்
திரு அரங்கம் -சரணாகதி
திருப்பேர் நகர்
திரு நந்தி புர விண்ணகரம்
ஒப்பிலா அப்பன்
திரு நறையூர் நம்பி
திருச்சேறை
திரு தேரெழுந்தூர்
திரு சிறு புலியூர்
திருக்கண்ண மங்கை
திருக்கண்ண புரம் எட்டாம் பத்து முழுவதும்
திருக்கண்ணங்குடி
திரு நாகை அழகியார்
திருப்புல்லாணி
திருக்குறுங்குடி
திரு வல்ல வாழ் திரு மா;இருஞ்சோலை
திருக்கோட்டியூர்
உகந்து அருளினை நிலங்களைக்கப்பத்தும் பத்தாக அனுபவித்த்திகு
ஒரு மடை செய்து ஒரு நல் சுற்றம்
விபவ அனுபவம்
ஆற்றாமை விஞ்சி
வயலாலி மணவாளன் திருவடியில் போது அணிய பெற்றோமே தேறி
பர உபதேசம் பண்ணி
ஆராவமுதனை பருக சொல்லியும்
மீளாதவரை நிந்தித்தும்
அவனையே குற்றம் சொல்லி
ஆற்றாமை அறிவித்தும்
அழகில் ஈடுபட்டு
பணியாய் என்றதும்
தூது செய் கண்கள் கொண்டு ஆற்றி
மலர விரித்து பேச
க்ருதார்த்தராய்
ஆர்த்தி தவிர்த்து கொண்டு
ப்ராப்த ஸ்வாமி அருகில் இருக்க சம்சயம் தீர்ந்து
தேவரீர் திரு உள்ளபடி அருளிச் செய்ய வேணும் என்கிறார் -)

பணியாய்  என்றார் கீழ் பாட்டில்
தத் அனுஜாநந்தம் உதார வீஷணை-என்றும்
தூது செய் கண்கள் -என்ற படியும்
மலர விழித்துக் கடாஷிக்க  -க்ருதார்த்தராய் –
சம்சார உத்தரணத்துக்கு சம்சயம் உண்டோ என்று கொண்டு
உமக்குத் திரு உள்ளம் ஆனபடி என் மநோ ரதத்தை  தலைக் கட்டி அருள பிரார்த்திக்கிறார் -என்று சங்கதி –

நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும்
எந்தாய் தொண்டர் ஆனவருக்கு இன்னருள் செய்வாய்
சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா
அந்தோ அடியேற்கு அருளாய் யுன்னருளே —11-8-9-

நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும் –
நந்துவதும் ஒரு நரகம் உண்டு போலே –
பண்ணின கர்மத்துக்கு பலானுபவம் பண்ணினவாறே விட்டடிக்கும் படியாய் இருக்கும் இறே யமனுடைய   நரகம் –
இச் சரீர பரிக்ரஹத்துக்கு ஹேதுவான அவித்யாதிகளுக்கு
ஒழிவு இல்லாமையாலே மாறாதே
அனுபவிக்குமது ஆயிற்று சம்சாரம் ஆகிற நரகம் –

எந்தாய் –
ஆனால் இதுக்கு போக்கடி இல்லை என்னீர் என்ன –
கர்மமும்
அனுபாவ்யமான நரகமும்
நரகத்தை அனுபவிக்கும் நானுமேயோ -உளோம்
ஸ்வாமி யான நீயும் இல்லையோ –
ஸ்வாமி யானவன் சர்வ சாதாரணன் ஆனால் சர்வருக்கும் சம்சரிக்க பிராப்தி இல்லை இறே –

வர நிற்கைக்கு ஒரு ஹேது வேண்டாவோ  -என்ன
தொண்டர் ஆனவருக்கு இன்னருள் செய்வாய் –
திருவடிகளில் கைங்கர்ய ருசி உடையாருக்கு
உன் பேறாக
உன் பேர் அருளை கொடுக்கையே
ஸ்வா பாவமாக உடையவனே –

சந்தோகா –
யஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் -முண்டகம்
பதிம் விஸ்வஸ்ய –
சர்வே வேதா யத்பதமாம நந்தி -கட
சர்வ வேதா யத் த்ரைகம்ப வந்தி -யஜுர்
வேதைஸ்ஸ சர்வை ரஹமேவ வேத்ய –
வசஸாம் வாஸ்ய முத்தமம் -ஜிதந்தா
என்கிற நிர்தோஷ பிரமாணங்களாலே பிரதி பாதிக்கப் படுகிறவனே –
(உளன் சுடர் மிகு ஸ்ருதியுள் )

தலைவனே –
அப்ரமாணம்  –
அனுமான பிரமாண விஷயம் என்றால் போலே
சொல்லுகிற தூஷணங்களுக்கு ப்ரத்யநீகனானவனே –

தாமரைக் கண்ணா –
தலைமை பெற்று
உபாஸ்யன் ஆனவனுக்கு லஷணம் என் என்ன –
தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக மேவ மஷிணீ-என்று சொல்லிற்று இறே –

அந்தோ –
பிதா ராஜ்யம் பண்ணி
ஸூகித்துப் போரா நிற்க
புத்ரனாவான் தரித்ரனாய் இருக்குமா போலே
அவனுடைய நைரபேஷத்தையும்
தம்முடைய தய நீய தசையையும்
அனுசந்தித்து 
ஐயோ -என்கிறார் –

அடியேற்கு அருளாய் யுன்னருளே –
தய நீய தசையை ப்ராப்தனாய் இருக்கிற என் பக்கலிலே
கொள்வார் தேட்டமாய்
புறம்பு வழிந்து போம்படியான
உன்னருளைப் பண்ண வேணும்  –

————————————–

9அரங்க நகர் அப்பா என்றதும்
அஹம் -தானே ரக்ஷகன் என்னும் இடத்தை–
குன்ற எடுத்த பிரான் என்று தன்னைக் காட்ட அருளிச் செய்கிறார் )

ஒன்பது பாட்டிலும் இவருக்கு ஓடின வ்யசனமும்
வாசனையோடு  கழியும் படி
அஹம் -என்று
ரஷகனான தன்னைக் காட்டினான் –

குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை
மன்றில் மலி புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல்
என்றும் வினையாயின சார கில்லவே —11-8-10-

மன்றில் புகழ்-பாட பேதம்

குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை –
ரஷ்ய வர்க்கம் ஏதேனும் ஒரு படி நின்றாலும்
ரஷணம் தான் மிறுக்கு உடைத்தான் ஆலும்
ஒரு குறைகள் வாராது காணும் -என்று
அதுக்கு உடலாகத் தான் கோவர்த்தன உத்தாரணம் பண்ணின படியைக் காட்டினான் –

மன்றில் மலி புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
முன்பு சப்தாதி விஷய ப்ராவண்யத்தாலே
இத்தை விட மாட்டாதே போந்த இவர் தமக்கே
இப்போது இப்படி பொருந்தாத படி ஆவதே -என்கிற
வார்த்தைப் பாடேயாய்க் கிடக்கும் ஆயிற்று –
நால்வர் இருவர் திரண்ட இடமடைய –

ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல் –
இவர் நோவு பட்ட ஒன்பது பாட்டும்
அதுக்கு பரிஹாரமாகச் சொன்ன ஒரு பாட்டையும்
சொல்ல வல்லவர்களுக்கு  –

என்றும் வினையாயின சார கில்லவே-
பதினெட்டு ஒத்திலும் சோகத்தை உபபாதித்து
மாஸூச -என்று பரிஹரித்தால் போலே யாயிற்று
ஒன்பது பாட்டாலும் நோவு பட்டவர்க்கு
ஒரு பாட்டாலே நோவு பரிஹரித்த படி –

சம்சாரத்துக்கு ஹேதுவான அவித்யாதிகள் கழிந்து
பின்னையும்
வித்து முதல் கிடந்து அரும்புகை அன்றிக்கே
இவர் தாம் -த்வத் அனுபவ விரோதியான பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துத் தர வேணும் என்று
பிரார்த்தித்த படியே ச வாசனமாகக் கழியும் –

(த்ருஷ்டாந்தமான பசுக்கள்
கல் வர்ஷம் அங்கு
துக்க வர்ஷம் இங்கு )

———–

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

மாற்ற வேண்டும் தம் பிறவிக்கு அஞ்சி ஒண்ணாது தன்னால்
மாற்ற மால் வல்லான் என்று அவன் அருளை பேற்றுக்கா
நாடும் ஆலி நாடன் தாள் நாடி என் தன் நெஞ்சமே
கூடி வாழ் நையாது வாடாது -108-

தாள் நாடி கூடி வாழ் -கொக்கு வாயும் படு கண்ணியும் போலே நமது சென்னி
ஆழ்வார் திருவடித் தாமரைகளில் சேரப் பெறுவதே வாழ்ச்சியாகும்
நையாது வாடாது கூடி வாழ்வோம்

—————————————————————-

வாடி முன் வீழ் பொருட்க்கு மால் அருளால் மந்திரத்தின்
பீடு பொருள் கண்டு கலியன் தொண்டீர் நாடும் எந்தை
சீர் குடந்தை என் அமுதம் தாயில் ஏற்றம் செய் சொல்லைச்
சேர உயிர் வாலிய தாம் -1-

—–

மால் நீர்மைக்கு எல்லை உகந்த ஊர் நூற்று எட்டு
சால நண்ணி யுள்ள கணக்கு இனிதாய் ஆலி நாடன்
செய்யும் திரு மொழி நூற்று எட்டும் ஓதிடுவார்
எய்துவர் வைகுந்தம் ஏய்ந்து–

திருமாலின் நீர்மை குணத்திற்கு எல்லை நிலமான திவ்ய தேசங்கள் 108. அந்த கணக்கு வரும்படி திருவாலி நாட்டிற்கு
அதிபதியான ஆழ்வார் அருளிச் செய்த பெரிய திருமொழி 108ம் ஓதிடுவார் (திருமொழி மொத்தம் 108 பத்துக்கள்),
விரைவாக வானவர் நாடான ஸ்ரீவைகுந்தம் புக்கு அங்கு திருமாலிற்கு அடிமை செய்வார்.

————————–——————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading